காசிபாளையம் ஸ்ரீ முத்துவேலாயுத சுவாமி கோவில்
மூன்று முகம் கொண்ட அபூர்வ முருகன்
முருகனின் முன்பு மயிலுக்கு பதிலாக சக்திவேல் நிறுவப்பட்டிருக்கும் தலம்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திலிருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது காசிபாளையம் ஸ்ரீ முத்துவேலாயுத சுவாமி கோவில். குன்றின் மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகளுடன், சாலை வசதியும் உள்ளது. 700 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
இக்கோவில் கருவறையில், மூன்று முகம் ஆறு கரங்களுடன் கூடிய முருகப்பெருமான், 'ஸ்ரீ முத்து வேலாயுதசுவாமி' என்கிற திருநாமத்துடன் சுமார் 3 அடி உயர கருங்கல் திருமேனியாக, வள்ளி தெய்வானை சமேதராக எழுந்தருளி இருக்கிறார். இப்படி மூன்று முகம் கொண்ட முருகனை, தமிழ்நாட்டில் வேறு எந்த கோவிலும் நாம் தரிசிக்க முடியாது. இந்த மூன்று முகங்கள் முருகனின் மூன்று சக்திகளான இச்சாசக்தி (விருப்பம்), கிரியாசக்தி (செயல்), மற்றும் ஞானசக்தி (அறிவு) ஆகியவற்றைக் குறிக்கின்றன.
ஸ்ரீ முத்து வேலாயுதசுவாமியின் வலதுபுறம் உள்ள மூன்று கரங்களில் வஜ்ராயுதம், அம்பு, சின்முத்திரையும் இடதுபுறம் உள்ள மூன்று கரங்களில் மான், வில், அபயக்கரத்துடன் பாம்பும், பின்புறம் மயிலும் காணப்படுகிறது. பொதுவாக முருகன் கோவில்களில் கருவறைக்கு முன்பு மயில் அமைந்திருக்கும். ஆனால் இக்கோவிலில், முருகன் முன்பு சக்திவேல் நிறுவப்பட்டுள்ளது. இவ்வேல் சூரபத்மனை வதம் செய்ய அன்னை பார்வதி தேவியால் வழங்கப்பட்டது. இவ்வேலின் ஒருபுறம் சரவணபவ சக்கரமும், மறுபுறம் 'ஓம்' என்ற பிரணவ எழுத்துடன், சூலாயுதமும் வஜ்ஜராயுதமும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த சக்தி வேலை வணங்கினால், செவ்வாய் தோஷம் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
படங்கள் உதவி : திரு. சண்முக சுப்பிரமணியன், ஆலய நிர்வாகி