ருத்ர கங்கை ஆபத்சகாயேஸ்வரர் கோவில்
காளியின் வடிவில் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் துர்க்கை அம்மன்
காசியில் நீராடிய பலன் அளிக்கும் தலம்
மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ளது பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ருத்ரகங்கை என்னும் கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் ஆபத்சகாயேஸ்வரர். இறைவியின் திருநாமம் பரிமளநாயகி. வேத காலத்தில் சிவன் ருத்ரன் என பெயர் பெற்றிருந்தபோது, ருத்ரனின் கங்கை இங்கு தங்கியதால் இவ்வூருக்கு ருத்ர கங்கை எனப் பெயர்.
இக்கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. கோச்செங்கட சோழனால் கட்டப்பட்ட மாடக்கோவில்களில் இதுவும் ஒன்று. இவ்வூரின் தென்புறம் உள்ள அரசலாற்றில் நீராடி இத்தல இறைவனை வழிபட்டால், காசியில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கருவறையில் மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் பின்புறம் முருகப்பெருமானுடன் சிவபெருமானும், பார்வதியும் திருமண கோலத்தில் காட்சியளிக்கும் சிற்பம் உள்ளது. இந்த வடிவம் சோமாஸ்கந்தர் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிவபெருமானின் தலையில் கங்கையை காணலாம்.
தல புராணம்
பாஸ்கரர், வியாகரபாதர் மற்றும் பதஞ்சலி ஆகியோர் முக்திக்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்தனர். பதஞ்சலி சிதம்பரத்தில் முக்தி அடைந்தார். வியாகரபாதர் திருவாரூரில் முக்தி அடைந்தார். ஆனால் பாஸ்கரர் முக்தி அடையவில்லை. எனவே, அரசலாறு ஆற்றங்கரையில் வில்வ வனத்தின் நடுவே ஆசிரமம் கட்டி சிவபெருமானை நோக்கி தவத்தைத் தொடர்ந்தார்.
அதே சமயம் தேவர்களும் முனிவர்களும் தாரகாசுரனால் தொடர்ந்து சிரமப்பட்டனர். அனைத்து முனிவர்களும் தேவர்களும் பிரம்மதேவனிடம் சென்று தங்கள் குறைகளை தெரிவித்தனர். சிவபெருமானின் மகன் இந்த அசுரனை சரியான நேரத்தில் கொன்று, தேவர்களையும் முனிவர்களையும் தக்க சமயத்தில் காப்பாற்றுவார் என்று பிரம்மா அவர்களுக்கு அறிவித்தார்.
மேலும், சிவபெருமானிடம் செல்லுமாறு அறிவுறுத்தினார். அவர்களைக் கண்ட சிவபெருமான் அவர்களின் விருப்பம் விரைவில் நிறைவேறும் என்று உறுதியளித்தார். பார்வதி தேவி இமவனுக்குப் பிறந்து பூமியில் சிவபெருமானுக்காகக் காத்திருந்தாள். அவளை மணந்து கொள்வதற்காக சிவபெருமான் பிராமண வடிவில் பூமிக்கு வந்தார். கங்கை அவள் தலையில் இருந்ததால், அது திருமணத்தில் சிக்கலை ஏற்படுத்தும் என்று சிவபெருமான் கருதினார்.
அதனால், தான் திரும்பும் வரை கங்கையை பாஸ்கரா ஆசிரமத்தில் விட்டுவிட திட்டமிட்டார். சிவபெருமான் திட்டத்திற்கு பாஸ்கர முனிவர் சம்மதித்தார். எனவே, சிவபெருமான் காசியை நோக்கிச் சென்றார். ஒரு நாள் பாஸ்கர முனிவர் குளிப்பதற்கு ஆற்றுக்குச் சென்றார்.
பூஜை பாத்திரங்களை எடுக்க மறந்துவிட்டதால், கங்கையிடம் பாத்திரங்களை எடுத்து வரச் சொல்லிவிட்டு, குளிக்க ஆரம்பித்தார். கங்கை பாத்திரத்துடன் வந்தபோது முனிவர் ஆற்றின் உள்ளே இருந்ததால், கங்கையால் முனிவரைக் காண முடியவில்லை. தண்ணீரைக் கண்டதும் கங்கை அரசலாற்றில் கலந்து மறைந்தாள்.
கங்கையின் மறைவால் முனிவர் வருத்தமும் வருத்தமும் அடைந்தார். இந்த சம்பவத்தை பிராமணரிடம் எப்படி தெரிவிப்பது என்று அவன் திகைத்து நின்றான். அதே நேரத்தில் சிவபெருமான் பார்வதியை மணந்தார். முருகப்பெருமான் பிறந்து தாரகாசுரனை வதம் செய்தார். சிவபெருமான் பிராமண வடிவில் மீண்டும் பாஸ்கரரிடம் வந்து கங்கையைத் திருப்பித் தருமாறு கேட்டார். முனிவர் பாஸ்கரர் தன் அலட்சியத்தால் சிவலிங்கத்தைக் கட்டிக் கொண்டு அழத் தொடங்கினார்.
சிவபெருமான் லிங்கத்திலிருந்து வெளியே வந்து திருமண தோரணையில் தரிசனம் செய்தார். முனிவர் பாஸ்கரரின் வேண்டுகோளின்படி பக்தர்களுக்கு அருள்பாலிக்கத் தொடங்கினார். பாஸ்கர முனி இங்கு முக்தி அடைந்தார். ருத்ரனின் (சிவன்) மனைவி கங்கை இந்த இடத்தில் வசித்ததால். அதனால் அந்த இடம் ருத்ர கங்கை என்று அழைக்கப்பட்டது.
காளியின் வடிவில் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் துர்க்கை அம்மன்
கருவறை கோட்டத்தில் காளியின் ரூபத்தில் துர்க்கை எழுந்தருளி இருக்கிறாள். பொதுவாக மகிஷன் தலையில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கும் துர்க்கை அம்மன், இங்கு காளியின் வடிவில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது ஒரு தனிச்சிறப்பாகும். இந்த காளியானவள் தனது கரங்களில் உடுக்கை, பாசாங்குசம், திரிசூலம், கபாலம் ஆகியவற்றை தாங்கி இருக்கின்றாள்.
பொன்விளைந்த களத்தூர் முன்குடுமீஸ்வரர் கோவில்
சிவலிங்க பாணத்தின் உச்சியில் குடுமி அமைந்துள்ள அபூர்வ தோற்றம்
செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில்,10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பொன் விளைந்த களத்தூர் என்ற கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் முன்குடுமீஸ்வரர். இறைவியின் திருநாமம் மீனாட்சி அம்மன். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில் சிவலிங்க பாணத்தின் உச்சியில் குடுமி போன்ற தோற்றம் உள்ளது.
இப்படி சிவலிங்கத் திருமேனியில், குடுமி அமைந்ததற்கு பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது. இப்பகுதியை ஆண்ட சோழ மன்னன் ஒருவனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அப்பாக்கியம் வேண்டி சிவனுக்கு 108 கோயில்கள் கட்டி கும்பாபிஷேகம் செய்தான். அவ்வாறு கட்டிய கோவில்களில் இதுவும் ஒன்று. ஒருசமயம் மன்னன் இக்கோவிலுக்கு சுவாமியைத் தரிசிக்க வந்தான். அவ்வேளையில் பூஜையை முடித்த அர்ச்சகர், சுவாமிக்கு அணிவித்த மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டார். மன்னர் வந்திருப்பதை அறிந்த அர்ச்சகர், மனைவிக்கு சூடிய மாலையை கோவிலுக்கு எடுத்து வந்தார்.
சிவனுக்கு அணிவித்த மாலை எனச் சொல்லி அதை மன்னனுக்கு அணிவித்தார். மன்னர் மாலையில் முடி இருந்த காரணத்தைக் கேட்டார். அர்ச்சகர் அவரிடம் 'லிங்கத்தின் சடாமுடியில் இருந்த முடியே அது!' என பொய் சொல்லிவிட்டார். மன்னன் தனக்கு சிவனிடம் முடியைக் காட்டும்படி கூறினான். அர்ச்சகர் மறுநாள் காட்டுவதாகச் சொல்லிவிட்டார். மன்னன் மறுநாள் தனக்கு அந்த தரிசனம் கிடைக்காவிட்டால், அர்ச்சகருக்கு கடும் தண்டனை கொடுக்க நேரிடும் என எச்சரித்துச் சென்றான். கலங்கிய அர்ச்சகர் அன்றிரவில் சிவனை வேண்டினார். மறுநாள் மன்னர் வந்தார். அர்ச்சகர் பயத்துடனே சிவலிங்கத்தின் முன்பு தீபாராதனை காட்டினார். என்ன ஆச்சர்யம்! சிவலிங்க பாணத்தின் முன் பகுதியில் கொத்தாக முடி இருந்தது. மன்னனும் மகிழ்ந்தான். இவ்வாறு அர்ச்சகருக்காக குடுமியுடன் காட்சி தந்ததால் இவர், 'முன்குடுமீஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். அப்படி நடத்தப்படும் திருவிழாக்களில் ஆவணி மூலத்திருவிழா சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
சித்திரையில் தொடங்கிய மதுரை மீனாட்சி அன்னையின் ஆட்சி ஆவணி மாதத்தில் முடிவடைகிறது. ஆவணி மூலத்திருவிழாவின் போது சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகின்றது. அன்றைய தினம் முதல் மதுரையில் மீனாட்சி ஆட்சி முடிந்து சொக்கநாதர் ஆட்சி நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சிவபெருமானின் திருவிளையாடல்களை மையமாக வைத்து ஆவணி மூலத்திருவிழா கொண்டாடப்படுகிறது. 64 திருவிளையாடல்களில் 12 முக்கிய திருவிளையாடல் லீலைகள் இந்த திருவிழாவை முன்னிட்டு நடைபெறும்.
ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு நட்சத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. ஆவணிக்கு முக்கிய நட்சத்திரம் மூலம், அந்த ஆண்டின் சீதோஷ்ண நிலையையே நிர்ணயிக்கக் கூடியதாக இந்தநாள் உள்ளது.
காலையில் சூரியன் உதயமாகும் போது மிகுந்த ஒளியுடன் இருந்தால் அந்த ஆண்டு வெயில் கொளுத்தும். மேக மூட்டத்துடன் மறைந்து தோன்றினால் பருவம் தவறி மழை பெய்து வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தும். எப்படிப் பார்த்தாலும் அது அழிவைத் தருவதாகவே இருக்கிறது.
எனவேதான் சம்ஹாரமூர்த்தியான சிவபெருமானுக்கு அச்சமயம் விழா எடுத்து அவரைச் சரணடைந்து பிரார்த்திக்கும் நாளாக அக்கால கட்டத்தை அமைத்தார்கள். இதற்காகத்தான் மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களின் பெயர்களில் ஆவணி வீதிக்கு மட்டும் ஆவணி மூல வீதி என்று நட்சத்திரத்துடன் இணைத்துப் பெயர் சூட்டினர்.
சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம்
மதுரையில் சித்திரை முதல் ஆவணி வரை 4 மாதங்கள் மீனாட்சி அம்மன் ஆட்சியும், ஆவணி முதல் சித்திரை வரை 8 மாதங்கள் சுந்தரேசுவரர் ஆட்சியும் நடைபெறும். ஆவணி மூலத்திருவிழாவில் ஒன்பதாம் நாளன்று சுந்தரேசுவரர் பட்டாபிஷேக நிகழ்வு நடைபெறும்.
பிட்டுக்கு மண் சுமந்த லீலை
சிவபெருமான் பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்ட திருநாளானது, ஆவணி மாதம் மூலம் நட்சத்திரம் ஆகும். அன்றைய தினம் சிவாலயங்கள் தோறும் சிறப்பாக பிட்டுக்கு மண்சுமந்த திருநாளைக் கொண்டாடுவர். இந்த ஆவணி மூல வழிபாட்டில் கலந்து கொண்டால், மூல நட்சத்திர தோஷங்கள் விலகி ஓடும். மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆண், பெண் இருபாலரும் இந்த விழாவில் கலந்து கொள்வது நல்லது.
மதுரை மாநகரில் முன்பு ஒரு காலத்தில், பெருமழை பெய்து, வைகை நதி பெருக்கெடுத்து ஓடியது. வைகை ஆற்றின் கரைகளை , பலப்படுத்த மக்களுக்கு பாண்டிய மன்னன் கட்டளை இட்டார். மன்னனின் கட்டளைப்படி, இப்பணி பகிர்ந்தளிக்கப்பட்டது.
வந்தி என்ற, பிட்டு விற்கும் ஏழை மூதாட்டி ஒருவருக்கும், வைகை ஆற்றின் கரையின் ஒரு சிறு பகுதியை பலப்படுத்த இடம் ஒதுக்கப்பட்டது. தள்ளாமையினால் தனது பகுதி வேலையை வந்தியினால் செய்யமுடியவில்லை. சிவனிடம் முறையிட்டார் வந்தி. ஏழை மூதாட்டிக்கு உதவுவதற்காகவே, சிவபெருமான் கூலிக்காரன் வடிவில் வந்தார்.
கூலி தர, தன்னிடம் எதுவும் இல்லை என்று வந்தி கூறினார். உதிர்ந்த பிட்டை சிவபெருமான் ஊதியமாக ஏற்று, மூதாட்டியின் வேலையை, தான் செய்வதாக கூறி, பிட்டு உண்டபின், தனது வேலையைச் செய்வதற்காக , மூதாட்டியிடம் விடைபெற்று ஆற்றங்கரைக்குச் சென்றார். கூலியாள் வடிவில் இருந்த சிவன் வேலை செய்யாமல் ஆற்றங்கரையில் படுத்து துாங்கினார்.
அப்போது மேற்பார்வை பார்க்க வந்த, பாண்டிய மன்னன் கூலியாளை பிரம்பால் அடித்து தண்டனை வழங்கினார். சிவனுக்குக் கிடைத்த சவுக்கடியை உலக உயிரினங்கள் எல்லாம் உணர்ந்தன. பாண்டிய மன்னனும் அந்த அடியை உணர்ந்தான், தனது பிழையையும் உணர்ந்தான்.
உலக மக்களுக்கு தன் இருப்பை உணர்த்தவும், தன்னையே தஞ்சம் என்று அடைந்தவருக்கு உடனடியாக உதவ வருவேன் என்றும் உணர்த்த இறைவன் ஆடிய திருவிளையாடல் இது. ஆவணி மூலத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நடைபெறும்.
அன்று அதிகாலையில் சுவாமியும், அம்மனும் பஞ்ச மூர்த்திகளுடன் பிட்டு தோப்புக்கு செல்வர். அங்கு பிட்டு திருவிழா நடை பெறும். இந்த திருவிழாவில் பங்கேற்க திருவாதவூர் மாணிக்கவாசகரும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமியும் மதுரைக்கு எழுந்தருளுவர்.
அன்றைய தினம் சுந்தரேசர் பொற்கூடையுடனும், பொன் மண்வெட்டியுடனும் வைகை ஆற்றிலிருந்து பக்தர் சூழ கோவிலுக்கு எழுந்தருளுவர். திருவிழவை காணவரும் பக்தர்களுக்கு பிட்டு பிரசாதம் வழங்கப்படும். அன்று இரவு 9.30 மணிக்கு பிறகு மீனாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்தற்கு அனுமதிக்கப்படுவர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
ஆவணித் திருவிழா-உருகு சட்டை சேவை
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று ஆவணித் திருவிழா. இந்த ஆண்டு ஆவணித் திருவிழா ஆகஸ்ட் 14-ஆம் தேதியன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறக் கூடிய இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் முருகப் பெருமான் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சி நடக்கும்.
திருச்செந்தூரில் சண்முகர் தெற்கு நோக்கிய சந்நிதியில் ஆறுமுகங்களும், பன்னிரு கரங்களும் கொண்டு நின்ற கோலத்தில் வள்ளி தெய்வானையோடு காட்சியருள்கிறார். சாதாரண நாள்களில் இவரின் இரண்டு கரங்களை மட்டுமே நாம் தரிசிக்க முடியும். மற்ற கரங்களைப் பட்டாடை இட்டு அலங்கரித்திருப்பர்.
ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாள் காலை உருகு சட்டை சேவை நடைபெறும். இந்த சடங்கில் முருகப் பெருமானின் உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் செய்யும்போது, அபிஷேக திரவியங்களால் மூர்த்தியின் திருமேனி உருகி வழிவது போல் தோன்றுவதை குறிக்கிறது. அபிஷேகம் முடிந்து சண்முகர் சன்னதியிலிருந்து எழுந்தருள்வார். மற்ற மூர்த்தங்களை எடுத்து வாகனங்களில் வைப்பதுபோல, இந்த சண்முகரை மூலத்தானத்தில் இருந்து எடுத்து வாகனத்தில் வைப்பதில்லை. மாறாக உருகுப் பலகை என்ற ஒரு பெரிய பலகையை பீடத்திலிருந்து சன்னதி வாயில் வரை போட்டு, சண்முகப் பெருமானை பலகை மீது இருத்தி சிறிது சிறிதாக அசைத்துப் பீடத்திலிருந்து கேடயத்தில் எழுந்தருள செய்வார்கள். இதுவே உருகு சட்ட சேவை என்று போற்றப்படுகிறது. மேலும் சண்முகப் பெருமான் எழுந்தருளி வீதி உலா சென்று மீண்டும் சன்னதி திரும்பும் வரை உருகு பலகையானது சன்னதியிலிருந்து வாயில் வரை நீட்டி போடப்பட்ட நிலையிலேயே இருக்கும்.
உருகு சட்டை சேவைக்கு பின்னர் சண்முகர் வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளி, மும்மூர்த்திகளாகிய சிவன், பிரம்மா, விஷ்ணு அம்சத்தில் காட்சித் தருவார். அப்போது அவரின் பன்னிரு கரங்களையும் தரிசனம் செய்ய முடியும்.
திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் கோவில்
கண்ணொளி வழங்கும் அம்பிகை
சகல கண் சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்கும் தீர்க்கும் அபிஷேகப்பால்
திருவாரூரிலிருந்து சுமார் 15 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருப்பயத்தங்குடி. இறைவன் திருநாமம் திருப்பயற்றுநாதர், முக்திபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் காவியங்கண்ணி அம்மை, நேத்ராம்பிகை.
இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் அம்பிகை காவியங்கண்ணி தன் வலக்கையில் அபயமுத்திரையுடனும், இடக்கையில் ருத்ராக்ஷ மாலை, மற்றொரு வலக்கையில் தாமரை, இடக்கையைத் தொடையில் ஊன்றியவாறு, நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். அன்னைக்கு அபிஷேகம் செய்த பால் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை கண்களில் ஒற்றியபின் அருந்தினால் சகல கண் சம்பந்தப்பட்ட நோய்களும் பூரணமாக நீங்கும். எனவேதான் இந்த அன்னை நேத்ராம்பிகை என்றும் போற்றப்படுகிறாள்.
புஞ்சை (திருநனிபள்ளி) நற்றுணையப்பர் கோவில்
நாகத்துடனும், மானுடனும் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வ தோற்றம்
மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் புஞ்சை(திருநனிபள்ளி) நற்றுணையப்பர் கோவில்.இத்தலத்தில் மலையான் மடந்தை மற்றும் பர்வத புத்திரி என்ற இரண்டு அம்பிகைகள் அருள் பாலிக்கின்றனர். மூலத்தானத்திற்கே யானை வந்து வழிபட்ட தலம் என்பதால், இத்தலத்தின் கருவறை மிகவும் பெரியதாக அமைந்துள்ளது. இவ்வளவு பெரிய கருவறை இந்தியாவில் உள்ள எந்த சிவத்தலத்திலும் காண முடியாது.
கோவிலின் சுற்று பகுதியில் மிக பிரம்மாண்டமான தோற்றத்துடன் யோக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார்.தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இருக்க, அவரது வலது புறம் இரண்டு சீடர்களும், இடது புறம் இரண்டு சீடர்களும் காட்சி அளிக்கிறார்கள்.அவர் எழுந்தருளி இருக்கும் பீடத்தின் கீழ் நாகமும், மானும் எழுந்தருளி இருப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.இப்படி நாகத்துடனும், மானுடனும் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
சென்னை தண்டையார்பேட்டை வரதராஜ பெருமாள் கோவில்
குழந்தையை பெருமாளுக்கு தத்து கொடுக்கும் நடைமுறை
சென்னையின் வடக்கில் அமைந்துள்ள தண்டையார்பேட்டையில் அமைந்துள்ளது வரதராஜ பெருமாள் கோவில். 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில். மூலவர் பெருமாள் வடக்கு நோக்கி இருப்பது இந்தத் தலத்தின் தனிச்சிறப்பாகும். இப்பகுதியிலுள்ள பல ஆயிரம் மீனவ மக்களின் குலதெய்வமாக இப்பெருமாள் விளங்குகின்றார்.
தல புராணம்
அரசர்கள் காலத்தில், செல்வந்தர் ஒருவர், தான் கொடுத்த கடனுக்கு ஈடாக, அவர் வீட்டில் இருந்த பெருமாள் சிலையை, கட்டை வண்டியில் எடுத்து வந்து, தண்டையார்பேட்டை காட்டில், யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துள்ளார்.
பல ஆண்டுகளுக்குப் பின், மக்களால் கண்டெடுக்கப்பட்டு, அதே இடத்தில் சிறிய அளவிலான கோயிலை மக்கள் எழுப்பியதாக செவிவழி வரலாறு கூறுகிறது. பெருமாளை குல தெய்வமாக வழிபடும் மீனவ மக்கள், ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம், விரதம் இருந்து, தங்கள் வேண்டுதல்களை அவரது பாதங்களில் சமர்ப்பிக்கின்றனர்.
இவ்வழக்கம். பல தலைமுறைகளாக தொடர்ந்து வருகிறது. தங்கள் வாழ்வின் மாற்றங்கள், முன்னேற்றங்களுக்கு வரதராஜ பெருமாள் தரும் வரமே காரணமென்பது, இம்மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. வரதராஜ பெருமாள். வரம் தரும் ராஜன் என்பதால், அவர் வரதராஜ பெருமாள் ஆக இங்கு காட்சியளிக்கிறார்.
பிரார்த்தனை
ஜாதக கோளாறு, திருமண தடை, தோஷம் உள்ளோர், குழந்தைப்பேறுக்காக இங்கு பிரார்த்திக்கின்றனர்.
இக்கோவிலின் முக்கிய சிறப்பு, பெருமாளுக்கு குழந்தையை தத்து கொடுப்பது. இதை ஒரு பரிகார நிகழ்ச்சியாக பக்தர்கள் கடைபிடிக்கின்றனர்.
ஜாதக கோளாறு, திருமண தடை, தோஷம் உள்ளோர், தம் குழந்தையை பெருமாளுக்கு தத்து கொடுப்பர். பின் பெருமாளிடம் இருந்து குழந்தையை தத்தெடுக்கின்றனர்.
மலேஷியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வந்தவர்களும், குழந்தைகளை பெருமாளுக்கு தத்து கொடுக்கின்றனர். பெருமாளுக்கு குழந்தைகளை தத்து கொடுத்தால், வாழ்க்கையில் அதிர்ஷ்டம் சேர்ந்து, எல்லா வித சொத்துக்களும் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவிழாக்கள்
ஒவ்வொரு வைகாசியிலும் இங்கு பிரம்மோற்சவம் நடக்கும். புரட்டாசி மாதத்தில், ஒவ்வொரு வாரமும், புஷ்ப அலங்காரம், சந்தன காப்பு, வெண்ணெய் காப்பு என, பெருமாளுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக, ஆராதனைகள் நடக்கும்.
கலவை அங்காளபரமேஸ்வரி கோவில்
பக்தர்கள் நேர்த்திக்கடனாக தங்கள் புகைப்படங்களை காணிக்கையாக செலுத்தும் வினோத நடைமுறை
மேல்மலையனூரை அடுத்து மயானக் கொள்ளைக்குப் புகழ்பெற்ற தலம்
இராணிப்பேட்டையிலிருந்து 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கலவை அங்காளபரமேஸ்வரி கோவில். மேல்மலையனூரை அடுத்து மயானக் கொள்ளைக்குப் புகழ்பெற்ற தலம் இது. அங்காளபரமேஸ்வரி குடிக்கொண்டிருக்கும் கருவறைக்கு முன் சயன கோலத்தில் அம்மன் உருவம் ஒன்று உள்ளது. இக்கோவிலில் பூசாரிகள் கிடையாது. அர்ச்சனை, அபிஷேகம் எதுவும் செய்யப்படுவதில்லை. இக்கோவிலில் சேவை செய்ய பிரார்த்தனை செய்த பக்தர்களே பிரசாதம் தருகிறார்கள். பிரசாதமாக பெருமாள் கோவில்களில் கொடுப்பது மாதிரி துளசி தீர்த்தம் கொடுத்து சடாரி வைக்கிறார்கள்.
இக்கோவிலின் தனிச்சிறப்பு வேறு எந்த கோவிலிலும் காணப்படாத ஒன்றாகும். திருமணப்பேறு, குழந்தைப்பேறு, கல்வி, தொழில் என பல்வேறு கோரிக்கைகளுக்காக வேண்டி செல்லும் பக்தர்கள், தங்கள் குறை நீங்கிய பிறகு, அதற்கு நன்றிக் கடனாக, காணிக்கையாக தட்டில் பழம், பூ மாலைகள் வைத்து அதில் தங்களின் படத்தினை சட்டமிட்டு ஆலயத்தினைச் சுற்றி வந்து ஆலய சுவரில் மாட்டி வைக்கின்றனர். இதுவே பக்தர்கள் அம்மனுக்குச் செலுத்தும் காணிக்கையாகும்.
இப்படி காணிக்கையாக செலுத்தப்பட்ட படங்கள் பல்லாயிரக் கணக்கில், இக்கோவிலில் இருக்கின்றது. கோட் போட்ட அங்கிள், கல்யாண கோலத்தில் தம்பதி, நடைவண்டி ஓட்டும் குழந்தை, சார்ட்சோடு விமானத்தில் எடுத்த செல்பி, பிளாக் அண்ட் வொயிட், லேமினேசன், பாஸ்போர்ட் சைஸ்ன்னு கோவில் வாசலில், சுவரில், கூரையில், ஸ்விட்ச் போர்ட் மேல் என்று இந்த கோவில் முழுக்க போட்டோக்கள் உள்ளன.
பேரம்பாக்கம் சோழீஸ்வரர் கோவில்
நரம்பு சம்பந்தமான நோய்களுக்கான பரிகார தலம்
நரம்பு நோய் தீர்க்கும் ஆறு நாள் அர்ச்சனை
அம்பிகையின் கால் கொலுசொலி கேட்கும் தலம்
சென்னையில் இருந்து 60 கி.மீ தொலைவிலும் (மப்பேடு வழி), திருவள்ளூரிலிருந்து 18 கி.மீ தொலைவிலும் உள்ள பேரம்பாக்கத்தில் அமைந்துள்ளது சோழீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். இக்கோவிலானது முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், 1112ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
ஆதியில் இந்த ஈசனுக்கு குலோத்துங்க சோழீஸ்வரமுடைய மகாதேவர் என்பதுதான் திருநாமமாக விளங்கியது. அதுவே பின்னாளில் சுருங்கி சோழீஸ்வரர் என்று மாறியது என்கிறார்கள்.
இக்கோவிலானது நரம்பு சம்பந்தமான, வலிப்பு முதலிய நோய்களுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. இந்த ஈசனின் லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்யும்போது அவரின் திருமேனியில் நரம்பு மண்டலம் ஓடுவதைப் போன்ற அமைப்பைக் காணமுடியும். அதனால்தானோ என்னவோ இந்த ஈசனை வேண்டிக்கொண்டால் நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் தீர்கின்றன என்கிறார்கள் பக்தர்கள்.
இவ்வூரில் வாழ்ந்த ஒரு பெரியவர் நரம்பு நோயால் பாதிப்படைந்தார். இந்த நோயை குணப்படுத்த நிறைய செலவு ஆகும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டதால் இவர் இக்கோவில் இறைவன் சோழீஸ்வரரை பிராத்தனை செய்தார் .
சோழீஸ்வரர் அவரின் பிராத்தனைக்கு செவிமடுத்து அவரை குணப்படுத்தினார் , அந்த பெரியவர் நோய் குணப்படுத்த வைத்திருந்த பணத்தில் இக்கோவிலுக்கு கொடிக்கம்பத்தை நிறுவினார்.
அதிலிருந்து இக்கோவிலுக்கு நரம்பு சம்பந்தமான நோய்களில் பாதித்தவர்கள் வந்து பிராத்தனை செய்து வருகின்றனர். ஒவ்வொரு திங்கள் கிழமையும் எல்லா ஊர்களில் இருந்தும் பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து பிராத்தனை செய்கின்றனர்.
நரம்பு நோய் தீர்க்கும் ஆறு நாள் அர்ச்சனை
நரம்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆறு வாரங்கள் திங்கள் கிழமைகளில் வந்து அர்ச்சனை செய்ய வேண்டும். சுவாமிக்கு பால், விபூதி ஆகியவற்றை பக்தர்கள் கொண்டு வர வேண்டும். அந்த விபூதியையும் வில்வப் பொடியையும் அபிஷேகம் செய்து பிரசாதமாகத் தருவார்கள்.
விபூதியை இரவு உறங்குவதற்கு முன்பாக எங்கு வலியோ அங்கு நன்கு தடவிக் கொள்ள வேண்டும். காலையில் குளித்து முடித்து இந்த சுவாமியின் திருநாமத்தை 108 முறை சொல்லவேண்டும்.
பிறகு விபூதி, வில்வப்பொடி ஆகியவற்றில் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து பருக வேண்டும். இவ்வாறு பருகி வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக நோயிலிருந்து குணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஏழாவது திங்கள் கிழமை வந்து மகா அபிஷேகம் செய்து பரிகாரத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றார்கள்.
அம்பிகையின் கால் கொலுசொலி கேட்கும் தலம்
இத்தலத்து அம்பிகை காமாட்சி அம்மன் பக்தர்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து அருள் புரிபவள். அம்பிகையின் முன் அமர்ந்து மனமுருக பிரார்த்தனை செய்தால் அம்பிகையின் கால் கொலுசொலி கேட்குமாம்.
அம்பிகையின் திருப்பாதங்களில் கொலுசை அணிவிக்க ஏதுவாக அன்னையின் திருமேனி அமைந்துள்ளது சிறப்பாகும். அம்பிகையை வேண்டி நலம் பெற்றவர்கள் அம்பிகைக்குக் கொலுசு காணிக்கையாக வழங்குகின்றார்கள்.
தாமல் தாமோதரப் பெருமாள் கோவில்
வயிற்றில் கயிற்றால் கட்டிய வடுவுடன் காட்சி அளிக்கும் பெருமாள்
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நுழைவு வாயிலில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தாமல். இத்தலத்தில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தாமோதரப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. தாயார் திருநாமம் திருமாலழகி.
கேசவன், நாராயணன், மாதவன் கோவிந்தன் விஷ்ணு மதுசூதனன், திருவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் என 12 திருநாமங்கள் பெருமாளுக்கு விசஷேமானவை. இதில் இத்தலம் தாமோதரப் பெருமாளுக்கு உரியதாக திகழ்கிறது. மூலவர் தாமோதரப் பெருமாள் சங்கு சக்கரம் ஏந்தியபடி நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
ஆயர்பாடியில், நந்தகோபர் யசோதை தம்பதியின் மகனாக, திருமால் கண்ணன் என்னும் பெயரில் வளர்ந்தார். சிறுவனான கண்ணன் ஆயர்பாடியில் பலவித குறும்பு விளையாட்டுகளை நடத்தினார். அதில் வெண்ணெய் திருடுதலும் ஒன்று. இதனால் கோபம் கொண்ட கோபியர்கள், கண்ணனைக் கண்டிக்கும்படி, யசோதையிடம் முறையிட்டனர். கண்ணன் வீட்டை விட்டு வெளியே செல்வதை தடுக்க, யசோதை அவனைக் கயிற்றால் பிணைத்து ஒரு உரலுடன் சேர்த்துக் கட்டி வைத்தாள். அப்போது கண்ணனின் வயிற்றில் கயிறு பதிந்து, அது வடுவாக மாறியது.. அதனால் தாமோதரன் எனப் பெயர் பெற்றான். 'தாம' என்றால் 'கயிறு' அல்லது தாம்பு என்று பொருள். உதரன் என்றால் 'வயிறு'. அதாவது கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன் என்பது பொருள். இந்த தாமோதரப் பெருமாளின் தரிசனம் பெற விரும்பிய மகரிஷிகள் பலர், இங்கிருந்த காட்டில் தவமிருந்தனர். அதன் பயனாக காட்சியளித்த பெருமாள் இத்தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார்.
குழந்தை கண்ணன் வயிற்றில் கட்டிய கயிற்றின் வடுவானது இன்றும் அபிஷேகத்தின் போது மூலவர் விக்கிரகத்தில் காணலாம். மாதம் தோறும் ரோகிணி நட்சத்திரத்தன்று தாமோதர பெருமாளுக்கு ராஜ அலங்கார சேவை நடக்கும்.
நின்ற கோலத்தில் அருள்புரியும் தாமல் ஸ்ரீ தாமோதர பெருமாள், கிடந்த கோலத்தில் காட்சி அருளும் திருப்பாற்கடல் மற்றும் அமர்ந்த கோலத்தில் இருக்கும் திருப்புட்குழி ஆகிய மூன்று வைணவ தலங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. இந்த மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசிப்பது விசேஷமாக கருதப்படுகிறது.
பெருமாளுக்கு வெள்ளிக் கொலுசு காணிக்கை
இத்தலத்தில் பெருமாளிடம் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன், தாமோதரப் பெருமாளுக்கு தங்கள் காணிக்கையாக வெள்ளிக் கொலுசை அணிவிக்கின்றனர்.
குன்றக்குடி சண்முகநாதர் கோவில்
முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட மூவரும் தனித் தனி மயில் வாகனங்களில் அமர்ந்து காட்சி தரும் தனிச்சிறப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது குன்றக்குடி சண்முகநாதர் கோவில் . ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ள இந்த முருகன் கோவிலுக்கு செல்ல 149 படிக்கட்டுகள் உள்ளன. முருகப்பெருமானின் சாபத்தால் மயிலே, மலையாகிப் போனதாகவும், அந்த மலை மீதுதான் முருகப்பெருமான் வீற்றிருப்பதாக தலபுராணம் கூறுகிறது. இந்த மலை மயிலின் வடிவத்தை ஒத்திருப்பதால், மயூரகிரி, மயில்மலை, அரசவரம், கிருஷ்ணநகரம் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இக்கோவில் 1200 ஆண்டுகள் பழமையானது.
கருவறையில் ஆறுமுகமும், பன்னிரண்டு திருக்கரங்களும் கொண்ட முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் சண்முகநாதர் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். செட்டிமுருகன், குன்றையூருடையான், மயூரகிரிநாதன், மயில்கலைக்கந்தன், குன்றைமுருகன், தேனாறுடையான் என்று பலபெயர்கள் மூலவருக்கு உண்டு.
மூலவர் சண்முகநாதர் கிழக்குத் திசையைப் பார்த்தபடி மயிலின் மீது வலது காலை மடித்தும், இடது காலைத் தொங்க விட்டவாறும் அருள்பாலிக்கின்றார். இடப்பக்கம் தெய்வானை, வலப்பக்கம் வள்ளி என இருவரும் தனித்தனி மயில்களில் அமர்ந்துள்ளனர். இப்படி முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட மூவரும் தனித் தனி மயில் வாகனங்களில் அமர்ந்து தரிசனம் தருவது இத்தலத்தின் தனி சிறப்பாகும்.
இக்கோவிலில் குடிகொண்ட முருகனை போற்றி அருணகிரிநாதர் தம் திருப்புகழிலும், பாம்பன் சுவாமிகள் தன் பாடலிலும் சிறப்பித்து பாடியுள்ளார்கள்.
திருச்சி காளிகா பரமேஸ்வரி கோவில்
திருமேனியில் தாலிச் சரடுடன் காட்சிதரும் அம்மன்
திருச்சி நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது காளிகா பரமேஸ்வரி கோவில். இத்தலத்தில் அன்னை காளிகா பரமேஸ்வரி பெண்களின் மனம் கவர்ந்த அன்னையாக விளங்கி, பக்தர்களின் குறைகளைத் தீர்த்து அருள்பாலிக்கிறார்.
ஆலயத்தின் தலபுராணம்
நிராலம்ப மகரிஷி பாரத தேசத்தில் பல இடங்களில் தவம் செய்த பின், கடைசியாக இவ்வூருக்கு வந்தார். இங்கு காவிரி நதியின் தென் கரையில் பூமியில் பாதம் படாதபடியும், அந்தரத்தில் எந்தவொரு பிடிமானமும் இல்லாமலும் நின்று, அந்தர்யோக முறையில் அன்னையை நோக்கி தவம் செய்யத் தொடங்கினார்.
அவரது தவத்தைக் கண்டு மனம் இளகிய பராசக்தியானவள், ஸ்ரீகாளிகா பரமேஸ்வரியாக அவருக்கு அந்தரத்தில் காட்சி தந்தாள். அந்த காட்சியை கண்டுகளித்த நிராலம்ப மகரிஷியிடம் என்ன வரம் வேண்டுமென அன்னை வினவினாள்.
"ஜெகன் மாதாவாகிய தாங்கள் இந்தக் கலியுகத்தில் மனித குலம், பாவச் செயல்களைச் செய்து, பஞ்ச மாபாதகங்களால் பீடிக்கப்பட்டு, நிம்மதியும், சுகமுமின்றி வேதனையோடு வாழும் போது, அவர்களது பாவங்களை எல்லாம் போக்க வேண்டும். அவர்களுக்கு சகல சவுபாக்கியங்களையும் வழங்கி அவர்களை வாழ வைக்க வேண்டும்" என்று நிராலம்ப மகரிஷி வேண்டினார்.
அன்னை காளிகா பரமேஸ்வரியும் “அப்படியே அருள்கிறேன்” என அனுக்கிரகம் செய்தாள். நிராலம்ப மகரிஷிக்கு அம்பாள் காட்சி கொடுத்த இடமே இந்த ஆலயம் உள்ள இடம் ஆகும். சுமார் 800 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம்.
இக்கோவில் முகப்பில் உள்ள ராஜகோபுரத்தைத் தாண்டியதும் மகா மண்டபம் காணப்படுகிறது. மண்டபத்தின் நடுவே கொடி மரமும், பஞ்சமுக பலிபீடமும், சிங்க வாகனமும் இருக்கின்றன.
இங்கு இருக்கும் பலிபீடம் ஐந்து முகங்களுடன் காட்சி அளிப்பது, இந்தக் கோவிலின் தனிச்சிறப்பாகும். இத்தகைய பலிபீட வடிவமைப்பை நாம் வேறு எந்த கோயிலிலும் காண முடியாது.
பஞ்சமுக பலிபீடத்தை அடுத்து சிம்ம வாகனம் உள்ளது. மகாமண்டபத்தை அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவு வாசலில் துவார சக்திகள் அருள்பாலிக்க, அடுத்து கருவறையில் அன்னை காளிகா பரமேஸ்வரி அமர்ந்த நிலையில் முகத்தில் இளநகை தவழ கருணை ததும்பும் கண்களுடன் அமர்ந்துள்ளாள்.
அம்மன் தன் நான்கு கரங்களில் டமருகம், பாசம், சூலம், கபாலம் ஆகியவற்றை ஏந்தி காட்சி தருகிறாள். அம்மனின் கழுத்தில் திருமாங்கல்யம் துலங்குவது மிகவும் சிறப்பான அம்சமாகும். விக்கிரகத்தின் அமைப்பிலேயே தாலிச் சரடு இருப்பது வேறு எங்கும் காண இயலாத அற்புத அமைப்பாகும்.
இந்த அம்மனிடம் வேண்டிக்கொள்ளும் பெண்களுக்கு திருமணப்பேறு விரைவில் கிடைக்கிறது. திருமணம் நிச்சயம் ஆனதும் மணமகளின் தாலியை அன்னையின் பாதத்தில் வைத்து, அர்ச்சனை செய்து பெற்றுக் கொள்ளும் வழக்கம் இங்கு உள்ளது.
அஷ்டதச புஜ துர்க்கை அம்மன்
கோவில் பிரகாரத்தில் அஷ்டதச துர்க்கை அம்மன் 18 கரங்களுடன் அருள்புரியும் அழகு நம்மை சிலிர்க்க வைக்கக்கூடியது. அஷ்டதச புஜ துர்க்கைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் அபிஷேகம் செய்து வழிபட, தடைபட்ட திருமணம் விரைவாக நடைபெறும் எனவும், மழலைச் செல்வம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.
திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில்
ஆலயத்துளிகள் இணையதளத்தின் 1500ஆம் நாள் பதிவு
ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதை அடையாளப்படுத்திய தங்கச் செங்கோல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை கிராமத்தில் அமைந்துள்ள தேவார தலம், கோமுக்தீஸ்வரர் கோவில். இக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஏழு நூற்றாண்டுகள் பாரம்பரியம் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் சிறியதும், பெரியதுமாக ஏறத்தாழ 75 கோவில்கள் உள்ளன.
1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ம் தேதி இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த சரித்திர நிகழ்வில், தமிழகத்தைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீன மடத்துக்குத் தனிப்பெருமை உண்டு.
இந்தியாவின் கடைசி ஆங்கிலேய ஆளுநராக இருந்த மவுன்ட் பேட்டன், நேருவை அழைத்து, 'இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கப்போகிறோம். அதை எப்படி அடையாளப்படுத்துவது?' என்று கேட்க, குழப்பம் அடைந்த நேரு, உடனடியாகப் பதில் கூறவில்லை. அடுத்து மூதறிஞர் ராஜாஜியை அணுகி, 'இதற்கு நீங்கள்தான் தீர்வு சொல்ல வேண்டும்' என்று கேட்டுக்கொண்டாராம். உடனே ராஜாஜி, 'கவலை வேண்டாம். தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சிமாற்றம் செய்யும்போது, ராஜகுருவாக இருப்பவர் செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து ஆசீர்வதிப்பார். அதுபோல நாமும் மகான் ஒருவர் மூலம் செங்கோல் பெற்று ஆட்சிமாற்றம் அடையலாம்' என்று கூறியிருக்கிறார். அப்போது இந்தியாவின் சைவ மடங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீன மடத்தின் 20-வது குருமகா சந்நிதானமாக இருந்தவர் அம்பலவாண தேசிகர் (1937 - 1951). அவரைத் தொடர்புகொண்ட ராஜாஜி, ஆட்சி மாற்றத்துக்கான சடங்குகளைச் செய்துதரச் சொல்லிக் கேட்டிருக்கிறார்.
1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு 11.45 மணிக்கு, தேவாரத்தில் கோளறு பதிகத்திலுள்ள 11 பாடல்களைப் பாடுமாறு குருமகா சந்நிதானம் அருளியிருந்தார். அதன்படி ‘வேயுறு தோளிபங்கன்’ எனத் தொடங்கும் தேவாரத் திருப்பதிகத்தின் 11-வது பாடலில் கடைசி அடியான ‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே’ என்று பாடி முடிக்கும்போதே மவுண்ட் பேட்டனிடமிருந்து செங்கோலை திருவாவடுதுறை இளைய தம்பிரான் பண்டார சுவாமிகள் பெற்றார். செங்கோலுக்கு புனித நீர் தெளித்து, ஓதுவா மூர்த்திகள், வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் என்கிற தேவார திருப்பதிகத்தை முழுவதுமாகப் பாடி முடிக்கும்போது, இறைநாமம் உச்சரித்து, செங்கோலை திரு. நேருவிடம் வழங்கி இந்தியா சுதந்திரம் பெற்றதை அடையாளப்படுத்தினார். இது தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த விஷயமாகும்.
இந்தியா சுதந்திரம் பெற்றதை அடையாளப்படுத்திய அந்த தங்கச் செங்கோல், 100 சவரன் தங்கத்தில் உருவாக்கப்பட்டது. ஐந்தடி நீளம் கொண்ட அந்த தங்கச் செங்கோலின் உச்சியில் ரிஷபச் சிலை கம்பீரமாக இருந்தது. கைப்பிடியில் தேசத்தின் செழிப்புக்கு அடையாளமாக லட்சுமி தேவி உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியும், இந்த செங்கோலை ஆதீனம் உருவாக்கிக் கொடுத்தது என்பதற்கான தமிழ் வாசகங்களும் அதில் இடம் பிடித்தன.
தரப்பாக்கம் கைலாசநாதர் கோவில்
கிரகண நேரத்தில் நடை திறந்திருக்கும் கோவில்
மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் கைலாசநாதர்
சென்னை பல்லாவரத்தில் இருந்து அனகாபுத்தூர் செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தரப்பாக்கம் எனும் கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் கைலாசநாதர் இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில். இங்குள்ள மூலவர் மேற்கு நோக்கி அமைந்துள்ளது தலத்தின் சிறப்பு. இத்தலத்து ஆவுடையார் சிறியதாக இருக்கிறார்.
பொதுவாக கிரகண நேரத்தில் அனைத்துக் கோவில்களின் நடை அடைக்கப்படும். இதற்கு காரணம் சூரிய, சந்திர கிரகணம் நிகழும் நேரம் தோஷமானதாகக் கருதப்படுவது தான். ஆனால் இக்கோவிலில் கிரகண வேளையில் நடை திறந்து, கிரகண துவக்கத் திலும், முடியும் நேரத்திலும் விசேஷ அபிஷேகம் செய்கின்றனர். இது கிரகண கோவில் என்பதை உணர்த்தும் விதமாக முன் மண்டபத் திலுள்ள ஒரு தூணில், சூரிய, சந்திரரை ராகு, கேது விழுங்கும் சிற்பம் உள்ளது.
உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவில்
வளைகாப்பு நாயகி குங்குமவல்லி அம்மன்
திருச்சி மாநகரின் ஒரு பகுதியான உறையூர், முற்காலத்தில் சோழ மன்னர்களின் தலைநகராக விளங்கியது. உறையூரின் மத்தியில் அமைந்துள்ளது, சுமார் 1800 ஆண்டுகள் பழமையான தான்தோன்றீஸ்வரர் கோவில். இக்கோவில் கர்ப்பிணி பெண்களுக்கான கோவில் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
சூரவாதித்தன் என்ற சோழ மன்னனின் மனைவி காந்திமதி. சிவ பக்தையான இவள், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமியை தினமும் வழிபடும் வழக்கம் உள்ளவள். காந்திமதி கருவுற்றிருந்த சமயம் ஒருநாள், தாயுமான சுவாமியை தரிசிக்க திருச்சி மலைக்குச் சென்றபோது களைப்பின் காரணமாக நடக்க முடியாமல். மயங்கி அமர்ந்தாள்.
அப்போது காந்திமதியின் முன் தோன்றிய சிவபெருமான், நீ மிகவும் பிரயாசைப்பட்டு என்னை தேடி வர வேண்டாம். உன்னைப் பார்க்க நானே வந்துவிட்டேன். உனக்கு காட்சி தந்த இந்த இடத்தில் லிங்க ரூபமாக, 'தான்தோன்றி ஈசனாக' எப்போதும் இருந்து உன்னைப் போன்ற கர்ப்பிணிப் பெண்களை காத்து நிற்பேன் என்று கூறி மறைந்தார்.
சிவபெருமானுடன் பார்வதி தேவியும் இந்தத் தலத்தில் குங்குமவல்லியாக எழுந்தருளி பெண்களின் மங்கலம் காக்கும் தேவியாக அருள்பாலிக்கிறாள். இவள் வளைகாப்பு நாயகி என்றும் திருச்சி மாநகரப் பெண்களால் அன்போடு அழைப்படுகிறாள்.
கோயில் கருவறையில் தான்தோன்றீஸ்வரர் கிழக்கு முகமாக ஏழடி கொண்ட பிரமாண்ட வடிவாக அருள்கிறார். குங்குமவல்லி, இரு கரங்களில் அங்குசம் மற்றும் தாமரை ஏந்தி நின்ற கோலத்தில் அழகுற காட்சி தருகிறாள்.
குங்குமவல்லி தேவிக்கு, ஒவ்வொரு ஆண்டும் வளையல் காப்புத் திருவிழா ஆடிப்பூரம் மற்றும் தை மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் இந்த வளையல் விழா வெகு பிரசித்தம்.
விழாவின் முதல் நாளில் கர்ப்பிணிப் பெண்கள் குங்குமவல்லி அம்மனுக்கு சுகப்பிரசவம் வேண்டி வளையல்களைக் காணிக்கையாக அளிப்பார்கள். அதேபோல் இரண்டாம் நாள் திருமணமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி வளையல்களைக் காணிக்கையாக தருவார்கள். விழாவின் மூன்றாம் நாளில் திருமணமாகாத கன்னிப்பெண்கள் தங்களின் திருமண தடை நீங்கி நல்ல வரன் கிடைக்க வளையல்களைக் காணிக்கையாக தருவார்கள்.
வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாள்களிலும் குங்குமவல்லி வளையல் அலங்காரத்தில் வெகு அழகாகக் காட்சி அளிப்பாள். பிறகு பூஜை வழிபாட்டுக்குப் பின்னர் காணிக்கையாகப் பெறப்பட்ட வளையல்கள் பிரசாதமாகத் தரப்படும்.
இந்தத் தலத்தில் வழிபட்டால் களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், நாக தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருமணம் கைகூட, குழந்தைப்பேறு உண்டாக மாநிலம் முழுவதிருந்தும் ஏராளமான பெண்கள், கூட்டம் கூட்டமாக இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.
வேண்டுதல் நிறைவேறி குழந்தைப் பிறந்தவுடன் இங்கு வந்து வளையல் மாலை போடும் சடங்கு அநேகமாக எல்லா நாளிலும் இங்கு நடக்கிறது. சுருங்கச் சொன்னால் குழந்தை வரம் வேண்டுவோருக்கு இந்த கோவில் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
காரமடை நஞ்சுண்டேசுவரர் கோவில்
இரண்டு ஆவுடையார்களுடன் இருக்கும் அபூர்வ சிவலிங்கத் திருமேனி
நஞ்சுண்டேஸ்வரர் செந்நிறமாக காட்சி அளிக்கும் தனிச்சிறப்பு
கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 29 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது காரமடை நஞ்சுண்டேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் லோகநாயகி. இக்கோவில் 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
இத்தலத்து மூலவர் நஞ்சுண்டேஸ்வரர் செந்நிறமாக காட்சியளிப்பது ஒரு தனிச் சிறப்பாகும். மேலும் இறைவனின் சிவலிங்கத் திருமேனிக்கு பிரதான ஆவுடையார் தவிர, சன்னதிக்குள் சிவலிங்கத்தைச் சுற்றி, மற்றொரு ஆவுடையார் போன்ற அமைப்பில் தரையில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இவர் இரண்டு ஆவுடையார்களுடன் காட்சி தருகிறார். இப்படி இரண்டு ஆவுடையார்களுடன் இருக்கும் சிவலிங்கத் திருமேனியை நாம் வேறு எந்த கலத்திலும் தரிசிக்க முடியாது.
சிவ பெருமான், அமிர்தம் எடுப்பதற்காக பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்த ஆலகால விஷத்தை உட்கொண்டு பிரபஞ்சத்தைக் காப்பாற்றினார். விஷத்தை சிவ பெருமான் பிரதோஷ நேரத்தில் தான் அருந்தினார் என்பதால், இந்த சிவனுக்கு பிரதோஷ நேரத்தில் விசேஷ வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த நேரத்தில் விஷக்கடி பட்டவர்கள் இறைவனிடம் வேண்டிக்கொண்டால் விஷக்கடியால் ஏற்பட்ட உடல் பிரச்னைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
சிதம்பரம் நடராஜர் கோவில்
நமது தேசிய கொடி கோபுரத்தில் ஏற்றப்படும் ஒரே தலம்
ஒவ்வொரு வருடமும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட்15 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒரு விசேஷம் உண்டு. இந்தியாவிலேயே, தில்லை சிதம்பரத்தில் மட்டும் தான் சுதந்திர தினத்தில் நமது தேசிய கொடி கோவிலின் கோபுரத்தின் மீது ராஜ கம்பீரத்துடன் ஏற்றப்படுகிறது.
நாடு சுதந்திரம் அடைந்தது முதல், சுதந்திரத் தினமும் குடியரசு தினமும் உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொண்டாடப்படுகிறது. மேற்கு கோபுரம் வாயில் முன் மண்டபம் அருகே, நாடு சுதந்திரம் அடைந்ததைக் கல்வெட்டாகப் பொறித்து வைத்துள்ளனர் தீட்சிதர்கள்.
சுதந்திரத் தினத்தன்று காலை கோயிலில் முதல் கால பூஜை முடிந்தவுடன், கனக சபையில் நடராஜர் பாதத்தின் கீழ் தேசியக் கொடியை வெள்ளி தட்டில் வைத்து தீட்சிதர்கள் சிறப்பு பூஜைகளைச் செய்வார்கள். நாட்டின் நலனுக்காகவும், மக்கள் நோய் நொடியின்றி வாழவும் பூஜை செய்யப்படுகிறது.
பின்னர், அர்ச்சகர் எடுத்து வர பிரகாரம் வழியாக மேள, தாளம் முழங்கியவாறு தேசியக் கொடியை ஊர்வலமாக கொண்டு வந்து 152 அடி உயரமுள்ள கிழக்கு ராஜகோபுர உச்சியில் தேசியக் கொடியை தீட்சிதர்கள் ஏற்றுவார்கள். பின்னர் அங்கு இருக்கும் பக்தர்களுக்கு இனிப்பு வழங்குவார்கள்.
அப்போது கோவிலுக்கு வருவோர் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்வார்கள். இது வேறெந்த வழிபாட்டுத் தலத்திலும் இல்லாத சிறப்பாகும். பின்னர் கோவிலுக்கு வரும் பொதுமக்களுக்கு லட்டு உள்ளிட்ட இனிப்புகள் வழங்கப்படும்.
இதேபோல், குடியரசுத் தினத்தன்றும் தேசியக் கொடி ஏற்றப்படுகிறது.
உடுமலைப்பேட்டை சீனிவாச ஆஞ்சநேயப் பெருமாள் கோவில்
பெருமாள் கருவறைக்குள் எழுந்தருளி இருக்கும் ஆஞ்சநேயர்
அட்சதை பிரசாதமாக வழங்கப்படும் தனிச்சிறப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ளது சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவில். கருவறையில் முதலவர் சீனிவாச பெருமாள் இரண்டரை அடி உயரத்தில் பாலவடிவில் நின்ற கோலத்திலும், அவருக்கு வலப்புறத்தில் ஆஞ்சநேயர் வணங்கிய கோலத்திலும் உள்ளனர். ராமபக்தரான ஆஞ்சநேயர், பெருமாள் கோவில்களில் தனி சன்னதியில் இருப்பதைப் பார்த்திருக்கலாம். ஆனால், இக்கோவிலில் கருவறையில் பெருமாள் அருகிலேயே ஆஞ்சநேயர் இருப்பது சிறப்பம்சம்.
ஆஞ்சநேயரும், பெருமாளும் இணைந்துள்ளதால், சீனிவாச ஆஞ்சநேயப் பெருமாள் என்று மூலவருக்கு பெயர் சூட்டப்பட்டது. மூலவர் சீனிவாச பெருமாள், மகாலட்சுமியை தனது மார்பில் தாங்கியவர் என்பதால் இங்கு தாயாருக்கு தனிச்சன்னதி இல்லை. பிரசாதமாக அட்சதை வழங்கப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
பல்லாண்டுகளுக்கு முன்பு, குழந்தைப்பேறு இல்லாமல் இருந்த பெருமாள் பக்தர் ஒருவர், குழந்தை வேண்டி திருப்பதி வெங்கடேசரை தொடர்ந்து வணங்கி வந்தார். ஓர்நாள், ஆஞ்சநேயரிடம் முறையிட்ட அவர், 'எனக்கு குழந்தை வரம் அருள, பெருமாளிடம் பரிந்துரைக்கமாட்டாயா!' என்று கூறி வேண்டினார். அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய ஆஞ்சநேயர், 'அரசமரங்கள் நிறைந்த வனத்தின் நடுவே உள்ள புற்றின் அருகில் பெருமாள் சிலை கவனிப்பாரற்று கிடக்கிறது. அச்சிலையை எடுத்து கோவில் கட்டி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும்' என்றார். அதன்படி பக்தர், பெருமாளை கண்டெடுத்து கோவில் கட்டினார். குழந்தை வரமும் கிடைத்தது. பின்னர் தனக்கு அருளிய ஆஞ்சநேயரையும் பெருமாளின் அருகிலேயே வைத்தார்.
வரலட்சுமி விரதம்
தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள்அனுஷ்டிக்கும் வரலட்சுமி விரதம்
தாலி பாக்கியம் நிலைக்க பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதுண்டு. தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் லட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். லட்சுமிதேவியை குறித்து வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள். ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள். தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதெனக் கருதி நடந்தாள். இதுபோலவே பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்க சுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.
லட்சுமிதேவி எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள். அவள் பொறுமை மிக்கவள். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே.வரலட்சுமி விரதம் இருப்பதால் கீழ்க்கண்ட பலன்கள் ஏற்படும்.
வரலட்சுமி விரத பலன்கள்
1. உயர்ந்த ஞானம் கிடைக்கும்.
2. மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
3. மங்கல வாழ்வு அமையும்.
4. மனதில் உள்ள விருப்பங்கள் ஈடேறும்.
5. கல்யாணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
வாணியம்பாடி அதிதீசுவரர் கோவில்
நந்தி மீது அமர்ந்துள்ள தட்சிணாமூர்த்தி
வேலூர் - ஆம்பூர் - கிருஷ்ணகிரி சாலையில், வேலூரில் இருந்து 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் வாணியம்பாடி. இத்தலத்து இறைவன் திருநாமம் அதிதீசுவரர். இறைவி பெரியநாயகி. இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. காசியப முனிவரின் மனைவி, அதிதி வழிபட்டதால் இத்தல இறைவனுக்கு அதிதீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
பிரம்மதேவனால் ஊமையாகும்படி சபிக்கப்பட்ட சரஸ்வதி தேவி (வாணி ), இத்தல இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். வாணி ஊமைத் தன்மை மாறி, உரக்கப் பாடிய இடம் வாணி பாடி என்று அழைக்கப் பெற்று பின்னாளில் மருவி வாணியம்பாடி என மாறியது.
இக்கோவில் இறைவன் கருவறையின் சுற்றுச்சுவரில் எழுந்தருளி உள்ள தட்சிணாமூர்த்தி மான், மழு ஏந்தி, யோக பட்டை, சின் முத்திரையுடன் நந்தி மீது அமர்ந்துள்ளார். தட்சிணாமூர்த்தியின் இந்த தோற்றம் இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும், திக்குவாய், ஊமைத்தன்மை நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.