தரப்பாக்கம் கைலாசநாதர் கோவில்
கிரகண நேரத்தில் நடை திறந்திருக்கும் கோவில்
மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் கைலாசநாதர்
சென்னை பல்லாவரத்தில் இருந்து அனகாபுத்தூர் செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தரப்பாக்கம் எனும் கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் கைலாசநாதர். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில். இங்குள்ள மூலவர் மேற்கு நோக்கி அமைந்துள்ளது தலத்தின் சிறப்பு. இத்தலத்து ஆவுடையார் சிறியதாக இருக்கிறார்.
கிரகண நேரத்தில் நடை திறந்திருக்கும் கோவில்
பொதுவாக கிரகண நேரத்தில் அனைத்துக் கோயில்களின் நடை அடைக்கப்படும். ஆனால் இங்கு கிரகண வேளையில் நடை திறந்து, கிரகண துவக்கத்திலும், முடியும் நேரத்திலும் விசேஷ அபிஷேகம் செய்கின்றனர். இங்குள்ள மூலவர் மேற்கு நோக்கி அமைந்துள்ளது தலத்தின் சிறப்பு.
சூரிய, சந்திர கிரகணம் நிகழும் நேரம் தோஷமானதாகக் கருதப்படுவதால், அவ்வேளையில் கோயிலை அடைத்துவிடுவர். ஆனால் இங்கு கிரகண வேளையில் நடை திறந்து, கிரகண துவக்கத்திலும், முடியும் நேரத்திலும் விசேஷ அபிஷேகம் செய்கின்றனர். இது கிரகண கோயில் என்பதை உணர்த்தும் விதமாக முன் மண்டபத்திலுள்ள ஒரு தூணில், சூரிய, சந்திரரை ராகு, கேது விழுங்கும் சிற்பம் உள்ளது.
கோயில் விஜயநகர கட்டடக் கலை பாணியில் உள்ளது. அம்பாள் ஆனந்தவல்லி, முருகன் சன்னதி அடுத்தடுத்து உள்ளன. பவுர்ணமியன்று மாலையில் பிரத்யங்கிரா, காயத்ரி மற்றும் சுதர்சன ஹோமம் நடக்கிறது. படிப்பு நன்றாக இருக்க விரும்புவோர் இதில் பங்கேற்கின்றனர்.
ஒரு சமயம் பெருமழை பெய்யவே, கோயில் அருகிலுள்ள அடையாறில் வெள்ளம் பெருகி, ஊருக்குள் புகும் அபாயம் உண்டானது. இவ்வேளையில் கரையில் இருந்த கோயில் தேர், ஆற்றின் குறுக்கே விழுந்தது. இதனால், வெள்ளத்தின் திசை மாறி, மக்கள் காப்பாற்றப் பட்டனர். இவ்வாறு, இக்கட்டான சூழ்நிலைகளில் பக்தர்களைக் காப்பவராக இங்குள்ள சிவபெருமான் அருளுகிறார்.
முற்காலத்தில் இங்கு தங்கியிருந்த சித்தர்கள், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். காலப்போக்கில் வழிபாடு நின்று, லிங்கம் மண்ணில் புதைந்து போனது, பிற்காலத்தில் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சிவபெருமான், இங்கு லிங்கம் இருப்பதை உணர்த்தினார். புதைந்து போயிருந்த சிவலிங்கத்தை வெளியில் எடுத்து இந்தக் கோவிலில் பிரதிஷ்டை செய்தனர். இந்த சிவலிங்கத்திற்கு கைலாசநாதர் என்ற பெயர் சூட்டப்பட்டது.
சென்னை பல்லாவரத்தில் இருந்து அனகாபுத்தூர் செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தரப்பாக்கம் கைலாசநாதர் கோவில்.