ருத்ர கங்கை ஆபத்சகாயேஸ்வரர் கோவில்
காளியின் வடிவில் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் துர்க்கை அம்மன்
காசியில் நீராடிய பலன் அளிக்கும் தலம்
மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ளது பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ருத்ரகங்கை என்னும் கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் ஆபத்சகாயேஸ்வரர். இறைவியின் திருநாமம் பரிமளநாயகி. வேத காலத்தில் சிவன் ருத்ரன் என பெயர் பெற்றிருந்தபோது, ருத்ரனின் கங்கை இங்கு தங்கியதால் இவ்வூருக்கு ருத்ர கங்கை எனப் பெயர். இக்கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. கோச்செங்கட சோழனால் கட்டப்பட்ட மாடக்கோவில்களில் இதுவும் ஒன்று. இவ்வூரின் தென்புறம் உள்ள அரசலாற்றில் நீராடி இத்தல இறைவனை வழிபட்டால், காசியில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கருவறையில் மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் பின்புறம் முருகப்பெருமானுடன் சிவபெருமானும், பார்வதியும் திருமண கோலத்தில் காட்சியளிக்கும் சிற்பம் உள்ளது. இந்த வடிவம் சோமாஸ்கந்தர் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிவபெருமானின் தலையில் கங்கையை காணலாம்.
கருவறை கோட்டத்தில் காளியின் ரூபத்தில் துர்க்கை எழுந்தருளி இருக்கிறாள். பொதுவாக மகிஷன் தலையில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கும் துர்க்கை அம்மன், இங்கு காளியின் வடிவில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது ஒரு தனிச்சிறப்பாகும். இந்த காளியானவள் தனது கரங்களில் உடுக்கை, பாசாங்குசம், திரிசூலம், கபாலம் ஆகியவற்றை தாங்கி இருக்கின்றாள்.
தகவல் உதவி : திரு. வி. ராஜா குருக்கள், ஆலய அர்ச்சகர்