தாமல் தாமோதரப் பெருமாள் கோவில்
வயிற்றில் கயிற்றால் கட்டிய வடுவுடன் காட்சி அளிக்கும் பெருமாள்
பெருமாளுக்கு வெள்ளிக் கொலுசு காணிக்கை
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நுழைவு வாயிலில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தாமல். இத்தலத்தில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தாமோதரப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. தாயார் திருநாமம் திருமாலழகி.
கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திருவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் என 12 திருநாமங்கள் பெருமாளுக்கு விசஷேமானவை. இதில் இத்தலம் தாமோதரப் பெருமாளுக்கு உரியதாக திகழ்கிறது. மூலவர் தாமோதரப் பெருமாள் சங்கு சக்கரம் ஏந்தியபடி நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
ஆயர்பாடியில், நந்தகோபர் யசோதை தம்பதியின் மகனாக, திருமால் கண்ணன் என்னும் பெயரில் வளர்ந்தார். சிறுவனான கண்ணன் ஆயர்பாடியில் பலவித குறும்பு விளையாட்டுகளை நடத்தினார். அதில் வெண்ணெய் திருடுதலும் ஒன்று. இதனால் கோபம் கொண்ட கோபியர்கள், கண்ணனைக் கண்டிக்கும்படி, யசோதையிடம் முறையிட்டனர்.
கண்ணன் வீட்டை விட்டு வெளியே செல்வதை தடுக்க, யசோதை அவனைக் கயிற்றால் பிணைத்து ஒரு உரலுடன் சேர்த்துக் கட்டி வைத்தாள். அப்போது கண்ணனின் வயிற்றில் கயிறு பதிந்து, அது வடுவாக மாறியது. அதனால் தாமோதரன் எனப் பெயர் பெற்றான்.
'தாம' என்றால் 'கயிறு' அல்லது தாம்பு என்று பொருள். உதரன் என்றால் 'வயிறு'. அதாவது கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன் என்பது பொருள்.
இந்த தாமோதரப் பெருமாளின் தரிசனம் பெற விரும்பிய மகரிஷிகள் பலர், இங்கிருந்த காட்டில் தவமிருந்தனர். அதன் பயனாக காட்சியளித்த பெருமாள் இத்தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார்.
குழந்தை கண்ணன் வயிற்றில் கட்டிய கயிற்றின் வடுவானது இன்றும் அபிஷேகத்தின் போது மூலவர் விக்கிரகத்தில் காணலாம். மாதம் தோறும் ரோகிணி நட்சத்திரத்தன்று தாமோதர பெருமாளுக்கு ராஜ அலங்கார சேவை நடக்கும்.
நின்ற கோலத்தில் அருள்புரியும் தாமல் ஸ்ரீ தாமோதர பெருமாள், கிடந்த கோலத்தில் காட்சி அருளும் திருப்பாற்கடல் மற்றும் அமர்ந்த கோலத்தில் இருக்கும் திருப்புட்குழி ஆகிய மூன்று வைணவ தலங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. இந்த மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசிப்பது விசேஷமாக கருதப்படுகிறது.
பெருமாளுக்கு வெள்ளிக் கொலுசு காணிக்கை
இத்தலத்தில் பெருமாளிடம் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன், தாமோதரப் பெருமாளுக்கு தங்கள் காணிக்கையாக வெள்ளிக் கொலுசை அணிவிக்கின்றனர்.
பெருமாளுக்கு வெள்ளிக் கொலுசு காணிக்கை
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நுழைவு வாயிலில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தாமல்.