குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில்

குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில்

ரிஷப வாகனத்தில் சிவன் பார்வதியையும், 63 நாயன்மார்களையும் ஒருசேர தரிசிக்கக்கூடிய அபூர்வ காட்சி

துவார பாலகர்கள் சிரித்த வண்ணம் இருக்கும் அரிய தோற்றம்

புதுக்கோட்டை – கொடும்பாளூர் – மணப்பாறை சாலையில், புதுக்கோட்டையில் இருந்து, 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில். மலை குன்றின் அடிப் பகுதி, மேல் பகுதி என இந்த மலையை சுற்றி மட்டும் மொத்தம் 4 கோவில்கள் உள்ளன. இங்கு பாறைகளிலே செதுக்கப்பட்ட சிற்பங்கள் மெய் சிலிர்க்க வைக்கின்றன.

பொதுவாக எல்லா சிவன் கோயில்களும் 63 நாயன்மார்களின் சிற்பங்கள் இறைவன் கருவறை சுற்றுப்பிரகாரத்தில் அமைந்திருக்கும். அதுவும் ஒரே நேரத்தில் காண முடியாத வண்ணம், அவர்கள் நீண்ட வரிசையில் அமைந்திருப்பார்கள். ஆனால் இந்த கோவிலில் 63 நாயன்மார்களின் சிற்பங்கள் கருவறை சுற்றுப்பிரகாரத்தில் இல்லை.

அதற்கு பதிலாக சுற்றுப்புற பிரகாரத்தில் நின்று மலையைப் பார்த்தால் 63 நாயன்மார்களின் வடிவங்களும் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு நடுவில் ரிஷப வாகனத்தின் மேல் சிவபெருமான், பார்வதி அமர்ந்து இருக்கிறார்கள். சிவபெருமான் பார்வதியையும், 63 நாயன்மார்களையும் ஒருசேர ஒரே நேரத்தில் பார்க்கும் வகையில் வடிவமைத்திருப்பது, நினைந்து, நினைந்து வியக்கும் வண்ணம் ஓர் அற்புதக் காட்சியாக அமைந்துள்ளது.

இப்படி ஒரே பார்வையில் அத்தனை நாயன்மார்களையும், ரிஷபத்தில் அமர்ந்த சிவன் பார்வதி என அனைவரையும் பார்க்க முடிவது தமிழகத்தில் இந்தக் கோவிலில் மட்டும்தான். இது ஒரு சிற்ப அதிசயம் ஆகும்.

இக்கோவில் வாயிலில் இரண்டு துவார பாலகர்கள் சிற்பங்கள் உள்ளன. இந்தத் துவார பாலகர்கள் சிரித்த வண்ணம் உள்ளனர். துவார பாலகர்கள் சிரித்த வண்ணம் இருப்பது போன்ற அமைப்பு, இந்தியாவில் வேறு எங்குமே கிடையாது. மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள துவாரபாலகர் சிலைகள், குகைகளை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளன.

Read More
சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்

சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்

இரவு அர்த்தஜாம பூஜை செய்த அர்ச்சகர் மறுநாள் நடை திறக்கக்கூடாது என்று கடைபிடிக்கப்படும் நடைமுறை

சங்கு, சிப்பி,  கிளிஞ்சல்களாலான  அபூர்வ வெள்ளை நிற நந்தி

நாகர்கோவிலிருந்து கன்னியாகுமரி  செல்லும் பாதையில், நாகர்கோவிலில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது சுசீந்திரம் தாணுமாலயன் கோவில். 

இக்கோவிலில் பிரம்மா, விஷ்ணு,  சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், ஒன்றின் மேல் ஒன்றாக, சிவலிங்க வடிவில் தாணுமாலயன் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்கள்.  சிவன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்) ஆகிய முப்பெருங்கடவுள்களும் சேர்ந்துள்ள இத்தல மூர்த்தி தாணுமாலயன் என அழைக்கப்படுகிறார்.

அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் நீங்க தேவேந்திரன் இத்தலத்துக்கு வந்து மும்மூர்த்திகளை ஒரே சமயத்தில் வழிபட்டு விமோசனம் பெற்ற தலம் இது. சுசீ என்றால் தூய்மை என்று பொருள். இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் சுசீந்திரம் என அழைக்கப்படலாயிற்று.

 இன்றும் தினமும் நள்ளிரவில் இந்திரன் வந்து தாணுமாலயனை  பூஜிப்பதாக ஐதீகம். இதைக் குறிக்கும் வகையில், தினமும் நள்ளிரவு பூஜை (அர்த்தஜாம பூஜை) மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இந்திரன் பூஜை செய்வதால், ஒரு நாள் இரவு அர்த்தஜாம பூஜைக்கான பொருட்களைச் சேகரித்து வைக்கும் அர்ச்சகர், மறுநாள் காலை நடையைத் திறக்கக் கூடாது என்ற வழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது.

பொதுவாக சிவன் கோவில்களில்,  கருங்கல்லாலான கருப்பு நிற நந்தியைத் தான் நாம் தரிசித்து இருப்போம். ஒரு சில கோவில்களில் தான் வெள்ளை நிறத்திலான, சுதையாலான நந்தியை நாம் பார்க்க முடியும். இக்கோவில் கோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால் மிகப் பெரிய வெள்ளை நிற நந்தியை நாம் காணலாம்.

இந்த நந்தியானது 13 அடி உயரமும், 21 அடி நீளமும், 6 அடி அகலமும் கொண்டது.  இந்த நந்தி வெள்ளை நிற சுண்ணாம்பு, சங்கு, சிப்பி, கிளிஞ்சல்கள் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்டதாகும். இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நந்திகளில், இந்த நந்தியும் ஒன்றாகும். 

Read More
திருமீயச்சூர் மேகநாதர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருமீயச்சூர் மேகநாதர் கோவில்

முகத்தின் ஒரு பக்கத்தில் கோபத்தையும், மறுபக்கத்தில் நாணத்தையும் வெளிப்படுத்தும் அபூர்வ அம்பிகை

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையின் அருகிலுள்ள பேரளம் ரயில் நிலையத்திலிருந்து, மேற்கே ஒரு கி.மீ. தொலைவில் அமைந்து உள்ள தேவார தலம் திருமீயச்சூர் மேகநாதர் கோவில். இறைவியின் திருநாமம் லலிதாம்பிகை.

திருமீயச்சூர், ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் நோன்றிய திருத்தலம். இங்குதான் ஸ்ரீ ஹயக்ரீவர், அகத்திய முனிவருக்கு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்தார். அகத்தியரும் ஒரு பௌர்ணமி நாளன்று ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தினால் திருமீயச்சூர் லலிதாம்பிகையை வழிபட்டதுடன், ஸ்ரீலலிதா நவரத்தின மாலை என்ற பாடலையும் தமிழில் இயற்றி அம்பிகைக்கு அர்ப்பணித்தார்.

இத்தலத்துக்கு வந்து, லலிதா சகஸ்ரநாமத்தையும், லலிதா நவரத்னமாலையையும் படிப்பவர்களுக்கு அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும்.

இக்கோவில் விமானத்தின் கீழ் தெற்கில் ஷேத்திரபுராணேச்வரர், பார்வதியின் முகவாயைப் பிடித்துச் சாந்தநாயகியாக இருக்கச் சொல்லி வேண்டுவது போன்ற வடிவில் காணப்படும் சிற்ப அழகை வேறு எந்தக் கோவிலிலும் காண்பது அரிது.

இந்தச் சிற்பத்தை ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால் அம்பாள் கோபமுடன் இருப்பது போலத் தோன்றும். இதே சிற்பத்தை மறுபக்கம் சென்று பார்த்தால், அம்பாள் சாந்த சொரூபியாக நாணத்துடன் காணப்படுவாள். இந்த கோவிலில் நாம் அவசியம் தரிசிக்க வேண்டிய அபூர்வமான சிற்பமாகும் இது.

இப்படி அம்பிகை இரு வேறு முக பாவணையை வெளிப்படுத்துவதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்ச்சி உள்ளது. ஒரு சமயம் சிவபெருமானிடம் பெற்ற சாபத்தினால், சூரிய பகவானின் திருமேனி கருகி போனது. சூரியன், சாப விமோசனம் பெற திருமீயச்சூரில் 7 மாத காலம் கடுந்தவம் புரிந்தும் மேனி நிறம் மாறவில்லை.

சூரியன் வாய்விட்டு அலறி இறைவனை அழைக்க, இறைவனோடு தனித்திருந்த பார்வதி, சூரியனின் அலறலினால் தன்னுடைய ஏகாந்தத்துக்கு ஏற்பட்ட இடையூறால் சூரியன் மேல் கோபம் அடைந்தாள்.அவனுக்கு சாபம் அளிக்க முற்பட்டாள்.

முன்னரே சாபத்தால் வருந்திக் கொண்டிருக்கும் சூரியனை மேலும் வருத்த வேண்டாம் என்றும், அமைதி கொள்ளுமாறும் சிவபெருமான் கூற, பார்வதி சாந்தநாயகி ஆனாள். இந்த நிகழ்ச்சியின் காரணமாகத்தான், அம்பிகை தன்னுடைய முகத்தில் இருவேறு பாவங்களைக் கொண்டிருக்கிறார்.

Read More
திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்
Alaya Thuligal Alaya Thuligal

திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்

அபய முத்திரையுடன் எழுந்தருளி இருக்கும்  தட்சிணாமூர்த்தியின் வித்தியாசமான தோற்றம்

மாத்ருஹத்தி , பித்ருஹத்தி தோஷ நிவர்த்தி தலம்

 திருச்சியில் இருந்து 23 கி.மீ. தொலைவிலும்,  லால்குடியில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள தலம் திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில். பரசுராமேசுவரம் என்று முன்பு அழைக்கப்பட்ட இந்த ஊர், திருமகள் வந்து சுவாமியை வழிபட்டதால் திருமங்கலம் என ஆயிற்று.

இறைவன் திருநாமம்,  வேதத்தின் பெயரால் அமைந்துள்ள ஒரே தலம் திருமங்கலம். நான்கு வேதங்களில் ஒன்றான சாமவேதத்தைக் கொண்டு இங்குள்ள இறைவனை சாமவேதீசுவரர் என்றழைப்பது தனிச்சிறப்புடையது. வேறு எந்த தலத்திலும் இறைவனின் திருநாமம் வேதத்தின் பெயரால் அமையவில்லை. மூன்று கோடி சிவலிங்கத்தைத் தரிசனம் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ, அந்த பலன் திருமங்கலம் சாமவேதீசுவரரைத் தரிசித்தால் கிடைக்கும் என்று தலபுராணம் கூறுகின்றது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவாரம் வைப்பு தலம் இது. இறைவியின் திருநாமம் லோகநாயகி.

அபய முத்திரையுடன் எழுந்தருளி இருக்கும்  தட்சிணாமூர்த்தியின் வித்தியாசமான தோற்றம்

பொதுவாக சிவாலயங்களில்தட்சிணாமூர்த்தி தென்திசை நோக்கி  கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து சின்முத்திரை காட்டி சனகாதி முனிவர்களுக்கு ஞானத்தை உபதேசிக்கும் கோலத்தில் காட்சி தருவார்.  ஆனால்,   இக்கோவிலில் அவருடைய தோற்றம் வித்தியாசமாக இருக்கின்றது. இங்கு தட்சிணாமூர்த்தி தனது வலது கரத்தில் அபய முத்திரை காட்டி பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். இதனால் இங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு சகல தோஷங்களும் நீங்கப் பெற்று, குழந்தைகளுக்கு கல்விச் செல்வமும் குழந்தை இல்லாதவரகளுக்கு குழந்தைப் பாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் வியாழக்கிழமையன்று எண்ணெய்,  பால், தேன் அபிஷேகம் செய்து தயிர் சாதம், சுண்டல் நெய்வேத்தியம் செய்து 11 நெய் தீபமிட்டு விளக்கேற்ற வேண்டும். 11 வாரங்கள் வியாழக்கிழமைகளில் விரதமிருந்தால், குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மாத்ருஹத்தி , பித்ருஹத்தி தோஷ நிவர்த்தி தலம்

பரசுராமர் தனது தாயைக் கொன்றதால் ஏற்பட்ட மாத்ருஹத்தி தோஷம் நீங்கவும், சண்டிகேசுவரர் தனது தந்தையைக் கொன்றதால் ஏற்பட்ட பித்ருஹத்தி தோஷம் நீங்கவும் இக்கோவில் இறைவனை வழிபட்டு, தோஷ நிவர்த்தி பெற்றிருக்கின்றனர்.

அதனால் இத்தலம், மாத்ருஹத்தி,  பித்ருஹத்தி தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகின்றது

Read More
கும்பகோணம் தசாவதாரப் பெருமாள் கோவில் (ஸ்ரீ சரநாராயணப் பெருமாள் சன்னதி)
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கும்பகோணம் தசாவதாரப் பெருமாள் கோவில் (ஸ்ரீ சரநாராயணப் பெருமாள் சன்னதி)

பெருமாள் சங்கு, சக்கரத்தினை கை மாற்றி ஏந்தி இருக்கும் அபூர்வ காட்சி

பெருமாளின் பின்புறம் தசாவதார மூர்த்திகள் இருக்கும் அரிய காட்சி

பத்து மூலவருக்கு ஒரே ஒரு உற்சவர் மட்டுமே உள்ள தனிச்சிறப்பு

கும்பகோணம் நகரில் பெரிய கடைவீதியில் அமைந்துள்ளது சரநாராயணப்பெருமாள் கோவில். 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில், வரலாற்று சிறப்பு  வாய்ந்த கோவில் ஆகும். நம்மாழ்வார் திருமங்கை ஆழ்வார்களால் ஸ்ரீ சாரங்கபாணியுடன் இணைந்து, மங்களாசாசனம் செய்யப் பெற்றது.

 இக்கோவில் மூலவர் சரநாராயணப் பெருமாள்  சிரித்த முகத்துடன், ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாக காட்சி தருகிறார். பொதுவாக பெருமாள் வலதுகையில் சக்கரத்தையும் இடது  கையில் சங்கையும் ஏந்திருப்பார். ஆனால் இத்தல பெருமாள், சற்று வித்தியாசமாக, வலது கையில் சங்கையும், இடது கையில் சக்கரத்தையும் ஏந்தி காட்சி தருகிறார்.

சன்னதியில் சரநாராயண பெருமாளின் பின்புறம், மகாவிஷ்ணுவின் தசாவதார மூர்த்திகள் காணப்படுகின்றனர். தசாவதார மூர்த்திகளின் தனித்தலமாக இக்கோவில்  போற்றப்படுகிறது. அதனால்தான் இக்கோவிலை தசாவதாரக் கோவில் என்றும் அழைக்கின்றனர்.

கருவறையில் தசாவதாரங்கள்

இந்த கோயில் கருவறையில், மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம ஆகிய அவதாரங்கள் ஆயுதங்கள் இல்லாமல் சங்கு சக்கரத்துடனும், வாமன அவதாரம் கையில் குடையுடனும், பரசுராம அவதாரம் கையில் கோடாரியுடனும், ராம அவதாரம் வில், அம்புடனும், பலராமன் அவதாரம் கலப்பையுடனும், ஸ்ரீ கிருஷ்ணா அவதாரம் நர்த்தன கிருஷ்ணணாக ஒரு கையில் வெண்ணையுடனும், நாட்டிய பாவனையிலும், கல்கி அவதாரம் கேடயம், கத்தியுடனும் என பத்து அவதாரங்களும் கருவறையில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.

பத்து மூலவருக்கு ஒரே ஒரு உற்சவர் மட்டுமே உள்ள தனிச்சிறப்பு

இங்குள்ள உற்சவமூர்த்தியின் திருநாமம் லெட்சுமி நாராயணர். இவர் ஆழ்வார்களாலேயே பூஜை செய்யப்பட்டவர். பொதுவாக கோவில்களில் ஒரு மூலவருக்கு பல உற்சவர் இருப்பதை  காணலாம். ஆனால் இங்கு பத்து மூலவருக்கு ஒரே ஒரு உற்சவர் மட்டுமே உள்ளார். இது இந்த கோவிலின் தனி சிறப்பாகும்.

 நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும் பரிகாரத் தலம்

இங்குள்ள ஒன்பது அவதாரமும் ஒவ்வொரு கிரகங்களின் தலைவராக கருதப்படுகிறது. குறிப்பாக மச்ச அவதாரம் - கேது, கூர்ம அவதாரம் – சனீஸ்வரர், வராக அவதாரம் -ராகு, நரசிம்ம அவதாரம் செவ்வாய், வாமன அவதாரம் - குரு, பரசுராம அவதாரம் -சுக்கிரன், ராம அவதாரம் -சூரியன், பலராம அவதாரம் - மாந்தி(துணைகோள்), ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் – சந்திரன் ஆகிய நவகிரகங்களுக்கு தலைவர்களாக விளங்குகின்றார்கள். நவக்கிரகங்கள் தோஷ நிவர்த்தி தலமாக இருப்பதால் ஒவ்வொரு கிரக தோஷமுடையவர்கள், தங்கள் பிறந்த நட்சத்திரத்தில் தசாவதார கோவிலில் பத்து அவதாரங்களையும் பிரார்த்தித்து பலனடையலாம்.

இக்கோவில் கடக ராசிக்காரர்களுக்கு உரிய கோவிலாகவும்  விளங்குகின்றது. வெள்ளிக்கிழமைகளில் இக்கோவிலை வழிபடுவது மிகவும் சிறந்தது.

Read More
திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோவில்

யானை மேல் முருகன் அவர்ந்திருக்கும் அபூர்வ காட்சி

காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில், 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருமாகறல். இறைவன் திருநாமம் திருமாகறலீஸ்வரர்.  இறைவியின் திருநாமம் திரிபுவனநாயகி. இத்தலத்தில் சிவலிங்கத் திருமேனி உடும்புபோல சிறுத்து உள்ளது. இக்கோவில் தேவாரப் பாடல் பெற்ற  தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். முருகப்பெருமான் சூரபத்மன் முதலிய அரக்கர்களை அழிக்க போர் செய்த போது, தப்பிப் பிழைத்த மாக்கிரகன் என்ற அசுரன் சிவபூஜை செய்து வந்தான். அவன் இத்தலம் வந்த போது இங்குள்ள இறைவனுக்கு தன் பெயரால் மாக்கிரன் என பெயர் சூட்டினான். இப்பெயர் மருவி ‘மாகறலீசர்’ என்று மாறியது.

பொதுவாக முருகப்பெருமான் மயில் வாகனத்தின் மீது அமர்ந்து அல்லது நின்ற கோலத்தில் காட்சி தருவார். ஆனால், இத்தலத்தில் முருகப்பெருமான், யானை மீது அமர்ந்து காட்சி அளிப்பது நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும். திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. இந்திரன் முருகனுக்கு திருமணப் பரிசாக, தனது பட்டத்து யானையான ஐராவதம் என்ற வெள்ளை யானையை  கொடுத்தான். புதுமணத்தம்பதிகளை வெள்ளை யானையில் அமரச் செய்து அக்காட்சியை கண்ணார கண்டு மகிழ்ந்தான். மகாவிஷ்ணுவும் இக்காட்சியை காண விரும்ப  முருகன், இத்தலத்தில் வெள்ளை யானை மீது அமர்ந்து காட்சி தந்தார்.

இத்தலத்தின் அபிஷேக தீர்த்தத்தை சாப்பிட்டால் ரத்தம் சம்பந்தப்பட்டவை, எலும்பு முறிவு, கண்பார்வை குறைவு, பக்கவாதம் ஆகிய நோய்களின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை.

பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும், கிரக தோஷம் விலகவும் பூஜை செய்யலாம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு அங்க பிரதட்சணம் செய்கிறார்கள். 

Read More
தேவன்குடி கோதண்ட ராமர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

தேவன்குடி கோதண்ட ராமர் கோவில்

கண் கொடுத்த கோதண்டராமர்

தென் இந்தியாவின் அயோத்தி என்று போற்றப்படும்  தலம்

மன்னார்குடிக்கு வடகிழக்கே, காவிரியின் துணை நதி கோரையாற்றின் தென்கரையில் உள்ள தேவன்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது கோதண்ட ராமர் கோவில். இந்தக் கோவில் பல நூற்றாண்டுகள் பழமையானது.

முற்காலத்தில் தேவர்கள் இந்த கிராமத்தில் வசித்து வந்ததால் இவ்வூர் தேவன்குடி என்னும் பெயரை பெற்றது. இங்கு இருக்கும் சிவனை இந்திரன் இந்திரலோகத்தில்  இருந்து வந்து பூஜித்ததால் இங்கு அருள் பாலிக்கும் சிவன், இந்திரபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் என்று தல புராணம் கூறுகின்றது.

ராமாவதாரத்தில் தென்னகம் நோக்கிய பயணத்தில் ஸ்ரீராமர், இளையபெருமாளோடு சீதையைத் தேடி வந்த இடங்களுள் தேவன்குடியும் ஒன்று. இக்கோவிலில். சீதா, லட்சுமண, பரத, சத்ருகன், அனுமன் சமேதராக கோதண்ட ராம சுவாமி அருளுகிறார். ராமர் தனது கையில் வில்லேந்திய கோலத்தில் உள்ளார். தென் இந்தியாவின் அயோத்தி என்று இத்தலம் போற்றப்படுகிறது.

முற்காலத்தில் இந்த ராமர் கோவிலில் கண் தெரியாத ஒருவர் தினமும் பிரதட்சணம் செயது வந்தார். ஒருநாள் இவ்வாறு வலம் வருகையில் திடீரென்று கண் பார்வை  திரும்ப பெற்றதால், தன்னுடைய நிலங்களை இந்த கோவிலுக்கு நன்றியுடன் கொடுத்து விட்டார். அதனால் இந்த ராமருக்கு 'கண் கொடுத்த கோதண்டராமர்'  என்ற பெயர்  உண்டாயிற்று.

 இக்கோவிலில் உள்ள ராமர் கண் பார்வை இழந்தவர்களுக்குப் பார்வை அளிக்கும் வல்லமை கொண்டவர் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். எனவே கண் சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இங்குள்ள மூலவருக்கு சிறப்புப் பிரார்த்தனை செய்து அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்து வழிபாடு நடத்துகிறார்கள்.

இந்த கோவில் மணி சுமார் 800 கிலோ எடை கொண்டது. மிகப் பெரிய இந்த மணியின் ஒலி அக்கம் பக்கத்து ஆறு, ஏழு கிராமங்களுக்குக் கேட்குமாம்.

இக்கோவிலில் ஸ்ரீராம நவமி, பங்குனி உத்திரம், வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இந்த ஆலயத்தில் ஸ்ரீராமநவமி, புனர்பூசம் நட்சத்திரம், ஏகாதசி புதன் மற்றும் சனிக்கிழமைகளில், அங்கப் பிரதட்சணம் செய்வது, நல்லெண்ணையில் விளக்கேற்றுவது, துளசி தீர்த்தத்துடன் திருமஞ்சனம் செய்வது ஆகியவை நற்பலன்களைத் தரும். 

இழந்த செல்வத்தை மீண்டும் பெற, காலதாமதம், பண விரயம், பித்ரு தோஷம் நீங்க மன சாந்தி, குல விருத்தி அடைய, வாழ்க்கையில் நல்வழி கிடைக்க இந்த தலத்திற்கு வந்து வேண்டினால், வேண்டியது கிடைக்கும் சிறப்பு வாய்ந்த தலமாகும். அயோத்திக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செலுத்தலாம். 

Read More
திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்

திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்

பைரவர், காலபைரவர் ஆகிய இருவரும் ஒன்றாக இருக்கும் அபூர்வ காட்சி

விஷக்கடிக்கு நிவாரணம் அளிக்கும் அர்த்த ஜாம பூஜை விபூதி பிரசாதம்

திருச்சி மாவட்டம்  லால்குடியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம்,  வேதத்தின் பெயரால் அமைந்துள்ள  ஒரே தலம் திருமங்கலம். நான்கு வேதங்களில் ஒன்றான சாமவேதத்தைக் கொண்டு இங்குள்ள இறைவன் சாமவேதீசுவரர் என்றழைப்பது தனிச்சிறப்புடையது.

உலகில் வேதத்தின் பெயரில் உள்ள ஒரே ஈசன் இத்தலத்து இறைவன் மட்டும்தான். இறைவியின்  திருநாமம் லோகநாயகி. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவாரம் வைப்பு தலம் இது.

திருவாகிய லட்சுமி தேவி வழிபட்டதால் இத்தலத்திற்கு திருமங்கலம் என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் தான் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான ஆனாய நாயனார் அவதரித்து வாழ்ந்து சிவத் தொண்டு ஆற்றியுள்ளார்.

பொதுவாக சிவன் கோவில்களில் பைரவர் அல்லது காலபைரவர்  எழுந்தருளி இருப்பார்கள். ஆனால், இக்கோவிலில், கிழக்கு பிரகாரத்தில் பைரவரும், காலபைரவரும்  சேர்ந்து  எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும். காலபைரவர் தனது திருக்கரங்களில் ஆயுதங்கள் ஏந்தி காட்சி தருகிறார். 

விஷக்கடிக்கு நிவாரணம் அளிக்கும் இரட்டை பைரவர் விபூதி பிரசாதம்

இந்த இரட்டை பைரவர்களுக்கு அர்த்த ஜாம பூஜை செய்த பிறகு தரப்படும் விபூதி பிரசாதமானது, விஷக்கடியால் ஏற்படும் துன்பங்களை நிவர்த்தி செய்கிறது. மேலும் பில்லி, சூனியம், ஏவல் போன்ற பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்கின்றது.

சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் அபூர்வ துர்க்கை அம்மன்

இவ்வாலயத்தில் துர்க்கை மகிஷன் மீது அன்றி, சிம்ம வாகனத்தின் மீது காட்சி தருகிறார். துர்க்கை அம்மனின் இந்த அபூர்வ தோற்றத்தை ஒரு சில தலங்களில் தான் தரிசிக்க முடியும். இப்படி சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் அபூர்வ துர்க்கை அம்மன், பகை மற்றும் பயத்தை போக்கி, வாழ்க்கையை வளமாக்குவாள். 

Read More
இராஜபதி கைலாசநாதர் கோவில்

இராஜபதி கைலாசநாதர் கோவில்

லிங்க வடிவில் எழுந்தருளி இருக்கும் நவக்கிரகங்கள்

தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் தலம்

திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் உள்ள குரும்பூர் என்ற ஊரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இராஜபதி கைலாசநாதர் கோவில். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. இச்சிவாலயம் நவகைலாயங்களில் ஒன்றாகவும், கேது தலமாகவும் போற்றப்படுகிறது.

இத்திருக்கோயிலை வழிபடுவது கும்பகோணம் அருகில் உள்ள, கேதுத் தலமான கீழப்பெரும்பள்ளம் திருக்கோயிலை வழிபடுவதற்கு சமமாகும் என கூறப்படுகிறது. காளஹஸ்திக்கு இணையான தலம் என்பதால் இத்தலம், தென் காளஹஸ்தி என்று போற்றப்படுகின்றது. இத்தலத்தில் கண்ணப்ப நாயனாருக்கு தனி சன்னதி உள்ளது.

அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் தன் குருவான அகத்தியரின் உதவியுடன் சிவபெருமானை நேரில் தரிசித்து, அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்று விரும்பினார். தனது குருவிடம் அதற்கான வழிமுறைகளைக் கேட்டார்.

அதற்கு அகத்தியர், தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை மிதக்க விட்டு அவை ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு மூலம் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால், சிவபெருமானின் காட்சி கிடைக்கும் என்றும் அதன் மூலம் முக்தி அடையலாம் என்று தனது சீடருக்கு உபாயம் சொன்னார்.

உரோமச முனிவர் 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டு, அந்த மலர்களை தொடர்ந்து சென்றார். அந்த தாமரை மலர்கள் ஒதுங்கிய தலங்களில் வழிபட்டு, உரோமச முனிவர் முக்தி அடைந்தார். அம்மலர்கள் கரை ஒதுங்கிய இடங்கள் தான் இப்போது நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

உரோமச முனிவரால் மிதக்க விடப்பட்ட தாமரை மலர்களில் எட்டாவது மலர் மதுரை சந்திரகுல பாண்டிய மன்னரின் அரண்மனை இருந்த இப்பகுதியில் ஓதுங்கியது. ராஜாவின் அரண்மனை இங்கு இருந்ததால் இவ்வூர் இராஜபதி எனப் பெயர் பெற்றது.

தாமிரபரணி நதிக்கரையில் உள்ள 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தென்திருப்பேரை 8. ராஜாதிபதி 9. சேர்ந்தபூமங்கலம் ஆகிய கோவில்கள், நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது.

பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரக சன்னதி இருக்கும். இங்கு நவ லிங்க சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இப்படி நவக்கிரகங்கள் லிங்க வடிவில் எழுந்தருளி இருப்பது ஒரு அரிய காட்சியாகும். இந்த லிங்க வடிவில் இருக்கும் நவக்கிரகங்களுக்கு பக்தர்கள் தம் கைகளாலேயே அபிஷேகம் செய்யலாம் என்பது மேலும் ஒரு சிறப்பாகும். 

Read More
பாளையங்கோட்டை முப்பிடாதி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

பாளையங்கோட்டை முப்பிடாதி அம்மன் கோவில்

மூன்று முகம் கொண்ட முப்பிடாதி அம்மன்

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது முப்பிடாரி அம்மன் கோவில். மகிஷாசுரனை அழிக்க அஷ்ட காளியரில் ஒருவராக அவதரித்த அம்மன் முப்புரங்களை காவல் காத்து, மூன்று தலைகளுடன் அருள்பாலிப்பதாக ஐதீகம்.

மகிஷாசுரனை அழிக்க, அம்பிகை எட்டு பெண் குழந்தைகளாக நாகலோகத்தில் பிறந்தாள். அவர்களில் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தைதான் முப்பிடாதி. அஷ்ட காளியரில் மூன்றாவதாக மூன்று தலைகளுடன் அவதரித்தவள் முப்பிடாதி அம்மன். பிடரி என்றால் தலை என்று பொருள். மூன்று தலைகள் இருந்தமையால் முப்பிடரி என்று அழைக்கப்பட்ட இந்த அம்மன் பின்னர் முப்பிடாரி என்று அழைக்கப்படலானார். இதுவே மருவி முப்பிடாதி என்றானது. இந்த அம்மனுக்கான கோவில் திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் அமைந்துள்ளன.

இந்த அம்மனுக்கு மூன்று முகம் தோன்றியதற்கு பின்னணியில் ஒரு ஒரு புராண நிகழ்ச்சி உள்ளது. இந்த அம்மன் சிவனை நோக்கி தவம் செய்து சிவனிடம் 103 சிவலிங்கம் பெற்றார். பின்பு ஒரு நாள் சிவனடியார்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்ய பால் கொண்டு செல்லும் போது, அதனை வாங்கி பருகினாள். இதனால் கோபம் அடைந்த சிவன் தான் வழங்கிய சிவலிங்கத்தை, திருமாலை வாங்கி வர வேண்டினார். திருமாலும் வாங்க வரச் சென்றார். இதனை அறிந்த அம்பிகை மூன்று சிவலிங்கத்தை விழுங்கினார். ஆகையால் அம்மனுக்கு மூன்று முகம் தோன்றியது, இதனால் அம்மனுக்கு முப்பிடாரி அம்மன் என்று பெயர் வந்தது.

பாளையங்கோட்டைப்பகுதியில் உள்ள காவல் தெய்வமாகவும், பில்லிசூனியம் போன்ற தீய சக்திகளை நீக்கும் அம்மனாகவும் பக்தர்கள் இவரை வழிபடுகிறார்கள்.

இக்கோவிலில் தை மாத வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் சிறப்பு அலங்கார சேவைகள் நடைபெறுகின்றது.

Read More
இடுகம்பாளையம் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

இடுகம்பாளையம் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவில்

‍ ‍பிரம்மாண்ட திருமேனியுடன் நம்மை நேர்பார்வை கொண்டு ஆசீர்வதிக்கும் அபூர்வ ஆஞ்சநேயர்

‍கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில், இடுகம்பாளையத்தில் அமைந்துள்ளது ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவில். இந்தக் கோவிலுக்கு 'ஸ்ரீ அனுமந்தராயசாமி கோயில்' என்ற பெயரும் உண்டு.

‍ ‍

இக்கோவில் பல நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையானது. இக்கோவிலில் இருக்கும் கல்வெட்டில் `கலி 4404’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதாலும், சிவன் மற்றும் பார்வதி சன்னதிகளில் மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருப்பதாலும், இந்தக் கோயில் 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.  

‍கிருஷ்ணதேவராயரின் ராஜகுருவான ஶ்ரீவியாசராய தீர்த்தர் இந்த இடத்துக்கு வருகை புரிந்தபோது, இங்கிருந்த பாறையொன்றில் ஆஞ்சநேயர் தியானம் செய்வது போன்ற காட்சி தெரிந்தது. எனவே, அந்தப் பாறையில் ஜெயமங்கள ஆஞ்சநேயரின் திருவுருவத்தைத் தாமே பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

‍இக்கோவிலில், ஜெயமங்கள ஆஞ்சநேயர் வேறெங்கும் காண இயலாத அபூர்வத் தோற்றத்தில் காட்சி தருகிறார். ஜெயமங்கள ஆஞ்சநேயர். எட்டு அடி உயரம் கொண்ட பாறையில் புடைப்புச் சிற்பமாக, ஆறு அடி உயரமும், ஐந்து அடி அகலமும் கொண்டு மிக பிரமாண்டமாக, நம்மை நேருக்கு நேர் பார்த்து ஆசீர்வதிக்கும் கோலத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.

‍ஆஞ்சநேயரின் திருவடிகளில் தாமரை மலர் போன்ற தண்டை அணிந்தும், வலக் கரத்தில் சுதர்சன சக்கரம் பொறிக்கப்பட்டு ஆசீர்வாதம் செய்யும் நிலையிலும், இடக் கரத்தில் சவுகந்திக மலரை ஏந்தியபடி தொடையில் ஊன்றிக் காட்சி தருகிறார். ஆஞ்சநேயரின் வால், ஆஞ்சநேயரின் தலைப்பகுதிக்குப் பின்புறம் இடப்புறமாக மேல் நோக்கி நீண்டிருக்க, வாலின் நுனியில் மணி கட்டப்பட்டிருக்கிறது. ஆஞ்சநேயரின் வாலுக்கு நவகிரகங்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக ஐதீகம். வாலின் நுனியில் உள்ள மணியை மானசீகமாக வழிபட்டு வேண்டிக்கொண்டால், நவகிரக தோஷங்கள் விலகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

‍ ‍

ஜெயமங்கள ஆஞ்சநேயரை புத்திரப்பேறு கிடைக்கவும், திருமணத் தடை நீங்கவும் பக்தர்கள் வழிபடுகிறார்கள். ஜெயமங்கள ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நவகிரக தோஷங்கள் நீங்குவதோடு, மும்மூர்த்தியரின் அனுகிரகமும் ஒருசேரக் கிடைப்பதாகவும் ஐதீகம். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், ஆஞ்சநேயரை வேண்டிக்கொண்டு தினமும் ஒரு கைப்பிடி அரிசி சேர்க்க வேண்டும். இப்படி முப்பது நாள்கள் சேர்த்த அரிசியைக் கோயிலில் கொண்டு வந்து ஆஞ்சநேயரை வேண்டிக் கொண்டு சமர்ப்பிக்க வேண்டும். அப்படி காணிக்கையாக வரும் அரிசியைக் கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது.  ‍‍ ‍

Read More
திருப்பனையூர் சௌந்தரேஸ்வரர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

திருப்பனையூர் சௌந்தரேஸ்வரர் கோவில்

துணையிருந்த விநாயகர்  (கரிகால சோழன், தன் அரசினை மீட்க உதவிய விநாயகர்)

திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் உள்ள ஆண்டிப்பந்தலில் இருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள  தேவாரத்தலம் திருப்பனையூர்.  திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 145-வது தலம் இதுவாகும். இறைவன் திருநாமம் சௌந்தரேஸ்வரர், அழகியநாதர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இத்தலம் தாலவனம், தளவனேஸ்வரம், இராஜேந்திர சோழப்பனையூர் எனப் பழங்காலத்தில் அழைக்கப்பட்டது. பனைமரங்களை மிகுதியாக கொண்ட மணற்பாங்கான ஊர் என்பதால் இதற்கு ."தாலவனம் "  என்ற பெயர் வந்தது.  தாளம் என்பதற்கு பனை என்ற பொருள். இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

இக்கோவிலில் தனிச்சன்னதியில் துணை இருந்த விநாயகர் எழுந்தருளி இருக்கிறார். இந்த விநாயகர் இப்பெயரை பெறுவதற்கு பின்னால், சோழ நாட்டு வரலாற்று நிகழ்ச்சி ஒன்று உள்ளது.

முற்காலச் சோழர்களில் மிகவும் புகழ் பெற்றவன் கரிகாலச் சோழன். இவன் சிறியவனாக இருக்கும்போது தாயாதிகளின் சூழ்ச்சியால் அவனது தந்தை கொல்லப்பட்டார். தந்தையை கொன்ற தாயாதிகள் கரிகாலனையும் கொன்று சோழ நாட்டைக் கைப்பற்ற முனைந்தபோது. அவனது தாய்மாமன் 'இரும்பிடர்த்தலையார்' என்னும் சங்கப் புலவர், பிறர் அறியாமல், குழந்தையையும் தாயையும் பனையூருக்கு அனுப்பிவைத்தார். அரசி, தன் மகனுடன் இவ்வூருக்கு வந்து, இங்கு அமைந்துள்ள சௌந்தரேஸ்வரர் கோவிலில் அடைக்கலம் புகுந்து, இத்தலத்து விநாயகரிடம் முறையிட, விநாயகரின் துணையால் கரிகாலன் எட்டு ஆண்டுகள் இத்தலத்தில் பாதுகாப்பாக இருந்தான்.

பங்காளிகளுக்குப் பயந்து தன் தாயோடு இளவயதில் இவ்வூரில் தலைமறைவாகத் தங்கி வளர்ந்து வந்த கரிகால் சோழனுக்குத் துணையாய் இருந்து அருளி அவனைப் பேரரசனாக்கினார். கரிகாலச் சோழனுக்குத் துணையிருந்ததனால் இத்தல விநாயகர் 'துணையிருந்த விநாயகர்' என்னும் பெயர் பெற்றார்.

 இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் திருமேனி புதுமையான அமைப்பாக - இடக்கையில் பழம் ஒன்றை ஏந்திய வண்ணம் இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.

Read More
பருத்தியூர் சந்தன மாரியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

பருத்தியூர் சந்தன மாரியம்மன் கோவில்

ஏழைக்காக ஆங்கிலேயே நீதிபதியிடம் சாட்சி சொன்ன சந்தன மாரியம்மன்

திருவாரூர் மாவட்டத்தில் குடவாசலுக்குக் கிழக்கே 7 கி.மீ. தொலைவில் குடமுருட்டி ஆற்றின் வடகரையில், பச்சை வயல்களின் நடுவே அமைந்துள்ளது. பருத்தியூர் சந்தன மாரியம்மன் கோவில்.

பருத்தியூர் மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறார் இந்த சந்தன மாரியம்மன். இந்த அம்மன் புரிந்த லீலைகள் ஏராளம். அதில் ஒன்றைத்தான் இப்பதிவில் நாம் காண இருக்கிறோம்.

பாவாடை என்பவன் ஏழை விவசாயி. செல்வந்தர் ஒருவரிடம் கடன் பெற்றான். தன்னிடமிருந்த ஆடு, மாடுகளை விற்று, பாவாடை உரிய நேரத்தில் கடனைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். பாவாடை கடனை மீண்டும் செலுத்தியும், செல்வந்தர் கடன் பத்திரத்தை கொடுக்க மறுத்தார், அத்துடன், "பாவாடை பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை' என்று வழக்கும் தொடுத்துவிட்டார். ஆங்கிலேயே நீதிபதி முன்பு வழக்கு வந்தது. ஆங்கிலேயே நீதிபதி, 'நீர் கடனைத் திருப்பிக் கொடுத்ததற்கு எவரேனும் சாட்சி சொல்லுவார்களா?' என்று, பாவாடையிடம் கேட்டார். பாவாடையோ 'ஐயா… எங்க ஊரு சந்தன மாரியம்மனே சாட்சி' என்றான். பாவாடை அவரது பாமரத்தனத்தைக் கண்டு அனைவரும் சிரித்தனர்.

அன்று இரவு, அந்த ஆங்கிலேய நீதிபதியின் கனவில் ஒரு நீதிமன்றக் காட்சி தோன்றியது! விசாரணைக் கூண்டில், மஞ்சள் நிறத்தில் பட்டுப் பாவாடை உடுத்திய ஒரு சிறுமி நின்றாள்!. 'நீ யாரம்மா?' என்று ஆங்கிலேய நீதிபதி கேட்டார். 'நான்தான் பருத்தியூர் சந்தனமாரி! நிரபராதியான பாவாடைக்குச் சாட்சி சொல்ல வந்திருக்கிறேன்!' என்றாள்.

‘நான் எதனை ஆதாரமாகக் கொண்டு பாவாடை நிரபராதி என்று தீர்மானிப்பது?' என்று நீதிபதி, சிறுமியிடம் கேட்டார். சில நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, 'அவர்களையும் அழைத்து விசாரித்து, நீதி வழங்கு!' என்ற சிறுமி புன்னகை பூத்து மறைந்துவிட்டாள். கனவு கலைந்து விழித்து எழுந்த நீதிபதி, சிறுமி கனவில் குறிப்பிட்ட பெயர்களை எழுதி வைத்துக் கொண்டார், சந்தனமாரி கனவில் குறிப்பிட்ட பெயருள்ள நபர்கள் ஊரில் உண்மையிலேயே இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்வதற்காக நீதிபதி கிராம அதிகாரிகளை அழைத்து விசாரித்தார்.

கிராம அதிகாரிகள், அம்பிகை குறிப்பிட்டவர்கள் இருப்பதை உறுதி செய்தவுடன், அந்த நபர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவர்கள், 'பாவாடை தன்னிடமிருந்த ஆடு, மாடுகளை விற்றுக் கடனைத் தீர்த்து விட்டார்' என்பதை நீதிமன்றத்தில் கூறினார்கள். 'சந்தனமாரி சாட்சி கூறியபடி, பாவாடை நிரபராதி எனத் தீர்ப்பளிக்கிறேன்!' என்று அந்த ஆங்கிலேய நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இன்றுவரை இதுபோன்ற விஷயங்கள் நிறைய நடக்கின்றன. சந்தனமாரி தவறு செய்தவர்களை தண்டிக்கிறாள். மக்களை நல்வழியில் நடக்க வைக்கிறாள்.

Read More
பரிதிநியமம் பரிதியப்பர் கோவில்

பரிதிநியமம் பரிதியப்பர் கோவில்

சூரிய பகவான் சிவபெருமானை கை கூப்பி வணங்கி நிற்கும் அரிய காட்சி

சிவன் கோவிலில் மகாவிஷ்ணுவும், ஆஞ்சநேயரும் அருகருகே இருக்கும் அபூர்வ காட்சி

தஞ்சாவூரில் இருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் பரிதிநியமம். தஞ்சாவூரில் இருந்து ஒரத்தநாடு செல்லும் வழியில் 16 கி.மீ. தொலைவில் உள்ள மேலஉளூர் சென்று, அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 4 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். இக்கோவிலில் இறைவனின் திருநாமம்பாஸ்கரேஸ்வரர், பரிதியப்பர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை.

இத்தலத்திற்கு அரசவனம் என்றும் பெயருண்டு. சூரிய பகவான் தனது தோஷம் நீங்க வழிபட்ட ஏழு தலங்களில் இத்தலமும் ஒன்று. சூரியன் வழிபட்ட மற்ற ஆறு தலங்கள் திருக்கண்டியூர், வேதிகுடி, குடந்தைக்கீழ்கோட்டம், தெளிச்சேரி, புறவார் பனங்காட்டூர், திருநெல்லிக்கா ஆகியவை ஆகும். எனவே இத்தலம் பித்ரு தோஷ பரிகாரத்தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தில் சூரிய பகவான் மூலவர் பரிதியப்பரை கை கூப்பி வணங்கும் நிலையில் எழுந்தருளி உள்ளார். இது ஒரு அரிய காட்சியாகும். இப்படி இறைவன் முன்பு, சூரிய பகவான் வணங்கி நிற்கும் நிலையை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.

மூலவர் பரிதியப்பரின் கருவறை பின்புற கோஷ்டத்தில், மகாவிஷ்ணுவும், ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர். இப்படி மகாவிஷ்ணுவும், ஆஞ்சநேயரும் அருகருகே சிவன் கோவிலில் எழுந்தருளி இருப்பதும் ஒரு அபூர்வ காட்சியாகும்.

மூன்று சண்டிகேஸ்வரர்கள் ஒன்றாக இருக்கும் அரிய காட்சி

இக்கோவிலில் தனிச்சன்னதியில் மூன்று சண்டிகேஸ்வரர்கள் எழுந்தருளி இருப்பது ஒரு அபூர்வ காட்சியாகும்.

பித்ரு தோஷ பரிகாரத் தலம்

ஒருவருடைய ஜாதகத்தில் சூரிய பகவான் பித்ருகாரகன் என்று அறியப்படுகிறார். ஜாதக ரீதியாக எந்த கிரகத்தினாலும் பிதுர் தோஷம் ஏற்பட்டாலும் இத்தலத்தில் பரிகாரம் செய்யலாம் என சொல்லப்படுகிறது. காத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் , சூரிய திசை நடப்பவர்கள் , சிம்ம லக்னம் , சிம்ம ராசியில் பிறந்தவர்கள் , சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதங்களில் பிறந்தவர்கள், தமிழ் மாதத்தின் முதல் தேதியில் பிறந்தவர்கள் முதலியோர் தமிழ் மாத வளர்பிறை முதல் ஞாயிற்றுக்கிழமை இத்தலம் வந்து பரிதியப்பரையும், சூரியனையும் வழிபட அனைத்து தோஷங்களும் நீங்கும்.

நோயினால் நீண்ட நாள் அவதிப்படுபவர்கள், தீராத நோயினால் அவதியுறுபவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபாடு செய்தால், நலம் அடைவார்கள்.

Read More
பிரம்மதேசம் கைலாசநாதர். கோவில்

பிரம்மதேசம் கைலாசநாதர். கோவில்

நம் முன்னோர்களின் கட்டிடக்கலைத்திறனுக்கும், சிற்பத்திறனுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் கோவில்

திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ. தொலையில் உள்ள அம்பாசமுத்திரம் என்ற ஊரிலிருந்து, 4 கி.மீ. தூரத்தில் உள்ள தலம் பிரம்மதேசம். இறைவன் திருநாமம் கைலாசநாதர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. ராஜ ராஜ சோழனால் இக்கோவில் கட்டப்பட்டு, பின்னர் விஜயநகர பேரரசர்களால் விரிவாகப்பட்டது. பிரம்மதேசம் கைலாசநாதர் கோவிலுக்கு சென்று வந்தால் காசிக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

முற்காலத்தில் இந்த கோவில் மிகப் பெரிய கோட்டையாக இருந்துள்ளது. ஆக எதிரிகளின் படையெடுப்புகளில் இருந்து தப்பிக்கும் விதமாக இக் கோவிலின் கட்டுமானங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் இராஜ கோபுர கதவுகள் மரத்தால் செய்யப்பட்டது ஆகும். இதின் சிறப்பம்சம் என்ன என்றால், அக்காலத்தில் அந்நியர்கள் படையெடுப்பின் போது, அந்த கதவுகளை யானைகளை கொண்டு முட்டச் செய்து எதிரிகள் திறந்து விடக்கூடாது என்பதற்காக இந்த கதவுகளில் கூர்மையாண ஆணிகள் சிறிய இடைவெளியில் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவேளை யானையை கொண்டு கதவுகளில் மோதச் செய்தால் அந்த ஆணிகள் வெளியேறி முட்டும் யானைகளின் மீது குத்தி காயப்படுத்தும் படி இக்கதவுகளை அமைத்து இருந்தார்கள்.

கோவிலின் மேற்குப் பிரகாரத்தில் உள்ள தாமரை வடிவிலான வட்டவடிவக் கல்லின் மீது நின்று பார்க்கும்போது, கோவிலின் மூன்று கோபுரங்களும் தெரிவது அக்கால கட்டிடக்கலையின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றது. ராஜகோபுரத்தின் முழு உருவ நிழலும், எதிரே உள்ள தெப்பக்குளத்தில் விழும்படியாக அமைக்கப்பட்டிருப்பது, கட்டிடக் கலையின் சிறப்பை பறைசாற்றுவதாக உள்ளது.

இக்கோவிலுக்குள் நுழைந்ததும் அழகிய கூரை போன்ற அமைப்புடைய முகப்பு மண்டபம் காணப்படுகிறது. முதன்முதலாகப் இந்தக் கூரையைப் பார்ப்பவர்களுக்கு ஒரு கணம், இது மரக்கூரையோ என்ற ஐயம் கண்டிப்பாக எழும். ஏனெனில், மரத்தில் செய்யப்பட்டது போல, அத்தனை நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டு கல்லால் ஆனதாக இந்தக் கூரை அமைக்கப்பட்டுள்ளது.

இக் கோவிலில் உள்ள திருவாதிரை மண்டபத்தில் கல்லில் செதுக்கிய யாழிகளே தூண்களாக உள்ளன. இந்த மண்டபத்தின் முன்புறம் மேலே குரங்குகள் தாவிச் செல்வதை போன்ற சிற்பங்கள் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள தூண்களில் இராமன், வாலியை மறைந்திருந்து தாக்கும் இராமயண சிற்பம் உள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இராமன் ஒரு தூணிலும், போர் புரியும் வாலி - சுக்ரீவன் மற்றொரு தூணிலும் இருக்க, ராமன் இருக்கும் தூண் அருகே நின்றால் வாலி -சுக்ரீவன் தெரியும் படியும், வாலி - சுக்ரீவன் இருக்கும் தூண் அருகே நின்றால் ராமர் தெரியாத படியும் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள நந்தி ஒரே கல்லில் மிகவும் பிரம்மாண்டமாகவும், கலைநயத்துடனும் செதுக்கப்பட்டது என்ற சிறப்பை கொண்டது. சலங்கை, சங்கிலி மற்றும் ஆபரணங்கள் அணிந்த நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்ததாக இந்த நந்தி காட்சி அளிக்கின்றது. நந்தி உள்ள முகப்பு மண்டபத்தின் மேற்கூரையில், ஒரே கல்லால் ஆன கல் சங்கிலி, அதன் நுனியில் ஒரு மணியும், அதனுடன் மணியின் நாக்கும் காணப்படுகிறது. இது, அக்கால சிற்பக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

Read More
சந்தவாசல் கங்காதேவி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சந்தவாசல் கங்காதேவி கோவில்

விஷ்ணுவுக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படும் கோவில்

வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில், 32 கிமீ தொலைவில் அமைந்துள்ளது சந்தவாசல் கங்காதேவி கோவில். இக்கோவிலில், ஐந்து தலை நாகத்தின் கீழ் அமர்ந்திருக்கிறாள், கங்காதேவி. கைகளில் தண்டம், உடுக்கை மற்றும் அமுத கலசம் உள்ளது. கீழே சிம்ம வாகனம் இருக்கிறது.

சிவபெருமானை அழைக்காமல், அவரது மாமனார் தட்சன் யாகம் நடத்தினார். இதனால், கோபத்துடன் இருந்த அவரது வெம்மையை, தலையில் இருந்த கங்காதேவியால் தாங்க முடியவில்லை. சிவனை சாந்தப்படுத்தும்படி, அவள், மகாவிஷ்ணுவை வேண்ட, அவரும் அவ்வாறே செய்தார். மேலும், சிவபெருமானின் உக்கிரமான பார்வையால் எரிந்த பகுதிகளைச் சுற்றிலும், ஏழு நீர் நிலைகளை உண்டாக்கி, குளிரச் செய்தார். இந்த சம்பவத்தின் அடிப்படையில், சந்தவாசலில், குமார கம்பணன் என்ற சிற்றரசரின் மனைவி கங்காதேவிக்கு, கோவில் எழுப்பினார்.

கோவிலுக்குப் பின்புறம் ராஜகம்பீர மலை உள்ளது. பூலோகம் வந்த சிவன், முதலில் இந்த மலையிலும், அடுத்து, திருவண்ணாமலையிலும் பாதம் பதித்தார். இதற்கு, 'மிதிமலை' என்று பெயர். மலையில் சிவபாதம் உள்ளது. திருக்கார்த்திகைக்கு மறுநாள் கைசிக கார்த்திகையன்று, இந்த மலையில் விஷ்ணு தீபம் எனப்படும் தீபத்திருவிழா வெகு விமர்சையாக நடக்கும். இக்கோவிலில் விஷ்ணுவுக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது தனிச்சிறப்பாகும். இங்கு, பெருமாள் கோவில் இருந்ததன் அடையாளமாக, கோவில் முகப்பில் ஒரு தீபஸ்தம்பம் உள்ளது. இதில், சங்கு, சக்கரம், கருடாழ்வார், ஆஞ்சநேயர் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

கங்காதேவிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தையே இங்கு பிரதான பிரசாதமாகத் தருகின்றனர். தண்ணீர் வடிவ தெய்வமான கங்கைக்கே, பூஜை செய்த தீர்த்தமென்பதால் இதை மிகவும் புனிதமானதாகக் கருதுகின்றனர் இதை சிறிது வாங்கிச் சென்று. வீட்டில் வைத்துக் கொள்ள ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தீர்த்த வழிபாட்டிற்கு முக்கியத்துவம் உள்ள தீபாவளி, மாசி மகம் நாட்களில் விசேஷ பூஜை நடக்கும். சித்திரை முதல் நாள், பக்தர்களே, அம்பிகைக்கு பூஜை செய்யலாம்.

திருமணத்தடை, புத்திரதோஷம் உள்ளவர்கள், 'துணி முடிதல்' என்ற வழிபாட்டைச் செய்கின்றனர். மஞ்சள் துணியில் காணிக்கை கட்டி, அம்பாள் பாதத்தில் வைத்து, கோவிலில் கொடுத்து விடுவார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும், மீண்டும் வந்து துணி முடிப்பை வாங்கி காணிக்கை செலுத்துவார்கள். கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்கவும், அவரது நன்மைக்காகவும் அம்பிகைக்கு தாலி அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள்.

Read More
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்

திருவண்ணாமலை மகாதீபத்தின் சிறப்புகள்

பஞ்சபூதங்களுக்குரிய தலங்களில் நெருப்புக்குரியது திருவண்ணாமலை. இத்தலத்தை நினைத்தாலே முக்தி தரும். இங்கு சிவபெருமானே மலையாக அமர்ந்திருப்பதாக ஐதீகம். அதனால் தான் மலையை கிரிவலமாக வந்து வழிபடுவது, சிவபெருமானை வலம் வந்து வணங்குவதற்கு இணையாகக் கருதப்படுகிறது.

திருவண்ணாமலையின் சிறப்புகளுக்கு முதன்மையானதாக இருப்பது, திருக்கார்த்திகை அன்று மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபம் தான். இது போல் மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபடும் வழக்கம் வேறு எந்த கோவிலிலும் கிடையாது.

திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்ற பயன்படுத்தும் கொப்பரை சுமார் 2 ஆயிரம் லிட்டர் நெய் பிடிக்கும் அளவு கொண்டது. மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளி சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு தெரியும். இந்த தீபம் சுமார் 11 நாட்கள் தொடர்ந்து எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்கள் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.

திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து நமசிவாய சொன்னால் அந்த மந்திரத்தை 3 கோடி முறை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும்.

திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் போது மலைக்கு உள் பகுதியிலும், பூஜைகள் நடக்கும் ஒலி கேட்டதாக ரமணர், சேஷாத்திரி சுவாமிகள் உள்பட பல அருளாளர்கள் கூறியுள்ளனர்.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதைப் பார்த்து வணங்கியபடி கிரிவலம் வந்தால், அந்த ஜோதியின் கதிர்கள் நம் உடம்பில் பட்டு ஆன்மசக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

தீபத் திருநாளில் 5 முறை (மொத்தம் 70 கி.மீ. தூரம்) கிரிவலம் வந்தால், அவர்கள் எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும், அவற்றில் இருந்து முழுமையான விமோசனம் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

மலை மீது தீபம் ஏற்றப்படும் போது, 'தீப மங்கள ஜோதி நமோ !நம' என்ற பாடலை பாடி வழிபட்டால் வாழ்வில் மங்களம் பெருகும்.

கார்த்திகைத் தீபத்துக்கு மூன்றாவது நாள் மலையை பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவது மிகச்சிறப்பாக நடைபெறும். அப்போது நாமும் கிரிவலம் வருவது மிகப் பெரிய புண்ணிய பலனைத் தரும்.

கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்பவர்களுக்கு ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

கார்த்திகை தீபம் தினத்தன்று சிவலிங்கம் முன்பு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், அவர்களது வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

கார்த்திகை தீபம் ஏற்றப்படும் காட்சியை நேரில் பார்த்து வழிபடுபவர்களுக்கு, சகல தானம் கொடுப்பதால் கிடைக்கும் புண்ணியங்கள் கிடைக்கும்.

கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலை தலத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

Read More
பூந்தோட்டம் அகத்தீஸ்வரர் கோவில்

பூந்தோட்டம் அகத்தீஸ்வரர் கோவில்

12 ராசிகள், நந்தி பகவான் அமைந்த பீடத்தின் மேல் எழுந்தருளிருக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்திக்கு மேலே விதானத்தில் விநாயகர் இருக்கும் சிறப்பு

திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில், திருவாரூரில் இருந்து  21 கி.மீ தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் அமைந்துள்ளது அகத்தீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் தர்மசவர்த்தினி.

 இந்தக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி மிகவும் சிறப்புக்குரியவர். இவருக்கு ராசி மண்டல குருபகவான் என்ற பெயரும் உண்டு. அவர் தெற்கு முகம் நோக்கி கும்ப ராசியைப் பீடமாகக் கொண்டு வீற்றிருக்கிறார். இவர் அமர்ந்திருக்கும் பீடத்தில் 12 ராசி சின்னங்களும், அதற்கு மேல் நந்தி பகவானும் இடம் பெற்றிருக்கிறார்கள். தட்சிணாமூர்த்தி, முழந்தாளிட்ட நிலையில் இருக்கும் நந்தி பகவானின் மேல் தனது இடது கையை வைத்த வண்ணம் காட்சி அளிக்கிறார்.

வழக்கமாக தட்சிணாமூர்த்தி சனகாதி முனிவர்களுடன் இருப்பார்.  ஆனால் அவர்களுக்கு பதிலாக இங்கு, அகத்திய முனிவரும், கோரக்க சித்தரும் உடன் இருப்பது ஒரு வித்தியாசமான தோற்றமாகும். தட்சிணாமூர்த்திக்கு மேலே விதானத்தில் விநாயகர் எழுந்தருளி இருக்கிறார். இப்படி விநாயகர் தட்சிணாமூர்த்தியின் மேலே எழுந்தருளி இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.

தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் இருக்கும் கோலம் வேறு எந்த கோவிலிலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்

இக்கோவிலில் தினமும் குரு ஹோரையின் போது சிறப்பு பூஜைகள் நடைபெறும். இக்கோவில் ஆலங்குடி குரு பரிகார தலத்துக்குச் சமமானது. இந்த ராசி மண்டல குருபகவானை பிரதோஷ காலத்தில் வழிபட சகல விதமான நன்மைகள் கிடைக்கும். இவரை வணங்கினால் கிரகப்பெயர்ச்சிகள் மூலம் ஏற்ப்படும் தீமைகளில் இருந்து விடுபடலாம். ஜோதிட ரீதியாக குரு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

குரு பெயர்ச்சியின் போது, அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரக்காரர்களுக்கும் சிறப்பு ஹோமங்களும், பரிகார பூஜைகளும் இங்கு நடத்தப்படுகின்றன.

Read More
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
Perumal, பெருமாள் Alaya Thuligal Perumal, பெருமாள் Alaya Thuligal

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் போர்த்தும் வைபவம்

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுக்கு 365 நாட்களில், சுமார் 322 நாட்களுக்கு  திருவிழாக்கள் நடைபெறுகின்றன.  இக்கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவதால், இக்கோவிலுக்கு திருவிழா கோவில் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் முக்கியமான விழா கைசிக ஏகாதசி ஆகும். கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி,  கைசிக ஏகாதசி எனப்படும். இது வைகுண்ட ஏகாதசிக்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன் மிகச் சிறப்பாக நடைபெறும் விழாவாகும்.

கைசிக ஏகாதசி சிறப்பம்சங்கள்

கைசிக ஏகாதசி  அன்று இரவு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், உற்சவ மூர்த்தியான நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் ஒவ்வொன்றாய் போர்த்தும் வைபவம் விடிய விடிய நடைபெறும். பெருமாளுக்கு தினமும் அணிவிக்கும் வஸ்திரங்களில் ஏதேனும் குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்யும் பரிகாரமாக இந்த வைபவம் நடைபெறுகிறது. மேலும் கார்த்திகை, மார்கழி குளிர் மாதங்கள் என்பதால் பெருமாளின் மீதுள்ள அன்பின் காரணமாக இந்த வஸ்திரங்கள் போர்த்தப்படுகின்றன. அத்துடன், ஒவ்வொரு வஸ்திரம் சாற்றியவுடனும் வேளையம் என்று அழைக்கப்படும் வெற்றிலை, பாக்கு, கற்பூர ஆரத்தி ஆகியவையும் நம்பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து நம்பெருமாளுக்கு செய்யப்படும்  வஸ்திர மரியாதை

கி.பி 1320 முதல் 1370 வரையிலான ஆண்டுகளில் முஸ்லிம் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சூறையாடப்பட்ட நிலையில், உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் திருப்பதி திருமலையில் சுமார் 50 ஆண்டு காலம் எழுந்தருளியிருந்தார். இதனை நினைவுகூறும் வகையில்,  ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஆண்டுதோறும் கைசிக ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டு வருகிறது.

கைசிகப் புராணம்

கைசிக ஏகாதசி  அன்று , நம்பாடுவான் என்ற பக்தனின் கதையை நினைவு கூரும் வகையில் பராசர பட்டர் பரம்பரையினர் கைசிகப் புராணத்தை நம்பெருமாள் முன் வாசிப்பார்கள். கைசிகப் புராண வாசிப்பு நிகழ்ச்சியானது விடிய, விடிய நடைபெறும்.

கற்பூரப் படியேற்றச் சேவை

மறுநாள் துவாதசி அதிகாலையில் நம்பெருமாள் மூலஸ்தானத்திற்குத் திரும்பும்போது கற்பூர ஆராதனை மற்றும் படியேற்றச் சேவை நடைபெறும். 

Read More
விலங்கல்பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

விலங்கல்பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

முருகப்பெருமானின் நெற்றியில் சிவலிங்கம் அமைந்திருக்கும் அரிய காட்சி

திருத்தணி முருகன் சாயலில் அமைந்திருக்கும் மூலவர் திருமேனி

கடலூருக்கு மேற்கே 12 கி.மீ. தொலைவில், கடலூர் -திருக்கோவலூர் மாவட்ட நெடும் பாதையை ஒட்டிக் கெடிலம் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது விலங்கல்பட்டு.

 அதிகமாக மலைத்தொடர்கள் இல்லாத கடலூர் மாவட்டத்தில், கூடலூர் குன்று என்ற மலை தொடரில் அமைந்துள்ளது விலங்கல்பட்டு சிவசுப்ரமணியர் கோவில். விலங்கல் என்றால் மலை மற்றும் மலை சார்ந்த பகுதி என்று பொருள். 100 அடி உயரமுள்ள இந்த சிறிய குன்றின் மேலே ஏறுவதற்கு நூற்று பத்து படிக்கட்டுகளும், சரிவான ஒரு சாலையும் உள்ளன.

 300 வருடங்களுக்கு மேல் பழமையான இக்கோவிலின் கருவறையில், மூலவர் சிவசுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சகிதமாக எழுந்தருளி இருக்கிறார். இங்குள்ள மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமி சிலையின் நெற்றியில் சிவலிங்கம் அமைந்து இருப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இப்படி முருகப்பெருமானின் நெற்றியில் சிவலிங்கம் அமைந்திருக்கும் தோற்றத்தை, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.  இப்படி அமைந்திருப்பது சிவபெருமான் வேறு, முருகன் வேறு என்று இல்லை, இருவரும் ஒருவரே என்ற ஐதீகத்தை உணர்த்துகின்றது. முருகனின் நெற்றியில் அமைந்திருக்கும் இந்த சிவலிங்கத்தை நாம் அபிஷேகத்தின் போது தெளிவாக பார்க்க முடியும்.

 பக்தர் ஒருவரின் கனவில் தோன்றி முருகன் தனக்கு திருத்தணியில் இருப்பது போல் இங்கு கோவில் கட்ட வேண்டும் என்ற உத்தரவின் பெயரில் இந்த கோவில் எழுப்பப்பட்டது. இக்கோவில் மூலவர் திருமேனியானது திருத்தணி முருகன் சாயலில் அமைந்திருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.

 இக்கோவிலில் கல்லாலான வேல் ஒன்று ‘ஆதிவேல்’ என்ற பெயரில் தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த வேலுக்கு உப்பு, மிளகு, மஞ்சள், திருநீறு  ஆகியவற்றை.செலுத்தி பிரார்த்தனை செய்கிறார்கள். இப்படி செய்வதால் தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

Read More