திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்

பைரவர், காலபைரவர் ஆகிய இருவரும் ஒன்றாக இருக்கும் அபூர்வ காட்சி

விஷக்கடிக்கு நிவாரணம் அளிக்கும் அர்த்த ஜாம பூஜை விபூதி பிரசாதம்

திருச்சி மாவட்டம்  லால்குடியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம்,  வேதத்தின் பெயரால் அமைந்துள்ள  ஒரே தலம் திருமங்கலம். நான்கு வேதங்களில் ஒன்றான சாமவேதத்தைக் கொண்டு இங்குள்ள இறைவன் சாமவேதீசுவரர் என்றழைப்பது தனிச்சிறப்புடையது.

உலகில் வேதத்தின் பெயரில் உள்ள ஒரே ஈசன் இத்தலத்து இறைவன் மட்டும்தான். இறைவியின்  திருநாமம் லோகநாயகி. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவார வைப்பு தலம் இது.

பரசுராமர் இத்தலத்து இறைவனை வழிபட்டு தோஷ நிவர்த்தி அடைந்தார். இங்குள்ள தீர்த்தம் பரசுராம தீர்த்தம் எனவும் இத்தலம் பரசுராமேஸ்வரம் எனவும் அழைக்கப்படுகிறது. சண்டீஸ்வரர் வழிபட்ட தலம் இது. (newly added)

திருவாகிய லட்சுமி தேவி வழிபட்டதால் இத்தலத்திற்கு திருமங்கலம் என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் தான் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான ஆனாய நாயனார் அவதரித்து வாழ்ந்து சிவத் தொண்டு ஆற்றியுள்ளார்.

பொதுவாக சிவன் கோவில்களில் பைரவர் அல்லது காலபைரவர்  எழுந்தருளி இருப்பார்கள். ஆனால், இக்கோவிலில், கிழக்கு பிரகாரத்தில் பைரவரும், காலபைரவரும்  சேர்ந்து  எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும். காலபைரவர் தனது திருக்கரங்களில் ஆயுதங்கள் ஏந்தி காட்சி தருகிறார். 

விஷக்கடிக்கு நிவாரணம் அளிக்கும் இரட்டை பைரவர் விபூதி பிரசாதம்

இந்த இரட்டை பைரவர்களுக்கு அர்த்த ஜாம பூஜை செய்த பிறகு தரப்படும் விபூதி பிரசாதமானது, விஷக்கடியால் ஏற்படும் துன்பங்களை நிவர்த்தி செய்கிறது. மேலும் பில்லி, சூனியம், ஏவல் போன்ற பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்கின்றது.

சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் அபூர்வ துர்க்கை அம்மன்

இவ்வாலயத்தில் துர்க்கை மகிஷன் மீது அன்றி, சிம்ம வாகனத்தின் மீது காட்சி தருகிறார். துர்க்கை அம்மனின் இந்த அபூர்வ தோற்றத்தை ஒரு சில தலங்களில் தான் தரிசிக்க முடியும். இப்படி சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் அபூர்வ துர்க்கை அம்மன், பகை மற்றும் பயத்தை போக்கி, வாழ்க்கையை வளமாக்குவாள். 

மாத்ருஹத்தி,  பித்ருஹத்தி தோஷ நிவர்த்தி தலம் (newly added)

இத்தலம், மாத்ருஹத்தி,  பித்ருஹத்தி தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகின்றது. (newly added)

 

லால்குடியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலம்.

Previous
Previous

தேவன்குடி கோதண்ட ராமர் கோவில்

Next
Next

இராஜபதி கைலாசநாதர் கோவில்