
திருச்சி நந்தீஸ்வரர் கோவில்
நந்திக்கு என்று இருக்கும் தனி கோவில்
பிரதோஷ வேளையில் வழிபட்டால் பலன் இரட்டிப்பாக தரும் தலம்
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் தெப்பக்குளம் அருகில் உள்ளது நந்தீஸ்வரர் கோவில்.சோழமன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலின் உபகோவிலாகும். இது நந்தியம்பெருமானுக்கான தனிப்பட்ட கோவில் ஆகும். நந்தி வழிபட்ட தலம் இது.
பொதுவாக சிவன் கோவில்களில் இருக்கும் நந்திக்கு பிரதோஷம் நடக்கும். ஆனால், சிவன் இல்லாமல் நந்தி மட்டும் தனித்திருக்கும் இக்கோவிலிலும் பிரதோஷம் சிறப்பாக நடை பெறுகிறது. பிரதோஷ நேரத்தில் சிவபெருமான், நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நின்று நடனம் புரிகிறார். இந்த நேரத்தில் நந்தீஸ்வரரின் இருகொம்புகளுக்கு நடுவிலும், நம் பார்வையை செலுத்தி இறைவனை வழிபட வேண்டும் என்பது நியதி. அப்போது சிவதரிசனம், சிவாலய பிரதட்சணம் செய்தால் ஒரு சுற்றுக்கு, கோடி சுற்று சுற்றிய பலன் உண்டாகும் என்கின்றனர். இந்தக் கோவிலில் நந்தீஸ்வரர் மட்டும் தனித்திருப்பதால், பிரதோஷ வேளையில் இங்கு வழிபட்டால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.

காவேரி அம்மன் கோவில்
காவேரி அன்னைக்கு நன்றி செலுத்தும் ஆடிப்பெருக்கு விழா
ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப் பதினெட்டாம் பெருக்கு என்று தமிழக மக்கள் விமரிசையாக கொண்டாடுகிறார்கள்.பதினெட்டு என்ற எண் வெற்றியைக் குறிக்கும். மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன.
தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வரும் விழாக்களில், காவிரிக்கென பிரத்யேகமான விழாவாக ஆடிப்பெருக்கு விழா உள்ளது. பயிர் செழிக்க வளம் அருளும் காவேரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில்தான் இந்த ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளின் கரைகளில் மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
ஆடிப்பெருக்கன்று காவேரிக்கரையில் இளம் பெண்களும், புதுமண தம்பதிகள் மற்றும் திருமணமான பெண்கள் புத்தாடை உடுத்திக் கொண்டு பழங்கள், அவல், ஊறவைத்த இனிப்பு கலந்த அரிசி, புதிய மாங்கல்ய மற்றும் மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி ஆகியவற்றை வைத்து மஞ்சள் மற்றும் மணலால் உருவாக்கப்பட்ட பிள்ளையார் முன் படையல் செய்து வழிபடுவார்கள். தாலி பாக்கியம் நிலைக்க சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கு அன்று புது தாலி மாற்றிக் கொள்வர். இந்த நன்னாளில் புதுமண பெண்ணிற்கு தாலி பிரித்து கோர்ப்பர் . எந்த ஒரு புது மற்றும் நல்ல காரியங்களை ஆடிப்பெருக்கு அன்று ஆரம்பித்தால் , அந்த காரியம் மேலும் மேலும் பெருகும் என்பது ஐதீகம்.
காவேரித் தாயாருக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அளிக்கும் சீர்வரிசைகள்
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் அமைந்துள்ளது காவேரி அம்மன் கோவில். இங்குதான் கீழ் இரு கரங்களில் புனித கலசம் தாங்கி, மேலிரு கரங்களில் அக்கமாலையும் மலர்ச் செண்டும் தாங்கி நின்ற கோலத்தில் அருளுகிறாள் காவேரி அன்னை.
காவேரி அன்னை, ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் தங்கையாக கருதப்படுகிறாள். ஆடியில் காவேரித்தாய் கருவுற்றிருப்பதாக ஐதீகம். எனவேதான் தனது தங்கையான காவேரி யை காண ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சீர்வரிசையுடன் ஆடிப்பெருக்கு அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள படித்துறைக்கு எழுந்தருள்வார். அன்று ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து காவேரித் தாயாருக்கு சீர்வரிசைகளை யானைமீது கொண்டு வருவார்கள். அந்தச் சீர்வரிசைகளில் விதவிதமான மங்கலப் பொருட் கள், மாலைகள், புதிய ஆடைகள் ஆகியவற்றுடன் தாலிப்பொட்டு ஒன்றும் இருக்கும். இதனை அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் முன்னிலையில் அங்குள்ள காவேரித் தாயாருக்குப் படைத்து, காவேரி நதியில் சமர்ப்பிப்பார்கள்.
காவேரிக்கு பெருமாள் சீர்வரிசை அளிக்கும் காட்சியைக் கண்டால் `கோடி புண்ணியம்' கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்பின், பெருமாள் பல்லக்கில் ஏறி கோவிலை நோக்கிச் செல்வது வழக்கம். அன்று அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை விழாக்கோலம் காணும். பெருமாள் கோவிலில் நுழையும்போது, வெளியில் உள்ள ஆண்டாள் சந்நிதிக்கு முன் எழுந்தருள்வார். அங்கே ஸ்ரீஆண்டாளும் பெருமாளும் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த அற்புதமான காட்சியை ஆடிப் பதினெட்டு அன்று ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும்பொழுது, தம்பதியர் தரிசித்தால் வாழ்வில் வசந்தம் வீசும். கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, காவேரியில் நீராடிய நாள் ‘ஆடிப்பெருக்கு' என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழா
தென்னிந்தியாவில் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது, பவானி கூடுதுறை. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவில் ஆடிப்பெருக்கு அன்று அதிகாலையில் திறக்கப்படும். கூடுதுறையில் நீராடிவிட்டு பக்தர்கள், இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.
அட்சய திரிதியை தினத்தை விட, ஆடிப்பெருக்கு சிறப்பான நன்னாளாகும். இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். ஒருவர் செய்யும் நற்செயல்களால், எவ்வாறு புண்ணியம் பெருகுகிறதோ, அதுபோல் இந்த நாளில் தொடங்கும் எந்தக் காரியமும் நன்மை அளிக்கும் வகையிலேயே நிறைவு பெறும் என்பது நம்பிக்கை.

தொட்டியம் அனலாடீசுவரர் கோவில்
சந்திர ரூபமாக காட்சியளிக்கும் திரிபுரசுந்தரி அம்மன்
அம்மன் உச்சிக்காலப் பூஜையின் போது வழங்கப்படும் ஈஸ்வர தீர்த்தப் பிரசாதம்
திருச்சியிலிருந்து சேலம் செல்லும் வழியில், 53 கி.மீ. தொலைவில் உள்ள தொட்டியம் என்ற நகரில் அமைந்திருக்கின்றது அனலாடீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. இக்கோவிலில் அனலாடீஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி சன்னிதிகள் கிழக்கு திசை நோக்கி, அருகருகே அமைந்து சக்தியும் சிவமுமாக காட்சியளிப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
சிவபெருமான் திரிபுரசம்ஹாரத்திற்கு புறப்பட்டு வந்த போது, இத்தலத்தில் பிரம்மன் யாகம் ஒன்றை செய்து கொண்டிருந்தார். அந்த யாக குண்டத்தில் சிவ பெருமான் நர்த்தனம் செய்த காரணத்தால், இத்தலத்து இறைவன் வட மொழியில் 'அக்னி நர்த்தீஸ்வரர்' என்று அழைக்கப்பட்டார். அதுவே தற்போது அனலாடீசுவரர் என்ற திருநாமத்தோடு விளங்குகிறது.
சிவபெருமான் நர்த்தனம் புரிந்த யாககுண்டம், தற்போது 'ஈசுவரத் தீர்த்தம்' என்றழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தம் அம்மன் திரிபுரசுந்தரி சன்னிதிக்கு நேர் எதிரில் அமைந்துள்ளது. நாள்தோறும் அம்மனுக்கு நடைபெறும் உச்சிக்காலப் பூஜையின் போது, பக்தர்களுக்கு ஈசுவரத் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இங்குள்ள திரிபுரசுந்தரி அம்பாளை வணங்குவதால் உடலுக்கும், உள்ளத்திற்கும் வலிமை சேர்ப்பதுடன், குளிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றது.
திரிபுரசுந்தரி என்றால் தமிழில் அழகு உடையவர் என்று பொருள். அதாவது அழகுடையவராக எழுந்தருளி, தன்னை நாடி வரும் பக்தர்களின் தேவையை அறிந்து அதைத் தீர்த்து வைக்கும் இறைவியாக அம்மன் திகழ்கிறார். பொதுவாக சிவாலயங்களில் பரிவார தெய்வங்களாக சூரியனும் சந்திரனும் அருகருகே எழுந்தருளி இருப்பார்கள். இத்தலத்தில் சந்திர ரூபமாக அம்மன் காட்சியளிப்பதால், இக்கோவிலில் சந்திரன் கிடையாது. சூரியன் மட்டுமே எழுந்தருளியுள்ளார்.

திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில்
சிவபெருமான் அம்பிகைக்கு குருவாக இருந்து உபதேசம் செய்த தலம்
இறைவன் திருக்கல்யாணம் நடைபெறாத தலம்
திருச்சி நகரில் அமைந்துள்ள தேவார தலம் திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் அகிலாண்டேசுவரி.
அகிலாண்டேசுவரி என்பதற்கு உலகத்தை ஆள்பவள் என்று பொருள். இத்தலத்தில் இருக்கும் ஜம்பு லிங்கம் அம்பிகையால் செய்யப்பட்டது. ஒரு முறை இத்தலத்திற்கு வந்த அம்பிகை, காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் அமைத்து சிவபெருமானை வழிபட்டார். நீரால் செய்யப்பட்டதால் அந்த லிங்கம் ஜம்புகேசுவரர் எனப் பெயர் பெற்றது. திருவானைக்காவல் பஞ்சபூதத் தலங்களில் அப்புத்(நீர்) தலமாகும்
அகிலாண்டேசுவரி அம்மன் காலையில் லட்சுமியாக, உச்சிக் காலத்தில் பார்வதியாக, மாலையில் சரஸ்வதியாகத் திகழ்வதால், அம்பிகைக்கு மூன்று வண்ண உடை அலங்காரங்கள் மூன்று வேளைகளிலும் செய்யப்படுகிறது. சிவபெருமான், அம்பாளுக்கு இத்தலத்தில் குருவாக இருந்து உபதேசம் செய்ய, அம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்தாள். எனவே மாணவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். சிவபெருமான் குருவாக இருந்து பார்வதிக்கு உபதேசித்த தலம் என்பதால் இங்கு திருக்கல்யாணம் நடப்பதில்லை. திருமணமும் நடைபெறுவதில்லை.

திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் கோவில்
வலது காது வித்தியாசமாக அமைந்துள்ள காலபைரவர்
திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில், சமயபுரத்தில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் கோவில் அமைந்துள்ளது. இறைவியின் திருநாமம் பிரம்மநாயகி. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.
பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீசுவரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் உள்ள தீர்த்தக் குளத்து நீரை, எவர் ஒருவர் கையில் எடுத்தாலும், அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும். இது காசிக்கு நிகரான தலம் மட்டுமல்ல. திருக்கயிலாயத்திற்கு நிகரான தலமும் ஆகும்.
இக்கோவிலில், பொதுவாக தெற்கு நோக்கி இருக்கும் பைரவர் மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு தனி சிறப்பாகும். தேய்பிறை அஷ்டமியில், ராகு கால வேளையில் இங்குள்ள காலபைரவரைத் தரிசித்து அவரின் வலது காதில் நம் பிரச்சினைகளைச் சொல்லி வணங்க வேண்டும். அதற்காகத் தான் இந்த காலபைரவரின் வலது காது வித்தியாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர். அர்த்த ஜாமத்தில் இவரது சன்னதியில் கோவில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச் சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை.

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோவில்
தட்சிணாமூர்த்தியின் காலடியில் நந்தி இருக்கும் அரிய தோற்றம்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருப்பைஞ்ஞீலி. இறைவனின் திருநாமம் ஞீலிவனேஸ்வரர். இக்கோவிலில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன . ஒரு சன்னதியில் நீள்நெடுங்கண் நாயகியும், மற்றொரு சன்னதியில் விசாலாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிக்கின்றனர். இந்த கோவில் 1400 வருடங்களுக்கு மேல் பழமையானது. ஞீலி என்பது மனிதர்கள் உண்ண இயலாத இறைவனுக்கு மட்டுமே படைப்பாகிற ஒரு வகைக் கல்வாழை. பைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். பசுமையான ஞீலி வாழையை தலவிருட்சமாக பெற்றதால் திருப்பைஞ்ஞீலி என்று இத்தலம் பெயர் பெற்றது. எம பயத்தை போக்கக்கூடிய தலம் இது.
இத்தலத்தில் இறைவன் சன்னதியின் சுற்றுச்சுவரில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி கற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். அவரது வலது பாதத்தின் கீழ் வழக்கம் போல் முயலகன் காட்சி தருகின்றான். மடித்து வைத்திருக்கும் அவரது இடது காலின் கீழ் பக்கம் நந்தி காட்சி அளிக்கிறது. சிவபெருமானின் அம்சம் தட்சிணாமூர்த்தி என்பதால் நந்தி தேவர் அவருக்கு வாகனமாக எழுந்தருளி இருக்கிறார். நந்தி தேவர் வழிபட்ட தலம் இது. அதனால் தான் அவர் தட்சிணாமூர்த்தியின் காலடியில் எழுந்தருளி இருக்கிறார். இப்படி நந்தி தேவருடன் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தியை நாம் வேறு தலங்களில் தரிசிப்பது அரிது.
அறிவு, தெளிவு, ஞானம் ஆகியவற்றை அருள்பவர் இந்த தட்சிணாமூர்த்தி (த-அறிவு, க்ஷ-தெளிவு, ண-ஞானம்). தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை தட்சிணமாக வழங்குவதால் தட்சிணாமூர்த்தி என்று பெயர் ஏற்பட்டுள்ளது.

சமயபுரம் மாரியம்மன் கோவில்
சமயபுரம் மாரியம்மனின் பச்சை பட்டினி விரதம்
மாசி மாத கடைசி ஞாயிறு முதல் 28 நாட்கள், பக்தர்களின் நலனுக்காக மாரியம்மன் கடைபிடிக்கும் விரதம்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்லும் வழியில் 15 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில். ஒட்டுமொத்த உலகத்தில் உள்ள அத்தனை மாரியம்மன் கோயில்களுக்கும் தலைமை பீடமானதுதான் சமயபுரம் ஆகும்.
கருவறையில் மாரியம்மன், தனது திருமுடியில் தங்கக் கிரீடம் அணிந்து, குங்கும நிற மேனியுடன், நெற்றியில் வைரப்பட்டை ஒளிவீச, இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு மிகப்பெரிய திருமேனியுடன் காட்சி தருகிறாள். அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். தனது எட்டு கைகளில் கத்தி, உடுக்கை, தாமரை, திரிசூலம், கபாலம், மணி, வில், பாசம் ஆகியவைகளைத் தாங்கி உள்ளாள். அன்னையின் வலது காலின் கீழ் மூன்று அசுரர்களின் தலைகள் காணப்படுகின்றன. உட்கார்ந்த கோலத்தில், இந்த அம்மனைப் போல பெரிய திருமேனி உடைய அம்மனை வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது. இந்த அம்மனின் திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டதால் அம்மனுக்கு 'மூலிகை அம்மன்' என்ற பெயரும் உண்டு. சுதை வடிவமானவள் என்பதால் இந்த அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது.
சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் சங்கடங்கள் போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் பக்தர்கள் விரதம் இருந்து தங்கள் வேண்டுதல் நிறைவேற அம்மனை பிரார்த்திக்கிறார்கள். ஆனால் சமயபுரம் மாரியம்மனே, உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது, சகல சௌபாக்கியங்கள் கிடைக்கவும், ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு அம்சமாகும். அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் நாட்களில், அம்மனை மனதில் கொண்டு, ஊர் மக்களும் தங்கள் வீடுகளில் அம்மன் படத்தை வைத்து வழிபட்டு விரதம் கடைபிடிப்பது வழக்கம். அடுப்பு தீயில் தாளிக்காமல், காலில் செருப்பு அணியாமல், இளநீரும் நீர் மோரும் அருந்தி மஞ்சள் ஆடை உடுத்தி மகமாயியின் அருள் வேண்டி இருக்கும் விரதம் இது.
அம்மனின் பச்சை பட்டினி விரதம் இனிதே நடைபெற வேண்டும் என்பதற்காக கருவறையில் உள்ள அம்மனுக்கு பக்தர்கள் பூக்களை அபிஷேகம் செய்வார்கள். இதனை பூச்சொரிதல் என்பார்கள்.
பூச்சொரிதல் நாள் முதல் 28 நாட்களுக்கு, அம்மனுக்கு தளிகை, நெய்வேத்தியம் கிடையாது. இளநீர், கரும்பு, பானகம், துள்ளுமாவு, நீர்மோர் மட்டுமே மாரியம்மனுக்கு கொடுக்கப்படுகிறது.

திருச்சி ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் கோவில்
நெற்றிக்கண் கொண்ட அபூர்வ ஆஞ்சநேயர்
ஆங்கிலேய பொறியாளரிடம் மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு கர்ப்பகிரகம் கட்டிக் கொடுக்கச் சொன்ன நெற்றிக்கண் ஆஞ்சநேயர்
திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 10 நிமிட நடைபயணத்தில் அமைந்துள்ளது ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் கோவில். கருவறையில் மூலவர் ஸ்ரீஆற்றழகிய சிங்கப்பெருமாள் கையில் செங்கோல் ஏந்தி, தன் மடியினில் மகாலட்சுமியை அமர்த்திக் கொண்டு, லட்சுமி நரசிம்மராக 'ஆற்றழகிய சிங்கர்' என்ற திருநாமத்தோடு கிழக்கு நோக்கி சேவை அருளுகிறார். இக்கோவில் மண்டபத்தில், ஆஞ்சநேயர், தனது பஞ்சலோகத் திருமேனியில், நெற்றியில் மூன்றாவது கண்ணுடன், வடக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
திருவரங்கம் தலத்துடன் தொடர்புடைய நரசிம்ம தலங்கள் மூன்று ஆகும். அவை காவேரியின் வடகரையில் காட்டழகிய சிங்கர், காவேரி தென் கரையில் ஆற்றழகிய சிங்கர், மேட்டழகிய சிங்கர் ஆகும். முற்காலத்தில் திருவரங்கத்திற்க்கு செல்ல பாலம் இல்லாத காரணத்தால், காவேரியில் ஓடம் மூலம் சென்றனர். மாதம் மும்மாரி பெய்து காவேரியில் ஏற்படும் வெள்ள பெருக்கின காரணமாக, மக்கள் அவதியுற்று ரங்கநாதரை தரிசனம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இப்பகுதி மக்கள் வருந்தி பிரார்த்தனை செய்தததை ஏற்று, ஸ்ரீரங்கநாத பெருமாள் இத்தலத்தில் உபய நாச்சியாருடன் உற்சவராக சேவை சாதிக்கிறார். அதனால் இவ்விடம் ஓடத்துறை என பெயர் பெற்றது.
ஆங்கிலேயர் காலத்தில் இப்பகுதியின் தென் மற்றும் வடகரையை இணைக்க பாலம் அமைத்தபோது மூன்று முறையும் பாலம் இடிந்து விழுந்தது. அச்சமயம் இத்தல நெற்றிக்கண் ஆஞ்சனேயர், ஆங்கிலேய பொறியாளரின் கனவில் தோன்றி, இத்தலத்து லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு கர்ப்பகிரகம் நிர்மாணம் செய்து கொடுத்தால், பாலம் கட்டும் பணி எளிதில் முடிவடையும் என்று கூறினார். அதன்படி ஆங்கிலேய பொறியாளர் கர்ப்பகிரகம் கட்டி கொடுக்க, காவேரி ஆற்றில் பாலம் கட்டும் பணியும் முடிந்தது.

திருச்சி ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் கோவில்
நரசிம்மரின் மடியில், அஞ்சலி ஹஸ்தத்துடன் சேவை சாதிக்கும் மகாலட்சுமி தாயாரின் அபூர்வத் தோற்றம்
திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 10 நிமிட நடைபயணத்தில் அமைந்துள்ளது ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் கோவில். திருவரங்கம் தலத்துடன் தொடர்புடைய நரசிம்ம தலங்கள் மூன்று ஆகும். அவை காவேரியின் வடகரையில் அமைந்துள்ள காட்டழகிய சிங்கர், காவேரி தென் கரையில் அமைந்துள்ள ஆற்றழகிய சிங்கர், மேட்டழகிய சிங்கர் ஆகும். ஆற்றழகிய சிங்கர் ஆற்றின் கரையில் இருந்ததால், காவிரிக்கரை ஆற்றழகிய சிங்கர் என்ற பெயர் வழங்கி நிலைத்தது. எந்தவகையான வெள்ளம் வந்தாலும் காப்பாற்றி கரை சேர்க்கும் ஒரே தெய்வமாக, ஆற்றழகிய சிங்கர் இருக்கிறார். ஆதலால், காவிரிக் ஆற்றைக் கடந்து செல்பவர்களும், வருபவர்களும் அவரை வணங்கி விட்டுச் செல்லுவதும், பலன் பெறுவதும் பழக்கத்தில் இருந்தது.
கருவறையில் மூலவர் ஸ்ரீஆற்றழகிய சிங்கப்பெருமாள் தன் மடியினில் மகாலட்சுமியை அமர்த்திக் கொண்டு, லட்சுமி நரசிம்மராக 'ஆற்றழகிய சிங்கர்' என்ற திருநாமத்தோடு கிழக்கு நோக்கி சேவை அருளுகிறார். மகாலட்சுமி தாயார் கை கூப்பி, அஞ்சலி ஹஸ்தத்துடன் காட்சி அளிப்பது வேறு எந்த தலத்திலும் காண முடியாத ஒரு அரிய காட்சியாகும்.
மகாலட்சுமி தாயார் அஞ்சலி ஹஸ்தத்துடன் சேவை சாதிப்பதால் இந்த தலமானது பிரார்த்தனை தலமாகக் கருதப்படுகிறது, வைணவ சமயத்தின்படி தாயாரை வணங்கியப்பிறகு, பெருமாளை சேவிக்க வேண்டும் என்பது சம்பிரதாயம். இதில் தாயாரின் பணியாக கூறப்படுவது என்னவென்றால், பக்தர்களின் குறைகளை திருமாலிடம் எடுத்து கூறுவதே ஆகும். ஆதலால், அந்த பரிபூர்ணமான கைங்கர்யம், இந்த தலத்தில் மகாலட்சுமி தாயார் அஞ்சலி ஹஸ்தத்துடன் செய்து வருவதால், பக்தர்கள் பெருமாளிடம் வைக்கும் கோரிக்கைகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
பிரார்த்தனை
இத்தலத்தில், திருமணத்தடை நீங்க சனிக்கிழமை 5 வாரம் ஜாதகத்தை வைத்து பூஜையும், வேலை, லட்சுமி கடாட்சம் கிட்டவும், கடன் சுமை நீங்க, குடும்ப ஒற்றுமை, மக்கட்பேறு, வியாபார அபிவிருத்தி போன்றவற்றிற்காக சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவில்
நிலம், வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் பரிகார தலம்
நிலத்து மண்ணை சுவாமி மீது வைத்து அர்ச்சனை செய்யும் வித்தியாசமான பரிகார பூஜை
திருச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவில். இறைவியின் திருநாமம் அறம் வளர்த்த நாயகி. பஞ்சபூதங்களுள் பூமிக்கான தலமாக விளங்கும் இக்கோவில்2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. முற்காலத்தில் மண் அரக்கநல்லூர் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர், பின்னர் பெயர் மருவி மண்ணச்சநல்லூர் என்றானது.
இங்கு பூமிக்குரிய நாயகனாக இத்தலத்து இறைவன் பூமிநாதசுவாமி இருப்பதால், மண் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்னைகளுக்கும் இங்கு வந்தால் தீர்ந்து விடும் என்பது ஐதீகம்.பூமிநாத சுவாமி 16 விதமான தோஷங்களை நீக்கி அருள்பவர் என்று அகத்திய மாமுனிவர் தனது நூலில் குறிப்பிட்டு உள்ளார்.
இங்கு மண் சம்பந்தப்பட்ட பிரச்சனை நீங்க நடத்தப்படும் பரிகார பூஜை சற்று வித்தியாசமானது. நாம் வாங்க அல்லது விற்க நினைக்கும் மனையின் வடகிழக்கு மூலை மண்ணை ஒரு நல்ல நாளில் புதன் ஹோரையில் எடுத்து மஞ்சள் நிறத் துணியில் கட்டி கோயிலுக்கு எடுத்து வரவேண்டும். கொடி மரத்து விநாயகருக்கு விளக்கேற்றி, பிறகு அம்பிகைக்கு இரண்டு தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். அடுத்து பூமிநாத சுவாமிக்கு இரண்டு தீபங்கள் ஏற்றி, கொண்டு வந்திருக்கும் மண்ணை பூமிநாத சுவாமி மீது வைத்து அர்ச்சனை செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். பிறகு கோயிலை ஒருமுறை வலம் வந்து அந்த மண்ணை வில்வ மரத்தடியில் போடவேண்டும்.
கோவிலை இரண்டாவது முறை வலம் வந்து, வன்னி மரத்தடி மண்ணை எடுத்து மஞ்சள் துணியில் கட்டிக்கொள்ள வேண்டும். மூன்றாவது முறையும் கோவிலைச் சுற்றி வந்து வணங்க வேண்டும். அடுத்த நாள் காலை, புதன் ஹோரை நேரத்தில், நம் நிலத்தில் மண் எடுத்த இடத்தில் கோவிலில் இருந்து கொண்டு வந்த மண்ணைப் போட்டு தூப தீபம் ஏற்றி வணங்க வேண்டும். பிறகு மண் எடுத்து வந்த துணியில் ஒரு நாணயத்தை முடிந்து, பூஜை அறையில் வைக்க வேண்டும். என்ன வேண்டினோமோ அது நிறைவேறியதும், பூமிநாத சுவாமிக்கும் அம்பாளுக்கும் அர்ச்சனை செய்து முடிந்து வைத்த நாணயத்தை சுவாமிக்கு காணிக்கை செலுத்த வேண்டும் என்பது இங்கு கடைப்பிடிக்கப்படும் ஒரு வேண்டுதல்.இந்த வேண்டுதலால் பூமி சம்மந்தமான எல்லா பிரச்னைகளும் நீங்கி விடுகின்றன என்பது இங்கு வந்து வேண்டிக்கொள்ளும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.

திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்
பைரவர், காலபைரவர் ஆகிய இருவரும் ஒன்றாக இருக்கும் அபூர்வ காட்சி
விஷக்கடிக்கு நிவாரணம் அளிக்கும் விபூதி பிரசாதம்
திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ளது திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம், வேதத்தின் பெயரால் அமைந்துள்ள ஒரே தலம் திருமங்கலம். நான்கு வேதங்களில் ஒன்றான சாமவேதத்தைக் கொண்டு இங்குள்ள இறைவன் சாமவேதீசுவரர் என்றழைப்பது தனிச்சிறப்புடையது. இறைவியின் திருநாமம் லோகநாயகி. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவாரம் வைப்பு தலம் இது.
பொதுவாக சிவன் கோவில்களில் பைரவர் அல்லது காலபைரவர் எழுந்தருளி இருப்பார்கள். ஆனால், இக்கோவிலில், கிழக்கு பிரகாரத்தில் பைரவரும், காலபைரவரும் சேர்ந்து எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும். காலபைரவர் தனது திருக்கரங்களில் ஆயுதங்கள் ஏந்தி காட்சி தருகிறார். இந்த இரட்டை பைரவர்களுக்கு அர்த்த ஜாம பூஜை செய்த பிறகு தரப்படும் விபூதி பிரசாதமானது, விஷக்கடியால் ஏற்படும் துன்பங்களை நிவர்த்தி செய்கிறது. மேலும் பில்லி, சூனியம், ஏவல் போன்ற பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்கின்றது.

திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்
நாகங்களை திருமேனியில் தரித்திருக்கும் அபூர்வ சர்ப்ப கால பைரவர்
திருச்சி – தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள துவாக்குடி என்ற ஊரிலிருந்து, நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் நெடுங்களம். இறைவன் திருநாமம் நித்திய சுந்தரேசுவரர், திருநெடுங்களநாதர், இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி.
இந்தத் தலத்தில் சேத்திர பைரவர், சர்ப்ப கால பைரவர் என்று இரண்டு பைரவர்கள் அருள் பாலிக்கிறார்கள். சேத்திர பைரவர் வாகனத்துடனும், சர்ப்ப கால பைரவர் வாகனம் இல்லாமலும் எழுந்தருளி இருக்கிறார்கள். சர்ப்ப கால பைரவர் தனது கையில் ஒரு நாகத்தையும், வலது கால் மற்றும் இடது கால் இரண்டிலும் நாகங்கள் சுற்றத் தொடங்கி, திருமேனி முழுவதும் படர்ந்து இருக்கின்றன. இப்படி திருமேனி முழுவதும் சர்ப்பங்கள் பின்னி படர்ந்திருக்கும் காலபைரவரை வேறு தலத்தில் நாம் தரிசிப்பது அரிது.
இந்த சர்ப்ப கால பைரவரை வழிபட்டால், கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை விலகும். பாம்பு சம்பந்தப்பட்ட கெட்ட கனவுகள் நின்று விடும். தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டுக்கு உகந்த நாள். அதிலும் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி, காலபைரவாஷ்டமி என்று போற்றப்படுகிறது. பைரவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மலர்கள் சமர்ப்பித்து, செவ்வாழைப் பழம் நைவேத்தியம் வைத்து, தேங்காய் அல்லது பூசணிக்காயில் நெய் தீபமேற்றி வழிபாடு செய்ய, துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் பெருகும். பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், யம பயம் இருக்காது, திருமணத் தடை அகலும். சந்தான பாக்கியம் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள்.

அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவில்
திருபாற்கடல் பள்ளி கொண்ட கோலத்தை பெருமாள் காட்டி அருளும் திவ்ய தேசம்
திருச்சியில் இருந்து 21 கி.மீ., தொலைவில் உள்ள அன்பில் என்ற ஊரில் அமைந்துள்ளது ஐந்தாவது திவ்ய தேசமான சுந்தரராஜ பெருமாள் கோவில். தாயார் திருநாமம் அழகியவல்லி. பஞ்சரங்க தலங்களில் ஒன்று அன்பில் சுந்தரராஜப் பெருமாள் கோயில். அரங்கம் என்றால் ஆறு பிரியும் இடத்தில் அமைந்துள்ள மேடான தீவு அல்லது திட்டு என்று பொருள். காவிரி ஆறு பிரியும் இடத்தில், அடுத்தடுத்து அமைந்துள்ள 5 வைணவ தலங்கள் பஞ்சரங்க தலங்கள் என அழைக்கப்படுகின்றன.
திருபாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் இருப்பதைப் போல, திருமால் தாரக விமானத்தின் கீழ் இந்த திவ்ய தேசத்தில் எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
பிரம்மனுக்கு அழகிய இளைஞனின் உருவில் காட்சி கொடுத்த பெருமாள்
மூலவர் சுந்தர்ராஜ பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக ஆதிசேஷன் மீது சயனித்த திருக்கோலத்தில் இருக்க, உற்சவர் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். ஒருசமயம் நான்முகனான பிரம்ம தேவருக்கு தானே உலகில் அழகானவர் என்றும், தன் படைப்பினாலேயே உலகில் தன்னால் படைக்கப்படும் உயிரினங்களும் அழகாக உள்ளதாக ஆணவம் கொண்டார். இதனால் கோபமடைந்த மகாவிஷ்ணு, பிரம்ம தேவரை சாதாரண மானிட பிறவியாக பிறக்கும் படி சாபம் அளித்துள்ளார். விஷ்ணு அளித்த சாபத்தின் படி பூமியில் பல தலங்களுக்கும் சென்று வழிபட்டார் பிரம்மா. கடைசியாக இந்த தலத்திற்கு வந்த போது ஒரு அழகான இளைஞரின் தோற்றத்தில் மகாவிஷ்ணு, பிரம்மனுக்கு காட்சி கொடுத்தார்.
அவரின் அழகை கண்டு வியந்து போன பிரம்மா, எப்படி இவ்வளவு அழகாக உள்ளீர்கள் என அவரிடம் கேட்டார். அப்போது விஷ்ணு தனது உண்மையான வடிவத்தை காட்டி, திருக்காட்சி அளித்தார். அழகு நிலையானது இல்லை; அதற்காக ஆணவம் கொள்ளக் கூடாது என்பதை புரிய வைக்க பிரம்மனுக்கு அழகிய இளைஞனின் உருவில் காட்சி கொடுத்ததால் இந்த தல பெருமாள் சுந்தரராஜ பெருமாள் என்றும், வடிவழகிய நம்பி என்றும் திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறார்.
ஆண்டாள் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் இருக்கும் அரிய காட்சி
இத்தலத்தின் முன்மண்டபத்தில் ஆண்டாள் நின்ற கோலத்தில் தனிசன்னதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். அதே சந்நிதியில் அமர்ந்த கோலத்தில் அவரின் உறு்சவர் திருமேனி காணப்படுகிறது. ஒரே இடத்தில் இரண்டு கோலங்களில் ஆண்டாளை இங்கே தரிசிப்பது சிறப்பு.

திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்
திருமணத்தடை நீக்கும் வராகி அம்மன்
கோவில் உரலில், விரலி மஞ்சள் இடித்து, வராகி அம்மனுக்கு செய்யப்படும் அபிஷேகம்
திருச்சி – தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள துவாக்குடி என்ற ஊரிலிருந்து, நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் நெடுங்களம். இறைவன் திருநாமம் நித்திய சுந்தரேசுவரர், திருநெடுங்களநாதர். இறைவியின் திருநாமம் ஒப்பிலாநாயகி. திருநெடுங்களம் என்றால் 'சமவெளியில் அமைந்த பெரிய ஊர்' என்று பொருள்.
இறைவன் கருவறையின் வெளிச்சுற்றில் சப்த கன்னியர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். சப்த கன்னியரில் ஐந்தாவதாக விளங்கும் வராகி அம்மன் சிறந்த வரப்பிரசாதி. மனித உடலும், பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள் வராகி அம்மன்.
இத்தலத்து வராகி அம்மன் தடைகளை நீக்கி திருமணம் வரம் கைகூட அருள்பவள். சப்த கன்னியரின் அருகிலேயே, அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட சோழர் காலத்து உரல் ஒன்று உள்ளது.
வராகி அம்மனுக்கு வாரத்தில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், ராகு காலத்தின்போது சிற்ப உரலில், விரலி மஞ்சளை இடித்து அபிஷேகம் செய்தால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் கைகூடும். இந்த வழிபாட்டு முறை இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். திருமண வரம் வேண்டும் ஆண், பெண் என இருபாலரும், பெரும் அளவில், இத்தலத்தில் இந்த வழிபாட்டை மேற்கொள்கிறார்கள்.
பிரார்த்தனை
வளர்பிறை பஞ்சமி திதியில் வராகி அம்மனை வழிபடுவது மிகுந்த நற்பலன்களை தரும். பகை, வறுமை, பிணி, தடைகள் அகலும். பில்லி, சூன்யம், மாந்திரீகம் விலகி ஓடும். எதிரிகள் ,பகைவர்கள், தீயோர் விலகிடுவர்.

முசிறி லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்
கருடாழ்வாரும், ஆஞ்சநேயரும் எதிரெதிரே எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி
திருச்சி சேலம் நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து 39 கி.மீ. தொலைவில் உள்ள முசிறி நகரத்தில் அமைந்துள்ளது லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில். புராணங்களில் முசுகுந்தபுரி என்று அழைக்கப்பட்ட இந்த ஊர், தற்பொழுது மருவி முசிறி என்று மாறியுள்ளது. கருவறையில், லட்சுமி நாராயணப் பெருமாள் கிழக்கு நோக்கியவாறு லட்சுமி தேவியை இடது தொடையில் அமர்த்திக்கொண்டு, இடது கையால் அணைத்தபடி, வலது கையால் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருளும் அபயஹஸ்தம் கொண்டு காட்சியளிக்கிறார்.
பொதுவாக பெருமாள் கோவில்களில் கொடிமரத்து அருகில், கருடாழ்வாரோ அல்லது ஆஞ்சநேயரோ எழுந்தருளி இருப்பார்கள். இக்கோவிலில் கொடிமரம் இல்லை. ஆனால் இக்கோவில் மகாமண்டபத்தில், ஆஞ்சநேயரும், கருடாழ்வாரும் எதிரெதிரே எழுந்தருளி இருப்பது, வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்.
பிரார்த்தனை
இக்கோவில் சுக்கிர பரிகாரத் தலமாக விளங்குகிறது. திருமணத் தடை நீக்கவும், குழந்தைப் பேறுக்காகவும் இங்கு வந்து பரிகாரம் செய்கிறார்கள், மேலும் வியாபாரத் தடை கடன் தொல்லை, தொழில் நடை எதிரிகளால் ஏற்படும் பயம் வேலையின்மை போன்றவை விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. லட்சுமி தேவியுடன் இருக்கும் இப் பெருமானை, 7 வாரங்கள் 12 முறை சுற்றி வந்தால். நினைத்த காரியம் உடனே நிறைவேறும் என்பது ஆன்றோர்களின் அறிவுரை ஆகும்.
திருவிழாக்கள்
இக்கோவிலில் திருப்பாவாடைத் திருநாள் ஆண்டுக்கு முறை நடைபெறுவது வழக்கம். மார்கழி மாதம் 16-ஆம் திருநாள் வட்டு திருப்பாவாடைத் திருநாளும் ஆனி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று பெரியத் திருப்பாவாடைத் திருநாளும், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை புளியோதரைத் திருப்பாவாடை திருநாளும் நடைபெறும்.

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில்
சமயபுரம் மாரியம்மனின் சகோதரியாக பாவிக்கப்படும் வேப்பிலை மாரியம்மன்
திருச்சியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள மணப்பாறை நகரத்தில் அமைந்துள்ளது வேப்பிலை மாரியம்மன் கோவில். இக்கோவில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் வேப்பிலை மாரியம்மன், சமயபுரம் மாரியம்மனின் சகோதரியாக பாவிக்கப்படுகிறாள்.
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் மூங்கில் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. மூங்கில் மரத்தை ஒருவர் வெட்டிக் கொண்டு இருந்தபோது தவறுதலாக அருகில் இருந்த வேப்பமரத்தின் அடியில் கோடாலி பட்டு விட்டது. அப்போது அந்த வேப்ப மரத்து அடியில் புதைந்து இருந்த கல்லிலிருந்து ரத்தம் பீறிட்டு கிளம்பியது. அவர் ஊர் மக்களை கூட்டி வந்து அந்தக் காட்சியைக் காட்டினார். அக்கூட்டத்திலிருந்த ஒருவருக்கு அருள் வந்து, தான் மகமாயி என்றும், இந்த வேம்பினடியில் நீண்ட நெடுங்காலமாகக் குடி கொண்டிருப்பதாகவும், தனக்கு ஊரார் ஒன்று கூடி ஆலயமெடுத்து வணங்கி வந்தால், இந்நகரைக் காத்து அருள்பாலிப்பேன் என்றும் கூறினார்.
ஊரார் அனைவரும் வேப்ப மரத்தினடியில் இருந்த அந்தப் புனிதக் கல்லைத் தங்களின் குலம் காக்க வந்த மாரி தெய்வமாய் எண்ணிக் கோவில் கட்டி வழிபடலாயினர். அப்புனிதக்கல் இன்றும் மாரியம்மனின் ஆலயத்தில் அமைந்துள்ளது. இன்றும் சிலை வடிவம் கொண்ட மாரியம்மனுக்குக் காட்டும் புனித தீப ஆராதனைகள் யாவும் முதலில் அப்புனிதக் கல்லுக்குக் காட்டிய பிறகே காட்டப் படுகிறது. வேப்பமரத்தடியில் புனிதக் கல் கிடைத்ததால், வேப்பிலை மாரியம்மன் என்ற பெயர் ஏற்பட்டது. வேப்பிலை மணக்க பாறையில் பிறந்தவள் என்பதால் ஊரின் பெயர் மணப்பாறை ஆகிவிட்டது.
இக்கோவிலின் தலவிருட்சம் வேப்பமரம். இந்த வேப்பமரமானது, ஒரு கர்ப்பிணிப் பெண், தனது வயிற்றில் குழந்தை சுமந்திருக்கும் தோற்றத்தில் காட்சி தருகிறது. குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள், இந்த மரத்தில் தொட்டில் கட்டி தங்கள் வேண்டுதலை வைக்கிறார்கள். குழந்தை வரம் பெற்றவுடன், சித்திரைத் திருவிழாவின் போது, நூற்றுக்கணக்கானோர், கரும்புத் தொட்டில் எடுத்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துகிறார்கள்
இந்தக் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது நடைபெறும் பால்குட விழா, இந்த நகரின் சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரபலம். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், தங்கள் தலையில் பால் குடம் சுமந்து கோவிலுக்கு வருவது மிகவும் பிரம்மாண்டமான நிகழ்ச்சியாக இருக்கும். பல ஆயிரக்கணக்கான லிட்டர் பாலால் அன்று அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும்.

உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோவில்
பஞ்சபூத தலங்களை தரிசிக்கும் புண்ணியம் தரும் தேவாரத் தலம்
திருச்சி மாநகரின் உறையூர் பகுதியில் அமைந்துள்ள தேவாரத் தலம் பஞ்சவர்ணேசுவரர் கோவில். பஞ்சபூத தலங்களாகிய சிதம்பரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், காளஹஸ்தி ஆகிய தலங்களில் காட்சியளித்து அருள் புரியும் சிவபெருமான், ஐந்து பூதங்களையும் ஒன்றாக்கி உறையும் தலமே திருமூக்கீச்சரம் என்ற உறையூர் திருத்தலம். எனவே பஞ்சபூத தலங்களை தரிசிக்கும் புண்ணியம் இத்தல இறைவனை வழிபட்டாலே கிடைக்கும் என்பது ஐதீகம். உலகில் எந்த இடத்தில் சிவபூஜை செய்தாலும், சிவ தரிசனம் செய்தாலும் அவையனைத்தும் இங்கு வந்து உறையும் என்பதால் இத்தலம் உறையூர் எனப்பட்டது. இத்தலத்து இறைவன் திருநாமம் பஞ்சவர்ணேசுவரர். இறைவியின் திருநாமம் காந்தியம்மை.
பிரம்மனுக்கு, தங்கம், வெண்மை, செம்மை, கருமை, புகைவண்ணம் ஆகிய ஐந்து நிறங்களை இச்சிவலிங்கம் காட்டியதால், இவருக்கு ஐவண்ணப் பெருமான் என்ற திருநாமமும் உண்டு.
இங்கு சிவபெருமான், உதங்க முனிவருக்கு தன்னுடைய ஐந்து வர்ணமுடைய திருக்கோலத்தை ஐந்து சாமங்களில் காட்டியருளினார். காலையில் ரத்ன லிங்கமாகவும், உச்சிக் காலத்தில் ஸ்படிக லிங்கமாகவும், மாலையில் சுவர்ண லிங்கமாகவும், இரவில் வைர லிங்கமாகவும், அர்த்த சாமத்தில் சித்திர லிங்கமாகவும் காட்சி அளித்ததால் இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் எனப்படுகிறார். ஆடி பௌர்ணமி தினத்தன்று தான் சிவபெருமான், உதங்க முனிவருக்கு ஐந்து நிறங்களில் காட்சி அளித்தார். இன்றும் ஆடி பௌர்ணமியன்று, இந்த நிகழ்ச்சி இங்கே திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்சோழ நாயனார் இத்தலத்தில் பிறந்தவராவார். இவருடைய சிலை இச்சிவாலயத்தின் தனி சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளது. யானைப்புக முடியாத 70 மாட கோயில்களை கட்டிய கோச்செங்கட் சோழன் பிறந்த தலமும் இதுவாகும் .
பிரார்த்தனை
படைத்தலின் தெய்வமாகிய பிரம்மாவே இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளதால், எவ்வகை தொழிலிலும் வெற்றியடைய, இத்தல மூலவராகிய பஞ்சவர்ணேசுவரரை வழிபட்டால் நலம் பெறலாம். கார்க்கோடகன் ஆகிய பாம்பும், கருடனும் இத்தலத்தில் வழிபட்டுள்ளதால் எத்தகைய சாபம், பாவம், தோஷம் ஆகியவற்றிலிருந்து விமோசனம் கிடைக்கும் தலம் இதுவாகும்.
பழூர் விசுவநாத சுவாமி கோவில்
நவக்கிரகங்கள் தங்கள் மனைவியருடனும், வாகனத்துடனும், ஆயுதத்துடனும், யந்திர சக்தியுடனும் இருக்கும் அபூர்வக் காட்சி
திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பழூர் விசுவநாத சுவாமி கோவில். இறைவியின் திருநாமம் விசாலாட்சி. 2000 ஆண்டுகள் பழமையான கோவில் இது. மற்ற கோவில்களில் வட்ட வடிவில் ஆவுடையார் அமைந்திருக்கும் நிலையில், இக்கோவிலில் இறைவன் விசுவநாதர், சுயம்பு மூர்த்தியாக சதுர வடிவ ஆவுடையாரில் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும். அம்பிகை விசாலாட்சி இத்தலத்தில் கல்யாண கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றாள். காசிக்குச் செல்ல முடியாதவர்கள் இக்கோவிலுக்கு வந்து இறைவன், இறைவியை வணங்கிச் சென்றால், காசிக்குச் சென்று தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் நவக்கிரகங்கள் பெரும் சிறப்பை பெற்றவை. பொதுவாக சிவாலயங்களில் நவக்கிரகங்கள் ஒரு பீடத்தின் மேல் எழுந்தருளி இருப்பார்கள். ஆனால் இக்கோவிலில் நவக்கிரகங்கள், 12 ராசிகள் 27 நட்சத்திரங்கள் அமைந்த பீடத்தின் மேல் தங்கள் மனைவியருடன் எழுந்தருளி இருக்கிறார்கள். இங்கு நவக்கிரக நாயகர்களில் சூரியன் உஷா-ப்ரத்யுஷாவுடனும், சந்திரன் ரோகிணியுடனும், செவ்வாய் சக்திதேவியுடனும், புதன் ஞானதேவியுடனும், குரு தாராதேவியுடனும், சுக்கிரன் சுகீர்த்தியுடனும், சனி நீலாதேவியுடனும், ராகு சிம்ஹியுடனும், கேது சித்திரலேகாவுடனும், காட்சியளிக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் நவக்கிரகங்கள் தங்களின் ஆயுதங்கள், வாகனங்கள், யந்திர சக்திகளுடனும் எழுந்தருளியிருப்பதும் இங்கு மட்டும்தான். இத்தகைய நவக்கிரக அமைப்பை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
நவக்கிரக பரிகாரத் தலம்
இக்கோவில் ஒரு சிறந்த நவக்கிரக பரிகாரத் தலமாகும். அதனால் தான் இக்கோவில், நவக்கிரக கோவில் என்ற பெயரில் இப்பகுதியில் பிரசித்தம் பெற்றுள்ளது. சனிக்கிழமைகளில் இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். ஜாதக ரீதியில் நவக்கிரக தோஷ பாதிப்பு உள்ளவர்கள், சனிக்கிழமைகளில் இக்கோவிலுக்கு வந்து நவக்கிரக நாயகர்களை வணங்கி வழிபட வேண்டும். எள் விளக்கேற்றி வழிபாடு செய்வதுடன், நவக்கிரக நாயகர்களின் சன்னதியை 9 முறை வலம் வந்து, தேங்காய்- பழம் அர்ச்சனை செய்தால் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும்.
மேலும், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், திருமணத் தடைப் பாதிப்புள்ளவர்கள், குடும்பப் பிரச்னை உள்ளவர்கள் இக்கோவில் நவக்கிரக நாயகர்கள் சன்னதிக்கு வந்து வழிபட்டுச் சென்றால், தோஷங்கள் நிவர்த்தியாகி உரிய பலன்களைப் பெறுவர் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

ஊட்டத்தூர் சுத்தரத்தினேசுவரர் கோவில்
மேற்கூரையில் நவக்கிரகங்கள் அமைந்திருக்கும் அபூர்வ அமைப்பு
திருச்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பாடாலூரில் இருந்து புள்ளம்பாடி வழித்தடத்தில் உள்ளது ஊட்டத்தூர். இறைவன் திருநாமம் ஆரண்ய சுத்தரத்தினேசுவரர். இறைவியின் திருநாமம் அகிலாண்டேசுவரி.
பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரகங்கள் மற்றும் ராசிகளின் அதிபதிகள் ஒரு பீடத்தின் மீதோ அல்லது தனி சன்னதியிலோ எழுந்தருளி இருப்பார்கள். ஆனால், ஊட்டத்தூர் சுத்தரத்தினேசுவரர் கோவிலில் கொடி மரம் அருகே மேற்கூரையில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் செதுக்கப்பட்டு அவை பூமியை நோக்கி பார்க்கும்படி உள்ளது. அதன் அருகிலேயே ஒன்பது கிரகங்களும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இவை அனைத்தும் பூமியை நோக்கி இருப்பதால் அதன் அடியில் வைத்து செய்யப்படும் யாக பூஜைகள் அனைத்திற்கும் உடனடி பலன் கிடைக்கும். எந்த ராசியை சேர்ந்தவர்களும் இதன் மூலம் முழு பயன் அடைய முடியும்.
சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்கும் அபூர்வ பஞசநதன நடராஜர்
இக்கோவிலில் ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞசநதன கல்லில் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி அமைந்துள்ளது. இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன. இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது. சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த பஞசநதனநடராஜர் மருந்தாக திகழ்கிறார்.

திருச்சி பைரவ நாத சுவாமி கோவில்
திருச்சி மலைக்கோட்டையின் காவல் தெய்வம்
சிவபெருமானுடைய ஐந்து குமாரர்கள் விநாயகர், முருகன், சாஸ்தா, வீரபத்திரர், பைரவர் ஆகியோர் ஆவர். இவர்களை பஞ்ச குமாரர்கள் என்று அழைப்பர். இத்தகைய சிறப்பு வாய்ந்த பைரவருக்கு தமிழ்நாட்டில் ஒரு சில தலங்களில் தான் தனி கோவில்கள் உள்ளன. அப்படி பைரவருக்கு அமைந்த அபூர்வ கோவில்களில் ஒன்றுதான் திருச்சி மாநகர பெரிய கடை வீதியில் உள்ள பைரவ நாத சுவாமி கோவில். காசியில் கங்கையை பார்த்தபடி வீற்றிருக்கும் பைரவருக்கு நிகரான சக்தி வாய்ந்தவராக, இந்த பைரவ நாத சுவாமி நம்பப்படுவதால் இத்தலத்தை திருச்சியின் காசியாகவே கருதி வழிபட்டு வருகிறார்கள். இங்கு மூலவராக அருள் பாலிக்கும் பைரவர் மலைக்கோட்டையின் காவல் தெய்வமாக விளங்குகிறார்.
வழக்கமாக உக்கிரமான முகத்துடன் விளங்கும் பைரவர் இங்கு சிரித்த முகத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கருவறை முன் ஒளிவிட்டு சுடர் விடும் தீபம் 'பைரவ தீபம்' என அழைக்கப்படுகிறது. பகல், இரவு என நாள் பூராவும் இந்த தீபம் எரிந்து கொண்டேயிருக்கிறது. கருவறையின் முன், பைரவரின் வாகனம் சுவானம் (நாய்). உள்ளது. நாய்க்கு துன்பம் விளைவித்தவர்கள் அதனால் தோஷம் ஏற்படாமல் இருக்க, இங்குள்ள சுவானத்திற்கு பால் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கி, சுக வாழ்வு பெறலாம்.
மாதந்தோறும் வரும் வளர்பிறை அஷ்டமியில், பைரவருக்கு பள்ளய பூஜை எனும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அன்று பைரவரை பூக்களாலேயே அலங்காரம் செய்வர். இங்கு மூலவரை வழிபடுவதாலும் ஹோமத்தில் கலந்து கொள்வதாலும் பக்தர்கள் இழந்த பொருளை மீண்டும் பெறுவதுடன், கடன் தொல்லை, பில்லி, சூனியம், பகைகளில் இருந்து மீள முடியும்.