ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கநாதருக்கு, மாமனார் தீபாவளி சீர் அளிக்கும் சாளி உற்சவம்
தீபாவளி என்றால், மாமனார் மாப்பிள்ளைக்குச் சீர் செய்வது வழக்கம். அந்த வழக்கப்படி, தன் மகள் ஆண்டாளை ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு மணமுடித்து தந்த பெரியாழ்வார், தன் மாப்பிள்ளைக்கு தீபாவளி சீர் செய்யும் வைபவமானது ஸ்ரீரங்கம் கோவிலில் தீபாவளியன்று 'சாளி உற்சவம்' என்று கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீரங்கத்தில், ரங்கநாதர் ஒவ்வொரு வருடமும் தீபாவளிப் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார். தீபாவளிக்கு முந்தைய நாள் மாலை, மேள தாளங்கள் முழங்க, மூலவரான பெரிய பெருமாள் எண்ணெய் அலங்காரம் செய்து கொள்வார். கோவிலில் கைங்கரியம் செய்வோர்களுக்கும் அன்று பெருமாளின் சார்பாக எண்ணெய், சீகைக்காய் உள்ளிட்டவை வழங்கப்படும். அன்று இரவு, உற்சவரான நம்பெருமாளுக்கும் எண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படும். அதன்பின், கோவிலில் எழுந்தருளியிருக்கும் ரங்கநாயகித் தாயார், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் ஆகியோரின் சந்நதிகளுக்கெல்லாம் எண்ணெய், சீகைக்காய், மஞ்சள் உள்ளிட்டவற்றைப் பெருமாள், அர்ச்சகர் மூலம் அனுப்பி வைப்பார். தீபாவளித் திருநாளன்று அதிகாலையில் ரங்கநாயகித் தாயாருக்கும், ஆழ்வார் ஆச்சாரியார்களுக்கும் எண்ணெய் அலங்காரம் செய்யப்படும். அனைவரும் புத்தாடையும் மலர் மாலைகளும் அணிந்து கொள்வார்கள்.
காலை பத்து மணியளவில் நம்பெருமாள், சந்தனு மண்டபத்தில் எழுந்தருளித் திருமஞ்சனம் கண்டருள்வார். பின்னர் பெரியாழ்வார் தன் மாப்பிள்ளைக்கு தீபாவளி சீர் சமர்ப்பிப்பார். ஒவ்வொருவரும் தன் குருவுக்குச் செலுத்தப்படும் அதே மரியாதையை, தன் மாமனாருக்கும் செலுத்த வேண்டும் என்பது மரபு. அந்த வகையில், நம்பெருமாள் பெரியாழ்வாருக்கு மரியாதை செய்து, அவரிடமிருந்து தீபாவளிச் சீரைப் பெற்றுக் கொள்கிறார். பெரியாழ்வாரின் சார்பில், அரையர்கள் நம்பெருமாளின் திருவடிகளைச் சுற்றி நாணய மூட்டைகளைச் சீராக வைப்பார்கள். நாணய மூட்டைகளுக்குச் சாளி என்று பெயர். இதை ஜாலி (சாளி) அலங்காரம் என்பர். ஜாலி அலங்காரம் என்பது, ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு புது கைலிகளில் மூட்டையாகக் கட்டி, பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பது. நாணய மூட்டைகளை தீபாவளிச் சீராகப் பெரியாழ்வார் சமர்ப்பிப்பதால், 'சாளி உற்சவம்' என்று அழைக்கப்பட்ட இந்த உற்சவம், நாளடைவில் 'ஜாலி உற்சவம்' என்றாகிவிட்டது. வேத பாராயணமும் மங்கல வாத்தியங்களும் முழங்க இந்த வைபவம் நடைபெறும். தனது மாமனாரான பெரியாழ்வார் தனக்கு அளித்த இந்த தீபாவளிச் சீரை அனைவருக்கும் காட்டி, மாமனாரின் பெருமையைப் பறைசாற்றுவதற்காக அந்த நாணய மூட்டைகளோடு இரண்டாம் பிராகாரத்தில் நம்பெருமாள் வலம் வருவார். மாலையில் கிளி மண்டபத்துக்கு எழுந்தருளும் நம்பெருமாள் அங்கே காலைமுதல் காத்திருக்கும் ஆழ்வார் ஆச்சாரியார்களை ஒவ்வொருவராக அழைத்து, அவர்களுக்குப் புத்தாடை, சந்தனம், வெற்றிலைப் பாக்கு, புஷ்பங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றைத் தீபாவளிப் பரிசாகத் தந்து கௌரவிப்பார். இந்தத் திருக்காட்சியை தீபாவளித் திருநாளில் தரிசித்தால் ஆடை களுக்கும், பணவரவுக்கும் தட்டுப்பாடு உண்டாகாது என்பது நம்பிக்கை.
தலை தீபாவளி கொண்டாடும் புதுமண தம்பதிகள் தீபாவளி அன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்வது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இது அவர்களின் திருமண வாழ்வில் வளம் மற்றும் மகிழ்ச்சியைத் தரும் என்பது நம்பிக்கையாகும்.
திருநாவாய் முகுந்தன் கோவில்
பெருமாளின் முழங்கால்களுக்கு கீழான பகுதி பூமியில் புதைந்துள்ள தலம்
அமாவாசையன்று பித்ரு பூஜை செய்தால் அளவிடற்கரிய புண்ணியம் தரும் திவ்ய தேசம்
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருநாவாய். சென்னை - கள்ளிக்கோட்டை ரயில் மார்க்கத்தில் திருநாவாய் ரயில் நிலையம் அமைந்துள்ளது.
இத்தலத்தில் திருமாலைக் குறித்து 9 யோகிகள் தவம் செய்ததாகவும் அதனால் இத்தலம் நவ யோகித்தலம் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் நாவாய் தலம் என்றாகி தற்போது திருநாவாய் என்று அழைக்கப்படுகிறது. பெருமாள் 'நாவாய் முகுந்தன்' என்ற பெயரில் கிழக்கு நோக்கிய திருக்கோலத்தில், முழங்காலுக்கு கீழான பகுதிகள் பூமிக்கடியில் சென்ற நிலையில், வேறெங்கும் காண முடியாத கோலத்தில் காட்சி தருகிறார். தாயார் திருநாமம் மலர்மங்கை நாச்சியார்.
இந்த நாவாய் முகுந்தன் கோவில் பித்ருக்கள் பூஜை செய்வதற்கான சிறந்த தலமாக உள்ளது. துவாரபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் இங்கு வந்து பஞ்ச பாண்டவர்களுடன் சேர்ந்து, தம் முன்னோருக்கு பித்ரு பூஜை செய்தார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தலத்தில் பித்ரு பூஜை செய்தால் அளவிடற்கரிய புண்ணியம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
அமாவாசை நாட்களில் இத்தலத்தின் தலவிருட்சம் அடியில் பித்ருக்களுக்கு அன்னம் வைத்து வழிபடுகிறார்கள். அமாவாசையன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தலத்தின் அருகில் உள்ள பாரத புழை நதியில் நீராடி பித்ரு பூஜை செய்கின்றனர். கேரள மாநிலத்தில் பித்ரு தர்ப்பணம் கொடுப்பதில் இத்தலம் முதன்மை வகிக்கிறது.
மூலவர் நாவாய் முகுந்தன், கால்கள் பாதி உள்ளே பதிந்த நிலையில் மிக மிக அரிதான தரிசனத்தை இங்கே வழங்கி அருள்பாலிக்கிறார். இது அரிதினும் அரிதான காட்சியாகும். இதன் பொருட்டே இங்கே நேர்த்தி கடன் செலுத்தும் அன்பர்கள், முட்டியிட்டு பிரதட்சணம் செய்வது வழக்கம்.
காஞ்சிபுரம் ஸ்ரீமாகாளீஸ்வரர் கோவில்
மனித உருவில் அபூர்வமான தோற்றத்தில் காட்சியளிக்கும் ராகு கேது பகவான்
ராகு-கேது பரிகார தலம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பின்புறம், ஜவஹர்லால் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீமாகாளீஸ்வரர் கோவில்.
பொதுவாக சிவாலயங்களில் ராகுவும் கேதுவும் நவக்கிரக சன்னதியில் ஒரு பீடத்தின் மேல் எழுந்தருளி இருப்பார்கள். அதில் ராகு மனித முகத்துடனும், பாம்பு உடலுடனும், கேது பாம்பு முகத்துடனும் மனித உடலுடனும் காட்சியளிப்பார்கள். ஆனால் ராகு கேதுவை வித்தியாசமான நிலையிலும், அபூர்வமான தோற்றத்திலும் நாம், இக்கோவிலில் தரிசிக்கலாம்.
இக்கோவிலில் சிவபெருமான் அமர்ந்த கோலத்தில் பார்வதி தேவியுடன் காட்சியளிக்கிறார். இதில் சிறப்பு என்னவென்றால் அவர் ராகு, கேதுவை தன் கைகளில் ஏந்தி இருக்கிறார். மற்றுமொரு சிறப்பு, ராகுவும் கேதுவும் மனித முகத்துடன் காட்சி அளிக்கிறார்கள். இது போன்று காட்சியளிக்கும் ராகு, கேதுவை நாம் வேறு எந்த கோவிலிலும் பார்க்க முடியாது.
இந்தக் கோவிலில் நவக்கிரகங்கள் தனித்தனி சந்நிதிகளில் மூலவர் ஸ்ரீமாகாளீஸ்வரரைச் சுற்றி அமைந்துள்ளனர்.
ராகுவும் கேதுவும் தங்களின் பாவ விமோசனத்துக்காக, இங்கு ஸ்ரீமாகாளீஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக தல புராணம் சொல்கிறது. அதனால் இக்கோவில், ராகு-கேது பரிகார தலமாக திகழ்கிறது. இங்கு வழிபட்டால், திருமணத் தடை நீங்குவதோடு, கால சர்ப்ப தோஷம், புத்ர தோஷம், பித்ரு சாப தோஷம் ஆகிய அனைத்தும் நீங்கும். ராகு- கேது பெயர்ச்சியின்போது, இங்கு பரிகார ஹோமங்களும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில், ராகு காலத்தில் இங்கு தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்யப்படுகின்றன.
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில்
பக்தர்களின் உயிர்நாடியாக இருக்கும் அம்மன்
தஞ்சாவூருக்குத் தென்கிழக்கே 47 கிமீ தொலைவில் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ளது, நாடியம்மன் கோவில். தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைப்பதாலும், தன் பக்தர்களின் உயிர்நாடியாக இருப்பதாதாலும் அவளை இப்பெயரிட்டு அழைக் கிறார்கள். கருவறையில் தீ ஜுவாலை, கிரீடம் நான்கு கரங்களில் கத்தி, சூலம், கேடயம், கபாலம் ஏந்தி ஆயுதபாணியாகக் காட்சி தருகிறாள். மூன்று குதிரைகள் காவலுக்கு நிற்கின்றன. அம்மன் சன்னதியின் முன்பாக சிம்மம் உள்ளது. கி.பி. 1600 ஆம் ஆண்டு இப்பகுதியை ஆட்சி செய்தவர் பட்டு மழவராய நாயக்கர். அவர் பெயரால் விளங்கி வந்த கோட்டை இருந்த இடத்தின் பெயர் பட்டு மழவராயர் கோட்டை. அது நாளடைவில் சுருங்கி பட்டுக்கோட்டை ஆகிவிட்டது. மழவராயர் ஒருமுறை வேட்டைக்குச் சென்றார். அங்கே தெய்வீகக் களையோடு ஒரு பெண்மணி நிற்பதைக் கண்டார். அரசரைப் பார்த்ததும் அந்த பெண் ஓட, அரசரும் அவளைத் துரத்திக் கொண்டு ஓடினார். அவள் ஓடிச் சென்று ஒரு புதரில் மறைந்து விட்டாள். புதர் அருகே சென்று பார்த்தபோது, அங்கே ஓர் அழகான அம்மன் சிலை இருந்தது. பட்டு மழவராயர், தங்களை நாடி வந்த அம்மனுக்கு அங்கு கோவிலை எழுப்பினார்.இப்பகுதியில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு 'நாடி' என்கிற பெயர் சூட்டப்படுகிறது. பௌர்ணமி பூஜை செய்து இங்குள்ள நாகலிங்க மரத்தில் சரடு கட்டினால் எப்படிப்பட்ட தோஷம் இருந்தாலும் விலகி மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். மேலும் பல்லாயிரக்கணக்கானோர், ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடி பெருந்திருவிழாவாக மாவிளக்கு போடும் அதிசயம் நடப்பது இந்த கோவிலில் மட்டும்தான்.
ஊட்டி காந்தள் காசி விஸ்வநாதர் கோவில்
சின்முத்திரையோடு காட்சி தரும் தட்சிணாமூர்த்தி
நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் உள்ள திருக்காந்தளில் அமைந்துள்ளது ஊட்டி காந்தள் காசி விஸ்வநாதர் கோவில். உதகமண்டலத்தில் அமைந்த பழமையான சிவாலயம் இக்கோவில் ஆகும். இறைவியின் திருநாமம் விசாலாட்சி.
மற்ற சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி போல் அல்லாமல், இத்தலத்தில், தனிச் சன்னதியில் எழுந்தருளியுள்ள யோக தட்சிணாமூர்த்தி, சின் முத்திரையோடு காட்சி தருகிறார். சின் முத்திரை அமைப்பின்படி மற்ற மூன்று விரல்களுடன் சேராமல் ஆள் காட்டி விரல், பெருவிரலுடன் இணைந்து இருக்கும். இந்த சின் முத்திரையானது ஞானப் பொருளின் அடையாளக் குறிப்பாகத் திகழ்கின்றது.. சந்நியாசம் வாங்க, உபதேசம், ஞானம் ஆகியவற்றை பெற இந்த யோக தட்சிணாமூர்த்தியை வணங்கினால் நற்பலன் கிடைக்கும்.
திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவில்
மகாவிஷ்ணு, மோகினி வடிவில் காட்சி தந்த திவ்யதேசம்
மதுரைக்கு வடக்கே சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்யதேசம் திருமோகூர், பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் தேவர்கள், அசுரர்களுக்கிடையே சர்ச்சை உண்டானது. தங்களுக்கு உதவும்படி தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சுவாமி, மோகினி வேடத்தில் வந்தார். அசுரர்கள் அவரது அழகில் மயங்கியிருந்த வேளையில், தேவர்களுக்கு அமுதத்தைப் பரிமாறினார். இதனால் பலம் பெற்ற தேவர்கள், அசுரர்களை ஒடுக்கி வைத்தனர். பிற்காலத்தில் புலஸ்தியர் என்னும் முனிவர், மகாவிஷ்ணுவின் மோகினி வடிவத்தை தரிசிக்க வேண்டுமென விரும்பினார். சுவாமி, அவருக்கு அதே வடிவில் காட்சி தந்தார். அவரது வேண்டுகோள்படி பக்தர்களின் இதயத்தைக் கவரும் வகையில் மோகன வடிவத்துடன் இங்கே எழுந்தருளினார்.
மகாவிஷ்ணு, மோகினி வடிவில் காட்சி தந்த தலமென்பதால் இதற்கு, ‘மோகன க்ஷேத்ரம்’ என்றும், சுவாமிக்கு, 'பெண்ணாகி இன்னமுதன்' என்றும் பெயர் உண்டு.
நகர சூரக்குடி தேசிகநாதர் கோவில்
கையில் கதாயுதம் வைத்திருக்கும் பைரவரின் அபூர்வ தோற்றம்
பைரவருக்கு முக்கியத்துவம் தரும் தலம்
சண்டிகேஸ்வரருக்கு பதிலாக வீதியுலா செல்லும் பைரவர்
காரைக்குடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நகர சூரக்குடி. இத்தலத்து இறைவன் திருநாமம் தேசிகநாதர். இறைவியின் திருநாமம் ஆவுடை நாயகி. சூரியன் வழிபட்ட தலம் என்பதாலும், சூரியச்செடிகள் நிறைந்த வனமாக இப்பகுதி இருந்ததாலும் முன்பு 'சூரியக்குடி' என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் 'சூரியக்குடி' என்ற பெயர் மருவி 'சூரக்குடி' என்று அழைக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் 'தேசிகநாதபுரம்' என்றும் இந்த ஊர் அழைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பைரவர் சூலம், பாசக் கயிறு, தடி அல்லது தண்டாயுதம் போன்ற ஆயுதங்களைக் கைகளில் வைத்திருப்பார். ஆனால் இங்குள்ள ஆனந்த பைரவர் கையில் கதாயுதத்துடன் காட்சி அளிப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இங்குள்ள ஆனந்தபைரவரே, இக்கோவிலின் பிரதான மூர்த்தியாவார். பக்தர்கள் முதலில் பைரவரை வழிபட்ட பின்பே, சிவபெருமான் மற்றும் அம்பாளை வணங்குகின்றனர். இங்கு சிவபெருமான் மற்றும் அம்பாளுக்கு செய்யப்படும் கற்பூர ஆரத்தியை பக்தர்கள் தொட்டு வணங்க அனுமதி கிடையாது. பைரவருக்கு ஆரத்தி எடுத்த கற்பூரத்தட்டையே, பக்தர்களுக்கு காட்டுகிறார்கள். பைரவருக்கு முக்கியத்துவம் தரும் வகையில், இவ்வாறு செய்யப்படுகிறது.
தேய்பிறை அஷ்டமியில் இங்கு சிறப்பு ஹோமம் நடக்கிறது. ஹோமம் முடிந்ததும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கின்றன. அதன்பின்னர் பைரவர் பிரகார உலா செல்கிறார். சிவன் கோயில்களில் நடக்கும் விழாக்களில், சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோரே பஞ்சமூர்த்திகளாக வீதியுலா செல்வார்கள். ஆனால் இங்கு நடக்கும் ஆனி உத்திரத் திருவிழாவில், சண்டிகேஸ்வரருக்கு பதிலாக பைரவர் வீதியுலா செல்வது விசேஷமாகும்.
திருப்பாலைவனம் பாலீஸ்வரர் கோவில்
வெள்ளை நிறத்துடன், பால்வண்ண மேனியனாக காட்சி தரும் பாலீஸ்வரர்
சென்னையில் இருந்து 45 கி.மீ. தொலைவில் பழவேற்காடு செல்லும் சாலை மார்க்கத்தில் அமைந்துள்ளது திருப்பாலைவனம் என்னும் தலம். இத்தலத்து இறைவன் திருநாமம் பாலீஸ்வரர். இறைவியின் திருநாமம் லோகாம்பிகை. பழவேற்காடு அருகில், கடல் மணற்பரப்பை ஒட்டி அமைந்த தலம் என்பதாலும், பாலை மரங்கள் நிறைந்த பகுதி என்பதாலும், ‘திருப்பாலைவனம்’ என்று இத்தலத்துக்குப் பெயர் உண்டாயிற்று.
இத்தலத்து இறைவன் பாலீஸ்வரர், வெள்ளை நிறத்துடன் பால்வண்ண மேனியனாக அருள்பாலிக்கிறார், ஒரு சமயம் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த போது, அந்த அமுதத்தையே சிவலிங்கமாக பிடித்து வழிபட்டனர். அமுதத்தால் உண்டானவர் என்பதால் இந்த ஈசனுக்கு ‘அமுதேஸ்வரர்’ என்றும், பாலை மரத்தின் நடுவே கோயில் கொண்டதால் ‘பாலீஸ்வரர்’ என்றும் திருநாமம் ஏற்பட்டது.
காலப்போக்கில், சுற்றிலும் அரண்போல பாலை மரம் வளர்ந்து விட, வெள்ளை லிங்கம் விருட்சத்துக்குள் மறைந்து போனது. முதலாம் ராஜேந்திர சோழன் தன் படை பரிவாரங்களுடன் இந்தப் பகுதியின் வழியே வந்தபோது, ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுத்தார். அப்போது, அவர் படையிலிருந்த யானை மற்றும் குதிரைகளைப் படை வீரர்கள் லிங்கம் மறைந்திருந்த பாலை மரத்தில் கட்டிப் போட்டனர். சற்று நேரத்தில் அவை மயக்கமடைந்து அங்கேயே சரிந்தன. இதனைக் கேள்விப்பட்ட ராஜேந்திர சோழன்,. உடனே மரத்தை வெட்ட ஆணையிட்டார். மரத்தைப் படை வீரர்கள் வெட்டியபோது, அதன் நடுவே வெள்ளை நிற லிங்கத் திருமேனி இருந்ததைக் கண்டு வியப்படைந்தனர். சோழ மன்னன் ராஜேந்திர சோழன் பாலீஸ்வரருக்கு, அங்கே பிரமாண்டமாய் ஒரு ஆலயத்தை எழுப்பினார்.
திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரராக அருளும் இறைவனே, இங்கே அமுதேஸ்வரராக அருள்பாலிப்பதாக ஐதீகம். எனவே, இந்தத் தலத்தில் சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் ஆகியவை அதிகளவில் நடைபெறுகின்றன. அமுதேஸ்வரரை வேண்டிக் கொள்ள தம்பதியர் பூரண ஆரோக்கியத்துடன் நலம் பெற்று வாழ்வர் என்பது பக்தர்களின் நம்பிகை.
மாணிக்கவாசகர், தனது திருவாசகத்தில் இத்தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார்.
விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோவில்
அதிசயமான நேரம் காட்டும் கல்
வேலூர் நகரத்திலிருந்து 12 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் மார்க்கபந்தீசுவரர் ஆவார். இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை.இக்கோவில் 1300 வருடங்கள் பழமையானதாகும்.
இக்கோவிலில் உள்ள அதிசயம், மணி காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கல். கோவிலின் உள்ளே தென்புறத்தில் 'நேரம் காட்டும் கல்' உள்ளது. இதை மணிகாட்டிக் கல் என அழைப்பதும் உண்டு. அர்த்த சந்திரவடிவில் உள்ள காலம் காட்டும் கல்லின் ஒருபுறம், இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பகுதியில் ஒன்று முதல் ஆறு வரை எண்கள் எழுதப்பட்டிருக்கின்றன. மற்றொரு புறமும் ஆறு முதல் 12 என்ற வரிசையில் எண்கள் எழுதப்பட்டுள்ளன. ஒரு பாகம் முற்பகலையும், மற்றொரு பாகம் பிற்பகலையும் காட்டும். மணிகாட்டும் கல்லின் மேற்பகுதியில் சிறிய பள்ளமான பகுதி ஒன்று இருக்கும். அதன் மேல் சிறு குச்சியை வைத்தால், சூரிய ஒளியின் திசைக்கு ஏற்றவாறு, குச்சியின் நிழல் மணிக்காக குறிக்கப்பட்டுள்ள கோட்டின் மீது விழும். அதைப் பார்த்து மணியைத் தெரிந்துகொள்ளலாம்.
ஆதிகாலத்தில் மேலை நாட்டினர், 'கிளாசிக்கல் க்ளாக்' எனும் மணல் கடிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். அறிவியல் அதிகமாக வளராத ஆதிக்காலத்திலையே, சூரியனை எப்படிப் பயன்படுத்தலாம் என்று யோசித்தவர்கள், தமிழர்கள். மேலை நாட்டினர் மண்ணைப் பார்த்து சிந்தித்தபோது, விண்ணைப் பார்த்து சிந்தித்தவன் தமிழன். தமிழர்கள் சூரியனைப் பயன்படுத்தி கடிகாரம் கண்டுபிடித்து, பயன்படுத்திக்கொண்டிருந்தனர். அதற்கு முன்னர், சூரியனையும், கோயில் கோபுரத்தையும் வைத்து நேரம் அறிந்துகொண்டிருந்தனர், தமிழர்கள். அதன் பின்னர் சிறிய கருங்கல்லை வைத்து தன்னுடைய தொழில்நுட்பத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தினார்கள். சிறியதாக ஒரு கருங்கல்லை வைத்து பன்னிரண்டு மணிநேரத்தை பார்க்கும்படி வடிவமைத்துள்ளார்கள்.வானியல் மாற்றங்களைத் தெரிந்துகொள்ள தொழில்நுட்பங்கள் இல்லை. பருவநிலையையும் மற்றும் பருவகால மாற்றங்களையும் அறிந்துகொள்ள மணிகாட்டும் கல்லைத் தவிர இன்னும் பல கற்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள், நம் முன்னோர்கள்.
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
திருமலையானுக்கு தினமும் புதிய மண் சட்டியில் நைவேத்தியமாகும் தயிர் சாதம்
திருமலை வேங்கடவன் கோவிலில் பலவிதமான பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது திருப்பதி லட்டு. பல்வேறு வகையான பட்சணங்கள், திருமலையின் பெரிய மடைப்பள்ளியில் தயார் செய்யப்பட்டாலும், திருமலையானுக்கு நிவேதனம் செய்யப்படுவது வெறும் தயிர் சாதம் மட்டும்தான். அதுவும் மண் பாத்திரத்தில் வைக்கப்பட்டதாக இருக்கும். புத்தம் புதிய மண் பாத்திரத்தில் வைத்து எடுத்து செல்லும் தயிர் சாதம் மட்டும், குலசேகர ஆழ்வார் படியை தாண்டி திருமலையானுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது. திருமலையானுக்கு ஒவ்வொரு நாளும் புதிய மண் சட்டியில் பிரசாதம் நிவேதிக்கப்படுகிறது. தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும், கர்ப்பக்கிரகத்துக்கு முன்பு உள்ள குலசேகரப்படியை தாண்டிச் செல்வதில்லை. அவனுக்கு படைக்கப்பட்ட தயிர் சாதம் மற்றும் மண் சட்டி ஆகியவற்றை பிரசாதமாக பெறுவது சாதாரணமான விஷயமல்ல. அவ்வாறு கிடைப்பது வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாக பக்தர்களால் கருதப்படுகிறது. இப்படி மண்சட்டியில் தயிர்சாதம் நிவேதனம் செய்யப்படுவதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது.
இங்கு பீமன் என்ற குயவன் வாழ்ந்து வந்தான். அவன் பெருமாளின் மிக தீவிர பகதர். அவன் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டார். ஆனால் மிகவும் ஏழையான பீமன் விரதம் என்பதற்காக கோவிலுக்கு செல்லக் கூடிய சூழல் இல்லாமல், எப்போதும் பானை போன்ற மண்பாண்ட பொருட்களை செய்து வந்தார். அப்படியே கோவிலுக்கு சென்றாலும், பூஜை செய்ய தெரியாது. அப்படி ஒரு கோவிலுக்கு செல்லும் போது, சுவாமியைப் பார்த்து, 'நீயே எல்லாம்' என்ற வார்த்தையை மட்டும் சொல்லி விட்டு வந்து விடுவார். இந்நிலையில், கோவிலுக்கு போக நேரம் இல்லாததால், பெருமாளையே இங்கு அழைத்துவிட்டால் என்ன என எண்ணினார். அதனால், அவர் களிமண்ணால் ஒரு பெருமாள் சிலையை செய்தார். அதை பூஜிக்க பூக்கள் வாங்க கூட பணம் இல்லை. அதனால் தினமும் தன் வேலையில் மீதமாகும் சிறிதளவு களிமண்ணை வைத்து பூக்களை செய்து வந்தார். அப்படி செய்த பூக்களை கோர்த்து, மண் பூ மாலையாக செய்து பெருமாளுக்கு அணிவித்தார். அந்த நாட்டை ஆண்ட அரசன் தொண்டைமானும் பெருமாளின் தீவிர பக்தன். அவர் சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலையை அணிவிப்பார். அப்படி அவர் ஒருவாரத்தில் பெருமாளுக்கு தங்க பூ மாலை அணிவித்தார். மறு வாரத்தில் சென்று பார்க்கும் போது தங்க பூ மாலைக்கு பதிலாக களிமண்ணால் செய்யப்பட்ட மாலை பெருமாள் கழுத்தில் இருந்தது. இதைப் பார்த்ததும் அங்குள்ள கோயில் அர்ச்சகர்கள், பராமரிப்பாளர்கள் மேல் சந்தேகம் அடைந்து குழப்பத்தில் ஆழ்ந்தார். அவர் கனவில் தோன்றிய பெருமாள், குயவனின் பக்தியால், அவனின் களிமண் மாலையை தான் ஏற்றுக் கொண்டதாகவும், குயவனுக்குத் தேவையான உதவியை செய்யுமாறு அரசனிடம் கூறினார். திருமாலின் ஆணைப்படி குயவன் இருக்கும் இடத்திற்கு சென்ற அரசன், அந்த பக்தரை கௌரவித்தார்.பெருமாள் மீது குயவன் வைத்திருந்த பக்தியை கௌரவிக்கும் பொருட்டு, தற்போதும் கூட திருப்பதியில் தினமுமொரு புது மண் சட்டியில்தான் நைவேத்யம் செய்யப்படுகின்றது.
புரட்டாசி சனிக்கிழமையில் தான், சனி பகவான் அவதரித்து, புரட்டாசி மாதத்திற்கு சிறப்பை கொடுத்தார். இதன் காரணமாக புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை தரிசித்தால், சனியின் கெடுபலன்களிலிருந்து நம்மைக் காப்பார்.
உத்திரமேரூர் பாலசுப்பிரமணியன் கோவில்
மோதக அஸ்த விநாயகர்
ஐந்து கரங்களிலும் (தும்பிக்கை உட்பட) முஷ்டி லட்டுகம் ஏந்திய விநாயகரின் அபூர்வ தோற்றம்
காஞ்சிபுரத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது உத்திரமேரூர் பாலசுப்பிரமணியன் கோவில். இக்கோவில் 1400 வருடங்களுக்கு மேல் பழமையானது. இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் திருநாமம் ஏகாம்பரநாதர். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. இத்தலம் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்றது. இங்கு முருகப்பெருமான் பாலசுப்ரமணிய சுவாமி என்ற பெயருடன் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறார். முருகப்பெருமான் சூரபத்மனை அழிப்பதற்காக வேல் வேண்டி இங்கு சிவபெருமானையும், பார்வதி தேவியையும் நோக்கி தவம் இருந்தார்.
இக்கோவிலில் கன்னிமூலையில் எழுந்தருளி இருக்கும் கணபதிக்கு மோதக அஸ்த விநாயகர் என்று பெயர். இவருக்கு வரசித்தி விநாயகர் என்ற பெயரும் உண்டு. இந்த மோதக அஸ்த விநாயகர் சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். பொதுவாக விநாயகர் தனது நான்கு கரங்களில் தந்தம், பாசம், அங்குசம், மோதகம் ஆகியவற்றை ஏந்தி இருப்பார். ஆனால் இத்தலத்தில், மோதக அஸ்த விநாயகர் தனது ஐந்து கரங்களிலும் (தும்பிக்கை உட்பட) முஷ்டி லட்டுகம் (பிடி கொழுக்கட்டை) ஏந்தி உள்ளார். இப்படி ஐந்து கரங்களிலும் மோதகம் ஏந்திய விநாயகரை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.
இவருக்கு எதிரில், வழக்கமான இவருடைய வாகனமான மூஞ்சூறுடன், யானையும் உடன் இருப்பது மேலும் ஒரு தனிச்சிறப்பாகும்.
திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் கோவில்
சனகாதி ரிஷிகள் உடன் இல்லாமல் இருக்கும், இடது கையில் நாகத்தை ஏந்திய தட்சிணாமூர்த்தியின் வித்தியாசமான கோலம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ள பாண்டிய நாட்டு தேவார தலம் திருப்புனவாசல். இத்தலத்து இறைவன் திருநாமம் விருத்தபுரீசுவரர். இறைவியின் திருநாமம் பிருகந்நாயகி. திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற தலமாகும். இக்கோவிலின் தெற்கே பாம்பாறு ஆறு பாய்ந்து கோவிலுக்கு கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள கடலைச் சென்றடைகிறது. தமிழில் புனல் என்பது நதியைக் குறிக்கும். எனவே புனல்-வாசல் என்பது கடலில் நுழையும் நதியின் நுழைவாயில் (வாசல்) என்று பொருள்படும். அதுவே இத்தலத்தின் பெயராக அமையக் காரணமாகும்.
இக்கோவிலில் தென் புற கோட்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி மிகப்பெரிய திருமேனியுடன் அமர்ந்த காலத்தில் காட்சி தருகிறார். சுற்றி உள்ள 14 மாவட்டங்களில் இவ்வளவு பெரிய தட்சிணாமூர்த்தி வடிவம் இல்லை. இவருக்கு யோக வ்யாக்ஞான தட்சிணாமூர்த்தி என்று பெயர்.
இந்த தட்சிணாமூர்த்தியானவர், வலது மேல் கரத்தில் அட்ச மாலையும், இடது மேல் கரத்தில் நாகமும் கொண்டு, கீழ் வலக்கரம் சின்முத்திரை காட்டியும், இடக்கரம் தொடை மீது ஊன்றியும், வித்தியாசமான கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார். இவர் தனது இடது கையில் நாகத்தை ஏந்தி இருப்பது ஒரு அரிதான காட்சி ஆகும். இந்த தட்சிணாமூர்த்தியுடன், சனகாதி ரிஷிகள் என்று அழைக்கக்கூடிய சனகர், சனாதனர், சனந்தனர் சனத்குமாரர் ஆகியோர், இந்த வடிவத்திலே இல்லை. இவருடைய திருமேனியில் ஜடாமகுடம், ஜடைக்கிரீடம் இல்லை. இவருடைய பின்புறம் கல்லால மரமும் இல்லை.
கூலநாய்க்கன்பட்டி மலையாண்டி சுவாமி கோவில்
கருவறையில் பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் ஆகிய மூவரும் இருக்கும் அரிய காட்சி
நான்கு முகங்களுக்கு பதிலாக ஒரே முகத்துடன் காட்சி அளிக்கும் பிரம்மாவின் அபூர்வ தோற்றம்
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கூலநாய்க்கன்பட்டி எனும் ஊர். இந்த ஊரில் மலையாண்டி சுவாமி கோவில் என்னும் மிகவும் பழமை வாய்ந்த கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் கருவறையில், மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் ஆகிய மூவரும் எழுந்தருளி உள்ளார்கள். இப்படி மும்மூர்த்திகளும் ஒரே கருவறையில் இருப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத ஒரு அரிய காட்சியாகும்.
கருவறையில் சிவபெருமான் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையிலும், சிவனுக்கு இடதுபுறம் திருமாலும், வலது புறம் பிரம்மாவும் காட்சி தருகின்றனர். நான்கு தலைகளுடன் நான்முகன் என்ற பெயரில் அருளும் பிரம்மா, இக்கோவிலில் ஒரே ஒரு தலையுடன், நான்கு கைகளுடன் புடைப்புச் சிற்பமாக காட்சி அளிக்கிறார். பிரம்மாவின் வலக்கையில் அபய முத்திரையும், இடக்கையில் கமண்டலமும், பின் வலக்கையில் தர்ப்பைப் புல் கட்டும், மற்றொரு கையில் வேள்விக் கரண்டியும் உள்ளன.
நம் நாட்டில் பிரம்மாவுக்கு என்று தனி கோவிலோ அல்லது கோவில்களில் தனிச்சன்னிதியோ இருப்பது மிகவும் அரிது. அப்படிப்பட்ட நிலையில், இக்கோவிலில் பிரம்மா ஒரு அபூர்வமான தோற்றத்தில் எழுந்தருளி இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில்
முருகன் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் காட்சி தரும் திருப்புகழ் தலம்
திருவள்ளூரில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும் உள்ள தேவாரப்பாடல் பெற்ற தலம் திருவாலங்காடு. இறைவன் திருநாமம் வடாரண்யேசுவரர். இறைவியின் திருநாமம் வண்டார் குழலம்மை. நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் பஞ்ச சபைகளுள் இது ரத்தின சபை.
இக்கோவிலில் முருகன் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார். ஆலய முகப்பிலும் மற்றும் சிவசன்னிதியின் உட்பிரகாரச் சுற்றின் முதல் திருச்சன்னிதியிலும், வள்ளி தெய்வயானை தேவியரோடு கூடிய மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் ஆறு திருமுகங்களுடன் எழுந்தருளி இருக்கின்றார். மூன்றாவது, சிவசன்னிதியின் பின்புறத்தில், வலது கோடியில், இரு தேவியரோடு, மயிலும் உடனிருக்க, நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றார். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார்.
கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேசுரர் கோவில்
ஒரே சிவலிங்கத்தில் இரண்டு பாணங்கள்
சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம், கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேசுரர் கோவில். இறைவன் திருநாமம் ஆரண்யேசுரர். வனத்தின் மத்தியில் இருந்தவர் என்பதால் இவர் 'ஆரண்யேசுரர்' என்று அழைக்கப்படுகிறார்.
விருத்தாசுரன் என்ற அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களை காக்கும்படி தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். எனவே, விருத்தாசுரனுடன் போரிட்ட இந்திரன், அவனை சம்காரம் செய்தான். இதனால் அவனுக்கு தோஷம் உண்டானது. தேவலோகத் தலைவன் பதவியும் பறிபோனது. தனக்கு மீண்டும் தேவதலைவன் பதவி கிடைக்க, தேவகுருவிடம் ஆலோசனை செய்தான். அவர், பூலோகத்தில் சிவனை வணங்கிட விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகத்தில் பல தலங்களுக்குச் சென்ற இந்திரன், இத்தலம் வந்தான். இத்தலத்து இறைவனை வழிபட்டு இழந்த பதவியை மீண்டும் பெற்றான்
இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக சதுரபீட ஆவுடையாரில் அருள்பாலிக்கிறார் . பிரகாரத்தில் 'தசலிங்கம்' சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியில் ஏழு லிங்கங்கள் இருக்கிறது. இதில் ஒரே லிங்கத்தில் இரண்டு பாணங்கள் இருப்பது வித்தியாசமான அமைப்பு. இங்கு சுவாமியே பிரதானம் என்பதால் இத்தலத்தில் நவக்கிரக சந்நிதி இல்லை.
கோவிலூர் கொற்றவாளீஸ்வரர் கோவில்
நவக்கிரகங்கள் அனைவரும் அமர்ந்த கோலத்தில் இருக்கும் வித்தியாசமான தோற்றம்
காரைக்குடியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் கோவிலூர். இத்தலத்து இறைவன் திருநாமம் கொற்றவாளீஸ்வரர். இறைவியின் திருநாமம் நெல்லையம்மன். எதிரிகளை வென்றிடப் பாண்டிய மன்னனுக்கு, சிவபெருமான் வாள் கொடுத்த திருத்தலம். அதனால் இத்தலத்து இறைவனுக்கு கொற்றவாளீசுவரர் என்ற காரணப் பெயர் ஏற்பட்டது.
பொதுவாக சிவன் கோவில்களில், ஈசான மூலையில் (வடகிழக்கு) நவக்கிரக சன்னதி அமைந்திருக்கும். இந்த சன்னதியில், நவக்கிரகங்கள் ஒரு பீடத்தின் மேல், நடுவில் சூரியன் நின்ற கோலத்தில் இருக்க, மற்ற நவகிரகங்கள் அவரைச் சுற்றி, அவரவர் திசையை நோக்கியபடி நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார்கள். ஆனால் இக்கோவிலில், சூரியன் உட்பட நவக்கிரகங்கள் அனைவரும் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது ஒரு வித்தியாசமான தோற்றமாகும்.
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
உலகளவில் புகழடைந்த, வைணவ குருமாரான இராமானுசரின் சீடர்களில் ஒருவர் அனந்தாழ்வான். இவர், கர்னாடகத்தின் மாண்டிய மாவட்டத்தில் சிறுப்புத்தூர் எனும் ஊரில் அனந்தன் என்னும் இயற்பெயரில் பிறந்தவர். சுவாமி இராமானுசர் மீது அளவுகடந்த பக்தி கொண்ட இவர், இராமனுசர் ஆணைப்படியே திருமலையில் எழுந்தருளியுள்ள திருவேங்கடமுடையானுக்கு நந்தவனம் அமைத்து மலர் கைங்கர்யம் செய்வதையே வாழ்க்கையின் பலனாக கொண்டு திருமலையிலேயே வாழ்ந்தவர்.
திருப்பதி திருமலைவாசனை தரிசிக்கச் செல்லும்போது, கருவறையின் பிரதான வாசலின் வலப் புறத்தில், ஒரு கடப்பாரை தொங்குவதைப் பார்க்கலாம். அந்தக் கடப்பாரை, திருமலை நந்தவனத்தின் தண்ணீர் தேவைக்காக அனந்தாழ்வான் வெட்டிய குளத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. அந்தக் கடப்பாரைதான், திருமலைவாசனுக்கு தினமும் முகவாயில் பச்சை கற்பூரம் சார்த்தும் வழக்கம் ஏற்பட காரணமாக இருந்தது.
திருவரங்கத்தில் திருவரங்கப் பெருமானின் கைங்கர்யத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட ஶ்ரீராமாநுஜருக்கு, நீண்டகாலமாகவே ஒரு குறை இருந்துவந்தது. திருவரங்கத்தைப் போல்
நந்தவனமும், தபோவனமும் திருவேங்கடத்தில் அமைக்க முடியவில்லையே' என்பதுதான் அவருடைய ஆதங்கம். அலருடைய மனக்குறையை அறிந்த சீடர் அனந்தாழ்வான், தாம் அந்த கைங்கர்யத்தை செயவதாக தனது குருவிடம் தெரிவித்தார். ஏழுமலை ஆண்டவனுக்கு திருமாலை தொடுத்து சேவை செய்யும்பேறு தனக்குக் கிடைத்த மகிழ்ச்சியோடு தனது மனைவியுடன் அவர் திருமலைக்கு வந்து சேர்ந்தார்.
திருமலையில் நந்தவனம் அமைத்தார். மண்வெட்டியால் வெட்டி நிலத்தைப் பண்படுத்தி பூச்செடிகளை நட்டார். அந்த நந்தவனத்துக்கு தமது குருநாதரின் திருப்பெயரே நிலைக்கும்படி 'ராமானுஜ நந்தவனம்' என்று பெயரும் வைத்தார். இப்போதும் அந்த நந்தவனம் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
பின்னர் நந்தவனத்தின் தண்ணீர்த் தேவைக்காக குளம் வெட்டி அதில் தண்ணீரைத் தேக்க முடிவுசெய்தார். இச்சமயம் அவரது மனைவி கர்ப்பம் தரித்திருந்தார். 'நானும் உங்களுக்கு உதவுகிறேன்' என குளம் வெட்டும் பணியில் மனைவியும் சேர்ந்துகொண்டார்.
அனந்தாழ்வான் வெட்டிய மண்ணை ஒரு புறமிருந்து மறுபக்கம் கொண்டு சென்று மனைவி கொட்டிவிட்டு வந்தார். ஒரு கர்ப்பிணிப் பெண் மண் சுமந்து செல்வதைப் பார்த்த ஒரு சிறுவன், அவருக்குத் தானும் உதவுவதாகக் கூறினான். ஆனால், அனந்தாழ்வானோ, அந்தச் சிறுவனை எதற்கு சிரமப்படுத்த வேண்டும் என நினைத்து அவனை அனுப்பிவிட்டார். பெருமாளின் கைங்கர்யத்தில் தானும் தன் மனைவியும் மட்டுமே ஈடுபடவேண்டும் என்று நினைத்தார்.
ஆனாலும், கர்ப்பிணிப் பெண் கஷ்டப்பட்டு மண் சுமப்பதைப் பார்த்து அந்தச் சிறுவன் மிகவும் வருந்தினான். சற்று வளைவான பாதையில் சென்று மண்ணைக் கொண்டுபோய் கொட்ட வேண்டியிருந்ததால், மனைவி அங்கு சென்று மண்ணைக் கொட்டி விட்டு வந்தார். அனந்தாழ்வான் இந்தப் பக்கம் மண் தோண்டினார். வளைவுக்கோ அதிக தூரம் இருந்தது. அவர் போகச் சொன்ன சிறுவன் போகாமல், அந்தப்பக்கத்தில் கூடையுடன் நின்றிருந்தான்.
'தாயே, நான் மண் சுமந்தால்தானே அவர் கோபப்படுவார். அவருக்குத் தெரியாமல் உங்களுக்கு உதவுகிறேன். இந்த வளைவுக்கு இந்தப் பக்கம் நான் சுமக்கிறேன். அந்தப்பக்கம் நீங்கள் சுமந்து வாருங்கள்' 'என்றான் சிறுவன். சிறுவனின் கெஞ்சல் மொழியைக் கேட்ட பிறகு அவளால் மறுக்க இயலவில்லை.
'சரி, தம்பி' என்று கூடையை மாற்றிக் கொடுத்தாள். சற்றுநேரம் இப்படியே வேலை நடந்தது. திடீரென்று அனந்தாழ்வானுக்கு சந்தேகம் தோன்றியது. 'மண்ணைக் கொட்டிவிட்டு சீக்கிரம் சீக்கிரமாக வந்து விடுகிறாயே' என்று மனைவியைக் கேட்க, 'சீக்கிரமாகவே சென்று போட்டு விடுகிறேன் சிரமம் இல்லை' என்று பதில் சொல்லி சமாளித்தாள்.
சிறிது நேரம் சென்றதும், அனந்தாழ்வான் கரையைப் பார்க்க வந்தார். சிறுவன் கர்மசிரத்தையாக மண்ணைக் கொண்டு போய் கொட்டிக்கொண்டிருந்தான். தன்னை அவர் கவனிப்பதைக்கூட பொருட்படுத்தாமல் சிறுவன் தன் பணியைச் செய்தவாறு இருந்தான்.
இதனால், கோபம் தலைக்கேற கடப்பாரையால் சிறுவனின் கீழ்த்தாடையில் அடித்தார். சிறுவனின் தாடையில் இருந்து ரத்தம் கொட்டியது. கடப்பாரையால் அடிபட்டு ரத்தம் பெருகிய நிலையில், அந்தச் சிறுவன் ஓடிப்போய்விட்டான்.
அவசரப்பட்டுத் தான் சிறுவனை ரத்தம் வரும்படி அடித்துவிட்டோமே என்ற வருத்தத்தில் அனந்தாழ்வானுக்கும், தொடர்ந்து வேலை செய்யப் பிடிக்கவில்லை. குடிசைக்குத் திரும்பிவிட்டார்.
மறுநாள் காலை திருமலை பெருமாளுக்கு அர்ச்சனைகள் செய்ய வந்த அர்ச்சகர்கள் கதவைத் திறந்ததும் அலறினர். பெருமாளின் தாடையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. 'அர்ச்சகரே பயப்படவேண்டாம். அனந்தாழ்வாரை அழைத்து வாருங்கள்' என ஒரு அசரீரி கேட்டது. உடனே அவரை அழைத்துவந்தனர்.
பெருமாள் தாடையில் ரத்தம் வடிவதை அனந்தாழ்வான் கண்டார். ஆனால், அவருக்கு மட்டும், தான் மண்சுமந்த கோலத்தைக் காண்பித்தார் பெருமாள்.
'சுவாமி, என்னை மன்னித்து விடுங்கள். தங்கள் தொண்டுக்கு அடுத்தவர் உதவியை நாடக்கூடாது என்ற சுயநலத்தில் சிறுவனை விரட்டினேன். அவன் வலிய வந்து மண் சுமந்ததால் வந்த கோபத்தில் அடித்தேன். அந்தச் சிறுவனாக வந்தது தாங்கள்தான் என்று தெரியாது. சுவாமி என்னை மன்னித்தருள்க' என்று விழுந்து வணங்கினார் அனந்தாழ்வான்.
'அனந்தாழ்வா, நீ மலர்மாலை நேர்த்தியாகக் தொடுத்து அணிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், கர்ப்பிணியான உன் மனைவி மண் சுமப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
பக்தர்களின் கஷ்டத்தைப் போக்கத்தான் நான் இங்கு இருக்கிறேன். என் பக்தை கஷ்டப்படுவதைக் கண்டு வேடிக்கை பார்க்க என் மனம் எப்படி இடம் கொடுக்கும்' என்று அசரீரியாகக் கேட்டார்.
'கருணைக் கடலே! என்னை மன்னியுங்கள் சுவாமி' என்றார்.
'சரி. ரத்தம் வழியாமல் இருக்க என்ன செய்வது?' என்று அர்ச்சகர்கள் குழம்பினர்.'சுவாமியின் தாடையில் பச்சைக்கற்பூரத்தை வைத்து அழுத்துங்கள் ரத்தம் வழிவது நின்றுவிடும்' என்றார்.
அர்ச்சகர்களும் மூலவரின் கீழ்தாடையில் பச்சைக் கற்பூரத்தை வைக்க, ரத்தம் வழிந்தது நின்று போனது. இதைநினைவுபடுத்தும் விதமாகவே திருப்பதிப் பெருமாளின் தாடையில் பச்சைக் கற்பூரம் வைக்கும் நிகழ்ச்சி இன்றளவும் தொடர்கிறது.
மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோவில்
மயூரவல்லித் தாயாருக்கு வில்வத்தால் அர்ச்சனை
சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவிலுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது ஆதிகேசவப் பெருமாள் கோவில். தாயாரின் திருநாமம் ஸ்ரீமயூரவல்லித் தாயார்.
முன்னொரு காலத்தில் பிருகு முனிவர் இத்தலத்தில் தவம் செய்தார். அவருக்கு பெருமாள் சயனக் கோலத்தில், சுருள்சுருளான கேசத்துடன் காட்சி தந்தார். அதனால் பெருமாளுக்கு சயன கேசவர் என்றும், ஆதிகேசவ பெருமாள் என்றும் திருநாமம் அமைந்தது. கருவறையில் ஆதிகேசவ பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி உடன் இருக்கவில்லை.
ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரின் அவதார திருத்தலம் இது. லக்ஷ்மிதேவியே பேயாழ்வாருக்கு குருவாக இருந்து அருளியதாக ஸ்தல புராணம் சொல்கிறது.
ஸ்ரீமயூரவல்லித் தாயார் பெருமாளுக்கு வலப்புறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இத்தல தாயார், இரு கைகளில் அபய முத்திரை, வரத முத்திரைகளை தாங்கியும், மேல் இரு கைகளில் தாமரைப் பூவை கொண்டும், பத்மாசனத்தில் அமர்ந்தபடி காட்சியளிக்கிறார். பிருகு மகரிஷியின் மகளாகப் பிறந்ததால் இவளுக்கு, 'பார்க்கவி' என்றும் பெயருண்டு. வெள்ளிக்கிழமை தோறும் காலையில் விசேஷ ஹோமம், மாலை 6.30 மணிக்கு மணிக்கு, 'ஸ்ரீசூக்த வேத மந்திரம்' சொல்லி, வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் ஸ்ரீமயூரவல்லித் தாயாரை வழிபடுவது விசேஷமான பலனைத் தரும். திருமண தோஷம் நீங்க, கல்வி சிறக்க, உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டிக் கொள்ளும் பக்தர்கள், இவளுக்கு வில்வ அர்ச்சனை செய்து, பிரார்த்தனை செய்கிறார்கள்
மகாலட்சுமியின் முக்கிய சிறப்புகள்
மகாலட்சுமி
மகாலட்சுமியின் முக்கிய சிறப்புகள்
மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.
லட்சுமி மாதுளம் கனியிலிருந்து உதித்ததால் மாதுளங்கி என்றும், பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மா என்றும், அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னிகர்ப்பை என்றும், ரத்தின வடிவம் எடுத்ததால் ரத்தினாவதி என்றும், ஜனக மகாராஜனுக்கு மகளானதால் ஜானகி என்றும், பூமிக்குள்ளே கலப்பையின் நுனியிலிருந்து வெளியேற்றப்பட்டமையால் சீதை என்றும், பாற்கடலிலிருந்து தோன்றியதால் ஸ்ரீ என்றும் போற்றப்படுகிறாள்.
ஸ்ரீ மகாலட்சுமிக்கு இரண்டு ரூபங்கள் உண்டு. ஒன்று ஸ்ரீதேவி என்ற லட்சுமி. மற்றொன்று பூதேவி என்ற பூமிதேவி வடிவம்.
மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கரங்கள். ஆனால் தனியாக சன்னதியிலோ அல்லது தனிக் கோவிலிலோ நான்கு கரங்கள் கொண்டவள். முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள்.
திருமால் கோவில்களில் பகவானுடைய மார்பில் உள்ள லட்சுமிக்கு யோகலட்சுமி என்றும், இருபக்கமும் உள்ள தாயாருக்கு போகலட்சுமி என்றும், தனிச்சன்னதியில் அருள்புரிபவளுக்கு வீரலட்சுமி என்றும் பெயர்.
லட்சுமியின் பெருமையை ஸ்ரீசூக்தம், ஸ்ரீசுதுதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திர சதநாமாவளி ஸ்தோத்திரம் போன்றவை விளக்குகின்றன.
சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் மகாலட்சுமியை பூஜிப்பது, தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள் பெற உதவும்.
மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி, லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும். வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ.
பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது. யானையின் முகத்திலும், குதிரையின் முகத்திலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.
பூரணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம், கோலம்,சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை,திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மகாலட்சுமி நித்தியவாசம் புரிகிறாள். வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் செடிகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.
குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.
லட்சுமி செல்வத்தின் அதிபதி. தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் செல்வம் இரட்டிப்பாக பெருகும். தீபாவளியன்று அதிகாலை மட்டும் மகாலட்சுமி நல்லெண்ணையில் வாசம் செய்கிறாள்.
அதிகாலையிலும், மாலையிலும் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வைத்து லட்சுமியை வரவேற்க லட்சுமி சுலோகங்கள், அஷ்டகம் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும்.
லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும். லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.
வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும். மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்று அழைக்கப்படுகிறாள். எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற, வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.
மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும்.சகலவித செல்வத்தையும், வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான்.
தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால், திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.
வெள்ளிகிழமையில் மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது. ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும்.
நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும். ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு, அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லட்சுமி அருளால் பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார்.
பனச்சிகாடு சரஸ்வதி கோவில்
பனச்சிகாடு சரஸ்வதி தேவி
30 அடி பள்ளத்தில், பசுமையான கொடிகளுக்கு இடையே எழுந்தருளி இருக்கும் சரஸ்வதி தேவி
நவராத்திரியில் சரஸ்வதி தேவிக்கு குழந்தை வடிவ அலங்காரம்
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில், கோட்டயத்திற்கும் சங்கணாச்சேரிக்கும் இடையே உள்ள பிரதான சாலையில், கோட்டயத்திலிருந்து 11 கி.மீ தூரத்திலுள்ள பனச்சிக் காடு என்ற கிராமத்தில் அமைந்துள்ளது சரஸ்வதி கோவில். கேரளத்தின் மிகச் சிறந்த கோவில்களில் இது ஒன்றாகும். இக்கோவில் தட்சிண மூகாம்பிகை கோவில் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு எழுந்தருளி இருக்கும் சரஸ்வதி தேவி சுயம்புவாக தோன்றியவர். இந்த கோவிலில், சரஸ்வதி தேவிக்கு என்று தனி கருவறை கிடையாது. 30 அடி பள்ளத்தில், பசுமையான கொடிகளால் மூடப்பட்ட ஒரு சிறிய செவ்வக குளம் உள்ளது. சரஸ்வதி தேவியின் சிலை கொடிகளின் தோப்பிற்குள் அமைந்துள்ளது. குளத்தில் பாயும் புனித நீர் சிலையின் கால்களைக் கழுவுகிறது. இந்த நீரானது எப்போதும் வறண்டு போகாமல் பாய்ந்து கொண்டிருக்கிறது.
புகழ்பெற்ற நவராத்திரி திருவிழா இங்கு மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இங்கு நடைபெறும் ‘நவராத்திரி இசை’ விழாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்கின்றனர். துர்காட்டமியில், சரசுவதி தேவியின் உருவத்திற்கு முன்பாக புத்தகங்கள் வைக்கப்படுகிறது. மேலும் விசயதசமியன்று காலையில், 'ஏசுதிரினிருத்து' அல்லது 'வித்யாரம்ப விழா' அதிகாலை 4 மணி முதல் முற்பகல் 11 மணி வரை சிறப்பாக நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான சிறு குழந்தைகள் அரிசியால் அவர்களின் நாக்கு அல்லது மணல் மேல், தங்க மோதிரத்துடன் 'அரிசிரீ' என்ற வார்த்தையை எழுதி, தங்களுடைய கல்வியினைத் தொடங்குகிறார்கள். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு இங்கு பஞ்சாமிர்தம், பால்பாயாசம் செய்து படைத்து வழிபடுகிறார்கள்.
குழந்தை பிறக்கவும், அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுபவர்கள் குணமடைவதற்கும் இங்கு பிரார்த்திக்கிறார்கள். பாட்டு, இசை, நாட்டியம் போன்ற கலைகள் இங்கேயே கற்றுக் கொள்ள தொடங்கப்படுகின்றன. இங்கு வந்து வழிபட்டால் படிப்பில் மேலோங்கி நிற்கலாம் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.
சரஸ்வதி சூக்தம் விதி தவறாமல் ஜபம் செய்து உருவாக்கிய சுத்தமான நெய், இங்கு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. புத்திக்கும், படிப்பிற்கும் இந்த பிரசாத நெய், மிகவும் உன்னதமானது. நவராத்திரியின்போது, சரஸ்வதியை குழந்தையின் வடிவில் அலங்காரம் செய்து பூஜை செய்யப்படுகிறது.