மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோவில்
மயூரவல்லித் தாயாருக்கு வில்வத்தால் அர்ச்சனை
சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவிலுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது ஆதிகேசவப் பெருமாள் கோவில். தாயாரின் திருநாமம் ஸ்ரீமயூரவல்லித் தாயார்.
முன்னொரு காலத்தில் பிறகு முனிவர் இத்தலத்தில் தவம் செய்தார். அவருக்கு பெருமாள் சயனக் கோலத்தில், சுருள்சுருளான கேசத்துடன் காட்சி தந்தார். அதனால் பெருமாளுக்கு சயன கேசவர் என்றும், ஆதிகேசவ பெருமாள் என்றும் திருநாமம் அமைந்தது. கருவறையில் ஆதிகேசவ பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி உடன் இருக்கவில்லை.
ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரின் அவதார திருத்தலம் இது. லக்ஷ்மிதேவியே பேயாழ்வாருக்கு குருவாக இருந்து அருளியதாகச் ஸ்தல புராணம் சொல்கிறது.
ஸ்ரீமயூரவல்லித் தாயார் பெருமாளுக்கு வலப்புறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இத்தல தாயார், இரு கைகளில் அபய முத்திரை, வரத முத்திரைகளை தாங்கியும், மேலும் இரு கைகளில் தாமரைப் பூவை கொண்டும், பத்மாசனத்தில் அமர்ந்தபடி காட்சியளிக்கிறார்.பிருகு மகரிஷியின் மகளாகப் பிறந்ததால் இவளுக்கு, 'பார்க்கவி' என்றும் பெயருண்டு.வெள்ளிக்கிழமை தோறும் காலையில் விசேஷ ஹோமம், மாலை 6.30 மணிக்கு மணிக்கு, 'ஸ்ரீசூக்த வேத மந்திரம்' சொல்லி, வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் ஸ்ரீமயூரவல்லித் தாயாரை வழிபடுவது விசேஷமான பலனைத் தரும். திருமண தோஷம் நீங்க, கல்வி சிறக்க, உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டிக்கொள்ளும் பக்தர்கள், இவளுக்கு வில்வ அர்ச்சனை செய்து, பிரார்த்தனை செய்கிறார்கள்.