திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் கோவில்
தமிழத்திலேயே மிக அதிக சுற்றளவுள்ள ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கத் திருமேனி
மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று
சனகாதி ரிஷிகள் உடன் இல்லாமல் இருக்கும், இடது கையில் நாகத்தை ஏந்திய தட்சிணாமூர்த்தியின் வித்தியாசமான கோலம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ள பாண்டிய நாட்டு தேவார தலம் திருப்புனவாசல். இத்தலத்து இறைவன் திருநாமம் விருத்தபுரீசுவரர், பழம்பதிநாதர். விருத்தம் என்றால் பழமை. எனவே இவர் பழம்பதிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இறைவியின் திருநாமம் பிருகந்நாயகி, பெரியநாயகி. காசியில் உள்ள விசுவநாதர் கோவிலுக்கு முன்னதாக உருவான கோவில் இது. பிரம்மாவே வணங்கிய தலம் என்பதால், இது மிகப் பழமையான ஊராகக் கருதப்படுகிறது.
இத்தலம் திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப் பெற்ற தலமாகும். இக்கோவிலின் தெற்கே பாம்பாறு ஆறு பாய்ந்து கோவிலுக்கு கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள கடலைச் சென்றடைகிறது.
தமிழில் புனல் என்பது நதியைக் குறிக்கும். எனவே புனல்-வாசல் என்பது கடலில் நுழையும் நதியின் நுழைவாயில் (வாசல்) என்று பொருள்படும். அதுவே இத்தலத்தின் பெயராக அமையக் காரணமாகும்.
தமிழத்திலேயே மிக அதிக சுற்றளவுள்ள ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கத் திருமேனி
இக்கோவிலில் உள்ள நந்தியும் ஆவுடையாரும் (லிங்க பீடம்) மிகவும் பெரியதாக உள்ளது. தமிழத்திலேயே மிக அதிக சுற்றளவுள்ள ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கமாக விருத்தபுரீசுவரர் விளங்குகின்றார்.
தஞ்சை பெரிய கோவில் பிரகதீஸ்வரருக்கு அடுத்தபடி பெரிதாக உள்ள சிவலிங்க மூர்த்தி இதுவாகும். தஞ்சை பிரகதீசுவரர் சிவலிங்கம் பெரியது, அதனை விட கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள சிவலிங்கம் உயரத்தில் மிகவும் பெரியது.
ஆனால் இக்கோவில் சிவலிங்கம் சுற்றளவில் எல்லாவற்றையும் விட மிகப் பெரியது. இந்த ஆவுடையாரின் சுற்றளவு 82.5 அடி ஆகும். சுவாமிக்கு மூன்று முழம் துணியும், ஆவுடையாருக்கு 30 முழம் துணியும் வேண்டும்.
'மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று' என்ற வாசகம் இத்தலத்து இறைவனைப் பற்றியதாகும். அதாவது ஆவுடையாருக்கு வஸ்திரம் சாத்தவே 90 அடி வேஷ்டி தேவைப்படும்.
பாண்டிய நாட்டில் உள்ள 14 சிவத்தலங்களும் இங்கு இருப்பதாக ஐதீகம். அதற்கேற்ப கோவிலுக்குள் 14 சிவலிங்கங்கள் இருக்கின்றன. திருப்புனவாசல் தலத்தைத் தரிசித்தால், மற்ற தலங்களுக்குச் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருப்புனவாசலில் இருந்து சுமார் 7 மைல் தூரத்துக்கு எமன் மற்றும் எமதூதர்கள் எவரும் உள்ளே வரமுடியாது என்பதும் ஐதீகம்.
ஐந்து விநாயகர்கள் வரிசையாக அமர்ந்து அருள்புரியும் திருத்தலம்
இத்தலத்தில, ஒரே சந்நிதியில் ஐந்து விநாயகர்கள் வரிசையாக அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள்.
சனகாதி ரிஷிகள் உடன் இல்லாமல் இருக்கும், இடது கையில் நாகத்தை ஏந்திய தட்சிணாமூர்த்தியின் வித்தியாசமான கோலம்
இக்கோவிலில் தென் புற கோட்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி மிகப்பெரிய திருமேனியுடன் அமர்ந்த காலத்தில் காட்சி தருகிறார். சுற்றி உள்ள 14 மாவட்டங்களில் இவ்வளவு பெரிய தட்சிணாமூர்த்தி வடிவம் இல்லை. இவருக்கு யோக வ்யாக்ஞான தட்சிணாமூர்த்தி என்று பெயர்.
இந்த தட்சிணாமூர்த்தியானவர், வலது மேல் கரத்தில் அட்ச மாலையும், இடது மேல் கரத்தில் நாகமும் கொண்டு, கீழ் வலக்கரம் சின்முத்திரை காட்டியும், இடக்கரம் தொடை மீது ஊன்றியும், வித்தியாசமான கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார். இவர் தனது இடது கையில் நாகத்தை ஏந்தி இருப்பது ஒரு அரிதான காட்சி ஆகும்.
இந்த தட்சிணாமூர்த்தியுடன், சனகாதி ரிஷிகள் என்று அழைக்கக்கூடிய சனகர், சனாதனர், சனந்தனர் சனத்குமாரர் ஆகியோர், இந்த வடிவத்திலே இல்லை. இவருடைய திருமேனியில் ஜடாமகுடம், ஜடைக்கிரீடம் இல்லை. இவருடைய பின்புறம் கல்லால மரமும் இல்லை.
செவ்வாய் தோஷ பரிகார தலம்
செவ்வாய்க்கே தோஷம் போக்கிய இத்தலத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும்.
தகவல் உதவி : திரு.விருத்தபுரீசுவரர் குருக்கள் மற்றும் திரு. விக்னேஷ் குருக்கள், ஆலய அர்ச்சகர்கள்
இறைவன் விருத்தபுரீசுவரர் - மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ள பாண்டிய நாட்டு தேவார தலம் திருப்புனவாசல்.