மீமிசல் கல்யாண ராமசாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

மீமிசல் கல்யாண ராமசாமி கோவில்

கருப்பு உளுந்தை பிரசாதமாகத் தந்து குழந்தை பாக்கியம் அருளும் ராமர் கோவில்

புதுக்கோட்டை-அறந்தாங்கி-ஆவுடையார் கோயில் சாலையில் புதுக்கோட்டையிலிருந்து 68 கி.மீ. தொலைவில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது மீமிசல் கல்யாண ராமசாமி கோவில். கர்ப்பக் கிரகத்தில் ராமர், சீதை, லட்சுமணன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். அருகில் ஆஞ்சநேயரும் எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பாகும்.

இலங்கையில் இருந்த சீதையை மீட்க வானரப்படை சகிதமாக ராம, லட்சுமணன் சென்றனர். அவர்கள் மீமிசல் பகுதிக்கு வந்தனர். அப்பகுதி மக்கள் ராமருக்கு உதவி செய்தனர். அதற்கு கைமாறாக சீதையை மீட்டு வரும் போது, மீமிசலில் திருமணக் கோலத்தில் ராமர், சீதை ஆகியோர் லட்சுமணனுடன் இங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இங்கு வரும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு, தானியமான கருப்பு உளுந்தை, முகுந்தமாலா என்று கூறப்படும் மந்திரத்தை உச்சரித்து 90 நாட்களுக்கு தேவையான அளவு பிரசாதமாகத் தருகின்றனர். இதனை 90 நாட்கள் சாப்பிடுவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அத்துடன் ராமர் சன்னதியில் தவழ்ந்த நிலையில் இருக்கும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட சந்தானகிருஷ்ணன் விக்ரகத்தை, குழந்தை பாக்கியம் கோரி வரும் பக்தர்கள் பூஜை செய்கின்றனர்.

Read More
பரமந்தூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

பரமந்தூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில்

ஒரு பாதி முகம் கோபமாகவும், மறுபாதி சிரித்த முகமாகவும் காட்சி தரும் அபூர்வ ஆஞ்சநேயர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார் கோவில் செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பரமந்தூர்

ஆதிகேசவ பெருமாள் கோவில். ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் வேத வியாசரின் தந்தை பராசர மகரிஷியால் வழிபட்டதால், இத்தலம் 'பராசர க்ஷேத்திரம்' என்றும் அழைக்கப்பட்டது. 7000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.

இக்கோவில் தூணில் எழுந்தருளி இருக்கும் ஆஞ்சநேயர் மிகவும் விசேடமானவர். இவர் தெற்கு நோக்கி அருள்வதும், வாலின் நுனி தலைக்கு மேல் இருப்பதும் விசேஷ அம்சங்கள் . வயதானவர் போன்ற தோற்றம் காட்டும் இந்த ஆஞ்சநேயர், கிழக்குப்பக்கம் இருந்து தரிசித்தால் கோபமாகவும், மேற்குப்பக்கம் இருந்து தரிசித்தால் சிரித்த முகத்துடனும் காட்சியளிப்பார். இப்படி இருவேறு முக பாவங்களை கொண்ட ஆஞ்சநேயரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

Read More
பரமந்தூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

பரமந்தூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில்

நவபாஷாணத்தால் செய்யப்பட்ட பெருமாள்

பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய மூவரது திருமேனிகளும் இணைந்திருக்கும் அபூர்வ வடிவமைப்பு

பெருமாளின் தலைக்கிரீடத்தில் கஜலட்சுமி அமைந்திருக்கும் சிறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார் கோவில் செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பரமந்தூர்

ஆதிகேசவ பெருமாள் கோவில். ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் வேத வியாசரின் தந்தை பராசர மகரிஷியால் வழிபட்டதால், இத்தலம் 'பராசர க்ஷேத்திரம்' என்றும் அழைக்கப்பட்டது. 7000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.

கருவறையில் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் 8 அடி உயரத் திருமேனி உடையவராய், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். அவர் நான்கு கைகளுடன், மேல் கைகளில் சங்கு மற்றும் சக்கரத்தை ஏந்தியுள்ளார், கீழ் வலது கை அபய ஹஸ்தத்திலும் இடது கை கதி ஹஸ்தத்திலும் உள்ளது. பெருமாள் மற்றும் இரு தாயர்கள் திருமேனி நவபாஷாணத்தால் செய்யப்பட்டது.மேலும் மூவரது திருமேனிகளும் ஒன்றோடொன்று இணைந்து காணப்படும். இப்படி திருமேனிகள் இணைந்திருக்கும் அமைப்பானது வேறு எந்த பெருமாள் கோவிலிலும் நாம் காண முடியாது. அந்தக் கோவில்களில் எல்லாம் மூவரின் திருமேனிகள் தனித்தனியாகத்தான் இருக்கும். மேலும் பெருமாளின் தலைக்கிரீடத்தில் கஜலட்சுமி அமைந்திருப்பதும் மற்றும் ஒரு சிறப்பாகும்.

இப்பெருமாள் நவபாஷாணத்தால் ஆனவர் என்பதால் திருமஞ்சனம் ஏதும் கிடையாது. வருஷத்துக்கு ஒரு முறை பெருமாளுக்கு தைலக்காப்பு நடைபெறும்.

இந்த பெருமாள் கல்யாண திருக்கோலத்தில் அருள்வதாக ஐதீகம். ஆகவே கல்யாண வரம் வேண்டும் அன்பர்கள், இவரின் சன்னதிக்கு வந்து பெருமாளை மனமுருக வேண்டி செல்கின்றனர். இந்த பெருமானின் திருவருளால் தடைகள் நீங்கி விரைவில் கல்யாண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல் குழந்தை வரம் வேண்டியும் வெகுநாட்களாக அவதிப்படும் அன்பர்கள் இந்த பெருமாளை வேண்டி வணங்கி செல்கின்றனர். இப்பெருமாள் தீராத நோய்களையும் தீர்த்து வைக்கின்றார்.

Read More
வாராப்பூர் அகத்தீசுவரர் கோவில்

வாராப்பூர் அகத்தீசுவரர் கோவில்

கைகள் கட்டப்பட்ட நிலையில் அருள் பாலிக்கும் ராகு, கேது பகவான்

புதுக்கோட்டையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வாராப்பூர். இத்தலத்து இறைவன் திருநாமம் அகத்தீசுவரர். இறைவியின் திருநாமம் சௌந்தராம்பிகை. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானது. அகத்திய முனிவர் வழிபட்ட தலம்.

இக்கோவிலில், ராகு பகவான், கேது பகவான் ஆகிய இருவரும் ஒரே திருமேனியாக, கைகள் கட்டப்பட்ட நிலையில் எழுந்தருளி இருப்பது சிறப்பாகும். இத்தலத்து இறைவன், பக்தர்களின் ராகு கேது தோஷம் நீங்கும் வகையில் அருள்பாலிக்க வேண்டும் என்று கட்டளையிட்டதால், அவரது ஆணைக்கு கட்டுப்பட்டு, கைகளை கட்டிக்கொண்டு அருள் பாலிக்கிறார்கள். இதனால் இக்கோவில், காலசர்ப்ப தோஷம், நாக தோஷம் நீங்க வழிபட வேண்டிய சக்தி வாய்ந்த பரிகார தலமாக விளங்குகின்றது. இத்தலத்தில் வழிபட, திருமண தடை விலகும். குழந்தை பாக்கியமின்மை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும். தீராத நோய்கள் குணமாகும். வயிறு வலி குணமாகும். ராகு கேது பரிகாரத்திற்கு காளஹஸ்தி செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து வழிபடலாம்.

Read More
கந்தர்வகோட்டை கோதண்டராமர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கந்தர்வகோட்டை கோதண்டராமர் கோவில்

சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் மூன்று தினங்கள் ராமபிரானை வழிபடும் அபூர்வ காட்சி

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வ கோட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது கோதண்டராமர் கோவில். 1000 ஆண்டுகள் பழமையானது. பல சிவாலயங்களை கட்டிய கண்டராதித்த சோழ மன்னன், ராமாயண நாம கீர்த்தனை கேட்டு, அதனால் ராமபிரான் மேல் பக்திக் கொண்டு கட்டிய கோயில் இது.

கருவறையில் ஸ்ரீ கோதண்ட ராமர் சீதா தேவி, லட்சுமணர் சமேதராக காட்சியளிக்கிறார். சில கோவில்களில் சூரிய பகவான் வருடத்தின் ஒரு சில நாட்களில் மட்டும் கோவில் மூலவரை வழிபடுவது போல் அமைத்திருப்பார்கள். ஆனால் இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும் வரும் 21, 22, 23 ஆகிய தேதிகளில் காலையில் சூரியனின் ஒளி கோதண்ட ராமரின் காலை தொட்டு செல்கிற செல்கிற முறையில் சோழர்கள் காட்டியுள்ளது, இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

பிரார்த்தனை

இந்த ராமரை தரிசித்தாலே நமது பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இக்கோவிலில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி வழிபட்டால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். இங்குள்ள ஆஞ்சநேயருக்கு தொடர்ந்து 11 சனிக்கிழமைகள் நெய்விளக்கேற்றி, திருமஞ்சனம் செய்து தயிர் சாதம் அல்லது வடைமாலை சாற்றி வழிபடுவதால் அனைத்து தோஷங்களும் நீங்கும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கி, வாழ்வில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்.

Read More
ஆலங்குடி நாமபுரீசுவரர் கோவில்

ஆலங்குடி நாமபுரீசுவரர் கோவில்

நெற்றியில் நாமத்துடன் இருக்கும் நந்தி

புதுக்கோட்டை- ராமேசுவரம் சாலையில் 20 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது ஆலங்குடி நாமபுரீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் நாமபுரீசுவரர். இறைவியின் திருநாமம் அறம்வளர்த்த நாயகி.

மூலவர் எதிரில் அமர்ந்திருக்கும் அதிகார நந்தியின் நெற்றியில், திருநீறுக்குப் பதில் நாமம் அணிந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இதன் காரணமாகவும் மூலவருக்கு நாமபுரீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர். மஹாவிஷ்ணு நந்தி ரூபத்தில் சிவனை வழிபடுவதாக ஐதீகம். இதை மால்விடை என்பார்கள். மால் என்றால் மகாவிஷ்ணு; விடை என்றால் எருது. திரிபுராந்தகர் என்ற மூன்று அசுரர்களை அழிக்க சிவன் செல்லும்போது, மகாவிஷ்ணு நந்தியாகி அவரை சுமந்து சென்றார்.

புதன் பிரதோஷம்

சிவன் கோயில்களில் சனி பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. ஆனால் இங்கு புதன் பிரதோஷம் சிறப்பாக கருதப்படுகிறது. புதனுக்கும், சனீஸ்வரருக்கும் அதிதேவதை மகாவிஷ்ணு. கருவறை சுவரின் பின்புறம் லிங்கோத்பவர் இருக்குமிடத்தில் மகாவிஷ்ணு உள்ளார். இதனால் இங்கு சனி பிரதோஷத்தை விட புதன் பிரதோஷம் சிறப்பாகிறது. புதன் கல்வி அறிவை வழங்குபவர் என்பதால், பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக இந்நாட்களில் இங்கு வந்து வழிபடலாம்.

இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி ரிஷபத்தோடும் , வழக்கமாக உடன் இருக்கும் நான்கு ரிஷிகளுக்கு பதிலாக, இரண்டு ரிஷிகளுடனும் அருள்பாலிக்கிறார். காலடியில், முயலகன் இருக்கிறான். இவரை மேதா தட்சிணாமூர்த்தி என்கின்றனர். ஏற்கனவே, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில், நவக்கிரக குரு தலம் உள்ளதால், இத்தலத்தை இரண்டாம் குரு தலம் என்று சிறப்பிக்கின்றனர்.

பிரார்த்தனை

குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் நீங்கவும், அவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

Read More
திருமயம் கோட்டை பைரவர் கோவில்

திருமயம் கோட்டை பைரவர் கோவில்

வடக்குப் பார்த்தபடி எழுந்தருளியிருக்கும் அபூர்வ பைரவர்

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள திருமயம் என்னும் ஊரில் அமைந்துள்ளது கோட்டை பைரவர் கோவில். இக்கோவில் 350 ஆண்டுகள் பழமையான திருமயம் கோட்டையின் வடபுற சுவற்றில் அமைந்துள்ளது.இந்தக் கோட்டையை இவர் பாதுகாப்பதால் கோட்டை பைரவர் எனப்படுகிறார். தமிழகத்திலே வடக்கு பார்த்தபடி, தனிக் கோவில் கொண்டருளும் பைரவர் தலம் இது ஒன்றே ஆகும். மேலும், கோவிலின் முன்புறச் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பு தரும் கண்கண்ட தெய்வமாக கோட்டை பைரவர் விளங்குகிறார். சகல தோஷ பரிகார தலமாகவும் இது விளங்குகிறது.

கோட்டை பைரவர் கால பைரவ அம்சம் ஆவார். இக்கோவில், விசாகம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிறப்பு தலம் ஆகும். அஷ்டமச்சனி, ஏழரைச்சனி மற்றும் சகல சனி சம்பந்தப்பட்ட தோஷங்களும் இப்பைரவரைக்கு அபிஷேகம், வடைமாலை, சந்தனகாப்பு செய்து, நெய்தீபம், மிளகுதீபம் ஏற்றி வழிபட்டால் சனிதோஷம் விலகும். மற்றும் பிதுர் தோஷங்களுக்கு பைரவருக்கு புனுகு சாற்றி, எழுமிச்சம் பழமாலை சூட்டி, எள் சாத அபிஷேகம் செய்து வழிபட்டால் பிதுர் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. செவ்வாய்க்கிழமைகளில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, புனுகு பூசி, நெய்தீபம் ஏற்றி வந்தால் கல்வியில் மேன்மை பெறலாம்.

இப்பைரவருக்கு சந்தனாதித் தைலம் சாற்றி அபிஷேகம், செய்து சந்தனகாப்பு, வடைமாலை சாற்றி வழிபட்டால் வியாபாரம் தொழில் அபிவிருத்தி ஏற்படும். செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் செவ்வரளிமாலை நெய்தீபம் ஏற்றி ஏழுவாரம் தொடர்ந்து செய்து வந்தால் சகோதர ஒற்றுமை ஏற்படும். எல்லா பரிகாரங்களுக்கும் நெயதீபமும், மிளகு தீபமும் பொதுவானது, இவரை தேய்பிறை அஷ்டமி அன்று வழிபட்டால், நன்மை கோடி வந்து சேரும்.

Read More
திருவேங்கைவாசல்  வியாக்ரபுரீஸ்வரர் கோவில்

திருவேங்கைவாசல் வியாக்ரபுரீஸ்வரர் கோவில்

அர்த்தநாரீஸ்வரராக காட்சி தரும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வக் கோலம்

புதுக்கோட்டை - கீரனூர் சாலையில் அமைந்துள்ள தலம் திருவேங்கைவாசல். இறைவன் புலியாக வந்து, காமதேனுவின் சாபம் நீங்கப் பெற்றதால், இத்தலத்து இறைவனின் திருநாமம் வியாக்ரபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் பிரகதாம்பாள்.

இத்தலத்து தட்சிணாமூர்த்தி, ஒரு பாதி ஆண் தன்மையும், மறு பாதி பெண் தன்மையும் கொண்டு, சிவசக்தியாக அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தில் சதுர பீடத்தில் அமர்ந்து ஒற்றைக்காலில் நின்று கொண்டு காட்சி தருவது தனிச் சிறப்பாகும். இந்த அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தி அபய வர ஹஸ்தங்களுடன், ஒரு கரத்தில் ருத்திராட்சமும் மற்றொரு கரத்தில் சர்ப்பமும் ஏந்தி காட்சி தருகிறார்.

இங்கு வந்து அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தியை வழிபட்டால், குழந்தைகளின் ஞாபக சக்தி பெருகும். தொழில் விருத்தியாகும் என்பது நம்பிக்கை.

Read More
எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோவில்

எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோவில்

சனி மற்றும் ராகு தோஷத்தை ஒரு சேர நீக்கும் தலம்

புதுக்கோட்டை, அறந்தாங்கியிலிருந்து, 5 கி.மீ தூரத்திலுள்ளது எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோவில். இது 2000 ஆண்டுகள் பழமையானது. இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. இக்கோவில் தொண்டை நாட்டு மன்னன் காளிங்கராயனால் கட்டப்பட்டது.

ஒரு சமயம் அகஸ்திய முனிவர், காசி விஸ்வநாதரை தரிசித்து விட்டு, எட்டியத்தளி கிராமத்துக்கு வந்தார். அப்போது மன்னன் காளிங்கராயன் தனது அஷ்டம சனி தோஷம் நீங்க, திருநள்ளாறு சனி ஆலயம் செல்வதற்கு, இவ்வழியாக வந்தான். அகஸ்தியர், மன்னன் காளிங்கராயனிடம் இக்கோவிலை அமைக்கச் சொன்னார்.பின், நவகிரகங்களை அமைக்கச்சொன்னார். அதன் பின் காளிங்கராய மன்னன் இக்கோவிலை அமைத்ததாக இத்தல வரலாறு கூறுகிறது. திருநள்ளாறு சனிபகவானை விட இவர் அருள் வழங்குவதில் பலமடங்கு சக்தி மிக்கவர் என்று கூறப்படுகிறது. அதனால், இத்திருத்தலத்தில் சனி பகவானின் சக்தி இங்கு அதிகம்.

பொதுவாக, கோயில்களில் சனீஸ்வரருக்கு இடது புறம் ராகுவும், வலது புறம் கேதுவும் இருப்பார்கள். ஆனால் இந்த ஆலயத்தில் சனி பகவானின் வலதுபுறம் ராகு பகவானும், இடதுபுறம் கேது பகவானும் உள்ளனர். அதனால் ராகுவின் பார்வை சனி பகவானின் மீது படுகிறது. எனவே, இங்கு வந்து வழிபட்டால், சனி தோஷமும், ராகு தோஷமும் நீங்குகிறதாம். மேலும் ஜாதகத்தில் களத்தரன், செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் குறைகள் நீங்கி திருமண பாக்கியம் கிட்டும்.

Read More
வியாக்ரபுரீஸ்வரர் கோவில்

வியாக்ரபுரீஸ்வரர் கோவில்

சிவலிங்கத்தில் தெரியும் வேங்கை வடிவம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் வட்டத்தில் அமைந்துள்ளது திருவேங்கைவாசல். திருவேங்கைபதி என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மூலவராக வியாக்ரபுரீசுவரர் உள்ளார். வியாக்ரம் என்றால் புலி என்று பொருளாகும். மூலவர் திருவேங்கைநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பிகையின் பெயர் அருள்மிகு பிரகதாம்பாள். தமிழில் பெரியநாயகி.

மூலவர் வேங்கைவன நாதர் சிறிய சிவலிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். அர்ச்சகர் காட்டும் தீபராதனை ஒளியில் கூர்ந்து பார்த்தால் அதில் இறைவனின் வேங்கை வடிவத்தைக் கண்டு பிரமிப்படையலாம். சிவலிங்கத்தின் மேல் பகுதியில் வட்டமான இரண்டு வேங்கைக் கண்களையும், ஆக்ரோஷமாய்த் திறந்துள்ள வேங்கையின் வாய்ப்பகுதியையும் கண்டு ஆனந்தித்து அருள் பெறலாம்.

தல வரலாறு

ஒரு சமயம் தெய்வப் பசுவான காமதேனு, தேவேந்திரனின் சாபத்தினால், பூமியில் வந்து சாதாரணமான பசுவாகப் பிறப்பெடுத்தது. அதை மாமுனிவர் வசிட்டர் அன்போடு பேணிப் பாதுகாத்து வந்தார்.

ஒரு நாள் மாமுனி வசிட்டரை வணங்கிய பசு தன்னடைய சாப விமோசனத்துக்கு ஏதேனும் வழியுண்டா என்று கூறி அருளுமாறு வேண்டி நின்றது. மாமுனி வசிட்டர் வகுளாரண்யம் என்ற பெயரில் மகிழ மரங்கள் அடர்ந்த காடு ஒன்றில் கபிலர் என்னும் முனிவர் தவம் இயற்றுகிறார், நீ அவரைச் சென்றடைந்தால் உன் சாபம் நீங்கும்,

அவ்வாறே பசுவும் வகுளாரண்யத்தை அடைந்து கபில முனிவரிடம் சென்று வணங்கித் தன்னுடைய வரலாற்றைச் சொன்னது. பசுவின் கதையைக் கேட்டு மனமிரங்கிய கபில முனிவர் அந்த மகிழவனத்தில் ஒரு சிவாலயம் இருப்பதாகவும் அதில் வகுளவனேசுவரர் என்கிற திருநாமத்தோடு மகாதேவர் அருள்பாலித்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லி தினமும் நீ கங்கை நீரால் வகுளவனேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வந்தால் உன் சாபம் அகலும் என்று வழி காட்டினார்.

அவ்வாறே தினமும் கங்கை நீரைக் தன்னுடைய காதுகளில் ஏந்திக்கொண்டு மகிழவனக் கடவுளுக்குப் புனித நீராட்டிக் கொணடிருந்தது பசு. இந்நிலையில் அது ஒரு கன்றையும் ஈன்று பாலூட்டிக் கொண்டிருந்தது. வழக்கமான இறைவன் பணியில் காதுகளில் கங்கை நீரோடு ஒருநாள் அது மகிழ வனத்துக்கு வரும் வழியில் ஒரு வேங்கைப்புலி வழிமறித்தது. உடனே அதைத் தனக்கு இரையாக்கிக் கொள்ளவும் முயன்றது வேங்கை. வேங்கையிடம் மன்றாடியது பசு. என்னை விட்டு விடு, நான் சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக கங்கை நீர் சுமந்து வந்து கொண்டிருக்கிறேன். என்னை இப்போது விட்டுவிடு. அபிஷேகம் முடித்துவிட்டு என்னுடைய இளங்கன்றுக்கும் பாலூட்டிப் பசியாற்றிவிட்டுத் தவறாமல் உனக்கு இரையாக வந்து விடுகிறேன் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டது.

சிவபிரானுக்கு அபிஷேகப் பிரியர் என்கிற திருநாமம் உண்டு. தனக்கு தினமும் கங்கை நீரால் திருமுழுக்காட்டி வரும் பசுவின் பக்தியில் மனம் பறிகொடுத்த சிவபெருமான் - வகுளவனேசுவரர். அதை மேலும் சோதித்து முக்தியளிப்பதற்காகவே வேங்கை வடிவெடுத்து வந்திருந்தார். வழிமறித்தார். பசுவின் விருப்பத்தை ஏற்று உடனே அதற்கு வழிவிட்டது வேங்கை. சொன்ன சொல் தவறாமல் இறைவனுக்கு அபிஷேகம் செய்துவிட்டுத் தன்னுடைய இளங்கன்றுக்கும் பாலூட்டிவிட்டு வேங்கையின் முன்னால் இரையாக நின்றது பசு. பசுவின் வாக்கு தவறாத பண்பால் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான் ரிஷப ஆரூடராகத் தம் தேவியோடு காட்சியளித்து அந்தக் காமதேனுப் பசுவுக்கு நற்கதி அருளினார்.

வேங்கையாக உருமாறி சிவபெருமான் பசுவை வழிமறித்த இடம் திருவேங்கை வாசல் என வழங்கப் படுகிறது, பசு(கோ) தன்னுடைய காதுகளில் (கர்ணம்) கங்கை நீரைக் கொண்டு வந்து ஈசனுக்கு திருமுழுக்காட்டிய தலம் திரு-கோ-கர்ணம் என்று வழங்கப்படுகிறது.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

சன்னதிகள் எதிர் எதிரே அமைந்திருக்கும் வித்தியாசமான வடிவமைப்பு

https://www.alayathuligal.com/blog/9mhr7kt2lf8z7mfs6y9gk4fb7ffnjc

தவக்கோலத்தில் காட்சி தரும் முருகப் பெருமான்

https://www.alayathuligal.com/blog/s2ymrhrk486l63psxj8et4h3g9f699

Read More
வியாக்ரபுரீஸ்வரர் கோவில்

வியாக்ரபுரீஸ்வரர் கோவில்

சன்னதிகள் எதிர் எதிரே அமைந்திருக்கும் வித்தியாசமான வடிவமைப்பு

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள தலம் திருவேங்கைவாசல். இறைவன் திருநாமம் வியாக்ரபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் பிரகதாம்பாள்.

இக்கோவிலில் தெய்வ சன்னதிகள், வேறு எந்த தலத்திலும் நாம் காண இயலாத வகையில் அமைந்திருப்பது, கோவில் வடிவமைப்பில் ஒர் அபூர்வமாகும். இங்கு எந்த ஒரு சன்னதி இருந்தாலும், அங்கிருந்து மற்றொரு சன்னதியை பார்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. உதாரணமாக சிவன் சன்னதியிலிருந்து பார்த்தால் தேரடி விநாயகர் சன்னதியும், முருகன் சன்னதியிலிருந்து பார்த்தால் காலபைரவர் சன்னதியும், மகாவிஷ்ணுவின் சன்னதியிலிருந்து பார்த்தால் மகாலட்சுமி சன்னதியும் தெரியுமாறு அமைந்துள்ளன.

பொதுவாக எல்லா கோவில்களிலும் மூலவரை வணங்கிய பின்தான் பரிவார தேவதைகளை வணங்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இக்கோவிலில் முதலில் அம்பாள், பின்பு நவ விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, ராஜகணபதி, கஜலட்சுமி, பைரவர், பெருமாள், சூரியன், சனீஸ்வரன் ஆகியோரை வணங்கிய பிறகு கடைசியாக மூலவரான வியாக்ரபுரீஸ்வரரை வணங்கும்படியாக கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது.

Read More
வியாக்ரபுரீஸ்வரர் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

வியாக்ரபுரீஸ்வரர் கோவில்

தவக்கோலத்தில் காட்சி தரும் முருகப் பெருமான்

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள தலம் திருவேங்கைவாசல். இறைவன் திருநாமம் வியாக்ரபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் பிரகதாம்பாள்.

கோயில் சுற்றுப்பிரகாரத்தில் எண்கோண வடிவில் தவக்கோல சன்னதி உள்ளது. அதில் முருகப்பெருமானின் 5அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான திருமேனி உள்ளது. மற்ற எல்லா தலங்களிலும் உள்ள, முருகப் பெருமான் கைகளில் இருக்கும் வேல், சூலாயுதம், தண்டம் இவற்றிலிருந்து ஒரு வேறுபாடாக தலையில் மகுடத்துடன் கண்ணிமாலை, காதுகளில் பத்ர குணடலம். கழுத்தனி மார்பில் சன்னலீரம், வயிற்றுப்பகுதியில் உதரபந்தம் ஆகிய அணிகலன்களுடன் ஒரு காலை மடித்தும் மறுகாலை தொங்கவிட்ட நிலையில் தாமரை மலர் பீடத்தின் மீது கால் வைத்த வண்ணம் அமர்ந்து, தவம் புரியும் கோலத்தில் காணப்படுகிறார்.

இவரிடம் வேலும் இல்லை. மயிலும் இல்லை. ஆண்டி கோலத்திலும், ராஜ அலங்காரத்திலும் முருகனை வழிபட்டு வந்த நமக்கு, இப்படி தவக்கோலத்தில் முருகனை தரிசிப்பது வித்தியாசமான காட்சியாகும்.

Read More
பள்ளிகொண்ட பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

பள்ளிகொண்ட பெருமாள் கோவில்

மூன்று வாயில்கள் வழியாக தரிசனம் தரும் பெருமாள்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து கிள்ளுக்கோட்டை வழியாகச் சென்றால் 17 கி.மீ. தொலைவில் மலையடிப்பட்டி பள்ளிகொண்டபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடைவரைக் கோவிலாகும்.

அர்த்த மண்டபத்தில் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத புண்டரீகாட்சப் பெருமாள், ஹயக்ரீவர், நரசிம்ம மூர்த்தி, அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத வைகுண்டநாதன் ஆகியோர் காட்சியளிக்கின்றனர். கருவறையில் இரு தூண்கள் உள்ளன. இதை ஹரி நேத்திர தூண்கள் என்கிறார்கள். இதன் மூலம் சிருஷ்டி, ஸ்திதி, லயம் என்ற மூன்று வாயில்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளை, நாம் தரிசிக்கலாம்.

பெருமாளை சுற்றி இறக்கை விரித்த கருடன், இட்ச, கின்னர, கிம்புருடர்கள், தும்புரு, நாரதர், வித்யாதரர், இந்திரன், வருணன், வாயு, குபேரன், பிரம்மா, அக்கினி, சூரியன், சந்திரன், யமன், காமதேனு, கற்பகவிருட்சம், அட்சயபாத்திரம், மது-கைடபர் ஆகியோர் பெருமாளை வழிபட்டபடி காட்சியளிக்கின்றனர். பெருமாள் தனது வலது கரத்தால் திவாகர மகரிஷிக்கு ஆசி வழங்குகிறார். பூமாதேவி பெருமாளுக்கு பாத சேவை செய்கிறார். பெருமாளின் பாதங்களை தாமரை மலர் தாங்கியுள்ளதால் அந்தப் பாத தரிசனம் மிகுந்த செல்வத்தை அளிக்கும் என்பது பெரியோர் வாக்கு.

கண் சம்பந்தப்பட்ட நோய்கள், கண் திருஷ்டி நிவர்த்தியடையும் தலம்

'கண் நிறைந்த பெருமாள்' என்றழைக்கப்படும் இந்த மூலவர், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமிக்கு நிகரானவர் என்கிறார்கள். கண் சம்பந்தப்பட்ட நோய்கள், கண் திருஷ்டி எல்லாம், இப்பெருமாளின் அருளால் நிவர்த்தியடைகின்றன. ஏராளமான பக்தர்கள் கண் பார்வை பெற்றுள்ளனர். இத்தலத்து குளத்தில் நீராடி, கண் நிறைந்த பெருமாளுக்கு அபிஷேகம் செய்து சந்தனம், குங்குமமிட்டு பூஜித்து ஆரத்தி காட்ட அறுவை சிகிச்சை செய்து பார்வை சரிவர கிடைக்காதவர்களுக்கும் பரிபூரண பார்வை கிட்டும் என்பது அனுபவ நம்பிக்கை.

பித்ரு சாபம், தோஷங்கள் போக்கும் பெருமாள்

முன்மண்டபத்திலுள்ள 5 குழிகளில் வலது கை ஐந்து விரல்களை வைத்து இடது முழங்கையை தரையில் ஊன்றி மண்டியிட்டு ஹரிநேத்திர தூண்கள் இடையே மூன்று வாயில்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளை தரிசிப்பதன் மூலம் ஏழு பிறவிகளில் ஏற்பட்ட பித்ரு சாபம் உள்ளிட்ட தோஷங்கள் அனைத்தும் அறவே நீங்கும் என்பது உறுதி.

பொதுவாக கண் மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்காக வேண்டிக்கொண்டு தரிசனம் செய்வதும் சரியானவுடன் தரிசனம் செய்து காணிக்கைப் பிரார்த்தனை செய்து விட்டுச் செல்வதும் இங்கு மரபாக உள்ளது. செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும், ஏகாதசி மாதப்பிறப்பு நாட்கள், சிரவணம், ஆகிய நாட்களிலும் தரிசனம் செய்தால் அல்லல் நீங்கி குபேர சம்பத்துக் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
கதலிவனேஸ்வரர் கோவில்

கதலிவனேஸ்வரர் கோவில்

அதிசய வாழை மரங்கள் சூழ்ந்த வனத்தில் அருள் புரியும் இறைவன்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகேயுள்ள திருக்களம்பூர்

என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது கதலிவனேஸ்வரர் கோவில்.

‘கதலி’ என்றால் வாழை என்று பொருள். வாழை மரங்கள் சூழ்ந்த வனத்தில் குடிகொண்ட இறைவன் என்பதால் இவருக்கு 'ஸ்ரீகதலிவனேஸ்வரர்' (கதலி வன ஈஸ்வரர்) என்ற திருநாமம் ஏற்பட்டது. இவர், தீராத நோய்களையும் தீர்த்துவைப்பவர் என்பதால், ஸ்ரீவைத்தியநாத சுவாமி என்றும் அழைக்கப்படுகிறார்.

இங்கு வீற்றிருக்கும் மூலவர், சுயம்புலிங்கம். அவரைச் சுற்றிலும் பிராகாரத்தில் உள்ள வாழை மரங்களும் சுயம்புதான். இந்த வாழை மரங்களுக்கு யாரும் தண்ணீர் பாய்ச்சுவது இல்லை. இந்த வாழைமரங்கள் மழை நீரை மட்டுமே உறிஞ்சி வளருகின்றன. இம்மரங்களின் அடியில் பாறைகள் இருந்தாலும் செழிப்பாக வளர்ந்து வருகின்றன. இங்கு தோன்றும் வாழைக் கன்றுகளை வெளியே வேறு எங்கு கொண்டு போய் வைத்தாலும் வளராது. அதேபோல், வெளியிடங்களிலிருந்து வாழைக் கன்றுகளைக் கொண்டுவந்து இந்த கோயிலுக்குள் வைத்தாலும் வளராது. மேலும் இந்த வாழைமரத்தின் காய், பூ, தண்டு, பழம் எதையும் மனிதர்கள் சாப்பிடக் கூடாது. வாழைப்பழம் பழுத்த பின்னர், அதைப் பஞ்சாமிர்தம் செய்து சுவாமிக்கு அபிஷேகம் செய்த பின்னரே சாப்பிடலாம். இதனால் உடலில் உள்ள வியாதிகள் குணமாகும் என்பது நம்பிக்கை.

வாழை மரத்திலிருந்து வெளிப்படும் சிவப்பு நிறத் திரவம்

இங்குள்ள வாழைகளில் இன்னோர் அதிசயம் என்னவென்றால், இவற்றின் பழங்கள் பார்க்க மலைப்பழம் போல இருக்கும். ஆனால், உரித்தால் ரஸ்தாளிப் பழம் போல இருக்கும். அதேபோல, மரத்தை வெட்டினால் ரத்தம் போல சிவப்பு நிறத் திரவம் வெளிவரும். ஆனால், இவை செவ்வாழைகளும் அல்ல. இந்தப் பழங்களிலிருந்து செய்யப்படும் அபிஷேக பஞ்சாமிர்தத்தை, ஒரு கையளவு சாப்பிட்டோமென்றால், ஒரு நாள் முழுவதும் பசியே எடுக்காது.

திருக்களம்பூர் என்று இத்தலத்தின் பெயர் ஏற்பட்ட வரலாறு

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர் ஒருவர், சோழர்கள்மீது படையெடுத்துச் சென்றபோது, வழியில் வாழைத் தோப்புக்கு நடுவே பயணித்தார். வெகுவேகமாகச் சென்ற அவரது குதிரையின் கால் குளம்பு சிவலிங்கத்தின் மேல் பட்டதால், லிங்கம் மூன்று பிளவுகள் ஆகி, அதிலிருந்து குருதி கொட்டத் தொடங்கியது. தெய்வக் குற்றத்தால் மன்னரின் பார்வை பறிபோனது. பரிதவித்த மன்னன், இறைவனிடம் மண்டியிட்டு, 'இறைவா நான் அறியாமல் செய்த பிழையை மன்னித்துப் பொறுத்தருள வேண்டும். பறிபோன பார்வை மீண்டும் கிடைக்கவேண்டும்' என்று வேண்டினார். அதற்கு இரங்கிய இறைவன்,'எனக்கு இங்கே ஓர் ஆலயம் எழுப்பு. உனக்குப் பார்வை மீண்டும் கிடைக்கும்' என்று அருளினார். மன்னனும் ஆலயம் எழுப்புவதாக உறுதி கூற, அவரின் பார்வை திரும்பியது. இதையொட்டி கதலிவனநாதருக்கு, ஸ்ரீவைத்தியநாதசுவாமி என்ற பெயரும் உண்டு.

இன்றும் மூலவரின் மேல் குதிரையின் குளம்படிபட்ட வடுக்களைக் காணலாம். அதனால்தான் இவ்வூர் 'திருக்குளம்பூர்' என்று அழைக்கப்பெற்று, பின்னாளில் திருக்களம்பூர் என்று மருவியது. பாண்டிய மன்னர்கள் எங்கே கோயில் கட்டினாலும், ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் இல்லாமல் கட்டுவது இல்லை. இங்கேயும், பிராகாரத்தில் ஸ்ரீமீனாட்சியும் ஸ்ரீசொக்கநாதரும் தனிக்கோயிலில் அருள் பாலிக்கிறார்கள்.

திருமண பாக்கியம், பிரிந்த தம்பதியர் ஒன்று சேர அருளும் தலம்

திருமணம் ஆகாத ஆண்களோ அல்லது பெண்களோ, வியாழக் கிழமைகளில் இந்தக் கோயிலுக்கு வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் பாயசம் நிவேதனம் செய்து வழிபட்டுவிட்டு, அந்தப் பாயசத்தைப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கொடுத்தால், விரைவில் திருமணம் நடக்கும். அதேபோல் கருத்து வேற்றுமையால் பிரிந்துபோன தம்பதி, மீண்டும் வாழ்க்கைத் துணைவருடன் இணையவேண்டி, இந்த ஆலயத்தை 108 முறை வலம் வந்து, நம்பிக்கையுடன் இறைவனைப் பிரார்த்தித்து, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினால், மிக விரைவில் அவர்கள் ஒன்று சேர்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பிணிகளால் அவதிப்படுவோர், வைத்தியநாத சுவாமிக்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், விபூதி, பால் ஆகிய பொருள்களை அபிஷேகம் செய்து, பின்னர் அந்தப் பிரசாதங்களைச் சாப்பிட, நோய் கள் தீரும். குழந்தை வரம் வேண்டுவோர் தம்பதி சமேதராக இங்கு வந்து வாழைக்காய்களைப் பலியாகச் சமர்ப்பித்து வழிபட் டால், விரைவில் குழந்தை பாக்கி யம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Read More
நாகநாதர் கோவில்

நாகநாதர் கோவில்

கோவில் குளத்தில் இருந்து கேட்கும் இசைக்கருவிகளின் ஒலி

புதுக்கோட்டையில் இருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள பேரையூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான நாகநாதர் ஆலயம் உள்ளது. இக்கோயிலின் மதில் சுவர், குளக்கரை மண்டபம் ஆகிய இடங்களில் ஏராளமான நாகர் சிலைகள் இருக்கின்றன.இக்கோவில் குளத்தில், சித்திரை மாதத்தில் இசைக்கருவிகளின் ஒலி கேட்கிறது. அது நாகர்கள் இசைப்பதாக கருதப்படுகிறது.

இக்கோவில் வளாகத்தில் உள்ள மரங்கள் பாம்பு போல் வளைந்து, நெளிந்து காணப்படுவது ஆச்சரியமான விசயமாகும்.

இக்கோவிலில் சிவன் சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் நடுவில் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னதி உள்ளது.இது போன்ற அமைப்பு வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாது.

நாக தோஷம், ராகு கேது தோஷம் போக்கும் பரிகாரத் தலம்

நாக தோஷம், ராகு கேது தோஷம் நீங்க இத்தலம் ஒரு சிறந்த பரிகாரத் தலமாகும். திருமணத்தடை நீங்கவும், மழலைச் செல்வம் வேண்டியும் ஏராளமான பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபடுகின்றனர்.

Read More
சண்முக நாதர் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

சண்முக நாதர் கோவில்

முருகனுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் திருப்புகழ் தலம்

திருச்சி மதுரை சாலையில் சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது விராலிமலை சண்முக நாதர் கோவில்.ஒருகாலத்தில், கருப்புமுத்து எனும் பக்தர் இக்கோவிலின் திருப்பணியில் ஈடுபட்டிருந்தார். ஒருநாள், பலத்த மழை பெய்யவே. கருப்புமுத்துவால் ஆற்றைக் கடந்து கோயிலுக்கு வரமுடியவில்லை. குளிரில் நடுங்கியபடி, முருகப்பெருமானை தரிசிக்க முடியவில்லையே என்று வருத்தமுடன் இருந்தார். குளிருக்கு இதமாக இருக்கும் என்று நினைத்து சுருட்டு ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தார். அப்போது அவர் அருகே ஒருவர் நடுங்கியபடி வந்து நின்றார். அவர் மீது இரக்கப்பட்ட கருப்பமுத்து, உங்களுக்கும் சுருட்டு வேண்டுமா எனக் கேட்டார். வந்தவரும் சுருட்டை வாங்கிக் கொண்டார். அந்த நபர் கருப்பமுத்துவுக்கு ஆற்றைக் கடக்க உதவி செய்தார். பின்னர் காணாமல் போய்விட்டார். கருப்பமுத்து கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தபோது சன்னதியில் பாதி சுருட்டு இருந்தது கண்டு திகைத்துப் போனார். கருப்பமுத்து ஊர்மக்களிடம் நடந்ததைக் கூற அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அன்று முதல் மாலை வேளை பூஜையில் முருகனுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது.பின்னர் இடைக்காலத்தில் புதுக்கோட்டை மகாராஜா இப்பழக்கத்திற்கு தடை விதித்தார். அவர் கனவில் தோன்றிய முருகன், “எனக்கு சுருட்டு படைப்பது பிறருக்கு முடிந்த உதவியைச் செய்ய வேண்டும்; இருப்பதை அடுத்தவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். துன்பப்படும் ஒருவனுக்கு ஏதோ ஒரு வழியில் உதவி செய்ய வேண்டும் என என் பக்தர் விரும்பினார். அதனால்தான் அவர் தந்த சுருட்டை தகுதியற்றதாயினும் அன்புடன் ஏற்றுக்கொண்டேன். இப்பழக்கம் தொடரட்டும். தடை செய்யாதே” என்றார். அதன் பிறகு இன்றுவரை இப்பழக்கம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பக்தர்கள் இந்த சுருட்டைப் பிரசாதமாகப் பெற்று, வீட்டில் கொண்டு வைக்கின்றனர். இறைவன் நாம் அன்புடன் படைக்கும் எதையும் ஏற்றுக் கொள்வான் என்பதையே இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது. இத்தலத்தில் நோய், துன்பம் விலகவும், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் பெருகவும் முருகப்பெருமானிடம் வேண்டுகிறார்கள்.

Read More
நெய் நந்தீஸ்வரர் கோவில்

நெய் நந்தீஸ்வரர் கோவில்

நெய் மீது ஈ, எறும்பு மொய்க்காத அதிசயம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்கு அருகே உள்ள வேந்தன்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது நெய் நந்தீஸ்வரர் கோவில். இறைவன் சொக்கலிங்கேசுவரர்.

ஒரு சமயம் இத்தலத்தில், சிவ பக்தர் ஒருவர் சிவ லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்தார். ஆனால் நந்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்யாமல் விட்டு விட்டார். நந்தியின் புனிதம் கருதி அதை தீர்த்த குளத்திற்குள் வைத்து விட்டார். ஒரு நாள் அவருக்கு கடுமையான வயிறு வலி ஏற்பட்டது. அப்போது மானசீகமாக சிவனை வேண்டிக்கொண்டார். தொடர்ந்து அவரின் கனவில் மாடுகள் விரட்டுவது போல காட்சிகள் கண்டு திடுக்கிட்டார். உடனே நந்தியை பிரதிஷ்டை செய்வதாகவும், அதற்கு நெய் அபிஷேகம் செய்வதாகவும் வேண்டிக்கொண்டார். இந்த நிகழ்வு நடந்த சில நாட்களிலேயே அந்த பக்தரின் உடல் பிணி தீர்ந்தது. அவர் நெய் அபிஷேகம் செய்து வழிபட்டது போல பலரும் நெய் அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. அதனால், இங்குள்ள நந்தி, நெய் நந்தீஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றார்.

பொதுவாக நம் வீட்டில் அல்லது வெளியில் சிறிதளவு நெய் கொட்டினாலும் எறும்பு, ஈக்கள் குவிந்துவிடும். ஆனால் இந்த நந்தீஸ்வரருக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். நெய் மீது ஈ, எறும்புகள் மொய்ப்பதில்லை. இதற்கு நந்தியின் கொம்புகளுக்கு இடையே ஒரு சக்கரம் உள்ளது. இது இயற்கையாக அமைந்த அமைப்பாக உள்ளது. இந்த சக்கரம் ஆதார சக்தியாக அமைந்துள்ளது. இதன் காரணமாகத்தான் நந்தி மீது அபிஷேகம் செய்யப்படும் நெய் மீது ஈயும், எறும்பும் மொய்ப்பதில்லை. நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிற நெய்யானது, கோவிலுக்குள் இருக்கும் கிணற்றில் சேகரிக்கப்படுகிறது. நெய் பல லிட்டர் கணக்கில் இருந்தும்,,அங்கும், ஒரு பூச்சியும் மொய்ப்பதில்லை.

ரிஷப ராசியினர் பரிகாரம் செய்ய சிறந்த தலமாக இந்த நெய் நந்தீஸ்வரர் கோயில் பரிந்துரைக்கப்படுகிறது.

Read More
ஆத்மநாதசுவாமி  கோயில்

ஆத்மநாதசுவாமி கோயில்

ஆவுடையார் மட்டுமே உள்ள சிவாலயம்

வித்தியாசமான அம்சங்கள் உள்ள சிவாலயம்

சிவாலயங்களில் உள்ள சிவலிங்கம் இரண்டு பகுதிகளால் ஆனது. கீழ்ப்பகுதி ஆவுடையார் என்றும் மேல்பகுதி பாணம் என்றும் கூறப்படும். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் என்னும் தலத்தில் உள்ள ஆத்மநாதசுவாமி கோவில் மூலவர் சன்னதியில், ஆவுடையார்(லிங்கத்தின் கீழ் பகுதி) மட்டுமே உள்ளது. மேல் பகுதியான பாணம் கிடையாது. இங்கு பாணம் அரூபமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்தலத்து அம்பிகை யோகாம்பிகை, அரூபமாக இருப்பதால் அம்பிகைக்கு திருவுருவம் இல்லை. அவள் தவம் செய்த போது, பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடக்கிறது. இந்த பாதத்தைப் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, கண்ணாடியில் பாதம் பிரதிபலிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவளது சன்னதி எப்போதும் அடைத்தே இருக்கும் என்பதால், சன்னதி முன்புள்ள கருங்கல் பலகணி வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும். மேலும் மற்ற சிவாலயங்களில் இருப்பது போல நந்தி, கொடிமரம், பலிபீடம் போன்றவை இங்கு கிடையாது.

சிற்பக்கலையின் பொக்கிஷம்

இத்தலத்து சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த கலைநயம் உடையவை. முற்காலத்தில் சிற்பிகள் தங்கள் சிற்ப வேலைக்கு ஒப்பந்தம் போடும்போது, ஆவுடையார் கோவில் கொடுங்கை தாரமங்கலம் தூண், திருவலஞ்சுழி பலகணி போன்ற வேலைப்பாடுகளை தவிர வேறு எந்த சிற்ப வேலைப்பாடுகளையும் தங்களால் செய்ய முடியும் என்று உறுதி அளிப்பார்களாம்.

கோவிலின் தாழ்வாரத்திலுள்ள கொடுங்கைகள் (Raft),எப்படி ஒரு வீட்டில் கொடுங்கைகளை, தேக்கு மரச் சட்டங்களை இணைத்து அதன் மீது மெல்லிய ஓடு வேய்ந்திருப்பார்களோ, அதேபோல அத்தனை அம்சங்களையும் கல்லிலே வடிவமைத்து இருப்பது காண்போரை வியக்க வைக்கும். இந்த கொடுங்கைக்கூரையில், கற்கள் எப்படி எந்த இடத்தில் இணை சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டரையடி கனமுள்ள கற்களை இப்படி தாழ்வாரக் கூரையாக்கி, அவற்றை செதுக்கிச் செதுக்கி ஒரு அங்குல கனமுள்ள மேலோடு அளவிற்குச் மெல்லிய தாக்கியிருப்பது, சிற்பக் கலையின் உச்சக்கட்ட திறனாகும்.

தற்கால நாகரீகப் பெண்கள் அணியும் நவீன அணிகலன்கள், தங்க நகைகள், சங்கிலிகள் போன்ற விதவிதமான வடிவமைப்பு உள்ள அணிகலன்கள், இங்குள்ள சிற்பங்களில் காணப்படுவது நம்மை பிரமிக்க வைக்கும். சுருங்கச் சொன்னால் இத்தலமானது சிற்பக்கலையின் பொக்கிஷமாகும்.

Read More