திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் கோவில்
தமிழத்திலேயே மிக அதிக சுற்றளவுள்ள ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கத் திருமேனி
மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று
செவ்வாய் தோஷ பரிகார தலம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ள பாண்டிய நாட்டு தேவார தலம் திருப்புனவாசல். இத்தலத்து இறைவன் திருநாமம் விருத்தபுரீசுவரர், பழம்பதிநாதர். விருத்தம் என்றால் பழமை. எனவே இவர் பழம்பதிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவியின் திருநாமம் பிருகந்நாயகி, பெரியநாயகி. காசியில் உள்ள விசுவநாதர் கோவிலுக்கு முன்னதாக உருவான கோவில் இது. பிரம்மாவே வணங்கிய தலம் என்பதால், இது மிகப் பழமையான ஊராகக் கருதப்படுகிறது.
இக்கோவிலில் உள்ள நந்தியும் ஆவுடையாரும் (லிங்க பீடம்) மிகவும் பெரியதாக உள்ளது. தமிழத்திலேயே மிக அதிக சுற்றளவுள்ள ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கமாக விருத்தபுரீசுவரர் விளங்குகின்றார். தஞ்சை பெரிய கோவில் பிரகதீஸ்வரருக்கு அடுத்தபடி பெரிதாக உள்ள சிவலிங்க மூர்த்தி இதுவாகும். தஞ்சை பிரகதீசுவரர் சிவலிங்கம் பெரியது, அதனை விட கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள சிவலிங்கம் உயரத்தில் மிகவும் பெரியது. ஆனால் இக்கோவில் சிவலிங்கம் சுற்றளவில் எல்லாவற்றையும் விட மிகப் பெரியது (சுற்றளவு 82.5அடி). சுவாமிக்கு மூன்று முழம் துணியும், ஆவுடையாருக்கு 30 முழம் துணியும் வேண்டும். 'மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று' என்ற வாசகம் இத்தலத்து இறைவனைப் பற்றியதாகும்.
பாண்டிய நாட்டில் உள்ள 14 சிவத்தலங்களும் இங்கு இருப்பதாக ஐதீகம். அதற்கேற்ப கோவிலுக்குள் 14 சிவலிங்கங்கள் இருக்கின்றன. திருப்புனவாசல் தலத்தைத் தரிசித்தால், மற்ற தலங்களுக்குச் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். திருப்புனவாசலில் இருந்து சுமார் 7 மைல் தூரத்துக்கு எமன் மற்றும் எமதூதர்கள் எவரும் உள்ளே வரமுடியாது என்பதும் ஐதீகம்.
செவ்வாய்க்கே தோஷம் போக்கிய இத்தலத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
சனகாதி ரிஷிகள் உடன் இல்லாமல் இருக்கும், இடது கையில் நாகத்தை ஏந்திய தட்சிணாமூர்த்தியின் வித்தியாசமான கோலம் (9.10.2025)
தகவல் உதவி : திரு.விருத்தபுரீசுவரர் குருக்கள் மற்றும் திரு. விக்னேஷ் குருக்கள், ஆலய அர்ச்சகர்கள்
இறைவன் விருத்தபுரீசுவரர் - மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று