தில்லை காளியம்மன் கோவில்
தில்லை காளியம்மன்
வெள்ளை புடவை மட்டுமே அணியும் காளியம்மன்
சிதம்பர நடராஜர் கோயிலில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தில்லை காளி கோவில். தமிழகத்தில் இருக்கும் அஷ்ட காளி கோவில்களில் தில்லை காளி கோவிலும் ஒன்றாகும். சிதம்பரத்தின் காவல் தெய்வமாக தில்லை காளியம்மனே திகழ்கிறார். சிவபெருமானை பிரிந்து, காளி தில்லை நகரத்தின் எல்லைக்குச் சென்று அமர்ந்ததன் பின்னணியில் ஒரு புராண நிகழ்ச்சி உள்ளது.
ஒரு சமயம் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தங்களுள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் வந்தது. அப்போது பார்வதி தேவி, 'சக்தியில்லையேல் சிவனில்லை' என வாதாட, கோபமுற்ற சிவபெருமான் உக்கிர காளியாக உருமாறும்படி அவரை சபித்து விட்டார். இதனால் சாப விமோசனம் கேட்ட பார்வதி தேவியிடம், 'அசுரர்களை அழிக்கவே உன்னை உக்கிரகாளியாக மாற்றினேன். காளி உருவில் போரிட்டு அசுரர்களை அழிப்பாய். உன் கடமைகள் முடிந்த பிறகு தில்லை மரங்கள் சூழ்ந்த இடத்திலிருந்து என்னை நோக்கித் தவம் புரிவாயாக. தக்க தருணம் வரும்போது மீண்டும் என்னுடன் வந்து இணைவாய்' என்று உரைத்தார்.
காலங்கள் ஓடின. காளி தேவி அரக்கர்களை போரில் அழித்து வெற்றி பெற்றார். சிவபெருமானை அடையும் பொருட்டு கடுமையாக தவம் புரிந்தார். அதே நேரத்தில் சிதம்பரத்தில் பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்களுக்கு சிவபெருமான் ஆனந்தத் தாண்டவத்தை காட்டிக்கொண்டிருந்தார். இதனால் கோபம் கொண்ட காளி, 'இத்தனை காலமாக நான் தவம் புரிகிறேன். எனக்கு முதலில் காட்சி தராமல் உங்கள் பக்தர்களுக்குக் காட்சி தருவது என்ன நியாயம்? நானும் உங்களுடன் சேர்ந்து ஆடுகிறேன். யார் முதலில் ஆட்டத்தை நிறுத்துகிறார்களோ அவர்கள் தோல்வியுற்றவர்கள். அவர்கள் ஊர் எல்லையில் போய் அமர வேண்டும் என்று கூறி ஆடத் தொடங்கினர். தாண்டவத்தின்போது சிவபெருமானின் குண்டலம் கீழே விழ, அதை அவர் தனது கால்களில் எடுத்து தனது காதுகளில் மாட்டி ஊர்த்துவ தாண்டவத்தை ஆடினார்.
பெண் என்பதால் சக்தியால் இந்த நடனத்தை ஆட முடியவில்லை. அதனால் தோல்வியுற்று, உக்கிரமாக ஊர் எல்லையில் போய் அமர்ந்தார். அப்போது அனைத்து தேவர்களும் திருமாலும், பிரம்மாவும் அவரை சாந்தம் அடையும்படி கேட்டுக்கொண்டனர். பிரம்மா அவரை நான்கு வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு முகத்துடன் உருமாறிக்கொள்ள வேண்டினார். அதைப்போலவே காளி பிரம்மசாமுண்டேஸ்வரியாக பிரம்மனை போலவே நான்கு முகங்களுடன் காட்சியளிக்கிறார். இந்த கோயிலில் ஒரு சன்னிதியில் உக்கிரமாக எட்டு கைகளோடு காட்சியளிக்கிறார். இன்னொரு சன்னிதியில் சாந்தமாக பிரம்ம சாமுண்டீஸ்வரியாகவும் காட்சியளிக்கிறார்.
தில்லை காளியம்மனுக்கு வெள்ளை புடவை மட்டுமே அணிவிக்கப்படுகிறது. தில்லை காளியன்னைக்கு தினமும் நல்லெண்ணையால் மட்டுமே அபிஷேகம் செய்கிறார்கள். வேறு அபிஷேகம் செய்தால் காளி குளிர்ந்து விடுவாளோ, அவள் குளிர்ந்தால் தீயவர்கள் பெருகிவிடுவார்களோ என்று அக்காலத்திலிருந்தே வேறெந்த அபிஷேகமும் செய்வதில்லை.உடம்பு முழுவதும் குங்குமம் காப்பிடுதல் செய்யப்படுகிறது. கண்கள் மட்டும் கருமை தீட்டப்பட்டுக் காட்சியளிக்கிறார். இந்த அம்மனை வழிபட்டால், நோய் நொடி தீரும், பிள்ளை வரம் கிட்டும், திருமணத்தடை விலகும். இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் செய்வினை, பில்லி சூனியத்தால் அவதிப்படுபவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள், கடன் தொல்லையிலிருந்து மீள்வார்கள், எதிரிகள் தரும் இன்னல்களிலிருந்து விடுபட வழி தெரியாமல் தவிப்பவர்களுக்கு விடுதலை கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில்
திருநாகேஸ்வரம் கிரிகுஜாம்பிகை அம்மன்
தினமும் குழந்தை, இளம்பெண், பெண் என மூன்று வித தோற்றங்களில் காட்சி தரும் அம்பிகை
சரஸ்வதியுடனும், லட்சுமி தேவியுடனும் காட்சி அளிக்கும் அம்பிகை
கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருநாகேஸ்வரம். இறைவன் திருநாமம் நாகநாதசுவாமி. இத்தலத்தில் கிரிகுஜாம்பிகை மற்றும் பிறையணிவாள் நுதல் அம்மை என இரண்டு அம்மன்கள் அருள்பாலிக்கிறார்கள்.
கிரிகுஜாம்பாள் அம்பிகை தனிச் சன்னதியில் தவக்கோலத்தில் காட்சியளிக்கின்றாள். கிரிகுஜாம்பிகையின் வலதுபுறம் வீணையைக் கையில் தாங்கி சரஸ்வதியும், இடதுபுறம் கரங்களில் தாமரை மலரைத் தாங்கி லட்சுமிதேவியும் இருக்கின்றனர் . கிரிகுஜாம்பிகை காலையில் சிறுமியாகவும், மதியத்தில் இளம் பெண்ணாகவும், மாலையில் தேவியாக, பெண்ணாகவும் அலங்கரிங்கப்படுகிறார்.
கிரிகுஜாம்பிகையின் திருவடிவம் சுதையால் ஆனது என்பதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சார்த்துகிறார்கள். மார்கழி மாதத்தில் 48 நாட்கள் புனுகு சட்டம் மட்டுமே சாற்றுவது வழக்கம். அந்நாட்களில் அம்பிகையை தரிசிக்க முடியாது. இந்நாட்களில் அம்பிகையின் சன்னதி முன்புள்ள திரைச்சீலைக்கே பூஜை நடக்கிறது. தை மாதத்தில் அம்பாளுக்கு, புனுகு காப்புத் திருவிழா நடைபெறும். தை கடைசி வெள்ளியன்று அம்மனது சன்னதி முன்மண்டபத்தில் அன்னம், காய்கறி, பழங்கள் போன்றவற்றை படைத்து சிறப்பு பூஜை நடைபெறும்.
இங்கு முத்தேவியரை வணங்கி, இவர்களை வழிபட குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை. இத்தலம் ராகுவிற்கான பரிகார தலமாகவும் விளங்குகிறது.
திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோவில்
திருப்புவனம் மின்னனையாள்
மின்னல் வேகத்தில் பக்தர்களுக்கு அருளும் அம்பிகை
மதுரை - மானாமதுரை சாலையில் 20 கி.மீ. தொலைவில், வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள தேவார தலம் திருப்புவனம். இறைவன் திருநாமம் புஷ்பவனேசுவரர். இறைவியின் திருநாமம் சௌந்தர நாயகி. பாண்டிய நாட்டு பாடல் பெற்ற 14 தலங்களில், தேவார மூவராலும் பாடல் பெற்ற ஒரே பாண்டிய நாட்டு தலம் இதுவாகும். மோட்ச தீபம் ஏற்றி பித்ருக்களுக்கு முக்தி அளிக்கும் தலமாகப் போற்றப்படும் இத்தலம், தமிழகத்தில் காசியை விட வீசம் (பதினாறு பங்கு) அதிகம் புண்ணியம் கிடைக்கும் ஒரே தலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இத்தலம், புஷ்பவன காசி, பிதுர் மோட்சபுரம், பாஸ்கரபுரம், லட்சுமிபுரம், பிரம்மபுரம், ரசவாதபுரம் எனவும் அழைக்கப்படுகிறது.
இத்தலத்து அம்பிகைக்கு ஸ்ரீ சௌந்தரநாயகி, மின்னனையாள், அழகிய மீனாள் என பல பெயர்கள் உண்டு. இந்த அம்பிகையின் சன்னதி, இறைவன் சன்னதிக்கு இணையாக, இறைவனுக்கு வலது புறம் அமைந்துள்ளது. அம்பாள் சன்னதிக்கு, கோவிலுக்கு வெளிப்பகுதியிலிருந்தே நேரடியாக வருவதற்கு வழியுண்டு. கருவறையில் அம்பிகை மின்னனையாள் நின்ற கோலத்தில் அபயமும், வரதமும் காட்டி நின்ற கோலத்தில் அருள்கிறாள். அம்மன் சந்நிதி கோஷ்டங்களில், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியோரும் எழுந்தருளி இருக்கிறார்கள். தனது திருநாமத்திற்கு ஏற்ப, இத்தலத்து அம்பிகை மின்னனையாள், மின்னலைப் போல ஒரு கணத்தில் கேட்பவர்க்கு அருள் வழங்குகின்றாள்.
திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோவில்
திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி அம்மன்
வெங்கடாஜலபதியாகக் காட்சி தரும் திரிபுரசுந்தரி அம்மன்
திருக்கோடிக்காவல் எனும் தேவாரத்தலம் கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள சூரியனார் கோவிலிலிருந்து 5 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் கோடீசுவரர். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி அம்மன்.
ஒரு சமயம், ஆழ்வார்கள், வெங்கடாஜலபதியின் தரிசனத்திற்காக, திருப்பதி சென்றார்கள். அங்கு வெங்கடாஜலபதி, அவர்களுக்கு காட்சி தரவில்லை, மாறாக, திருக்கோடிக்காவில் திரிபுரசுந்தரி அம்மன், நீங்கள் விரும்பும் தரிசனம் கொடுப்பாள், அங்கே செல்லுங்கள்' என்று அசரீரியாக உத்தரவு பிறந்தது. ஆழ்வார்களும், ஆவலுடன் புறப்பட்டு, திருக்கோடிக்காவை அடைந்தனர். ஊரை நெருங்கியபோது, காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதைக்கடந்து வரமுடியாமல் ஆழ்வாராதிகள் சிரமப்பட்டபோது, அகத்திய முனிவர், அவர்கள் முன் தோன்றி, ஆலயத்திலுள்ள கரையேற்று விநாயகரை, மனதில் பிரார்த்தித்துக் கொள்ளும் படி கோரினார். அவர்களும் அவ்வாறே செய்ய, காவிரியில் வெள்ளம் குறைந்தது. ஆழ்வாராதிகள், கரையைக் கடந்து ஆலயத்தினுள் வர, அங்கு அம்பாள் அவர்களுக்கு வெங்கடாஜலபதியாக தரிசனம் தந்தருளினாள்.
அப்போது திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி அம்மன் கைகளில் இருந்த பாசமும் அங்குசமும் மறைந்து, சங்கும் சக்கரமும் இருந்தது. திருமாங்கல்யம் மறைந்து போய் கவுஸ்துப மணியாக மாறிப் போனது. மார்பினில் திருமகளும் நிலமகளும் குடி கொண்டு விட்டார்கள். செந்நிற பட்டாடை மறைந்து போய் பீதாம்பரம் மிளிறியது. அம்மன் நெற்றியில் மின்னும் குங்குமப் பொட்டுக்கு மாறாக கஸ்தூரி திலகம் பளிச்சிட்டது. மொத்தத்தில் பக்தனுக்காக அம்மன் திருப்பதி பெருமாளாக மாறி விட்டாள்.
இந்த வைபவம் இன்றும் திருக்கோடிக்காவலில் ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையிலும் நடக்கிறது. அன்று நம் அனைவருக்கும் திரிபுரசுந்தரி வெங்கடாஜலபதியாகக் காட்சி தருகிறாள்.
நத்தம் பரமேஸ்வரமங்கலம் செண்பகேஸ்வரர் கோவில்
மகாலட்சுமி ஈசனை வழிபட்ட அபூர்வமான தலம்
மகாலட்சுமியின் அம்சமாக எழுந்தருளி இருக்கும் சௌந்தரநாயகி அம்பிகை
சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், கல்பாக்கத்தில் இருந்து தென்மேற்கில் 10 கி.மீ. தொலைவில், கல்பாக்கத்திற்கு அடுத்துள்ள பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள தலம் நத்தம் பரமேஸ்வரமங்கலம்.இத்தலத்து இறைவன் திருநாமம் செண்பகேஸ்வரர். இறைவியின் திருநாமம் சௌந்தரநாயகி. சுமார் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது இக்கோவில்.
பாற்கடலில் தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் எடுப்பதற்காக மந்தார மலையை மத்தாகவும், வாசுகிப் பாம்பைக் கயிறாகவும் கொண்டு கடைந்தனர். அப்போது கடலுக்குள் இருந்து அதிக சக்திமிக்க ஆலகால விஷம் தோன்ற, அதை அருந்தி சிவபெருமான் அனைவரையும் காப்பாற்றினார். மேலும் ஆமை வடிவில் தாங்கி இருந்த மகாவிஷ்ணுவின் உடல் விஷத்தினால் நீலமானது. இதை அறிந்த மகாலட்சுமி சிவபெருமானிடம் முறையிட அவரோ "நீ பூலோகத்தில் பாலாற்றின் கரையில் உள்ள செண்பகவனம் என்ற பகுதிக்குச் சென்று தவம் இயற்றுக. யாம் பார்வதி பரமேஸ்வரனாய் காட்சி தந்து அருளுவோம்" என்றுரைத்தார். இதன்படி லட்சுமிதேவி பூலோகத்தில் இப்பகுதிக்கு வந்து ஒரு செண்பக மரத்தின் அடியில் இருந்த லிங்கத்தை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டாள். அதனால் மகாவிஷ்ணுவின் உடலில் இருந்த விஷம் அகன்றது.
இக்கோவிலில், ஒரு தனிசன்னிதியில் தெற்கு திசைநோக்கி அம்பாள் ஸ்ரீசௌந்தர்யநாயகி சதுர்புஜநாயகியாக தாமரைப் பீடத்தின் மீது நின்ற திருக்கோலத்தில், மகாலட்சுமியின் அம்சமாக இங்கு எழுந்தருளி இருக்கிறாள். வழக்கமாக தனது திருக்கரங்களில் பாசம் அங்குசத்தை ஏந்தி காட்சி தரும் அம்பாள் இத்தலத்தில் மகாலட்சுமியைப் போல தனது திருக்கரங்களில் தாமரை மற்றும் நீலோத்பவ மலர்களை ஏந்தியவாறு காட்சி தருகிறாள். அம்பாளின் பாதத்தில் ஸ்ரீசக்கரத்தை தரிசிக்கலாம். இவ்வாலயத்தில் அம்பாள் ஸ்ரீசௌந்தர்யநாயகிக்கு முதல் ஆரத்தி முடிந்த பின்னரே இறைவனுக்கு ஆரத்தி நடைபெறுகிறது.
திருக்கருக்காவூர் முல்லைவனநாதர் கோவில்
திருக்கருக்காவூர் கர்ப்பரட்சாம்பிகை
கருவை பாதுகாத்து சுகப்பிரசவம் அருளும் அம்பிகை
தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாபநாசம் என்ற ஊரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் (தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் ஆகிய இரு இடங்களிலிருந்தும் 20 கிலோமீட்டர்) அமைந்துள்ள தேவார தலம் திருக்கருக்காவூர். இறைவன் திருநாமம் முல்லைவனநாதர். இறைவியின் திருநாமம் கர்ப்பரட்சாம்பிகை. இத்தலத்து அம்பிகையை வணங்கினால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதுகாப்பாக இருந்து கருசிதைவு ஏற்படாமல் காத்திடுவாள். அதுமட்டுமல்ல பல வருடம் குழந்தை செல்வம் இல்லாத ,டாக்டர்கள் கைவிரித்த தம்பதிகளுக்கும் குழந்தை செல்வம் அருளுபவள் இத்தல அம்பிகை. எனவே இந்த அம்பிகைக்கு 'கரு காத்த நாயகி' என்று பெயர். வடமொழியில் 'கர்ப்பரட்சாம்பிகை' எனப் பெயர். சுருங்கச் சொன்னால், இத்தலம் கரு,கருகாத ஊர் ஆகும்.
நிருத்துருவமுனிவரின் பத்தினி வேதிகை, கர்ப்பகாலத்தில் நேர்ந்த அயர்ச்சியால், அங்கு வந்த ஊர்த்துவபாத முனிவரை உபசரிக்க இயலாமல் போகவே, கோபம் கொண்ட முனிவர், அவளது கர்ப்பம் சிதையுமாறு சபித்தார். அதனால் துயரமுற்ற தம்பதியர்,இத்தலத்து இறைவனையும் இறைவியையும் சரணடைந்து துதிக்கவே, வேதிகையின் கரு சிதையாமல் அம்பாள் காத்து ரட்சித்தபடியால் கர்ப்பரட்சாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர். அம்பாள் கர்ப்பரட்சாம்பிகையிடம் திருமணம் கூடிவர, குழந்தைப் பாக்கியம் உண்டாக, சுகப்பிரசவம் ஏற்பட பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.
குழந்தைப் பாக்கியம் கிடைக்க செய்யப்படும் பிரார்த்தனை
இத்திருக்கோவில் அம்பாள் சன்னதியில், நெய்யினால் படிமெழுகி கோலமிட்டு மீதமுள்ள நெய்யை அம்பாள் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து கொடுப்பார்கள். இந்த நெய் பிரசாதத்தை 1/2 கிலோ நெய்யுடன் கலந்து தம்பதியர் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். இக்கோயில் சோமாஸ்கந்தர் அமைப்பில் உள்ளதால், இத்திருக்கோயில் பிரகாரத்தை ஒரு சேர மூன்று முறை வலம் வரும் தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது வரலாறு.
சுகப்பிரசவம் ஏற்பட
கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக அம்பாள் திருவடியில் வைத்து, மந்திரித்து விளக்கெண்ணெய் தரப்படுகிறது. பிரசவ வலியேற்படும் காலத்தில் இதை வயிற்றில் தடவிவர, எந்தவிதமான கோளாறும் இல்லாமல் சுகப்பிரசவமாகும். கர்ப்பம் அடைந்தவர்களுக்கு எப்போதாவது அசாதாரண வலி தோன்றினால், அப்போது மந்திரித்த விளக்கெண்ணெய்யை வயிற்றில் தடவினால் வலி நின்று நிவாரணம் கிடைக்கும்.
தங்கத் தொட்டில் பிரார்த்தனை
குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கும், குழந்தைப் பேறு பெற்றவர்களுக்கும் நாட்டிலேயே முதல் முறையாக தங்கத் தொட்டில் பிரார்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தை வரம் வேண்டுபவர்கள் நெய் மந்திரிக்கும்போது அம்பாள் பாதத்தில் உள்ள ஸ்கந்தரை தம்பதியர் பெற்றுத் தங்கத் தொட்டிலில் இடுவதும், குழந்தை வரம் பெற்றவர்கள் தங்கள் குழந்தையைத் தங்கத் தொட்டிலில் இடுவதும் இங்கு முக்கிய பிரார்த்தனையாகும்.
சிதம்பரம் நடராஜர் கோவில்
சிதம்பரம் சிவகாம சுந்தரி அம்மன்
முப்பெரும் சக்தியாக விளங்கும் சிவகாமசுந்தரி அம்மன்
சிவ பக்தர்களுக்கு கோவில் என்றால் அது சிதம்பரம் நடராஜர் கோவில் தான். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாக விளங்கும் இக்கோவிலின் மூன்றாவது பிரகாரத்தில், சிவகாம கோட்டம் என்று அழைக்கப்படும் தனி கோவிலில் அன்னை சிவகாம சுந்தரி அம்மன் அருள் பாலிக்கின்றாள். சிவகாம சுந்தரி அம்மன் என்றால், 'சிவனது அழகிய காதலியானவள்' என்று பொருள்படும்.
சிவகாம சுந்தரி அம்மன், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளின் மகா சக்தியாகக் காட்சி அளிக்கிறாள். இச்சா சக்தி (விருப்ப சக்தி): இது விருப்பங்களையும், ஆசைகளையும், படைப்பாற்றலையும் குறிக்கும் சக்தி ஆகும். ஞான சக்தி (அறிவு சக்தி): இது அறிவையும், ஞானத்தையும், விவேகத்தையும் குறிக்கும் சக்தி ஆகும். கிரியா சக்தி (செயல் சக்தி): இது செயல்களையும், இயக்கத்தையும், படைத்தலையும், அழித்தலையும் குறிக்கும் சக்தி ஆகும்.
இக்கோவில் கருவறையில், பேரழகுத் தோற்றத்தில், சமபங்கம் எனும் சிற்ப நிலையில், சுமார் ஆறடி உயரத்தில், திருமுடி தாங்கும் கிரீடத்துடன், என்றும் வற்றாத அருட்கடல் போன்ற இமைக்காத ஈடிணையற்ற திருக்கண்களும், எள் பூ போன்ற நாசியில் (மூக்கில்) நத்து, புல்லாக்கு, மூக்குத்தி ஆபரணங்கள் மின்ன, முக மண்டலமே முழு நிறைவு தந்திடும் வகையில் அமைந்திட, வலது மேல் கையில் ஜபமாலை, வலது கீழ் கையில் செங்கழுநீர்ப்பூ, இடது மேல் கையில் கிளி கொஞ்சிட, இடது கீழ்க்கை ஒய்யாரமாக தொடையின் மீது படும்படியாக அமைய, தேவர்களும், முனிவர்களும் தஞ்சமடைய வேண்டுகிற - பாடகமும், கொலுசும் அலங்கரிக்கும் திருப்பாதங்களும் கொண்டு சிவகாம சுந்தரி அம்பிகை, பக்தர்களுக்கு நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.
சிவகாம சுந்தரி அம்பிகையை வழிபட்டால் பதினாறு பேறுகள் கிடைக்கப் பெறலாம் என்பதை உணர்த்தும் வகையில் அம்பிகையின் கோவிலில் பதினாறு படிகள் அமைந்துள்ளன. அம்பிகையை மனதிற்குள் நினைத்து, குங்குமம், மஞ்சள், வளையல் அணிவித்து வழிபட்டு வந்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
பக்தனுக்காக மடப்பள்ளியில் சமையல் செய்த மீனாட்சி அம்மன்
அம்மனின் சக்தி பீடங்களில் முதன்மையானது என போற்றப்படுவது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்த பீடத்திற்கு 'ராஜமாதங்கி சியாமள பீடம்' என்று பெயர். மீனாட்சி அம்மன் சிலை மரகதக்கல்லால் ஆனது.
மிகவும் பழைமை வாய்ந்த மதுரை மாநகரில், இறைவன் சொக்கநாதரும் அன்னை மீனாட்சியும் எழுந்தருளியிருக்கும் ஆலயம் குறித்த செய்திகள் பலவும், புராணங்களிலும் வரலாற்றிலும் காணப்படுகின்றன. மதுரை நகரைப் பற்றி 3000 ஆண்டுகளுக்கு முன் படைக்கப்பட்ட வால்மீகி இராமாயணத்தில் குறிப்பு உள்ளது. 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மகாவம்சம் என்ற நூலிலும் மதுரை பற்றிய தகவல் உள்ளது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ரோமாபுரியை ஆண்ட அகஸ்டசிடம் தம் தூதரை அனுப்பிய வரலாறு உள்ளது.
அன்னை மீனாட்சியால் நடந்த அற்புதங்கள் ஏராளம். அந்த அற்புத நிகழ்வுகளுக்குச் சான்றாக இப்போதும் பல பொருள்கள், இடங்கள் உள்ளன. அனைவருக்கும் நம்பிக்கைக்குரிய நலமளிக்கும் தெய்வமாகவே அன்னை மீனாட்சி அருள்பாலிக்கிறார். தன் பக்தனுக்காக மீனாட்சி அம்மன் மடப்பள்ளியில் சமையல் செய்த அற்புத நிகழ்வை இப்பதிவில் காணலாம்.
ஒருகாலத்தில், மீனாட்சியம்மன் கோயில் மடப்பள்ளியில் ஸ்ரீநிவாசன் என்பவர் பணி புரிந்தார். மீனாட்சி அம்மன் மேல் தீவிர பக்தி கொண்டவர். அம்பிகைக்கு சமர்பிக்கப்படும் தினசரி நைவேத்திய உணவுகளை தயாரிப்பது அவர் வழக்கம். அன்னையின் அருளால், நைவேத்தியம் சமைப்பதைப் போலவே, அருந்தமிழில் கவிதை சமைக்கவும் திறன் பெற்றிருந்தார். அங்கயற்கண்ணியின் மீது அருந்தமிழில் பாடல்கள் இயற்றினார். ஒருநாள் இரவு உறங்கப் போவதற்கு முன் அவர், மறுநாள் அதிகாலையில் சமைக்க வேண்டியிருந்ததால், மீனாட்சி அம்மனை நோக்கி , 'என்னை சீக்கிரம் எழுப்பி விடம்மா' என்று சொல்லிவிட்டுப் படுக்கச் சென்றார். அயர்ந்து உறங்கிவிட்டார். உழைத்த களைப்பில் உறங்கும் குழந்தையை எழுப்ப எந்த அன்னைக்கு மனம் வரும்? ஸ்ரீநிவாசனை எழுப்பாமல், மீனாட்சி அம்மனே நைவேத்தியங்களை அவருக்கு பதிலாகச் சமைத்து வைத்தார். இரவில் சமைக்க வெளிச்சம் வேண்டுமல்லவா, அதற்காகத் தன் மூக்குத்தியை, கழற்றிவைத்தவள், உலகத்தவருக்கு ஸ்ரீநிவாசனின் பக்தியின் பெருமையை உணர்த்த அந்த மூக்குத்தியை தடயமாக அதை மடப்பள்ளியில் விட்டுப் போனாள்.
மறுநாள் காலையில் கோவில் சிப்பந்திகள் எழுப்பி விட்ட பிறகுதான் ஸ்ரீநிவாசன் எழுந்தார். தாம் பிரசாதங்கள் தயாரிக்காமல் உறங்கி விட்டோமே என்று பதைப்புடன் எழுந்தவருக்கு அங்கு பிரசாதங்கள் தயார் நிலையில் இருப்பதைப் பார்த்து ஆச்சரியமும் குழப்பமும் அடைந்தார்.
பின்னர் நைவேத்திய உணவு பொருட்கள் மீனாட்சி அம்மன் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு நைவேத்தியம் ஆனது. அதன் பின்னர் கற்பூர ஆரத்தி நடக்கும் போதுதான் அம்மனின் முகத்தில் மாணிக்க மூக்குத்தி இல்லாததைக் கண்டு கவலையும் பதட்டமும் அடைந்தார்கள். தொலைந்த மூக்குத்தியை தேடத் தொடங்கினார்கள். அப்போது அம்மன் சன்னதியில் ஒரு அசரீரி கேட்டது. 'யாரும் கவலைப்பட வேண்டாம். என் மகன் ஸ்ரீநிவாசன் உடல் அசதியால் என்னை எழுப்பச் சொல்லி விட்டு உறங்கச் சென்றான். அவனை காலையில் எழுப்பி விட நானே சென்றேன். அவன் அயர்ந்து உறங்குவதை கண்டு, அவனை எழுப்ப மனமில்லாமல் நான் மடப்பள்ளிக்குச் சென்றேன். மடப்பள்ளியில் வெளிச்சம் இல்லாததால் சமைப்பதற்கு வெளிச்சம் வேண்டுமே என்று எனது மூக்குத்தியை கழற்றி வைத்துவிட்டு அதன் வெளிச்சத்தில் எனது நைவேத்தியங்களை நானே சமைத்தேன். குழந்தை உறங்குவதை கண்ட தாய் அவனை எழுப்புவாளோ? அவனால் செய்ய வேண்டிய பணி என்னால் முடிக்கப்பட்டது. மடப்பள்ளிக்கு சென்று பாருங்கள். அங்கு எனது மூக்குத்தி இருக்கும்' என்று அசரீரி ஒலித்தது. மீனாட்சி அம்மனின் திருவிளையாடலை நினைத்து அங்கிருந்த அனைவரும் பரவசம் அடைந்தனர்.
திருவையாறு ஐயாறப்பர் கோவில்
விஷ்ணு சொரூபமாக எழுந்தருளி விளங்கும் திருவையாறு தர்மசம்வர்த்தினி
வெள்ளிக்கிழமை இரவுகளில் மகாலட்சுமி தர்மசம்வர்த்தனி சன்னதியில் நிற்கும் வித்தியாசமான சம்பிரதாயம்
தஞ்சாவூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருவையாறு ஐயாறப்பர் கோவில். இத்தலத்து இறைவிக்கு தர்மசம்வர்த்தனி என்று பெயர். மேலும் இந்த அம்பிகைக்கு, அறம்வளர்த்தநாயகி, தர்மாம்பிகை, காமக்கோட்டத்து ஆளுடைநாயகி, உலகுடைய நாச்சியார், திரிபுரசுந்தரி என்றெல்லாம் பெயர்கள் உண்டு. அம்பிகையின் சக்தி பீடங்களில் இத்தலம், தர்ம சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது.
இத்தலத்து அம்பிகை அறம்வளர்த்தநாயகி, தனி கோவிலில் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறாள். நின்ற கோலத்தில் இருக்கும் அம்பாள், இங்கே விஷ்ணு சொரூபிணி. நான்கு திருக்கைகள் கொண்ட அம்பிகை தனது மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், வலக் கீழ்க்கரம் அபய ஹஸ்தம் காட்டியும் இருக்கின்றாள். இடக் கீழ்க்கரம் தொடையைத் தொட்டு ஊன்றியபடி, மஹாவிஷ்ணு ஊன்றியிருப்பாரே, அதேபோல வைத்தபடி தரிசனம் காட்டுகிறாள். திருமாலின் அம்சமாக, அம்பிகை தனது கோலத்தை இங்கே நின்று காட்சி தருகிறாள். அதனால், திருவையாறு எல்லைக்கு உட்பட்ட இடங்களில் திருமாலுக்குக் கோவில்கள் இல்லை.
அம்பாள், விஷ்ணு சொரூபம் என்பதால், இக்கோவிலில் இன்று அளவும் ஒரு வித்தியாசமான சம்பிரதாயத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். வெள்ளிக்கிழமை இரவுகளில், மகாலட்சுமி வந்து தர்மசம்வர்த்தனி சன்னதியில் நிற்க, தீபாராதனை நடைபெறும். அதாவது விஷ்ணுவைச் சந்திக்க,மகாலட்சுமி வந்திருக்கிறார் என்று ஐதீகம்.
அனைத்து நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் விதமாக இங்கே அஷ்டமி திதியில் அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.
இத்தலத்தில் பெண்கள் தர்மம் செய்தால் அது இரட்டிப்பு பலன் தரும் என்பது நம்பிக்கை. ஒரு குடும்பத்தில் பெண்கள் செய்யும், தர்மமும், அறச்செயல்களுமே அக்குடும்பத்தைப் பல விதங்களில் கவசமாக நின்று காக்கிறது. எனவே அதன் அவசியத்தை பெண்களுக்கு உணர்த்தவே அம்பிகை இங்கு தர்ம சம்வர்த்தினியாகக் காட்சி அளிக்கிறாள்.
மஹாளய அமாவாசை
மஹாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பு
அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மஹாளய என்றால் 'கூட்டாக வருதல்' என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. பட்சம் என்றால், 15 நாட்கள் என்பது பொருள். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மஹாளய பட்சம் என்று கூறுகிறோம்.
மஹாளய பட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. மஹாளய பட்சத்தில் அனைத்து நாட்களுமே தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம். இயலாதவர்கள் மஹாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும், நம்பிக்கையுடன் தர்ப்பணம் செய்வது நல்ல பலனைத் தரும். மஹாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் பல்வேறு பலன்கள் நம்மைச் சேர்கின்றன. 1ம் நாள் - பிரதமை - செல்வம் சேரும் 2ம் நாள் - துவிதியை - பெயர் சொல்லும் குழந்தைகளைப் பெறலாம். 3ம் நாள் - திரிதியை - நினைத்த காரியங்கள் நிறைவேறும் 4ம் நாள் - சதுர்த்தி - பகையிலிருந்து எளிதில் விடுபடலாம். 5ம் நாள் - பஞ்சமி - அசையா சொத்துக்கள் மற்றும் செல்வம் பெருகும். 6ம் நாள் - சஷ்டி - பேரும், புகழும் தேடி வரும். 7ம்நாள் - சப்தமி - தகுதியான மற்றும் சிறந்த பதவிகள் கிடைக்கும். 8ம் நாள் - அஷ்டமி -அறிவு கூர்மை பெறும். 9ம் நாள் நவமி - நல்ல வாழ்க்கைத்துணை மற்றும் நல்ல குடும்ப சூழல் அமையும். 10ம் நாள் - தசமி - நீண்ட நாள் ஆசை உடனடியாக நிறைவேறும். 11ம் நாள் - ஏகாதசி - கல்வி, விளையாட்டு, கலைகளில் அசுர வளர்ச்சி கிடைக்கும். 12ம் நாள் - துவாதசி - ஆபரணங்கள் சேரும். 13ம் நாள் - திரயோதசி - விவசாயம் மற்றும் தொழில் செழிக்கும். தீர்க்காயுள் கிடைக்கும். 14ம் நாள் - சதுர்த்தசி - பாவம் கழியும். வாரிசுகளுக்கும் நன்மையே நடக்கும். 15ம் நாள் - மஹாளய அமாவாசை - அத்தனை பலன்களும் நமக்குக் கிடைக்க, நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும்.
தர்ப்பணம் கொடுக்கும் போது குளக்கரை, நதிக்கரை அல்லது கடற்கரை என ஏதாவது ஒரு நீர்நிலைக்கு அருகில் வைத்தே தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்பது நியதி. காசி, ராமேஸ்வரம், கயா, திருச்சி அம்மா மண்டபம், கன்னியாகுமரி , விளமல், தீர்த்ததாண்டதானம், திருச்செந்தூர், திலதர்ப்பணபுரி, திருப்புல்லாணி, திருவள்ளூர் முதலான தலங்கள் தர்ப்பணம் கொடுக்க சிறந்த தலங்கள் ஆகும்.
சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது. மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும். மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம். நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்களில் இருந்தெல்லாம் விடுவித்து, அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை.
இவ்வாறான சிறப்புக்களால்தான், தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
காஞ்சிபுரம் பச்சைவண்ணப் பெருமாள் கோவில்
மரகதத் திருமேனியுடன் பச்சை நிறத்தில் காட்சி தரும் பெருமாள்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது பச்சைவண்ணப் பெருமாள் கோவில். தாயார் திருநாமம் மரகதவல்லி. கருவறையில் மூலவர் பச்சைவண்ணப் பெருமாள் மரகதத் திருமேனியுடன் பச்சை நிறத்தில் நின்ற கோலத்தில், தாயார்கள் உடனில்லாமல் தனித்து காட்சி அளிக்கிறார். பெருமாள் பச்சை நிறவண்ணத்தில் இப்படி காட்சி தருவதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்ச்சி உள்ளது.
சப்தரிஷிகளில் ஒருவரான மரீச்சி என்னும் மகரிஷி, மகாவிஷ்ணுவின் பரமபக்தர். ஒருசமயம் அவருக்கு மகாவிஷ்ணுவின் அவதாரத்தின் மீது சந்தேகம் வந்தது. அனைத்திலும் உயர்ந்தவராக இருக்கும் விஷ்ணு எதற்காக மனிதனாக ராம அவதாரம் எடுக்க வேண்டும்? அப்படியே எடுத்திருந்தாலும் தன் மனைவியை ராவணன் கவர்ந்து செல்ல விட்டிருப்பாரா? என பல வகையிலும் தனக்குள் கேள்விகள் கேட்டுக் கொண்டார். பதில் தெரியாத நிலையில் மகாவிஷ்ணுவிடமே கேட்க எண்ணி அவரை வணங்கி இத்தலத்தில் தவம் செய்தார். மகாவிஷ்ணுவும் காட்சி தந்தார். அவரிடம், "நீங்கள்தான் உண்மையில் ராமாவதாரம் எடுத்தீர்களா? எல்லாம் தெரிந்திருக்கும் நீங்கள் எப்படி சீதையை ராவணன் கடத்திச்செல்ல விட்டீர்கள்? அப்படியே இருந்தாலும் சீதையை மீட்க இலங்கைக்கு செல்ல வேண்டுமென உங்களுக்கு தெரியாதா? அதை ஆஞ்சநேயரின் உதவியுடன் தான் கண்டுபிடிக்க வேண்டுமா?" என தனது சந்தேகங்களை மகரிஷி கேட்டார். அவரிடம், "நான்தான் ராமனாக அவதாரம் எடுத்தேன். இந்த அவதாரம், என் மீது அன்பு கொண்டவர்களுக்கு அருள்புரிவதற்காகவே எடுக்கப்பட்டது. எனக்கு சேவை செய்ய விருப்பம் கொண்ட சிவனே, ஆஞ்சநேயராக அவதரித்தார். எனது தரிசனம் பெற விரும்பிய அனைவருக்கும் இந்த அவதாரத்தில் காட்சி கொடுத்தேன். பிள்ளைகள் தங்கள் தந்தையின் சொல்லை மதித்து கேட்க வேண்டும், சகோதரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், மருமகள் தனது புகுந்த வீட்டில் உள்ளவர்களுக்கு மதிப்பு கொடுத்து அனுசரணையாக நடக்க வேண்டும், கணவனது சொல்லை எந்த சூழ்நிலையிலும் மீறக்கூடாது, மைத்துனர்கள் அண்ணியிடம் எந்த முறையில் பழக வேண்டும், ஆணும், பெண்ணும் எப்படி இருக்க வேண்டும், என சராசரி குடும்ப வாழ்க்கையின் நன்னடத்தைகளை உணர்த்துவதற்காகவும் இந்த அவதாரம் அமைந்தது" என்று சொல்லி பச்சைநிற மேனியனாக ராமரைப் போலவே காட்சி தந்தார் மகாவிஷ்ணு. மகிழ்ந்த மகரிஷி குழப்பம் நீங்கி தெளிவடைந்தார். தனக்கு அருள்புரிந்தது போல மக்களுக்கும் அருள்புரிய வேண்டினார். மகாவிஷ்ணுவும் பச்சைநிறப் பெருமாளாகவே இத்தலத்தில் தங்கினார்.
இக்கோவிலின் எதிரில் திவ்ய தேசமான பவளவண்ணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த இரு கோவில்களையும் தரிசித்தால் புண்ணியம் என்பது சான்றோர்களின் வாக்கு.
புதன் தோஷம் நீங்கும் தலம்
புதன் கிரகத்திற்குரிய நிறம் பச்சை. புதன் கிரகத்தின் அதிதேவதை மகாவிஷ்ணு. எனவே பச்சை நிறத்தில் இருக்கும் இந்த பச்சை வண்ணப் பெருமாளுக்கு, பச்சைநிற வஸ்திரம் சாத்தி, துளசி அர்ச்சனை செய்து வழிபட்டால் புதன் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் கோவில்
நந்தியம்பெருமான் இறைவனின் நேர் எதிரில் இல்லாமல் சற்று விலகி இருக்கும் தேவாரத் தலம்
தஞ்சாவூரில் இருந்து திருக்கண்டியூர் வழியாக 13 கி.மீ. தூரத்திலுள்ள தேவாரத் தலம் திருப்பூந்துருத்தி. இறைவன் திருநாமம் புஷ்பவனநாதர். இறைவி சௌந்தர்யநாயகி. இரண்டு ஆறுகளுக்கு நடுவே அமைந்துள்ள ஊர் ஆனது துருத்தி என அழைக்கப்படுகிறது. இத்தலமானது காவிரிக்கும், குருமுருட்டிக்கும் இடையில் அமைந்துள்ளதால் திருப்பூந்துருத்தி எனப்பெயர் பெற்றது.
அப்பர் பெருமான் தனது வாழ்நாள் முழுவதும், பல சிவாலயங்களுக்குச் சென்று, புதர் மண்டிக் கிடந்த பகுதிகளை சுத்தம் செய்து, கோவில்களைப் பேணிப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டார். அவர் உழவாரத் தொண்டு செய்த தலங்களில் இதுவும் ஒன்று. திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவனை தரிசிக்க வந்தபோது, இக்கோவில் அப்பர் உழவாரத் தொண்டு செய்த தலம் என்பதால், இத்தலத்தை காலால் மிதிக்க அஞ்சினார். திருஞானசம்பந்தருக்கு தனது தரிசனத்தை தர விரும்பிய இறைவன், தன் எதிரில் இருந்த நந்தியை சற்றே விலகி இருக்கச் செய்தார். அதனால்தான் இத்தலத்தில் நந்தியம்பெருமான், மற்ற தலங்களை போல் இறைவனின் நேர் எதிரில் இல்லாமல் சற்று விலகி இருக்கிறார்.
நகர சூரக்குடி தேசிகநாதர் கோவில்
தலையில் கிரீடம் அணிந்து வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தியின் முதுகுப் பகுதியும், ஆல மரத்தின் தண்டுப் பகுதியும் தனியே தோன்றும் வண்ணம் அமைந்த சிற்ப வடிவமைப்பு
காரைக்குடியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நகர சூரக்குடி. இத்தலத்து இறைவன் திருநாமம் தேசிகநாதர். இறைவியின் திருநாமம் ஆவுடை நாயகி.
சூரியன் வழிபட்ட தலம் என்பதாலும், சூரியச்செடிகள் நிறைந்த வனமாக இப்பகுதி இருந்ததாலும் முன்பு 'சூரியக்குடி' என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் 'சூரியக்குடி' என்ற பெயர் மருவி 'சூரக்குடி' என்று அழைக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் 'தேசிகநாதபுரம்' என்றும் இந்த ஊர் அழைக்கப்பட்டுள்ளது.
கோவில் கருவறையின் சுற்றுச்சுவரில் எழுந்தருளி இருக்கும் யோக தட்சிணாமூர்த்தி தலையில் கிரீடம் அணிந்து சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். மேலும் தட்சிணாமூர்த்தியின் முதுகுப் பகுதியும், ஆல மரத்தின் தண்டுப் பகுதியும் தனித்தனியே தோன்றும் வண்ணம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது மற்றும் ஒரு சிறப்பாகும். இது நம் முன்னோர்களின் சிற்பக்கலை திறனையும், அதில் அவர்கள் அடைந்திருந்த உன்னத நிலையையும் எடுத்துக் காட்டுகின்றது.
திப்பிரமலை பாலகிருஷ்ணன் கோவில்மலை
ஸ்ரீ கிருஷ்ணன் தன் தாயார் யசோதையோடு இருக்கும் அபூர்வ காட்சி
ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கிருஷ்ணர் சிலை
கன்னியாகுமரியில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில், கொளச்சலுக்கு அடுத்து அமைந்துள்ளது திப்பிரமலை பாலகிருஷ்ணன் கோவில். 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில், சேர நாட்டு கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ளது.
கோவில் கருவறையில் 13 அடி உயரத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அருள்பாலிக்கிறார். வலது பக்கத்தில் தாய் யசோதா மகனின் காலடியில் நிற்கிறார். தாய் யசோதாவின் வலது கையில் வெண்ணையும் இடது கையில் கரண்டியும் உள்ளது. இப்படி ஸ்ரீ கிருஷ்ணன் கருவறையில் தன் தாயார் யசோதையோடு காட்சி அளிப்பது நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அபூர்வ காட்சியாகும். ஸ்ரீ கிருஷ்ணர் நான்கு திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார். மேலே உயர்த்திய கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியும், கீழ்நோக்கி உள்ள கைகளில் வலது கையில் வெண்ணையும் இடது கையில் கதையும் ஏந்தி அருள்புரிகிறார்.
இத்தலம் தன் தாயின் வயிற்றில் இருந்தபடியே தன் தந்தைக்கு, ஸ்ரீ கிருஷ்ணன் விஸ்வரூப காட்சி அளித்த தலமாக கருதப்படுகிறது. எனவே இத்தலம் கருமாணித்தாழ்வார் ஸ்ரீகிருஷ்ணன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.
இத்தலத்து கிருஷ்ணரின் சிலையானது, ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கிருஷ்ணர் சிலை ஆகவும், தென்னிந்தியாவின் முதல் பெரிய கிருஷ்ணர் சிலை ஆகவும் விளங்குகின்றது. இத்தலத்து கிருஷ்ணர் தானாக வளர்வதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. மேலும், கிருஷ்ணரின் வளர்ச்சிக்கு ஏற்ப இத்தலத்தின் கூரை மூன்று முறை இடித்து உயர்த்தப்பட்டுள்ளது. தானாக வளர்ந்து கொண்டிருந்த இந்த சிலையை பூஜித்த முனிவர் ஒருவர் பின், அதனைக் கட்டுப்படுத்தியதாகவும் உள்ளூர் மக்களிடையே கருத்துள்ளது.
குழந்தை வரம் இல்லாதோர் இக்கோவில் கிருஷ்ணரை வழிபட்டு பிரார்த்தனை செய்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
உத்திரமேரூர் பாலசுப்பிரமணியன் கோவில்
தலையில் ஜடாமுடியுடன் இருக்கும் முருகனின் அபூர்வ தோற்றம்
முருகனுக்கு மயிலுக்கு பதிலாக யானை வாகனமாக இருக்கும் தலம்
காஞ்சிபுரத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது உத்திரமேரூர் பாலசுப்பிரமணியன் கோவில். இக்கோவில் 1400 வருடங்களுக்கு மேல் பழமையானது. இத்தலம் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்றது.
இங்கு முருகப்பெருமான் பாலசுப்ரமணிய சுவாமி என்ற பெயருடன் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறார். ஆறடி உயரம் கொண்ட திருமேனி உடைய அவர் தனது தலையில்,வழக்கமான கிரீடத்திற்குப் பதிலாக, ஜடாமுடியுடன் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இப்பெருமானின் திருமார்பில் ருத்ராட்சமணி மாலைகளும், திருக்கரங்களில் நாகாபரணமும், திருச்செவிகளில் குண்டலங்களும் இருக்கின்றன.
கருவறையில் சிவபெருமானும் திரிபுரசுந்தரியும் எழுந்தருளி இருக்கிறார்கள். முருகப்பெருமான் சூரபத்மனை அழிப்பதற்காக வேல் வேண்டி இங்கு சிவபெருமானையும் பார்வதி தேவியையும் நோக்கி தவம் இருந்தார். அதனால் அவரது வலது கீழ் திருக்கரம் பூஜை செய்யும் பாவனையில் இருக்கின்றது.
மற்ற முருகன் கோவில்கள் போல் வள்ளியும், தெய்வானையும் அவருக்கு அருகில் இல்லை. மாறாக இந்தக் கோவிலில், வள்ளியும் தெய்வ யானையும் இணைந்து கஜவள்ளியாக தனிச்சந்நதியில் இருக்கிறார்கள்.
இக்கோவிலில் முருகனுக்கு வாகனமாக மயிலுக்கு பதிலாக யானை இருக்கிறது. முருகப்பெருமானுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்தப்பொழுது, இந்திரன் யானையை முருகனுக்கு பரிசாக அளித்தான். முருகப்பெருமான் திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்தப் பிறகே அவருக்கு மயில் வாகனமாகவும், சேவல் கொடியும் வந்தது. எனவே, இக்கோவில் அதற்கு முன்பே உருவானது.
மீமிசல் கல்யாண ராமசாமி கோவில்
கருப்பு உளுந்தை பிரசாதமாகத் தந்து குழந்தை பாக்கியம் அருளும் ராமர் கோவில்
புதுக்கோட்டை-அறந்தாங்கி-ஆவுடையார் கோயில் சாலையில் புதுக்கோட்டையிலிருந்து 68 கி.மீ. தொலைவில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது மீமிசல் கல்யாண ராமசாமி கோவில். கர்ப்பக் கிரகத்தில் ராமர், சீதை, லட்சுமணன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். அருகில் ஆஞ்சநேயரும் எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பாகும்.
இலங்கையில் இருந்த சீதையை மீட்க வானரப்படை சகிதமாக ராம, லட்சுமணன் சென்றனர். அவர்கள் மீமிசல் பகுதிக்கு வந்தனர். அப்பகுதி மக்கள் ராமருக்கு உதவி செய்தனர். அதற்கு கைமாறாக சீதையை மீட்டு வரும் போது, மீமிசலில் திருமணக் கோலத்தில் ராமர், சீதை ஆகியோர் லட்சுமணனுடன் இங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இங்கு வரும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு, தானியமான கருப்பு உளுந்தை, முகுந்தமாலா என்று கூறப்படும் மந்திரத்தை உச்சரித்து 90 நாட்களுக்கு தேவையான அளவு பிரசாதமாகத் தருகின்றனர். இதனை 90 நாட்கள் சாப்பிடுவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அத்துடன் ராமர் சன்னதியில் தவழ்ந்த நிலையில் இருக்கும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட சந்தானகிருஷ்ணன் விக்ரகத்தை, குழந்தை பாக்கியம் கோரி வரும் பக்தர்கள் பூஜை செய்கின்றனர்.
சென்னை வில்லிவாக்கம் சௌமிய தாமோதரப் பெருமாள் கோவில்
மூலவர், உற்சவர் ஆகிய இருவரின் இடுப்பிலும், கயிறு அழுந்திய தடம் பதிந்திருக்கும் கிருஷ்ணன் கோவில்
சென்னை வில்லிவாக்கத்தில் அமைந்துள்ளது சௌமிய தாமோதரப் பெருமாள் கோவில். தாயாரின் திருநாமம் அமிர்தவல்லி. பல நூற்றாண்டுகள் பழமையானது இக்கோவில். மகாவிஷ்ணுவின் 12 சிறப்பு பெயர்களில் (துவாதச நாமம் ) ஒன்று தாமோதரன். அந்தப் பெயரில், பெருமாள் கோவில் அமைந்த ஒரு சில தலங்களில் இத்தலமும் ஒன்று.பக்தர்கள் இத்தலத்தில் பெருமாளை குழந்தை கண்ணனாகவே பார்க்கின்றனர்.
கோகுலத்தில் கண்ணன் தன் பால்ய வயதில் பல குறும்புகளை செய்தார் . வளர்ப்புத் தாயான யசோதை தன் மகன் கிருஷ்ணனை வெளியில் செல்லாதபடி. அவன் இடுப்பில் கயிற்றால் கட்டி அதை உரலில் கட்டி வைத்தாள். ஆனாலும் கிருஷ்ணன் உரலையும் சேர்த்து இழுத்துச் சென்று, இரண்டு அசுரர்களுக்கு சாப விமோசனம் கொடுத்தான். இவ்வாறு கயிற்றால் கட்டும்போது, கயிறு அழுத்தியதால் கிருஷ்ணனின் வயிற்றில் தழும்பு ஏற்பட்டது. எனவே, கிருஷ்ணன் தாமோதரன் என அழைக்கப்படுகிறான். 'தாமம்' என்றால் கயிறு, 'உதரம்' என்றால் வயிறு என்று பொருள். அழகாக, புன்னகை ததும்பக் காட்சி தருவதால் மூலவர், 'சௌமிய' தாமோதரப் பெருமாள் என அழைக்கப்படுகிறார்.
இத்தலத்தில் மூலவர், உற்சவர் ஆகிய இருவரின் இடுப்பிலும், கயிறு அழுந்திய தடம் இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.
ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோவில்
ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கண்ணன் கோவில்
உற்சவர் கண்ணனுக்கு கொலுசு சார்த்தி வழிபடும் தனிச்சிறப்பு
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருக்கருகாவூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோவில். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மூலவர் வேதநாராயணப் பெருமாள், உற்சவர் காளிங்க நர்த்தன கிருஷ்ணர்.
உற்சவர், காளிங்கன் மீது நர்த்தனமாடும் கோலத்தில் சேவை சாதிக்கிறார். ஐம்பொன்னால் ஆன இந்த உற்சவமூர்த்தி, கோவிலின் பின்புறமுள்ள காளிங்கன் மடு என்ற குளத்தில் கண்டெடுக்கப்பட்டு, இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக ஐதீகம்.
ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வணங்கி வழிபட வேண்டிய கோவில் இது. ரோகிணி நட்சத்திர நாளில் இந்தத் தலத்துக்கு வந்து பிரார்த்தித்தால், சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம். தங்கள் குழந்தைகள் இசைத் துறையில் வல்லுநராக வேண்டும், பாடுவதில், ஆடுவதில், இசைக் கருவிகளை இசைப்பதில் பேரும் புகழும் பெற வேண்டும் என விரும்பும் பக்தர்கள், தங்கள் குழந்தைகளுடன் வந்து காளிங்க நர்த்தனரை பிரார்த்தித்துச் செல்கிறார்கள். பக்தர்கள் உற்சவரின் திருப்பாதத்துக்கு கொலுசு சார்த்தி வழிபடுவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். சர்ப்பத்தின் மேல் நின்றபடி ஆடினாலும், சர்ப்பத்துக்கும் கண்ணனுக்கும் மெல்லிய, நூலிழை அளவுக்கு இடைவெளியுடன் திகழ்கிற விக்கிரகத் திருமேனி, நம்மை வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்லும்.
ஆவணியின் ரோகிணி நட்சத்திர நன்னாளில், ஸ்ரீகிருஷ்ணரின் ஜெயந்தித் திருநாள் அன்று, சுமார் 800 லிட்டருக்கும் மேல் ஸ்ரீகிருஷ்ணருக்குப் பாலபிஷேகம் நடைபெறுவதைக் காணக் கண் கோடி வேண்டும்.
காசிபாளையம் ஸ்ரீ முத்துவேலாயுத சுவாமி கோவில்
மூன்று முகம் கொண்ட அபூர்வ முருகன்
முருகனின் முன்பு மயிலுக்கு பதிலாக சக்திவேல் நிறுவப்பட்டிருக்கும் தலம்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திலிருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது காசிபாளையம் ஸ்ரீ முத்துவேலாயுத சுவாமி கோவில். குன்றின் மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகளுடன், சாலை வசதியும் உள்ளது. 700 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
இக்கோவில் கருவறையில், மூன்று முகம் ஆறு கரங்களுடன் கூடிய முருகப்பெருமான், 'ஸ்ரீ முத்து வேலாயுதசுவாமி' என்கிற திருநாமத்துடன் சுமார் 3 அடி உயர கருங்கல் திருமேனியாக, வள்ளி தெய்வானை சமேதராக எழுந்தருளி இருக்கிறார். இப்படி மூன்று முகம் கொண்ட முருகனை, தமிழ்நாட்டில் வேறு எந்த கோவிலும் நாம் தரிசிக்க முடியாது. இந்த மூன்று முகங்கள் முருகனின் மூன்று சக்திகளான இச்சாசக்தி (விருப்பம்), கிரியாசக்தி (செயல்), மற்றும் ஞானசக்தி (அறிவு) ஆகியவற்றைக் குறிக்கின்றன.
ஸ்ரீ முத்து வேலாயுதசுவாமியின் வலதுபுறம் உள்ள மூன்று கரங்களில் வஜ்ராயுதம், அம்பு, சின்முத்திரையும் இடதுபுறம் உள்ள மூன்று கரங்களில் மான், வில், அபயக்கரத்துடன் பாம்பும், பின்புறம் மயிலும் காணப்படுகிறது. பொதுவாக முருகன் கோவில்களில் கருவறைக்கு முன்பு மயில் அமைந்திருக்கும். ஆனால் இக்கோவிலில், முருகன் முன்பு சக்திவேல் நிறுவப்பட்டுள்ளது. இவ்வேல் சூரபத்மனை வதம் செய்ய அன்னை பார்வதி தேவியால் வழங்கப்பட்டது. இவ்வேலின் ஒருபுறம் சரவணபவ சக்கரமும், மறுபுறம் 'ஓம்' என்ற பிரணவ எழுத்துடன், சூலாயுதமும் வஜ்ஜராயுதமும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த சக்தி வேலை வணங்கினால், செவ்வாய் தோஷம் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பரமந்தூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில்
ஒரு பாதி முகம் கோபமாகவும், மறுபாதி சிரித்த முகமாகவும் காட்சி தரும் அபூர்வ ஆஞ்சநேயர்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார் கோவில் செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பரமந்தூர்
ஆதிகேசவ பெருமாள் கோவில். ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் வேத வியாசரின் தந்தை பராசர மகரிஷியால் வழிபட்டதால், இத்தலம் 'பராசர க்ஷேத்திரம்' என்றும் அழைக்கப்பட்டது. 7000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
இக்கோவில் தூணில் எழுந்தருளி இருக்கும் ஆஞ்சநேயர் மிகவும் விசேடமானவர். இவர் தெற்கு நோக்கி அருள்வதும், வாலின் நுனி தலைக்கு மேல் இருப்பதும் விசேஷ அம்சங்கள் . வயதானவர் போன்ற தோற்றம் காட்டும் இந்த ஆஞ்சநேயர், கிழக்குப்பக்கம் இருந்து தரிசித்தால் கோபமாகவும், மேற்குப்பக்கம் இருந்து தரிசித்தால் சிரித்த முகத்துடனும் காட்சியளிப்பார். இப்படி இருவேறு முக பாவங்களை கொண்ட ஆஞ்சநேயரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.