காஞ்சிபுரம் பச்சைவண்ணப் பெருமாள் கோவில்
மரகதத் திருமேனியுடன் பச்சை நிறத்தில் காட்சி தரும் பெருமாள்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது பச்சைவண்ணப் பெருமாள் கோவில். தாயார் திருநாமம் மரகதவல்லி. கருவறையில் மூலவர் பச்சைவண்ணப் பெருமாள் மரகதத் திருமேனியுடன் பச்சை நிறத்தில் நின்ற கோலத்தில், தாயார்கள் உடனில்லாமல் தனித்து காட்சி அளிக்கிறார். பெருமாள் பச்சை நிறவண்ணத்தில் இப்படி காட்சி தருவதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்ச்சி உள்ளது.
சப்தரிஷிகளில் ஒருவரான மரீச்சி என்னும் மகரிஷி, மகாவிஷ்ணுவின் பரமபக்தர். ஒருசமயம் அவருக்கு மகாவிஷ்ணுவின் அவதாரத்தின் மீது சந்தேகம் வந்தது. அனைத்திலும் உயர்ந்தவராக இருக்கும் விஷ்ணு எதற்காக மனிதனாக ராம அவதாரம் எடுக்க வேண்டும்? அப்படியே எடுத்திருந்தாலும் தன் மனைவியை ராவணன் கவர்ந்து செல்ல விட்டிருப்பாரா? என பல வகையிலும் தனக்குள் கேள்விகள் கேட்டுக் கொண்டார். பதில் தெரியாத நிலையில் மகாவிஷ்ணுவிடமே கேட்க எண்ணி அவரை வணங்கி இத்தலத்தில் தவம் செய்தார். மகாவிஷ்ணுவும் காட்சி தந்தார். அவரிடம், "நீங்கள்தான் உண்மையில் ராமாவதாரம் எடுத்தீர்களா? எல்லாம் தெரிந்திருக்கும் நீங்கள் எப்படி சீதையை ராவணன் கடத்திச்செல்ல விட்டீர்கள்? அப்படியே இருந்தாலும் சீதையை மீட்க இலங்கைக்கு செல்ல வேண்டுமென உங்களுக்கு தெரியாதா? அதை ஆஞ்சநேயரின் உதவியுடன் தான் கண்டுபிடிக்க வேண்டுமா?" என தனது சந்தேகங்களை மகரிஷி கேட்டார். அவரிடம், "நான்தான் ராமனாக அவதாரம் எடுத்தேன். இந்த அவதாரம், என் மீது அன்பு கொண்டவர்களுக்கு அருள்புரிவதற்காகவே எடுக்கப்பட்டது. எனக்கு சேவை செய்ய விருப்பம் கொண்ட சிவனே, ஆஞ்சநேயராக அவதரித்தார். எனது தரிசனம் பெற விரும்பிய அனைவருக்கும் இந்த அவதாரத்தில் காட்சி கொடுத்தேன். பிள்ளைகள் தங்கள் தந்தையின் சொல்லை மதித்து கேட்க வேண்டும், சகோதரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், மருமகள் தனது புகுந்த வீட்டில் உள்ளவர்களுக்கு மதிப்பு கொடுத்து அனுசரணையாக நடக்க வேண்டும், கணவனது சொல்லை எந்த சூழ்நிலையிலும் மீறக்கூடாது, மைத்துனர்கள் அண்ணியிடம் எந்த முறையில் பழக வேண்டும், ஆணும், பெண்ணும் எப்படி இருக்க வேண்டும், என சராசரி குடும்ப வாழ்க்கையின் நன்னடத்தைகளை உணர்த்துவதற்காகவும் இந்த அவதாரம் அமைந்தது" என்று சொல்லி பச்சைநிற மேனியனாக ராமரைப் போலவே காட்சி தந்தார் மகாவிஷ்ணு. மகிழ்ந்த மகரிஷி குழப்பம் நீங்கி தெளிவடைந்தார். தனக்கு அருள்புரிந்தது போல மக்களுக்கும் அருள்புரிய வேண்டினார். மகாவிஷ்ணுவும் பச்சைநிறப் பெருமாளாகவே இத்தலத்தில் தங்கினார்.
இக்கோவிலின் எதிரில் திவ்ய தேசமான பவளவண்ணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த இரு கோவில்களையும் தரிசித்தால் புண்ணியம் என்பது சான்றோர்களின் வாக்கு.
புதன் தோஷம் நீங்கும் தலம்
புதன் கிரகத்திற்குரிய நிறம் பச்சை. புதன் கிரகத்தின் அதிதேவதை மகாவிஷ்ணு. எனவே பச்சை நிறத்தில் இருக்கும் இந்த பச்சை வண்ணப் பெருமாளுக்கு, பச்சைநிற வஸ்திரம் சாத்தி, துளசி அர்ச்சனை செய்து வழிபட்டால் புதன் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.