திப்பிரமலை பாலகிருஷ்ணன் கோவில்மலை
ஸ்ரீ கிருஷ்ணன் தன் தாயார் யசோதையோடு இருக்கும் அபூர்வ காட்சி
ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கிருஷ்ணர் சிலை
கன்னியாகுமரியில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில், கொளச்சலுக்கு அடுத்து அமைந்துள்ளது திப்பிரமலை பாலகிருஷ்ணன் கோவில். 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில், சேர நாட்டு கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ளது.
கோவில் கருவறையில் 13 அடி உயரத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அருள்பாலிக்கிறார். வலது பக்கத்தில் தாய் யசோதா மகனின் காலடியில் நிற்கிறார். தாய் யசோதாவின் வலது கையில் வெண்ணையும் இடது கையில் கரண்டியும் உள்ளது. இப்படி ஸ்ரீ கிருஷ்ணன் கருவறையில் தன் தாயார் யசோதையோடு காட்சி அளிப்பது நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அபூர்வ காட்சியாகும். ஸ்ரீ கிருஷ்ணர் நான்கு திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார். மேலே உயர்த்திய கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியும், கீழ்நோக்கி உள்ள கைகளில் வலது கையில் வெண்ணையும் இடது கையில் கதையும் ஏந்தி அருள்புரிகிறார்.
இத்தலம் தன் தாயின் வயிற்றில் இருந்தபடியே தன் தந்தைக்கு, ஸ்ரீ கிருஷ்ணன் விஸ்வரூப காட்சி அளித்த தலமாக கருதப்படுகிறது. எனவே இத்தலம் கருமாணித்தாழ்வார் ஸ்ரீகிருஷ்ணன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.
இத்தலத்து கிருஷ்ணரின் சிலையானது, ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கிருஷ்ணர் சிலை ஆகவும், தென்னிந்தியாவின் முதல் பெரிய கிருஷ்ணர் சிலை ஆகவும் விளங்குகின்றது. இத்தலத்து கிருஷ்ணர் தானாக வளர்வதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. மேலும், கிருஷ்ணரின் வளர்ச்சிக்கு ஏற்ப இத்தலத்தின் கூரை மூன்று முறை இடித்து உயர்த்தப்பட்டுள்ளது. தானாக வளர்ந்து கொண்டிருந்த இந்த சிலையை பூஜித்த முனிவர் ஒருவர் பின், அதனைக் கட்டுப்படுத்தியதாகவும் உள்ளூர் மக்களிடையே கருத்துள்ளது.
குழந்தை வரம் இல்லாதோர் இக்கோவில் கிருஷ்ணரை வழிபட்டு பிரார்த்தனை செய்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.