புஞ்சை (திருநனிபள்ளி) நற்றுணையப்பர் கோவில்
நாகத்துடனும், மானுடனும் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வ தோற்றம்
மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் புஞ்சை(திருநனிபள்ளி) நற்றுணையப்பர் கோவில்.இத்தலத்தில் மலையான் மடந்தை மற்றும் பர்வத புத்திரி என்ற இரண்டு அம்பிகைகள் அருள் பாலிக்கின்றனர். மூலத்தானத்திற்கே யானை வந்து வழிபட்ட தலம் என்பதால், இத்தலத்தின் கருவறை மிகவும் பெரியதாக அமைந்துள்ளது. இவ்வளவு பெரிய கருவறை இந்தியாவில் உள்ள எந்த சிவத்தலத்திலும் காண முடியாது.
கோவிலின் சுற்று பகுதியில் மிக பிரம்மாண்டமான தோற்றத்துடன் யோக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார்.தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இருக்க, அவரது வலது புறம் இரண்டு சீடர்களும், இடது புறம் இரண்டு சீடர்களும் காட்சி அளிக்கிறார்கள்.அவர் எழுந்தருளி இருக்கும் பீடத்தின் கீழ் நாகமும், மானும் எழுந்தருளி இருப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.இப்படி நாகத்துடனும், மானுடனும் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
சென்னை தண்டையார்பேட்டை வரதராஜ பெருமாள் கோவில்
குழந்தையை பெருமாளுக்கு தத்து கொடுக்கும் நடைமுறை
சென்னையின் வடக்கில் அமைந்துள்ள தண்டையார்பேட்டையில் அமைந்துள்ளது வரதராஜ பெருமாள் கோவில். 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில். மூலவர் பெருமாள் வடக்கு நோக்கி இருப்பது இந்தத் தலத்தின் தனிச்சிறப்பாகும். இப்பகுதியிலுள்ள பல ஆயிரம் மீனவ மக்களின் குலதெய்வமாக இப்பெருமாள் விளங்குகின்றார்.
இக்கோவிலின் முக்கிய சிறப்பு, பெருமாளுக்கு குழந்தையை தத்து கொடுப்பது. இதை ஒரு பரிகார நிகழ்ச்சியாக பக்தர்கள் கடைபிடிக்கின்றனர். ஜாதக கோளாறு, திருமண தடை, தோஷம் உள்ளோர், தம் குழந்தையை பெருமாளுக்கு தத்து கொடுப்பர்.பின் பெருமாளிடம் இருந்து குழந்தையை தத்தெடுக்கின்றனர். மலேஷியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வந்தவர்களும், குழந்தைகளை பெருமாளுக்கு தத்து கொடுக்கின்றனர். பெருமாளுக்கு குழந்தைகளை தத்து கொடுத்தால், வாழ்க்கையில் அதிர்ஷ்டம் சேர்ந்து, எல்லா வித சொத்துக்களும் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பிரார்த்தனை
ஜாதக கோளாறு, திருமண தடை, தோஷம் உள்ளோர், குழந்தைப்பேறுக்காக இங்கு பிரார்த்திக்கின்றனர்.
கலவை அங்காளபரமேஸ்வரி கோவில்
பக்தர்கள் நேர்த்திக்கடனாக தங்கள் புகைப்படங்களை காணிக்கையாக செலுத்தும் வினோத நடைமுறை
மேல்மலையனூரை அடுத்து மயானக் கொள்ளைக்குப் புகழ்பெற்ற தலம்
இராணிப்பேட்டையிலிருந்து 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கலவை அங்காளபரமேஸ்வரி கோவில். மேல்மலையனூரை அடுத்து மயானக் கொள்ளைக்குப் புகழ்பெற்ற தலம் இது. அங்காளபரமேஸ்வரி குடிக்கொண்டிருக்கும் கருவறைக்கு முன் சயன கோலத்தில் அம்மன் உருவம் ஒன்று உள்ளது. இக்கோவிலில் பூசாரிகள் கிடையாது. அர்ச்சனை, அபிஷேகம் எதுவும் செய்யப்படுவதில்லை. இக்கோவிலில் சேவை செய்ய பிரார்த்தனை செய்த பக்தர்களே பிரசாதம் தருகிறார்கள். பிரசாதமாக பெருமாள் கோவில்களில் கொடுப்பது மாதிரி துளசி தீர்த்தம் கொடுத்து சடாரி வைக்கிறார்கள்.
இக்கோவிலின் தனிச்சிறப்பு வேறு எந்த கோவிலிலும் காணப்படாத ஒன்றாகும். திருமணப்பேறு, குழந்தைப்பேறு, கல்வி, தொழில் என பல்வேறு கோரிக்கைகளுக்காக வேண்டி செல்லும் பக்தர்கள், தங்கள் குறை நீங்கிய பிறகு, அதற்கு நன்றிக் கடனாக, காணிக்கையாக தட்டில் பழம், பூ மாலைகள் வைத்து அதில் தங்களின் படத்தினை சட்டமிட்டு ஆலயத்தினைச் சுற்றி வந்து ஆலய சுவரில் மாட்டி வைக்கின்றனர். இதுவே பக்தர்கள் அம்மனுக்குச் செலுத்தும் காணிக்கையாகும்.
இப்படி காணிக்கையாக செலுத்தப்பட்ட படங்கள் பல்லாயிரக் கணக்கில், இக்கோவிலில் இருக்கின்றது. கோட் போட்ட அங்கிள், கல்யாண கோலத்தில் தம்பதி, நடைவண்டி ஓட்டும் குழந்தை, சார்ட்சோடு விமானத்தில் எடுத்த செல்பி, பிளாக் அண்ட் வொயிட், லேமினேசன், பாஸ்போர்ட் சைஸ்ன்னு கோவில் வாசலில், சுவரில், கூரையில், ஸ்விட்ச் போர்ட் மேல் என்று இந்த கோவில் முழுக்க போட்டோக்கள் உள்ளன.
பேரம்பாக்கம் சோழீஸ்வரர் கோவில்
நரம்பு சம்பந்தமான நோய்களுக்கான பரிகார தலம்
சென்னையில் இருந்து 60 கி.மீ தொலைவில் (மப்பேடு வழி), திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் அமைந்துள்ளது சோழீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். இக்கோவிலானது முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், 1112ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
இக்கோவிலானது நரம்பு சம்பந்தமான, வலிப்பு முதலிய நோய்களுக்கு பரிகார தலமாக விளங்குகிறது . இவ்வூரில் வாழ்ந்த ஒரு பெரியவர் நரம்பு நோயால் பாதிப்படைந்தார். இந்த நோயை குணப்படுத்த நிறைய செலவு ஆகும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டதால் இவர் இக்கோவில் இறைவன் சோழீஸ்வரரை பிராத்தனை செய்தார் . சோழீஸ்வரர் அவரின் பிராத்தனைக்கு செவிமடுத்து அவரை குணப்படுத்தினார் , அந்த பெரியவர் நோய் குணப்படுத்த வைத்திருந்த பணத்தில் இக்கோவிலுக்கு கொடிக்கம்பத்தை நிறுவினார் . அதிலிருந்து இக்கோவிலுக்கு நரம்பு சம்பந்தமான நோய்களில் பாதித்தவர்கள் வந்து பிராத்தனை செய்து வருகின்றனர். ஒவ்வொரு திங்கள் கிழமையும் எல்லா ஊர்களில் இருந்தும் பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து பிராத்தனை செய்கின்றனர்.
தாமல் தாமோதரப் பெருமாள் கோவில்
வயிற்றில் கயிற்றால் கட்டிய வடுவுடன் காட்சி அளிக்கும் பெருமாள்
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நுழைவு வாயிலில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தாமல். இத்தலத்தில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தாமோதரப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. தாயார் திருநாமம் திருமாலழகி.
கேசவன், நாராயணன், மாதவன் கோவிந்தன் விஷ்ணு மதுசூதனன், திருவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் என 12 திருநாமங்கள் பெருமாளுக்கு விசஷேமானவை. இதில் இத்தலம் தாமோதரப் பெருமாளுக்கு உரியதாக திகழ்கிறது. மூலவர் தாமோதரப் பெருமாள் சங்கு சக்கரம் ஏந்தியபடி நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
ஆயர்பாடியில், நந்தகோபர் யசோதை தம்பதியின் மகனாக, திருமால் கண்ணன் என்னும் பெயரில் வளர்ந்தார். சிறுவனான கண்ணன் ஆயர்பாடியில் பலவித குறும்பு விளையாட்டுகளை நடத்தினார். அதில் வெண்ணெய் திருடுதலும் ஒன்று. இதனால் கோபம் கொண்ட கோபியர்கள், கண்ணனைக் கண்டிக்கும்படி, யசோதையிடம் முறையிட்டனர். கண்ணன் வீட்டை விட்டு வெளியே செல்வதை தடுக்க, யசோதை அவனைக் கயிற்றால் பிணைத்து ஒரு உரலுடன் சேர்த்துக் கட்டி வைத்தாள். அப்போது கண்ணனின் வயிற்றில் கயிறு பதிந்து, அது வடுவாக மாறியது.. அதனால் தாமோதரன் எனப் பெயர் பெற்றான். 'தாம' என்றால் 'கயிறு' அல்லது தாம்பு என்று பொருள். உதரன் என்றால் 'வயிறு'. அதாவது கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன் என்பது பொருள். இந்த தாமோதரப் பெருமாளின் தரிசனம் பெற விரும்பிய மகரிஷிகள் பலர், இங்கிருந்த காட்டில் தவமிருந்தனர். அதன் பயனாக காட்சியளித்த பெருமாள் இத்தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார்.
குழந்தை கண்ணன் வயிற்றில் கட்டிய கயிற்றின் வடுவானது இன்றும் அபிஷேகத்தின் போது மூலவர் விக்கிரகத்தில் காணலாம். மாதம் தோறும் ரோகிணி நட்சத்திரத்தன்று தாமோதர பெருமாளுக்கு ராஜ அலங்கார சேவை நடக்கும்.
நின்ற கோலத்தில் அருள்புரியும் தாமல் ஸ்ரீ தாமோதர பெருமாள், கிடந்த கோலத்தில் காட்சி அருளும் திருப்பாற்கடல் மற்றும் அமர்ந்த கோலத்தில் இருக்கும் திருப்புட்குழி ஆகிய மூன்று வைணவ தலங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. இந்த மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசிப்பது விசேஷமாக கருதப்படுகிறது.
பெருமாளுக்கு வெள்ளிக் கொலுசு காணிக்கை
இத்தலத்தில் பெருமாளிடம் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன், தாமோதரப் பெருமாளுக்கு தங்கள் காணிக்கையாக வெள்ளிக் கொலுசை அணிவிக்கின்றனர்.
குன்றக்குடி சண்முகநாதர் கோவில்
முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட மூவரும் தனித் தனி மயில் வாகனங்களில் அமர்ந்து காட்சி தரும் தனிச்சிறப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது குன்றக்குடி சண்முகநாதர் கோவில் . ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ள இந்த முருகன் கோவிலுக்கு செல்ல 149 படிக்கட்டுகள் உள்ளன. முருகப்பெருமானின் சாபத்தால் மயிலே, மலையாகிப் போனதாகவும், அந்த மலை மீதுதான் முருகப்பெருமான் வீற்றிருப்பதாக தலபுராணம் கூறுகிறது. இந்த மலை மயிலின் வடிவத்தை ஒத்திருப்பதால், மயூரகிரி, மயில்மலை, அரசவரம், கிருஷ்ணநகரம் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இக்கோவில் 1200 ஆண்டுகள் பழமையானது.
கருவறையில் ஆறுமுகமும், பன்னிரண்டு திருக்கரங்களும் கொண்ட முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் சண்முகநாதர் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். செட்டிமுருகன், குன்றையூருடையான், மயூரகிரிநாதன், மயில்கலைக்கந்தன், குன்றைமுருகன், தேனாறுடையான் என்று பலபெயர்கள் மூலவருக்கு உண்டு.
மூலவர் சண்முகநாதர் கிழக்குத் திசையைப் பார்த்தபடி மயிலின் மீது வலது காலை மடித்தும், இடது காலைத் தொங்க விட்டவாறும் அருள்பாலிக்கின்றார். இடப்பக்கம் தெய்வானை, வலப்பக்கம் வள்ளி என இருவரும் தனித்தனி மயில்களில் அமர்ந்துள்ளனர். இப்படி முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட மூவரும் தனித் தனி மயில் வாகனங்களில் அமர்ந்து தரிசனம் தருவது இத்தலத்தின் தனி சிறப்பாகும்.
இக்கோவிலில் குடிகொண்ட முருகனை போற்றி அருணகிரிநாதர் தம் திருப்புகழிலும், பாம்பன் சுவாமிகள் தன் பாடலிலும் சிறப்பித்து பாடியுள்ளார்கள்.
திருச்சி காளிகா பரமேஸ்வரி கோவில்
திருமேனியில் தாலிச் சரடுடன் காட்சிதரும் அம்மன்
திருச்சி நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது காளிகா பரமேஸ்வரி கோவில். இந்த அம்மன் அமர்ந்த நிலையில் தன் நான்கு கரங்களில் டமருகம், பாசம், சூலம், கபாலம் ஆகியவற்றை ஏந்தி காட்சி தருகிறாள். அம்மனின் கழுத்தில் திருமாங்கல்யம் துலங்குவது மிகவும் சிறப்பான அம்சமாகும். விக்கிரகத்தின் அமைப்பிலேயே தாலிச் சரடு இருப்பது வேறு எங்கும் காண இயலாத அற்புத அமைப்பாகும்.
இந்த அம்மனிடம் வேண்டிக்கொள்ளும் பெண்களுக்கு திருமணப்பேறு விரைவில் கிடைக்கிறது. திருமணம் நிச்சயம் ஆனதும் மணமகளின் தாலியை அன்னையின் பாதத்தில் வைத்து, அர்ச்சனை செய்து பெற்றுக் கொள்ளும் வழக்கம் இங்கு உள்ளது.
திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில்
ஆலயத்துளிகள் இணையதளத்தின் 1500ஆம் நாள் பதிவு
ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதை அடையாளப்படுத்திய தங்கச் செங்கோல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை கிராமத்தில் அமைந்துள்ள தேவார தலம், கோமுக்தீஸ்வரர் கோவில். இக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஏழு நூற்றாண்டுகள் பாரம்பரியம் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் சிறியதும், பெரியதுமாக ஏறத்தாழ 75 கோவில்கள் உள்ளன.
1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ம் தேதி இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த சரித்திர நிகழ்வில், தமிழகத்தைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீன மடத்துக்குத் தனிப்பெருமை உண்டு.
இந்தியாவின் கடைசி ஆங்கிலேய ஆளுநராக இருந்த மவுன்ட் பேட்டன், நேருவை அழைத்து, 'இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கப்போகிறோம். அதை எப்படி அடையாளப்படுத்துவது?' என்று கேட்க, குழப்பம் அடைந்த நேரு, உடனடியாகப் பதில் கூறவில்லை. அடுத்து மூதறிஞர் ராஜாஜியை அணுகி, 'இதற்கு நீங்கள்தான் தீர்வு சொல்ல வேண்டும்' என்று கேட்டுக்கொண்டாராம். உடனே ராஜாஜி, 'கவலை வேண்டாம். தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சிமாற்றம் செய்யும்போது, ராஜகுருவாக இருப்பவர் செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து ஆசீர்வதிப்பார். அதுபோல நாமும் மகான் ஒருவர் மூலம் செங்கோல் பெற்று ஆட்சிமாற்றம் அடையலாம்' என்று கூறியிருக்கிறார். அப்போது இந்தியாவின் சைவ மடங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீன மடத்தின் 20-வது குருமகா சந்நிதானமாக இருந்தவர் அம்பலவாண தேசிகர் (1937 - 1951). அவரைத் தொடர்புகொண்ட ராஜாஜி, ஆட்சி மாற்றத்துக்கான சடங்குகளைச் செய்துதரச் சொல்லிக் கேட்டிருக்கிறார்.
1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு 11.45 மணிக்கு, தேவாரத்தில் கோளறு பதிகத்திலுள்ள 11 பாடல்களைப் பாடுமாறு குருமகா சந்நிதானம் அருளியிருந்தார். அதன்படி ‘வேயுறு தோளிபங்கன்’ எனத் தொடங்கும் தேவாரத் திருப்பதிகத்தின் 11-வது பாடலில் கடைசி அடியான ‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே’ என்று பாடி முடிக்கும்போதே மவுண்ட் பேட்டனிடமிருந்து செங்கோலை திருவாவடுதுறை இளைய தம்பிரான் பண்டார சுவாமிகள் பெற்றார். செங்கோலுக்கு புனித நீர் தெளித்து, ஓதுவா மூர்த்திகள், வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் என்கிற தேவார திருப்பதிகத்தை முழுவதுமாகப் பாடி முடிக்கும்போது, இறைநாமம் உச்சரித்து, செங்கோலை திரு. நேருவிடம் வழங்கி இந்தியா சுதந்திரம் பெற்றதை அடையாளப்படுத்தினார். இது தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த விஷயமாகும்.
இந்தியா சுதந்திரம் பெற்றதை அடையாளப்படுத்திய அந்த தங்கச் செங்கோல், 100 சவரன் தங்கத்தில் உருவாக்கப்பட்டது. ஐந்தடி நீளம் கொண்ட அந்த தங்கச் செங்கோலின் உச்சியில் ரிஷபச் சிலை கம்பீரமாக இருந்தது. கைப்பிடியில் தேசத்தின் செழிப்புக்கு அடையாளமாக லட்சுமி தேவி உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியும், இந்த செங்கோலை ஆதீனம் உருவாக்கிக் கொடுத்தது என்பதற்கான தமிழ் வாசகங்களும் அதில் இடம் பிடித்தன.
தரப்பாக்கம் கைலாசநாதர் கோவில்
கிரகண நேரத்தில் நடை திறந்திருக்கும் கோவில்
மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் கைலாசநாதர்
சென்னை பல்லாவரத்தில் இருந்து அனகாபுத்தூர் செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தரப்பாக்கம் எனும் கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் கைலாசநாதர் இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில். இங்குள்ள மூலவர் மேற்கு நோக்கி அமைந்துள்ளது தலத்தின் சிறப்பு. இத்தலத்து ஆவுடையார் சிறியதாக இருக்கிறார்.
பொதுவாக கிரகண நேரத்தில் அனைத்துக் கோவில்களின் நடை அடைக்கப்படும். இதற்கு காரணம் சூரிய, சந்திர கிரகணம் நிகழும் நேரம் தோஷமானதாகக் கருதப்படுவது தான். ஆனால் இக்கோவிலில் கிரகண வேளையில் நடை திறந்து, கிரகண துவக்கத் திலும், முடியும் நேரத்திலும் விசேஷ அபிஷேகம் செய்கின்றனர். இது கிரகண கோவில் என்பதை உணர்த்தும் விதமாக முன் மண்டபத் திலுள்ள ஒரு தூணில், சூரிய, சந்திரரை ராகு, கேது விழுங்கும் சிற்பம் உள்ளது.
குன்றக்குடி தோகையடி விநாயகர் கோவில்
மயில் தோகை விரித்து அமர்ந்திருப்பது போல் இருக்கும் மலையடி வாரத்தில் அமர்ந்திருக்கும் விநாயகர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது குன்றக்குடி முருகன் கோவில் . இங்குள்ள முருகன் கோவில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருப்பதால் குன்றக்குடி என்று அழைக்கப்படுகின்றது. இது பிரார்த்தனை தலங்களில் முதன்மையானது.
முருகப்பெருமானின் சாபத்தால் மயிலே, மலையாகிப் போனதாகவும், அந்த மலை மீதுதான் முருகப்பெருமான் வீற்றிருப்பதாகவும் தலபுராணம் கூறுகிறது.
குன்றக்குடி மலையின் நுழைவாயிலில் இருக்கும் விநாயகர் 'தோகையடி விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். ஏனெனில், குன்றக்குடி மலையின் அமைப்பு மயில் தோகை விரித்து அமர்ந்திருப்பது போல் தோன்றுவதால், அந்த இடத்தில் இருக்கும் விநாயகர் இவ்வாறு அழைக்கப்படுகிறார். முருகப் பெருமானுக்கு முன் விநாயகப் பெருமானை வழிபடுவது மரபு என்பதால், பக்தர்கள் முருகனை தரிசிக்கச் செல்லும் முன், தோகையடி விநாயகரை வணங்கிவிட்டுச் செல்வார்கள். குன்றக்குடி முருகனையும், தோகையடி விநாயகரையும் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
காரமடை நஞ்சுண்டேசுவரர் கோவில்
இரண்டு ஆவுடையார்களுடன் இருக்கும் அபூர்வ சிவலிங்கத் திருமேனி
நஞ்சுண்டேஸ்வரர் செந்நிறமாக காட்சி அளிக்கும் தனிச்சிறப்பு
கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 29 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது காரமடை நஞ்சுண்டேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் லோகநாயகி. இக்கோவில் 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
இத்தலத்து மூலவர் நஞ்சுண்டேஸ்வரர் செந்நிறமாக காட்சியளிப்பது ஒரு தனிச் சிறப்பாகும். மேலும் இறைவனின் சிவலிங்கத் திருமேனிக்கு பிரதான ஆவுடையார் தவிர, சன்னதிக்குள் சிவலிங்கத்தைச் சுற்றி, மற்றொரு ஆவுடையார் போன்ற அமைப்பில் தரையில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இவர் இரண்டு ஆவுடையார்களுடன் காட்சி தருகிறார். இப்படி இரண்டு ஆவுடையார்களுடன் இருக்கும் சிவலிங்கத் திருமேனியை நாம் வேறு எந்த கலத்திலும் தரிசிக்க முடியாது.
சிவ பெருமான், அமிர்தம் எடுப்பதற்காக பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்த ஆலகால விஷத்தை உட்கொண்டு பிரபஞ்சத்தைக் காப்பாற்றினார். விஷத்தை சிவ பெருமான் பிரதோஷ நேரத்தில் தான் அருந்தினார் என்பதால், இந்த சிவனுக்கு பிரதோஷ நேரத்தில் விசேஷ வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த நேரத்தில் விஷக்கடி பட்டவர்கள் இறைவனிடம் வேண்டிக்கொண்டால் விஷக்கடியால் ஏற்பட்ட உடல் பிரச்னைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
சேரன்மகாதேவி பக்தவத்சல பெருமாள் கோவில்
பெரிய சிங்கத்தின் வாயிலிருந்து சிறிய சிங்கம் வெளியே வருவது போன்ற அதி அற்புதமான வேலைப்பாடு உள்ள கோமுகம்
திருநெல்வேலியில் இருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சேரன்மகாதேவி பக்தவத்சல பெருமாள் கோவில். இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
பக்தர்களால் அதிகம் அறியப்படாத இக்கோவில் நம் முன்னோர்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை திறனுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. கோவில் சுற்றுச்சுவரில் அமைந்துள்ள தூண்களும், சிற்பங்களும், கலை நயம் மிக்க வடிவமைப்புகளும் நம்மை பிரமிக்க வைக்கும். சிம்ம முகம் கொண்ட தூண்கள், நரசிம்மரின் திருவுருவம், அந்த காலத்து நாகரிகத்தின் படி ஆடை, அணிகலன்கள் அணிந்த பெண்மணி முதலில் சிற்பங்களின் அழகு பார்ப்பவர்களின் எண்ணத்தை விட்டு அகலாது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல, கருவறை அபிஷேக நீர் வெளியேறும் கோமுகத்தின் வடிவமைப்பு நம் முன்னோர்களின் ஈடு இணை இல்லாத கற்பனைத் திறனை வெளி காட்டுகின்றது.
கோமுகமானது ஒரு சிறிய சிங்கத்தின் உடல் அமைப்பை கொண்டதாக இருக்கின்றது. இந்த சிங்கமானது கருவறை சுவரை தொட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெரிய சிங்கத்தின் வாயிலிருந்து வெளியே வருகின்றது. கோமுகத்தின், மூக்கின் வெளிப்புற முனையின் கீழே ஒன்றன் பின் ஒன்றாக இரட்டை தாமரை மலர்கள் உள்ளன. இந்த தாமரை மலர்கள் சிறிய சிங்கத்தின் வாயிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. சிறிய சிங்கத்தின் அலங்காரங்கள், தலைக்கவசம், பிடரி மற்றும் கூர்மையான பற்கள் கொண்ட சிறிய சிங்கத்தின் நான்கு கால்கள் அனைத்தும் நுணுக்கமான வேலைப்பாட்டுடனும், மிக்க அழகுடனும் செய்யப்பட்டுள்ளன.
உடுமலைப்பேட்டை சீனிவாச ஆஞ்சநேயப் பெருமாள் கோவில்
பெருமாள் கருவறைக்குள் எழுந்தருளி இருக்கும் ஆஞ்சநேயர்
அட்சதை பிரசாதமாக வழங்கப்படும் தனிச்சிறப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ளது சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவில். கருவறையில் முதலவர் சீனிவாச பெருமாள் இரண்டரை அடி உயரத்தில் பாலவடிவில் நின்ற கோலத்திலும், அவருக்கு வலப்புறத்தில் ஆஞ்சநேயர் வணங்கிய கோலத்திலும் உள்ளனர். ராமபக்தரான ஆஞ்சநேயர், பெருமாள் கோவில்களில் தனி சன்னதியில் இருப்பதைப் பார்த்திருக்கலாம். ஆனால், இக்கோவிலில் கருவறையில் பெருமாள் அருகிலேயே ஆஞ்சநேயர் இருப்பது சிறப்பம்சம்.
ஆஞ்சநேயரும், பெருமாளும் இணைந்துள்ளதால், சீனிவாச ஆஞ்சநேயப் பெருமாள் என்று மூலவருக்கு பெயர் சூட்டப்பட்டது. மூலவர் சீனிவாச பெருமாள், மகாலட்சுமியை தனது மார்பில் தாங்கியவர் என்பதால் இங்கு தாயாருக்கு தனிச்சன்னதி இல்லை. பிரசாதமாக அட்சதை வழங்கப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
பல்லாண்டுகளுக்கு முன்பு, குழந்தைப்பேறு இல்லாமல் இருந்த பெருமாள் பக்தர் ஒருவர், குழந்தை வேண்டி திருப்பதி வெங்கடேசரை தொடர்ந்து வணங்கி வந்தார். ஓர்நாள், ஆஞ்சநேயரிடம் முறையிட்ட அவர், 'எனக்கு குழந்தை வரம் அருள, பெருமாளிடம் பரிந்துரைக்கமாட்டாயா!' என்று கூறி வேண்டினார். அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய ஆஞ்சநேயர், 'அரசமரங்கள் நிறைந்த வனத்தின் நடுவே உள்ள புற்றின் அருகில் பெருமாள் சிலை கவனிப்பாரற்று கிடக்கிறது. அச்சிலையை எடுத்து கோவில் கட்டி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும்' என்றார். அதன்படி பக்தர், பெருமாளை கண்டெடுத்து கோவில் கட்டினார். குழந்தை வரமும் கிடைத்தது. பின்னர் தனக்கு அருளிய ஆஞ்சநேயரையும் பெருமாளின் அருகிலேயே வைத்தார்.
வரலட்சுமி விரதம்
தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள்அனுஷ்டிக்கும் வரலட்சுமி விரதம்
தாலி பாக்கியம் நிலைக்க பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதுண்டு. தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் லட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். லட்சுமிதேவியை குறித்து வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள். ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள். தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதெனக் கருதி நடந்தாள். இதுபோலவே பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்க சுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.
லட்சுமிதேவி எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள். அவள் பொறுமை மிக்கவள். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே.வரலட்சுமி விரதம் இருப்பதால் கீழ்க்கண்ட பலன்கள் ஏற்படும்.
வரலட்சுமி விரத பலன்கள்
1. உயர்ந்த ஞானம் கிடைக்கும்.
2. மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
3. மங்கல வாழ்வு அமையும்.
4. மனதில் உள்ள விருப்பங்கள் ஈடேறும்.
5. கல்யாணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
வாணியம்பாடி அதிதீசுவரர் கோவில்
நந்தி மீது அமர்ந்துள்ள தட்சிணாமூர்த்தி
வேலூர் - ஆம்பூர் - கிருஷ்ணகிரி சாலையில், வேலூரில் இருந்து 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் வாணியம்பாடி. இத்தலத்து இறைவன் திருநாமம் அதிதீசுவரர். இறைவி பெரியநாயகி. இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. காசியப முனிவரின் மனைவி, அதிதி வழிபட்டதால் இத்தல இறைவனுக்கு அதிதீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
பிரம்மதேவனால் ஊமையாகும்படி சபிக்கப்பட்ட சரஸ்வதி தேவி (வாணி ), இத்தல இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். வாணி ஊமைத் தன்மை மாறி, உரக்கப் பாடிய இடம் வாணி பாடி என்று அழைக்கப் பெற்று பின்னாளில் மருவி வாணியம்பாடி என மாறியது.
இக்கோவில் இறைவன் கருவறையின் சுற்றுச்சுவரில் எழுந்தருளி உள்ள தட்சிணாமூர்த்தி மான், மழு ஏந்தி, யோக பட்டை, சின் முத்திரையுடன் நந்தி மீது அமர்ந்துள்ளார். தட்சிணாமூர்த்தியின் இந்த தோற்றம் இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும், திக்குவாய், ஊமைத்தன்மை நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.
திருச்சி நந்தீஸ்வரர் கோவில்
நந்திக்கு என்று இருக்கும் தனி கோவில்
பிரதோஷ வேளையில் வழிபட்டால் பலன் இரட்டிப்பாக தரும் தலம்
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் தெப்பக்குளம் அருகில் உள்ளது நந்தீஸ்வரர் கோவில்.சோழமன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலின் உபகோவிலாகும். இது நந்தியம்பெருமானுக்கான தனிப்பட்ட கோவில் ஆகும். நந்தி வழிபட்ட தலம் இது.
பொதுவாக சிவன் கோவில்களில் இருக்கும் நந்திக்கு பிரதோஷம் நடக்கும். ஆனால், சிவன் இல்லாமல் நந்தி மட்டும் தனித்திருக்கும் இக்கோவிலிலும் பிரதோஷம் சிறப்பாக நடை பெறுகிறது. பிரதோஷ நேரத்தில் சிவபெருமான், நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நின்று நடனம் புரிகிறார். இந்த நேரத்தில் நந்தீஸ்வரரின் இருகொம்புகளுக்கு நடுவிலும், நம் பார்வையை செலுத்தி இறைவனை வழிபட வேண்டும் என்பது நியதி. அப்போது சிவதரிசனம், சிவாலய பிரதட்சணம் செய்தால் ஒரு சுற்றுக்கு, கோடி சுற்று சுற்றிய பலன் உண்டாகும் என்கின்றனர். இந்தக் கோவிலில் நந்தீஸ்வரர் மட்டும் தனித்திருப்பதால், பிரதோஷ வேளையில் இங்கு வழிபட்டால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.
வைத்திகோவில் முத்து மாரியம்மன் கோவில்
காளி தேவி சொரூபத்துடன் பஞ்ச பூதங்களின்மீது அமர்ந்திருக்கும் மாரியம்மன்
சமயபுரம் மாரியம்மனின் தங்கை
புதுக்கோட்டையில் இருந்து அண்டகுளம் எனும் ஊருக்குச் செல்லும் வழியில் 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வைத்திகோவில் முத்து மாரியம்மன் கோவில். மக்களின் வழக்கில் கொன்னையூர் அம்மன், விராடபுரம் அம்மன், கண்ணப்புரம் அம்மன், சமயபுரம் மாரியம்மன், நார்த்தாமலை அம்மன், தென்னக்குடி அம்மன், வைத்திகோவில் முத்துமாரி அம்மன் ஆகிய ஏழு பேரும் சகோதரிகள் என்கிறார்கள். இவர்களில் கடைக்குட்டி வைத்திகோவில் முத்துமாரியம்மன்.
இங்கு அம்மன் காளி தேவி சொரூபத்துடன், பஞ்ச பூதங்களின்மீது அமர்ந்திருப்பது தனிச்சிறப்பாகும். இந்த அம்மன் கன்னிப் பருவத்துடன் திகழ்வதாக ஐதீகம்.
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் முத்துமாரியின் சன்னிதிக்கு வந்து அர்ச்சனை செய்து, கரும்புத் தொட்டில் எடுப்பதாக வேண்டிக் கொண்டால் விரைவில் குழந்தை வரம் வாய்க்கும். திருமணத் தடை உள்ளவர்கள் அம்மனுக்குக் காப்பரிசி, பால், பட்டுப் பாவாடை மற்றும் தங்கத்திலோ வெள்ளியிலோ பொட்டு செய்து சமர்ப்பித்து வழிபட்டால், விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது ஐதீகம்.
ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் இங்கே விசேஷம். இந்த நாட்களில் அம்மனுக்குப் பாலபிஷேகம் செய்வதால், நமது இல்லத்தில் சகல சுபிட்சங்களும் பெருகும். இந்தத் தினங்களில் மஞ்சள், குங்குமம் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்ய மாங்கல்ய பலம் பெருகும்.இந்தக் கோவிலின் பங்குனித் திருவிழாவும், பூச்சொரிதல் வைபவமும் வெகு பிரசித்தம். விழாவின் 13 நாட்களும் அரிசியும் வெல்லமும் சேர்ந்த காப்பரிசிதான் அம்மனுக்கு நைவேத்தியம். மேலும் விழாவை யொட்டி, பழைமை மாறாமல் மண் சட்டியில் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றுவது இந்தக் கோவிலின் சிறப்பம்சம்.
சீர்காழி தாடாளப் பெருமாள் கோவில்
தவிட்டுப்பானையில் ஒளித்து வைக்கப்பட்ட தாடாளன் பெருமாள்
கட்டிடப்பணி சிறக்க நிலத்தின் மணலை வைத்து பூமி பூஜை செய்யப்படும் திவ்ய தேசம்
சீர்காழியிலுள்ள தாடாளப் பெருமாள் கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதை காழிச்சீராம விண்ணகரம் என்று கூறுவர். 'தாள்' என்றால் 'பூமி அல்லது உலகம்', 'ஆளன்' என்றால் 'அளந்தவன்' என்று பொருள். தன் திருவடியால் பெருமாள் மூன்று உலகங்களையும் அளந்தவர் என்பதால் இவருக்கு ஆண்டாள் இவருக்கு "தாளாளன்' என்ற பெயரை சூட்டினாள். பின்னாளில் அப்பெயர் தாடாளன் என்று மருவி விட்டது. ஒருசமயம் இத்தலம் அழிந்து போனது. அப்போது இந்தக் கோவிலில் இருந்த உற்சவ பெருமாள் விக்ரகத்தை, ஒரு மூதாட்டி தவிட்டுப்பானையில் வைத்து பாதுகாத்து வந்தார். எனவே இப்பெருமாளுக்கு தவிட்டுப்பானைத் தாடாளன் என்ற பெயர் ஏற்பட்டது. திருமங்கையாழ்வார் அம்மூதாட்டியிடம் இருந்து உற்சவ பெருமாள் விக்ரகத்தை பெற்று, மீண்டும் கோவிலில் சேர்த்தார்.
உற்சவமூர்த்தி தாடாளன் பெருமாள், மூலவர் பெருமாள் பூமியில் ஊன்றிய வலது பாதத்துக்கு முன்னே நிற்கின்றார். அதனால் மூலவர் பெருமாளின் வலது பாதத்தை நாம் தரிசிக்க முடியாது. வைகுண்ட ஏகாதசியன்று மட்டும், உற்சவரை அவருடைய இடத்திலிருந்து நகர்த்தி வைப்பார்கள். அன்றைய தினம் மட்டுமே, நாம் மூலவரின் வலது பாதத்தையும் தரிசிக்க முடியும். இந்த தரிசனம் கண்டவர்களுக்கு மறுபிறவி கிடையாதென்பது ஐதீகம்.
உலகையே ஒரு அடியில் அளந்த பெருமாள் என்பதால் இங்கு பூமி, வாஸ்து பூஜை செய்யும் முன்பு சுவாமியிடம் தங்களது நிலத்தின் மணலை வைத்து வேண்டிக்கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் நிலம் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.
காவேரி அம்மன் கோவில்
காவேரி அன்னைக்கு நன்றி செலுத்தும் ஆடிப்பெருக்கு விழா
ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப் பதினெட்டாம் பெருக்கு என்று தமிழக மக்கள் விமரிசையாக கொண்டாடுகிறார்கள்.பதினெட்டு என்ற எண் வெற்றியைக் குறிக்கும். மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன.
தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வரும் விழாக்களில், காவிரிக்கென பிரத்யேகமான விழாவாக ஆடிப்பெருக்கு விழா உள்ளது. பயிர் செழிக்க வளம் அருளும் காவேரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில்தான் இந்த ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளின் கரைகளில் மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
ஆடிப்பெருக்கன்று காவேரிக்கரையில் இளம் பெண்களும், புதுமண தம்பதிகள் மற்றும் திருமணமான பெண்கள் புத்தாடை உடுத்திக் கொண்டு பழங்கள், அவல், ஊறவைத்த இனிப்பு கலந்த அரிசி, புதிய மாங்கல்ய மற்றும் மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி ஆகியவற்றை வைத்து மஞ்சள் மற்றும் மணலால் உருவாக்கப்பட்ட பிள்ளையார் முன் படையல் செய்து வழிபடுவார்கள். தாலி பாக்கியம் நிலைக்க சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கு அன்று புது தாலி மாற்றிக் கொள்வர். இந்த நன்னாளில் புதுமண பெண்ணிற்கு தாலி பிரித்து கோர்ப்பர் . எந்த ஒரு புது மற்றும் நல்ல காரியங்களை ஆடிப்பெருக்கு அன்று ஆரம்பித்தால் , அந்த காரியம் மேலும் மேலும் பெருகும் என்பது ஐதீகம்.
காவேரித் தாயாருக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அளிக்கும் சீர்வரிசைகள்
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் அமைந்துள்ளது காவேரி அம்மன் கோவில். இங்குதான் கீழ் இரு கரங்களில் புனித கலசம் தாங்கி, மேலிரு கரங்களில் அக்கமாலையும் மலர்ச் செண்டும் தாங்கி நின்ற கோலத்தில் அருளுகிறாள் காவேரி அன்னை.
காவேரி அன்னை, ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் தங்கையாக கருதப்படுகிறாள். ஆடியில் காவேரித்தாய் கருவுற்றிருப்பதாக ஐதீகம். எனவேதான் தனது தங்கையான காவேரி யை காண ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சீர்வரிசையுடன் ஆடிப்பெருக்கு அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள படித்துறைக்கு எழுந்தருள்வார். அன்று ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து காவேரித் தாயாருக்கு சீர்வரிசைகளை யானைமீது கொண்டு வருவார்கள். அந்தச் சீர்வரிசைகளில் விதவிதமான மங்கலப் பொருட் கள், மாலைகள், புதிய ஆடைகள் ஆகியவற்றுடன் தாலிப்பொட்டு ஒன்றும் இருக்கும். இதனை அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் முன்னிலையில் அங்குள்ள காவேரித் தாயாருக்குப் படைத்து, காவேரி நதியில் சமர்ப்பிப்பார்கள்.
காவேரிக்கு பெருமாள் சீர்வரிசை அளிக்கும் காட்சியைக் கண்டால் `கோடி புண்ணியம்' கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்பின், பெருமாள் பல்லக்கில் ஏறி கோவிலை நோக்கிச் செல்வது வழக்கம். அன்று அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை விழாக்கோலம் காணும். பெருமாள் கோவிலில் நுழையும்போது, வெளியில் உள்ள ஆண்டாள் சந்நிதிக்கு முன் எழுந்தருள்வார். அங்கே ஸ்ரீஆண்டாளும் பெருமாளும் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த அற்புதமான காட்சியை ஆடிப் பதினெட்டு அன்று ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும்பொழுது, தம்பதியர் தரிசித்தால் வாழ்வில் வசந்தம் வீசும். கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, காவேரியில் நீராடிய நாள் ‘ஆடிப்பெருக்கு' என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழா
தென்னிந்தியாவில் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது, பவானி கூடுதுறை. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவில் ஆடிப்பெருக்கு அன்று அதிகாலையில் திறக்கப்படும். கூடுதுறையில் நீராடிவிட்டு பக்தர்கள், இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.
அட்சய திரிதியை தினத்தை விட, ஆடிப்பெருக்கு சிறப்பான நன்னாளாகும். இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். ஒருவர் செய்யும் நற்செயல்களால், எவ்வாறு புண்ணியம் பெருகுகிறதோ, அதுபோல் இந்த நாளில் தொடங்கும் எந்தக் காரியமும் நன்மை அளிக்கும் வகையிலேயே நிறைவு பெறும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில்
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு இணையான தலம்
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் ரோட்டில் 24 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில். இறைவியின் திருநாமம் சிவகாமி அம்மன். தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவகைலாய தலங்களில் ஆறாவது தலமான இக்கோவில் சனி பகவானுக்கு உரிய பரிகார தலமாகும்.
இக்கோவிலில் சனீஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கைலாசநாதருக்கும், சனிக்கும் விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். சனி தசையால் பாதிக்கப் பட்டுள்ளவர்கள் இங்கு பரிகாரம் செய்துகொண்டால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும் இழந்த சொத்துக்களை மீண்டும் பெறலாம் என்பது நம்பிக்கை. இக்கோவில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு ஈடானதாக சொல்கிறார்கள். சனிப்பெயர்ச்சியின்போது பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள், இங்கு வேண்டிக்கொண்டால் சனியின் உக்கிரம் குறையும் என்பது நம்பிக்கை.