
பூந்தோட்டம் அகத்தீஸ்வரர் கோவில்
12 ராசிகள், நந்தி பகவான் அமைந்த பீடத்தின் மேல் எழுந்தருளிருக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்திக்கு மேலே விதானத்தில் விநாயகர் இருக்கும் சிறப்பு
திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில், திருவாரூரில் இருந்து 21 கி.மீ தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் அமைந்துள்ளது அகத்தீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் தர்மசவர்த்தினி.
இந்தக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி மிகவும் சிறப்புக்குரியவர். இவருக்கு ராசி மண்டல குருபகவான் என்ற பெயரும் உண்டு. இவர் அமர்ந்திருக்கும் பீடத்தில் 12 ராசி சின்னங்களும், அதற்கு மேல் நந்தி பகவானும் இருக்க, அந்த நந்தி பகவானின் மேல் தனது இடது கையை வைத்த வண்ணம் தட்சிணாமூர்த்தி காட்சி அளிக்கிறார். வழக்கமாக தட்சிணாமூர்த்தி சனகாதி முனிவர்களுடன் இருப்பார். ஆனால் அவர்களுக்கு பதிலாக இங்கு, அகத்திய முனிவரும், கோரக்க சித்தரும் உடன் இருப்பது ஒரு வித்தியாசமான தோற்றமாகும். தட்சிணாமூர்த்திக்கு மேலே விதானத்தில் விநாயகர் எழுந்தருளி இருக்கிறார். தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் இருக்கும் கோலம் வேறு எங்கும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்
இக்கோவிலில் தினமும் குரு ஹோரையின் போது சிறப்பு பூஜைகள் நடைபெறும். இக்கோவில் ஆலங்குடி குரு பரிகார தலத்துக்குச் சமமானது. இந்த ராசி மண்டல குருபகவானை பிரதோஷ காலத்தில் வழிபட சகல விதமான நன்மைகள் கிடைக்கும். இவரை வணங்கினால் கிரகப்பெயர்ச்சிகள் மூலம் ஏற்ப்படும் தீமைகளில் இருந்து விடுபடலாம்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் போர்த்தும் வைபவம்
கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி, கைசிக ஏகாதசி எனப்படும். அன்று இரவு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், உற்சவ மூர்த்தியான நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் ஒவ்வொன்றாய் போர்த்தும் வைபவம் விடிய விடிய நடைபெறும். பெருமாளுக்கு தினமும் அணிவிக்கும் வஸ்திரங்களில் ஏதேனும் குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்யும் பரிகாரமாக இந்த வைபவம் நடைபெறுகிறது. மேலும் கார்த்திகை, மார்கழி குளிர் மாதங்கள் என்பதால் பெருமாளின் மீதுள்ள அன்பின் காரணமாக இந்த வஸ்திரங்கள் போர்த்தப்படுகின்றன. அத்துடன், ஒவ்வொரு வஸ்திரம் சாற்றியவுடனும் வேளையம் என்று அழைக்கப்படும் வெற்றிலை, பாக்கு, கற்பூர ஆரத்தி ஆகியவையும் நம்பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.
கி.பி 1320 முதல் 1370 வரையிலான ஆண்டுகளில் முஸ்லிம் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சூறையாடப்பட்ட நிலையில், உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் திருப்பதி திருமலையில் சுமார் 50 ஆண்டு காலம் எழுந்தருளியிருந்தார். இதனை நினைவுகூறும் வகையில், ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஆண்டுதோறும் கைசிக ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கைசிக ஏகாதசி டிசம்பர் 11-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

விலங்கல்பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகப்பெருமானின் நெற்றியில் சிவலிங்கம் அமைந்திருக்கும் அரிய காட்சி
கடலூருக்கு மேற்கே 12 கி.மீ. தொலைவில், கடலூர் -திருக்கோவலூர் மாவட்ட நெடும் பாதையை ஒட்டிக் கெடிலம் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது விலங்கல்பட்டு.
அதிகமாக மலைத்தொடர்கள் இல்லாத கடலூர் மாவட்டத்தில், கூடலூர் குன்று என்ற மலை தொடரில் அமைந்துள்ளது விலங்கல்பட்டு சிவசுப்ரமணியர் கோவில். விலங்கல் என்றால் மலை என பொருள். 100 அடி உயரமுள்ள இந்த சிறிய குன்றின் மேலே ஏறுவதற்கு சரிவு படிக்கட்டுகளும், சரிவான ஒரு சாலையும் உள்ளன.
300 வருடங்களுக்கு மேல் பழமையான இக்கோவிலின் கருவறையில், மூலவர் சிவசுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சகிதமாக எழுந்தருளி இருக்கிறார். இங்குள்ள மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமி சிலையின் நெற்றியில் சிவலிங்கம் அமைந்து இருப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இப்படி முருகப்பெருமானின் நெற்றியில் சிவலிங்கம் அமைந்திருக்கும் தோற்றத்தை, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.

மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோவில்
சிவப்பு நிற சேலை உடுத்தும் அபூர்வ சிவலிங்கம்
மயிலாடுதுறையில் அமைந்துள்ள தேவாரத்தலம் மாயூரநாத சுவாமி கோவில். அம்பிகையின் திருநாமம் அபயாம்பிகை. அம்பிகை இறைவனை மயில் வடிவில் வழிபட்டதாலும், மயில் வடிவாகவே ஆடியதாலும் இத்தலம் மயிலாடுதுறை என்றாயிற்று.
அம்பாள் அபயாம்பிகை சன்னதிக்கு வலப்புறத்தில் அனவித்யாம்பிகை' என்ற பெண் பெயர் கொண்ட ஒரு சிவலிங்கம் இருக்கிறது. இந்த சிவலிங்கத்திற்கு சிவப்பு நிற சேலைதான் கட்டுகின்றனர். இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி உள்ளது.
முன்னொரு காலத்தில் திருவையாறில் நாதசர்மா, அனவித்யாம்பிகை எனும் தம்பதியர் வசித்து வந்தனர். இவர்கள் தீவிர சிவ பக்தர்கள். இவர்களுக்கு நீண்ட காலமாக, காவிரிக்கரையிலுள்ள, மயிலாடுதுறை மாயூரநாத சுவாமியைத் தரிசிக்க வேண்டும் என்பது ஆசை. அங்கே ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும் துலா ஸ்நானம் விழாவில் கலந்து கொண்டு காவிரியில் நீராட வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். ஆனால் அவர்கள் வருவதற்குள் ஐப்பசி 30ம் நாள் ஸ்நானம் முடிந்து விட்டது. எனவே வருத்தத்துடன் மயிலாடுதுறையில், மாயூரநாத சுவாமியை வேண்டி தங்கினர். அன்றிரவில் நாதசர்மாவின் கனவில் தோன்றிய சிவபெருமான், மறுநாள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு நீராடினாலும், பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்றார் அதன்படியே மறுநாள் அத்தம்பதியர் காவிரியில் மூழ்கி பாவம் நீங்கப் பெற்றனர். இதன் அடிப்படையில் கார்த்திகை முதல்நாளன்று அதிகாலையிலும் இங்கு நீராடும் வழக்கம் இருக்கிறது தம்பதியர்களுக்காக சிவபெருமான் வழக்கமான நேரத்தை முடக்கி வைத்ததால் இதனை ‘முடவன் முழுக்கு' என்கின்றனர்.
அத்தம்பதியர் இக்கோவிலில் சிவபெருமானுடன் ஐக்கியமாயினர். நாதசர்மா ஐக்கியமான லிங்கம் மேற்கு பார்த்தபடி, நாதசர்மா என்ற அவரது பெயரிலேயே இருக்கிறது. அவரது மனைவி ஐக்கியமான லிங்கம், அம்பாள் சன்னதிக்கு வலப்புறத்தில் ‘அனவித்யாம்பிகை’ என்ற பெயரில் இருக்கிறது. பொதுவாக, சிவலிங்கத்துக்கு வேட்டி அணிவிப்பதே வழக்கம். ஆனால், அனவித்யாம்பிகை லிங்கத்திற்கு சிவப்பு நிற சேலைதான் கட்டுகின்றனர். இது ஒரு வித்தியாசமான நடைமுறையாகும். ஆணும், பெண்ணும் சமம் என்பதை இந்த வடிவம் உணர்த்துவதாக சொல்கிறார்கள்.

ராவத்தநல்லூர் ஶ்ரீ சஞ்சீவிராய ஆஞ்சநேயர் பெருமாள் கோவில்
இருவேறு திசை நோக்கி அருள் பார்வை புரியும் அபூர்வ ஆஞ்சநேயர்
கோரிக்கைகள் நிறைவேற, ஞாயிற்றுக்கிழமைதோறும் எமகண்ட நேரத்தில் நடைபெறும் அபிஷேக ஆராதனை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலையில் சங்கராபுரம் அருகாமையில் புதூர் என்ற கிராமத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ராவத்தநல்லூர் ஶ்ரீ சஞ்சீவிராய ஆஞ்சநேயர் பெருமாள் கோவில். 750 வருட பழமை வாய்ந்த சிறப்புமிக்க ராமாயண காலத்தின் வரலாற்று பெருமை கொண்ட கோவில் இது. ராமாயணம் காலத்தில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கி செல்லும்போது, ராவத்தநல்லூரில், சஞ்சீவி மலையின் ஒரு சில பகுதிகள் கீழே விழுந்தன.
மூலவர் சஞ்சீவராய ஆஞ்சநேயர், 11 அடி உயரத் திருமேனியுடன் தெற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். அவரது இடது கண் கிழக்கு திசை நோக்கியும், வலது கண் மேற்கு திசை நோக்கியும் அருள் பார்வை புரிவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இப்படி இருவேறு திசை நோக்கி ஆஞ்சநேயரின் அருட்பார்வை இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.
இக்கோவிலில் பிரதி ஞாயிறு தோறும், எமகண்ட நேரத்தில் சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெறுகின்றது. இதில் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதல்களை வைக்கும் பக்தர்களுக்கு, அவர்களின் கோரிக்கைகள் 48 நாட்களுக்குள் நிறைவேறுகின்றது. இந்தக் கோவிலில் எமகண்ட நேரத்தில் செய்யப்படும் அபிஷேக ஆராதனை வேறு எந்த கோவிலிலும் இல்லாத நடைமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றினால் திருமணத்தடை நீங்கி திருமணம் கைகூடும். வெண்ணெய் சாற்றினால் மழலைச் செல்வம் கிடைக்கும்.

உத்தமதானபுரம் கைலாசநாதர் கோவில்
ஆலயத்துளிகள் இணையதளத்தின் 1250ஆம் நாள் பதிவு
மும்மூர்த்திகளின் அம்சமாக விளங்கும் மூன்று விநாயகர்கள்
வேண்டுதல் நிறைவேற செய்யப்படும் நிறை பணி வழிபாடு
தஞ்சாவூருக்கும் கும்பகோணத்துக்கும் இடையே அமைந்துள்ள பாபநாசம் என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது உத்தமதானபுரம். இத்தலத்து இறைவன் திருநாமம் கைலாசநாதர். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித்தேடி அலைந்து பெற்று, அச்சிட்டுப் பதிப்பித்த, தமிழ்த் தாத்தா எனச் சிறப்பிக்கப்பட்ட உ. வே. சாமிநாதையர் பிறந்த ஊர் இது.
இக்கோவிலில் சிவன் மூலவராக இருந்தாலும், இங்கே முக்கியமானவரும், விசேஷமானவரும். வரப்பிரசாதியாகவும் விளங்குபவர் விநாயகர் தான். இக்கோவிலில் மூன்று விநாயகர்கள் ஒரே வரிசையில் எழுந்தருளி இருக்கிறார்கள். இவர்கள் மூவரும் பிரம்மா, விஷ்ணு சிவபெருமான். அம்சமாக விளங்குவதால் இவர்களுக்கு மும்மூர்த்தி விநாயகர்கள் என்று பெயர். பக்தர்கள், தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என்று இந்த மூன்று விநாயகர்களுக்கு செய்யும் நிறை பணி வழிபாடு என்பது இக்கோவிலில் மிகவும் பிரசித்தம். உத்தியோகம் கிடைக்க, திருமணம் கைகூட, விவசாயம் சிறக்க, தொழில் வளர்ச்சி அடைய போன்ற பிரார்த்தனைகளை பக்தர்கள் மனதில் வைத்து அபிஷேகங்கள் செய்து ஒரு தேங்காய் அளவுக்கு 108 கொழுக்கட்டைகள் செய்து, படைத்து வேண்டிக் கொண்டால், நினைத்ததை விரைவில் நிறைவேற்றி அருளுகிறார்கள் இந்த மும்மூர்த்தி விநாயகர்கள். வேண்டுதல் நிறைவேற செய்யப்படும் இந்த வழிபாட்டிற்கு, 'நிறை பணி வழிபாடு' என்று பெயர்.

திருமங்கலம் பூலோகநாத சுவாமி கோவில்
சிவபெருமான் பார்வதி தேவி திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்த தலம்
மகாலட்சுமியே குபேரனிடம் திருமாங்கல்யத்திற்கு பொன் கொடுத்த தலம்
மயிலாடுதுறை வட்டத்தில் குத்தாலம் அருகே, திருமணஞ்சேரி தலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருமங்கலம். இறைவன் திருநாமம் பூலோகநாதர்.
இறைவியின் திருநாமம் பூலோகநாயகி. இறைவன், இறைவிக்கு இப்படிப்பட்ட திருநாமம் அமைந்த தலம் வேறு எங்கும் இல்லை. பூலோகவாசிகளுக்கு, சிவபெருமான் தனது
திரு மணக் கோலத்தை தரிசிக்க அருள் புரிந்த தலம். சிவபெருமான் பார்வதி தேவி திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்த தலம் இது. இதனால் தான் இந்த ஊர் திருமாங்கல்யம் என்று முதலில் அழைக்கப்பட்டு வந்து பின்னர் திருமங்கலம் என்று மருவியது.
திருமணஞ்சேரியில் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த போது அதில் கலந்து கொண்டு தரிசிக்க தேவலோகமே திரண்டு விட்டது. எங்கு பார்த்தாலும் தேவர்கள்தான் குழுமி இருந்தனர். இந்த தருணத்தில் பூலோகவாசிகளான சாதாரண மக்கள் நம் திருமணத்தைக் காண முடியாது வருந்துகின்றனரே என்ற எண்ணம் அம்மையப்பன் மனதில் தோன்றியது. உடனே, ஸப்தபதி என்ற சடங்கை நிறைவேற்றுவது போல், ஏழு அடி எடுத்து வைத்தனர். அம்மையும், அப்பனும் எந்தத் தலத்தில் தங்களது திருமணத்திற்கு 'திருமாங்கல்யம்' செய்யப்பட்டதோ, அந்தத் தலத்திற்கு வந்து நின்று காட்சி தந்தனர்.
இத்திருமணத்திற்கு மகாலட்சுமியே குபேரனிடம் பொன் எடுத்துக் கொடுத்ததாக ஐதீகம் உள்ளது. இதற்கு சான்றாக குபேரன் திருமாங்கல்யத்தை தனது தலையில் வைத்து சுமந்து செல்லும் சிற்பம் ஒன்றும் இந்த ஆலயத்தில் உள்ளது. எனவே இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால், திருமணம் கைகூடும். மாங்கல்ய தோஷம் இருந்தால் அகலும். இந்த ஆலயத்தில் காலசம்ஹார மூர்த்தி சன்னிதியில் வைத்து, சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் செய்வது சிறப்பு.
இவ்வூரின் அருகாமையில் புகழ் பெற்ற திருமணஞ்சேரி, எதிர்கொள்பாடி, திருவேள்விக்குடி, முருகமங்கலம் போன்ற கோவில்களும் அமைந்துள்ளன.

கம்பம் கம்பராயப் பெருமாள் காசி விஸ்வநாதர் கோவில்
கையில் கமண்டலம் ஏந்திருக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
தேனி மாவட்டம், கம்பம் என்னும் ஊரில் அமைந்துள்ளது கம்பராயப் பெருமாள் காசி விஸ்வநாதர் கோவில். இங்கு சிவன், பெருமாள் கோவில்கள் ஒரே வளாகத்தில் தனித்தனி கொடி மரத்துடன் இருப்பது தனிச்சிறப்பாகும். தாயார் திருநாமம் அலமேலு மங்கை. அம்பிகையின் திருநாமம் காசி விசாலாட்சி. பல நூறு ஆண்டுகள் பழமையானது இக்கோவில்.
காசி விஸ்வநாதர் சன்னதியின் சுற்றுச்சுவரில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். இவர் இடது கையில் கமண்டலம் ஏந்தி இருப்பது நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத காட்சியாகும். யோக பட்டை அணிந்திருக்கும் இவரது தலைக்கு மேலே கல்லால மரம், காலுக்கு கீழ் முயலகன் மற்றும் சீடர்கள் கிடையாது. பீடத்தில் நாகம் மட்டும் இருக்கிறது. தனது பக்தர்களின் சாப விமோசனத்திற்காகவும், தோஷ நிவர்த்திக்காகவும் இவர் கையில் கமண்டல தீர்த்தத்துடன் காட்சி அளிக்கிறார்.
குரு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள், இவருக்கு வன்னி இலையால் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.

தேவர்மலை கதிர் நரசிங்கப்பெருமாள் கோவில்
நெற்றியில் மூன்றாவது கண் அமைந்த நரசிம்மர்
நரசிம்மரின் இடது கை அக்வான முத்திரையில் (பக்தர்களை அழைக்கும் வண்ணம்) இருக்கும் தனிச்சிறப்பு
கரூர் நகரிலிருந்து பாளையம் செல்லும் வழியில் 35 கி.மீ. தொலைவில் உள்ள தேவர்மலையில் அமைந்துள்ளது கதிர்நரசிங்கப் பெருமாள் கோவில். தாயார் திருநாமம் கமலவல்லித் தாயார்.
மூலவர் 'உக்கிர நரசிம்மர்' என்றும் அழைக்கப்படுகிறார். இடதுகாலை மடித்து அமர்ந்த நிலையில் இடது கை அக்வான முத்திரையிலும் (பக்தர்களை அழைக்கும் வண்ணம்), வலது கை அபய முத்திரையிலும் உள்ளது. மேல் இரண்டு கைகள் சங்கு மற்றும் சக்கரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இந்த நரசிம்மருக்கு நெற்றியில் மூன்றாவது கண் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.
இரணியகசிபுவை வதம் செய்த பிறகு நரசிம்மர் உக்கிரம் தணியாமல் காடு, மேடு, மலைகளில் சுற்றித் திரிந்தார். அவரை சாந்தபடுத்த தேவர்களும் முனிவர்களும் வழிமறித்து வணங்கிய தலமே 'தேவர் மறி'. அதுதான் பிற்காலத்தில் மருவி 'தேவர்மலை' ஆனது. நரசிம்ம மூர்த்தியின் உக்ரத்தால் இன்றும் இந்த தலம் வறண்ட பூமியாகவே காணப்படுகிறது. தேவர்களும், முனிவர்களும் இந்த இடத்தில் தீர்த்ததை உண்டாக்கி அந்த நீரால் அவருக்கு அபிஷேகம் செய்து சாந்தப்படுத்தினார்கள். இந்தத் தீர்த்தத்திற்கு மோட்ச தீர்த்தம் என்று பெயர். சிறிய கோமுகியில் தானாகவே ஊற்றெடுக்கும் இந்த தீர்த்தத்தின் மூலம், தேவரகசியமாகவே உள்ளது. மோட்ச தீர்த்தத்தில் நீராடினால் சனி தோசம் நிவர்த்தியாகும். தேவர்மலைச் சுற்று வட்டாரத்திலிருக்கும் எந்தக் கோவிலிலோ, வீட்டிலோ விசேஷம் என்றால், இந்த நரசிங்கர் ஆலயத்துக்கு வந்து அவரை வழிபட்டு, மோட்ச தீர்த்தத்திலிருந்து புனித நீர் எடுத்துச் செல்வது வழக்கம்.
பக்தர்களது துன்பங்களை சற்றும் காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் தீர்த்து வைப்பவர் இந்த நரசிம்மர். கமலவல்லித் தாயாரை வணங்கினால் குடும்ப பிரச்சினைகள், மனம் தொடர்பான பிரச்சினைகள், திருமணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்குவதாகவும், பிரதோசத்தில் 11 முறை இந்த கோவிலுக்குச் செல்வதால், நம் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

கந்தர்மலை முருகன் கோவில்.
தீராத நோய்களை தீர்க்கும் வள்ளி குளம் தீர்த்தம்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் இருந்து 27 கி.மீ. தொலைவில் உள்ள சுண்டக்காய்பட்டி என்ற கிராமத்தில், மலை மேல் அமைந்துள்ளது, கந்தர்மலை முருகன் கோவில். 750 அடி உயரமுள்ள இந்த மலைக்கோவிலுக்கு செல்ல 250 படிக்கட்டுகள் உள்ளன.
சூரியன், சந்திரன் ஒளி படாத வள்ளி குளம்
இந்த மலையின் மீது சித்தர்கள் வாழ்ந்து வருவதாக இன்றளவும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அரிய வகை நாகங்களும் இங்கே அதிகமாக இருந்ததாக சொல்கிறார்கள்.
இன்றளவும் சித்தர்களும், நாகங்களும் அரூபமாக இங்கே நடமாடிக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.சித்தர்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதன் அடையாளமாக, மலை மீது உள்ள குகைக்குள், அதிகமான ருத்ராட்ச மணிகள் கிடைத்திருக்கின்றன. இங்கு 'வள்ளி குளம்' என்று ஒரு குளம் இருக்கிறது. இந்தக் குளத்தின் மேல் சூரிய ஒளி, சந்திர ஒளி படுவதில்லை. இந்த குளத்து நீரை எடுத்து பருகினால் தீராத நோய்கள் தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது.
ஒரு முறை கானகத்தில் முருகனோடு இருந்த வள்ளியம்மைக்கு திடீரென்று விக்கல் ஏற்பட்டது. அதை நிறுத்த ஏதாவது வழி சொல்லும்படி வள்ளியம்மை, முருகப்பெருமானிடம் வேண்டினாள். உடனே முருகப்பெருமான் 'எந்தக் குளத்தில் சூரிய ஒளியும், சந்திர ஒளியும் படவில்லையோ, அந்த குளத்தில் இருந்து நீர் எடுத்து பருகினால் விக்கல் நின்றுவிடும்' என்று கூறினார். இதையடுத்து வள்ளியம்மை இந்த கந்தர் மலை குளத்தில் நீர் எடுத்து பருகியதும், விக்கல் நின்று விட்டது.
இந்த குகைக் குளத்தில் உள்ள தண்ணீரை பக்தர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று தெளித்தால், சகல தோஷங்களும் நீங்கும். கந்தர்மலை வேல்முருகனை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண தடை நீங்கும். வியாபாரம் விருத்தியாகும். நோய் நொடிகள் அகலும். தீவினைகள் விலகி ஓடும். என்ன வேண்டுதல் வைத்தாலும் அதை உடனடியாக நிறைவேற்றுவார் 'கந்தர்மலை வேல்முருகன்' என்பது பக்தர்களின் நம்பிக்கை.
முகூர்த்த நாட்களில் நூற்றுக்கணக்கான திருமணங்கள், கந்தர்மலையில் நடக்கிறது. கந்தர்மலை வேல்முருகனை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமன்றி, பெங்களூரு, புதுச்சேரியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

ஒன்பத்து வேலி வன்மீகநாதர் கோவில்
பிறந்த நாளில் வந்து வழிபட வேண்டிய கோவில்
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள ஒன்பத்து வேலி கிராமத்தில், குடமுருட்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, வன்மீகநாதர் கோவில். இறைவியின் திருநாமம் சோமகலா அம்பாள். இந்த கோவிலில் உள்ள சிவபெருமான், புற்றில் இருந்து தோன்றிய சிவலிங்கம் என்பதால் வன்மீகநாதர் என பெயர் வந்தது. வன்மீகம் என்பதற்கு புற்று என்று பொருள். சோமகலா அம்பாள், சந்திரனின் அம்சத்தை பெற்று விளங்குபவராக அமைந்து அருள் வழங்கி வருகிறார்.
ஒன்பத்து வேலி என்ற பெயர் ஒரு அபூர்வமான பெயராகும். ஜோதிட வல்லுநர்களும் கணிதமேதைகளும் பண்டைய காலத்தில் வாழ்ந்த தலமே ஒன்பத்து வேலியாகும்.
பக்தர்கள் தங்கள் பிறந்த நட்சத்திர நாளில், ஒன்பத்து வேலி வன்மீக நாதர் கோயிலுக்கு சென்று வழிபட்டால் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று வளமான வாழ்வை அடைவார்கள் என்பது நம்பிக்கை. இதனால் ஒன்பத்து வேலி வன்மீக நாதர் வளமான வாழ்வை அருளும் வன்மீகநாதர் என அழைக்கப்படுகிறார். மேலும் உடலில் ஏற்படும் சரும நோய்கள் தீர்க்க வன்மீக நாதரை வழிபட்டால் நிவாரணம் கிடைக்கும் .ஒன்பதாம் தேதி பிறந்தவர்கள் இந்த தலத்தில் வழிபாடுகளை செய்வது விசேஷமானதாகும் .9 என்பது செவ்வாய்க்குரிய எண் ஆகும். இதனால் செவ்வாய் திசை , செவ்வாய் புத்தி உள்ளவர்கள் ஒன்பத்து வேலி வன்மீக நாதரை வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும்.
எண்கணித ஜோதிடர்களும் நாடி கைரேகை ஜோதிடர்களும் கண்டிப்பாக வழிபட வேண்டிய தலம் வன்மீக நாதர் சுவாமி கோவில் ஆகும்.
இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் கூட பக்தர்கள் தங்கள் பிறந்த நாளில் வந்து வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்ரீ வைகுண்டம் வைகுண்டநாதர் கோவில்
கண்களையும், கருத்தையும் வெகுவாக கவரும் சிற்பங்கள்
திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள திவ்ய தேசம், ஸ்ரீவைகுண்டம் மூலவர் வைகுண்டநாதர். தாயார் - வைகுண்டவல்லி, பூதேவி.
நவ திருப்பதிகளில் ஒன்று. நவக்கிரகங்களில் சூரியனுக்குரியத் தலம்.
இங்குள்ள திருவேங்கடமுடையான் சன்னதியில் நாயக்கர் காலத்து அற்புதமான சிற்பங்கள் உள்ளன. இந்த சன்னதி . மிக அற்புதமான வேலைப்பாடுகள் தன்னுள் தாங்கி நிற்கிறது . வரிசையாக யாளி உள்ள தூண்கள் , ஒவ்வொரு தூண்களிலும் விதவிதமான அழகிய சிற்பங்கள் ,மண்டபத்தின் மேல் பகுதியில் சுற்றிலும் பெருமாளின் மங்களாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களின் பெருமாள் வடிவங்கள் புடைப்பு சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.
இக்கோவிலின் சிற்பச் சிறப்பெல்லாம் இம்மண்டபத்தில்தான் அமைந்து இருக்கின்றது. வரிசைக்கு ஒன்பது சிங்கப் போதிகையோடு (போதிகை என்றால், தூண்களின் மேற்பகுதியாக அமைந்து, மேலுள்ள வளையைத் தாங்கும் வகையில் அமைந்த, தூணின் ஒரு கூறு ஆகும்) கூடிய யாளிகள் இருக்கின்றன. யானைமேல் யாளியும், யானையின்மேல் சிங்கமும் அதன்மேல் யாளியும் உள்ள தூண்கள் அவை. தெற்கேயிருந்து மூன்றாவது தரணில் யாளிகள் வாயில் அனுமார் நிற்கிறார். இங்குள்ள ஒவ்வொரு தூணின் மேலும் அனுமார் பலப்பல உருவங்களில் இருக்கிறார்.குறிப்பாக, ஆதிசேஷனைக் குடையாகக் கொண்டு தேவியருடன் காட்சி தரும் பெருமாள், மூவுலகமும் தன்னுள் அடக்கம் என்பதை உணர்த்தும் உலகளந்த பெருமாள், அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதை உணர்த்தும் ராமர் அனுமார் சிற்பம், கணவரின் காலில் இருந்து முள்ளுடன் சேர்த்து வலியையும் எடுக்கும் மனைவி, நம் மீது தாவத் தயாராக இருக்கும் வானரம், நவநாரி குஞ்சரம் என்னும் யானை உருவ வடிவில் அமைந்திருக்கும் ஒன்பது பெண்கள், பஞ்ச நாரி துரகம் என்னும் குதிரை உருவ வடிவில் அமைந்திருக்கும் ஐந்து பெண்கள் என, இது போல ஆயிரம் கதைகள் சொல்லும் சிற்பங்கள் நம் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கின்றன.
மண்டபத்தில் முகப்பில் உள்ள தூண் ஒன்றில் அகோர வீரபத்திரன் காட்சி கொடுப்பார். இவைகளையெல்லாம் விடச் சிறந்த வடிவங்கள் இரண்டு இம்மண்டப முகப்பில் உண்டு. ஒன்று ராமன், சீதாப்பிராட்டி சகிதனாகத் தனது இலங்கைப் படையெடுப்புக்கு உதலிய சுக்ரீவனை அணைத்து அருள்பாலிப்பது. ராமன் சுக்ரீவனுக்கு அருள்பாலிக்கும்போதே, லட்சுமணனும் அங்கதனையும், அனுமனையும் அணைத்துக் கொண்டு நிற்கிறார். இப்படி, வானர வீரர்களை ராமனும், லட்சுமணனும் அணைத்துக் கொண்டு நிற்கும் காட்சி சிற்ப உலகிலே மிக அபூர்வமான ஒன்று.
சுருங்கச் சொன்னால் இக்கோவில் சிற்பங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். நம் கண்களையும் கருத்தையும் வெகுவாக கவரும்.

திருவிசநல்லூர் யோகநந்தீசுவரர் கோவில்
கார்த்திகை மாத அமாவாசையன்று கிணற்றில் கங்கை பொங்கும் அதிசயம்
கும்பகோணத்திற்கு அருகிலுள்ள தேவாரத்தலம் திருவிசநல்லூர். இறைவன் பெயர் யோகநந்தீசுவரர். இறைவியின் திருநாமம் சவுந்தரநாயகி. இவர் ஏழு முனிவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் இவருடைய லிங்கத் திருமேனியில் எழு சடைகள் இருக்கின்றன.
இத்தலத்தில் சுமார் 370 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள். சிறந்த சிவபக்தர். இவர் கர்நாடக சமஸ்தானத்தில் திவானாகப் பணிபுரிந்தவர். இன்றளவும், சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக, இவர் வாழ்ந்த வீட்டின் கிணற்றில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத அமாவாசையன்று கங்கை பொங்கி எழுந்தருளுகிறாள். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த ஆச்சரியமான நிகழ்வுக்கு பின்னால் இறையருளின் மகத்துவம் இருக்கின்றது.
ஸ்ரீதர அய்யாவாள் தந்தையார் மறைந்த திதி கார்த்திகை மாதத்தில் வரும். அத்தகைய ஒரு நாளில் இவர் பிராமணர்களுக்கு உணவளிப்பதற்காக அந்தணர்களை எதிர்பார்த்து தன் வீட்டு வாசலில் காத்திருந்தார். அப்போது தாழ்த்தப்பட்டவர் ஒருவர் அவர் இல்லம் வந்து பசியால் துடிப்பதாக சொன்னார். உடனே அந்தணர்கள் உண்பதற்காக வைத்திருந்த உணவை அந்த தாழ்த்தப்பட்டவருக்கு அளித்து மகிழ்ந்தார். சிரார்த்த சமையலை திதி கொடுக்கும் அந்தணர்கள் மட்டுமே உண்ண வேண்டும். மீதம் உள்ளதை பசுவுக்குத்தான் தருவார்கள். அந்த நியதியை அய்யாவாள் மீறியதால், அந்தணர்கள் வெகுண்டனர் ஸ்ரீதர அய்யாவாள் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக கங்கையில் நீராடி விட்டு வந்தால்தான் அவர்களால் திதி கொடுக்க முடியும் என்றனர். சிவபக்தரான ஸ்ரீதர அய்யாவாள் இறைவனைமனம் உருக வேண்டி, கிணற்றடியில் நின்றபடி கங்காஷ்டகம் பாடினார். ஐந்தாம் பாடல் பாடியவுடன் கிணற்றில் கங்கை பொங்கி வழிந்தது. கிணற்றின் நீர்மட்டம் விறுவிறுவென ஏறி, வழிந்து, அந்தத் தெரு முழுதும் கங்கை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்பொழுது தான் அந்த அந்தணர்கள் ஐயாவாளின் மகிமையை அறிந்தனர். மன்னிப்பும் கேட்டனர்.
இன்றளவும், ஆண்டுதோறும் கார்த்திகை அமாவாசையன்று, 300 ஆண்டுகளுக்குமுன் கங்கை பொங்கி வந்ததுபோல, அய்யாவாள் இல்லக் கேணியில் நீர் பொங்கி வருவதைக் காணலாம். நீராடலாம். கார்த்திகை மாதம் பத்து நாள் விழா நடக்கும். பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசையன்று காலை கிணற்றுக்கு பூஜை செய்வார்கள். முதலில் வேத விற்பன்னர்கள் நீராடியபின் பக்தர்கள் நீராடுவார்கள். அன்று முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும், கிணற்று நீர் குறையாமலேயே இருப்பது அதிசயம்!

செல்லப்பிராட்டி அட்சர லலிதா செல்வாம்பிகை கோவில்
கற்பலகையில் இயந்திர வடிவில் இருக்கும் அபூர்வ அம்பிகை
லலிதாம்பிகைக்கான தனித்த பழமையான கோவில்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியிலிருந்து, மேல்மலையனூர் செல்லும் செஞ்சி சேத்துப்பட்டு சாலையில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது செல்லப்பிராட்டி என்ற கிராமம்.
இந்த கிராமத்தில் கல் பலகையில், 12 மந்திர எழுத்துக்களாக (அட்சரம்), உருவமற்ற நிலையில் எழுந்தருளி இருக்கிறார் லலிதா செல்வாம்பிகை.
ஸ்ரீராமர் பிறக்க, தசரத சக்ரவர்த்திக்கு புத்திர காமேஷ்டி யாகத்தை செய்து கொடுத்த ரிஷ்ய சிருங்கரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தேவி இவள். ரிஷியசிருங்கர், 6 அடி உயரம் 2 அடி அகலம் 4 அங்குலம் கனம் கொண்ட கற்பலகையில் 12 கட்டங்கள் கொண்ட இயந்திரம் அமைத்து, ஒவ்வொரு சதுர கட்டத்திலும் ஒவ்வொரு பீஜ மந்திரத்தை பொறித்துள்ளார். இந்த சதுர கட்டங்களுக்கு மேல், நடுவே சூலமும், வலது பக்கத்தில் சூரியனும், இடது பக்கத்தில் சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளது. பீஜாட்சர எழுத்துக்கள் குறிக்கப்பட்ட கற்பலகை சிலையில் மகா மந்திரங்களின் சூட்சமம் அடங்கியுள்ளது.
லலிதம் என்றாலே இதமானது, அழகானது என்று பொருள். லலிதாம்பிகை மகாசக்தியும், பேரழுகும் ஒருங்கே பெற்றவள். முப்பெரும் தேவியர்களும் ஒன்றாக இணைந்த சக்தி வடிவம் தான் இந்த லலிதா செல்வாம்பிகை.
இந்த இயந்திரக் கல் பலகையின் முன்னே சிலா ரூபத்திலும் காட்சி அளிக்கிறார் லலிதா செல்வாம்பிகை. சுமார் மூன்றடி உயர சிறிய திருமேனியுடன் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். வலது திருக்கரம் பக்தர்களை காக்கும் படியும், இடது திருக்கரம் பாதத்தை நோக்கியபடியும் அமைந்துள்ளது. மற்ற ஆறு கரங்களில் பார்வதிக்குரிய பாசம், அங்குசம், லக்ஷ்மிக்குரிய சங்கு, சக்கரம், சரஸ்வதிக்குரிய கமண்டலம், அக்ஷயமாலை ஆகியவை உள்ளன.
லலிதா சகஸ்ரநாமத்தை இவ்வாலயத்தில் அமர்ந்து ஒரு முறை பாராயணம் செய்தாலே ஆயிரம் முறை பாராயணம் செய்த பலன் கிட்டும். ஏனெனில் லலிதை எனும் தேவிக்கான தனித்த பழமையான ஆலயம் இது என்பதுதான்.
இந்த அம்பிகைக்கு எல்லா பூக்களுமே விசேஷமானவை என்றாலும்கூட சிவப்பு நிற மலர்களால் செவ்வாய்க்கிழமைகளில் பூஜிப்பது சிறப்பு . வெண்ணிற மலர்களால் வெள்ளிக் கிழமைகளில் மாலைப்பொழுதில் அர்ச்சிப்பது விசேஷம்.
திருமணம் ஆகாதவர்கள் பௌர்ணமி நாட்களில் இந்த அம்பாளுக்கு பன்னிரெண்டு நெய்தீபங்கள் ஏற்றி கல்யாணமாலை சாற்றினால் திருமணம் நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை.

சிவசைலம் சிவசைலநாதர் கோவில்
எழுந்து நிற்க தயாராகும் நிலையில் காட்சி தரும் நந்தி
முதுகில் தழும்புள்ள, உயிரோட்டமுள்ள நந்தி
திருநெல்வேலியிலிருந்து மேற்கே சுமார் 57 கி.மீ தொலைவில் அமையப் பெற்றுள்ள தேவார வைப்புத் தலம் சிவசைலம் சிவசைலநாதர் கோவில். இறைவியின் திருநாமம் பரமகல்யாணி. இத்தலம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் இருக்கும் நந்தி மிகவும் அழகான, உயிரோட்டமுள்ள ஒரு சிலையாகும். இந்த நந்தி சிலையின் முதுகில் உளியால் ஏற்பட்ட ஒரு தழும்புள்ளது, அதன் பின்னணியில் ஒரு சுவையான கதை உள்ளது.
ஒரு சமயம், தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு சாபம் ஒன்று ஏற்பட்டது. அதற்கு விமோசனமாக, சிவசைலத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனுக்கு எதிராக ஒரு நந்தியை பிரதிஷ்டை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது. அதன்படி இந்திரன், தேவர்களின் சிற்பியான மயனை அழைத்து, நந்தி விக்கிரகம் ஒன்றை நிர்மாணிக்க கூறினான். சிற்ப சாத்திரங்களை முறைப்படி கற்ற மயனும், சிவசைலம் வந்து இந்திரன் கூறியபடி, சிற்ப சாத்திர விதிமுறைப்படி ஓர் அழகிய நந்தியை உருவாக்கினான். சிற்ப சாத்திரங்களின் அனைத்து விதிகளின் படியும் முழுமையாக விளங்கிய அந்த கல் நந்தி இறுதியில் உயிர் பெற்று எழ, மயன் தன் கையில் இருந்த உளியால் நந்தியின் முதுகில் அழுத்த, நந்தி அவ்விடத்திலேயே நிலையாக தங்கியதாம். இதனால் நந்தியின் வலது கால் சற்று உயர்த்தப்பட்ட நிலையிலும் மற்ற மூன்று கால்கள் வளைந்திருப்பதையும் நாம் காணலாம். உளியினால் மயன் அழுத்திய தழும்பை இன்றும், இந்த நந்தியின் மீது நாம் பார்க்க முடியும். இந்த நந்தி தற்போதும் எழுந்திருக்க தயாராகும் கோலத்திலேயே அற்புதமாக காட்சியளிப்பது சிறப்பம்சம் ஆகும். மேலும் இந்த நந்தியின் உடம்பில் இருக்கும் அணிகலன்களும், அது தன் வாலை பின்னங்கால் வழியாக வளைத்து வைத்திருப்பதும், அதன் அழகிற்கு மேலும் மெருகு ஊட்டுகின்றன. இந்த நந்தி சிற்பத்தின் கலை அம்சம் நம்மை நிச்சயம் பிரம்மிப்பில் ஆழ்த்தும்.
இந்த கோவில் தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும் வழிபட்ட தலம் என்பதால், அதிர்வலைகள் நிறைந்த தலமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இங்கு திருமணம் மற்றும் மணிவிழாக்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.

மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் .கோவில்
சிவலிங்கம் போன்ற திருமேனி உடைய அபூர்வ பெருமாள்
திருப்பூர் மாவட்டத்தில், மொண்டிபாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ளது வெங்கடேச பெருமாள் கோவில். தாயார் திருநாமம் அலமேலு மங்கை. இக்கோவிலில் உள்ள மூலவர் வெங்கடேச பெருமாள் சாளக்கிராம சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருடைய திருமேனி லிங்கம் போன்ற அமைப்பு கொண்டது. நான்கு புறமும் பட்டையாகவும், மத்தியில் கூராக, வாழைப்பூ வடிவில், சுயம்பு லிங்கம் போல காட்சி தருவது வேறு எந்த வைணவ தலங்களிலும் காண முடியாத தனி சிறப்பாகும்.
தோல் நோய் தீர்க்கும் 'மல்லிப்பொட்டு' பிரசாதம்
இக்கோவிலில் பக்தர்களுக்கு துளசி, வேம்பு, வெள்ளெருக்கு, பூமொட்டு, அரளி, ஊஞ்சற்கரி, எலுமிச்சைசாறு ஆகிய மூலிகை பொருட்கள் கலந்த மல்லிப்பொட்டு எனும் சிறப்பு பிரசாதம் வழங்கப்படுகிறது. இது தேகத்தில் தோன்றும் வெண்குஷ்டம் போன்ற கொடிய நோய்களுக்கு அருமருந்தாகப் பயன்படுகிறது.
கொங்கு திருப்பதி
திருப்பதி வெங்கடேசப் பெருமாளே இத்தலத்தில் அருள் பாலிப்பதாக ஐதீகம். எனவே, திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்ற முடியாதவர்கள், இத்தலத்திற்கு வந்து தாங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். இதனால் இத்தலம் 'மேலத்திருப்பதி', கொங்கு திருப்பதி என்ற சிறப்பு பெயர்களுடன் அழைக்கப்படுகிறது. திருப்பதிக்கு ஏழுமலைகளைக் கடந்து செல்வதைப் போலவே இங்கு செல்லவேண்டுமெனில், இயற்கையாகவே அமைந்த ஏழு மேடுகளைக் கடந்து செல்ல வேண்டும்.

தாராபுரம் உத்தரராகவப் பெருமாள் கோவில்
மார்பில் சங்கு சின்னம் தரித்த அபூர்வ பெருமாள்
பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் செய்த தலம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் அமைந்துள்ளது உத்தரராகவப் பெருமாள் கோவில். மகாபாரத காலத்தில் இப்பகுதி விராடபுரம் என்று பெயர் பெற்றிருந்தது. பின்னர் வஞ்சிபுரி என்று அழைக்கப்பட்டு கொங்கு சோழர் காலத்தில் ராசராசபுரம் என்றானது. ராசராசபுரம் என்பது விஜயநகர பேரரசர் காலத்தில், ராராபுரம் என்று மருவி பின்னர் தாராபுரம் ஆனது.
மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தது விராடபுரி என்று என்று முன்னர் அழைக்கப்பட்ட தாராபுரத்தில் தான். பாண்டவர்கள் 13 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டனர். இதில் ஓராண்டு அஞ்ஞானவாசம் இருந்து எவருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டும் என்பது கௌரவர்களின் கட்டளை. அதன்படி மறைந்து வாழ, பாண்டவர்கள் விராட நாட்டை தேர்ந்தெடுத்து, விராட மன்னனிடம் சேவகர்களாக பணிபுரிந்தனர்.
இத்தலத்து பெருமாள் கோவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. பொதுவாக அனைத்து பெருமாள் கோவில்களிலும், பெருமாள் தனது கையில் தான் சங்கை ஏந்தி இருப்பார். ஆனால் இத்தலத்து பெருமாள் மார்பில் சங்கு சின்னம் பொருந்தியுள்ளது.. இந்த சங்கை மகாலட்சுமியாக கருதி பக்தா்கள் வழிபட்டு வருகின்றனா்.

திருசோற்றுத்துறை ஓதவனேஸ்வரர் கோவில்
பக்தர்களின் பசியைப் போக்கிய பரமன்
சிவபெருமான், காசிக்கு அடுத்தபடியாக அட்சய பாத்திரம் கொடுத்த தலம்
தஞ்சாவூரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருசோற்றுத்துறை ஓதவனேஸ்வரர் கோவில். இத்தல இறைவனுக்கு சோற்றுத்துறை நாதர் என்ற பெயரும் உண்டு. இறைவியின் திருநாமம் அன்னபூரணி, ஒப்பிலா அம்மை.
‘சோறு' என்றால் 'முக்தி' என்ற பொருளும் உண்டு. பசிப்பிணி போக்கியதால் இத்தலத்து மூலவர் 'ஓதனவனேஸ்வரர்' என்று அழைக்கப்படுகின்றார். 'ஓதனம்' என்றால் 'அன்னம்' என்று பொருள். இத்தல இறைவனை வழிபடும் அடியார்களின் பசிப்பணி தீர இறைவன் சோறு வழங்குபவன் என்னும் பொருளைத் தருவதுடன், உயிரைப் பற்றிய பிறவிப் பிணி தீர வீடுபேறு தருபவன் என்ற பொருளும் உண்டு. அம்பிகையை மனதார வழிபட்டால், வறுமையும் பிணியும் விலகி விடும். திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில், இத்தலம் மூன்றாவது தலமாகும்.
ஒரு முறை திருச்சோற்றுத்துறை பகுதியில் பஞ்சம் ஏற்பட்டு மக்கிள் பசியால் வாடினர். இத்தலத்தில் வசித்து வந்த அருளாளர் என்ற சிவபக்தரும் பஞ்ச காலத்தில் பசியால் அவதிப்பட்டார். வருந்திய அருளாளன் இத்தல இறைவனிடம், பஞ்சத்தை தீர்த்து உணவு வழங்குமாறு முறையிட்டார். திடீரென்று மழை பொழிய ஊரே வெள்ளக் காடானது. அப்போது ஒரு பாத்திரம் வெள்ளத்தில் மிதந்து வந்தது. இதைப்பார்த்த அருளாளர் அதை கையில் எடுக்க, இறைவன் 'அருளாளா! இது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம். இதை வைத்து அனைவருக்கும் சோறு போடு' என்று அசரீரியாக குரல் கொடுத்து அருள் செய்தார். அருளாளன், இந்த பாத்திரத்தை கையில் வைத்தபடி ஊராருக்கு சோறும், நெய்யும், குழம்புமாக போட்டு அவர்களின் பசி தீர்த்தார். அள்ள அள்ளக் குறையாமல் அன்னம் வழங்கிய சிவபெருமானுக்கு தொலையாச்செல்வர் என்ற பெயரும் உண்டு. இத்தலம் காசிக்கு அடுத்தபடியாக அட்சய பாத்திரம் கொடுத்த தலமாகும்.
இறைவன் அருளால் மக்களின் பசியைப் போக்கிய அருளாளருக்கும், அவர் மனைவிக்கும் இத்தலத்தில் கருவறை அர்த்த மண்டபத்திற்கு வெளியே சிலை உள்ளது. சப்தஸ்தான விழாவில் ஏழூர்வலம் வரும் அடியார்களுக்கு இங்கு அன்ன தானம் நடைபெறுகிறது.

இரும்பை மாகாளேசுவரர் கோவில்
நவக்கிரகங்கள் தங்கள் மனைவியுடன் காட்சி அளிக்கும் தனிச்சிறப்பு
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் வட்டத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம், இரும்பை மாகாளேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மதுரசுந்தர நாயகி. இத்தலம் திண்டிவனத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
பொதுவாக சிவாலயங்களில் நவக்கிரகங்கள் ஒரு மண்டபத்தில் அமைந்துள்ள பீடத்தின் மேல், நடுவில் இருக்கும் சூரியனைச் சுற்றி தனியாக எழுந்தருளி இருப்பார்கள். ஆனால் ஒரு சில தலங்களில் தான் தங்கள் மனைவியுடனும் அல்லது வாகனத்துடனும் காட்சி அளிப்பார்கள். ஆனால் இத்தலத்தில் நவக்கிரகங்கள் தங்கள் மனைவியுடன் எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும்.

திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்
நாகங்களை திருமேனியில் தரித்திருக்கும் அபூர்வ சர்ப்ப கால பைரவர்
திருச்சி – தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள துவாக்குடி என்ற ஊரிலிருந்து, நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் நெடுங்களம். இறைவன் திருநாமம் நித்திய சுந்தரேசுவரர், திருநெடுங்களநாதர், இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி.
இந்தத் தலத்தில் சேத்திர பைரவர், சர்ப்ப கால பைரவர் என்று இரண்டு பைரவர்கள் அருள் பாலிக்கிறார்கள். சேத்திர பைரவர் வாகனத்துடனும் தற்பகால பைரவர் வாகனம் இல்லாமலும் எழுந்தருளி இருக்கிறார்கள். சர்ப்ப கால பைரவர் தனது கையில் ஒரு நாகத்தையும், வலது கால் மற்றும் இடது கால் இரண்டிலும் நாகங்கள் சுற்றத் தொடங்கி, திருமேனி முழுவதும் படர்ந்து இருக்கின்றன. இப்படி திருமேனி முழுவதும் சர்ப்பங்கள் பின்னி படர்ந்திருக்கும் காலபைரவரை வேறு தலத்தில் நாம் தரிசிப்பது அரிது.
இந்த சர்ப்ப கால பைரவரை வழிபட்டால், கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை விலகும். பாம்பு சம்பந்தப்பட்ட கெட்ட கனவுகள் நின்று விடும். தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டுக்கு உகந்த நாள். அதிலும் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி, காலபைரவாஷ்டமி என்று போற்றப்படுகிறது. பைரவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மலர்கள் சமர்ப்பித்து, செவ்வாழைப் பழம் நைவேத்தியம் வைத்து, தேங்காய் அல்லது பூசணிக்காயில் நெய் தீபமேற்றி வழிபாடு செய்ய, துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் பெருகும். பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், யம பயம் இருக்காது, திருமணத் தடை அகலும். சந்தான பாக்கியம் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள்.