கம்பம் கம்பராயப் பெருமாள் காசி விஸ்வநாதர் கோவில்

கையில் கமண்டலம் ஏந்திருக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி

வித்தியாசமான  தோற்றத்தில் முருகப்பெருமான்

தேனி மாவட்டம், கம்பம் என்னும் ஊரில் அமைந்துள்ளது கம்பராயப் பெருமாள் காசி விஸ்வநாதர் கோவில். இங்கு சிவன், பெருமாள் கோவில்கள் ஒரே வளாகத்தில் தனித்தனி கொடி மரத்துடன் இருப்பது தனிச்சிறப்பாகும். தாயார் திருநாமம் அலமேலு மங்கை. அம்பிகையின் திருநாமம் காசி விசாலாட்சி. பல நூறு ஆண்டுகள் பழமையானது இக்கோவில். இக்கோவிலில் காசி விஸ்வநாதர் சதுர வடிவிலான ஆவுடையாரின் மேல் எழுந்தருளி இருக்கிறார்.

கோவில் உருவான வரலாறு

இப்பகுதியை ஆண்ட சிற்றரசருக்கு, சிவனுக்கும், பெருமாளுக்கும் ஒரே இடத்தில் கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை இருந்தது. அவரது கனவில் தோன்றிய பெருமாள், மேற்கு மலைத்தொடர்ச்சியின் அடிவாரத்தில் ஒரு கல் கம்பம் இருப்பதைச் சுட்டிக்காட்டி, அவ்விடத்தில் தனது சிலை வடிவம் இருப்பதை உணர்த்தினார்.

அதன்படி மன்னர் சிலையை எடுத்து வந்து, இங்கு பிரதிஷ்டை செய்தார். கம்பம் அருகில் கிடைத்தவர் என்பதால் சுவாமிக்கு, கம்பராயப் பெருமாள் என்ற திருநாமம் சூட்டினார். அந்த ஊருக்கும், கம்பம் என்றே பெயர் வைத்தார்.

பின்னர் காசியிலிருந்து லிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து, இருவருக்கும் ஒரே நாளில் கும்பாபிஷேகம் செய்வித்தார். இங்குள்ள தல விருட்சம் வன்னி. இந்த மரத்தை பிரம்மாவாக கருதுகின்றனர். ஆக, மும்மூர்த்திகளையும் வணங்க ஏற்ற தலம் இது.

இக்கோவிலில்  சக்கரத்தாழ்வாருக்கும் சன்னதி இருக்கிறது. சக்கரத்தாழ்வாருக்கு பின்புறமுள்ள நரசிம்மர், நான்கு கைகளிலும் சக்கரங்களுடன் காட்சி தருகிறார். இந்த அமைப்பு ஒரு தனி சிறப்பாகும்.ஆனி மாத சித்திரை நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வாருக்கு விசேஷ ஹோமத்துடன், பூஜை நடக்கிறது.

பொதுவாக சிவாலயங்களில் தட்சிணாமூர்த்தி, இறைவன் சன்னதியின் சுற்றுச்சுவரில் கல்லால மரத்தின் கீழ், காலின் கீழ் முயலகனுடனும்,  அருகில் நான்கு சீடர்களுடனும் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில், காசி விஸ்வநாதர் சன்னதியின் சுற்றுச்சுவரில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். இவர் இடது கையில் கமண்டலம் ஏந்தி இருப்பது நாம்  வேறு எந்த தலத்திலும் காண முடியாத காட்சியாகும். யோக பட்டை அணிந்திருக்கும் இவரது தலைக்கு மேலே கல்லால மரம், காலுக்கு கீழ் முயலகன் மற்றும் சீடர்கள் கிடையாது. பீடத்தில் நாகம் மட்டும் இருக்கிறது. தனது பக்தர்களின் சாப விமோசனத்திற்காகவும், தோஷ நிவர்த்திக்காகவும் இவர் கையில் கமண்டல தீர்த்தத்துடன் காட்சி அளிக்கிறார்.

குரு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள், இவருக்கு வன்னி இலையால் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.

முன்புறம் ஐந்து முகங்களும், பின்புறம் ஒரு முகமும் கொண்ட    வித்தியாசமான  தோற்றத்தில் முருகப்பெருமான்

இங்குள்ள முருகப்பெருமான் ‘சண்முகநாதர்’ என்றழைக்கப்படுகிறார். ஆறுமுகங்களைக் கொண்டஇவருக்கு முன்புறம் ஐந்துமுகங்களும், பின்புறம் ஒருமுகமும் இருப்பது வித்தியாசமான அமைப்பு. செவ்வாய் தோஷ நிவர்த்தி பெற, திருமணத்தடை நீங்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

 

தேனி மாவட்டம், கம்பம் என்னும் ஊரில் அமைந்துள்ளது கம்பராயப் பெருமாள் காசி விஸ்வநாதர் கோவில்

Previous
Previous

திருமங்கலம் பூலோகநாத சுவாமி கோவில்

Next
Next

தேவர்மலை கதிர் நரசிங்கப்பெருமாள் கோவில்