கம்பம் கம்பராயப் பெருமாள் காசி விஸ்வநாதர் கோவில்
கையில் கமண்டலம் ஏந்திருக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
வித்தியாசமான தோற்றத்தில் முருகப்பெருமான்
தேனி மாவட்டம், கம்பம் என்னும் ஊரில் அமைந்துள்ளது கம்பராயப் பெருமாள் காசி விஸ்வநாதர் கோவில். இங்கு சிவன், பெருமாள் கோவில்கள் ஒரே வளாகத்தில் தனித்தனி கொடி மரத்துடன் இருப்பது தனிச்சிறப்பாகும். தாயார் திருநாமம் அலமேலு மங்கை. அம்பிகையின் திருநாமம் காசி விசாலாட்சி. பல நூறு ஆண்டுகள் பழமையானது இக்கோவில். இக்கோவிலில் காசி விஸ்வநாதர் சதுர வடிவிலான ஆவுடையாரின் மேல் எழுந்தருளி இருக்கிறார்.
பொதுவாக சிவாலயங்களில் தட்சிணாமூர்த்தி, இறைவன் சன்னதியின் சுற்றுச்சுவரில் கல்லால மரத்தின் கீழ், காலின் கீழ் முயலகனுடனும், அருகில் நான்கு சீடர்களுடனும் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில், காசி விஸ்வநாதர் சன்னதியின் சுற்றுச்சுவரில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். இவர் இடது கையில் கமண்டலம் ஏந்தி இருப்பது நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத காட்சியாகும். யோக பட்டை அணிந்திருக்கும் இவரது தலைக்கு மேலே கல்லால மரம், காலுக்கு கீழ் முயலகன் மற்றும் சீடர்கள் கிடையாது. பீடத்தில் நாகம் மட்டும் இருக்கிறது. தனது பக்தர்களின் சாப விமோசனத்திற்காகவும், தோஷ நிவர்த்திக்காகவும் இவர் கையில் கமண்டல தீர்த்தத்துடன் காட்சி அளிக்கிறார்.
குரு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள், இவருக்கு வன்னி இலையால் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.
முன்புறம் ஐந்து முகங்களும், பின்புறம் ஒரு முகமும் கொண்ட வித்தியாசமான தோற்றத்தில் முருகப்பெருமான்
இங்குள்ளமுருகப்பெருமான் ‘சண்முகநாதர்’ என்றழைக்கப்படுகிறார். ஆறுமுகங்களைக் கொண்டஇவருக்குமுன்புறம்ஐந்துமுகங்களும், பின்புறம் ஒருமுகமும் இருப்பதுவித்தியாசமானஅமைப்பு. செவ்வாய் தோஷ நிவர்த்திபெற, திருமணத்தடை நீங்கஇவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
சுருளிவேலப்பர் கோவில்
சுருளிமலையில் அமைந்துள்ள விபூதி குகை
தேனி மாவட்டம் கம்பம் என்ற ஊரில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவிலுள்ள சுருளிமலையில் அமைந்துள்ளது சுருளிவேலப்பர் கோவில் . இந்த கோவிலை நெடுவேள்குன்றம் என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள்.சுருளிவேலப்பர் கோவிலின் அருகே உள்ளது விபூதி குகை, இந்த விபூதி குகையில் ஈர மண் விபூதியாக மாறும் அதிசயம் நிகழ்கிறது.மேலும் இங்கு அள்ள அள்ள விபூதி வந்துகொண்டே இருக்கின்றது.
இத்தலத்தின் மூலவரான சுருளிவேலப்பர் குழந்தையில்லாதவருக்கு இறுதிக் கடன்களை செய்தார். அதனால் இறுதி காலத்தில் குழந்தை இல்லாதவர்கள் மூலவர் சுருளிவேலப்பரை தங்கள் குழந்தையாக எண்ணுகின்றனர்.