வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் கோவில்

வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் கோவில்

நந்திக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நெய் மீது ஈ, எறும்பு மொய்க்காத அதிசயம்

மாட்டுப் பொங்கலன்று நந்தியின் அருகில் பிரதோஷ நாயகரை எழுந்தருளச் செய்து அபிஷேகம் செய்யும் நடைமுறை

புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ. தொலைவில், பொன்னமராவதிக்கு அருகே உள்ள வேந்தன்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது நெய் நந்தீஸ்வரர் கோவில். இறைவன் சொக்கலிங்கேசுவரர். இறைவியின் திருநாமம் மீனாட்சி அம்மன். இக்கோவிலில் உள்ள நந்தியின் பெயராலேயே இவ்வாலயம் புகழ்பெற்று விளங்குகிறது.

தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டும் பொழுது, கொடும்பாளூரில் இருந்து தஞ்சாவூர் கோவிலுக்கு இரண்டு நந்திகள் கொண்டுவரப்பட்டன. அதில் பெரிய நந்தி தஞ்சாவூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிறிய நந்தி வேந்தன்பட்டியில் வைக்கப்பட்டது. இதனால் வேந்தன்பட்டி நந்தியை 'தம்பி நந்தி' என்றும் சொல்கிறார்கள். இங்குள்ள நந்தீஸ்வரர், தஞ்சாவூர் நந்தீஸ்வரருக்கு தம்பியாக கருதப்படுவதால் இந்தப் பெயர் வந்ததாம்.

இத்தலத்து நந்திக்கு நெய் அபிஷேகம் செய்தால் உடல் பிணி நீங்கும் என்பதால் இந்த நந்திக்கு நெய் அபிஷேகம் அடிக்கடி நடைபெறுகிறது. அதனால், இங்குள்ள நந்தி, நெய் நந்தீஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றார்.பொதுவாக நம் வீட்டில் அல்லது வெளியில் சிறிதளவு நெய் கொட்டினாலும் எறும்பு, ஈக்கள் குவிந்துவிடும். ஆனால் இந்த நந்தீஸ்வரருக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். நெய் மீது ஈ, எறும்புகள் மொய்ப்பதில்லை. இதற்கு நந்தியின் கொம்புகளுக்கு இடையே ஒரு சக்கரம் உள்ளது. இது இயற்கையாக அமைந்த அமைப்பாக உள்ளது. இந்த சக்கரம் ஆதார சக்தியாக அமைந்துள்ளது. இதன் காரணமாகத்தான் நந்தி மீது அபிஷேகம் செய்யப்படும் நெய் மீது ஈயும், எறும்பும் மொய்ப்பதில்லை. நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிற நெய்யானது, கோவிலுக்குள் இருக்கும் கிணற்றில் சேகரிக்கப்படுகிறது. நெய் பல லிட்டர் கணக்கில் இருந்தும்,அங்கும் ஒரு பூச்சியும் மொய்ப்பதில்லை.

இந்த ஆலயத்தில் மாட்டுப் பொங்கல் அன்று, நந்தியின் அருகில் பிரதோஷ நாயகரை எழுந்தருளச் செய்து, இருவருக்கும் ஒரே நேரத்தில் அபிஷேகம் செய்யும் நடைமுறை உள்ளது. இது வேறு எந்த தலத்திலும் பின்பற்றாத நடைமுறை ஆகும். பின் பழங்கள், பூக்கள், இனிப்பு பலகாரங்கள், போன்றவற்றைக் கொண்டு நந்தியை அலங்காரம் செய்கிறார்கள்.

இக்கோவில் ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறந்த பரிகாரத் தலமாக உள்ளது.

Read More
பிரமனூர் கைலாசநாத சுவாமி கோவில்

பிரமனூர் கைலாசநாத சுவாமி கோவில்

ஆலயத்துளிகள் வாசகர்களுக்கு,

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!

அபூர்வமான ஆறடி உயரமுள்ள சூரியபகவான்

மதுரையில் இருந்து 23 கிமீ தூரத்தில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்திலுள்ள பிரமனூரில் அமைந்துள்ளது கைலாசநாத சுவாமி கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி. பிரம்மதேவன் சிவனால் ஏற்பட்ட சாபம் நீங்க இத்தலத்துக்கு வந்து வழிபட்டதால், இந்த ஊருக்கு (பிரமன்+ஊர்) பிரமனூர் என பெயர் ஏற்படடது.

பல நூறு ஆண்டுகள் பழமையான கோவிலில் உள்ள சூரியபகவான் சிலை மிகவும் அபூர்வமானது. சுமார் 6 அடி உயரமுள்ள இந்த சூரியபகவான் இறைவனை பார்த்த வண்ணம், சுவாமியின் இடப்பாகம் எழுந்தருளி உள்ளார்.

பொதுவாக சூரிய பகவான், சூரியபகவான் இறைவனின் வலப்பாகத்தில் தான் இருப்பார். இத்தகைய சூரிய பகவானை, இந்தியாவின் வேறு எந்த தலத்திலும் நாம் காண்பது அரிது.

மகர சங்கராந்தி

சூரிய பகவான் மகர ராசிக்குள் பிரவேசிக்கும் தினமே மகர சங்கராந்தி ஆகும். சூரியபகவான் வான்வெளியில் வடக்கு நோக்கி தனது பயணத்தை திருப்புகின்ற நாள் தான் மகர சங்கராந்தி. சமசுகிருதத்தில் 'சங்கரமண' என்றால், 'நகரத் துவங்கு' என்று பொருள். இதுவே இவ்விழா சங்கராந்தி என அழைக்கப்பட காரணமாயிற்று. தமிழகத்தில் இந்நாள், பொங்கல் பண்டிகை எனவும், இந்தியாவின் பிற பகுதிகளில் சூரிய வழிபாடு எனும் மகர சங்கராந்தி என்ற பெயரிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் இது தானிய அறுவடையோடு ஒன்றுவதால், அறுவடை திருவிழாவாகவும், சூரியனுக்கு வரவேற்பும், நன்றியும் தெரிவிக்கும் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

Read More
புத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

புத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

போர் வீரன் கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான்

மதுரையில் இருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உசிலம்பட்டிக்கு அருகில் (சுமார் 2 கி.மீ.) அமைந்திருக்கிறது புத்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில். இப்பகுதியில் பாம்பு புற்றுகள் நிறைந்திருந்ததால் 'புத்தூர்' என்ற பெயர் ஏற்பட்டது. பல நூற்றாண்டுகளுக்கு முன், நாகாசுரன் என்ற கொள்ளையன் இப்பகுதி மக்களைத் துன்புறுத்தி வந்தான். இப்பகுதியை ஆண்ட மன்னரால், அவனை அழிக்க முடியவில்லை. முருக பக்தரான அம்மன்னர், அவனை அழிக்கும்படி முருகனிடம் முறையிட்டார். ஒருமுறை நாகாசுரன் மக்களின் உடைமைகளைச் சூறையாடினான். அப்போது, முருகப்பெருமான் ஒரு இளைஞனின் வடிவில் காலணி மற்றும் வீரதண்டை அணிந்து, வாள் மற்றும் கத்தியுடன் அங்கு போர் வீரன் கோலத்தில் வந்து அவனைத் தடுத்தார். கோபமடைந்த நாகாசுரன், அவரைத் தாக்க முயன்றான். முருகன் அவனை வீழ்த்தினார். மக்கள் தங்களைக் காத்த இளைஞனை மன்னரிடத்தில் கூட்டிச் சென்ற போது, அவர் மறைந்து விட்டார். தான் வணங்கிய முருகப்பெருமானே இளைஞனாக வந்து, நாகாசுரனை அழித்தார் என்பதை உணர்ந்த மன்னர், இவ்விடத்தில் அவருக்கு கோயில் கட்டினார்.கோவில் கருவறையில்m மூலவர் சுப்பிரமணியர் போர் வீரன் கோலத்தில், இடுப்பில் கத்தி, பாதத்தில் காலணி, காலில் போர் வீரர்கள் அணியும் தண்டை அணிந்து காட்சி தருகிறார். இத்தகைய முருகனின் கோலம் வேறு எந்த தலத்திலும் காணக் கிடைக்காத ஒன்றாகும். முதலில் சுப்பிரமணியர் உக்கிரமாக இருந்தார். திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் இவரது உக்கிரத்தைக் குறைப்பதற்காக இவருடன் வள்ளி, தெய்வானையைப் பிரதிஷ்டை செய்தனர். அப்போது முருகனின் கையில் இருந்த வில்லுக்கு பதிலாக வேலைப் பிரதிஷ்டை செய்தனர். பயந்த சுபாவம், மனக்குழப்பம் உள்ளவர்கள், அக்குறை நீங்க இத்தல முருகனைப் பிரார்த்திக்கிறார்கள்.

Read More
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்

மார்கழி எண்ணெய்க் காப்பு உற்சவம்

ஆண்டாளுக்கு செய்யப்படும் 'சவுரி அலங்காரம்' எனும் சிறப்பு அலங்காரம்

மார்கழி மாதம் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தது. மாதத்தின் 30 நாள்களுக்கும் ஆண்டாள் அருளிய 30 பாசுரங்களையும் பக்தர்கள் பாடி வழிபடுவர். ஆண்டாள் அவதரித்த தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் மார்கழி திருப்பாவை பாடல் உற்சவம் சிறப்பாக நடைபெறும். இதன் ஒரு பகுதியாக ஆண்டாளுக்கு எண்ணெய்க்காப்பு உற்சவம் நடைபெறும் .

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 8 நாள்கள் மார்கழி எண்ணெய்க் காப்பு உற்சவம் நடைபெறுகிறது. மார்கழி மாதம் 30 நாள்களும் நடைபெற்று வந்த இந்த வைபவத்தை மாத நிறைவின் 7 நாள் வைபவமாக ஸ்ரீராமாநுஜர் மாற்றி அமைத்தார். பிறகு, தோன்றிய மணவாள மாமுனிகள் இந்தத் திருத்தலத்தின் வைபவம் குறித்து அறிந்து தரிசிக்க வருகை புரிந்தார். ஆனால், அவர் வருவதற்குள் மார்கழி முடிந்துவிட்டது. எனவே, வருந்தி ஆண்டாளிடம் முறையிட்டார். ஆண்டாள், கோவில் ஆச்சார்யர்களின் கனவில் தோன்றி மாமுனிக்காக தை முதல்நாளன்றும் நீராட்டு உற்சவம் தொடர வேண்டும் எனக் கட்டளையிட்டார். அதன்படி எட்டாம் நாளும் உற்சவம் நடைபெற்றது.

இந்த மார்கழி எண்ணெய் காப்பு வைபவத்தின் போது ஒவ்வொரு நாளும் காலையில் கள்ளழகர் திருக்கோலம், கண்ணன் அவதாரகோலம், பெரியபெருமாள் அலங்காரம், மகாராணி திருக்கோலம், முத்தங்கி சேவை, தங்கக் கவசம் அணிந்து அலங்காரத் திருக்கோலம் என நாளும் ஓர் அலங்காரத்தில் ஆண்டாள் எழுந்தருளுவார். பின்னர், அன்றைய தினத்தின் பாவைப் பாசுரம் பாடப்படும். 8 நாள்களும் திருமுக்குளத்துக் கரையில் அமைந்துள்ள நீராட்டு மண்டபத்தில் தினசரி மாலை எண்ணெய்க் காப்பு சாற்றும் உற்சவம் நடைபெறும்.

300-க்கும் மேற்பட்ட மூலிகைகளுடன் இளநீர், தாழம்பூ, பசும்பால், நெல்லிக்காய், நல்லெண்ணெய் உள்ளிட்டவற்றால் தயாரிக்கப்பட்ட தைலத்தை ஸ்ரீஆண்டாளுக்குச் சாத்துவர். சவுரி முடியோடு நெற்றிச்சுட்டி, ஜடை என சகல அலங்காரத்துடன் ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சி தருவாள்.

'சவுரி அலங்காரம்' என்பது, ஆண்டாள் தாயாருக்கு சவுரி (குதிரை முடி) கொண்டு செய்யப்படும் ஒரு சிறப்பு அலங்காரமாகும். இது மிகவும் பாரம்பரியமான அலங்காரங்களில் ஒன்றாகும். இந்த சவுரி அலங்காரத்துடன், விலைமதிப்பற்ற ஆபரணங்கள், மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, ஆண்டாள் தாயார் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

எண்ணெய்க் காப்பு முடிந்து ஆண்டாள் பத்தி உலாத்துதல் நடைபெறும். பின்னர், திருமஞ்சனமாகி நீராட்டு நடைபெறும். பொன்குடத்தால் ஆண்டாள் நீராட்டு நடக்கும். நிறைவு திருநாளன்று பெரியாழ்வார் சந்நிதியில் ஆண்டாள் எழுந்தருளுவார். அங்கே 'கணு' உற்சவம் நடைபெறும்.

திருமணம் ஆகாதவர்கள், சவுரி முடியோடு காட்சி தரும் ஆண்டாளை தரிசித்தால் விரைவில் திருமணம் ஆகும் , மக்கள் செல்வம் கைகூடும் என்பது ஐதீகம்.

Read More
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்

கூடாரவல்லித் திருநாள்

வரன் கூடாத மகளிருக்கு கல்யாண யோகம் அளிக்கும் கூடாரவல்லித் திருநாள்

கூடாரவல்லி திருநாள் என்பது மார்கழி மாதம் 27-ஆம் நாள் பெருமாள் கோவில்களில், குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான வைபவம் ஆகும். ஆண்டாள் இயற்றிய திருப்பாவை 30 பாசுரங்களும், நாளுக்கு ஒரு பாசுரமாக 30 நாட்கள் மார்கழி மாதத்தில் ஓதுவது வழக்கம். பெருமாள் கோவில்களில் காலை பூஜையை 'திருப்பாவை பூஜை' என்று சொல்வதும் உண்டு.

ஆண்டாள் தனது நோன்பை நிறைவு செய்து, பெருமாளுடன் இணைந்ததாகக் கருதப்படும் நாள் மார்கழி 27-ஆம் நாள் ஆகும். இந்நாளில், 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா' என்ற 27-ஆம் திருப்பாவை பாசுரத்தின்படி, பெருமாளுக்கு அக்காரவடிசல் (நெய் வடியும் சர்க்கரைப் பொங்கல்) மற்றும் வெண்ணெய் நைவேத்தியம் படைத்து, அன்னதானம் செய்து வழிபடுவார்கள். இது திருமண வரங்கள் அருளும், பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் நாள் ஆகும். 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா' என்ற அந்தப் பாசுரத்தின் முதல் சொல்லையே திருநாள் பெயராக வைத்து விட்டனர்.

பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள், திருமாலான கண்ணனையே கரம் பிடிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் மேற்கொள்ளும் பாவை நோன்பை கடைப்பிடித்தாள். அப்போது ஆண்டாள் பாடிய 30 பாசுரங்கள் கொண்ட தொகுப்பே திருப்பாவை ஆகும். இப்பாசுரங்கள் நாச்சியார் திருமொழி என்று அழைக்கப்படுகின்றன. இது நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் ஒரு பகுதி. அதில், கண்ணனையும், அழகரையும், அரங்கனையும் போற்றிப் பாடியிருக்கிறார் ஆண்டாள்.

இந்நூல், பாவை நோன்பு காலத்தில் செய்ய வேண்டியவற்றைக் கூறி, அந்நோன்பு நோற்க்கும் விதத்தை விளக்குகிறது. இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில், இப்பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்குப் பதில் திருப்பாவை பாடப்படுகிறது. தாய்லாந்தில், மன்னர் முடிசூட்டலில் திருப்பாவை பாடப்படுகிறது.

கண்ணனையே கணவராக அடையவேண்டும் என்பதற்காக மார்கழி மாதம் பாவை நோன்பு கடைப்பிடிக்கும் ஆண்டாள், தினமும் அதிகாலையில் துயிலெழுந்து, தனது சக தோழியரையும் அழைத்துக்கொண்டு நீராடி, கண்ணனின் புகழ் பாடிப் பரவசம் கொள்கிறாள். விரதக் காலங்களில் கடுமையான நியமங்களையும் அனுஷ்டிக்கிறாள் ஆண்டாள். 'நெய்யும், பாலும் உண்ணமாட்டோம்; கண்களுக்கு மையிட்டு அழகு செய்யமாட்டோம்; செய்யத் தகாத செயல்களைச் செய்யமாட்டோம்; தீங்கு விளைவிக்கும் சொற்களைப் பேசமாட்டோம்' என்றெல்லாம் நியமங்களை அனுஷ்டிக்கும் ஆண்டாள், அத்தகைய நியமங்களை நாமும் கடைப்பிடிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறாள். பலவாறாக தன்னை வருத்திக்கொண்டு அந்த கோவிந்தனை அடைய பூஜிக்கிறாள். மேலும் மேலும் பாக்களை வடிக்க அவளுக்கு அருள் செய்கிறான் கோவிந்தன். 26 நாட்கள் கடுமையான விரதம் இருந்த ஆண்டாள், கண்ணனின் திருவுளப்படி மார்கழி மாதத்தின் இருபத்து ஏழாவது நாளில்

"கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன் தன்னைப்

பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே

பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்

ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு

மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்"

என்று பாடி பரவசம் கொள்கிறாள். கோவிந்தனால் அளிக்கப்பட்ட சூடகம், தோள்வளை, தோடு, செவியில் அணியும் கொப்பு, கால் தண்டை உள்ளிட்ட பலவகை அணிகலன்களை அணிந்து, புத்தாடை புனைந்து, அலங்கரித்துக்கொண்டு அரங்கனை எண்ணி அகமகிழ்கிறாள். மேலும் அக்காரவடிசல் எனும் நெய் ஒழுகும் சர்க்கரைப் பொங்கலை கண்ணனுக்கு அமுதாக படைத்து தானும் உண்டு 26 நாள் கடுமையான நோன்பை ஆண்டாள் முடித்தாள். அந்த நாளில் தான் அரங்கன், ஆண்டாளை ஏற்றுக்கொள்வதாக வரமளித்த திருநாள். இந்த பாடலைக்கேட்ட கோவிந்தன் உடனே மயங்கி ஆண்டாளை திருவரங்கத்தில் மணந்துகொள்வதாக வாக்களித்தான். ஆண்டாள் விண்ணப்பித்த சிறிது காலத்திலேயே அரங்கனுடன் இரண்டறக் கலந்தாள் கோதை. அதன் பின்னர், கோதையானவள் ஸ்ரீஆண்டாள் என்று அழைக்கப்படலானார் என்கிறது புராணம். எனவே, ஆசைப்படி, வேண்டுதல்படி, தங்கள் குலதெய்வமான கள்ளழகருக்கு, நேர்த்திக்கடனைச் செலுத்தமுடியவில்லை கோதையால்! அதாவது, அக்கார அடிசில் சமர்ப்பிக்கவில்லை.

ஆண்டாள் காலத்துக்குப் பின்னர் சில நூறு வருடங்களுக்குப் பின்னர் பிறந்த, உடையவர் என்று போற்றப்படும் ராமானுஜர், ஆண்டாளின் நேர்த்திக்கடனைத் தெரிந்து கொண்டு, அழகர்கோவிலில், அழகருக்கு முன்பாக வந்து அர்ச்சகரின் அனுமதியைப் பெற்று, 'நூறு தடா அக்கார அடிசில்' நூறு அண்டாக்களில் சமர்ப்பித்தார். பிறகு, அந்தப் பிரசாதத்தை எடுத்துக் கொண்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார். அங்கே ஸ்ரீவில்லிபுத்தூ திருத்தலத்தில், ஆண்டாள் வயது வித்தியாசமெல்லாம் பார்க்காமல், உடையவரை 'அண்ணா...' என்று அழைத்தாராம். "பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே" - ஒரு பாவையாக இருந்தபோது, அவளது மனோபீஷ்டத்தை பூர்த்தி செய்ய வேண்டியவர் தகப்பன். அதையடுத்து தமையன். எனவே ராமானுஜரை அண்ணா என்று அழைத்தாள் ஆண்டாள் என சொல்லி சிலாகிக்கிறது ஆண்டாள் புராணம்.

ஆண்டாளின் அவதாரத் தலமான ஸ்ரீவில்லிபுத்தூரில், மார்கழி மாதம் வரும் கூடாரவல்லித் திருநாள் வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையில் கருவறை மண்டபத்துக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில், சிறப்பான அலங்காரங்களுடன் ஆண்டாள் நாச்சியார் திருக்காட்சி அளிப்பார். ஆண்டாளை அன்றைய தினம் சேவிப்பது திருமகளை நேரிலேயே தரிசிப்பதற்கு நிகரானது. இந்த விசேஷ நாளில் ஆண்டாள் பாடியதைப்போலவே மொத்தம் 108 பாத்திரங்களில் அக்காரவடிசலும், வெண்ணெயும் வைக்கப்பட்டிருக்கும். கூடாரவல்லி திருநாளின் சிறப்பு அம்சமே இந்த அக்காரவடிசல் மற்றும் வெண்ணெய் நைவேத்தியம்தான்.

திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டு முடிந்ததும், ஆண்டாளுக்கு தீபாராதனை நடைபெறும். ஆண்டாளின் உற்சவ சிலை சந்நிதியில் இல்லாமல், சந்நிதிக்கு முன்பு உள்ள அர்த்தமண்டபத்தில் எழுந்தருளி இருப்பது அவர் அன்றைய நாளில் ஸ்ரீராமாநுஜரை வரவேற்பதற்காகத்தான் என்கிறார்கள். கூடாரவல்லி நாளின்போது, 250 கிலோ அரிசி, 120 லிட்டர் பால், 15 கிலோ கல்கண்டு, கிலோ கணக்கில் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை என எல்லாம் சேர்த்துப் பல மணி நேரம் சுண்டக் காய்ச்சித் தயாரிக்கும் அக்காரவடிசலும், வெண்ணெயும் வடபத்ரசாயி பெருமாளுக்கு நைவேத்தியமாக செய்யப்படுகிறது.

கூடார வல்லித் திருநாளில், இந்த பாடலைப்பாடி,ஆண்டாளிடம் திருமணத் தடை உள்ளவர்கள் பிரார்த்தனையை வைத்தால், வரன் கூடாத மகளிருக்கு கல்யாண யோகம் கைகூடிவரும். நாம் விரும்பியவர்கள் மட்டுமில்லாமல் நம்மை விட்டு விலகிய உறவுகளையும் கூடச் செய்யும் அற்புதமான பாசுரம் "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா" பாடல்.

Read More
குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில்

குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில்

காசி காலபைரவருக்கு இணையான குண்டடம் கொங்கு வடுகநாதர்

கோவை - மதுரை நெடுஞ்சாலையில், பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் நடுவில், பல்லடத்திலிருந்து 28 கி.மீ தூரத்திலும் தாராபுரத்திலிருந்து 16 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில். இறைவன் திருநாமம் விடங்கீசுவரர். இறைவியின் திருநாமம் விசாலாட்சி. இந்தக் கோவிலில் உள்ள காலபைரவ வடுகநாத சுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும்,காசி சென்று கால பைரவ சுவாமியை வணங்க முடியாதவர்கள் இவரை வணங்கினால் போதும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். 'காசு இருந்தால் காசிக்கு செல்லுங்கள்! காசு இல்லாவிட்டால் குண்டடத்தக்கு வாருங்கள்! ' என்று திருமுருக கிருபானந்த வாரியார் கூறி இருக்கிறார். அதாவது காசிக்குச் சென்று கால பைரவரை தரிசிக்க ஆயிரக்கணக்கில் செலவாகும். ஆனால் காசியில் இருக்கும் அதே கால பைரவரைதான், சிவபெருமானின் ஆணையால் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் குண்டடத்துக்கும் வந்து, அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அதனால் ரொம்ப செலவில்லாமல் காசி கால பைரவரை இந்தக் குண்டடத்திலேயே கொங்கு வடுகநாதராக வழிபடலாம் வாருங்கள் என்று அழைத்தார் வாரியார்.

முன்னொரு காலத்தில், விடங்கர் என்ற முனிவர் இந்த காட்டில் தவம் இருக்கும்போது அரக்கர்களால் தவத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க உதவ வேண்டும் என்று காசி விசுவநாதரை மனமுருக வேண்டினார். காசி விசுவநாதர் விடங்கரின் பிரார்த்தனைக்கு இணங்கி வடுக பைரவரை அனுப்பினார். பைவர் இடையூறு செய்த அரக்கர்களை அழித்தார், பின் இலந்தை மரத்தின் அடியில் இருந்த புற்றில் நிரந்தரமாய்க் குடிகொண்டார். அருகே ஒர் அரசமரத்தடியில் பாம்பாட்டீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். சேர நாட்டிலிருந்து மிளகு விற்க வரும் வியாபாரிகள் இந்த அரசமரத்தடியில் இளைப்பாறுவது வழக்கம். ஒரு நாள் காலபைரவர் வயதான அந்தணர் தோற்றத்தில், மிளகு வியாபாரியிடம் சென்று தனக்கு உடல்நிலை சரியில்லை, கஷாயம் வைக்க மிளகு கொஞ்சம் கேட்கிறார், ஆனால் கொடுக்க நினைக்காத வியாபாரி மாட்டு வண்டியில் உள்ள மூட்டையில் மிளகு இல்லை பயறு என்று பொய் சொல்லிவிடுகிறார்.

மதுரை சென்று சேர்ந்த வியாபாரிகள் பாண்டிய மன்னரிடம் விலை பேசி மிளகு மூட்டைகளை விற்று விட்டார்கள். மிளகு மூட்டையை பரிசோதித்துப் பார்க்க, அவை பச்சைப் பயறாக இருப்பதைப் பார்த்து ஏமாற்றி விட்டதாய் கோபப்படுகிறார் மன்னர். வியாபாரிகள் ஒரு பெரியவர் மிளகு கேட்டதாகவும் தாங்கள் மிளகு கொடுக்க மறுத்து மூட்டையில் உள்ளது பச்சைப் பயிறு என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். நம்ப மறுக்கிறார் மன்னர். அப்போது பைரவர் திருவிளையாடல் புரிகிறார், எந்த வியாபாரியிடம் மிளகு கேட்டாரோ அந்த விபாபாரி மேல் அருள் வந்து நான்தான் மிளகு மூட்டைகளைப் பயிறு மூட்டைகளாக மாற்றினேன் என்று சொல்கிறார் பைரவர். அப்போதும் மன்னருக்கு நம்பிக்கை வரவில்லை.என் மகன், மகள் இருவரும் உடல்நிலை சரியில்லாதவர்கள் அவர்களைச் சரி செய்தால் நம்புவதாகச் சொல்கிறார்.

பைரவர் மன்னரிடம் புற்றில் இருக்கும் என்னைக் கோவில் கட்டிக் குடியமர்த்து .அபிஷேகம் செய்து மிளகு சாற்றி வழிபடு. உன் குழந்தைகளைக் குணப்படுத்துகிறேன் என்கிறார். பாண்டிய மன்னரும் அவ்வாறு செய்ய, குழந்தைகள் எட்டு நாட்களில் நலம் பெற்றார்கள்.. பேசமுடியாது இருந்த பெண் குழந்தை பேசியது, நடக்க முடியாது இருந்த ஆண் குழந்தை பைரவர் அருளால் நடந்தது. காசியிலிருந்து கொங்கு நாட்டுக்கு வந்ததால், பைரவருக்கு கொங்கு வடுகநாதர் என்ற பெயர் எழுநதது. கொங்கு நாட்டுக் காசியாக, குண்டடம் விளங்குகின்றது.

பிரார்த்தனை

தேய்பிறை அஷ்டமியில் இவரை தரிசித்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். இவரை வணங்கினால் நவக்கிரக தோஷம் நீங்கிவிடும். பதினோரு மிளகு வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி எட்டு தீபங்களை ஏற்றி வைத்தால் நாம் வேண்டும் பிரார்த்தனை நிறைவேறும்.

ஆஞ்சநேயருக்கு சாற்றுவது போல் இவருக்கு வடை மாலை சாற்றப்படுகிறது. வெண்பொங்கல் நைவேத்தியமும் இவருக்கு விசேஷம். தேங்காய் மூடியிலும், வெட்டப்பட்ட பூசணித் துண்டிலும் எண்ணெய் ஊற்றி சிலர் பரிகாரத்துக்காக விளக்கேற்றுகிறார்கள்.

Read More
தென்காசி காசி விசுவநாதர் கோவில்

தென்காசி காசி விசுவநாதர் கோவில்

ஒரே கோவிலில் இரண்டு நவக்கிரகங்கள் அமைப்பு இருக்கும் அபூர்வ காட்சி

தென்காசி நகரில் அமைந்துள்ளது காசி விசுவநாதர் கோவில். இறைவியின் திருநாமம் உலகம்மை. ஆயிரம் ஆண்டுகள் மேல் பழமையானது இக்கோவில்.

பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரகங்கள் ஒரு பீடத்தின் மேல் அவரவர் திசையை நோக்கியபடி எழுந்தருளி இருப்பார்கள். அரிதாக சில கோவில்களில் நவக்கிரகங்கள் நேர் வரிசையில் அமைந்து இருப்பார்கள். ஆனால், தென்காசி காசி விசுவநாதர் கோவிலில் உள்ள நவக்கிரகங்கள், மண்டபத்தில் அவரவர் திசையிலும், மண்டபத்தின் முன்னால் நேர் வரிசையிலும் எழுந்தருளி இருக்கிறார்கள். இப்படி ஒரே கோவிலில் நவக்கிரகங்கள் இரண்டு விதமாக அமைந்திருப்பது ஒரு அரிய காட்சியாகும்.

Read More
தஞ்சாவூர் கோடியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

தஞ்சாவூர் கோடியம்மன் கோவில்

சிவபெருமானை தன் தலையில் சூடியிருக்கும் கோடியம்மன்

தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், தஞ்சையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது கோடியம்மன் கோவில். தஞ்சையின் எல்லையில் குடிகொண்டிருக்கும் இந்த அம்மன் தஞ்சையின் எல்லை தெய்வமாக வீற்றிருந்து அருள்புரிகிறாள்.

முன்னொரு காலத்தில், தற்போது கோடியம்மன் கோவில் இருக்கும் பகுதியானது தேவர்கள் தவம் செய்த சோலைவனமாக இருந்தது. சிவபெருமானை வழிபட்ட தஞ்சன் என்ற அரக்கன் அவரிடம் பல வரங்களைப் பெற்றான். பின்னர் தன்னுடைய சக்தியின் காரணமாக தேவர்களை துன்பம் செய்துவந்தான். தேவர்கள் ஒன்றுகூடி சிவனிடம் முறையிட்டனர். அவர் தனது அம்பிகையான ஆனந்தவல்லியிடம் தஞ்சனை அழிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனந்தவல்லி பச்சைக்காளியாக வடிவெடுத்து அசுரனை அழிக்க வந்தாள். அசுரனோ, அழிய அழிய மீண்டும் தோன்றினான். இவ்வாறு கோடி அவதாரங்கள் எடுத்தான்.இதனால் கோபமடைந்த ஆனந்தவல்லியின் முகம் சிவந்தது. அவள் சாந்தத்தை கைவிட்டு பவளக்காளியாக ( (பவளம் – சிவப்பு நிறம்) மாறினாள். தஞ்சனை வதம் செய்தாள். தஞ்சனின் உடலிலிருந்து பெருகிய ரத்தம் ஆறாக ஓடியது. அந்த எதிரொளிப்பில் காளியின் உருவமே சிவப்பானது. கோடி அவதாரம் எடுத்த அசுரனை அழித்ததால் அம்பாள் கோடி அம்மன் என்றும் வழங்கப்பட்டாள். தஞ்சன் தான் இறக்கும் தருவாயில் தன் பெயரால் இந்த ஊர் அழைக்கப்பட வேண்டும் என்று வரம் பெற்றான். அதன்படியே தஞ்சபுரி என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி தஞ்சாவூர் என்றானது.

சிவனின் பிரதிநிதியாக வந்து அசுரனை அழித்ததால், கோடியம்மன் சிவபெருமானையே தனது தலையில் சுமந்து கொண்டாள். சிவபெருமான் தன் தலையில் கங்கையை சூடியிருப்பது போல, இந்த அம்மன் தன் தலையில் சிவபெருமானையே சூடியிருப்பது சிறப்பாகும். எனவே இக்கோவிலில் அம்மனுக்குரிய சிங்க வாகனத்திற்கு பதிலாக நந்தி வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் பூஜை நடக்கும்போது சற்று தொலைவில் உள்ள ஆனந்தவல்லி சமேத தஞ்சபுரீஸ்வரர் கோயிலிலும் பூஜை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரார்த்தனை

குழந்தைச் செல்வம் கிட்டவும், செய்வினை நீங்கவும் இங்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர்.

காளியாட்டத் திருவிழா

மாசி கடைசி வாரம் அல்லது பங்குனி முதல்வாரத்தில் பச்சைக்காளி, பவளக்காளி சிலைகளை வர்ணம்பூசி எடுத்து வீடு வீடாக சென்று காளியாட்டம் நடக்கும். இதை காளியாட்டத் திருவிழா என்கிறார்கள். இந்த திருவிழா காலத்தில் பால்குடம் எடுப்பது மிகவும் விசேஷம். தஞ்சாவூர் மேல வீதியில் பச்சைக்காளி பவளக்காளி ஆகியோருக்கு தனி சன்னதி உள்ளன.

Read More
கூகலூர் அதிசய ஆஞ்சநேயர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கூகலூர் அதிசய ஆஞ்சநேயர் கோவில்

கூப்பிய கரங்களிடையே சிவலிங்கத்தை ஏந்திய அதிசய ஆஞ்சநேயர்

ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து 23 கி.மீ. தூரத்திலும், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 11 கி.மீ. தூரத்திலும் உள்ள கூகலூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது அதிசய ஆஞ்சநேயர் கோவில்.

இக்கோவில் கருவறையில் அதிசய ஆஞ்சநேயர், ஆறடி உயரத்தில் நின்ற திருவடிவினராக, கூப்பிய கரங்களிடையே சிவலிங்கத்தை ஏந்தியவாறு வித்தியாசமாக காட்சி தருகிறார். இவர் அதிசய ஆஞ்சநேயர் என்றழைக்கப்படுகிறார். ஆஞ்சநேயரின் இந்த அபூர்வ தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

பிரார்த்தனை

இந்த அதிசய ஆஞ்சநேயர் தினமும் தங்கள் வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்துகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மகப்பேறு இல்லாதவர்களும், நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த அதிசய ஆஞ்சநேயரை வழிபட்டு நற்பலன்கள் பெறுகிறார்கள். உடல்நிலை சரியில்லாதவர்கள், மகப்பேறு இல்லாதவர்கள் ஏதாவது ஒரு சனிக்கிழமை இங்கே வந்து வடைமாலை சாத்தி இவரை வழிபட்டால் நற்பேறு கிட்டும் என்பது ஐதீகம்.

Read More
திருமால்பாடி ரங்கநாதர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருமால்பாடி ரங்கநாதர் கோவில்

சிறிய குன்றின் மேல் அருள் பாலிக்கும் ரங்கநாதர்

வேலையில் இடமாற்றம் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் 'டிரான்ஸ்ஃபர் பெருமாள்'

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தேசூர் (வந்தவாசி - சேத்பட் வழி) என்னும் சிறிய கிராமத்தின் அருகே உள்ளது திருமால்பாடி ரங்கநாதர் கோவில். சிறிய குன்றின் மேல் அமைந்திருக்கும் இக்கோவிலுக்கு செல்ல 108 படிகள் உள்ளன. பெருமாளின் திருநாமம் ரங்கநாதர்.தாயார் திருநாமம் வேதநாயகி. வேத வியாசரின் மகனான சுகப்பிரம்ம ரிஷி அவர்களால், பெருமாளின் கட்டளைப் படி நிர்மாணிக்கப் பட்டது இக்கோவில்.

கருவறையில் 15 அடி நீளமுள்ள ஐந்து தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது ஸ்ரீ ரெங்கநாதர், சயன திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார். விண்ணுலகம், மண்ணுலகம் என அளந்துவிட்டு மூன்றாவது அடியாக மகாபலிச் சக்கரவர்த்தியின் தலையின் மீது தன் அடியை வைத்து அளந்ததற்கு அடையாளமாக தனது மூன்று விரல்களைக் காட்டியவாறு, ஆதிசேஷன் மீது சயனித்தபடி, தலைக்கு மரக்கால் வைத்து, தனது திருவடியை தாமரை மலர் மீது வைத்து தரிசனம் தருகிறார். அருகே பூதேவி - அமிர்தவல்லியாகவும், ஸ்ரீதேவி - ஸ்ரீ வேதவல்லியாகவும் காட்சி தருகின்றனர்.

வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் சம்பந்தமான பிரச்சினைகளை இத்தலத்து ஸ்ரீ ரெங்கநாதர் தீர்த்து வைப்பார். இதனாலேயே இக்கோவிலில் உள்ள பெருமாளுக்கு, 'டிரான்ஸ்ஃபர் பெருமாள்' (Transfer Perumal) என்ற சிறப்பு பெயரும் உண்டு. அயல்நாட்டு வேலை வாய்ப்பும் இத்தல அரங்கனின் அருளால் பலருக்கும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More
மணிமங்கலம்  தர்மேசுவரர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

மணிமங்கலம் தர்மேசுவரர் கோவில்

நான்கு விநாயகர்கள் ஒரே வரிசையில் அமர்ந்திருக்கும் அரிய காட்சி

நான்கு வேதங்கள் வந்து வழிபட்ட விநாயகர்

சென்னை தாம்பரத்தில் இருந்து 9 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது மணிமங்கலம் தர்மேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் வேதநாயகி. இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

அரிதாக சில சிவன் கோவில்களில், ஒரே சன்னதியில் இரண்டு அல்லது மூன்று விநாயகர்கள் அடுத்தடுத்து இருப்பார்கள். ஆனால் இவ்வூரில் ஒரே சன்னதியில் வரிசையாக நான்கு விநாயகர்களைத் தரிசிக்கலாம். ரிக், யஜுர், சாமம் மற்றும் அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும், இங்கு விநாயகரை வழிபட்டதாக ஐதீகம். இதன் அடிப்படையில் இக்கோவிலில் இருந்து சற்று தூரத்தில், ஒரே சன்னதியில் நான்கு விநாயகர்கள், அடுத்தடுத்து காட்சி தருகின்றனர். இவர்கள் சதுர் வேத விநாயகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.நான்கு விநாயகருக்கும் பொதுவாக எதிரில் ஒரு யானை வாகனம் இருக்கிறது.

கோவில் பிரகாரத்தில் பின்புறம் இரண்டு திசைகளிலும், இரண்டு விநாயகர்கள் இருக்கின்றனர். இதில் ஒருவருக்கு வெண்ணிற வஸ்திரம், மற்றொருவருக்கு காவி நிறத்தில் வஸ்திரம் அணிவிப்பது தனிச்சிறப்பாகும்.

Read More
சிவகங்கா கவிகங்காதீஸ்வரர் கோவில்

சிவகங்கா கவிகங்காதீஸ்வரர் கோவில்

அபிஷேகம் செய்யப்பட்ட நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம்

பெங்களூருவில் இருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் தும்கூர் மாவட்டத்தில், சிவகங்கா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள மலையடிவாரத்தில் ஒரு குகையில் லிங்க வடிவத்தில் குடிகொண்டு அருள்பாலிக்கிறார் சிவபெருமான். இத்தல இறைவனுக்கு 'கவிகங்காதீஸ்வரர்' என்று பெயர்.

5 அடி உயரமும், நல்ல பருமனும் கொண்ட இந்த லிங்கத்தை மிக அருகில் நின்று தரிசனம் செய்யலாம். இந்த ஆலயத்தில் இறைவழிபாடு செய்யவும், அபிஷேகத்திற்காகவும் நெய் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கி அபிஷேகத்தின் போது அர்ச்சகரிடம் கொடுத்தால், அவர் மந்திரங்கள் சொல்லி நெய்யைக் கொண்டு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வார்.

மீண்டும் அந்த நெய் கொடுத்தவருக்கே பிரசாதமாக வந்து சேரும். ஆனால் அப்படி பிரசாதமாக வரும் நெய், வெண்ணெயாக மாறி இருக்கும் என்பதுதான் அதிசயம். இந்த வெண்ணெயை வீட்டுக்குக் கொண்டு செல்லலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.இப்படி பிரசாதமாக அளிக்கப்படும் வெண்ணெய் பல நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சாதாரணமாக வெண்ணெய்தான் நெய்யாக உருகுவது இயற்கை. ஆனால் இக்கோவிலில் அபிஷேகம் செய்யப்படும் நெய், வெண்ணெயாக மாறுவது ஒரு அதிசய நிகழ்வாகும்.

Read More
திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோவில்
சிவபெருமான், Shiva Alaya Thuligal சிவபெருமான், Shiva Alaya Thuligal

திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோவில்

ஒரே வரிசையில் நிற்கும் நவக்கிரகங்கள்

திருவாரூரில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்குவளை. இறைவன் திருநாமம் பிரம்மபுரீஸ்வரர், கோளிலிநாதர். இறைவியின் திருநாமம் வண்டமர் பூங்குழலி. திருக்குவளை தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். இத்தலத்து இறைவனுக்குரிய நடனம் பிருங்க நடனம். வண்டு மலருக்குள் குடைந்து, குடைந்து ஆடுதல் போன்றதுதான் பிருங்க நடனம்.

சிவபெருமானின் திருமுடி கண்டதாக பிரம்மா பொய்கூறியதால் அவருக்கு சாபம் உண்டாகிறது. எனவே படைக்கும் தொழில் தடைபடுகிறது.நவகிரகங்களுக்கு தோஷம் உண்டாயிற்று. இதனால் நவகிரகங்களும் தத்தமது வேலையை சரியாக செய்ய முடியாமல் திணறுகின்றன. இங்கு,நவக்கிரகங்கள் தங்கள் தோஷம் நீங்க, தென்திசை நோக்கி வக்கிரமின்றி வரிசையாக நின்று இறைவனை வழிபட்டதால், இக்கோவிலில், அவை ஒரே திசை நோக்கி வரிசையாக காட்சி அளிக்கின்றன.நவக்கிரகங்களின் குற்றம் நீக்கியருளியதால், இத்தல இறைவனுக்கு கோளிலிநாதர் என்ற திருநாமம் ஏற்பட்டது. இதனால், கோளிலிநாதரை வழிபடுவோருக்கு நவக்கிரகங்களின் தோஷம் நீங்கும் என்பது இத்தலத்தின் சிறப்பு. இதனையே, 'கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமான்' என்று தேவாரப்பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார் திருஞானசம்பந்தர்.

Read More
கீவளூர் கேடிலியப்பர் கோவில்

கீவளூர் கேடிலியப்பர் கோவில்

தேவாதி தேவர்கள் இன்னிசைக்க நடராஜர் வலது காலைத் தூக்கி ஆடும் அபூர்வக் காட்சி

பொதுவாக சிவாலயங்களில் நடராஜர் தன் இடது காலைத் தூக்கி ஆடும் தாண்டவக் கோலத்தைதான் நாம் தரிசிப்போம். ஆனால், நடராஜர் தன் வலது காலைத் காலைத் தூக்கி ஆடும் அபூர்வக் காட்சியை நாம் மதுரை மற்றும் கீவளூரில் மட்டுமே தரிசிக்க முடியும்.

தேவாரத் தலமான கீவளூர் கேடிலியப்பர் கோவில், நாகப்பட்டிணம்-திருவாரூர் சாலையில் 12 கீ.மீ. தொலைவில் உள்ளது.

நடராஜரின் அபூர்வத் தாண்டவக் கோலத்தின் பின்னணி நிகழ்ச்சி

ஒரு சமயம், பரமேசுவரன்-பார்வதி திருமணத்தைக் காண தேவர்கள், முனிவர்கள் முதலானோர் கைலாயத்தில் கூடினர். அதனால் உலகத்தின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது.இதனை சரி செய்ய அகத்திய முனிவரை சிவபெருமான் தென் திசைக்கு அனுப்பினார். அகத்திய முனிவர் தென் திசை வந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஒதி வழிபட்டதும் உலகம் சமன் நிலையடைந்தது. தன் பணியை முடித்த அகத்திய முனிவருக்கு இறைவனின் திருமணக் கோலத்தைக் காண ஆசை ஏற்பட்டது. அதற்கு சிவபெருமான் அகத்திய முனிவர் விரும்பும் தலத்தில் தன் திருமணக் கோலத்தைக் காணலாம் என அருளினார். அதனபடி திருமறைக்காடு தலத்தில் அகத்திய முனிவர் சிவ பூஜை செய்து வேண்டியபோது தனது திருமணக் கோலத்தை சிவபெருமான் அவருக்கு காட்டி அருளினார். அதைக் கண்டு மனமகிழ்ந்த அகத்திய முனிவர், அடுத்து இறைவனின் வலது பாத தரிசனம் கிடைக்க வேண்டினார். அதற்கு சிவபெருமான், அகத்திய முனிவரை பத்ரிகாரண்யத் தலத்தில் (கீவளூரின் புராணக் காலப் பெயர்) தன்னை பூஜை செய்து வழிபடும்படியும், அங்கு அவருக்கு தன் விக்ஷேச வலது பாத தரிசனத்தைத் தருவதாகவும் அருளினார்.

அகத்திய முனிவர் கீவளூர் தலத்துக்கு வந்து சிவபெருமானை வழிபடலானார். சிவபெருமான்,ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று அகத்திய முனிவருக்கு கால் மாறி ஆடி, தன் வலது பாத தரிசனத்தைக் காட்டி அருளினார். அப்போது நடராஜப் பெருமானும், சிவகாமி அம்மையும் தாணடவமாட அதற்கு விநாயகரும், முருகப்பெருமானும் பாட்டுப் பாட, பிரம்மா தாளம் போட, சரஸ்வதி வீணை வாசிக்க, விஷ்ணு மத்தளம் வாசிக்க, மகாலஷ்மி கர தாளம் போட, இந்திரன் புல்லாங்குழல் வாசிக்க, வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி முனிவர் உடனிருக்க அகத்திய முனிவருக்குக் காட்சி தந்தார்.

Read More
மணக்கால் அய்யம்பேட்டை சேஷபுரீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மணக்கால் அய்யம்பேட்டை சேஷபுரீஸ்வரர் கோவில்

அம்பிகையின் அந்தப்புரமாக விளங்கிய தலம்

வேறு எந்த தலத்திலும் இல்லாத அம்பிகையின் சிறப்பு திருநாமம்

திருவாரூர்-கும்பகோணம் பேருந்து சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள மணக்கால் அய்யம்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ளது சேஷபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் அந்தப்புர நாயகி. இத்தலம் முற்காலத்தில் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது, நான்கு (சதுர்) வேதங்களைப் படித்த வேத பண்டிதர்கள் நிறைந்த ஊர் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது.

சிவபெருமான் பார்வதி திருமணத்தோடு இத்தலம் தொடர்புடையது. சிவபெருமானுடன் மீண்டும் இணைவதற்காக, பார்வதி, இத்தலத்துக்கு மிக அருகில் உள்ள பெருவேளூரில் தவம் மேற்கொண்டார். இறுதியில் கரவீரம் என்னும் தலத்தில் சிவபெருமானை மணந்து கொண்டார். சிவன் மற்றும் பார்வதியின் திருமணத்தை இத்தலத்து வேத பண்டிதர்கள் நடத்தினார்கள். திருமணத்திற்குப் பிறகு, அடுத்த நாள் காலை கைலாசத்திற்குச் செல்வதற்கு முன், இத்தலத்திலுள்ள அந்தப்புரத்தில் பார்வதி தங்கினார், எனவேதான் பார்வதிதேவி அந்தப்புர நாயகி என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் எழுந்தருளி உள்ளார். அம்பிகையின் இந்த திருநாமம் தனிச்சிறப்பு உடையது. வேறு எந்த தலத்திலும் அம்பிகைக்கு இந்த திருநாமம் கிடையாது.

பிரார்த்தனை

சிவபெருமான்-பார்வதி திருமணத்துடனான தொடர்பு காரணமாக, திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கும், குழந்தைகளைப் பெற விரும்புபவர்களுக்கும் இது ஒரு பிரார்த்தனை தலமாகும்.

Read More
திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில்

என்னை பெற்ற தாயார் என்ற வித்தியாசமான திருநாமம் கொண்ட மகாலட்சுமி

சகல சௌபாக்கியங்களையும் தரும் வைபவ லட்சுமி

திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையில் இருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருநின்றவூர். பெருமாளின் திருநாமம் பக்தவத்சல பெருமாள் . தாயாரின் திருநாமம் என்னை பெற்ற தாயார். மகாலட்சுமி என்னும் திருமகள் தனது தந்தையான சமுத்திர ராஜனிடம் கோபித்துக் கொண்டு நின்ற இடம் தான் திருநின்றவூர். இத்தலத்து தாயார் 'என்னைப் பெற்ற தாயார்' என்ற திருநாமம் பெற்றதற்கு பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.

பெருமாளிடம் கோபித்துக் கொண்டு வைகுண்டத்தை விட்டு 'திரு'வாகிய மகாலட்சுமி இங்கு வந்து நின்றதால் 'திருநின்றவூர்' ஆனது. அவளது தந்தையான சமுத்திரராஜன் அவளை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல வந்தான். (லட்சுமி பாற்கடலில் பிறந்தததால் சமுத்திரராஜன் தந்தையாகிறான்). மகாலட்சுமி வர மறுத்து விட்டாள். சமுத்திரராஜன் மீண்டும் வைகுண்டம் சென்று பெருமாளிடம், "பகவானே! தாங்கள் வந்து தேவியை அழைத்து வர வேண்டும்" என்றான். அதற்கு பெருமாள், "நீ முன்னே செல். நான் பின்னால் வருகிறேன்"என்கிறார். சமுத்திரராஜன் முன்னால் சென்று மகாலட்சுமியிடம், நான் உனக்கு தந்தையல்ல, நீயே "என்னைப்பெற்ற தாயார்" எனவே வைகுண்டம் வந்து ஆட்சி செய்ய வேண்டும்" என மன்றாடினான். பெருமாளும் சமாதானம் செய்யவே, மகாலட்சுமி வைகுண்டம் செல்கிறாள். பக்தன் வேண்டுகோளுக்கிணங்க பெருமாள் இங்கு வந்ததால் அவரது திருநாமம் "பக்தவத்சலன்" ஆனது. சமுத்திரராஜன் மகாலட்சுமியை "என்னைப்பெற்ற தாயே" என அழைத்ததால் அதுவே இத்தலத்தின் தாயார் பெயராகி விட்டது. சமுத்திரராஜனின் வேண்டுகோளுக்கிணங்க பெருமாளும் தாயாரும் இத்தலத்தில் திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள்.

ஒரு சமயம் குபேரன் தன் நிதியை இழந்து வாடியபோது, இத்தலத்து "என்னைப்பெற்ற தாயாரை"வழிபட்டு தனது இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றான் என்கிறது புராணம். இங்கு தாயார் சகல சௌபாக்கியங்களையும் தரும் வைபவலட்சுமியாக அருள் பாலிக்கின்றார். எனவே, இங்கு வந்து வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வரியங்களையும் திருமகள் தந்தருளுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோவில்

பதினொரு முகங்கள் கொண்ட அபூர்வ முருகன்

இராமநாதபுரம் குண்டுக்கரை எனும் இடத்தில் அமைந்துள்ளது சுவாமிநாத சுவாமி கோவில்.

சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்திருந்தார். அப்போது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அதே வடிவில், விஸ்வரூபம் எடுத்த நிலையில் இத்தலத்து உற்சவர் முருகன் தரிசனம் தருகிறார். இப்படி பதினொரு முகங்கள் கொண்ட முருகனை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

முருகன் குன்றின் மீது அமர்ந்து தந்தைக்கு உபதேசம் செய்யும் அரிய காட்சி

மற்ற கோயில்களில் எல்லாம், பிரணவ மந்திரத்தின் பொருள் கூற, முருகன் சிவனின் மடியில் அமர்ந்திருப்பது போல சிலை இருக்கும். ஆனால், இத்தலத்தில் தகப்பன் சுவாமியான முருகன் குன்றின் மீது அமர்ந்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல, சிவன் அதை நின்று கேட்கும் நிலையில் அமைந்துள்ளது. முருகனின் இந்த நிலை, இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

சுவாமிநாத சுவாமி கோவில் என பெயர் வந்த வரலாறு

300 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரத்தில் வாழ்ந்த பாஸ்கர சேதுபதி குண்டுக்கரை முருகன் கோயிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்வார்.

ஒருமுறை இவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்தபோது, இவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி, குண்டுக்கரை முருகன் கோயிலில் உள்ள பழைய முருகன் சிலையை எடுத்து விட்டு புதிதாக முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும், உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும் என கூறி மறைந்தார்.

ராமநாதபுரம் வந்த பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி குண்டுக்கரை சென்று அந்த கோயிலிலிருந்த பழைய முருகன் சிலையை அகற்றி விட்டு புதிதாக முருகன் சிலை பிரதிஷ்டை செய்தார். சுவாமிமலை முருகனின் பெயரான சுவாமிநாதன் என்பதையே இத்தலத்து முருகனுக்கும் சூட்டினார்.

ஐப்பசி கந்த சஷ்டி சந்தன காப்பு அலங்காரம்

மூலவர் கவாமிநாத சுவாமிக்கு ஐப்பசி கந்த சஷ்டியன்று சந்தன காப்பு அலங்காரம் செய்யப்படும். அன்று மட்டும் பதினோரு முகங்களுடன் தரிசனம் தரும் அவரது திருஉருவம் பார்ப்போரை பரவசம் அடையச் சேய்யும்.

.

Read More
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில்

நள்ளிரவில் சொர்க்கவாசல் திறக்கப்படும் திவ்ய தேசம்

நித்தமும் திறந்திருக்கும் பரமபத சொர்க்க வாசல்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு தெற்கில் 8 கிமீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருக்கோஷ்டியூர். திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 104-வது திவ்ய தேசம் இக்கோவில் ஆகும்.பெருமாளின் திருநாமம் சவுமிய நாராயண பெருமாள். தாயாரின் திருநாமம் திருமாமகள்.

பொதுவாக, பெருமாள் கோவில்களில் அதிகாலை, மாலை நேரங்களில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்படும். ஆனால், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் மட்டுமே நள்ளிரவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் வைகுண்ட ஏகாதசியன்று திறந்து அன்று மட்டுமே பக்தர்கள் அந்த வாசல் வழியாக செல்லுவார்கள். ஆனால், இங்கு வைகுண்ட பரமபத அமைப்பு வழியாக தினமும் பக்தர்கள் சென்று வழிபடலாம்.

Read More
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்

வைகுண்ட ஏகாதசியன்று திருப்பதி வெங்கடேசுவர பெருமாளுக்கு திருஷ்டி பொட்டாக வைக்கப்படும் திருவண்ணாமலை மகாதீப முதல் மை

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம், சிவன் அக்னி பிழம்பாக நின்றதை நினைவுபடுத்தும் வகையில் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், 2668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும் பெரும் தீபமாகும். இது திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாய் சிவன் காட்சியளித்ததைச் சிறப்பிக்கிறது,

ஐந்து அடி உயரமும், 250 கிலோ எடையும் கொண்ட கொப்பரையில் 3,500 லிட்டர் நெய் ஊற்றப்பட்டு, 1500 மீட்டர் காடா துணியால் ஆன திரியின் மூலம் இந்த மகாதீபம் ஏற்றப்படும். இந்த மகாதீபம் தொடர்ந்து பதினோரு நாட்கள் எரியும். திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றும் உரிமை பெற்றவர்கள் பர்வதராஜ குலத்தினர். இந்தப் பர்வத ராஜ குலத்தினரே மகாதீபம் அணைந்த பின் தீபக் கொப்பரையை மலையிலிருந்து இறக்கி கோவில் வசம் ஒப்படைப்பார்கள். இந்தக் கொப்பரையில் இருந்து எடுக்கப்படும் முதல் மை, வைகுண்ட ஏகாதசி அன்று திருப்பதி வெங்கடேசுவர பெருமாளுக்கும், மலையப்ப சுவாமிக்கும் திருஷ்டி பொட்டாக வைக்கப்படுகின்றது. மார்கழி ஆருத்ரா தரிசனத்தன்று திருவண்ணாமலை நடராஜப் பெருமானுக்கும் சாற்றப்படுகின்றது.

Read More
அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோவில்

அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோவில்

கழுத்தில் கபால மாலை அணிந்து காட்சி தரும் கால பைரவர்

கால பைரவர் மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் தனிச்சிறப்பு

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 79 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோவில். இக்கோவிலில் ஆட்சிபுரீஸ்வரர் , உமையாட்சீஸ்வரர் என இரண்டு மூலவர்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள். இளங்கிளியம்மை, உமையாம்பிகை என இரண்டு அம்மன்கள் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கிறார்கள்.

இக்கோவிலில் இருக்கும் கால பைரவர் வித்தியாசமான கோலத்தில் காணப்படுகிறார். மிக சிறிய உருவ தோற்றத்துடன் இருக்கும் இந்த கால பைரவர் கழுத்தில் ஆளுயர கபால மாலை அணிந்து காட்சி தருகிறார். பொதுவாக சிவாலயங்களில் கால பைரவர் தெற்கு அல்லது வடக்கு நோக்கி எழுந்தருளி இருப்பார். ஆனால் இத்தலத்தில் கால பைரவர் மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். இத்தகைய நிலையில் இருக்கும் கால பைரவரை, நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

இவரை வழி பட்டால் கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். தொழில் தொடங்கும் முன்பும் இவரை வழிபட வேண்டும். எதிரிகள் தொல்லை நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவசியம் இவரை வழிபட்டால் பலன் கிடைக்கும்.

Read More