வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் கோவில்

நந்திக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நெய் மீது ஈ, எறும்பு மொய்க்காத அதிசயம்

மாட்டுப் பொங்கலன்று நந்தியின் அருகில் பிரதோஷ நாயகரை எழுந்தருளச் செய்து அபிஷேகம் செய்யும் நடைமுறை

புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ. தொலைவில், பொன்னமராவதிக்கு அருகே உள்ள வேந்தன்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது நெய் நந்தீஸ்வரர் கோவில். இறைவன் சொக்கலிங்கேசுவரர். இறைவியின் திருநாமம் மீனாட்சி அம்மன். இக்கோவிலில் உள்ள நந்தியின் பெயராலேயே இவ்வாலயம் புகழ்பெற்று விளங்குகிறது.

தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டும் பொழுது, கொடும்பாளூரில் இருந்து தஞ்சாவூர் கோவிலுக்கு இரண்டு நந்திகள் கொண்டுவரப்பட்டன. அதில் பெரிய நந்தி தஞ்சாவூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிறிய நந்தி வேந்தன்பட்டியில் வைக்கப்பட்டது. இதனால் வேந்தன்பட்டி நந்தியை 'தம்பி நந்தி' என்றும் சொல்கிறார்கள். இங்குள்ள நந்தீஸ்வரர், தஞ்சாவூர் நந்தீஸ்வரருக்கு தம்பியாக கருதப்படுவதால் இந்தப் பெயர் வந்ததாம்.

இத்தலத்து நந்திக்கு செய்தால் உடல் பிணி நீங்கும் என்பதால் இந்த நந்திக்கு நெய் அபிஷேகம் அடிக்கடி நடைபெறுகிறது. அதனால், இங்குள்ள நந்தி, நெய் நந்தீஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றார்.பொதுவாக நம் வீட்டில் அல்லது வெளியில் சிறிதளவு நெய் கொட்டினாலும் எறும்பு, ஈக்கள் குவிந்துவிடும். ஆனால் இந்த நந்தீஸ்வரருக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். நெய் மீது ஈ, எறும்புகள் மொய்ப்பதில்லை. இதற்கு நந்தியின் கொம்புகளுக்கு இடையே ஒரு சக்கரம் உள்ளது. இது இயற்கையாக அமைந்த அமைப்பாக உள்ளது. இந்த சக்கரம் ஆதார சக்தியாக அமைந்துள்ளது. இதன் காரணமாகத்தான் நந்தி மீது அபிஷேகம் செய்யப்படும் நெய் மீது ஈயும், எறும்பும் மொய்ப்பதில்லை. நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிற நெய்யானது, கோவிலுக்குள் இருக்கும் கிணற்றில் சேகரிக்கப்படுகிறது. நெய் பல லிட்டர் கணக்கில் இருந்தும்,அங்கும் ஒரு பூச்சியும் மொய்ப்பதில்லை.

இந்த ஆலயத்தில் மாட்டுப் பொங்கல் அன்று, நந்தியின் அருகில் பிரதோஷ நாயகரை எழுந்தருளச் செய்து, இருவருக்கும் ஒரே நேரத்தில் அபிஷேகம் செய்யும் நடைமுறை உள்ளது. இது வேறு எந்த தலத்திலும் பின்பற்றாத நடைமுறை ஆகும். பின் பழங்கள், பூக்கள், இனிப்பு பலகாரங்கள், போன்றவற்றைக் கொண்டு நந்தியை அலங்காரம் செய்கிறார்கள்.

இக்கோவில் ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறந்த பரிகாரத் தலமாக உள்ளது.

 
Next
Next

பிரமனூர் கைலாசநாத சுவாமி கோவில்