சீயாத்தமங்கை அயவந்தீஸ்வரர் கோவில்
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் சீயாத்தமங்கை. இத்தலம் நன்னிலம் - திருமருகல் - நாகூர் சாலை வழியில் அமைந்திருக்கிறது. திருமருகலில் இருந்து நாகூர் செல்லும் சாலையில் ஒரு கி.மீ. சென்றவுடன் 'கோயில் சீயாத்தமங்கை' என்ற வழிகாட்டி கல் உள்ளது. அவ்விடத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. இறைவன் திருநாமம் அயவந்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் இருமலர்க்கண்ணம்மை, உபய புஷ்ப விலோசனி.
இக்கோவிலில் இறைவனும், அம்பிகையும் மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார்கள். இறைவன், அம்பிகை சன்னதிகள் தனித்தனி வாயில்களுடனும், கோபுரங்களுடனும் இரண்டு தனி கோவில்களாக விளங்குகின்றன.
அம்பிகை இருமலர்க்கண்ணம்மை நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். இந்த அம்பிகை சிவ சொரூபியாக விளங்குகின்றாள். அம்பிகை சிவபெருமானைப் போல் ஜடாமுடி தரித்து, நெற்றியில் மூன்றாவது கண்ணுடன் காட்சியளிக்கிறார். அம்பிகையின் ஜடாமுடியில் சூரிய, சந்திர பிறைகள் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் அம்பிகையின் கழுத்தில் ருத்ராட்ச மணி அலங்கரிக்கின்றது. அம்பிகையின் தனிக் கோவிலில், சிவபெருமானுக்கு அமைந்த பரிவார தெய்வங்கள் போல் நந்தி, விநாயகர், சுப்பிரமணியர், பைரவர் அமைந்திருப்பது இத்தலத்து அம்பிகையின் தனிச்சிறப்பாகும்.
திருநறையூர் சித்தநாதேசுவரர் கோவில்
தட்சிணாமூர்த்தி மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் அரிய காட்சி
நவக்கிரக தோஷத்தை நிவர்த்திக்கும் தட்சிணாமூர்த்தி
கும்பகோணம்- குடவாசல் பாதையில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள, தேவாரப் பாடல் பெற்ற தலம் திருநறையூர். இறைவன் திருநாமம் சித்தநாதேசுவரர். இறைவி சௌந்தர நாயகி. இந்த ஊரின் புராண பெயர் நரபுரம், குபேரபுரம், பிரமபுரம், சுகந்தவனம், திருநறையூர்ச்சித்திரம். சித்தர்கள் வழிபட்டதால் சித்த நாதேஸ்வரர் எனவும், தேவர்கள் வழிபட்டதால் தேவேஸ்வரர் என்றும், சித்தர்கள் இங்கு கோயில் கொண்டிருப்பதால் இப்பகுதி சித்தீஸ்வரம் எனவும் அழைக்கப்படுகிறது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் என்ற வைணவத்தலம், சித்தநாதேசுவரர் ஆலயத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அதுபோல இக்கோவிலில், வழக்கமாக தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி அதற்கு மாறாக, மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு அரிய காட்சியாகும். இந்த தட்சிணாமூர்த்திக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது. கிரக தோஷம் உள்ளவர்கள் தட்சிணாமூர்த்தியையும், கிரகங்களையும் வழிபடுகிறார்கள்.
நென்மேலி லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்
பித்ரு கடன் செலுத்த முடியாதவர்களுக்காக பெருமாளே திதி கொடுக்கும் தலம்
காசி, கயா, ராமேசுவரம் முதலான புண்ணிய தலங்களுக்கு இணையான தலம்
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில், செங்கல்பட்டிலிருந்து சுமார் 5 கி.மீ. மீட்டர் தொலைவில் உள்ளது நென்மேலி திருத்தலம். மூலவர் திருநாமம் ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள். உற்சவர் திருநாமம் ஸ்ரீ ஸ்ராத்த ஸம்ரக்ஷண நாராயணப் பெருமாள். உற்சவர் பெருமாள்தான் இங்கு முன்னோர்களுக்காக சிராத்தம் செய்து வைக்கின்றார் என்பது ஐதீகம்.
பித்ரு தோஷம் இருந்தால், நம் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படாது. இதற்கு ஒரே வழி அதற்கான தோஷ நிவர்த்தி செய்வது தான். இதுவரை, பித்ருக்களுக்கு தர்ப்பணமோ, திதியோ கொடுக்கவே இல்லை. பித்ருக் கடனைத் தீர்க்க வாரிசு இல்லை. ஆண் வாரிசு இல்லை. மகள்தான் உண்டு என பித்ரு கடன் செலுத்த முடியாதவர்களுக்காக, இத்தலத்து பெருமாளே திதி கொடுத்து நம் பித்ரு தோஷங்களை நிவர்த்தி செய்கிறார். பித்ரு தோஷ நிவர்த்திக்கு காசி, ராமேஸ்வரம் தான் செல்ல வேண்டும் என்பதில்லை. நென்மேலியில் பெருமாளே திதி கொடுப்பதால், இத்தலம் காசிக்கு நிகரான க்ஷேத்ரம் என்றும் சௌலப்ய கயா என்றும் கூறப்படுகிறது.
தல வரலாறு
இத்தலம், அந்தக் காலத்தில் புண்டரீக நல்லூர் என அழைக்கப்பட்டது. அதாவது பிண்டம் வைத்த நல்லூர் எனப்பட்டது. இதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்காடு நவாபுகளின் ஆட்சி நடைபெற்றது. இந்தப் பகுதியை யக்ஞநாராயண சர்மா என்பவர் திவானாகப் பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். இவரின் மனைவி சரஸ வாணி. இருவரும் பெருமாளின் மீது மாறா பக்தி கொண்டிருந்தார்கள். யக்ஞநாராயண சர்மா வரியாக வசூலித்த பணத்தையெல்லாம், நென்மேலி பெருமாளுக்கே தம்பதியர் இருவரும் செலவு செய்தார்கள். இதனால், ஆற்காடு நவாப்பிடம் வரிப்பணத்தையெல்லாம் செலுத்த முடியாத நிலை ஏற்ப்பட்டது. இதை அறிந்த நவாப், அவர்களுக்கு மரண தண்டனை விதித்தார். அதை அறிந்த இந்தத் தம்பதி, திருவிடந்தை குளத்தில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொண்டனர். அப்போது உயிர் பிரியும் தருணத்தில், 'எங்களுக்கு வாரிசு இல்லையே. எங்களின் ஈமக்காரியங்களை செய்ய எவரும் இல்லையே' என வருந்தினார்கள். இருவரும் இறந்தார்கள். பின்னர், அவர்கள் இருவருக்கும் பெருமாளே வந்து சிராத்தம் உள்ளிட்ட ஈமக்காரியங்களைச் செய்தார் என்கிறது தல வரலாறு.
அன்றில் இருந்து இன்று வரை, பிள்ளை இல்லாதவர்களுக்கோ, அகால மரணம் அடைந்தவர்களுக்கோ, ஏதோவொரு சூழலால், சிராத்தம் தடைப்பட்டு போயிருந்தவர்களுக்கோ, இந்தக் கோவிலில் சிராத்தம் செய்யப்படுகிறது. அதாவது பெருமாளே சிராத்தம் செய்வதாக ஐதீகம். இங்கே, ஆலயத்தில் பெருமாளின் திருப்பாதம் உள்ளது. அந்தப் பாதத்தைக் கொண்டுதான் சிராத்த காரியங்கள் செய்யப்படுகின்றன. இங்கு, காலை முதல் மதிய வேளைக்குள் சிராத்தம் செய்யப்படுகிறது. வெண்பொங்கல், தயிர்சாதம், பிரண்டையும் எள்ளும் கலந்த துவையல் ஆகியவை நைவேத்தியம் செய்யப்படுகிறது. பின்னர் அதில் இருந்து பிண்டமாக எடுத்து, முன்னோருக்கு பிண்டம் வைத்து பூஜிக்கப்படுகிறது. அதன் ஒருபகுதியை அவர்களுக்கு உணவாகவும் இன்னொரு பகுதி தானமாகவும் வழங்கப்படுகிறது. காசி, கயா, ராமேஸ்வரம் முதலான புண்ணிய க்ஷேத்திரங்களில் சிராத்தம் செய்த பலன், நென்மேலி தலத்துக்கு வந்து சிராத்தம் செய்தால் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள், பித்ரு சாபம் உள்ளவர்கள், வீட்டில் அகால மரணம் அடைந்தவர்கள், துர்மரணம் தோஷம் உள்ளவர்களின் குடும்பத்தார், இங்கு வந்து சிராத்தம் செய்வது ரொம்பவே நல்லது.
இங்கு, தினமும் சிராத்த காரியங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக, அமாவாசை, பஞ்சமி, ஏகாதசி முதலான புண்ணிய திதிகளில் இங்கு வந்து சிராத்தம் செய்வது கூடுதல் விசேஷம். வீட்டில் சகல தோஷங்களும் விலகும்; சந்தோஷம் பெருகும்.
விராலிமலை சண்முக நாதர் கோவில்
முருகனுக்கு குழந்தையை தத்து கொடுத்து, பின் தவிட்டுக்கு குழந்தையை பெற்றுக் கொள்ளும் நடைமுறை
மதுரை-திருச்சி நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள திருப்புகழ் தலம் விராலிமலை சண்முக நாதர் கோவில். 1500 வருடப் பழைமை வாய்ந்த கோவில் இது. முனிவர்களும், தேவர்களும் மரங்களாக விரவி முருகனை வழிப்பட்டதால், விரவி மலை என்று அழைக்கப்பட்டு, பின்பு அதுவே மருவி, விராலி மலையாயிற்று. மலை மீது உள்ள கோவிலுக்கு செல்ல 207 படிகள் உள்ளனஅருணகிரிநாதர், முருகப் பெருமானிடம் ஞானோபதேசம் பெற்ற தலம்.
கருவறையில் முருகன் வள்ளி, தேவசேனா சமேதராக ஆறுமுகங்களுடனும், பன்னிரண்டு கரங்களுடனும் பத்து அடி உயரத்தில் அசுர மயில் மீதமர்ந்து, வலது கரத்தில் சூலமும் இடது கரத்தில் வஜ்ராயுதமும் ஏந்தி அருள்பாலிக்கிறார். தீபாராதனை காட்டும் பொழுது மூன்று முகங்கள் பக்தர்களுக்குத் தெரிகிறது. பின்புறம் உள்ள கண்ணாடியில் மற்ற மூன்று முகங்களையும் தரிசிக்க முடிகிறது.
ஐந்து வயதிற்குள் குழந்தைகளுக்கு பாலாரிஷ்ட தோஷம் உண்டாகும். ஜாதகத்தில் பாவ கிரகங்களின் சேர்க்கை மற்றும் பார்வையால் ஏற்படும் தோஷம் இது. இதனால் ஆயுள், உடல்நலம் பாதிக்க கூடும். தாய், தந்தை, தாய்மாமனுக்கு பாதிப்பு ஏற்படலாம். ஆனால் குருவின் பார்வை ஏற்பட்டால் தோஷம் மறையும். இதிலிருந்து விடுபட முருகப்பெருமானுக்கு பரிகார பூஜை செய்யலாம்.
இக்கோவிலில் முருகனுக்கு குழந்தையை தத்து கொடுத்து, பின் தவிட்டுக்கு குழந்தையை பெற்றுக் கொள்ளும் நடைமுறை இருக்கின்றது. பிரார்த்தனைப்படி குழந்தை பிறந்தவுடன் குழந்தையை முருகனிடம் ஒப்படைத்துவிட்டு, குழந்தையின் மாமன்மார்கள் அல்லது உறவினர்கள் குழந்தைக்கு பதிலாக தவிட்டை தந்து சுவாமியிடம் குழந்தையை பெற்றுக் கொண்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கிறார்கள்.
இப்பரிகாரத்தின் மூலம் தோஷம் நீங்குவதோடு, முருகனருளால் குழந்தையின் ஆயுள், ஆரோக்கியம் கூடும்.
நசரத்பேட்டை காசி விசுவநாதர் கோவில்
நந்தி பகவானும், பாம்பும் இணைந்து காட்சி தரும் அபூர்வ தோற்றம்
துவாரபாலகர்களின் அருகில் அதிகார நந்தி இருக்கும் அரிய காட்சி
சென்னை பூந்தமல்லியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நசரத் பேட்டை காசி விசுவநாதர் கோவில். இறைவியின் திருநாமம் விசாலாட்சி.இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. புராண காலத்தில் இவ்வூர் 'புருஷமங்களம்', 'தருமபுரி ஷேத்ரம்' முதலான பெயர்களால் அழைக்கப்பட்ட பெருமை உடையது.
காசியில் உள்ளது போல இத்தலத்து விசுவநாதரின் சிவலிங்கத் திருமேனி மிகவும் சிறியது.கருவறையின் நுழைவுவாசலின் இருபுறங்களிலும் துவாரபாலகர்கள் காட்சி தருகின்றனர். துவாரபாலகர்களின் அருகில் அதிகார நந்தி காட்சி தருவது ஒரு அரிய காட்சியாகும்.
இந்த கோவிலில் கார்கோடக மகரிஷி ஈசனை பூஜித்து வழிபட்டதாக ஐதீகம். கார்கோடக மகரிஷி காசியிலிருந்து இவரை எடுத்துவந்து இங்கு பிரதிஷ்டை செய்தார். கார்கோடக மகரிஷியின் ஜீவசமாதி அருகிலுள்ள பூந்தமல்லியில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவிலில் இருக்கின்றது.
இந்தக் கோவிலில் நந்தி பகவான் தனது தலையை வலது பக்கம் சற்று சாய்த்து, புன்னகை தவழும் முகத்துடன் தனது கால்களை மடித்து அமர்ந்திருக்கிறார். அவரது திருமேனியை சலங்கை மணிகளும், ஆபரணங்களும் அலங்கரிக்கின்றன. அவரது மடிந்த இடது முன் பாதத்தின் கீழ் பாம்பு ஒன்று காட்சி அளிக்கிறது. இங்குள்ள பாம்பு, இத்தலத்தில் முக்தி பெற்ற கார்கோடக மகரிஷியைக் குறிக்கின்றது. இப்படி நந்தி பகவானும், பாம்பும் இணைந்து காட்சி தருவது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத ஒரு அபூர்வ தோற்றமாகும்.
மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில்
சன்னதியின் மேற்கூரையில் தங்களுக்குரிய மரத்தினால் செதுக்கப்பட்ட நவக்கிரகங்கள்
நாமக்கல்லிலிருந்து 19 கி.மீ. தொலைவிலும், கரூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில். கருவறையில் மூலவர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள், வலதுபுறம் ஸ்ரீதேவி, இடதுபுறம் பூதேவியோடு நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். பெருமாளின் சன்னதிக்கு பின்புறம் தன்வந்திரிக்கு சன்னதி உள்ளது. இச்சன்னதியின் முன்மண்டப மேற்கூரையில் நவக்கிரகங்கள் மரச்சிற்பமாக இருக்கின்றன. இந்த நவக்கிரகங்கள், அந்தந்த கிரகங்களுக்குரிய மரத்தினால் செதுக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும். நவக்கிரகங்களுக்குரிய மரங்கள்/ தாவரங்கள் சூரியன் - எருக்கு மரம்; சந்திரன் - பலாசு மரம்; செவ்வாய் - கருங்காலி மரம்; புதன்- நாயுருவி, சுக்கிரன் - அத்தி மரம்; குரு- ஆல மரம்; சனி- வன்னி மரம்; ராகு - அருகம்புல்; கேது- வெற்றிலைக்கொடி ஆகியவை ஆகும்.
நசரத் பேட்டை அகரம்மேல் பச்சை வாரணப் பெருமாள் கோவில்
பெருமாள் பச்சை நிற யானையாக வடிவெடுத்த தலம்
சென்னை மாநகரத்தின் ஒரு பகுதியான பூந்தமல்லியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள நசரத் பேட்டை என்ற இடத்திற்கு அருகில், அகரம்மேல் என்னும் ஊரில் அமைந்துள்ளது பச்சை வாரணப் பெருமாள் கோவில்.தாயார் திருநாமம் அமிர்தவல்லி தாயார்.இக்கோவில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.ஸ்ரீ ராமானுஜரின் மருமகனும், அவரது இரண்டு சீடர்களில் ஒருவருமான முதலியாண்டான் (கி.பி 1027 - கி பி 1132) அவதரித்த தலம் இது. முதலியாண்டானின் இயற்பெயர் தாசரதி. இந்த கிராமம் அவரது பெயரால் தசரதி பேட்டை என்று பெயரிடப்பட்டது, பின்னர் நசரத்பேட்டை என்று மாறியது.
கருவறையில் மூலவர் பச்சை வாரணப் பெருமாள், ஸ்ரீ தேவி பூதேவியுடன் மிகப்பெரிய திருமேனியுடன் ஒரு காலை மடக்கியும், மற்றொரு காலை நீட்டியும் மிக அழகாக காட்சிதருகிறார். பெருமாளின் இந்த திருநாமம் மகாபாரத நிகழ்ச்சியுடன் தொடர்புடையது.
பாண்டவர்களில் மூத்தவரான தருமர் யாகம் செய்தபோது துஷ்டர்கள் அதை செய்ய விடாமல் தடுத்தனர். அப்போது கிருஷ்ணர் பச்சை நிற யானை வடிவெடுத்து, துஷ்டர்களை விரட்டினார். அதனால் இங்கு இறைவனுக்கு பச்சை வாரணப் பெருமாள் என்ற பெயர். பெருமாளின் இந்தப் பெயர் காரணத்திற்கு, மற்றொரு மகாபாரத நிகழ்ச்சியும் உள்ளது. மகாபாரதப் போரின் போது அஸ்வத்தாமன் என்ற யானை கொல்லப்பட்டபோது, தருமர் தனது குருவான துரோணாச்சாரியாரிடம், அவரது மகனான அஸ்வத்தாமன் கொல்லப்பட்டதாக பொய் சொன்னார். இந்தச் செய்தியைக் கேட்ட துரோணாச்சாரியார் திசை திருப்பப்பட்டு அதிர்ச்சியடைந்தார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, திருஷ்டத்யும்னரால், துரோணாச்சாரியார் தலை துண்டிக்கப்பட்டு இறந்தார். இந்தப் பாவத்திலிருந்து விடுபட, நாரத முனிவரின் ஆலோசனையின் பேரில், தருமர் இந்த இடத்தில் ஒரு யாகம் செய்தார். கிருஷ்ணர் யாகத்திலிருந்து பச்சை யானை வடிவில் தோன்றி அவரை ஆசீர்வதித்தார். எனவே, அவர் சமஸ்கிருதத்தில் ஹரித வாரண பெருமாள் (ஹரித என்றால் பச்சை மற்றும் வாரண என்றால் யானை) அல்லது தமிழில் பச்சை வாரண பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். தருமரின் பிரார்த்தனைகளை ஏற்று, பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளினார்
கோவில் கொடிக் கம்பத்தின் முன்னே விளக்கு கம்பம் உள்ளது. அதன் முன் சிறிய யானை சிலை உள்ளது. யானைக்கு நேராக விளக்கு கம்பத்தில் ஆஞ்சநேயரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது . இது இக்கோவிலின் சிறப்பை விளக்குகின்றது.
சிதம்பரம் நடராஜர் கோவில்
சிவகாமசுந்தரி அம்பிகை ஐப்பசி பூர உற்சவம்
நடராஜரிடம் ஆசீர்வாதமும், பட்டு வஸ்திரமும் பெறும் சிவகாமசுந்தரி அம்பிகை
உலக உயிர்கள் அனைத்தும் நலம் பெற வாழ நடத்தப்படும் பூர சலங்கை உற்சவம்
பொதுவாக, அம்பிகை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூன்று சக்திகளாகத் தனித்தனியே வெவ்வேறு தலங்களில் காட்சி தருவாள். சிதம்பரம் தலத்தில், இந்த மூன்று சக்திகளும் ஒன்றாக இணைந்து மகா சக்தியாக சிவகாமசுந்தரி அம்மன் வடிவத்தில் அருள்பாலிக்கிறாள்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி அம்பிகைக்காக நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது ஐப்பசி பூரம் உற்சவம் ஆகும். பத்து நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த ஐப்பசி பூர திருவிழாவில் அம்பிகையை குழந்தையாக பாவித்து, பின்னர் பருவமடைந்த பெண்ணிற்கான சடங்குகள் செய்வித்து, திருவிழாவின் இறுதியாக அம்பிகைக்கு இறைவனுடன் திருக்கல்யாணம் நடைபெறும். திருவிழாவின் முதல் எட்டு நாட்களில் அம்பிகை பலவித வாகனங்களிலும், ஒன்பதாம் நாள் தேரிலும் ஏறி வீதி உலா வருவாள்.
பத்தாம் நாள், ஐப்பசி பூரத்தன்று அம்பிகைக்கு பருவம் அடைந்ததற்கான சடங்குகள் நடத்தப்படும். அன்று காலையில் சிவகாமசுந்தரி அம்பிகையின் சன்னதியில், உற்சவ மூர்த்தியான சிவகாமசுந்தரி அம்மனுக்கு மஹாபிஷேகம் நடைபெறும். பின்னர் சிவகாமசுந்தரி அம்பிகை சர்வ அலங்காரத்துடன் நடராஜப் பெருமான் சன்னதிக்கு எழுந்தருளி அங்கு நடராஜரிடமிருந்து முதன் முதலில் பட்டு வஸ்திரங்களை யும், திருவருளையும் பெறுவார். இந்த நிகழ்ச்சி பட்டு வாங்கும் நிகழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது. எம்பெருமான் நடராஜரிடம் இருந்து பட்டு வஸ்திரங்களை பெற்றுக் கொண்ட பின்னர் அம்பிகை நான்கு பிரகாரங்களிலும், வலம் வந்து மக்கள் அளிக்கும் பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக, சீராக ஏற்றுக் கொள்வார்.
ஐப்பசி பூரத்தன்று மாலை 7:00 மணி அளவில் அம்பிகைக்கு பூரச் சலங்கை எனும் பருவமடைந்த பெண்ணிற்கு நடத்தப்படும் சடங்குகள் செய்யப்படும். அப்போது அம்மனின் மடியில் நெல், அவல் ,முளைப்பயிறு, அரிசி ஆகியவற்றை ஒரு சிறு மூட்டையாக கட்டி விடுவார்கள். உலக உயிர்கள் யாவும் அன்னையின் மடியில் முளைப்பயறாக உருவாவதைக் குறிப்பிடும் வகையில் அம்பாள் மடியில் இவற்றை வைத்து கட்டுவார்கள். பக்தர்களுக்கு இந்த முறைப் பயறு மற்றும் நெல்,அரிசி,அவல் பிரசாதமாக வழங்கப்படும். குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த உற்சவத்தில் கலந்துகொண்டு முளைப்பயறு பிரசாதம் வாங்கி உண்ண, விரைவில் மகப்பேறு உண்டாகும். மேலும் திருமணம் தடை நீங்கி திருமணம் கைகூடும். உலகத்தில் உள்ள 72,000 கோடி ஜீவ ராசிகளும் விவசாயம் செழித்து நலமுடன், வளமுடன் வாழ வேண்டும் என்பது தான் இந்த சம்பிரதாயத்தின் நோக்கமாகும்.
மறுநாள் ஐப்பசி உத்திரத்தன்று, காலை அன்னை சிவானந்தநாயகி அம்மன் தபசுக் காட்சி நடைபெறும். மாலையில் கீழவீதி, தேரடியில் ஓட்டம் பிடித்து விளையாடும் வைபவமும், மாலை மாற்றல், கன்னூஞ்சல், பூர்வாங்க கலச பூஜை, காப்பு கட்டி சிறப்பு ஹோமம், திருமாங்கல்ய தாரணம் ஆகியனவும் நடைபெறும். இதைத் தொடர்ந்து பக்தர்கள் தெய்வத் தம்பதியின் ஆசி வேண்டி வணங்குவர்.
மணிமங்கலம் ராஜகோபால சுவாமி கோவில்
காவியுடை அணிந்த ஆஞ்சநேயர்
பெருமாள் கோவிலில் எழுந்தருளி இருக்கும் விநாயகர் மற்றும் தட்சிணாமூர்த்தி
சென்னை மாநகரம் தாம்பரம் பகுதியிலிருந்து 9 கி.மீ. தொலையில் அமைந்துள்ளது மணிமங்கலம் ராஜகோபால சுவாமி கோவில். தாயார் திருநாமம் செங்கமலவல்லி. இக்கோவில் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மூலவர் ராஜகோபாலசுவாமி தன் கைகளில் சங்கையும், சக்கரத்தையும் இடம் மாற்றி ஏந்திருப்பது தனி சிறப்பாகும்.
இக்கோவில் கோஷ்டத்தில் ஒரு கையில் தண்டம், மற்றோர் கையில் பிரயோக சக்கரத்துடன் காட்சி தரும் இரண்டு பெருமாள் திருமேனிகளையும் தரிசிக்கலாம். வடக்கு கோஷ்டத்தில் வலது காலை மடக்கி அமர்ந்து, இடது கையை தரையில் ஊன்றியபடி, பிரயோகச் சக்கரத்துடன் பரமபதநாதர் காட்சி தருகிறார். இவரிடம் வேண்டிக்கொள்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். கால்நடைகள் நோயின்றி வாழவும், பசுக்கள் நன்கு பால் சுரக்கவும், ராஜகோபாலருக்கு துளசி மாலை அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள்.
பொதுவாக சிவன் கோவில்களில் தான், கோஷ்டத்தில் விநாயகர் இருப்பார். ஆனால், இக்கோவிலில் பெருமாள் சன்னதி கோஷ்டத்தில் விநாயகர் இருப்பது தனி சிறப்பாகும். மேலும் தட்சிணாமூர்த்தியும் இக்கோவிலில் எழுந்தருளி இருக்கிறார்.
ராஜகோபாலர் கோவிலுக்கு எதிரே சற்று தூரத்தில் ஆஞ்சநேயர், தனிக்கோவிலில் இருக்கிறார். இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி இருக்கும் இவர், கையில் கதாயுதம் இல்லாமல், 'அஞ்சலி வரத ஆஞ்சநேயராக' காட்சி தருகிறார். ஆஞ்சநேயர் பிரம்மச்சாரி தெய்வம் என்பதால், இவருக்கு காவியுடையை பிரதானமாக அணிவித்து அலங்காரம் செய்யப்படுவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
ஆஞ்ச நேயரின் மார்பில் ராமபிரான், எப்போதும் வாசம் செய்து கொண்டிருப்பதாக ஐதீகம். எனவே, ஆஞ்சநேயர் ராமபிரானை வணங்கும் விதமாக கைகளை மார்பில் குவித்து, இரு கட்டை விரல்களையும் மார்பில் வைத்தபடி காட்சி தருகிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள மன தைரியம் உண்டாகும், குரு மீதான மரியாதை அதிகரிக்கும்.
திருவாலங்காடு பத்ரகாளி அம்மன் கோவில்
திருவாலங்காடு சிவபெருமானை வழிபடும் முன் வணங்க வேண்டிய பத்ரகாளி அம்மன்
தேவியின் 51 சக்தி பீடங்களில் காளி பீடமாக இருக்கும் தலம்
திருவள்ளூர் மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவாலங்காடு பத்ரகாளி அம்மன் கோவில். சிவபெருமானின் ஐந்து நடன சபைகளில் ஒன்றான ரத்தின சபை அமைந்திருக்கும் திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோவில் அருகில் இக்கோவில் அமைந்துள்ளது. தந்திர சூடாமணி நூல் கூறும் தேவியின் 51 சக்தி பீடங்களில், இது காளி பீடம் ஆகும்.
மிகச்சிறிய இக்கோவிலின் கருவறையில், பத்ரகாளி அம்மன் சாந்த சொரூபியாக எட்டு திருக்கரங்களுடன், முழங்கால்களில் கால்களை மடக்கி நடனமாடும் நிலையில் உள்ளார். பாதங்களை தரையில் ஊன்றி, கணுக்காலில் நடனக் கலைஞரின் மணிகளுடன் காட்சி அளிக்கிறாள்.
இந்த பத்ரகாளி அம்மன் தனி கோவில் கொண்டு எழுந்தருளியதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்ச்சி உள்ளது.
சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவ பார்வதியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவி தன் பார்வையால் காளியை தோற்றுவித்து அரக்கர்களை அழித்து விட்டு, அவளையே ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள். அரக்கர்களை அழித்து அவர்களது ரத்தத்தை உண்ட காளி, பல கோர செயல்களை புரிந்தாள். இதனால் முஞ்சிகேச கார்க்கோடக முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை அடைந்தார். அவரை கண்ட காளி, "நீ என்னுடன் நடனமாடி வெற்றிபெற்றால் இந்த ஆலங்காட்டை ஆளலாம்" என்றாள். சிவனும் காளியுடன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். அப்போது தன் காதில் இருந்த மணியை கீழே விழவைத்து, பின் அதை தன் இடக்கால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்தினார்.
இதைக்கண்ட காளி, இது போன்ற தாண்டவம் தன்னால் ஆட இயலாது என தோற்று விடுகிறாள். அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி, "என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. எனவே இத்தலத்தில் என்னை வழிபாடு செய்ய வருபவர்கள், முதலில் உன்னை வழிபாடு செய்த பின் என்னை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும்" என்று வரமளித்தார். அன்றிலிருந்து காளி தனி கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள்.
மாதப்பூர் முத்துகுமாரசாமி கோவில்
பழநி முருகன் போலவே ஒரே உருவ ஒற்றுமை கொண்ட மாதப்பூர் முத்துக்குமாரசாமி
பல்லடத்திலிருந்து காங்கேயம் செல்லும் சாலையில் 3 கி.மீ. தொல்லையில் உள்ளது மாதப்பூர். இத்தலத்தில் ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது முத்துகுமாரசாமி கோவில். கோவிலுக்கு செல்ல 40 படிக்கட்டுகள் உள்ளன. ஞான பழத்துக்காக கோபித்துக்கொண்ட முருகன், பழநிமலையில் அமர்ந்தார். அவரைத் தேடி வந்த சிவனும் பார்வதியும் இக்குன்றின் மீது ஏறி நின்று மகனே நீ எங்கே இருக்கின்றாய்? என குரல் எழுப்பிய போது, பழநியில் அமர்ந்திருந்த முருகன் தாய், தந்தையருக்காக இங்கு காட்சியளித்ததாக தல வரலாற்றில் குறிப்புகள் உள்ளன. மாதாவுக்கு மகன் காட்சியளித்ததால் மாதா ஊர் என வழங்கப்பட்டு பின் மருவி மாதப்பூர் என ஆனது.
பழநி கோவில் உருவான சமகாலத்தில்தான், இக்கோவிலும் உருவானது. இக்கோவிலில், தனிச்சன்னிதியில் முருகன், முத்துக்குமாரசுவாமி என்ற திருநாமத்தில் தண்டத்துடன் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். பழநிமுருகன் போலவே மாதப்பூர் முத்துக்குமாரசாமியும் ஒரே உருவ ஒற்றுமையுடன் இருப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். பழநி முருகன் மேற்கு நோக்கியும், இம்முருகன் கிழக்கு நோக்கியும் இருப்பதுதான் ஒரே வித்தியாசம். முருகன் என்றாலே அழகன்தான். ஆனால் இத்தலத்து முருகனோ பேரழகு கொண்டவர். முருகன் சன்னதிக்கு அருகில் சிவபெருமான் மதிமாலீஸ்வரர் என்ற திருநாமத்துடனும், பார்வதி தேவி மரகதாம்பிகை என்ற திருநாமத்துடனும் தனித் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார்கள். பழனியில் இப்படி முருகனுடன், இறைவனும் இறைவியும் எழுந்தருளவில்லை.
சஷ்டி விரதம் இருந்து இத்தலத்து முருகனை வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும்; மழலைச் செல்வம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் கோவில்
தமிழத்திலேயே மிக அதிக சுற்றளவுள்ள ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கத் திருமேனி
மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று
செவ்வாய் தோஷ பரிகார தலம்
தமிழத்திலேயே மிக அதிக சுற்றளவுள்ள ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கத் திருமேனி
மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று
செவ்வாய் தோஷ பரிகார தலம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ள பாண்டிய நாட்டு தேவார தலம் திருப்புனவாசல். இத்தலத்து இறைவன் திருநாமம் விருத்தபுரீசுவரர், பழம்பதிநாதர். விருத்தம் என்றால் பழமை. எனவே இவர் பழம்பதிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவியின் திருநாமம் பிருகந்நாயகி, பெரியநாயகி. காசியில் உள்ள விசுவநாதர் கோவிலுக்கு முன்னதாக உருவான கோவில் இது. பிரம்மாவே வணங்கிய தலம் என்பதால், இது மிகப் பழமையான ஊராகக் கருதப்படுகிறது.
இக்கோவிலில் உள்ள நந்தியும் ஆவுடையாரும் (லிங்க பீடம்) மிகவும் பெரியதாக உள்ளது. தமிழத்திலேயே மிக அதிக சுற்றளவுள்ள ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கமாக விருத்தபுரீசுவரர் விளங்குகின்றார். தஞ்சை பெரிய கோவில் பிரகதீஸ்வரருக்கு அடுத்தபடி பெரிதாக உள்ள சிவலிங்க மூர்த்தி இதுவாகும். தஞ்சை பிரகதீசுவரர் சிவலிங்கம் பெரியது, அதனை விட கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள சிவலிங்கம் உயரத்தில் மிகவும் பெரியது. ஆனால் இக்கோவில் சிவலிங்கம் சுற்றளவில் எல்லாவற்றையும் விட மிகப் பெரியது (சுற்றளவு 82.5அடி). சுவாமிக்கு மூன்று முழம் துணியும், ஆவுடையாருக்கு 30 முழம் துணியும் வேண்டும். 'மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று' என்ற வாசகம் இத்தலத்து இறைவனைப் பற்றியதாகும்.
பாண்டிய நாட்டில் உள்ள 14 சிவத்தலங்களும் இங்கு இருப்பதாக ஐதீகம். அதற்கேற்ப கோவிலுக்குள் 14 சிவலிங்கங்கள் இருக்கின்றன. திருப்புனவாசல் தலத்தைத் தரிசித்தால், மற்ற தலங்களுக்குச் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். திருப்புனவாசலில் இருந்து சுமார் 7 மைல் தூரத்துக்கு எமன் மற்றும் எமதூதர்கள் எவரும் உள்ளே வரமுடியாது என்பதும் ஐதீகம்.
செவ்வாய்க்கே தோஷம் போக்கிய இத்தலத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும்.
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில்
நவக்கிரகங்களை சுற்றமுடியாதபடி இருக்கும் அபூர்வ வடிவமைப்பு
கும்பகோணம் சென்னை சாலையில், 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில். இக்கோயில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. ] கங்கை ஆறு வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக, கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரத்தை முதலாம் இராசேந்திரன் அமைத்து அங்கு இக்கோவிலையும் கட்டினான். லிங்க வடிவில் உள்ள இறைவன் பிரகதீஸ்வரரின் உயரம் 13 அடி. சுற்றளவு 59 அடி.
இக்கோவில் உள்ளே நுழைந்து செல்லும்போது வலது பக்கம் நவக்கிரக பீடமுள்ளது. இந்த கோவிலில் நவக்கிரகங்கள் அமைந்திருக்கும் விதம் விந்தையானது. பொதுவாக சிவாலயங்களில் நவக்கிரகங்கள், தனித்தனியாக ஒரு பீடத்தின் மேல் எழுந்தருளி இருப்பார்கள். ஆனால், இங்கு ஒன்பது கிரகங்களும் ஒரே கல்லில் வான சாஸ்திர முறைப்படி செதுக்கப்பட்டுள்ளன. இந்த கல்லில் தாமரைப்பூ வடிவில் நவக்கிரகங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. தாமரை மலர் வடிவ பீடத்தின் நடுவில், 7 குதிரைகள் பூட்டிய தேரில் மேற்கு நோக்கி சூரிய பகவான் அமர்ந்துள்ளார். தேரை அருணன் சாரதியாக இருந்து ஓட்டுகிறான். தேரிலுள்ள 10 கடையாணிகளும் கந்தர்வர்களை குறிப்பிடுகின்றன. சூரியனைச் சுற்றி, மற்ற எட்டு கிரகங்களும் தாமரை மலர் இதழ்கள் போன்ற அமைப்பில் உள்ளன. ஒருபுறம் 12 பேர் நாதஸ்வர கருவிகளை இசைக்கும் கோலத்தில் காட்சி தருகின்றனர்.
பொதுவாக கோவில்களில் நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபடுவோம். ஆனால் இக்கோவிலில் அவற்றை சுற்றி வந்த வழிபட முடியாதபடி நவக்கிரகங்களை வடிவமைத்திருப்பது, வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத ஒரு அரிய காட்சியாகும். நவக்கிரகங்கள் இந்த உலகை சுற்றி வருகின்றன. எனவே அதை யாரும் சுற்றக்கூடாது என்பதன் அடிப்படையில் இங்கு நவக்கிரகங்களை சுற்றமுடியாதபடி மண்டப அமைப்பு உள்ளது.
ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோவில்
அந்தணர் வேடத்தில் தோன்றி அரசனின் பிரச்சனையை தீர்த்த பொய்யாமொழி பிள்ளையார்
மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில், மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் ஆக்கூர். இறைவன் திருநாமம் தான்தோன்றீசுவரர். இறைவியின் திருநாமம் வாள் நெடுங்கன்னி அம்மன்.
இக்கோவில் தெற்கு குளக்கரையில் உள்ள ஒரு சன்னதியில் வீற்றிருக்கும் பிள்ளையார், பொய் சொல்லா பிள்ளையார் (பொய்யாமொழி பிள்ளையார்) என்று அழைக்கப்படுகிறார். இவர் அரசருக்கு அவருடைய பிரச்சனைக்குத் தீர்வு சொல்லும் வகையில் பிராமண வேடத்தில் தோன்றியவர், எனவே இவர் பொய்யாமொழி விநாயகர் என்றும் போற்றப்படுகிறார்.
இத்தலத்தில் கோச்செங்கட்சோழன் தான்தோன்றீசுவரர் கோவில் கட்டத் துவங்கினான். கோவில் பணிகள் நடக்கும் போது, முதலில் கோவிலுக்கான மதில் சுவரை எழுப்பினான். காலையில் கட்டப்பட்ட மதில் சுவர் இரவில் தானாக விழுந்து விடும். இப்படி பலமுறை நடந்தது. கோச்செங்கட்சோழனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. பொல்லாப் பிள்ளையார் அந்தண ரூபத்தில் வந்து மன்னனிடம் என்ன பிரச்னை என்று கேட்கிறார். அதற்கு மன்னன், சிவனுக்கு கோவில் கட்ட வேண்டும், ஆனால் மதில் சுவர் கட்டியவுடன் இடிந்து விழுந்து விடுகிறது என்றான். அதற்கு விநாயகர், நீ இங்குள்ள குளத்தில் மூன்றே முக்கால் நாழிகை மூழ்கி எழுந்து பார். உனக்கு எல்லாம் சரியாகும் என்றார். மன்னனுக்கோ, குளத்தில் மூழ்கினால் மதில் சுவர் எப்படி நிற்கும் என்று சந்தேகம். இதையறிந்த விநாயகர், காசியை விட இந்த குளத்திற்கு வீசம் அதிகம். நீ குளித்து எழுந்து பார் என்றார். அதன்படி கோச்செங்கட்சோழன் குளத்தில் மூழ்கி எழ, மதில் சுவரில் இருந்து கருவறை வரை எல்லாம் சரியாக அமைந்தது.
இப்படி கோச்செங்கட்சோழனுக்கு அருளிய பொல்லாப் பிள்ளையார் நம் அனைவர்களுக்கும் வேண்டியதை வேண்டியபடி தந்தருள்கிறார்.
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்
இடுப்பில் குழந்தையை தாங்கிய வடிவில் உள்ள அம்பிகையின் அரிய தோற்றம்
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத் தலம் திருவெண்காடு. இறைவன் திருநாமம் சுவேதாரண்யேசுவரர். இறைவியின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை, பெரியநாயகி.
திருஞான சம்பந்தர் திருவெண்காட்டின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. ஆதலின், இத்தலத்தை மிதித்தற்கஞ்சி 'அம்மா' என்று அழைத்தார். அது கேட்டுப் பெரியநாயகி அம்மை அங்கு தோன்றி திருஞானசம்பந்தரை இடுப்பில் வைத்துக்கொண்டு கோவிலுக்கு அழைத்து வந்தார். பிள்ளையைத் தம் இடுப்பில் தாங்கிய வடிவில் உள்ள அம்பாளின் சிலை பிரம்ம வித்தியாம்பிகை கோவிலின் மேற்கு உட்பிரகாரத்தில் உள்ளது. சம்பந்தர் அம்பாளைக் கூப்பிட்ட இடத்திலுள்ள குளத்தைக் 'கூப்பிட்டான் குளம்' என்பர். அது இன்று 'கேட்டான் குளம்' என்று வழங்குகிறது. அங்குள்ள விநாயகர், ஞானசம்பந்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில்
முருகப் பெருமான் வேலும் மயிலும் இல்லாமல் தனித்து நிற்கும் தேவாரத்தலம்
முன்புறம் ஐந்து முகங்களும், பின்னால் ஆறாவது முகமும் அமைந்திருக்கும் முருகனின் அபூர்வ தோற்றம்
திருப்பூர் நகரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம், திருமுருகன்பூண்டி. இறைவன் திருநாமம் முருகநாதேசுவரர், திருமுருகநாதர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. முருகனால் இத்தலத்து சிவபெருமான் பிரதிஷ்டைசெய்யப்பட்டதால், திருமுருகநாதர் என்று அழைக்கப்படுகிறார். இதை விளக்கும் விதமாக, முருகன் சன்னதியில் லிங்கம் ஒன்று உள்ளது. முருகன் இங்கு வந்து சிவனை வழிபடும் முன்பு, தனது வேலை, கோயிலுக்கு வெளியே சற்று தள்ளி தரையில் ஊன்றினார். மயில் வாகனத்தை அதன் அருகில் நிறுத்தி வைத்தார். இதனால் வேலும் மயிலும் இல்லாமல், தனித்து நிற்கிறார்.
பெரும்பாலான கோவில்களில், சுப்ரமணியர் சிலை, முன்புறம் மூன்று முகங்களும், பின்னால் மூன்று முகங்களுடனும் அமைந்திருக்கும். இக்கோவிலில் மட்டும், ஐந்து முகங்கள் முன்புறமும், ஆறாவது முகம், பின்னாலும் அமைந்துள்ளது. அந்த முகம், 'அதோ முகம்' என அழைக்கப்படுகிறது. இம்முகத்தை கண்ணாடியில் மட்டுமே பார்க்க முடியும். அதேபோல், தமிழகத்தில் தெற்கு நோக்கி சுப்ரமணிய சுவாமி அமர்ந்திருப்பது இத்தலத்து தனிச்சிறப்பு. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலுக்கு வந்து, வழிபட்டு, அதோ முகத்தை பார்த்தால், மனநிலை சரியாகி விடும் என்பது நம்பிக்கை.
மணிமங்கலம் ராஜகோபால சுவாமி கோவில்
சங்கும், சக்கரமும் இடம் மாறி இருக்கும் பெருமாளின் வித்தியாசமான தோற்றம்
சென்னை மாநகரம் தாம்பரம் பகுதியிலிருந்து 9 கி.மீ. தொலையில் அமைந்துள்ளது மணிமங்கலம் ராஜகோபால சுவாமி கோவில். தாயார் திருநாமம் செங்கமலவல்லி. இக்கோவில் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
கருவறையில் மூலவர் ராஜகோபாலர் நான்கு கைகளுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். பொதுவாக பெருமாள் கோவில்களில் வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் பெருமாள் வைத்திருப்பார். ஆனால் இத்திருத்தலத்தில் வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரமும் வைத்திருக்கும் கோலத்தில் அருள் பாலிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
கிருஷ்ணராக அவதரித்த மகாவிஷ்ணு, குருக்ஷேத்ர போரின்போது, அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்தார். போரில் ஆயுதங்களை பயன்படுத்த மாட்டேன் என உறுதி பூண்டிருந்த அவர், போர் அறிவிப்பிற்காக, சங்கு மட்டும் வைத்துக்கொண்டார். அவரது சங்கின் ஒலியைக் கேட்டதுமே, எதிரிப்படையினர் அஞ்சி நடுங்கினர். இவ்வாறு கிருஷ்ணர் குருக்ஷேத்ர போரின்போது, வலது கையில் சங்கு வைத்து ஊதியதன் அடிப்படையில் இங்கு மகாவிஷ்ணு, வலது கையில் சங்கு வைத்தபடி காட்சி தருகிறார். வலது கையில் இருக்க வேண்டிய சக்கரம், இடது கையில் இருக்கிறது.
சிவன் சன்னதிகளில்தான், கோஷ்டத்தில் விநாயகர் இருப்பார். ஆனால், இக்கோயிலில் பெருமாள் சன்னதி கோஷ்டத்தில் விநாயகர் இருப்பது தனி சிறப்பாகும். மேலும் கோஷ்டத்தில் ஒரு கையில் தண்டம், மற்றோர் கையில் பிரயோக சக்கரத்துடன் காட்சி தரும் இரண்டு பெருமாள் திருமேனிகளையும் தரிசிக்கலாம். வடக்கு கோஷ்டத்தில் வலது காலை மடக்கி அமர்ந்து, இடது கையை தரையில் ஊன்றியபடி, பிரயோகச் சக்கரத்துடன் பரமபதநாதர் காட்சி தருகிறார். இவரிடம் வேண்டிக்கொள்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
வெளியகரம் பிருத்வீச்வரர் கோவில்
முருகப் பெருமான் ஒரு முகமும், நான்கு கரங்களும் கொண்டு காட்சி அளிக்கும் திருப்புகழ் தலம்
திருத்தணியிலிருந்து 37 கி.மீ தொலைவில், கொசஸ்தலை ஆற்றின் கரையில் அமைந்த தலம் வெளியகரம் பிருத்வீச்வரர் கோவில். நகரி வழியாகவும் (63 கி.மீ) செல்லலாம். இறைவியின் திருநாமம் புவனேஸ்வரி அம்மன். இத்தலத்திற்கு வெள்ளிகரம், வள்ளிகரம் என்ற பெயர்களும் உண்டு.
இத்தலத்து முருகப் பெருமான் சுமார் மூன்றடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். அவருக்குப் பின்புறம் மயில் உள்ளது. அவர் ஒரு முகமும், நான்கு கரங்களும் கொண்டுள்ளார். பின்னிரு கரங்களில் வஜ்ர சக்தியும், முன் வலக் கரம் அபய முத்திரையிலும், முன் இடக் கரம் இடுப்பிலும் வைத்தபடி காட்சி அளிக்கிறார். இரு புறமும் வள்ளி,தேவயானை உள்ளனர்.
இத்தலத்து முருகனை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் போற்றி பாடியுள்ளார். மொத்தத் திருப்புகழ்ப் பாடல்களிலும் எட்டு விதமான சந்தங்கள் வந்துள்ள ஒரே தலப் பாடல் வெளியகரத்துக்கு மட்டுமே உரியது. வெள்ளிகரம் முருகனைப் பாடிய ஒன்பது திருப்புகழ் பாடல்களில் (நவ ரத்ன திருப்புகழ்) வள்ளி மலை, வள்ளியின் பிறப்பு, வள்ளி குருவியோட்டிய தினைப் புனம், அவள் கொடுத்த தினை மாவு, அவள் மீது மையல் கொண்டது, அவள் கரம் பிடித்தது ஆகியவற்றையும் பாடி இன்புறுகிறார்.
பிரதோஷ வகைகள்
பிரதோஷ வகைகள்
சிவாலயங்களில் மாதத்தில் இருமுறை பிரதோஷ வழிபாடு செய்யப்படுகிறது. பிரதோஷ வழிபாட்டில் 20 வகைகள் உள்ளன. அவை, நித்திய பிரதோஷம், பட்சப் பிரதோஷம், மாசப் பிரதோஷம், நட்சத்திரப் பிரதோஷம், பூரண பிரதோஷம், திவ்யப் பிரதோஷம், தீபப் பிரதோஷம், அபயப் பிரதோஷம் (சப்தரிஷி பிரதோஷம்), மகா பிரதோஷம், உத்தம மகா பிரதோஷம், ஏகாட்சர பிரதோஷம், அர்த்தநாரி பிரதோஷம், திரிகரண பிரதோஷம், பிரம்மப் பிரதோஷம், அட்சரப் பிரதோஷம், கந்தப் பிரதோஷம், சட்ஜ பிரதோஷம் மற்றும் மேலும் சில. ஒவ்வொரு பிரதோஷ வகைக்கும் தனிப்பட்ட வழிபாட்டு முறைகளும், பலன்களும் உண்டு.
நித்திய பிரதோஷம்
தினமும் மாலை வேளையில் சூரிய அஸ்த்தமனத்திற்கு முந்தைய 90 நிமிடங்கள் நித்திய பிரதோஷம் எனப்படும். இந்த நேரத்தில் தினம் தோறும் சிவனை வணங்குவது நல்லது.
பட்சப் பிரதோஷம்
அமாவாசைக்குப் பிறகு வரும் திரயோதசி திதியில் வரும் பிரதோஷம்.
மாசப் பிரதோஷம்
ஒவ்வொரு மாதமும் வரும் பிரதோஷம்.
நட்சத்திரப் பிரதோஷம்
குறிப்பிட்ட நட்சத்திரம் வரும் பிரதோஷம்.
பூரண பிரதோஷம்
பௌர்ணமி திதியில் வரும் பிரதோஷம்.
திவ்ய பிரதோஷம்.
பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தால் அது திவ்ய பிரதோஷம் எனப்படும். அன்று மரகத லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் முன்ஜென்ம கர்மம் விலகும்.தீராத வியாதிகள் தீரும். வழக்கு தொல்லைகள் அகலும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். இதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் பஞ்சலோகத்தால் ஆன சிவலிங்கத்திற்கு அபிழேகம் செய்தும் பூரண பலனை பெறலாம்.
தீபப் பிரதோஷம்
தீபங்கள் ஏற்றி வழிபடப்படும் பிரதோஷம். உங்கள் வயது என்னவோ அதற்க்கு ஏற்றார் போல் அதே எண்ணிக்கையில் விளக்கேற்றி வணங்கலாம்.
மகா பிரதோஷம்
தேய்பிறை திரயோதசி திதியும், சனிக்கிழமையும் சேர்ந்து வருவது மகா பிரதோஷம் எனப்படும். அன்று முறையாக விரதம் இருந்து சிவாலயம் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
சப்தரிஷி பிரதோஷம்
பிரதோஷ காலத்தில் முறையாக பூஜைகளை முடித்த பின், வெட்ட வெளியில், வானம் முழுமையாக தெரிகிற இடத்தில் நின்று கவனித்தால் சப்தத ரிஷி மண்டலம் என்று சொல்லக்கூடிய நட்ச்சத்திர கூட்டம் தெரியும். அந்த ரிஷிகளை வணங்கினால் அவர்கள் ஆசிர்வாதம் கிடைக்கும். ஒரு வேலை வானம் தெளிவாக தெரியாவிட்டால் கிழக்கு முகம் நின்று சப்த ரிஷிகளை மனதில் தியானித்து வணங்கலாம்.
ஏகாட்ச்சர பிரதோஷம்
வருடத்தில் ஒரு முறை மட்டும் வரும் மகா பிரதோஷத்தை ஏகாட்ச்சர பிரதோஷம் என்பார்கள். அன்றைய தினம் சிவாலயம் சென்று ஓம் என்ற பிரணவ மந்திரத்தை சொல்லி வழிபட்டால் கோடி தோஷம் விலகும்.
அர்த்தநாரி பிரதோஷம்
வருடத்தில் இரண்டு முறை மட்டும் மகா பிரதோஷம் வந்தால், அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் பிரிந்து வாழும் தம்பதிகள் சிவாலயம் சென்று வழிபட்டால் ஓன்று சேர்ந்து வாழலாம். மேலும் கருத்து வேற்றுமையோடு வாழும் தம்பதிகள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் எல்லா நம்மையும் பெறலாம். பிரித்தவர்கள் கூடுவார்கள்.
திரிகரண பிரதோஷம்
வருடத்திற்கு மூன்று முறை மகா பிரதோஷம் வந்தால் அதை திரிகரண பிரதோஷம் என்பார்கள். இதை முறையாக கடைபிடித்தால் இல்லாமை என்ற சொல் இல்லாமல் போய்விடும். அஷ்ட லக்ஷ்மிகளின் அருளாசியும் கிட்டும்.
பிரம்ம பிரதோஷம்
பிரம்மாவிற்கு திருவண்ணாமலையில் ஏற்பட்ட சாபம் நீங்க,ஒரு வருடத்தில் வரும் நான்கு சனிக்கிழமைகளில் வந்த சனி பிரதோஷத்தை முறையாக கடைப்பிடித்து சாப விமோசனம் பெற்றார். நாமும் இந்த பிரதோஷத்தை கடிபிடித்தால் முன்னோர் சாபம், முன்வினை பாவம் எல்லாம் விலகிவிடும்.
ஆட்சரப பிரதோஷம்
வருடத்தில் ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அதற்க்கு இந்த பெயர். தாருகா வனத்து ரிஷிகள் தான் என்ற அகந்தை கொண்டு ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனார் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்கு பாடம் புகட்டினார். தங்கள் தவறை உணர்ந்த ரிஷிகள் இந்த பிரதோஷ விரதத்தை கடைப்பிடித்து சாப விமோசம் பெற்றதால் இதற்கு இந்த பெயர் வந்தது. தெரிந்தே தவறுகள் செய்தவர்கள் இதை அனுஷ்டிக்கலாம்.
கந்தப் பிரதோஷம்
சனிக்கிழமையும், திரயோசசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம் என்று பெயர். இது முருக பெருமான் சூர சம்ஹாரத்திற்கு முன் வழிபட்டதால், இந்த பெயர் வந்தது. முருகனருள் வேண்டுபவர்கள் இந்த வழிபாட்டை செய்யலாம்.
சட்ஜ பிரபா பிரதோஷம்
தேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறைபிடிக்க பட்டனர். ஏழு குழந்தைகளை கம்சன் கொன்றான். எனவே எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை அவர்கள் அனுஷ்ட்டித்ததால் கிருஷ்ணன் பிறந்தான். வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்து அதை கடைபிடித்தால் பிறவி என்னும் பெரும் கடலை நீந்தி, பிறப்பில்லா பெருமையை பெறலாம்.
அஷ்டதிக் பிரதோஷம்
ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷம் முறையாக கடைபிடித்தால், அஷ்ட்டதிக் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த புகழ், கீர்த்தி, செல்வாக்கு ஆகியவற்றை தருவார்கள்.
நவகிரக பிரதோஷம்
வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால் அது நவகிரக பிரதோஷம். இப்படி ஒன்பது பிரதோஷம் வருவது மிக மிக அரிது. அப்படி வந்தால், அதை நீங்கள் அனுஷ்ட்டித்தால் சகல கிரக தோஷமும் விலகும். தடை பட்ட திருமணம், புத்திர பாக்கியம், வேலை வாய்ப்பு, பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை எல்லாம் கிட்டும்.
துத்த பிரதோஷம்
வருடத்தில் பத்து மகா பிரதோஷம் வந்து (இதற்கு வாய்ப்புகள் குறைவுதான்), அந்த பத்து பிரதோஷத்தையும் அனுஷ்ட்டித்தால் இந்த உலகமே கையில் கிடைத்த மாதிரி உச்சாணி கொம்புக்கு போவார்கள்.
திருக்குறுங்குடி நின்ற நம்பி பெருமாள் கோவில்
கருடன் தன் இரு கைகளிலும் ஆமை, யானை ஆகியவற்றை பிடித்துக் கொண்டிருக்கும் அபூர்வ சிற்பம்
திருநெல்வேலியில் இருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருக்குறுங்குடி நின்ற நம்பி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் பல அற்புதமான, நுணுக்கமான சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருக்கின்றது.
இக்கோவிலில் கோபுரத்தின் உள் நுழைந்ததும் வலது பக்கம், கருடன் ஆமை, யானை ஆகியவற்றை தன் இரு கைகளிலும் பிடித்துக் கொண்டு, முனிவர்களுடன் கூடிய மரக்கிளையை தன் அலகிலும் வைத்துக் கொண்டு கந்தமாதன மலையை நோக்கி பறப்பது போன்ற அழகிய புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. கருடனின் இடது கையில் ஆமையும் அதன் அருகில் ஆலமரம் ஒரு கிளை முறிந்த நிலையில் இருப்பதும், முறிந்த கிளையில் ஆல இலையின் வடிவம் தத்ரூபமாக கனி மற்றும் மொட்டுக்களோடு வடித்திருப்பதும், தலைகீழாகத் தவம் புரியும் வால்கில்ய (மிகச் சிறிய உருவம் உடையவர்கள்) முனிவர்களும், சிறகுகள் விரிந்த நிலையில் கருடன் பறப்பது போன்ற அமைப்பும், கருடனின் கால் அடியில் கடல் என்று குறிப்பிட நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் மகர மீன் செதுக்கியிருப்பதும், கந்தமாதன மலை அருகில் அமைத்திருப்பதும், அந்த மலையில் ஒரு புலியின் வடிவம் அமைதிருப்பதும் இந்த அற்புதமானதும், அரியதுமான சிற்பத்தின் சிறப்புகள் ஆகும்.
இந்த சிற்பத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் காட்சியானது, மகாபாரதத்தின் முதல் பகுதியான ஆதி பர்வத்தின் உட்பிரிவான ஆஸ்தீக பர்வத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.