விராலிமலை சண்முக நாதர் கோவில்

முருகனுக்கு குழந்தையை தத்து கொடுத்து, பின் தவிட்டுக்கு குழந்தையை பெற்றுக் கொள்ளும் நடைமுறை

மதுரை-திருச்சி நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள திருப்புகழ் தலம் விராலிமலை சண்முக நாதர் கோவில். 1500 வருடப் பழைமை வாய்ந்த கோவில் இது. முனிவர்களும், தேவர்களும் மரங்களாக விரவி முருகனை வழிபட்டதால், விரவி மலை என்று அழைக்கப்பட்டு, பின்பு அதுவே மருவி, விராலி மலையாயிற்று. மலை மீது உள்ள கோவிலுக்கு செல்ல 207 படிகள் உள்ளனஅருணகிரிநாதர், முருகப் பெருமானிடம் ஞானோபதேசம் பெற்ற தலம்.

கருவறையில் முருகன் வள்ளி, தேவசேனா சமேதராக ஆறுமுகங்களுடனும், பன்னிரண்டு கரங்களுடனும் பத்து அடி உயரத்தில் அசுர மயில் மீதமர்ந்து, வலது கரத்தில் சூலமும் இடது கரத்தில் வஜ்ராயுதமும் ஏந்தி அருள்பாலிக்கிறார். தீபாராதனை காட்டும் பொழுது மூன்று முகங்கள் பக்தர்களுக்குத் தெரிகிறது. பின்புறம் உள்ள கண்ணாடியில் மற்ற மூன்று முகங்களையும் தரிசிக்க முடிகிறது.

ஐந்து வயதிற்குள் குழந்தைகளுக்கு பாலாரிஷ்ட தோஷம் உண்டாகும். ஜாதகத்தில் பாவ கிரகங்களின் சேர்க்கை மற்றும் பார்வையால் ஏற்படும் தோஷம் இது. இதனால் ஆயுள், உடல்நலம் பாதிக்க கூடும். தாய், தந்தை, தாய்மாமனுக்கு பாதிப்பு ஏற்படலாம். ஆனால் குருவின் பார்வை ஏற்பட்டால் தோஷம் மறையும். இதிலிருந்து விடுபட முருகப்பெருமானுக்கு பரிகார பூஜை செய்யலாம்.

இக்கோவிலில் முருகனுக்கு குழந்தையை தத்து கொடுத்து, பின் தவிட்டுக்கு குழந்தையை பெற்றுக் கொள்ளும் நடைமுறை இருக்கின்றது. பிரார்த்தனைப்படி குழந்தை பிறந்தவுடன் குழந்தையை முருகனிடம் ஒப்படைத்துவிட்டு, குழந்தையின் மாமன்மார்கள் அல்லது உறவினர்கள் குழந்தைக்கு பதிலாக தவிட்டை தந்து சுவாமியிடம் குழந்தையை பெற்றுக் கொண்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கிறார்கள்.

இப்பரிகாரத்தின் மூலம் தோஷம் நீங்குவதோடு, முருகனருளால் குழந்தையின் ஆயுள், ஆரோக்கியம் கூடும்.

 
Next
Next

நசரத்பேட்டை காசி விசுவநாதர் கோவில்