திருப்பந்துறை சிவானந்தேசுவரர் கோவில்
தலையில் குடுமியுடன், தியான நிலையில் உள்ள முருகன்
வாய் பேச முடியாதவர்கள் வழிபட வேண்டிய கோவில்
கும்பகோணத்திலிருந்து எரவாஞ்சேரி வழியாக மயிலாடுதுறை செல்லும் வழியில் 12 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருப்பேணுபெருந்துறை. தற்போது 'திருப்பந்துறை' என்று அழைக்கப்படுகிறது. இறைவன் திருநாமம் சிவானந்தேசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. இத்தலத்தில் முருகன் தான் சிறப்புக்கு உரியவர். ஆடி கிருத்திகை இத்தலத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
இக்கோவிலில் சுவாமி சன்னிதியின் முன்பு முருகப்பெருமான் தண்டாயுதபாணி என்னும் திருநாமத்துடன், சின் முத்திரையுடன், கண் மூடி நின்ற நிலையில் தியானம் செய்யும் கோலத்தில் இருக்கின்றார். அவரது காது நீளமாக வளர்ந்திருக்கிறது. தலையில் குடுமி இருக்கிறது. தலையில் குடுமியுடன் தியான நிலையில் உள்ள முருகனை வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாது.
பிரம்மாவுக்கு பிரணவத்தின் பொருள் தெரியாததால், முருகப்பெருமான், அவரை சிறையில் அடைத்தார். அதனால் ஏற்பட்ட தோஷத்தினால் முருகப்பெருமானுக்கு பேசும் திறன் குறைந்தது. தோஷம் நீங்குவதற்கு முருகப்பெருமான், இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார். எனவே வாய்பேசமுடியாதவர்கள், திக்கு வாய் உள்ளவர்கள் கோவில் எதிரே உள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி, முருகனுக்கு 45 நாட்கள் தேனபிஷேகம் செய்து, சிவனுக்கு அர்ச்சனை செய்தால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை.
அருகன்குளம் காட்டுராமர் கோவில்
அசல் ராமரின் அழகோடு ஒப்பிடத் தோன்றும் காட்டுராமர்
ஜடாயுவுக்கு ராமரே மகனாக இருந்து தர்ப்பணம் கொடுத்த இடம்
திருநெல்வேலியில் இருந்து ஐந்து கி.மீ .தொலைவில் அமைந்துள்ளது, அருகன்குளம் எனும் கிராமம். தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஊரில், அருகம்புல் அதிகம் கொண்ட குளம் இருக்கிறது. இதனால் இந்தப் பகுதி அருகன் குளம் என்று அழைக்கப்படுகிறது.இங்கு மயில்கள் நிறைந்த அமைதியான வனப்பகுதியில் ராமர் கோயில் அமைந்துள்ளது.காட்டுப்பகுதியில் இந்த கோவில் இருப்பதால் இது காட்டுராமர் கோவில் என அழைக்கப்படுகிறது.இக்கோவில் 2000 ஆண்டுகளுக்கு முந்தையது.
ராமபிரான் வனவாசத்தில் இருந்தபோது, சீதையை ராவணன் கடத்தினான். சீதையை ராவணன் கடத்துவதை அருகன்குளம் பகுதியில் வைத்துப் பார்த்த ஜடாயு என்ற கழுகு அரசன், ராவணனை தடுத்து நிறுத்தினான். இதனால் ராவணனுக்கும் ஜடாயுவுக்கும் போர் ஏற்பட்டது.இதில் ஜடாயுவின் இறக்கையை ராவணன் வெட்டினான். இதில் காயமடைந்த ஜடாயு, உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது. அந்த வழியாக வந்த ராமரும், லட்சுமணரும் துடித்துக்கொண்டு இருந்த ஜடாயுவை பார்த்தனர். உடனே ராமர், ஜடாயுவை தனது தொடையில் தூக்கிவைத்து தடவிக்கொடுத்தார். அப்போது ஜடாயு, சீதையை ராவணன் இலங்கைக்கு கடத்திச் செல்கிறான் என்ற தகவலை சொல்லியது. மேலும் தான் இறந்ததும் இறுதிச்சடங்கை ராமர் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்து விட்டு இறந்தது. அதன்படி ராமபிரான் ஜடாயுவுக்கு, தாமிரபரணி ஆற்றங் கரையில் இறுதிச்சடங்கு செய்தார். அப்போது ஜடாயுவுக்கு தீர்த்தம் கொடுப்பதற்காக ஜடாயு தீர்த்தத்தை உருவாக்கி அதில் இருந்து தண்ணீர் எடுத்து கொடுத்தார். ஜடாயுவுக்கு ராமரே மகனாக இருந்து தர்ப்பணம் கொடுத்த இடம், தாமிரபரணி நதிக்கரையில் 'ஜடாயுத்துறை' யாக இன்றும் அழைக்கப்படுகிறது.
கோவில் கருவறையில் ராமபிரான் கம்பீரமான தோற்றத்துடன், இடது கையில் அலங்காரமாக வடிவமைக்கப்பட்ட வில்லையும் வலது கையில் வாளையும் ஏந்தி நிற்கிறார், முதுகில் ஒரு அம்பறாத்தூணி தெளிவாகத் தெரியும். அவரது வலது பக்கத்தில், சீதை இடது கையில் ஒரு பூவை ஏந்தியுள்ளார், அவரது இடது பக்கத்தில், லட்சுமணன் முதுகில் ஒரு வில்லையும் வாளையும் ஏந்தியுள்ளார். இந்த மூன்று பெரிய மூர்த்திகளின் அழகு இணையற்றது.இந்த காட்டு ராமரின் அழகுக்கு, அசல் ராமரின் அழகே இணையாக இருக்க முடியுமா என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில் இந்த ராமர் மிகவும் அழகுடன் காட்சி அளிக்கிறார்.
தோஷங்களாலும் கல்யாணத் தடையாலும் வருந்தும் அன்பர்கள், இங்கு வந்து வழிபட்டால், விரைவில் அவர்களுக்குக் கல்யாண வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்
நெற்றிக்கண்ணுடன் மகாலட்சுமி இருக்கும் அபூர்வ தோற்றம்
சிவபெருமானுக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படும் தலம்
கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.
அச்சுதன் என்னும் திருமால், பிரிந்து சென்ற தன் மனைவி மங்கலம் என்னும் மகாலட்சுமியை, இத்தலத்து இறைவனைப் பூஜித்து திரும்பப் பெற்றதால் இத்தலத்திற்கு அச்சுதமங்கலம் என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோவிலில் தனிச்சன்னதியில் மகாவிஷ்ணுடன் எழுந்தருளி இருக்கும் மகாலட்சுமிக்கு நெற்றிக்கண் இருப்பது ஒரு சிறப்பம்சமாகும். அதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.
ஒரு சமயம் கஜேந்திரன் என்னும் யானையானது, முதலையிடம் சிக்கிக் கொண்டபோது, ஆதிமூலமே காப்பாற்று என்று மகாவிஷ்ணுவிடம் அபயக்குரல் எழுப்பியது. அப்போது மகாவிஷ்ணு விரைந்து வந்து முதலையிடம் இருந்து யானையை மீட்டு, அதற்கு மோட்சம் அளித்தார். அப்படி யானையை காப்பாற்ற மகாவிஷ்ணு விரைந்து வந்தபோது, மகாலட்சுமியை தனியே விட்டு வந்ததால், மகாலட்சுமி கோபமுற்று அவரை விட்டு பிரிந்து சென்றாள். பிரிந்து சென்ற மகாலட்சுமியை மீண்டும் அடைய, மகாவிஷ்ணு இத்தலத்து இறைவன் சோமநாதரை பூஜை செய்ய ஆரம்பித்தார். 48 ஆண்டுகள் கடந்தும், இறைவன் அவருடைய கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இதுவரை எந்த ஒரு பொருளால் இறைவனை யாரும் பூஜை செய்யவில்லையோ, அதைக் கொண்டு பூஜை செய்தால் இறைவன் தம்முடைய கோரிக்கை நிறைவேற்றுவார் என்ற அடிப்படையில், மகாவிஷ்ணு தமக்கு பிரியமான துளசியைக் கொண்டு இறைவனை பூஜை செய்ய ஆரம்பித்தார். இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான், மகாலட்சுமியை மகாவிஷ்ணுடன் சேர்ந்து இருக்குமாறு பணித்தார். அதற்கு மகாலட்சுமி சிவபெருமானிடம் இருக்கும் நெற்றிக்கண் போல் தனக்கும் ஒன்று வேண்டும் என்று அவரிடம் வரம் கேட்டு நெற்றிக்கண்ணை பெற்றுக்கொண்டார். அதனால் தான் இத்தலத்தில் மகாலட்சுமிக்கு நெற்றிக்கண் அமைந்துள்ளது. மகாலட்சுமியின் இந்த நெற்றிக்கண்ணை, அபிஷேகத்தின் போது நாம் தரிசிக்க முடியும்.
இத்தலத்தில் மகாவிஷ்ணு துளசி கொண்டு சிவபெருமானை பூஜித்ததால், இன்றும் இக்கோவிலில் சிவபெருமானுக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
பிள்ளைப்பாக்கம் வைத்தீஸ்வரன் கோவில்
சூலாயுதம் ஏந்தி இருக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வ தோற்றம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில் உள்ள பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது வைத்தீஸ்வரன் கோவில். இறைவியின் திருநாமம் தையல் நாயகி.
இக்கோவிலில் எழுந்தருளி உள்ள தட்சிணாமூர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தவர். இவர் கால தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகின்றார். இவர் கையில் சூலாயுதம் ஏந்தி நாக ஆபரணத்துடன் காட்சியளிக்கிறார். இப்படி சூலாயுதம் ஏந்திய தட்சிணாமூர்த்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
நாகாபரணம் அணிந்த இவரை வணங்கினால் நாக தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில்
தென் திருப்பதி என்று போற்றப்படும் தலம்
திருப்பதி வெங்கடாசலபதி நிரந்தரமாக தங்கி இருக்கும் திருவண்ணாமலை
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வடக்கே சுமார் 5 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பின்புறத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை என்ற ஊரில் அமைந்துள்ளது சீனிவாச பெருமாள் கோவில். பெருமாள் சன்னிதியை அடைய 150 படிகளுக்கு மேல் ஏற வேண்டும். எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவிலில் மூலவர் ஸ்ரீனிவாச பெருமாள் ஒன்பதடி உயரத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். திருப்பதியில் இருப்பது போன்று நின்ற நிலையில் பெருமாள் அருள் பாலிப்பதால் ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண திருப்பதி வெங்கடாசலபதி தனது பரிவாரங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து கொண்டிருந்தார். அவர் இந்தத் தலத்தை கடந்தபோது நாரதர், ஆண்டாள் ரங்கமன்னார் திருமணம் நடந்து முடிந்துவிட்டது என்று கூறினார்.அதனால் வெங்கடாசலபதி திருப்பதிக்குத் திரும்ப முடிவு செய்தார், இருப்பினும் ஆண்டாள் அவரை இந்த இடத்திலேயே தங்கி, தனக்கும் பக்தர்களுக்கும் தனது மூத்த சகோதரனாக இருந்து தரிசனம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆண்டாளால் அமைதியடைந்த ஸ்ரீனிவாச பெருமாள், அவளுடைய வேண்டுகோளை ஏற்று, இந்த மலையின் உச்சியில் நிரந்தரமாக தங்கினார். திருப்பதி வெங்கடாசலபதி இத்தலத்தில் தங்கி இருப்பதால், இக்கோவில் தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது.
திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு நேர்த்திக் கடன் செலுத்தலாம் என்றும் திருப்பதி சென்றால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் சீனிவாச பெருமாள் கோயிலுக்கு வந்தாலும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவில்
பக்தர்களுக்கு செந்தில் வேலவன் இருக்கும் இடத்தை காட்டும் தூண்டுகை விநாயகர்
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடு திருச்செந்தூர் ஆகும். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும் பாதையின் தொடக்கத்தில் தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலிலிருந்து முருகன் கோவில் இருநூறு மீட்டர் தொலைவில் உள்ளது.
இவ்விநாயகப் பெருமான் தம் தம்பியாகிய செந்தில் வேலவன் இருக்கும் இடத்தை பக்தர்களுக்குத் தூண்டிக் காண்பிக்கும் வகையில் எழுந்தருளியுள்ளதால் இப்பெயர் பெற்று விளங்குகின்றார். திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்கள் அனைவரும் முதலில் தூண்டுகை விநாயகரை வணங்கி தேங்காய் உடைத்து விட்டு, பின்பு முருகனை தரிசிப்பது என்பது வழக்கமாக உள்ளது. முருகனுக்கு பால்குடம் மற்றும் காவடி எடுக்கும் பக்தர்கள் தூண்டுகை விநாயகர் கோயிலில் இருந்துதான் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வருகின்றனர்.
திருச்செந்தூர் முருகன் கோவில் ராஜகோபுரம் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தபோது, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத அளவிற்கு நிதி தட்டுப்பாடு இருந்தது. எனவே கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி பிரசாதத்தை பன்னீர் இலைகளில் வைத்து சம்பளமாக கொடுத்தனர். வேலை நாளின் முடிவில் தூண்டுகை விநாயகரிடம் பிரார்த்தனை செய்த பிறகு, தொழிலாளர்கள் பன்னீர் இலை விபூதி பொட்டலத்தைத் திறந்து பார்த்தால், அதில் இருக்கும் விபூதியானது அன்றைய தினம் அவர்கள் செய்த வேலைக்கு ஏற்ப தங்க நாணயங்களாக மாறி இருக்கும் அதிசயம் நிகழ்ந்தது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
வேலுக்கு மட்டும் அபிஷேகம் நடக்கும் அறுபடை வீடு
மதுரைக்கு தென்மேற்கில் 8 கி.மீ.தொலைவில் உள்ள அறுபடை வீடு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில். அறுபடை வீடுகளில் இத்தலம் முதல் படை வீடாகும். மற்ற ஐந்து அறுபடை வீடுகளில் நின்ற கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான் இத்தலத்தில் தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். இவரது அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும், மேலே சூரியன், சந்திரன், கந்தர்வர்களும் இருக்கின்றனர். சுப்பிரமணியருக்கு கீழே அவரது வாகனமான யானை, ஆடும் உள்ளது.
இங்கு முருகப்பெருமான் குடவரை மூர்த்தியாக இருப்பதால் அவருக்கு அபிஷேகம் கிடையாது. அதற்கு பதிலாக புனுகு மட்டுமே சாற்றப்படுகிறது. அபிஷேகம் அவரது வேலுக்கே நடைபெறுகின்றது. அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோவில் இது மட்டும் தான். சூரனை ஆட்கொண்டு வெற்றி வேலுடன் முருகப்பெருமான் இங்கு வந்து அமர்ந்ததால், வேலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
தொடுகாடு பீமேஸ்வரர் கோவில்
ஜோதிடக் கலை தொடர்புடைய முதல் படைப்பு எழுதப்பட்ட தலம்
ஒரு முருங்கைக் காய், ஒரு மாம்பழம், ஒரு தேங்காய், ஒரு வாழைப்பழம் என்று ஒற்றை எண்ணிக்கையிலே நைவேத்தியம் படைக்கப்படும் வித்தியாசமான நடைமுறை
திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து நான்கு கி.மீ. தொலைவில் தொடுகாடு என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது பீமேஸ்வரர் கோவில். பீமேஸ்வரரின் முந்தைய பெயர் வீமேஸ்வரர், காலப்போக்கில் அது பீமேஸ்வரர் ஆனது. இறைவியின் திருநாமம் நகைமுகவல்லி . இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
இக்கோவில் இறைவன் வீமேஸ்வரர் சொல்லச் சொல்ல, 63 நாயன்மார்களில் ஒருவரான ஐயடிகள் காடவர்கோன் 'வீமேஸ்வர உள்ளமுடையான்' என்னும் ஜோதிட நூலை இயற்றினார். ஜோதிடத்துடன் தொடர்புடைய முதல் படைப்பு, இந்த கோவிலில் தான் எழுதப்பட்டது என்பது இத்தலத்தின் சிறப்பாகும். எனவே இத்தலம் ஜோதிடத்தின் பிறப்பிடம் என்று கூறப்படுகிறது. இங்கு பூஜையின் போது ஒரு முருங்கைக்காய், ஒரு மாம்பழம், ஒரு தேங்காய், ஒரு வாழைப்பழம் என்று ஒற்றை எண்ணிக்கையிலேயே, தினமும் இறைவனுக்கு நைவேத்தியம் படைத்து வழிபாடு நடத்துகின்றனர். இது வேறு எந்த தலத்திலும் பின்பற்றாத வித்தியாசமான நடைமுறை ஆகும்.
இத்தலத்தில் கற்புக்கரசி நளாயினி தனது கணவரின் சாப விமோசனம் பெற வழிபாடு செய்தார். எனவே, திருமணத்தில் பிரச்சினைகள் உள்ளவர்கள் அல்லது தங்கள் மனைவியைப் பிரிந்தவர்கள், பீமேஸ்வரரை பிரார்த்தனை செய்தால், அவர்கள் ஒன்றிணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம். இத்தலத்து இறைவன் திருமேனியானது 16 பட்டைகள் கொண்ட சோடச லிங்கமாக விளங்குவதால், இவரை வழிபட்டால் 16 வகை செல்வங்களையும் பெறலாம்.
இரும்பை மாகாளேசுவரர் கோவில்
கையில் ஏடு ஏந்தியிருக்கும் சந்திரனின் அபூர்வ தோற்றம்
கல்வி , கலைகளை பக்தர்களுக்கு அருளும் கலா சந்திரன்
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் வட்டத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம், இரும்பை மாகாளேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மதுரசுந்தர நாயகி. இத்தலம் திண்டிவனத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
இக்கோவில் பிரகாரத்தில் சந்திரன், மேற்கு பார்த்தபடி தனிச்சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார். இவர் தனது இடது கையில் ஏடு ஒன்றை ஏந்தியிருப்பது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத காட்சியாகும். கையில் ஏடு வைத்திருப்பது, இவர் கல்வி, கலைகளுக்கு காரகனாக விளங்குகிறார் என்பதை குறிப்பிடுகிறது. எனவே இவர் கலா சந்திரன் என்று குறிப்பிடப்படுகின்றார். பக்தர்கள் இவருக்கு பால் சாதம் நைவேத்யமாக படைத்து வணங்குகின்றனர். இதனால் கல்வி, கலைகளில் சிறந்து விளங்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மனோதிடம் அதிகரிக்கவும் இவரை வழிபடலாம். ஒருவருக்கு மாதத்தில், உத்தேசமாக, இரண்டரை நாள் வரை சந்திராஷ்டமம் வரும். இந்த காலத்தில் மனோதிடம் குறையும். செயல்களில் தடை உண்டாகும் என்பது ஜோதிடவிதி. இந்த பாதிப்பு சந்திராஷ்டம காலத்தில் ஏற்படக்கூடாது என வேண்டி, கலா சந்திரனுக்கு பால்சாதம் நைவேத்யம் செய்து வழிபடலாம்.
.
காரைக்கால் காரைக்கால் அம்மையார் கோவில்
சிவபெருமானால் 'அம்மையே' என்று அழைக்கப்பட்ட பெண் நாயன்மார்
புதுச்சேரி மாநிலத்திலுள்ள காரைக்காலில் அமைந்துள்ளது காரைக்கால் காரைக்கால் அம்மையார் கோவில். சேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தில் கூறப்பட்டுள்ள 63 நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் ஒருவர்தான் பெண் இனத்தைச் சேர்ந்தவர். சிவபெருமானால் 'அம்மையே' என்று அழைக்கப்பட்டச் சிறப்புக்குரியவர். இசைத் தமிழால் இறைவனைப் பாடியவர். சிவபெருமானால் மாங்கனி தந்து அவர் ஆட்கொள்ளப்பட்ட வரலாறு, அவர்தம் பக்தியின் சிறப்பை நமக்கு உணர்த்துகின்றது. அதைப் பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் மாங்கனி திருவிழா காரைக்காலம்மையார் கோவிலில் நடைபெறுவது வழக்கம்.
சிவபெருமான் மாங்கனி தந்து காரைக்கால் அம்மையாரை ஆட்கொண்ட வரலாறு
காரைக்காலிலுள்ள குலத்தைச் சேர்ந்த தனதத்தன் என்பவருக்கு மகளாக பிறந்தவர்காரைக்கால் அம்மையார். இவர் இயற் பெயர் புனிதவதி. சிறுவயது முதல் சிவ பக்தியிலும், சிவனடியார்களுக்கு தொண்டு புரிவதிலும் சிறந்தவர். புனிதவதி வளர்ந்து திருமண வயதை அடைந்ததும், பரமதத்தன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.திருமணத்துக்கு பிறகும் புனிதவதி சிவனடியார்களுக்கு தொண்டு செய்து வந்தார். ஒரு நாள் பரமதத்தனுக்கு தனக்கு கிடைத்த மாங்கனிகளை தனது வேலையாட்கள் மூலம் வீட்டிற்கு கொடுத்து அனுப்பினான். அப்போது சிவபெருமான், ஒரு சிவனடியார் வேடத்தில் அங்கு வந்தார் சிவன். தாம் பசியுடன் இருப்பதாகவும், உண்ண ஏதாவது உணவு தருமாறும் புனிதவதியை வேண்டினார். அப்போது உணவு தயாரகவில்லை என்பதால் தனது கணவன் கொடுத்து அனுப்பிய மாங்கனிகளில் இருந்து ஒன்றை எடுத்து சிவனடியாருக்கு உண்ணக்கொடுத்தார். அதனை உண்ட சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமானும் புனிதவதியை வாழ்த்தி மறைந்தார். மதிய உணவு உண்பதற்காக வீட்டிற்கு பரமதத்தன், தனது மனைவி புனிதவதியிடம் மாங்கனிகளை எடுத்து வா என்று கேட்டார். புனிதவதியோ, சிவனடியாருக்கு கொடுத்த ஒரு மாங்கனி போக மீதம் இருந்த மற்றொரு மாங்கனியை தன் கணவனிடம் கொண்டு வந்து கொடுத்தார். அக்கனியை உண்ட பரமதத்தன், இரண்டாவது மாங்கனியையும் எடுத்து வருமாறு கூறினார்.
சிவபெருமான் கொடுத்த மாங்கனி
இதைக் கேட்ட புனிதவதி, பூஜை அறைக்கு சென்று சிவபெருமானிடம் மாம்பழம் கொடுத்து அருளுமாறு வேண்டினார். சிவனும் உடனே புனிதவதிக்கு மாங்கனியை அருளினார். அதனை பெற்றுக் கொண்ட புனிதவதி, தன் கணவன் பரமதத்தனிடம் மாங்கனியை கொடுத்தாள். அக் கனியை உண்ட பரமதத்தனுக்கு தான் முன்பு சாப்பிட்ட மாங்கனியை விட இரண்டாவது கனி மிகவும் சிறப்பான சுவையுடன் இருந்ததால், புனிதவதியிடம் மாங்கனி சுவையின் வேறுபாடு பற்றி கேட்டான். கணவனின் கேள்விக்கு பொய் சொல்ல விரும்பாத புனிதவதி நடந்தவற்றை மறைக்காமல் தனது கணவனிடம் தெரிவித்தாள். இதனைக் கேட்ட பரமதத்தன், அப்படியானால் சிவபெரு மானிடம் இருந்து இன்னொரு மாங்கனி பெற்றுத் தருமாறு வேண்டினான். புனிதவதியும் சிவபெருமானை வேண்ட இன்னொரு மாங்கனியும் கிடைத்தது. இதனைக் கண்ட பரமதத்தன் தன் மனைவி ஒரு தெய்வம் என்று எண்ணி அவளது காலில் விழுந்து வணங்கினார். தன் மனைவியை விட்டு விலகி பாண்டிய நாடு வந்த பரமதத்தன், குலசேகரன் பட்டிணத்தில் தங்கி வணிகம் செய்ய ஆரம்பித்தான். பிறகு அங்கேயே ஒரு பெண்ணை மணந்து வாழ்ந்து வந்தான். அந்த பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு தனது முதல் மனைவியின் பெயரான புனிதவதி என்று பெயரிட்டு அழைத்து வந்தான். இந்த தகவலை அறிந்த புனிதவதியார் குலசேகரன்பட்டிணம் வந்து, ஊர் எல்லையில் உள்ள ஒரு மண்டபத்தில் அமர்ந்து கொண்டு கணவனுக்கு அழைப்பு விடுத்தார். தனது இரண்டாவது மனைவி, மகளுடன் வந்து முதல் மனைவியான காரைக்கால் அம்மையார் காலில் விழுந்து வணங்கி, அங்கு கூடியிருந்த மக்களையும் வணங்க வைத்தான்.
காரைக்கால் அம்மையார் சிவபெருமானிடம் பெற்ற வரம்
காரைக்கால் அம்மையார் குலசேகரபட்டினத்தில் கணவருடன் சேர நினைத்து அது இயலாமல் போகவே, கணவனுக்கு தேவையற்ற இந்த இளமையும், அழகும், தனக்கு வேண்டாம் என இறைவனிடம் கூறி துறவறத்திலேயே யாரும் துணியாத நிலையான பேய் வடிவினை வரமாகக் கேட்டுப் பெற்றார். காரைக்கால் சென்று அம்மை அப்பரை வணங்கிய பின்னர் அங்கிருந்து கயிலாயம் புறப்பட்டுச் சென்றார். காலால் நடப்பது குற்றம் என்று எண்ணிய புனிதவதியார், தனது தலையாலேயே கயிலாயத்தில் நடந்து சென்றார். அப்போது இறைவன், 'அம்மையே! நலமாக வந்தனையோ? நம்மிடம் வேண்டுவது யாது?'' என்று புனிதவதியை நோக்கி கேட்டார். அதற்கு அம்மையார்,'இறைவா! உன்மீது என்றும் நீங்காத அன்போடு நான் இருக்க வேண்டும். பிறவாமை வேண்டும், மீண்டும் பிறந்தால் உம்மை என்றும் மறவாமை வேண்டும். அனுதினமும் உன் திருவடியின் கீழ் இருந்து என்றும் உன் திருநாமத்தை பாடிக் கொண்டிருக்கும் வரம் வேண்டும்' என்று கேட்டார். உடனே சிவபெருமான், 'அம்மையே! நீவீர் பூலோகத்தில் உள்ள திருவாலங்காட்டில் எனது திருவடியின்கீழ் இருந்து பாடும் வரம் தந்தோம்' என்று அருளினார். அதன்படி இன்றும் திருவாலங்காட்டில் உள்ள நடராஜப் பெருமானின் ரத்தின சபையில் காரைக்கால் அம்மையார் அமர்ந்து சிவபெருமானின் நடனத்தை கண்டு மகிழ்கிறார் என்பது ஐதீகம். 63 நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார்தான் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
சிவபெருமானைத் துதித்து, காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி, திருஇரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்தத்திருப்பதிகம் போன்ற நூல்களைப் பாடியுள்ளார்.
பிள்ளை வரம் தரும் மாங்கனித் திருவிழா
இந்த ஆண்டு மாங்கனி திருவிழா ஜூலை மாதம் 8 முதல் 11ம் தேதி வரை, கைலாசநாதர் கோவிலில் நடைபெறுகின்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 8-ந் தேதி மாப்பிள்ளை அழைப்பும், 9ந் தேதி காரைக்கால் அம்மையாருக்கும், பரம தத்தருக்கும் திருக்கல்யாணமும், 10-ந் தேதி சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் பவளக்கால் சப்பரத்தில் வீதியுலாவும் நடைபெற்றது. பிச்சாண்டவர் வீதியுலாவின்போது பக்தர்கள், தங்கள் நேர்த்திக்கடனை தீர்க்கும் வகையில், மாங்கனிகளை வாரி இறைப்பார்கள். அப்போது மக்கள் உயரமான இடத்திலிருந்து வீதியில் மாங்கனிகளை வீசுவர். மாடிகளிலிருந்து இறைக்கப்படும் மாம்பழங்கள் வானத்திலிருந்து மாம்பழ மழை பொழிவதைப் போல் தெரியும். இந்த மாங்கனிகளை பிடித்து சாப்பிட்டால் திருமணம் கை கூடும் என்பதும், குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதும் ஐதீகம் . குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாங்கனிகளை தங்களது சேலையில் தாங்கி பிடித்துக் கொள்வர்.ஜூலை 11-ந் தேதி வெள்ளிக்கிழமை, அம்மையாருக்கு, சிவபெருமான் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
பிள்ளை வரம் வேண்டி காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு வந்து மாங்கனி திருவிழாவின்போது மாங்கனிகளை படைத்து வழிபட்டால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
திருக்குரக்குக்கா குந்தளேசுவரர் கோவில்
ஆஞ்சநேயர் தன்னுடைய குண்டலத்தை படைத்து சிவபெருமானை வழிபட்ட தேவார தலம்
மயிலாடுதுறையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்குரக்குக்கா. இறைவன் திருநாமம் குந்தளேசுவரர். இறைவியின் திருநாமம் குந்தளநாயகி.
ஆஞ்சநேயர் சிவபெருமானை வழிபட்ட தலம் இது. இக்கோவிலில் ஆஞ்சநேயர் சன்னதி, இறைவன் குந்தளேசுவரர் சன்னதி எதிரே அமைக்கப்பட்டுள்ளது. திருமால், ராமாவதாரம் எடுத்தபோது, அவருக்கு உதவுவதற்காக சிவபெருமானே ஆஞ்சநேயராக வந்தார். எனவே, ஆஞ்சநேயர் சிவஅம்சம் ஆகிறார். அவ்வகையில் இத்தலத்தில் சிவபெருமானே, தன்னை வழிபடும் கோலத்தில் இருப்பதாக ஐதீகம். எனவே இவரை, 'சிவஆஞ்சநேயர்' என்றும், 'சிவபக்த ஆஞ்சநேயர்' என்றும் அழைக்கிறார்கள். இந்தத் திருநாமம் உடைய ஆஞ்சநேயர் வேறு எங்கும் கிடையாது. இவரே இத்தலத்தில் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார். ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடக்கிறது.
ராவணனை வதம் செய்த தோஷம் நீங்க, ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்ய எண்ணிய ராமர், சிவலிங்கம் கொண்டு வரும்படி ஆஞ்சநேயரை இமயமலைக்கு அனுப்பினார். ஆஞ்சநேயரும் சிவலிங்கம் எடுத்து வரச் இமயமலைக்குச் சென்றார். இதனிடையே ஆஞ்சநேயர் வர கால தாமதம் ஆனதால், சீதாதேவி கடல் மணலில் லிங்கம் சமைக்கவே, ராமர் அந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். அதன்பின்பு லிங்கத்துடன் வந்த ஆஞ்நேயர், ராமர் சிவபூஜை செய்துவிட்டதை அறிந்து கோபம் கொண்டார். மேலும், மணல் லிங்கத்தை தனது வாலால் உடைக்க முயன்றார். முடியவில்லை.
சிவ அபச்சாரம் செய்ததால் மன்னிப்பு வேண்டிய ஆஞ்சநேயர் இத்தலத்தில் சிவபூஜை செய்தார். அப்போது சிவபெருமானுக்கு மலருடன், தான் காதில் அணிந்திருந்த குண்டலத்தையும் படைத்து வணங்கி மனஅமைதி பெற்றார். ஆஞ்சநேயர் குண்டலம் வைத்து வழிபடப்பட்டவர் என்பதால், இத்தல சிவன் 'குண்டலகேஸ்வரர்' என்றும் பெயர் பெற்றார்.
பிரார்த்தனை
இவரை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சளுக்கை சுகர் நாராயணப் பெருமாள் கோவில்
ஏழடி உயர திருமேனி உடைய பெருமாள்
குழந்தைப் பேறு அளிக்கும் பெருமாள்
காஞ்சிபுரத்திலிருந்து 39 கி.மீ. தொலைவிலும், வந்தவாசியில் இருந்து 8 கி.மீ.தொலைவிலும் உள்ள சளுக்கை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது சுகர் நாராயணப் பெருமாள் கோவில். தாயார் திருநாமம் சுகந்தவல்லித் தாயார். கி.பி.1061 ஆம் ஆண்டு சோழ அரசனான முதலாம் ராஜேந்திர சோழனின் மகனான சோழ கேரளனுடைய நினைவாக, அவருடைய தம்பியால் கட்டப்பட்ட கோவில் இது. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் குறிப்பிடப்படும் சிறப்பு வாய்ந்த தலங்களில் இதுவும் ஒன்று.
கருவறையில் மூலவர் சுகர் நாராயணப் பெருமாள் 7 அடி உயரத்தில் கம்பீரமான தோற்றத்தில் காட்சி தருகிறார். அவர் தனது வலது கரத்தில் பிரயோக சக்கரத்தை ஏந்தி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். பெருமாளுடன் ஸ்ரீதேவியும் பூதேவியும் எழுந்தருளி இருக்கிறார்கள். பெருமாளின் முன் சுகப்பிரம்ம மகரிஷியும், பரத்வாஜ முனிவரும் மண்டியிட்டு, பெருமாளை சேவித்த வண்ணம் உள்ளார்கள்.
இந்த பெருமாள், குழந்தைபேறு இல்லாதவர்கள் வேண்டினால் அவர்களுக்கு உடனடியாக குழந்தைப் பேறு அளிக்கும் வரப்பிரசாதி. இங்கு வேண்டிக் கொண்டு குழந்தைபேறு பெற்றவர்கள், மீண்டும் இந்த கோவிலுக்கு வந்து குழந்தையின் எடைக்கு சமமாக தங்களால் முடிந்த காணிக்கையை துலாபாரம் நடத்தி சமர்ப்பிகிறார்கள். இது இந்த கோவிலின் விசேஷமான அம்சம் ஆகும்.
எழுச்சூர் நல்லிணக்கீஸ்வரர் கோவில்
பிராணாயாமம் செய்து கொண்டு, காயத்ரி மந்திரம் கேட்கும் தோரணையில் இருக்கும் அபூர்வ நந்தி
ஆபரண அலங்காரங்களுடன் இருக்கும் மிகவும் அழகான நந்தி
சென்னை தாம்பரம் - காஞ்சிபுரம் வழியில், ஒரகடம் சாலை சந்திப்பில் இருந்து சுமார் நான்கு கி.மீ .தொலைவில் அமைந்துள்ளது எழுச்சூர் நல்லிணக்கீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் தெய்வநாயகி. 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
இக்கோவிலில் அமைந்திருக்கும் நந்தி, வேறு எந்த கோவிலிலும் காண முடியாத பல தனித்துவமான அம்சங்கள் கொண்டவராக விளங்குகின்றார். இந்த விசித்திரமான நந்தியில் அழகான ஆபரணங்கள் மற்றும் ஆடைகள் உள்ளன. இந்த ஆபரணங்கள், ஆடைகள் அனைத்தும் அதன் உடலில் அதில் செதுக்கப்பட்டுள்ளன.
நந்தி கழுத்தில் விரிவான அலங்காரங்களை அணிந்துள்ளார். ருத்ராட்சத்தால் செய்யப்பட்ட மாலைகள், ஒரு இரும்புச் சங்கிலி, சலங்கை மற்றும் மணிகளால் செய்யப்பட்ட மாலை ஆகியவை அவற்றில் அடங்கும். நான்கு வேதங்களைத்தான் அவர் தனது கழுத்தில் ஆபரணங்களாக அணிந்துள்ளார். அவரது நெற்றியில் ஒரு அழகான நெத்தி சுட்டி அலங்கரிக்கிறது. மேலும் அவரது உடலில் அழகாக செதுக்கப்பட்ட வஸ்திரம் (சால்வை) மற்றும் ஒரு ஒட்டியானம் (இடுப்பு அலங்காரம்) அமைந்துள்ளது.
இந்த நந்தி 'ரஜோ குண' நந்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த நந்தி தேவர் அமர்ந்திருக்கும் தோற்றமானது, 'பிராணயாம கோலம்' (சுவாசப் பயிற்சி செய்தல்) என்று அழைக்கப்படுகிறது. மேலும் நந்தியின் காதுகள் வழக்கத்திற்கு மாறாக நிமிர்ந்த வடிவத்தில் கூர்மையாக செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள நந்திகேசுவரர் பிராணயாம செய்து, காயத்ரி மந்திரத்தைக் கேட்கும் தோரணையில் இருக்கின்றார்.
நந்தியின் பற்களின் வரிசை கூட மிகவும் துல்லியமாக, மிகச்சிறிய விவரங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. நந்தி வலது பக்கத்தில் நாக்கை நீட்டி நாசியை அடைந்து காணப்படுகிறது. ஒரு முன் கால் பின்னோக்கி மடிக்கப்பட்டுள்ளது, மற்றொன்று நீட்டிய நிலையில் உள்ளது. பின் கால்களில், ஒன்று மடிக்கப்பட்டுள்ளது, மற்றொரு கால் அதன் வயிற்றுக்குக் கீழே செல்கிறது, இந்த கால் மறுபுறம் நீட்டிக் காணப்படுகிறது. அதேபோல் வால் வயிற்றுக்குக் கீழே சென்று அதன் இடது பக்கத்தில் நீண்டுள்ளது.
சுருங்கச் சொன்னால், இந்த நந்தி தேவர் நமது முன்னோர்களின் சிற்பக்கலை திறனுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
ஆலயத்துளிகள் தனது ஐந்தாம் ஆண்டில் இன்று அடி எடுத்து வைக்கின்றது.
வாசகர்களின் ஆதரவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சுகுமார் & பல்லவி
அருணகிரிநாதருக்கு நடராசர் போல திருத்தாண்டவம் ஆடிக்காட்டிய செந்தில் ஆண்டவன்
ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாக்களில், ஏழாம் நாளன்று நடைபெறும் 'சிவப்புச் சாத்தி' உற்சவம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று இரண்டு மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.
திருப்புகழ் பாடல் இயற்றிய அருணகிரிநாதர் 800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். இவர் எழுதிய 'திருப்புகழ்' தேவாரத்திற்கு இணையாகவும், 'கந்தர் அலங்காரம்' திருவாசகத்திற்கு இணையாகவும், 'கந்தர் அனுபூதி' திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றன. ஒரு சமயம் அருணகிரிநாதர், திருப்பரங்குன்றம் தலத்திற்கு வந்து முருகனை வழிபட்டார். பின்பு திருச்செந்தூர் புறப்பட்டார்.வழி எல்லாம் ஒரே காடாக இருந்தபடியால் அருணகிரிநாதர் வழி தெரியாமல் திகைத்து நின்றார்.அந்நேரம் மயில் ஒன்று காட்சி தந்து,வழிகாட்டி அருணகிரிநாதரை திருச்செந்தூருக்கு அழைத்து வந்தது. திருச்செந்தூரில், முருகப்பெருமான் வடிவில் சிவபெருமானைக் கண்ட அருணகிரிநாதர் 'கயிலை மலையனைய செந்தில்' என்று சிறப்பித்துப் பாடினார்.செந்திலாண்டவனை தம்முடைய தந்தையைப் போல ஆடிக் காட்ட அழைத்தார்.முருகப்பெருமானும், அருணகிரிநாதருக்கு நடராசர் போல திருத்தாண்டவம் ஆடிக் காட்டினார்.
இந்தக் காட்சியை தற்போதும் நினைவு கூறும் வகையில், திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாக்களில், ஏழாம் நாளன்று 'சிவப்புச் சாத்தி' செய்யப்படும் நாளில், ஆறுமுகப்பெருமான் எழுந்தருளும் சப்பரத்தின் பின்பகுதியில் முருகப் பெருமான் நடராசர் போல ஆடல் காட்சி தருகிறார். சிவப்பு சாத்தி' என்பது திருச்செந்தூர் முருகப் பெருமானின் மாசித்திருவிழாவின் ஏழாம் நாளில் சுவாமி சண்முகப்பெருமான் அணிந்து கொள்ளும் அலங்காரத்தைக் குறிக்கிறது. ஏழாம் நாளன்று இங்கு சுவாமி சிவப்பு நிற பட்டுத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு, சிவப்பு மலர்களால் மலர்மாலைகள் சூடப்பட்டு, தங்கச் சப்பரத்தில் நடராசர் போல ஆடும் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார். இந்த நாளில் முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக காட்சி தருவதாக ஐதீகம். இவ்வாறு, முருகப்பெருமான் நடராசராக காட்சி தருவது, திருச்செந்தூர் முருகனின் திருவிழாக்களில், முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும்.
சதுரங்கப்பட்டினம் மலைமண்டல பெருமாள் கோவில்
தலையில் குடுமியுடன் இருக்கும் அபூர்வ ஆஞ்சநேயர்
கை சுண்டு விரலில் மோதிரத்துடனும், வாயில் இரண்டு கோரை பற்களுடனும் இருக்கும் வித்தியாசமான தோற்றம்
சென்னையிலிருந்து கல்பாக்கம் செல்லும் பாதையில் கல்பாக்கத்திற்கு அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது மலைமண்டல பெருமாள் கோவில். இத்தலம் சற்றே மலை போன்ற அமைப்பின் மேல் உள்ளதால் மலை மண்டல பெருமாள் என்று அழைக்கப்படுகின்றார். மலைமண்டல பெருமாளுக்கு கிரி வரதராஜப் பெருமாள் என்ற திருநாமும் உண்டு. தாயார் திருநாமம் பெருந்தேவி. இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
இக்கோவிலில் 400 ஆண்டுகளுக்கு முந்தைய விஜயநகர பேரரசு காலத்திய அனுமன் சிற்பம் ஒன்று உள்ளது. கலை நுணுக்கத்தோடு செய்யப்பட்ட இந்த சிற்பத்தில், பல அதிசய அம்சங்கள் உள்ளன. இந்த ஆஞ்சநேயரின் தலையில் குடுமி அமைந்துள்ளது. அந்தக் குடுமியானது அவரின் தலையின் பின்புறம் முடிந்த நிலையில் காணப்படுகிறது. அவரின் வாலானது, உடம்பின் பின்புறத்தில் தொடங்கி தலையின் உச்சியில் போய் சுருட்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இவரது வாயில் இரண்டு கோரை பற்கள் வெளியே துருத்திக்கொண்டு தெரிகின்றன. இவர் இரண்டு கைகளையும் புஷ்பாஞ்சலி அஸ்த நிலையில் (புஷ்பங்களை அர்ச்சனை செய்யும் பாவனையில்) வைத்துக் கொண்டிருக்கிறார். இவரது கை சுண்டு விரலில் மோதிரம் அமைந்திருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். திருப்பதி பெருமாளுக்கு இருப்பது போல் கால் முட்டிக்கு கீழ் ஆபரணமும், பின்புறம் திருவாசியும் (பிரபை) இருப்பது மேலும் ஒரு சிறப்பாகும்.
திருபுவனை தோத்தாத்திரி பெருமாள் கோவில்
வேறு எங்கும் காண முடியாத, கருவறையை ஒட்டி சிறிய பிரகாரம் அமைந்துள்ள கோவில்
தோஷங்கள் தீர்க்க, நெய் தீபம் ஏற்றி சிறிய பிரகாரத்தில் 48 சுற்றுக்கள் சுற்றி வழிபாடு
புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு- விழுப்புரம் நெடுஞ்சாலையில், புதுச்சேரியில் இருந்து மேற்கே 21 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்தில் இருந்து கிழக்கே 19 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது திருபுவனை தோத்தாத்திரி பெருமாள் கோவில். தாயார் திருநாமம் பெருந்தேவி தாயார். 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
பொதுவாக கோவில்களில், கருவறையில் மூலவர் எழுந்தருளி இருப்பதும், அவருக்கு எதிரில் பக்தர்கள் வணங்கும் விதமாகவும் கோவில் வடிவமைப்பு இருக்கும். ஆனால் திருபுவனையில் கருவறையை ஒட்டி சுற்றி வரும் விதமாக, சிறிய பிரகாரம் அமைந்துள்ளது, வேறு எங்கும் காண முடியாத இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
மூலவர் தோத்தாத்திரி பெருமாள், தமிழில் 'தெய்வநாயகப்பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். தோத்தாத்திரி பெருமாள் சுகாசன கோலத்தில் ஒரு காலை மடக்கி, மறுகாலைத் தொங்கவிட்டு, மந்தகாசப் புன்னகை பூத்து எழிலாகக் காட்சியளிக்கின்றார். இவருக்கு இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி அமர்ந்துள்ளனர். பெருமாளின் திருமுகம், அதில் உள்ள அவயங்கள் மிகவும் எடுப்பாக உள்ளன.
திருபுவனை தோத்தாத்திரி பெருமாள் கோவில், குருவும், சுக்ரனும் ஐக்கியமான தலமாகப் போற்றப்படுகிறது. இத்தலம், தோஷங்கள் தீர்க்கும் பரிகார தலமாக விளங்குகின்றது.எனவே நவக்கிரக தோஷம், கர்ப்ப தோஷம், களப்பிர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து நெய் தீபம் ஏற்றி, கருவறையில் அமைந்துள்ள சிறிய பிரகாரத்தில் 48 சுற்றுக்கள் சுற்றி வருவது, நன்மை பயப்பதாக அமைந்துள்ளது. கல்வி, பதவி என அனைத்து பிரார்த்தனைகளுக்கும் ஏற்ற தலமாக உள்ளது.
தொட்டியம் அனலாடீசுவரர் கோவில்
சந்திர ரூபமாக காட்சியளிக்கும் திரிபுரசுந்தரி அம்மன்
அம்மன் உச்சிக்காலப் பூஜையின் போது வழங்கப்படும் ஈஸ்வர தீர்த்தப் பிரசாதம்
திருச்சியிலிருந்து சேலம் செல்லும் வழியில், 53 கி.மீ. தொலைவில் உள்ள தொட்டியம் என்ற நகரில் அமைந்திருக்கின்றது அனலாடீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. இக்கோவிலில் அனலாடீஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி சன்னிதிகள் கிழக்கு திசை நோக்கி, அருகருகே அமைந்து சக்தியும் சிவமுமாக காட்சியளிப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
சிவபெருமான் திரிபுரசம்ஹாரத்திற்கு புறப்பட்டு வந்த போது, இத்தலத்தில் பிரம்மன் யாகம் ஒன்றை செய்து கொண்டிருந்தார். அந்த யாக குண்டத்தில் சிவ பெருமான் நர்த்தனம் செய்த காரணத்தால், இத்தலத்து இறைவன் வட மொழியில் 'அக்னி நர்த்தீஸ்வரர்' என்று அழைக்கப்பட்டார். அதுவே தற்போது அனலாடீசுவரர் என்ற திருநாமத்தோடு விளங்குகிறது.
சிவபெருமான் நர்த்தனம் புரிந்த யாககுண்டம், தற்போது 'ஈசுவரத் தீர்த்தம்' என்றழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தம் அம்மன் திரிபுரசுந்தரி சன்னிதிக்கு நேர் எதிரில் அமைந்துள்ளது. நாள்தோறும் அம்மனுக்கு நடைபெறும் உச்சிக்காலப் பூஜையின் போது, பக்தர்களுக்கு ஈசுவரத் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இங்குள்ள திரிபுரசுந்தரி அம்பாளை வணங்குவதால் உடலுக்கும், உள்ளத்திற்கும் வலிமை சேர்ப்பதுடன், குளிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றது.
திரிபுரசுந்தரி என்றால் தமிழில் அழகு உடையவர் என்று பொருள். அதாவது அழகுடையவராக எழுந்தருளி, தன்னை நாடி வரும் பக்தர்களின் தேவையை அறிந்து அதைத் தீர்த்து வைக்கும் இறைவியாக அம்மன் திகழ்கிறார். பொதுவாக சிவாலயங்களில் பரிவார தெய்வங்களாக சூரியனும் சந்திரனும் அருகருகே எழுந்தருளி இருப்பார்கள். இத்தலத்தில் சந்திர ரூபமாக அம்மன் காட்சியளிப்பதால், இக்கோவிலில் சந்திரன் கிடையாது. சூரியன் மட்டுமே எழுந்தருளியுள்ளார்.
பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோவில்
இரண்டு தட்சிணாமூர்த்திகள் எழுந்தருளி உள்ள தேவார தலம்
மயிலாடுதுறையில் இருந்து (மயிலாடுதுறை -மணல்மேடு சாலையில்) 8 கி.மீ. தொலைவில், காவிரி நதியின் வடகரையில் அமைந்துள்ள தேவார தலம் பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. முற்காலத்தில் இத்தலத்தின் பெயர் திருஅன்னியூர்.
ரதி வழிபட்டதால் ரதீசுவரர் என்றும், பாண்டவர்கள் வழிபட்டுள்ளதால் பாண்டதவேசுவரர் என்றும், அக்னிதேவன் வழிபட்டுள்ளதால் அக்னீஸ்வரர் என்றும் மற்ற பெயர்களும் இத்தல இறைவனுக்கு உண்டு.தீரா வெண்குஷ்டத்தால் அவதியுற்ற ஹரிச்சந்திர மகாராஜா இத்தலத்தில் நீராடி, இறைவனின் கட்டளைப்படி வைகாசி விசாக நன்னாளில் தயிர் சாதம் நிவேதனம் செய்து, ஆபத்சகாயரை வணங்கி, வழிபட்டு விமோசனம் பெற்றுள்ளார். வெண்குஷ்ட நோய் உள்ளவர்கள் இத்தலம் வந்து வழிபட நிவாரணம் கிடைக்கும்.
பொதுவாக சிவாலயங்களில் கருவறை சுற்றுச்சுவரில் ஒரு தட்சிணாமூர்த்தி எழுந்தருளி இருப்பார். ஆனால் இக்கோவிலில் அருகருகே இரண்டு தட்சிணாமூர்த்திகள் எழுந்தருளி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். இதில் மேதா தட்சிணாமூர்த்திக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இவரது காலுக்கு கீழே நந்தியும் இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டால் கல்வி, கேள்விகளில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை. புதிதாக பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பவர்கள், இவ்விரு தட்சிணாமூர்த்திக்கு விசேஷ பூஜைகள் செய்து வழிபட்டால் குழந்தைகளின் கல்வி சிறக்கும் என்பது ஐதீகம்.
திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோவில்
தர்ப்பணம் செய்யும் பலனை இரட்டிப்பாக்கி தரும் திவ்ய தேசம்
சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரத்திற்கு மேற்கே 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருப்புட்குழி. பெருமாள் திருநாமம் விஜயராகவ பெருமாள். தாயார் திருநாமம் மரகதவல்லித் தாயார். திரு என்றால் மரியாதை. புள் என்றால் ஜடாயு. குழி என்றால் ஈமக்கிரியை செய்தல். ராமர் ஜடாயுவிற்கு இத்தலத்தில் ஈமக்கிரியை செய்ததால் இத்தலம் திருப்புட்குழி ஆனது. மூலவர் விஜயராகவப் பெருமாள் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு அருள்பாலிக்கிறார்.
ராவணன் சீதையை சிறை எடுத்து செல்லும் வழியில் பறவைகளின் அரசனாகிய ஜடாயு சீதையை மீட்க ராவணனுடன் போரிட்டது. அவனால் வெட்டப்பட்டு மரணத்தருவாயில் இருந்தது. சீதையை தேடி அவ்வழியே வந்த ராமலட்சுமணரிடம் சீதையை ராவணன் கடத்தி சென்ற விஷயத்தை தெரிவித்தது. மரணத்தை எதிர் நோக்கி இருக்கும் தனக்கு ராமனே ஈமக்கிரியைகள் செய்ய வேண்டும் எனவும், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி தந்து அருள வேண்டும் எனவும் வேண்டியபடி உயிர்விட்டது. அதன்படி ஜடாயுவை தன் வலதுபக்கம் வைத்து தீ மூட்டி ஈமக்கிரியைகளை செய்தார். இதனால் ஏற்பட்ட வெப்பம் தாளாமல் வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி தாயார் இடப்புறமும், இடப்புறம் இருந்த பூதேவித்தாயார் வலப்புறமும் மாறி அருள்பாலிப்பதாக புராணங்கள் கூறுகிறது. எனவே தான் இங்கு மட்டும் தாயார் சன்னதி பெருமாளுக்கு இடது புறமும், ஆண்டாள் சன்னதி பெருமாளுக்கு வலதுபுறமும் அமைந்துள்ளது குறிப்படத்தக்கது. ஜடாயுவின் வேண்டுகோளின் படி ராமர், தன் அம்பினால் உண்டாக்கப்பட்ட தீர்த்தத்தில் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்தார். எனவே இங்கு தீர்த்தம் ஜடாயு புஷ்கரிணி என அழைக்கப்படுகிறது. ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால் அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் கொடிமரமும், பலி பீடமும் கோவிலுக்கு வெளியில் உள்ளது.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் சிறந்த தலங்களில் இதுவும் ஒன்று. ராமபிரானே இங்கு ஈமக்கிரியைகள் செய்துள்ளதால், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்பவர்கள் அமாவாசையன்று இத்தலத்தில் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சிதம்பரம் நடராஜர் கோவில்
நடராஜப் பெருமானின் குஞ்சிதபாதம்
தீராத வியாதிகளைத் தீர்க்கும் குஞ்சிதபாத தரிசனம்
சிதம்பரத்தில் நடராஜப் பெருமான், தனது இடது பாதத்தை வளைந்து தூக்கித் திருநடனம் ஆடும் கோலத்தில் நமக்கு காட்சி தருகிறார். நடராஜப் பெருமானின் தூக்கிய திருவடிக்கு குஞ்சிதபாதம் என்று பெயர்.
சிவபெருமான் தனது இடது பாகத்தை, தன் மனைவி பார்வதி தேவிக்கு கொடுத்து விட்டார். சிவபெருமானே, நடராஜர் என்னும் பெயரில் நடனம் ஆடுகிறார். அவர் நடனம் ஆடும் போது, மனைவிக்குரிய இடது பாதம், தரையில் பட்டால் அவளுக்கு வலிக்குமே என, இடது காலை உயர்த்திக் கொண்டார்.
எமதர்மராஜன், மார்க்கண்டேயனைத் துரத்திப் பாசக்கயிற்றை வீசிய போது மார்க்கண்டேயன், சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். அப்போது எமனின் பாசக்கயிறு சிவலிங்கத்தின் மேல் பட்டது. இதனால் சிவபெருமான் கோபம் அடைந்து, எமனை இடது காலால் எட்டி உதைத்தார். தாயும்-தந்தையுமான சிவ-சக்தியை மார்க்கண்டேயன் சரண் அடைந்ததால் சிவபெருமான், சக்தி தேவியின் அம்சமான தனது இடது பாகத்தில் உள்ள பாதத்தால் எமனை எட்டி உதைத்தார். அந்த இடது கால் சக்தி தேவியின் அம்சம் என்கிறது புராணம்.
அதனால் நடராஜப் பெருமானைத் தரிசிக்கும் போது கண்டிப்பாக அவரது இடது காலைத் தரிசிக்க வேண்டும். நடராஜப் பெருமானின் குஞ்சிதபாதத்தை தரிசனம் செய்தால், தீராத வியாதியும் நீங்கும். செய்வினை பாதிப்பு, சனீஸ்வரால் ஏற்படும் தொல்லை மற்றும் பொதுவாக ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் நீங்கும். மோட்சம் கிடைக்கும். உடல் வலிமை பெறும் என்கிறது சாஸ்திரம்.
குஞ்சிதபாதம் என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. மூலிகை வேர்களால் செய்யப்பட்ட ஒரு மாலை நடராஜரின் தூக்கிய பாதத்திற்கு அணிவிக்கப்படும்போது, அந்த மாலைக்கு 'குஞ்சிதபாதம்' என்று பெயர். மேலும், இந்த மாலையை நடராஜரின் பாதங்களில் அணிவிப்பது ஒரு சிறப்பு பூஜையாக கருதப்படுகிறது.