அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்

நெற்றிக்கண்ணுடன் மகாலட்சுமி இருக்கும் அபூர்வ தோற்றம்

சிவபெருமானுக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படும் தலம்

கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.

அச்சுதன் என்னும் திருமால், பிரிந்து சென்ற தன் மனைவி மங்கலம் என்னும் மகாலட்சுமியை, இத்தலத்து இறைவனைப் பூஜித்து திரும்பப் பெற்றதால் இத்தலத்திற்கு அச்சுதமங்கலம் என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோவிலில் தனிச்சன்னதியில் மகாவிஷ்ணுடன் எழுந்தருளி இருக்கும் மகாலட்சுமிக்கு நெற்றிக்கண் இருப்பது ஒரு சிறப்பம்சமாகும். அதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.

ஒரு சமயம் கஜேந்திரன் என்னும் யானையானது, முதலையிடம் சிக்கிக் கொண்டபோது, ஆதிமூலமே காப்பாற்று என்று மகாவிஷ்ணுவிடம் அபயக்குரல் எழுப்பியது. அப்போது மகாவிஷ்ணு விரைந்து வந்து முதலையிடம் இருந்து யானையை மீட்டு, அதற்கு மோட்சம் அளித்தார். அப்படி யானையை காப்பாற்ற மகாவிஷ்ணு விரைந்து வந்தபோது, மகாலட்சுமியை தனியே விட்டு வந்ததால், மகாலட்சுமி கோபமுற்று அவரை விட்டு பிரிந்து சென்றாள். பிரிந்து சென்ற மகாலட்சுமியை மீண்டும் அடைய, மகாவிஷ்ணு இத்தலத்து இறைவன் சோமநாதரை பூஜை செய்ய ஆரம்பித்தார். 48 ஆண்டுகள் கடந்தும், இறைவன் அவருடைய கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இதுவரை எந்த ஒரு பொருளால் இறைவனை யாரும் பூஜை செய்யவில்லையோ, அதைக் கொண்டு பூஜை செய்தால் இறைவன் தம்முடைய கோரிக்கை நிறைவேற்றுவார் என்ற அடிப்படையில், மகாவிஷ்ணு தமக்கு பிரியமான துளசியைக் கொண்டு இறைவனை பூஜை செய்ய ஆரம்பித்தார். இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான், மகாலட்சுமியை மகாவிஷ்ணுடன் சேர்ந்து இருக்குமாறு பணித்தார். அதற்கு மகாலட்சுமி சிவபெருமானிடம் இருக்கும் நெற்றிக்கண் போல் தனக்கும் ஒன்று வேண்டும் என்று அவரிடம் வரம் கேட்டு நெற்றிக்கண்ணை பெற்றுக்கொண்டார். அதனால் தான் இத்தலத்தில் மகாலட்சுமிக்கு நெற்றிக்கண் அமைந்துள்ளது. மகாலட்சுமியின் இந்த நெற்றிக்கண்ணை, அபிஷேகத்தின் போது நாம் தரிசிக்க முடியும்.

இத்தலத்தில் மகாவிஷ்ணு துளசி கொண்டு சிவபெருமானை பூஜித்ததால், இன்றும் இக்கோவிலில் சிவபெருமானுக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1. வலது கையில் எழுத்தாணியும், இடது கையில் ஏடும் வைத்திருக்கும் சண்டிகேசுவரரின் அபூர்வ தோற்றம் (26.06.2025)

https://www.alayathuligal.com/blog/achuthamangalam26062025

2. கலை நயத்துடன் அமைக்கப்பட்ட அபிஷேக நீர் வெளியேறும் நீர் தாரை (பிரணாளம்) (01.06.2025)

https://www.alayathuligal.com/blog/achuthamangalam01062025

3. கால சர்ப்பங்கள் சாளரத்தில் எழுந்தருளி இருக்கும் அபூர்வ காட்சி (04.05.205)

சகல நாக தோஷங்களுக்கான நிவர்த்தி தலம்

https://www.alayathuligal.com/blog/achuthamangalam04052025

4. திருமணத்தின் போது சிவபெருமான், பார்வதி தேவியின் கரத்தை பற்றிக்கொண்டு அக்னிகுண்டத்தை வலம் வரும் அரிய காட்சி (07.03.2025)

https://www.alayathuligal.com/blog/achuthamangalam07032025?rq=

5. கர்ப்பிணி கோலத்தில் உள்ள அபூர்வ அம்பிகை (28.02.2025)

சிவபெருமான் போல் நெற்றிக்கண் உடைய அம்பிகை

தினமும் முப்பெரும் தேவியராக அருள் பாலிக்கும் அம்பிகை

உலக ஜீவராசிகளின் கை ரேகைகளை தன் கரத்தில் கொண்ட அம்பிகை

https://www.alayathuligal.com/blog/achuthamangalam28022025

தகவல் உதவி : திரு. கணேசன் குருக்கள், ஆலய தலைமை அர்ச்சகர்

நெற்றிக்கண்ணுடன் மகாலட்சுமி

 
Next
Next

பிள்ளைப்பாக்கம் வைத்தீஸ்வரன் கோவில்