நெல்லிக்குப்பம் பூலோக நாதர் கோவில்
மண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் தலம்
சிவன் கோவிலில் பிரசன்ன வெங்கடாசலபதியும், தாயாரும் எழுந்தருளி இருக்கும் தனிச்சிறப்பு
கடலூரில் இருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நெல்லிக்குப்பம் பூலோக நாதர் கோவில். இறைவியின் திருநாமம் புவனாம்பிகை. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.
மண்ணுக்கு அதிபதி பூலோகநாதர் என்பதால் மண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் எதுவானாலும் இந்த கோவில் மண்ணை எடுத்துச் சென்று வழிபட்டால் எளிதில் பிரச்னைகள் நீங்கும் என நம்பப்படுகிறது. மேலும் தடைபட்ட கட்டுமான பணிகள் எதுவாகினும் இங்கு வந்த பூஜை நடத்தினால் அந்த கட்டிடம் நிவர்த்தி அடையும். வீடு கட்ட விரும்புவோர் இந்த ஆலயத்தில் கற்களை அடுக்கி வேண்டிக் கொண்டால் உடனே வீடு கட்டும் பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பூமி தோஷம், பில்லி, சூனியம், ஏவல், எந்திரம், தந்திரம், மந்திரம், தென் மூலை உயரம், வடமூலை உயரம், சொத்து பாகப் பிரச்சினை, ஜென்ம சாப பாவ தோஷம், வாஸ்து தோஷம், கண் திருஷ்டி தோஷம் உள்ளிட்ட 16 விதமான தோஷங்களையும் இக்கோவிலில் உள்ள பூலோகநாதர் நீக்குவதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இறைவி புவனாம்பிகை நாயகி முன் அமர்ந்து எந்த வரம் வேண்டினாலும் அது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அஷ்டோத்திர நாமவளி உச்சரித்து குங்குமம் அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் கூடும். திருமணத்தடை, குழந்தைபேறு உண்டாகுதல், குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான சங்கடங்கள் தீர்ந்து நல்வழி பெருகும் என்பது நம்பிக்கை.
சைவ வைணவ ஒற்றுமையை விளக்கும் வகையில், இக்கோவிலில் தனிச்சன்னதியில் பிரசன்ன வெங்கடாசலபதியும், ஸ்ரீ அலமேலு மங்கை தாயாரும் எழுந்தருளி இருக்கிறார்கள். இங்கு ஒரே இடத்தில் நின்று சிவனையும் பெருமாளையும் தரிசிப்பது தனிச்சிறப்பாகும். அலமேலு தாயாருக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்.
அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்
கலை நயத்துடன் அமைக்கப்பட்ட அபிஷேக நீர் வெளியேறும் நீர் தாரை (பிரணாளம்)
கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.
நம் முன்னோர்கள் கட்டிய ஆலயங்கள் இறை வழிபாட்டு தலங்களாக மட்டுமன்றி சிற்பக் கலைக் கூடங்களாகவும் விளங்குகின்றன. நம் கோவில்களின் கட்டிடக்கலை, அதன் தனித்துவமான பாணி, வடிவமைப்பு ஆகியவை நம் முன்னோர்களின் திறமையை வெளிக்காட்டுகின்றன. மூலவரின் கருவறை, மண்டபங்கள், தூண்கள், விதானங்கள், கோபுரங்கள், சிற்பங்கள் என்று ஒவ்வொரு பகுதியும் மிகுந்த கலைநயத்துடனும், கற்பனை திறனுடனும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில், சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. கோவிலின் ஒவ்வொரு பகுதியிலும் சோழர் காலத்து கலைத்திறன் மிளிருகின்றது. இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேக நீர் வெளியேறும் நீர் தாரையை கூட மிகுந்த கலை நயத்துடன் அமைத்திருக்கிறார்கள். இந்த நீர் தாரைக்கு பிரணாளம் என்று பெயர். இக்கோவிலில் உள்ள பிரணாளத்தின் அபிஷேக நீர் வெளியேறும் பகுதியில் காணப்பெறும் சிற்ப அமைப்பு கலை நயத்துடன் துலங்குகின்றது. பிரணாளத்தின் பக்கவாட்டில் சங்கு ஊதும் பூதகணம் திகழ, ஒரு பூதத்தின் பிளந்த வாயிலிருந்து நீர் வெளியே அபிஷேக நீர் கொட்டும் வகையில் அச்சிற்பம் காணப்பெறுகின்றது.
மானந்தகுடி ஏகாம்பரேசுவரர் கோவில்
நவக்கிரகங்கள் மனைவியருடன் எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி
நவக்கிரகங்கள் ஒவ்வொருவருக்கும் திருவாசி இருக்கும் அபூர்வ அமைப்பு
திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து, 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மானந்தகுடி. இறைவன் திருநாமம் ஏகாம்பரேசுவரர். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். ஆஞ்சநேயர் இத்தலத்தில் வழிபட்டு சாப விமோசனம் பெற்றதால், இத்தலம் 'அனுமன் ஆனந்த குடி' என்றழைக்கப்பட்டு, பிற்காலத்தில் 'மானந்தகுடி' என்று மருவியது.
இக்கோவிலில், ஆஞ்சநேயர் சன்னதிக்கு நேர் எதிரே நவக்கிரக சன்னதி உள்ளது. நவக்கிரகங்கள் மனைவியருடன் இங்கே எழுந்தருளி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். மேலும் இந்த நவக்கிரகங்கள் ஒவ்வொருவருக்கும், தனித்தனியாக திருவாசி அமைந்திருப்பது மேலும் ஒரு சிறப்பாகும்.
ஆஞ்சநேயர், நவக்கிரகங்களை தனது வாலில் கட்டியிருப்பதாக ஐதீகம். ஆஞ்சநேயரது நேரடிப்பார்வையில் நவக்கிரகங்கள் குடும்பநிலையில் இருப்பதால், இங்கு கிரக தோஷங்கள் நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது. ஜாதக, கிரக தோஷம் உள்ளவர்கள் நவக்கிரக சன்னதியில் மட்டை தேங்காய் கட்டி வேண்டிக் கொள்கின்றனர்.
சதுரங்கப்பட்டினம் மலைமண்டல பெருமாள் கோவில்
மூன்று சிங்கங்கள் உள்ள பீடத்தில் தாயார் அமர்ந்திருக்கும் அபூர்வ காட்சி
சென்னையிலிருந்து கல்பாக்கம் செல்லும் பாதையில் கல்பாக்கத்திற்கு அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது மலைமண்டல பெருமாள் கோவில். இத்தலம் சற்றே மலை போன்ற அமைப்பின் மேல் உள்ளதால் மலை மண்டல பெருமாள் என்று அழைக்கப்படுகின்றார். மலைமண்டல பெருமாளுக்கு கிரி வரதராஜப் பெருமாள் என்ற திருநாமும் உண்டு. தாயார் திருநாமம் பெருந்தேவி. இங்குள்ள பெருமாள் ஒரு பாதம் முன்னோக்கியும், ஒரு பாதம் பின்னோக்கியும் இருக்கும் நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.
இத்தலத்தில் மட்டும் பெருந்தேவி தாயார் மூன்று சிங்கங்கள் உள்ள பீடத்தில் அமர்ந்து சிம்மவாகினியாக அருள்பாலிக்கின்றார். பொதுவாக அம்பிகை அல்லது துர்க்கை தான் சிம்மவாகினியாக எழுந்தருள்வார்கள். ஆனால் இந்த கோவிலில் தாயார் சிம்ம பீடத்தில் எழுந்தருளி இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
மஞ்சக்குடி சீனிவாச பெருமாள் கோவில்
ஆஞ்சநேயர் கண்டேன் சீதையை என இரு விரல் நீட்டிய நிலையில் இருக்கும் அபூர்வ தோற்றம்
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவில், திருவாரூரில் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ள மஞ்சக்குடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது சீனிவாச பெருமாள் கோவில். தாயார் ஸ்ரீதேவி, பூதேவி.
ராமபிரான் வனவாசம் மேற்கொண்டபோது, அவர் பத்தினியான சீதையும் உடன் செல்கிறாள். அப்போது காட்டில் தனிமையில் இருந்த போது, ராவணனின் மாமன் மாரீசன், மான் உருவில் வந்து மாயம் செய்கிறான். மானை பிடித்து தருமாறு சீதை கேட்டபோது, ராமன் துரத்தி சென்ற நிலையில், சீதை கடத்தப்பட்டாள். ராமபிரான் தன் மனைவியை காணாமல் துயரப்படும்போது ராமனின் மோதிரத்துடன் ஆஞ்சநேயர் இலங்கைக்கு சென்று சீதை இருக்கும் இடத்தை தெரிந்து வந்த ஆஞ்சநேயர் கண்டேன் சீதையை என இரு விரல் நீட்டி காட்டிய இடம் என்பதால் அப்பகுதியினர் ஆஞ்சநேயருக்கு கோவில் அமைத்து வழிபட்டனர்.
இந்தியாவில் எந்தக் கோவிலிலும் இல்லாத வகையில் உற்சவரான ஆஞ்சநேயர் வலது கையை நீட்டி இரு விரல்களால் ‘கண்டேன் சீதையை’ என கூறிய நிலையில் அருள்பாலிப்பது இக்கோவிலின் தனி சிறப்பாகும்.
ஆஞ்சநேயரை வேண்டி ஒருபடி தயிர், நான்கு முழ புது வேஷ்டி ஆஞ்சநேயர் மேனியில் சார்த்தி வழிபாடு செய்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இக்கோவிலுக்கு அருகாமையில் வடக்கே சிறப்பு மிக்க திருத்தலையாலங்காடு பாலாம்பிகா சமேத ம்ருத்யுஞ்ஜயேஸ்வரர் கோவிலும், ஆலங்குடி குருபகவான், வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலும் உள்ளன.
திருவந்திபுரம் தேவநாத பெருமாள் கோவில்
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூா்த்திகளை உள்ளடக்கிய பெருமான்
மும்மூர்த்திகளின் அடையாளமான தாமரை மலர், சங்கு சக்கரம்,நெற்றிக்கண் கொண்ட உற்சவ பெருமாள்
கடலூா் நகரத்திலிருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் 3 கி.மீ. தூரத்தில் உள்ள திவ்ய தேசம் திருவந்திபுரம். பெருமாள் திருநாமம் தேவ நாதன்,தெய்வநாயகன்.தாயார் திருநாமம் வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார்(பார்க்கவி). உற்சவர் திருநாமம் அச்சுதன், மூவராகிய ஒருவன்.
திருவந்திபுரத்தில் அருளும் தேவநாதப் பெருமாள் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூா்த்திகளையும் உள்ளடக்கிய பெருமானாகத் திருக்காட்சியளிக்கின்றாா். முன் ஒரு காலத்தில் அசுரா்களிடமிருந்து தேவா்களைக் காக்க பெருமான் எடுத்த திருக்கோலமே மூம்மூா்த்தி வடிவம். இதனால் இப்பெருமான் 'த்ரிமூா்த்தி” என்றும் “மூவராகிய ஒருவன்” என்றும் வணங்கப்படுகின்றாா்.
தேவா்களுக்குத் தலைவனாக (நாதனாக) இருந்து எம்பெருமான் போா் புரிந்ததால் இவருக்கு தெய்வநாயகன் மற்றும் தேவநாதன் என்ற திருநாமங்கள் வழங்கலாயிற்று. தேவா்களுக்கு மும்மூா்த்திகள் வடிவில் காட்சி தந்ததால் இத்தலத்தின் உற்சவ மூா்த்திக்கு மூவராகிய ஒருவன் என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. பிரம்மனுக்கு அடையாளமான தாமரை மலரைத் தனது திருக்கரத்திலும் மஹா விஷ்ணுவிற்கு அடையாளமான சங்கு, சக்கரங்களைத் தாங்கியும் சிவபெருமானுக்கு அடையாளமான நெற்றிக்கண்ணும் சடா முடியும் தரித்து தேவநாதப் பெருமான் திருக்காட்சி கொடுப்பதால் 'த்ரிமூா்த்தி' என்றும் 'மூவராகிய ஒருவன்' என்றும் வணங்கப்படுகின்றாா்.கருவறை விமானத் தின் கீழ், கிழக்கு திசையில் பெருமாளும், தெற்கில் ஈசனின் வடிவமான ஶ்ரீதெட்சிணாமூா்த்தியும் மேற்கு திசையில் ஶ்ரீநரசிம்மரும் வடக்கில் ஶ்ரீபிரம்மனும் அமைந்துள்ளது இத்தல பெருமான் 'மூவராகிய ஒருவன்' எனும் கூற்றினை மெய்ப்பிக்கும் வண்ணம் உள்ளது. இத்தலத்து எம்பெருமானை வழிபாடு செய்ய, மும்மூா்த்திகளையும் ஒருங்கே வழிபட்ட பேறு அன்பா்களுக்குக் கிட்டும்.
திருமலைக்கு நோ்ந்து கொண்டு செல்லமுடியாதவா்கள் தேவநாதப் பெருமானுக்கு அந்தக் காணிக்கையைச் செலுத்துகின்றனா்.
தேவர் கண்ட நல்லூர் குமாரசாமி கோவில்
திருமணத்தடை, புத்திரபாக்கியம், பதவி உயர்வு உள்ளிட்டவைக்கான பரிகார தலம்
திருவாரூரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ளது தேவர் கண்ட நல்லூர் குமாரசாமி கோவில். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில். இத்தலத்தில் தேவர்கள் இருப்பதை முனிவர்கள் கண்டு வணங்கியதால் தேவர்களை கண்ட ஊர் என்பதே பின்னாளில் தேவர் கண்ட நல்லூர் என மருவியது.
இக்கோவில் உருவானதற்கு பின்னணியில் ஒரு புராண வரலாறு உண்டு. முன்னர் காலத்தில் இப்பகுதியை ஆண்ட வல்லால மகாராஜன் என்ற அரசனது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அப்போது அவள் வயிற்றில் வளர்ந்த குழந்தை மண்ணில் பிறந்து விழுந்தால் நாட்டிற்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்பதால் குழந்தை கீழே விழாமல் குறிப்பாக உயிருடன் பிறக்காமல் இருக்க வேண்டும் என தேவர்கள் முனிவர்கள் பார்வதி தேவியிடம் வரம் கேட்டனர். அப்போது அந்த குழந்தை உயிருடன் பிறக்காமல் அழிக்க மருத்துவச்சி வேடம் பூண்டு பார்வதி தேவி நடந்து வருகிறார். அப்போது வல்லால மகாராஜன் அவரை அழைத்து வந்து தன்மனைவிக்கு மருத்துவம் பார்க்க கேட்கிறான். இதை சாதகமாக பயன்படுத்தி குழந்தையை அழித்து, ஒரு சொட்டு ரத்தம் கூட கீழே விழாமல் பார்வதி தேவி காத்தார். தன் பிள்ளையை மருத்துவச்சி கொன்று விட்டார் என்ற தகவலறிந்த வல்லால மகாராஜன் வாளால் வெட்ட முயன்ற நேரத்தில் ஆக்ரோஷமாக மாறிய பார்வதி தேவி அந்த மகாராஜா தலையை வெட்டி விடுகிறார். பார்வதி தேவியாரின் ஆக்ரோஷத்தை போக்க பெருமாள் பெத்தரான்ய ஈசனாகவும், ஈசன் உத்தராண்ட ராயராகவும், பல்வேறு தேவதைகள் உருமாற்றம் கொண்டு தேவியரின் ஆக்ரோஷத்தை தீர்த்தார்கள். இருப்பினும் தேவியார் ஆக்ரோஷம் அடங்காத நிலையில் முருகன் நேரில் சென்று தாயாரிடம் ஆக்ரோஷம் தீர்த்ததால் பின்நாளில் இத்தலத்தில் குமரன் கோவில் அமைத்துள்ளனர்.
திருமணத்தடை, புத்திரபாக்கியம், பதவி உயர்வு உள்ளிட்டவைக்கு சிறந்த பரிகார தலமாக, இப்பகுதியில் இந்த கோவில் விளங்குகின்றது.
திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோவில்
மோட்ச தீபம் ஏற்றி பித்ருக்களுக்கு முக்தி அளிக்கும் தேவார தலம்
மதுரை - மானாமதுரை சாலையில் 20 கி.மீ. தொலைவில், வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள தேவார தலம் திருப்புவனம். இறைவன் திருநாமம் புஷ்பவனேசுவரர். இறைவியின் திருநாமம் சௌந்தர நாயகி. மோட்ச தீபம் ஏற்றி பித்ருக்களுக்கு முக்தி அளிக்கும் தலமாகப் போற்றப்படும் இத்தலம், பாண்டிய நாட்டு பாடல் பெற்ற 14 தலங்களில், தேவார மூவராலும் பாடல் பெற்ற ஒரே பாண்டிய நாட்டு தலம் என்ற சிறப்பை கொண்டுள்ளது.
தமிழகத்தில் காசியை விட வீசம் (பதினாறு பங்கு) அதிகம் புண்ணியம் கிடைக்கும் ஒரே தலம் திருப்புவனம் ஆகும். மேலும் இராமேசுவரத்தைக் காட்டிலும் ஆறு பங்கு அதிகம்புண்ணியம் அருளும் தலம். காசிக்கு செல்ல இயலாதவர்கள் திருப்புவனத்திற்கு வருகை புரிந்து புஷ்பவனேசுவரர் சன்னதி முன் உள்ள வைகை ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு அஸ்தி கரைப்பது, திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களது ஆத்மா சாந்தியடையும்.
கருவறையில் மூலவர் புஷ்பவனேசுவரர் லிங்கத் திருமேனிக்குப் பின்புறம் நட்சத்திர தீபமும், 27 விளக்குகள் கொண்ட திருவாச்சி தீபமும் இடம் பெற்றுள்ளன. இவை இறந்தவர் முக்தி பெற ஏற்றப்படும் மோட்ச தீபங்கள் எனப்படும். நமது முன்னோர்களுக்கு (பித்ருக்கள்) அமாவாசை நாட்களிலும், மஹாளய பட்சம் எனப்படும் 15 நாட்களிலும் திதி, தர்ப்பணம் ஆகியனவற்றை செய்து நீர்க்கடன் செய்வது மிகவும் முக்கியம். பித்ருக்கள் திருப்தி அடைந்தால்தான் நமது வாழ்வு வளமாக இருக்கும். முன்னோர் வழிபாடு, தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கவல்லது. நமது பித்ருக்களின் வினைகளை நீக்கி அவர்களுக்கு முக்தி கிடைக்க, திருப்பூவணம் தலத்தில் மோட்ச தீபம் ஏற்றி வழிபடுவது மிகவம் சிறந்தது. இதனால், நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோவில்
வைகுண்ட பதவி அருளும் திவ்ய தேசம்
அமாவாசை மட்டுமின்றி எல்லா நாட்களும் முன்னோர்களுக்கு திதி கொடுக்க கூடிய தலம்
திருநெல்வேலி - திருச்செந்தூர் வழிப்பாதையில் 30 கி.மீ. தூரத்தில், தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரி. இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. முதன் முதலில் பெருமாள் தோன்றி நின்ற தலம் என்பதால், பெருமாள் ஆதிநாதன் என திருப்பெயர் பெற்றார். ஆதிநாதவல்லி மற்றும் குருகூர்வல்லி என இரண்டு தாயார்கள் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலித்து வருகிறார்கள். இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். இதனால் இத்தலம் ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்பட்டது. நவதிருப்பதிகளுள் குருவுக்குரிய (வியாழன்) தலமாகும்.
'குருகு' என்பதற்கு தமிழில் சங்கு என்று பொருள். இத்தல பெருமாளை சங்கன் எனும் கடலில் வாழும் சங்குகளின் அரசன் வந்து வழிபட்டு பேறு பெற்றதால் இத்தலம் குருகூர் என்று ஆனது. பின்னர் நம்மாழ்வாரால் ஆழ்வார் திருநகரி என்றானது.
முன்னொரு காலத்தில், இத்தலத்தில் ஒரு யானையும், வேடனும் போரிட்டு மடிந்தனர். இங்கு இறந்த ஒரே காரணத்திற்காக இருவரும் வைகுண்டம் சென்றனர். எனவே இத்தலத்தில் வழிபட்டால் பாவங்கள் பறந்தோடி, வைகுண்டம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் இந்த தலத்தில் அமாவாசை மட்டுமின்றி எந்த நாளிலும் இறந்து போன நம் முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாம். அவ்வாறு செய்தால் நம் முன்னோர்களின் ஆன்மா நரகம் சென்றிருந்தாலும், நாம் இத்தலத்தில் திதி கொடுத்த உடனேயே விஷ்ணு தூதர்கள் வந்து அவர்களை நரகத்தில் இருந்து வைகுண்டம் அழைத்துச் செல்வார்கள் என்பதும் நம்பிக்கையாகும். மகாளய அமாவாசை அன்று ஆழ்வார் திருநகரி வந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்கள் வைகுண்ட பதவி அடைவார்கள் என்பது நிச்சயம். திதி கொடுத்த பின்னர் கோபுரத்திலோ, கோபுரத்தின் அருகிலோ மோட்ச தீபம் ஏற்றலாம்.
திருவெண்பாக்கம் (பூண்டி) ஊன்றீசுவரர் கோவில்
நந்தியின் வலது கொம்பு உடைந்த நிலையில் காணப்படும் தேவார தலம்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ள தேவார தலம் ஊன்றீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மின்னொளியம்மை.
இக்கோவிலில் இறைவன் முன் அமர்ந்திருக்கும் நந்தியின் வலது கொம்பு உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதன் பின்னணியில் சுந்தரருடன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்று உள்ளது.
திருவாரூரில் பரவையாரை மணந்து கொண்ட சுந்தரர், திருவொற்றியூரில் சங்கிலியார் எனும் பெண்ணை சிவபெருமானை சாட்சியாக வைத்து, அவளைவிட்டு பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து மணந்து கொண்டார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவொற்றியூரை விட்டு திருவாரூருக்கு கிளம்பினார். சுந்தரர் திருவொற்றியூர் தலத்தின் எல்லையை விட்டு வெளியேறியபோது, சிவபெருமான் அவரது இரண்டு கண்களையும் பறித்துக் கொண்டார். சத்தியத்தை மீறியதால் தன் கண்கள் பறிபோனதை உணர்ந்த சுந்தரர் சிவபெருமானிடம் தனக்கு கண்களை தரும்படி வேண்டினார். அவரோ கண்கள் தரவில்லை. இரண்டு கண்களும் தெரியாமல் தட்டுத்தடுமாறியபடியே திருவாரூர் செல்லும் வழியில் இத்தலம் வந்தார் சுந்தரர். இங்கு சிவபெருமானிடம் தனக்கு கண்கள் தரும்படி கேட்டார். சிவபெருமானோ அமைதியாகவே இருந்தார்.
சுந்தரர் விடவில்லை. 'பரம்பொருளாகிய நீங்கள் இங்குதான் இருக்கிறீர்களா? இருந்தால் எனக்கு கண் தருவீர்களே!' என்று சொல்லி வேண்டினார். சுந்தரரின் நிலையைக் கண்டு இரங்கிய சிவபெருமான், அவருக்கு ஒரு ஊன்று கோலை மட்டும் கொடுத்து 'நான் இங்குதான் இருக்கிறேன். நீங்கள் செல்லுங்கள்' என்றார். கோபம் அதிகரித்த சுந்தரர், சிவபெருமான் கொடுத்த ஊன்றுகோலை ஓங்கி வீசினார். அப்போது ஊன்றுகோல் அங்கிருந்த நந்தியின் மீது பட்டு விட்டது. இதனால் நந்தியின் வலது கொம்பு ஒடிந்து விட்டது. பின் சுந்தரர் தன் யாத்திரையை தொடர்ந்து, இங்கிருந்து காஞ்சிபுரம் சென்றார்.
சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்தவர் என்பதால் இத்தல இறைவனுக்கு ஊன்றீஸ்வரர் என்று பெயர்.கருவறைக்கு முன்புறம் உள்ள நந்தியின் வலது கொம்பு ஒடிந்த நிலையில் இருப்பதை இன்றும் நாம் காணலாம். அருகில் சுந்தரர் இடது கையில் ஊன்றுகோல் வைத்தபடி காட்சி தருகிறார். கண்பார்வையை இழந்த சுந்தரர், இத்தலத்தை நோக்கி வரும்போது, அம்பாள் மின்னலைப் போன்ற ஒளி அளித்து வழிகாட்டி மறைந்தாளாம். அதனால்தான் இத்தல அம்பிகைக்கு மின்னொளியம்மை என்று பெயர்.
முட்டம் நாகேசுவரர் கோவில்
உயர்ந்த பேரழகுடன் கூடிய, நுணுக்கமான வேலைப்பாடு உள்ள அம்பிகையின் ஆபூர்வ சிற்பம்
சிற்பத்தில் தெரியும் திருமாங்கல்ய முடிச்சு மற்றும் இடையில் அணிந்திருக்கும் ஆடையின் முடிச்சு
16 சிறு துவாரங்கள் உள்ள மேகலை என்ற நுணுக்கமான ஆபரணம்
கோயம்புத்தூர் மாநகரில் இருந்து 27 கி.மீ. தொலைவில், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது முட்டம் நாகேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் முத்துவாளி அம்மன். முத்துக்களால் அமைந்த காதணி அணிந்ததால் இப்பெயர் பெற்றார். 1500 ஆண்டுகள் பழமையானது இக்கோவில்
அம்பிகை முத்து வாளியம்மன் சிற்ப அழகு பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும். அம்மனின் சிற்பத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். உயர்ந்த பேரழகுடன் கூடிய இந்த அம்மனின் சிற்பத்தை போன்றதொரு சிற்பம் உலகில் வேறு எங்கும் நாம் காண முடியாது. மதுரை மீனாட்சியம்மன் சிலையையும், இச்சிலையையும் ஒரே சிற்பி வடித்ததாக கூறப்படுகிறது.
நின்ற கோலத்தில் இருக்கும் இந்த அம்பிகை, தனது வலது கையில் நீலோத்பல மலரை ஏந்தி உள்ளார். முன்கையில் பரியகம் எனும் ஆபரணம் உள்ளது. இருதோள்களிலும்அடுக்கடுக்காக அரும்புகள் பொருந்திய கடகங்கள் உள்ளன. அவற்றின் நடுவே வட்டமான மலர்மொட்டுக்கள் உள்ளன. அம்பிகையின் கை விரல்களில் உள்ள மோதிரம் மற்றும் ரேகைகளைக் கூட காண முடிகிறது. மூக்கில் மூக்குத்தி அணியவும், காதில் கம்மல் அணியவும் சிறு துவாரங்கள் உள்ளது. மணிக்கழுத்தில் சவடியும் காறைகளும் சிறப்பாக அமைந்துள்ளது. இவைகளின் நடுவே ஒரு சிறு துவாரம் உள்ளது. இதில் அணிகலனை மாட்டலாம். கழுத்தின் பின்புறம் திருமாங்கல்யத்தின் முடிச்சுகள் சிற்பத்திலேயே செதுக்கப்பட்டுள்ளது மிகவும் அபூர்வமான வேலைப் பாடாகும். தலையில் உள்ள முடி 9 அடுக்குகளாக பூவேலைப்பாடுகளுடன் பொருந்தியுள்ளது. அம்பிகையின் கூந்தலானது பின்னலிட்ட முழு சடையாக இல்லாமல், தற்பொழுது நாகரிக பெண்கள் வைத்திருக்கும் குதிரைவால் சடையாகவும், அந்த சடையில் ரப்பர் பேண்ட் போன்ற முடிச்சு இருப்பதும் நம்மை வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் அமைப்பாகும்.
அம்பிகை திரிபுரை அம்சமானவர். ஆதலால் மணிவயிறும், மார்பும், பிடியளவு இடையுடனும் காட்சியளிக்கிறார். அம்பிகை இடையில் உடுத்தியிருக்கும் ஆடையின் முடிச்சும் பின்புறம் காணப்படுகிறது. இடுப்பில் மேகலை என்ற ஆபரணம் சிறப்புடன் விளங்குகின்றது. மேகலை இதழ் இதழாகத் தொங்குகின்றன. மேகலை மாட்டுவதற்கு 16 துவாரங்கள் உள்ளன. கற்சிலையில் துல்லியமாக சிறிய துவாரங்களை ஏற்படுத்துவது என்பது எளிதான காரியமில்லை. 16 கோவை உள்ள மேகலைக்கு கலாபம் எனப் பெயர். இவ்வணிகலனை அணிந்து, அம்பிகை ஒயிலாக கலாப மயில் போல் காட்சியளிக்கிறாள். மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சியோடு விளங்கும் அழகை எத்தனை நேரம் வேண்டுமானாலும் தொழலாம். சுருங்கச் சொன்னால் இந்த அம்பிகையின் சிற்பமானது வேறெங்கும் காணக்கிடைக்காத ஆபூர்வ சிற்பம் ஆகும்.
பௌர்ணமி தினங்களில் அம்பிகைக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணத் தடை நீங்கி, மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.
ஆத்தூர் காயநிர்மாலேசுவரர் கோவில்
சீடர்களின் சந்தேகங்களுக்கு விளக்கத்தை அளிக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வ தோற்றம்
சேலம் நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் ஆத்தூர். இங்கே அமைந்துள்ள கோட்டைக்கு மிக அருகே உள்ளது, காயநிர்மலேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. வசிஷ்ட முனிவருக்கு இறைவன் ஜோதி வடிவாக காட்சி தந்த தலம் இது.
இக்கோவிலின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி தனி சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார். நந்தியின் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவருக்கு, தனி விமானமும் உள்ளது. பொதுவாக சிவாலயங்களில் தட்சிணாமூர்த்தி, சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களுடன் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில் அவர் ஆறு சீடர்களுக்கு உபதேசம் செய்யும் கோலத்தில் இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். இந்த ஆறு சீடர்களில் மூன்று பேர் அமைதியாகவும், மற்ற மூன்று பேர் தங்களது சந்தேகங்களை கேட்டு அதற்கு விளக்கம் பெறும் விதமாகவும் இருக்கின்றனர். தட்சிணாமூர்த்தியின் இந்த கோலத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
சதுரங்கப்பட்டினம் மலைமண்டல பெருமாள் கோவில்
சர்ப்ப தோஷத்தை நிவர்த்தி செய்யும் அஷ்ட நாக கருடாழ்வார்
கருடாழ்வாருக்கு பால் அபிஷேகம் செய்யும் போது நீல நிறமாகும் அதிசயம்
சென்னையிலிருந்து கல்பாக்கம் செல்லும் பாதையில் கல்பாக்கத்திற்கு அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது மலைமண்டல பெருமாள் கோவில். இத்தலம் சற்றே மலை போன்ற அமைப்பின் மேல் உள்ளதால் மலை மண்டல பெருமாள் என்று அழைக்கப்படுகின்றார். மலைமண்டல பெருமாளுக்கு கிரி வரதராஜப் பெருமாள் என்ற திருநாமும் உண்டு. தாயார் திருநாமம் பெருந்தேவி.
இது பதினெட்டு சித்தர்கள் வழிபட்ட தலமாகும்.இக்கோவில் தென் பத்ரி என்று அழைக்கப்படுகிறது. ராமேஸ்வரம் கடலில் குளித்தால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் அர்த்த சேது என்னும் சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் குளித்தாலும் கிடைக்கும் என்பது ஐதீகம். காஞ்சிபுரம் பல்லவர்களின் தலைநகராக இயங்கியபோது, சீனப் பயணி யுவான் சுவாங் இந்தத் துறைமுகம் வழியாக வந்து தான் காஞ்சிபுரம் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் கருட பகவான் சிறந்த வரப்பிரசாதி. இவர் உடலில் எட்டு நாகங்களை ஆபரணமாக அணிந்து, அஷ்ட நாக கருடனாக காட்சி தருகிறார். இவர் ஒரு நாகத்தை தலையில் கிரீடமாகவும், இரண்டு நாகங்களை காதணிகளாகவும், கழுத்தில் இரண்டு நாகங்களை மாலையாகவும், இரண்டு நாகங்கள் இரண்டு கைகளில் வங்கி போன்ற ஆபரணமாகவும், இடுப்பின் ஒன்றை அரைஞாண் கயிறு போலவும் தரித்திருக்கிறார். வழக்கமான அஞ்சலி முத்திரை இன்றி, இவர் கையில் தாமரையை வைத்திருக்கிறார். மற்றொரு சிறப்பு என்னவென்றால், கருடனின் தலையும் பெருமாளின் பாதங்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது, கருடன் எப்போதும் பெருமாளுக்காக திருவடி சேவை (மகாவிஷ்ணுவின் பாதங்களுக்கு பிரார்த்தனை மற்றும் சேவை) செய்து வருவதைக் காட்டுகிறது. எனவே, கருடாழ்வாருக்கு செய்யும் பிரார்த்தனைகள் நேரடியாக பெருமாளின் பாதங்களில் விழுகின்றன என்பது ஐதீகம்.
இந்த கருடாழ்வார் தான், பழனி மலை முருகன் சிலையை வடித்த போகர் சித்தருக்கு, பறக்கும் சக்தியை அளித்தவர்.
இங்குள்ள கருடாழ்வார் நாகங்களை ஆபரணங்களாக அணிந்து, அஷ்ட நாக கருடனாக காட்சி தருவதால் சர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாக இத்தலம் விளங்குகின்றது. இந்த கருடாழ்வாருக்கு பால் அபிஷேகம் செய்யும் போது, அந்தப் பாலானது நீல நிறமாக மாறுவது ஒரு தனி சிறப்பாகும். பக்தர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக இந்த சன்னதியில் நெய் தீபங்களை ஏற்றுகிறார்கள். இவருக்கு பக்தர்கள் நெய்வேத்யமாக அமிர்த கலச கொழுக்கட்டை படைக்கிறார்கள்.
திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் கோவில்
வலது காது வித்தியாசமாக அமைந்துள்ள காலபைரவர்
திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில், சமயபுரத்தில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் கோவில் அமைந்துள்ளது. இறைவியின் திருநாமம் பிரம்மநாயகி. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.
பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீசுவரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் உள்ள தீர்த்தக் குளத்து நீரை, எவர் ஒருவர் கையில் எடுத்தாலும், அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும். இது காசிக்கு நிகரான தலம் மட்டுமல்ல. திருக்கயிலாயத்திற்கு நிகரான தலமும் ஆகும்.
இக்கோவிலில், பொதுவாக தெற்கு நோக்கி இருக்கும் பைரவர் மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு தனி சிறப்பாகும். தேய்பிறை அஷ்டமியில், ராகு கால வேளையில் இங்குள்ள காலபைரவரைத் தரிசித்து அவரின் வலது காதில் நம் பிரச்சினைகளைச் சொல்லி வணங்க வேண்டும். அதற்காகத் தான் இந்த காலபைரவரின் வலது காது வித்தியாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர். அர்த்த ஜாமத்தில் இவரது சன்னதியில் கோவில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச் சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில்
முத்துசாமி தீட்சிதருக்கு கற்கண்டை ஊட்டி இசை ஞானம் அளித்த திருத்தணி முருகன்
இசை மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்படும் முத்துசுவாமி தீட்சிதர்,அரிதான அதிகம் பாடப்படாத ராகங்களில் கூட பாடல்கள் இயற்றும் திறமை பெற்றவர். இவர் 1776 ஆம் ஆண்டு திருவாரூரில் பிறந்தார். வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முருகப்பெருமனின் திருநாமம் முத்துக்குமாரசுவாமி. அவருடைய அருளால் பிறந்த குழந்தை என்பதால் முத்துசுவாமி என பெற்றோர் பெயரிட்டனர்.
இவர் தன் தந்தையைப் போலவே வேதங்களிலும் மந்திர ஜபங்களிலும் சகல சாஸ்திரங்களிலும் வல்லவராக இருந்தார். தந்தையே இவருக்கு முதல் குரு. இனிமையாகப் பாடுவதிலும், வீணை வாசிப்பதிலும் தனித் திறமையுடன் விளங்கினார். சிதம்பரநாத யோகி என்பவரிடம் ஸ்ரீவித்யா மகாமந்திரத்தை தீட்சையாகப் பெற்று, தினமும் உச்சாடனம் செய்து வந்தார். பிறகு தன் குருவுடனேயே காசிக்குச் சென்றார். அங்கே கங்கை நதியில் இவருக்கு ஒரு வீணை கிடைத்தது. காசியில் கர்நாடக சங்கீதமும், ஹிந்துஸ்தானி சங்கீதமும் பயின்றார்.
காசியிலிருந்து திரும்பி குருவின் உத்தரவுப்படி திருத்தணி சென்று முருகப்பெருமானை தரிசித்தார். திருத்தணி மலையேறும்போது ஒரு கிழவர் எதிரில் வந்தார். முத்துசாமியை வாயைத் திறக்கச் சொல்லி, கற்கண்டை ஊட்டி விட்டு உடனேயே மயில் வாகனத்தில் இருக்கும் முருகப்பெருமானாகக் காட்சியளித்தார். திருத்தணி முருகனை கண் குளிர தரிசித்தார் முத்துசுவாமி தீட்சிதர். இந்த தரிசனத்திற்குப் பின் தன்னுடைய முதல் கிருதியை இயற்றினார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதத்தில் கீர்த்தனைக¬ளை இயற்றினார். அவருடைய பாடல்களில் அவருடைய முத்திரையாக, இறுதியில் குருகுஹ என்னும் வார்த்தை வரும்.
இவர் இயற்றிய 'வாதாபி கணபதிம் பஜே' என்னும் ஹம்சத்வனி ராகப் பாடல் மிகச் சிறந்த பாடலாக அவர் காலத்திலேயே புகழ் பெற்றது. இன்றும் சங்கீத வித்வான்களால் தங்கள் கச்சேரியில் தொடக்கப் பாடலாகப் பாடப்பெறும் பெருமை பெற்று விளங்குகிறது. முத்துசுவாமி தீட்சிதர் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் ஒரு பாடலை இயற்றினார் 'ஸ்ரீ காந்திமதிம் சங்கர யுவதிம்' என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் அபூர்வ ராகத்தில் அமைந்த அபூர்வப் பாடலாகக் கருதப்படுகிறது. இவர் எண்ணற்ற கிருதிகளை இயற்றியபோதிலும், அவற்றுள் கமலாம்பா நவாவர்ணம், அபயாம்பா நவாவர்ணம், சிவ நவா வர்ணம், நவக்கிரகக் கிருதிகள் இன்றைக்கும் எல்லா வித்வான்களாலும் பாடப்பெற்று இவரின் சிறப்பை நமக்கு உணர்த்துகின்றன. இவர் சிவன் மீது பாடிய 'ஸ்ரீ விஸ்வநாதம்' என்னும் கிருதி இவருடைய கிருதிகளுக்கெல்லாம் சிகரமாக அமைந்தது. 14 ராகங்களைக் கொண்டு ஒரே பாட்டில் சிவனின் பெருமைகளை விளக்கும் வண்ணமாக அந்த கிருதி அமைந்துள்ளது. இவருடைய படைப்பாற்றல் காரணமாக, தன்னுடைய சமகாலத்தவர்களான ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள், ஸ்ரீ ஷ்யாமா சாஸ்த்ரிகளுடன் சேர்த்து சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரகப் போற்றி வணங்கப்படுகிறார்.
இவர் எட்டையபுரத்தில் தன் கடைசி காலத்தில் வசித்தபோது அங்கு கடுமையான வறட்சி நிலவியது. அவர் உடனே அமிர்தவர்ஷிணி ராகத்தில் அம்பிகை மீது 'ஆனந்தாமிர்தகர்ஷினி' என்னும் கிருதியைப் பாடி மழை பொழிய வைத்தார். இவர் காலத்தில் நிகழ்ந்த ஒரு அற்புதம் இது. எண்ணற்ற மக்கள் பார்த்து அதிசயித்து ஆனந்தித்த காட்சி.
ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர் 1835ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகை அன்று தன் தம்பியும், சீடர்களும் மீனாம்பிகை பெயரில் அமைந்த "மீனலோசனி பாப மோசனி" என்ற கிருதியைப் பாடப் பாடக் கேட்டுக் கொண்டு, இரு கைகளையும் தலை மேல் குவித்து சிவே பாஹி.. சிவே பாஹி ஓம் சிவே என்றார். உடனே அவரது ஆவி ஒளி வடிவாகப் பிரிந்தது. இவரது சமாதி எட்டயபுரத்தில் அமைந்துள்ளது.
1976 ஆம் ஆண்டு இந்திய அரசு முத்துசாமி தீட்சிதரின் உருவப்படம் பொறித்த தபால் தலை வெளியிட்டு அவரை கௌரவித்தது.
கொடுவாய் நாகேசுவரர் கோவில்
அஸ்திவாரம் இல்லாமல் மணல் மேல் கற்கோவில் அமைந்துள்ள வித்தியாசமான கட்டிட அமைப்பு
அகழி அமைப்பில் அமைந்துள்ள இறைவன், இறைவி சன்னதிகள்
திருப்பூர் மாவட்டம், அவினாசிபாளையத்திற்குத் தெற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கொடுவாய் நாகேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கோவர்த்தனாம்பிகை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
நாகேசுவரர், கோவர்த்தனாம்பிகை சன்னதிகள் இரண்டும், அகழி அமைப்பில் அமைந்துள்ளது. கோவிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அமைப்பு உள்ளது. அஸ்திவாரத்துக்கு கீழ், பல நூறு அடிக்கு வெறும் மணல் மட்டுமே போடப்பட்டுள்ளது. அருகில், ஆறுகள் ஏதும் இல்லாத நிலையில், மணல் போட்டு அதன் மீது கற்கள் அடுக்கி, கோவில் அமைக்கப்பட்டுள்ளதும், கருவறை, மண்டப சுவர்களை சுற்றிலும், அகழி அமைக்கப்பட்டு, கற்களால் வடிகால் போல் கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது. பழங்காலத்தில், இதைச்சுற்றிலும் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்ததாக, செவிவழி செய்திகள் சொல்லப்படுகின்றன. நவக்கிரக கோவில் புதுப்பிக்கும்போது, 250 லாரி மணல் மட்டுமே அஸ்திவாரமாக போடப்பட்டுள்ளதை பார்த்து, இப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
இப்படி அஸ்திவாரம் இல்லாமல், மணல் மேல் கற்கோவில் அமைந்துள்ளதும், கோவில் அகழி அமைப்பில் உள்ளதும், பழங்கால கட்டட கலையின் சிறப்பை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது.
இக்கோவிலில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்து உள்ளன. யாழி அமைப்பு, அன்னப் பறவை, சுவாமி சன்னதி மேற்கூரையில், சந்திர, சூரிய கிரகணத்தை விளக்கும் பாம்பு பிடிக்கும் கதை, அம்பாள் சன்னதி முன், சுந்தரர் பாடியதையடுத்து, முதலை வாயிலிருந்து குழந்தை வெளியேறுவது, ஆடல் மகளிர் சிற்பங்கள் என அற்புதமான சிற்பங்கள் காணப்படுகின்றன. மீன், நடனமாடும் பெண், பாம்பு, குதிரையில் ஒரு சிப்பாய் பன்றியைக் கொல்வது, பாம்புடன் பாம்பு பிடிப்பவன், ஒரு புலி ஒரு பெண்ணைத் தாக்குவது போன்ற சிலைகள் கோவிலின் சுவர்களில் உள்ளன. ஒரே கல்லிலான மிக உயரமான தீபஸ்தம்பம், இக்கோவிலின் மற்றொரு தனிச்சிறப்பாகும்.
திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவில்
பக்தர்களை பார்த்த வண்ணம் சயனித்திருக்கும் பெருமாளின் அரிதான கோலம்
திருப்பூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வீரராகவப் பெருமாள் கோவில். இந்த கோவிலில் வீரராகவ பெருமாள், கனகவல்லித்தாயார் மற்றும் பூமிதேவித்தாயாருடன் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீகனகவல்லித்தாயார் தனி சன்னிதியில் அமர்ந்த நிலையிலும், ஸ்ரீபூமாதேவி தாயார் நின்ற கோலத்திலும் தனி சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்கள் இந்த கோவிலுக்கு வந்து, வீரராகவ பெருமாளை வழிபட்டுச் சென்றனர். இத்தலத்துக்கும், ராமாயணத்திற்கும் மிகுந்த தொடர்பு உண்டு. ராமாயண காலத்தில் வாலியின் இருப்பிடமான, நொய்யல் நதியின் தென்பகுதி தற்போது 'வாலிபாளையம்' என்று அழைக்கப்படுகிறது. வாலியின் மனைவி தாரையின் இருப்பிடமே தாராபுரமானது. சுக்ரீவன் வழிபட்ட தலம் ஒன்று, சர்க்கார் பெரியபாளையத்தில் 'சுக்ரீஸ்வரன் கோவில்' என்ற பெயரில் உள்ளது.
இக்கோவில் மூலவர் வீரராகவர் பெருமாள், புஜங்க சயனமாக தென்திசையில் சிரம் வைத்து, வட திசை திருப்பாதம் நீட்டி, மேற்குத் திசை முதுகு காட்டி, கிழக்குத் திசையில் திருமுகம் காட்டி, ஆனந்த நிலையில் பள்ளி கொண்டிருக்கிறார். பொதுவாக சயனக்கோலத்தில் அருள்பாலிக்கும் பெருமாளின் திருமுகம் மேல் நோக்கி அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில் தன்னை வணங்கும் பக்தர்களை பார்த்த வண்ணம் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு. இப்படி பக்தர்களை பார்த்த வண்ணம் சயன கோலத்தில் இருக்கும் பெருமாளை வேறு எந்தக் கோவிலிலும் காண முடியாது.
நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் கோவில்
நாக தோஷம் போக்கும் நாகாபரண விநாயகர்
நாகப்பட்டினத்தில் உள்ள காயாரோகணேஸ்வரர் கோவிலின் நுழைவாசலில், நாகாபரண விநாயகர் தனிச் சன்னதி கொண்டு அருள் பாலிக்கிறார். ஆலயத்தின் முகப்பில் வீற்றிருக்கும் இந்த விநாயகர், உடலில் நாகத்தை ஆபரணமாக சூடி, தலைக்கு மேலே ஐந்து தலை நாகம் குடை பிடித்தபடி இருக்க அதன் கீழே காட்சி தருகிறார். இவர் நாகத்தையே தன்மார்பினில் பூணூலாகவும், இடையில் கடி சூத்திரமாகவும் அணிந்திருக்கிறார். இதன் காரணமாகவே இந்த விநாயகருக்கு, 'நாகாபரண விநாயகர்' என்று பெயர் வந்தது.
சர்ப்ப ராஜன் தனக்கிருந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய இத்தலத்து இறைவனை வழிபட வந்தபோது,முதலில் இந்த நாகாபரண பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து அவருக்கு பூஜை செய்தான். பின்னர் காயாரோகணரை வழிபட்டு தோஷ நிவர்த்தி அடைந்தான்.
சர்ப்ப ராஜனே பிரதிஷ்டை செய்து வணங்கிய விநாயகர் இவர் என்பதால், ராகு-கேது சம்பந்தப்பட்ட தோஷங்கள் அனைத்தும் இவரை வழிபடுவதால் விலகும். கால சர்ப்ப தோஷம், நாகதோஷம், களத்திர சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இவருக்கு, ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொண்டால், அந்த தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். ராகு- கேது பெயர்ச்சியின்போது இவருக்கு விசேஷ பூஜைகளும் நடக்கிறது.
மானந்தகுடி ஏகாம்பரேசுவரர் கோவில்
சனகாதி முனிவர்களுடனும், சப்த ரிஷிகளுடனும் இருக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து, 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மானந்தகுடி. இறைவன் திருநாமம் ஏகாம்பரேசுவரர். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். முற்காலத்தில் இத்தலம் அனுமன் ஆனந்த குடி என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னர் மானந்த குடி என்றானது.
இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, மற்ற தலங்களை விட மிகவும் விசேஷமான கோலத்தில் காட்சி அளிக்கிறார். இவரது பீடத்தில் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களும், ரிஷிகளும் இருக்கின்றனர். மேலும் நந்தியும் இந்த பீடத்தில் இடம் பெற்றிருக்கின்றது. தட்சிணாமூர்த்தியின் இத்தகைய கோலத்தை மற்ற தலங்களில் நாம் காண்பது அபூர்வம்.
பொன்னேரி திருஆயர்பாடி கரிகிருஷ்ண பெருமாள் கோவில்
அரியும் அரணும் சந்தித்துக் கொள்ளும் அபூர்வ திருவிழா
இந்தியாவிலேயே வேறு எங்கும் நடத்தப்படாத சந்திப்பு விழா
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திருஆயர்பாடியில் ஆரணி ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது சவுந்தர்யவல்லி சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில். இக்கோவில் 1,500 ஆண்டுகள் பழமையானது. சோழமன்னன் கரிகாலன் கட்டியதால் கோவிலுக்கு கரிகிருஷ்ண பெருமாள் கோவில் என்ற பெயர் ஏற்பட்டது .
அதேபோன்று பொன்னேரியின் மையப்பகுதியில், ஆரணி ஆற்றங்கரையில் 9-ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் 5-ம் நாள் கரிகிருஷ்ண பெருமாளும், அகத்தீஸ்வரரும் சந்திக்கும் 'சந்திப்பு திருவிழா', ஆண்டுதோறும் இப்பகுதியில் பிரசித்தி பெற்ற விழாவாக நடைபெற்று வருகிறது. அகத்திய முனிவருக்கும், பரத்வாஜருக்கும் கரிகிருஷ்ண பெருமாள், அகத்தீஸ்வரர் ஒருசேர வந்து காட்சி அளித்ததை உணர்த்தும்விதமாக பொன்னேரியில் இவ்விழா நடைபெறுகிறது. அரியும் அரணும் ஒன்றே என உலகத்திற்கு உணர்த்தும் விதமாக இந்த சந்திப்பு திருவிழா நடைபெற்று வருகின்றது.
சந்திப்பு திருவிழாவின் போது ஆனந்தவல்லி தாயார், விநாயகர், முருகர் மற்றும் சண்டிகேஸ்வரருடன் அகத்தீஸ்வர பெருமான் ரிஷப வாகனத்திலும், கரிகிருஷ்ண பெருமாள் கருட வாகனத்திலும் ஒருசேர பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த சந்திப்பு விழா இந்தியாவிலேயே வேறு எங்கும் நடத்தப்படாத திருவிழாவாகும். அப்போது அங்கு கூடியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் 'கோவிந்தா.. கோவிந்தா' கோஷமும், 'நமச்சிவாய.. நமச்சிவாய' கோஷமும் விண்ணை பிளக்கும்.