பத்துகாணி காளிமலை பத்ரகாளி அம்மன் கோவில்
தென்னிந்தியாவின் வைஷ்ணவி தேவி கோவில் என்று போற்றப்படும் பத்ரகாளி அம்மன் கோவில்
மலையின் மீது பொங்கலிடும் தென்னிந்தியாவின் ஒரே புண்ணிய தலம்
கன்னியாகுமரி-கேரள எல்லையான பத்துகாணி அருகே, கன்னியாகுமரி மாவட்டத்தின் திருவட்டாறு தாலுகாவில், கடல் மட்டத்தில் இருந்து 3000 அடி உயரத்தில், உள்ள காளிமலையில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தமான பத்ரகாளி அம்மன் கோவில். இக்கோவில் தென்னிந்தியாவின் வைஷ்ணவி தேவி கோவில் என்று போற்றப்படுகின்றது. மலை உச்சியில் இருக்கும் காளிதேவி கோயிலுக்கு ஜீப்பைத் தவிர எந்த வாகனமும் இந்த வழுக்கும் ரோட்டில் போகமுடியாது. நடந்து சென்றால் ஆறு கிலோமீட்டர் தூரம் ஆகும். இதில் இரண்டு கிலோமீட்டர் தூரம் காட்டு வழியாக செல்ல வேண்டும். இந்த மலை மிகவும் வசீகரமான இடம். மலையின் ஒரு பக்கம் கேரளாவின் அழகை மேலிருந்து பார்க்கலாம். மறுபக்கம் தமிழகத்தின் இயற்கை அழகைப் பார்க்கலாம்.
காளிமலையில் துர்காதேவி, தர்ம சாஸ்தா, நாகயட்சி, சப்த கன்னியர் போன்ற தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன. குழந்தை பேறு கிடைக்காதவர்கள் குழந்தை கிடைப்பதற்காக இம்மலையில் வந்து நாகயட்சிக்கு பூஜை செய்து அருள் பெற்று செல்கின்றனர். சித்ரா பெளர்ணமிதான் இங்கு விசேஷம். அப்போது பல பெண்கள் பொங்கலிட்டு காளிதேவியை வழிபடுகிறார்கள். தென்னிந்தியாவில் மலையின் மீது பொங்கலிட்டு வழிபடும் ஒரே புண்ணிய தலம் காளிமலை ஆகும்.
அகத்திய முனிவருக்கு மும்மூர்த்திகள் காட்சி தந்த மலை இது. அவர் உருவாக்கிய தீர்த்தம் தான் காளி தீர்த்தம். இந்த காளி தீர்த்தம் கோடையிலும் வற்றாதது. மருத்துவ குணம் கொண்ட இந்த நீரை நோய் தீர்க்கும் மருந்தாக பக்தர்கள் வீடுகளில் பாதுகாத்து வருகிறார்கள்.
துர்காஷ்டமியின் போது கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு பக்தர்கள் இருமுடி கட்டி, புனித நீர் சுமந்து பாதயாத்திரை செல்வது வழக்கம்.
காஞ்சிபுரம் சித்திரகுப்தன் கோவில்
நம் பாபப் புண்ணிய கணக்கெடுக்கும் சித்ரகுப்தன்
அசுவினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன் தரும் தலம்
ஒவ்வொரு வீட்்டிலும் வரவு செலவுக் கணக்கு எழுதுவது என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம். ஆனால் நம் ஒவ்வொருடைய புண்ணியச் செயல்களையும் பாபக் காரியங்களையும் தனித் தனியே பட்டியலிட்டு அதை எமதர்மராஜனுக்குக் கொடுப்பவர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் சித்திரகுப்தன். எமதர்மராஜன், சித்திரகுப்தன் தரும் நம் பாவப் புண்ணியக் கணக்கை ஆராய்ந்து, அதில், நாம் செய்திருந்த புண்ணியங்கள் அதிகமானால் நமக்கு மோட்சப் பதவியும் பாவக் காரியங்கள் மிகுதியானால் மறுபிறவியும் நமக்கு அளித்திடுவார்.
சித்திரகுப்தனுக்கென்று தனி கோவில் காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரகுப்தன் வலது காலைத் தொங்க விட்டும் இடது காலை மடித்தும் அமர்ந்த நிலையில் காட்சித் தருகின்றார். அவர் வலக் கையில் எழுத்தாணியும் இடக் கையில் ஏடும் இருக்கின்றது.
சித்திரகுப்தனின் கதை
எமதர்மராஜன் சிவபெருமானை ஒரு நாள் கைலாயத்தில் சந்தித்து தனக்கு பூலோகத்திலுள்ள ஆன்மாக்களின் பாவப் புண்ணியங்களைப் பரிசீலித்து அந்த ஆன்மாக்களின் அடுத்த நிலை என்ன என்பதுப் பற்றி முடிவு எடுக்க மிகுந்த சிரமமாக உள்ளது என்றும் அதனால் பாவப் புண்ணியக் கணக்குகளை நிர்வகிக்க தனக்கு ஒரு உதவியாளர் வேண்டுமென்றும் வேண்டுகோள் வைத்தார். சிவபெருமான் பிரம்மதேவனிடம் எமதர்மராஜனின் வேண்டுகோளை நிறைவேற்றித் தருமாறு உத்திரவிட்டார்.
பிரம்மதேவன் எமதர்மனுக்கு ஒரு சகோதரனைப் படைத்து அச்சகோதரனே எமதர்மராஜனுக்குப் பாவப் புண்ணியக் கணக்கு எழுத உதவியாக இருக்கட்டும் என்று தீர்மானித்தார்,
பிரம்மதேவன் வானவில்லின் ஏழு வர்ணங்களிலிருந்து நீளாதேவி என்னும் பெண்ணைப் படைத்தார்.பின்னர நீளாதேவிக்கும் எமதர்மராஜனின் தந்தையான சூரிய தேவனுக்கும் திருமணம் நடந்தது. இவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தைதான் சித்திரகுப்தன். சித்திரை மாதம் சித்ரா பௌணர்மி தினத்தன்று பிறந்ததால் முதலில் சித்திரைப்புத்திரன் என்று பெயரிட்டார்கள். பின்னர் சித்திரகுப்தன் என்று அழைக்க ஆரம்பிததார்கள். சித்திரகுப்தன் குழந்தையாய் பிறந்தபோது, அவன்பிற்காலத்தில் நிர்வகிக்கப் போகும் கணக்குப் பணியைக் குறிக்கும் விதத்தில், இடது கை உள்ளங்கை ரேகைகளில் ஏடு போன்ற அமைப்பும் வலது கை உள்ளங்கை ரேகைகளில் எழுத்தாணிப் போன்ற அமைப்பும் இருந்ததாம்.
சித்திரகுப்தன் வளர்ந்தபின் மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொண்டான். அதன் பின்னர் தந்தை சூரியதேவனால் பாவப் புண்ணியக் கணக்கு எழுத, எமதர்மராஐனுக்கு உதவியாக இருப்பதற்காக, அனுப்பப் பட்டான்.
சித்திரகுப்தனை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள்
நவக்கிரகங்களில் கேது பகவான, ஒரு ஜாதகரின் மோட்சப் பதவியை தீர்மாணிப்பதால் அவருக்கு மோட்சகாரகன் என்ற பெயறும் உண்டு. நம் பாவப் புண்ணியக் கணக்கின் அடிப்படையில் நமக்கு மறுபிறவியா அல்லது மோட்சமா என்று தீர்மானிக்கும் சித்திரகுப்தன்தான் கேது பகவானின் அதிதேவதை ஆவார்.
எனவே சித்திரகுப்தனை வணங்கினால், கேது பகவானால் ஏற்படக்கூடிய தீயப் பலன்களெல்லாம் விலகி நற்பலன்கள் உண்டாகும். ஐந்து பௌணர்மிகளில் சித்திரகுப்தனைத் தொடர்ந்து தரிசித்து அர்ச்சனை செய்தால், திருமணம் கைக்கூடும். இத்தலம் கேது நிவர்த்தி தலம் என்பதால், கேது திசை ஆரம்பிக்கும் நிலையில் உள்ளவர்களும் மற்றும் அசுவினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் இந்த ஆலயத்தில் அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபடுவது மிகுந்த நற்பலன்களக் கொடுக்கும்.
தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில்
தென்குடித்திட்டை - தமிழகத்தில் குரு பெயர்ச்சிக்கு சிறந்த தலம்
தஞ்சாவூருக்கு வடமேற்கே 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் தென்குடித்திட்டை. இறைவன் திருநாமம் வசிட்டேசுவரர். இறைவியின் திருநாமம் உலகநாயகியம்மை.
தமிழகத்தில் குரு பெயர்ச்சிக்கு சிறந்த தலம் என்றால் அது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோவில்தான். குருபகவான் இக்கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில், தெற்கு நோக்கி தனி சன்னதியில், ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். சனி பகவானுக்கு பரிகாரம் செய்ய உகந்த கோவிலிலாகவும் இது விளங்குகின்றது.
நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது.
இவருக்கு இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும் குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வியாழ பகவானுக்குரிய நாளாகிய வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குருபகவானுக்கும் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர் களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம். மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும். குரு பகவானின் அதி தேவதைகளான பிரம்மன், இந்திரன் ஆகியோரை வழிபட்டாலும் குரு மகிழ்ச்சி கொண்டு பலன்களை வழங்குவார். ஜாதகத்தில் குரு பலவீனமாகவோ, தோஷத்துடனோ இருந்தால், நவமி அன்று சண்டி ஹோமம் செய்வது சிறப்பான பலனை தரும்.
சந்தான பாக்கியம் அளிக்கும் தலமாக இத்திருத்தலம் விளங்குகிறது. மேலும் கடன் தொல்லை அகலவும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படவும் இங்கு வந்து வழிபடுகின்றனர்.
திருக்கோட்டூர் கொழுந்துநாதர் கோவில்
தனி சன்னதியில் மூலவராக எழுந்தருளி இருக்கும் பிரதோஷ மூர்த்தி
மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் 16 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கோட்டூர். இறைவன் திருநாமம் கொழுந்துநாதர். இறைவியின் திருநாமம் தேனாம்பிகை. இந்திரன் பூஜித்ததால் இத்தலத்திற்கு இந்திரபுரி என்ற பெயர் உண்டு. இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானையும் இத்தல இறைவனை வழிபட்டது. கோடு என்றால் யானை. அதனால் இத்தலம் கோட்டூர் எனப் பெயர் பெற்றது.
பொதுவாக சிவாலயங்களில் பிரதோஷ காலங்களில், கோவில் பிராகாரத்தில் வலம் வருவதற்காக அமைந்துள்ள உற்சவமூர்த்தியே பிரதோஷ நாயகர் என்று அழைக்கப்படுகின்றார். உமாதேவியை தனது இடக்கரத்தால் அணைத்திருப்பதால் இவருக்கு அணைத்தெழுந்த நாதர் என்ற பெயரும் உண்டு. இவர் ஒன்றரை அடி உயரத்தில் சிறிய உருவத்துடன் காணப்படுவார். ஆனால் இந்த பிரதோஷ மூர்த்தி, இக்கோவிலில் பெரிய உருவத்துடன் தனி சன்னதியில் மூலவராக எழுந்தருளி இருக்கிறார். இப்படி மூலவராக காட்சி அளிக்கும் பிரதோஷ மூர்த்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
திரிசூலம் திரிசூலநாதர் கோவில்
திருமண வரம் தரும் திரிபுரசுந்தரி
கல்வி, ஞானம், யோகம் அனைத்தும் அருளும் அம்பிகை
சென்னையில் விமானநிலையத்துக்கு அருகில் உள்ள திரிசூலம் ரயில் நிலையத்திலிருந்து ஒரு கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது திரிசூலம் திரிசூலநாதர் கோவில். இக்கோவிலில் இரண்டு அம்பிகைகள் எழுந்தருளி உள்ளார்கள். திரிசூலநாதர் கருவறையில் சொர்ணாம்பிகை இருக்க மற்றொரு பிரதான அம்பிகை திரிபுரசுந்தரி தனி சந்நிதியில், தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறாள்.
கம்பீரமும் அழகுமாகக் காட்சி தரும் திரிபுரசுந்தரி அம்பிகை கரங்களில் அட்சமாலையையும், தாமரை மலரையும் ஏந்தியபடி இருக்கின்றாள். திரிபுரசுந்தரி அம்பிகையை வணங்கினால், கல்வி, ஞானம், யோகம் அனைத்தும் பெறலாம். சகல செல்வங்களையும் தந்தருள்வாள் இந்த அன்னை என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
இக்கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் திரிபுரசுந்தரி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுவது தனிச்சிறப்பாகும். திருமணம் கைகூட வேண்டும், சந்தான பாக்கியம் கிடைக்கவேண்டும், கடனில் இருந்து மீளவேண்டும் என்று வேண்டிக் கொள்கின்ற பக்தர்கள், வேண்டுதல் நிறைவேறுவதற்காகவும் பிரார்த்தனை பலித்ததற்காகவும் அம்பாளுக்கு சந்தனக்காப்பு செய்து, தரிசிக்கின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் - புதுத்தாலி மாற்றிக் கொள்ளும் சுமங்கலிகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. மதுரை சித்திரை திருவிழா 12 நாட்கள் நடைபெற்றாலும் 8, 9, 10 ஆம் நாட்களில் நடைபெறும் பட்டாபிஷேகம், திக்கு விஜயம், அதையடுத்து மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் இன்று மே 8-ந் தேதி காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் மேற்கு, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
திருமண மேடை ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட, பல லட்சம் ருபாய் மதிப்புள்ள வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படும். இந்தத் திருக்கல்யாணத்தைக் காண திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்பிரமணியசுவாமி, தெய்வானை, பவளக்கனிவாய்பெருமாள் ஆகியோர் புறப்பட்டு வருவார்கள். வேத மந்திரங்கள் ஓத, பவளக்கனிவாய் பெருமாள் தாரை வார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கப்படும். மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழும் போது வானில் இருந்து வண்ண மலர்கள் தூவப்படும். அப்போது திருமண நிகழ்ச்சியை காண வந்திருக்கும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட திருமணமான பெண்கள், தங்கள் கழுத்தில் உள்ள தாலியை மாற்றி புதுத்தாலி அணிந்து கொள்வார்கள். மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தின் போது புது தாலிச்சரடு மாற்றிக் கொண்டால், தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என்பது ஐதீகம். இப்படி ஒரு நடைமுறை, வேறு எந்த கோவில் திருவிழாவிலும் கடைபிடிக்கப்படுவதில்லை.
திருக்கல்யாணம் முடிந்தபின் மீனாட்சி அம்மனும், சுவாமியும் திருக்கல்யாண கோலத்தில், கோவிலின் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். மாலையில் மாப்பிள்ளை சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும், புதுப்பெண் மீனாட்சி பூப்பல்லக்கிலும் வீதி உலா வருவார்கள். தம்பதியரின் அழகைக் காண பட்டி தொட்டி எங்கும் இருந்தும் மக்கள், மதுரைக்கு திரண்டு வருவார்கள். மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை கண்ணார கண்டால் நம் வீட்டில் மணமாகாமல் இருக்கும் மகளுக்கோ, மகனுக்கோ திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்
தமிழகத்திலேயே மிகப்பெரிய திருமேனி உடைய சக்கரத்தாழ்வார்
108 வைணவத் திவ்ய தேசங்களில் திருவரங்கம், திருவேங்கடம் அடுத்து மிக முக்கியமான திவ்ய தேசமாக கருதப்படுவது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் ஆகும். தாயார் திருநாமம் பெருந்தேவித் தாயார்.
இக்கோவிலின் பிரதான குளத்திற்கு அனந்த சரஸ் என்று பெயர். இந்த அனந்த சரஸ் குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் சன்னதி அமைந்துள்ளது. தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார், ஏழு அடி உயரத் திருமேனியுடன் இருக்கின்றார். இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார். இவரே இந்த ஆலயத்தில் பிரதான மூர்த்தியாக இருக்கிறார். இவரை வழிபட்ட பிறகே மூலவரான வரதராஜ பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். இங்குள்ள உற்சவர் சக்கரத்தாழ்வார் மிகவும் விசேஷமானவர். இவரைச் சுற்றியுள்ள அலங்கார வளைவில் 12 சக்கரத்தாழ்வார் உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
சக்கரத்தாழ்வார் பெருமானை வணங்கினால் திருமணத்தடை நீங்கும், வழக்குகளில் வெற்றி கிடைக்கும், வாழ்வில் வளமும் நிம்மதியும் அடையலாம் என்பது ஐதீகம். சக்கரத்தாழ்வரை தரிசனம் செய்து பின்னர் ஸ்ரீவரதராஜ பெருமாளை தரிசனம் செய்து பசு வெண்ணெய்யில் சர்க்கரை கலந்து ஏழைக் குழந்தைகளுக்கு அளித்தால் அக்னியால் விளையும் ஆபத்துக்கள் தவிர்க்கப்படும்.
திருவேட்டக்குடி சுந்தரேசுவரர் கோவில்
சிவபெருமானும், முருகனும் வில்லேந்திய கோலத்தில் இருக்கும் அபூர்வ காட்சி
சிவபெருமான் வேடனாகவும், அம்பாள் தலையில் பானையை வைத்தபடி வேடன் மனைவி போலவும் காட்சி தரும் வித்தியாசமான உற்சவ மூர்த்திகள்
புதுச்சேரி மாநிலம் மாவட்டம் காரைக்காலில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருவேட்டக்குடி. இறைவன் திருநாமம் சுந்தரேசுவரர், திருமேனி அழகர். இறைவியின் திருநாமம் சௌந்தரநாயகி, சாந்தநாயகி.
கருவறையில் மூலவர் திருமேனி அழகர் என்கிற சுந்தரேசுவரர் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். உயரமான பாணத்துடன் தீபாராதனை ஒளி திருமேனியில் தெளிவாகத் தெரிகின்றபடி காட்சி அளிக்கிறார். அம்பாள் சாந்தமான கோலத்தில் இருப்பதால் இவளை சாந்தநாயகி என அழைக்கின்றனர்.
சிவபெருமான் மீனவர், வேடன் என இரண்டு வடிவங்களில் வந்து அருள் செய்த தலம் இது. இங்கு சிவபெருமானின் உற்சவர் வேட மூர்த்தியாக கையில் வில் மற்றும் சூலம் ஏந்தியும், அம்பாள் தலையில் பானையை வைத்தபடி வேடன் மனைவி போலவும் காட்சி தருவது வித்தியாசமான தரிசனம் ஆகும். சிவபெருமான் வேடராக வந்தபோது, அவருடன் முருகனையும் அழைத்து வந்தார். இதன் அடிப்படையில் இங்கு முருகனும் கையில் வில்லுடன் காட்சியளிக்கிறார். ஒரே தலத்தில் சிவபெருமான், முருகன் இருவரையும் வில்லுடன் தரிசனம் செய்வது அபூர்வம்.
இங்கு வேடன் வடிவில் சிவபெருமான் காட்சி தருவதின் பின்னணியில் மகாபாரதம் கதை ஒன்று உள்ளது. பாண்டவர்கள் வனவாசம் செய்த போது அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அவ்வாறு தீர்த்த யாத்திரை செய்த போது பல தலங்களில் சிவபெருமானை ஆராதித்தான். அப்படி வழிபட்ட தலங்களில் இத்தலமும் ஒன்று. வேதவியாசர் அர்ச்சுனனிடம், சிவனை வணங்கி பாசுபத அஸ்திரம் பெற்றால் எளிதில் துரியோதனரை வெற்றி கொள்ளலாம் என ஆலோசனை கூறினார். அதன்படி அர்ச்சுனன் இத்தலத்திற்கு வந்து சிவனை வேண்டி தவமிருந்தார். அவனது தவத்தை கலைப்பதற்காக, துரியோதனன் முகாசுரனை அனுப்பினார் .
பன்றி வடிவில் வந்த அசுரன் அர்ச்சுனனது தவத்தை கலைக்க முயன்றான். அர்ச்சுனன் அசுரனை அம்பால் வீழ்த்தினான். அப்போது ஒரு வேடன் தன் மனைவி, மகனுடன் அங்கு வந்து பன்றியை தான் வீழ்த்தியாக கூறி எடுத்துச் செல்ல முயன்றார். அர்ச்சுனன் அவரிடம் பன்றியை தர மறுத்தான். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிவபெருமான், தானே வேடன் வடிவில் வந்ததை உணர்த்தி, பாசுபத அஸ்திரம் கொடுக்கச் சென்றார். அருகிலிருந்த அம்பாள் சிவனிடம், 'ஆயுதங்களில் உயர்ந்ததான பாசுபதாஸ்திரம் பெறுவதற்கு அர்ச்சுனன் தகுதிபெற்றவன்தானா?' என்று சந்தேகம் எழுப்பினாள். சிவன் அவளிடம், 'அர்ஜுனன் மஸ்யரேகை (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன். எனவே, அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம்' என்றார். அர்ச்சுனனும் அம்பாளிடம் பணிந்து நின்று தன் ரேகைகளை காட்டினான். அதன்பின் அம்பாள் சம்மதிக்கவே சிவன் பாசுபத அஸ்திரத்தை அர்ச்சுனனிடம் கொடுத்தார். அர்ச்சுனன் தனக்கு அருள் செய்ததைப் போல இங்கிருந்து அனைவருக்கும் அருளும்படி வேண்டவே சிவபெருமான் இத்தலத்தில் எழுந்தருளினார்.
இறைவனின் திருமேனி நாதர் என்ற பெயருக்கு ஏற்ப, இத்தலத்து இறைவனை வழிபட்டால், நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் அருளுவார்.
இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் கோவில்
ஐந்து மூலவர்கள் இருக்கும் தேவார தலம்
பஞ்சபாண்டவர்கள் ஐந்து பேருக்கும் சிவபெருமான் தனித்தனியே காட்சி கொடுத்த தலம்
வைத்தீசுவரன்கோவில் – திருப்பனந்தாள் சாலையில் உள்ள மணல்மேடு என்ற ஊருக்கு வடக்கே ஒரு கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம் இலுப்பைபட்டு. இத்தலத்தின் புராண பெயர் திருமண்ணிப் படிக்கரை. சிவபெருமான் ஆலகால விஷத்தை பருகியபோது பார்வதி தேவி, சிவபெருமானின் கழுத்தை தன் கரங்களால் அழுத்தி விஷத்தை தொண்டையிலேயே நிற்கச் செய்த கோவில் இது.
பொதுவாக சிவன் கோவில்களில் ஒரு மூலவர் மட்டும்தான் இருப்பார். அரிதாக சில சிவன் கோயில்களில் இரண்டு மூலவர்கள் இருப்பார்கள். ஆனால் இக்கோவிலில் ஐந்து மூலவர்கள் அருள் பாலிப்பது ஒரு தனி சிறப்பாகும். இதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.
பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்தபோது, இத்தலத்தில் சில காலம் தங்கியிருந்தனர். சிவபூஜை செய்ய விரும்பிய அவர்கள், இங்கு தேடிப் பார்த்தும் சிவலிங்கம் எதுவும் கிடைக்க வில்லை. எனவே, அவர்கள் ஐந்து பேரும் ஒரு இலுப்பை மரத்தின் அடியில், இலுப்பைக்காயில் விளக்கேற்றி சிவனை மானசீகமாக வணங்கினர். சிவபெருமான் அவர்கள் ஐந்து பேருக்கும், தனித்தனி மூர்த்தியாக காட்சி தந்தார். அவர்கள் சிவபெருமானிடம், தங்களுக்கு அருளியதைப் போலவே இங்கிருந்து அனைவருக்கும் அருள் செய்ய வேண்டுமென வேண்டிக் கொண்டனர். சிவபெருமானும் ஐந்து மூர்த்திகளாக எழுந்தருளினார். தற்போதும் இக்கோவிலில் ஐந்து லிங்கங்கள் தனித்தனி சன்னதியில் இருக்கின்றது.
தர்மர் வழிபட்ட சிவன் நீலகண்டேஸ்வரர், அர்ஜுனன் வழிபட்ட சிவன் படிகரைநாதர், பீமனால் வழிபடப்பட்டவர் மகதீஸ்வரர், நகுலன் வழிபட்டவர் பரமேஸ்வரர், சகாதேவன் வழிபட்டவர் முத்துகிரீஸ்வரர் என்ற பெயர்களில் அருளுகின்றனர். இவர்களில் நீலகண்டேஸ்வரர், படிகரைநாதருக்கு அம்பிகை சன்னதி உண்டு. இவர்களில் நீலகண்டேஸ்வரர், படிகரைநாதருக்கு அம்பிகை சன்னதி உண்டு. படிகரைநாதர் சன்னதியிலேயே மங்களாம்பிகை தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். மற்றொரு அம்பிகையான அமிர்தகரவல்லி தனி சன்னதியில் எழுந்தருளி இருக்கிறாள். பீமன் வழிபட்ட சிவன், சோடச லிங்கமாக, 16 பட்டைகளுடன் இருக்கிறார். பதினாறு செல்வமும் பெற இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்
கால சர்ப்பங்கள் சாளரத்தில் எழுந்தருளி இருக்கும் அபூர்வ காட்சி
சகல நாக தோஷங்களுக்கான நிவர்த்தி தலம்
கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.
இக்கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள சாளரத்தில்,இரண்டு கால சர்ப்பங்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்தபடி காட்சி தருகின்றன. பொதுவாக சன்னதிகளில் அல்லது கோவில் மண்டபங்களில் காட்சி தரும் சர்ப்பங்கள், இங்கு சாளரத்தில் எழுந்தருளி இருப்பது ஒரு தனி சிறப்பாகும். இந்த சாளரத்தில் ஆதிசேஷன், வாசுகி, தட்சகன், கார்க்கோடகன், அனந்தன், குளிகன், சங்கபாலன், பத்மன் ஆகிய எட்டு நாகங்களும் சூட்சும ரூபத்தில் இருக்கின்றன. இந்த சாளரத்து நாகங்களை வழிபட்டால் சகல நாக தோஷங்களும் விலகும். இதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.
ஒரு சமயம் சிவபெருமானின் திருமேனியில் ஆபரணங்களாக உள்ள நாகங்களுக்கு, சிவபெருமானை வழிபடும் போது தங்களைத்தான் வழிபடுகிறார்கள் என்ற கர்வம் ஏற்பட்டது. இதனால் சிவபெருமானின் சாபத்தை பெற்றார்கள். நாகங்கள் சிவபெருமானிடம் சாப விமோசனம் வேண்டி நின்றபோது, சிவபெருமான் அவர்களை சிவராத்திரி அன்று, ஆலமர விழுதை நாராக எடுத்து, அகத்தி பூவை வைத்து மாலையாக தொடுத்து இத்தலத்தில் தன்னை வழிபட்டால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார். இந்த வழிபாட்டை அன்று தவறவிட்டால் சாப விமோசனம் கிடையாது என்றும் நிபந்தனை விதித்தார். அதனால் தான் இன்றும் இத்தலத்தில் ஆலமர விழுதுகள் தரையை தொடுவதில்லை, அகத்தி மரத்தில் பூக்கள் பூப்பதில்லை.
இக்கோவில் சாளரத்தில் சூட்சும ரூபத்தில் இருக்கும் அஷ்ட நாகங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இரண்டு தீபம் ஏற்றி , சுவாமி அம்பாளுக்கு அர்ச்சனை செய்து, அம்பாள் சன்னதியில் உளுந்து, கொள்ளு தானம் செய்து ஒன்பது வாரங்கள் வழிபட்டால் ராகு கேது தோஷம், கால சர்ப்ப தோஷம், அனைத்து நாக தோஷங்களும் விலகும்.
திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் கோவில்
சூரியனும் சந்திரனும் ஒருவரை ஒருவர் நேர் முகமாக பார்த்தபடி இருக்கும் அரிய காட்சி
மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் சுமார் 7 கி.மீ. தூரத்தில் உள்ள தேவாரத்தலம் திருநின்றியூர். இறைவன் திருநாமம் மகாலட்சுமிபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் உலகநாயகி, லோகநாயகி. மகாலட்சுமி இத்தலத்தில் சிவனை வழிபட்டு அருள் பெற்றாள். எனவே, இத்தலத்து இறைவன் மகாலட்சுமீஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றார். மகாலட்சுமி (திருமகள்) வழிபட்டதால் இவ்வூர் திருநின்றியூர் என்று பெயர் பெற்றது. இத்தலம் மூவர் தேவாரப் பாடலும் பெற்ற சிறப்புடையதாகும்.
பொதுவாக, அனைத்து சிவாலயங்களிலும், ஈசானிய(வடகிழக்கு) மூலையில் நவக்கிரகங்கள் மேற்கு திசை முகமாக அமைக்கப்பட்டிருக்கும். நவகிரகங்களின் நடுவில் சூரிய பகவான் கிழக்கு முகமாகவும்,, சூரியனுக்கு கிழக்கில் சுக்கிரன் கிழக்கு முகமாகவும், மேற்கில் சனி மேற்கு முகமாகவும், வடக்கில் குரு வடக்கு முகமாகவும், தெற்கில் செவ்வாய் தெற்கு முகமாகவும், வடகிழக்கில் புதன் வடக்கு முகமாகவும், தென் கிழக்கில் சந்திரன் மேற்கு முகமாகவும், வட மேற்கில் கேது தெற்கு முகமாகவும் தென் மேற்கில் ராகு தெற்கு முகமாகவும் இடம் பெற்றிருப்பார்கள். ஆனால் இக்கோவிலில் சூரியனும் சந்திரனும் ஒருவரை ஒருவர் நேர் முகமாக பார்த்தபடி எழுந்தருளி இருப்பது வேறு எந்த கோவிலிலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்.
மணலூர் ஏழுலோகநாயகி அம்மன் கோவில்
சப்தமாதர்களின் ஒன்று சேர்ந்த உருவமாக காட்சி தரும் அபூர்வ அம்மன்
விளைச்சலுக்கு அருள் வழங்கும் தலம்
கும்பகோணம் -மயிலாடுதுறை பாதையில் ஆடுதுறையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் (சூரியனார் கோவிலுக்கு அருகில்) உள்ளது மணலூர் ஏழுலோகநாயகி அம்மன் கோவில். பல நூற்றாண்டுகள் பழமையானது இக்கோவில். இப்பகுதி மக்களுக்கு காவல் தெய்வமாக ஏழுலோகநாயகி விளங்குகிறாள். ஊருக்கு வெளியில், வயல்வெளிகளுக்கு இடையே இந்த அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனின் சிலை ஒரு தாமரை குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.அம்மனின் விருப்பத்திற்கு இணங்க, உரல், உலக்கை ஒலி இல்லாத இடத்தில், அதாவது ஊருக்கு வெளியில் அம்மனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த அம்மனின் திருவுருவம் பிராம்மி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, மாஹேந்திரி, சாமுண்டா என்று அழைக்கப்படும் சப்தமாதர்களின் ஒன்று சேர்ந்த உருவமாகும். அதனால்தான் இந்த அம்மனுக்கு ஏழுலோகநாயகி என்ற திருநாமம் ஏற்பட்டது.
கருவறையில், ஏழுலோகநாயகி அம்மன் உயரமான திருமேனியுடன் வலது காலை மடித்தும், இடது காலை தொங்கவிட்டும் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். எட்டுத் திருக்கரங்களிலும் சூலம், வேதாளம், கத்தி, உடுக்கை, கபாலம், மணி, உலக்கை முதலிய ஆயுதங்களை ஏந்தி, தலையை சற்று சாய்த்து, கண்களில் கருணை பொங்க தோற்றம் அளிக்கின்றாள்.
இக்கோவில் விளைச்சலுக்கு அருள் வழங்கும் ஒரு சிறப்புமிக்க தலமாகப் போற்றப்படுகிறது.
பிரம்மதேசம் கைலாசநாதர் கோவில்
பித்ரு தோஷம் நீக்கும் கங்காள நாதர்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் என்ற ஊரிலிருந்து, 4 கி.மீ. தூரத்தில் உள்ள தலம் பிரம்மதேசம். இறைவன் திருநாமம் கைலாசநாதர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இந்த கோவிலின் புராண பெயர் 'அயனீச்சுவரம்'. ராஜ ராஜ சோழனால் இக்கோவில் கட்டப்பட்டு, பின்னர் விஜயநகர பேரரசர்களால் விரிவாகப்பட்டது. பிரம்மதேசம் கைலாசநாதர் கோவிலுக்கு சென்று வந்தால் காசிக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். நவ கைலாய தலங்களில், சூரியனுக்குரிய தலம் இது.
இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் கங்காள நாதர் பார்ப்பவரை பரவசமடையச் செய்யும், கலையம்சம் மிக்க மூர்த்தியாக விளங்குகின்றார். கங்காள நாதர், என்பது அறுபத்து மூன்று சிவ திருமேனிகளுள் ஒன்றாகும். இக்கோவிலில் கங்காள நாதர் ஏழடி உயரத் திருமேனியுடன், நீண்ட கைகளும் கால்களும் உடையவராய், பீடம் ஏதுமின்றி தேர்ந்த வேடுவனைப் போல் நிற்கிறார். இடது கையில் கங்காளம் எனப்படும் உடுக்கை போன்றதொரு வாத்தியம், வலது கையில் எலும்பைப் போன்றதொரு தண்டம். இடது கால் பூமியில் அழுந்தப் பதிந்திருக்க வலக்கால் சற்றே வளைந்து நடந்து செல்வதைப் போன்ற தோற்றம். மலரும் பிறையும், சர்ப்பமும் சூடிய ஜடா மகுடமும். பெருக்கிய காதுகளில் ஒரு காதில் மிகப்பெரிய குண்டலமும் அணிந்து இருக்கிறார். புன்னகையும், கருணையும், அருளும் ததும்பும் கண்களை உடைய திருமுகத்துடன் காட்சி அளிக்கிறார். நான்கு கரங்களில் பின்னிரு கரங்களில் ஒரு கையில் பாணமும், மறுகையில் முத்திரையும் தாங்கி இருக்கின்றார். அவரைச் சுற்றி இசைக்கருவிகளோடு அவரது முழங்கால் உயரத்திற்கு 5 பூத கணங்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். உச்சிக்கு மேலே சுவற்றில் புடைப்புச் சிற்பமாக இந்திராதி தேவர்கள், விஷ்ணு, ரிஷி புங்கவர்கள், கின்னரர், கிம்புருடர், குதிரை, யானை, அப்சரஸ்கள் காட்சி அளிக்கிறார்கள். இதில் சில அப்சரஸ்களின் உருவங்கள் சுதை சிற்பமாக செய்யப்பட்டு வஸ்திரமும் வர்ண கலாபமும் கொண்டு அழகு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த கங்காளநாதரை அமாவசையன்று காலை தரிசனம் செய்தால் பித்ரு தோஷம் முதல் அனைத்து வகை தோஷங்களும் நீங்கும்.
விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில்
அட்சய திருதியைக்கு உரிய தனிச்சிறப்புத் தலம்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் விளங்குளம் . இறைவன் திருநாமம் அட்சயபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் அபிவிருத்தி நாயகி.
கருவறையில் அட்சயபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இவர், சனி பகவானுக்கு அருளிய தினம் ஓர் அட்சய திருதியை நாள். எனவே இறைவன், அட்சயபுரீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார். அட்சயம் என்றால் வளர்வது என்று அர்த்தம். இத்தலத்திற்கு ஒருமுறை வந்து போனாலே பக்தர்களின் இல்லத்தில் செல்வம் உள்ளிட்ட பதினாறு பேறுகளும் தழைத்து வளரும் என்பது ஐதீகம்.
செல்வங்கள் அனைத்துக்கும் அதிபதியான குபேரன், ஈசனை வழிபட்டே சங்கநிதி, பதுமநிதிகளைப் பெற்றான் என்கிறது புராணம். அப்படி குபேரன் செல்வங்களைப் பெற்று அளகாபுரிக்கு அரசனானதும், அட்சயபுரீஸ்வரரின் அருளால்தான் என்பதால் இத்தலம் அட்சய திருதியைக்கு உரிய தனிச்சிறப்புத் தலமாகக் கூறப்படுகிறது.
அம்பிகை அபிவிருத்தி நாயகி, மேல் இரு கரங்களில் தண்டத்தையும், தாமரையையும் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் புன்னகை தவழ தென்திசை நோக்கி அருள்பாலிக்கின்றாள். அம்பிகையின் திருநாமமும், அபிவிருத்தி நாயகி என அமைந்திருப்பது, இத்தலத்தில் வழிபட்டால், மேலும் மேலும் செல்வங்கள் வளரும் என்பதையே உறுதிப்படுத்துகிறது. கணவருக்கு நிகராக, இவளும் நமக்கெல்லாம் அபிவிருத்தியைத் தந்தருளும் கருணைக் கடல் என்று பக்தர்கள் போற்றுகின்றனர்.
அட்சய திருதியை நாளில், மூலவர் சிவனாருக்கு சந்தனக் காப்பில் மாதுளை முத்துக்கள் பதித்து, சிறப்பு பூஜைகள் நடைபெறும். பிறகு, சனீஸ்வரருக்கு புனுகு கலந்த சந்தனக் காப்பு செய்வித்து, எள், அரிசி, கோதுமை, பாதாம்பருப்பு, குங்குமப்பூ மற்றும் நவதானியங்களைப் பதித்து அலங்கரிப்பார்கள்.
அட்சய திருதியை நாளிலும் வெள்ளி, ஞாயிறு, திங்கட்கிழமை முதலான நாட்களிலும் விளங்குளம் வந்து, சிவபார்வதியைத் தரிசித்தால், சகல செல்வங்களும் பெற்று இனிதே வாழலாம் என்பது ஐதீகம்.
புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அட்சயதிருதியை நாளில் நடந்த சில நிகழ்வுகள்
- வேத வியாசர், மகாபாரதத்தை விநாயகர் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நாள் அட்சய திருதியை.
- திருமாலின் பத்து அவதாரங்களில் ஒருவரான பரசுராமர் அவதரித்த நாள்
- நான்கு யுகங்களில் முதல் யுகமான கிருத யுகத்தில், பிரம்மன் உலகத்தைப் படைத்தது அட்சய திருதியை நாளில்தான்
- இரண்டாவது யுகமான கிரேதா யுகம் தோன்றிய நாளும் ஒரு அட்சய திருதியை அன்றுதான்
-காசியில் அன்னபூரணியிடம் அன்னம் பிச்சை பெற்று, சிவனின் தோஷம் நீங்கிய நாளும் அட்சய திருதியைதான்
- பகீரதனின் தவத்தால் கங்கை பூமிக்கு வந்ததும் ஒரு அட்சய திருதியை அன்றுதான்
- கிருஷ்ணன் தன் நண்பன் குசேலனிடமிருந்து அவல் மூட்டையை பெற்றுக் கொண்டு அவருடைய வறுமையை நீக்கிய நாள் அட்சய திருதியை.
- கிருஷ்ணன், துரியோதனன் சபையில் திரௌபதியின் மானத்தை காப்பாற்றியதும் ஒரு அட்சய திருதியை அன்றுதான்
ஆமப்பள்ளம் பழநியாண்டீஸ்வரர் கோவில்
பழநி ஆண்டவர் கையில் தண்டத்திற்கு பதிலாக வேல் ஏந்தி இருக்கும் அபூர்வ தோற்றம்
சீர்காழியில் இருந்து 10 கி.மீ. தொலைவில், திருமுல்லைவாயில் செல்லும் வழியில் அமைந்துள்ளது ஆமப்பள்ளம் பழநியாண்டீஸ்வரர் கோவில். பல நூற்றாண்டுகள் பழமையானது இக்கோவில். கருவறையில் முருகன் பழனி ஆண்டவர் கோலத்தில் நமக்கு தரிசனம் தருகிறார். இக்கோவிலில் முருகன் மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு சிறப்பாகும். மேலும் பழநி ஆண்டவர் கோலத்தில் இருக்கும் முருகனுக்கு கையில் தண்டத்துக்கு பதிலாக வேல் இருப்பது ஒரு தனி சிறப்பாகும்.
இத்தலத்தில் பழநி ஆண்டவர் கோலத்தில் முருகன் எழுந்தருளி இருப்பதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆமப்பள்ளத்தில் ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். பழநி முருகன் மேல் பக்தி கொண்டிருந்த அவர் அடிக்கடி பழநி செல்லும் வழக்கம் கொண்டிருந்தார். பழநி முருகன் நம் ஊரில் இருந்தால், நாம் நினைத்த நேரத்தில் அவரை தரிசித்து அருள் பெறலாமே என்ற எண்ணம் ஒரு நாள் அவர் மனதில் தோன்றியது. செல்வந்தரான அவர் பழநி சென்று தங்கி, முருகன் சிலை வடிக்கச் செய்தார். சிலை உருவானது. அசப்பில் பழநி முருகன் போலவே சிலை அமைந்தது கண்டு மகிழ்ந்த அந்த செல்வந்தர், சிலையை தன் ஊரான ஆமப்பள்ளம் கொண்டு வந்தார். தனது சொத்துக்களை விற்று முருகனுக்கு ஓர் அழகிய ஆலயம் கட்டி, அதில் பழநி ஆண்டவர் சிலையை பிரதிஷ்டை செய்தார். முருகன் அன்றிலிருந்து பழநியாண்டீஸ்வரர் என்ற திருநாமத்துடன் ஆமப்பள்ளத்தில் அருள்புரியலானார்.
முருகனை ஆண்டி கோலத்தில் தரிசிப்பது, பல நன்மைகளைத் தரும். ஆண்டி கோலத்தில் தரிசனம் செய்வதால், வாழ்க்கையில் உள்ள தடைகள் விலகி, நன்மைகள் உண்டாகும்.
குடும்பத்தில் மனத்துயரங்கள் தீர இங்குள்ள முருகனை வேண்டிக் கொள்கிறார்கள். இக்கோவிலில் திருமணம், வீடுகட்டுவதற்கான தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டியும் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். இத்தலத்தில் திருமண தடை நீங்க பெண்கள் 11 கார்திகை விரதமிருந்து முருக பெருமானை வழிபட்டு, சுமங்கலி பெண்களுக்கு வஸ்திரம் தானம் அளித்தால் உடனே திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.
திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோவில்
தீபாராதனை செய்யும்போது சிவலிங்கத்தில் தெரியும் பிரகாசமான தீப ஒளி
சகலவிதமான நோய்களை தீர்க்கும் அபிஷேகத்தேன்
செங்கல்பட்டில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருவடிசூலம். இறைவன் திருநாமம் ஞானபுரீஸ்வரர். இறைவி இமயமடக்கொடி. இத்தலத்து இறைவன் திருஞானசம்பந்தருக்கு இடையன் வடிவில் காட்சி தந்தார். இதனால் இவருக்கு இடைச்சுரநாதர் என்ற திருநாமும் உண்டு.
இத்தலத்து மூலவர் சதுரபீட ஆவுடையாரின் மேல் சுயம்பு லிங்கத் திருமேனியாக எழுந்தருளி உள்ளார் . இந்த சிவலிங்கத் திருமேனியானது மரகத கல்லால் ஆனது. சிவலிங்கத் திருமேனியில் தீபாராதனை செய்யும்போது தீப ஒளி பிரகாசமாக லிங்க பாணத்தில் தெரிகின்றது. சிவலிங்கத்தில் தெரியும் ஜோதியானது பார்ப்பவரை பரவசமடையச் செய்யும். இத்தலத்தில் இறைவனுக்கு தேன் அபிஷேகம் செய்வது ஒரு சிறப்பம்சம். தேன் அபிஷேகம் செய்து அந்த தேனை பிரசாதமாக வாங்கி தினமும் உட்கொண்டு வந்தால், சகலவிதமான நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலத்துக்கு வரும் பக்தர்களில் பலர் தேன் அபிஷேக பிரசாதம் வாங்கிச் செல்கின்றனர். திருஞானசம்பந்தரும் தனது பதிகத்தின் கடைசிப் பாடலில், இத்தல பதிகத்தைப் பாராயணம் செய்து இறைவனை வழிபடுவர்கள் பிணிகள் இன்றி வாழ்வர் என்று குறிப்பிடுகிறார்.
காஞ்சிபுரம் செவிலிமேடு கைலாசநாதர் கோவில்
சிவபெருமான், ராகு – கேது ஆகிய இருவருக்கும் நவக்கிரக பதவி அளித்த தலம்
ராகு கேது தோஷ பரிகார தலம்
காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் வழியில் ஐந்து கிமீ தொலைவில் அமைந்துள்ளது செவிலிமேடு கைலாசநாதர் கோவில். மூலவர் கைலாசநாதர் 16 பட்டை கொண்ட லிங்கத் திருமேனியுடன், சோடச லிங்கமாக மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார்.
இத்தலத்து இறைவனை வழிபட்டுத்தான், ராகு கேது நவக்கிரக பதவியை அடைந்தார்கள். தல புராணங்களின் படி பாற்கடலை கடைந்து அமுதத்தை அரக்கர்கள் கையில் கிடைக்காமல் மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை மயக்கி, அமிர்தத்தை தேவர்கள் சாப்பிடும்படி செய்தார். தேவர்களுக்கு அமுதத்தை சமமாக பிரித்து படைக்கும் சமயம் சுவர்ணபானு என்கிற அசுரன் அமிர்தம் சாப்பிடும் ஆசையில் தனது உருவத்தை தேவர் போல மாற்றிக்கொண்டு, தேவர்கள் அமர்ந்திருக்கும் கூட்டத்தில் சூரிய, சந்திரனுக்கு இடையில் அமர்ந்து அமுதத்தை வாங்கி பருகி விட்டான். இவன் அசுரன் என்பதை அறிந்த சூரிய சந்திரர் விஷ்ணுவிடம் முறையிட, விஷ்ணு சுவர்ணபானுவின் தலையை வெட்டினார். அமிர்தத்தை அவன் சாப்பிட்டதால் அவன் இறக்கவில்லை, மாறாக வெட்டுப்பட்ட தலைக்கு கீழ் பாம்பின் உடலும், தலையில்லா உடலின் கழுத்தில் ஐந்து தலை பாம்பு முகமும் தோன்றியது.
இந்த இரண்டும் ராகு – கேது எனப்பட்டனர். இந்த ராகு – கேது ஆகிய இருவரும் காஞ்சிபுரம் வந்தடைந்தனர். இத்தலத்தில் ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, சிவனை வழிபட்டு தங்களின் செயலுக்கு மனமுருகி மன்னிப்பு கேட்டனர். சிவனும் அவர்களை மன்னித்தருளி ராகு – கேது ஆகிய இருவருக்கும் நவகிரக பதவி தந்தருளினார்.
ராகு – கேது இருவராலும் வழிபடப்பட்ட சுயம்பு லிங்கம் இது என்பதால்,இக்கோவில் ராகு கேது தோஷ பரிகார தலமாக விளங்குகின்றது.ராகு – கேது தோஷம், பிதுர் சாபங்கள், களத்திர தோஷம் போன்றவை நீங்க இங்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்து, அர்ச்சனை மற்றும் பரிகார பூஜைகள் செய்து வழிபட்டால் தோஷம் விலகி நற்பலன்கள் உண்டாகும்.
நரசிங்கன்பேட்டை சுயம்பு நாதர் கோவில்
மனித முக அமைப்புடன் இருக்கும் ராகு கேதுவின் அபூர்வ தோற்றம்
ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு கிரகங்களுக்குமான தோஷ நிவர்த்தி தலம்
கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில், கும்பகோணத்தில் இருந்து 16 கி.மீ .தொலைவில் அமைந்துள்ள அமைந்துள்ள தலம் நரசிங்கன்பேட்டை. இறைவன் திருநாமம் சுயம்பு நாதர். இறைவியின் திருநாமம் லோகநாயகி. ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஆலயமாகும். நரசிம்ம பெருமாள், இரணியாசுரனை வதம் செய்ததால் ஏற்பட்ட ஹத்தி தோஷத்தை நீக்குவதற்காக சிவபூஜை செய்த தலம் இது. அதனால் இத்தலத்திற்கு 'நரசிங்கபுரம்' என்ற பெயர் ஏற்பட்டது. பின்னாளில், 'நரசிங்கமங்கலம்' என்று வழங்கப்பட்ட இவ்வூர், தற்போது நரசிங்கன்பேட்டை என்றானது.
இத்தலத்தில் ஒரு தனி சன்னதியில் இராகுவும் கேதுவும் அருகருகே மனிதனை போன்ற முக அமைப்புடன் காட்சி தருவது ஒரு அபூர்வமான தோற்றமாகும். பொதுவாக ராகுவும் கேதுவும் ஒருசேர காண்பது அரிதாகும். இங்கு திங்கட்கிழமை, செவ்வாய் கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை இராகு காலத்தில் இராகு, கேதுவிற்கு ஒன்பது தீபமேற்றி பாலாபிஷேகம் மற்றும் வஸ்திரங்கள் சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் ஜாதகத்தில் உள்ள ராகு கேது தோஷங்கள் யாவும் நீங்கி விரைவில் மணப்பேறு, மகப்பேறு கிட்டும் என்பது ஐதீகம். திருமணம் ஆகாத இருபாலரும் இத்தலத்தில் 9 தீபமேற்றி 9 முறை வலம் வந்து வழிபட்டால், நினைத்தபடி மணவாழ்க்கை அமையும். மகப்பேறு வேண்டுவோர் அவசியம் தரிசிக்க மகப்பேறு கிட்டும் என்பது ஐதீகம். ராகுக்கு தனியாகவும் கேதுவுக்கு தனியாகவும் அர்ச்சனை செய்து வழிபடலாம்.
ராகு பரிகாரம் செய்ய திருநாகேஸ்வரம் செல்பவர்களும், கேது பரிகாரம் செய்ய கீழ்பெரும்பள்ளம் செல்பவர்களும் திருபாம்புரம், காளஹஸ்தி செல்பவர்களும் அவசியம் இத்தலத்தில் உள்ள ராகு, கேது பகவானுக்கு தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் ராகு, கேது தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். தாங்கள் முழுமையாக நற்பலன்களை பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோவில்
அம்பிகை சுயம்வர பார்வதி மந்திரம் ஜபம் செய்த இடம்
திருமணத் தடை நீக்கும் பரிகார தலம்
மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில், மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் ஆக்கூர். இறைவன் திருநாமம் தான்தோன்றீசுவரர். இறைவியின் திருநாமம் வாள் நெடுங்கன்னி அம்மன்.
கைலாயத்தில் சிவன் பார்வதி திருமணம் நடந்த போது, அதைக்கான தேவர்களும் முனிவர்களும் அங்கு கூடி இருந்தனர்.அதனால் பூமியின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இதனை சமன்படுத்த, அகத்தியனைத் தென்திசைக்குச் செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். அகத்தியர் தான் தென்திசை நோக்கிச் செல்வதால், சிவ பார்வதி திருமணத்தைக் காண இயலாத வருத்தத்தை கொண்டிருந்தார். ஆனால், சிவபெருமான் தானே அவரைத் தேடி வந்து அகத்திய முனிவருக்கு, பல தலங்களில் திருமணக் கோலத்தில் காட்சி தருவதாக வாக்களித்தார். அப்படி சிவபெருமான், அகத்தியருக்கு திருமணக்கோலம் காட்டிய தலங்களுள் இதுவும் ஒன்று.
இக்கோவிலில் சுவாமி சன்னதியின் வலது பக்கத்தில் அம்பாள் சன்னதி அமைந்து இருக்கிறது. அம்பாள் மணக்கோலத்தில் இங்கு அருள்பாலிக்கிறார். இக்கோவில் திருமண தடை நீங்க ஒரு சிறந்த பரிகாரத்தலமாக விளங்குகின்றது. திருமணம் வேண்டி சுயம்வர பார்வதி ஹோமம் செய்தால் திருமணம் நிச்சயம். இது அன்னை பார்வதி ஈசனை அடைய செய்த வழிபாடு ஆகும். அம்பிகை நாள்தோறும் சுயம்வரபார்வதி மந்திரம் ஜபம் செய்த இடம் ஆக்கூர் ஆகும். சிவபெருமான் அம்பிகையை ஆட்கொண்ட மாதம் பங்குனியில் வரும் வசந்த நவராத்திரி காலம் ஆதலால், இன்றும் இக்கோவிலில் வசந்த நவராத்திரியில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்று வருகிறது.
இக்கோவிலில் நடைபெறும் சுயம்வர பார்வதி ஹோமத்தில் கலந்து கொண்டால் ஜாதக, பித்ரு, சர்ப்ப, ருது, நவகிரஹ, களஸ்திர, மாங்கல்ய தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
இத்தலத்தில் குழந்தை வரம் வேண்டி சந்தான கோபாலகிருஷ்ண யாகம் செய்தல் சிறப்பு. மழலைச் செல்வத்திற்காக பௌர்ணமி தினத்தில் வெண்தாமரை பூவால் சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.
மானந்தகுடி ஏகாம்பரேசுவரர் கோவில்
ஆஞ்சநேயர் மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடிய தலம்
வாழ்வில் மங்களம் அருளும் மங்கள ஆஞ்சநேயர்
திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து, 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மானந்தகுடி. இறைவன் திருநாமம் ஏகாம்பரேசுவரர். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். முற்காலத்தில் இத்தலம் அனுமன் ஆனந்த குடி என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னர் மானந்த குடி என்றானது. இதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.
கார்த்தவீரியன் என்பவன் சிறந்த சிவபக்தன். ஒருசமயம் அவன் சிவபூஜை செய்து கொண்டிருந்தபோது, ஆஞ்சநேயர் அவனது பூஜைக்கு தொந்தரவு செய்தார். இதனால் கோபமடைந்த கார்த்தவீரியன், ஆஞ்சநேயரை சபித்துத் விட்டான். தவறை உணர்ந்த ஆஞ்சநேயர், விமோசனம் வேண்டி இத்தலத்திற்கு வந்தார். சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சிவன் அவருக்கு அம்பிகையுடன் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தருளினார். அந்த மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடினார் ஆஞ்சநேயர். எனவே இத்தலம் 'அனுமன் ஆனந்த குடி' என்றழைக்கப்பட்டு, பிற்காலத்தில் 'மானந்தகுடி' என்று மருவியது.
இக்கோவிலில் ஆஞ்சநேயருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டால் வாழ்வில் மங்களம் உண்டாகும் என்பது நம்பிக்கை . எனவே இவரை, 'மங்கள ஆஞ்சநேயர்' என்றே அழைக்கிறார்கள். இக்கோவிலில் ஆஞ்சநேயருக்கு, அமாவாசை மற்றும் மூல நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தெரியாமல் தவறு செய்து வருந்துபவர்கள், மன அமைதி கிடைக்க இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.