திருவேட்டக்குடி சுந்தரேசுவரர் கோவில்

சிவபெருமானும், முருகனும் வில்லேந்திய கோலத்தில் இருக்கும் அபூர்வ காட்சி

சிவபெருமான் வேடனாகவும், அம்பாள் தலையில் பானையை வைத்தபடி வேடன் மனைவி போலவும் காட்சி தரும் வித்தியாசமான உற்சவ மூர்த்திகள்

புதுச்சேரி மாநிலம் மாவட்டம் காரைக்காலில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருவேட்டக்குடி. இறைவன் திருநாமம் சுந்தரேசுவரர், திருமேனி அழகர். இறைவியின் திருநாமம் சௌந்தரநாயகி, சாந்தநாயகி.

கருவறையில் மூலவர் திருமேனி அழகர் என்கிற சுந்தரேசுவரர் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். உயரமான பாணத்துடன் தீபாராதனை ஒளி திருமேனியில் தெளிவாகத் தெரிகின்றபடி காட்சி அளிக்கிறார். அம்பாள் சாந்தமான கோலத்தில் இருப்பதால் இவளை சாந்தநாயகி என அழைக்கின்றனர்.

சிவபெருமான் மீனவர், வேடன் என இரண்டு வடிவங்களில் வந்து அருள் செய்த தலம் இது. இங்கு சிவபெருமானின் உற்சவர் வேட மூர்த்தியாக கையில் வில் மற்றும் சூலம் ஏந்தியும், அம்பாள் தலையில் பானையை வைத்தபடி வேடன் மனைவி போலவும் காட்சி தருவது வித்தியாசமான தரிசனம் ஆகும். சிவபெருமான் வேடராக வந்தபோது, அவருடன் முருகனையும் அழைத்து வந்தார். இதன் அடிப்படையில் இங்கு முருகனும் கையில் வில்லுடன் காட்சியளிக்கிறார். ஒரே தலத்தில் சிவபெருமான், முருகன் இருவரையும் வில்லுடன் தரிசனம் செய்வது அபூர்வம்.

இங்கு வேடன் வடிவில் சிவபெருமான் காட்சி தருவதின் பின்னணியில் மகாபாரதம் கதை ஒன்று உள்ளது. பாண்டவர்கள் வனவாசம் செய்த போது அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அவ்வாறு தீர்த்த யாத்திரை செய்த போது பல தலங்களில் சிவபெருமானை ஆராதித்தான். அப்படி வழிபட்ட தலங்களில் இத்தலமும் ஒன்று. வேதவியாசர் அர்ச்சுனனிடம், சிவனை வணங்கி பாசுபத அஸ்திரம் பெற்றால் எளிதில் துரியோதனரை வெற்றி கொள்ளலாம் என ஆலோசனை கூறினார். அதன்படி அர்ச்சுனன் இத்தலத்திற்கு வந்து சிவனை வேண்டி தவமிருந்தார். அவனது தவத்தை கலைப்பதற்காக, துரியோதனன் முகாசுரனை அனுப்பினார் .

பன்றி வடிவில் வந்த அசுரன் அர்ச்சுனனது தவத்தை கலைக்க முயன்றான். அர்ச்சுனன் அசுரனை அம்பால் வீழ்த்தினான். அப்போது ஒரு வேடன் தன் மனைவி, மகனுடன் அங்கு வந்து பன்றியை தான் வீழ்த்தியாக கூறி எடுத்துச் செல்ல முயன்றார். அர்ச்சுனன் அவரிடம் பன்றியை தர மறுத்தான். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிவபெருமான், தானே வேடன் வடிவில் வந்ததை உணர்த்தி, பாசுபத அஸ்திரம் கொடுக்கச் சென்றார். அருகிலிருந்த அம்பாள் சிவனிடம், 'ஆயுதங்களில் உயர்ந்ததான பாசுபதாஸ்திரம் பெறுவதற்கு அர்ச்சுனன் தகுதிபெற்றவன்தானா?' என்று சந்தேகம் எழுப்பினாள். சிவன் அவளிடம், 'அர்ஜுனன் மஸ்யரேகை (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன். எனவே, அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம்' என்றார். அர்ச்சுனனும் அம்பாளிடம் பணிந்து நின்று தன் ரேகைகளை காட்டினான். அதன்பின் அம்பாள் சம்மதிக்கவே சிவன் பாசுபத அஸ்திரத்தை அர்ச்சுனனிடம் கொடுத்தார். அர்ச்சுனன் தனக்கு அருள் செய்ததைப் போல இங்கிருந்து அனைவருக்கும் அருளும்படி வேண்டவே சிவபெருமான் இத்தலத்தில் எழுந்தருளினார்.

இறைவனின் திருமேனி நாதர் என்ற பெயருக்கு ஏற்ப, இத்தலத்து இறைவனை வழிபட்டால், நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுலையும் அருளுவார்.

தகவல், படங்கள் உதவி: திரு. ரமேஷ் குருக்கள், ஆலய அர்ச்சகர்

கையில் வில் மற்றும் சூலம் ஏந்தி, வேடன் வடிவில் சிவபெருமான்

கையில் வில்லுடன் முருகன்

தலையில் பானையுடன் வேடுவ மனைவி கோலத்தில் அம்பாள்

 
Next
Next

இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் கோவில்