திருமங்கலம் பூலோகநாத சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

திருமங்கலம் பூலோகநாத சுவாமி கோவில்

பிரம்ம சாஸ்தா நிலையில், மயில்மேல் அமர்ந்த முருகனின் அபூர்வ தோற்றம்

மயிலாடுதுறை வட்டத்தில் குத்தாலம் அருகே, திருமணஞ்சேரி தலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருமங்கலம். இறைவன் திருநாமம் பூலோகநாதர். இறைவியின் திருநாமம் பூலோகநாயகி. பூலோகவாசிகளுக்கு, சிவபெருமான் தனது திருமணக் கோலத்தை தரிசிக்க அருள்புரிந்த தலம் இது.

இத்தலத்தில் கருங்கல் திருமேனி கொண்ட முருகனின் உயரம் சுமார் 4 அடி, அகலம் 3 அடி. முருகன் கையில் ஜெப மாலையுடன், மயில்மேல் அமர்ந்த திருக்கோலத்தில்,வலது காலை மடித்தும் இடது காலை தொங்கவிட்டும் , 'பிரம்ம சாஸ்தா' நிலையில் காட்சி தருகிறார். கிரீடம், கழுத்தணி, மார்பில் சூலம் போன்ற தொங்கலணி போன்ற ஆபரணங்களுடன் தியான நிலையில் அருள் புரிகிறார். துன்பத்தில் இருப்பவர்கள், 'பிரம்ம சாஸ்தா' நிலையில் எழுந்தருளி இருக்கும் இத்தலத்து முருகனை, வழிபாடு செய்தால் வாழ்வில் மாற்றம் வரும்.

Read More
சாலாமேடு அஷ்டவராகி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சாலாமேடு அஷ்டவராகி அம்மன் கோவில்

உலகிலேயே வராகியம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோவில்

விழுப்புரத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் சாலாமேடு எனும் ஊரில் அஷ்டவராகி கோவில் உள்ளது. உலகிலேயே வராகியம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோவிலாகக் கருதப்படுகிறது.

திருமாலின் வராக அம்சமாக கருதப்படும் வராகியம்மன், ராஜ ராஜேஸ்வரி அம்மனின் குதிரைப்படைத்தலைவியாகவும், பத்மாவதி அம்மனின் காவல் தெய்வமாகவும், சப்தகன்னியரில் ஒருவராகவும் அறியப்படுகிறார். மகா வராகி, ஆதி வராகி, ஸ்வப்னவராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி, மகிஷாருடா வராகி, அச்வாருடா வராகி என்போர் எட்டு வராகிகள் (அஷ்டவராகி) என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த எட்டு தெய்வங்களையும் உள்ளடக்கிய கோவில் தான் சாலாமேட்டில் அமைந்துள்ளது.

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமான வராகியை வணங்கினால் பகைவரை அழித்து பக்தரை காத்திடுவாள். கொடிய ஏவல், பில்லி சூனியத்தில் இருந்தும் காப்பாற்றுவாள். வராகியை வணங்கும் எவருக்கும் அனைத்து செல்வங்களும் வந்து சேரும்.ஞாயிறு கிழமைகளில் வாராகியை வழிபட்டால் நோய்கள் தீரும். திங்கட்கிழமைகளில் வழிபட்டால் மன நல பாதிப்புகள் நீங்கும். வீடு நிலம் தொடர்பான பிரச்சினைகள்தீர செவ்வாய்கிழமைகளில் வராகியை வழிபடலாம். கடன் தொல்லைகள் தீர புதன்கிழமை வழிபடலாம். குழந்தை பேறு கிடைக்க வியாழக்கிழமை வழிபடலாம். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் வியாழக்கிழமை வழிபடலாம். வெள்ளிக்கிழமை வழிபட நினைத்த காரியம் நிறைவேறும்.

கேட்ட வரம் தரும் வராகி காயத்ரி மந்திரம்

வராகி அம்மனுக்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபிப்போருக்கு கேட்ட வரங்கள் கிடைக்கும்.

வராகி காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாமளாயை வித்மஹே

ஹல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ வராஹி ப்ரசோதயாத்

இழந்த செல்வம், சொத்து, சொந்தங்களை மீட்டுத் தரும் வராகி அம்மன்

வராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள், மண் அகலில் கருநீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முடிந்து, அதில் நல்லெண்ணெய் விட்டு தீபமிட்டு மனதார வேண்டினால் இழந்த அனைத்தையும் திரும்ப பெறலாம்.

Read More
சிறுபுலியூர் கிருபா சமுத்திரப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

சிறுபுலியூர் கிருபா சமுத்திரப் பெருமாள் கோவில்

குழந்தை வடிவில் பெருமாள் சயனக் கோலத்தில் இருக்கும் திவ்ய தேசம்

மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் அமைந்துள்ள கொல்லுமாங்குடி என்னும் இடத்தில் இருந்து, கிழக்கே 2 கி.மீ. தூரத்தில் உள்ள திவ்யதேசம் சிறுபுலியூர். மூலவர் பெயர் தலசயனப் பெருமாள். தாயார் பெயர் திருமாமகள் நாச்சியார். உற்சவர் பெயர் கிருபா சமுத்திரப் பெருமாள். சிதம்பரம் நடராசர் அருளியபடி வியாக்கிரபாதர்(புலிக்கால் முனிவர்), திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாளை வணங்கி மோட்சம் பெற்றதால் இத்தலத்திற்கு திருச்சிறுபுலியூர் எனப் பெயராயிற்று.

பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலம் ஸ்ரீரங்கம், மற்றொன்று திருச்சிறுப்புலியூர். ஸ்ரீரங்கத்தில் மிகப்பெரிய வடிவில் சயனித்திருக்கும் பெருமாள், திருச்சிறுபுலியூரில் பாலகனாக சயனத்தில் உள்ளார் என்பது இன்னொரு விசேஷம். பெருமாள் பள்ளி கொண்ட தலங்களில் இங்கு மட்டும் தான் குழந்தை வடிவில், சயன நிலையில் உள்ளார். கருடாழ்வாருக்கு பெருமாள் அபயமளித்த தலமாக இருப்பதால், பூமிக்கு கீழ் கருடன் சந்நிதி அமைந்துள்ளது. மிக உயர்ந்த இடத்தில் ஆதிசேஷனுக்கு சன்னதி உள்ளது.

மாங்கல்ய தோஷம், கால சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், பாலாரிஷ்ட தோஷம், திருமணத்தில் தடை, நவக்கிரக பரிகாரம், குழந்தையின்மை போன்ற பல பிரச்சனைகளுக்கு இது பரிகாரத் தலமாக விளங்குகின்றது. தீராத நோய், மன நல பாதிப்பு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்தால் விரைவில் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில்

மானுட உருவம் கொண்டு அம்பிகை இறைவனை பூஜை செய்த தலம்

திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கோவிந்தவல்லி. கோவிந்தவல்லி என்றால் உயிர்களுக்கெல்லாம் தலைவி என பொருள் உண்டாம். இந்த அம்பிகைக்கு சிவகாமசுந்தரி, கோவர்த்தனாம்பிகை அம்மன் போன்ற பல்வேறு பெயர்களும் உண்டு.

ஒரு சமயம் கைலாயத்தில் சிவபெருமான், பார்வதிதேவிக்கு வேதசிவாகமப் பொருளை உணர்த்திக் கொண்டிருந்தபோது, அம்பிகையின் கவனம் மாறும்படியாக காமதேனு அவ்வழியே செல்ல, தேவியின் கவனம் அந்த காமதேனு மீது மாறுவதை உணர்ந்து கோபமடைந்த சிவபெருமான், அம்பிகையை நோக்கி 'பூலோகத்தில் திண்ணக்கோணம் அடைந்து பங்குனி மாத வளர்பிறையில் வரும் வசந்த நவராத்திரி என்னும் ஒன்பது ராத்திரி நாள்கள் நீ தவமிருக்கும்போது, நான் பசுவாக உனக்கு காட்சியளிப்பேன். அதன் பின் என்னை வந்து நீ அடைவாயாக' என்று பார்வதி தேவிக்கு சாபமிட்டு அதற்கான விமோசனத்தையும் அருளினார். அதன்படி மானுட உருவம் கொண்டு இடையர் குலத்தில் அம்பிகை பிறந்து, சிவபெருமானை நோக்கி தவமிருந்து வரம் பெற்று மீண்டும் அடைந்தது இந்தக் கோவிலில்தான்.

சிவபெருமானால் சாபம் விட்டு, மானுட வேடம் பூண்டு, பின்னர் தவமிருந்து தேவி அவரிடம் இணைந்த திருக்கோயில் என்பதால், பங்குனி மாத வளர்பிறையில் வசந்த நவராத்திரி உற்சவம் இறைவிக்கு நடத்தப்படுகிறது.


Read More
உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில்

சரசுவதி தேவி வீணையை வித்தியாசமாக ஏந்தி இருக்கும் அரிய காட்சி

தேனியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள உத்தமபாளையம் என்ற ஊரில், சுருளியாற்றங்கரையில் அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காளத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. ஆந்திர மாநிலத்தில் இருக்கும் காளஹஸ்திக்கு இணையான தலம் என்பதால், இக்கோவிலை. பக்தர்கள் தென்னகத்து காளகஸ்தி என்று அழைக்கின்றனர்.

இக்கோவிலில், இறைவி ஞானாம்பிகை சன்னதியின் பின்பக்கம் சரசுவதி தேவி, மூன்றரை அடி உயரத் திருமேனியுடன், சற்று வித்தியாசமான தோற்றத்தில் எழுந்தருளி இருப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.பொதுவாக சரசுவதி தேவி, வீணையை தன் மடியிலிருத்தி தன் கை விரல்களால் அதை மீட்டும் நிலையில் காட்சி தருவார். ஆனால், இக்கோவிலில் சரசுவதி தேவி வீணையை தன் இடது கரத்தில் செங்குத்தாக, தம்புராவை வைத்திருப்பது போல் காட்சி அளிப்பது, வேறு எந்த கோவிலிலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்.

Read More
திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்

ஆலயத்துளிகள் வாசகர்களுக்கு,

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

மகாலட்சுமி இழந்த தன்னுடைய செல்வங்களை மீட்டெடுத்த தலம்

மகாலட்சுமிக்கு வெண்ணெய் காப்பு சாற்றப்படும் தனிச்சிறப்பு

திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம், வேதத்தின் பெயரால், சாமவேதீசுவரர் என்று அழைக்கப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இறைவியின் திருநாமம் லோகநாயகி. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவாரம் வைப்பு தலம் இது.

இக்கோவிலில் கஜலட்சுமி தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கிறாள். கஜலட்சுமி அதாவது திருமகள் இத்தலத்து இறைவனை பூஜை செய்து இழந்த தன்னுடைய செல்வங்களை மீட்டெடுத்தாள். மகாலட்சுமி தன்னுடைய மங்களங்களை திரும்ப அடைந்ததால், இத்தலத்துக்கு திருமங்கலம் என்று பெயர் ஏற்பட்டது. பொதுவாக ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு செய்து வழிபடுவது வழக்கம். இக்கோவிலில் கஜலட்சுமிக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபடுவது ஒரு தனி சிறப்பாகும். இந்த கஜலட்சுமிக்கு வெண்ணெய் காப்பு செய்து வழிபட்டால், இழந்த செல்வங்களை மீட்டெடுக்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
படவேடு சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

படவேடு சுப்பிரமணிய சுவாமி கோவில்

முருகப்பெருமானுக்கு தேவசேனாபதி என்ற பட்டம் சூட்டிய தலம்

முருகப்பெருமான் மயில் மீது நின்றபடி இருக்கும் அபூர்வக் காட்சி

திருவண்ணாமலை அடுத்துள்ள படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் கோவில் அருகே உள்ள குன்றின் மீது சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. படை+வீடு = படைவீடு படைகள் தங்கி இருந்த இடம். அன்னை ரேணுகாதேவி இத்தலத்தில் படையுடன் வந்து மன்னனுக்கு அருள்பாலித்ததால், படைவீடு எனவும், இராச கம்பீர சம்புவராயர் எனும் அரசன் தனது படைகளுடன் இத்தலத்தில் தங்கி போரிட்டதால் படைவீடு எனவும் பெயர் பெற்று, நாளடைவில் படவேடு என பெயர் மருவி வந்துள்ளது.

முருகப்பெருமானுக்கு தேவசேனாபதி என்ற மணிமகுடம் சூட்டிய படைவீடு

படவேடு ரேணுகாதேவி ஆலயத்துக்கு எதிரேயுள்ள குன்றில் வந்தமர்ந்த முருகப்பெருமானுக்கு, அந்தணர்கள் வேத முழக்கம் செய்ய தேவேந்திரன் அபிஷேக ஆராதனை செய்து சர்வ உபச்சாரங்களையெல்லாம் நிகழ்த்தி, சிவசுப்பிரமணியனுக்கு தேவசேனாதிபதி என்றபடி மணிமகுடம் சூட்டி பட்டாபிஷேகம் நடத்தினான்.

முருகப்பெருமான் மயில் மீது நின்றபடி இருக்கும் அபூர்வக் காட்சி

இக்கோவிலில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக கிழக்கு பார்த்து எழுந்தருளி இருக்கிறார். பொதுவாக முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் அல்லது மயிலுடன் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார். ஆனால், இக்கோவிலில் வடக்கு முகம் பார்த்து தோகை விரிக்காமல் நிற்கும் மயில் மீது முருகன் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பது அபூர்வமான ஒன்றாகும். அந்த மயில் பாம்பைக் கவ்வியிருக்க, பாம்பு படம் விரித்து ஆடாமல் தலை சாய்ந்து தொங்கியபடி இருப்பது

Read More
தஞ்சாவூர் பிரதாப வீரஆஞ்சநேயர் (மூலை அனுமார்) கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

தஞ்சாவூர் பிரதாப வீரஆஞ்சநேயர் (மூலை அனுமார்) கோவில்

மூல நட்சத்திர நாட்களில் வழிபட்டால் படிப்பில் தடை, திருமணத் தடை ஆகியவற்றை தகர்த்தெறியும் மூலை அனுமார்

ஆஞ்சநேயர் குழந்தையாக தன் தாயின் மடியில் அமர்ந்திருக்கும் அபூர்வ சிற்பம்

தஞ்சை பெரியகோவிலில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில், மேல வீதியும் வடக்கு ராஜ வீதியும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது, பிரதாப வீரஆஞ்சநேயர் (மூலை அனுமார்) கோவில். மராட்டிய மன்னர் பிரதாப சிம்மனின் (கி.பி.1739-1763) காலத்தில், அவரால் இக்கோவில் கட்டப்பட்டது. கோவில் அமைந்த மேல வீதியும், வடக்கு ராஜவீதியும் இணையும் இடம், வடமேற்கு வாயுமூலை ஆகும். வாயுவின் மைந்தன் அனுமன், வடமேற்கு வாயுமூலையில் நின்றபடி அருள்பாலிப்பதால், இந்த அனுமனை மூலை அனுமார் என்று சொல்கிறார்கள்.

தஞ்சாவூர் மன்னன் பிரதாபசிம்மன், பிரதாப வீரஆஞ்சநேயரை தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தான். ஒருமுறை எதிரிப் படையினர் நாட்டை முற்றுகையிட்டபோது, பிரதாப சிம்மராஜா மூலை அனுமாரை வேண்டினார். ஆஞ்சநேயர் வானர சேனைகளை உருவாக்கி எதிரிநாட்டு படையை ஓட ஓட விரட்டினார். தன் வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் பிரதாபசிம்மன் ஆஞ்சநேயருடன் ஐக்கியமானான். எனவேதான் இவருக்கு பிரதாப வீரஆஞ்சநேயர் என்ற பெயர் ஏற்பட்டது.

முகலாய படையெடுப்பின் போது காஞ்சிபுரத்தில் இருந்த பங்காரு காமாட்சி அம்மன் சிலை தஞ்சைக்கு எடுத்து வரப்பட்டது. சிலைக்கு அடைக்கலம் தர அனைவரும் பயந்தபோது, இந்த தலத்திலேயே சிலையை மறைத்து வைத்திருந்தனர். இராம பக்தர்களின் கனவில் தோன்றிய அனுமான், பங்காரு காமாட்சி அம்மனுக்கு தன் கோவில் அருகிலேயே கோவில் அமைக்கும்படி ஆணையிட்டார்.

படிப்பில் தடை, திருமணத்தடை, வியாதிகள், தொடர்ந்து துன்பங்கள் நேர்ந்தால் மூலை அனுமாரை, மூல நட்சத்திர நாட்களில் வழிபடுவது சிறப்பு. அன்று 18 அகல் விளக்குகள் ஏற்றி 18 முறை மவுனமாக கோவிலை வலம் வந்தால், குறைகள் விலகி நலம் பயக்கும்.

18 அமாவாசைகள் 18 முறை வலம் வந்து மூலவருக்கு 18(அ)56(அ)108 எலுமிச்சை பழங்களான மாலையை சாற்றி வழிபட்டால் எப்பேர்ப்பட்ட கிரக தோஷமும் வாஸ்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். மார்கழி மாதம் 108 முறை வலம் வந்து, மூலை அனுமாரை வழிப்பட்டால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும்.

இக்கோவிலில் அனுமன் ஜெயந்தி அன்று 18 அபிஷேகப் பொருட்களை பக்தர்கள் கொண்டு வந்து கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அனுமன் ஜெயந்தி அன்று பக்தர்கள் அவரவர் இல்லத்தில் பிரார்த்தனை செய்து எடுத்து வந்த மஞ்சள் பூசிய தேங்காயை, கோவில் உட்பிரகாரத்தில் தீபமேற்றி வழிபடும் இடத்தில் உள்ள அனுக்கிரக ஆஞ்சநேயர் முன் வேண்டி சிதறு தேங்காய் எறிந்து பிரார்த்தனை காணிக்கையாக ரூ.18 உண்டியலில் செலுத்தி வழிபாடு செய்தால், எண்ணியவை எண்ணியபடி நடைபெறும் என்பது ஐதீகம்.

இக்கோவிலில் மூலை அனுமாரின் வாலில் சனீஸ்வரபகவான் உட்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். சனி தோஷம் உட்பட நவக்கிரகங்கள் தோஷங்கள் மற்றும் வாஸ்து தோஷங்கள் ஆகியவற்றை இவர் நீக்குகிறார்.

ஆஞ்சநேயர் குழந்தையாக இருந்த போது, தன் தாயின் மடியில் அமர்ந்திருந்த சிற்பம் இந்தக் கோவில் கோபுரத்தில் அமைந்துள்ளது. இது நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாத அபூர்வ சிற்பமாகும்.

இது தவிர, 12 ராசிகள் அடங்கிய ராசி மண்டல சிற்பமும் இருக்கிறது. அவரவர் ராசி முன்பு நின்று மூலை அனுமாரிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால், பிரார்த்தனைகள் நிறைவேறும்.

Read More
குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில்

குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில்

ரிஷப வாகனத்தில் சிவன் பார்வதியையும், 63 நாயன்மார்களையும் ஒருசேர தரிசிக்கக்கூடிய அபூர்வ காட்சி

துவார பாலகர்கள் சிரித்த வண்ணம் இருக்கும் அரிய தோற்றம்

புதுக்கோட்டை – கொடும்பாளூர் – மணப்பாறை சாலையில், புதுக்கோட்டையில் இருந்து, 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில். மலை குன்றின் அடிப் பகுதி, மேல் பகுதி என இந்த மலையை சுற்றி மட்டும் மொத்தம் 4 கோவில்கள் உள்ளன. இங்கு பாறைகளிலே செதுக்கப்பட்ட சிற்பங்கள் மெய் சிலிர்க்க வைக்கின்றன.

பொதுவாக எல்லா சிவன் கோயில்களும் 63 நாயன்மார்களின் சிற்பங்கள் இறைவன் கருவறை சுற்றுப்பிரகாரத்தில் அமைந்திருக்கும். அதுவும் ஒரே நேரத்தில் காண முடியாத வண்ணம், அவர்கள் நீண்ட வரிசையில் அமைந்திருப்பார்கள். ஆனால் இந்த கோவிலில் 63 நாயன்மார்களின் சிற்பங்கள் கருவறை சுற்றுப்பிரகாரத்தில் இல்லை. இதற்கு பதிலாக சுற்றுப்புற பிரகாரத்தில் நின்று மலையைப் பார்த்தால் 63 நாயன்மார்களின் வடிவங்களும் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு நடுவில் ரிஷப வாகனத்தின் மேல் சிவபெருமான், பார்வதி அமர்ந்து இருக்கிறார்கள். சிவபெருமான் பார்வதியையும், 63 நாயன்மார்களையும் ஒருசேர ஒரே நேரத்தில் பார்க்கும் வகையில் வடிவமைத்திருப்பது, நினைந்து, நினைந்து வியக்கும் வண்ணம் ஓர் அற்புத இக்காட்சியாக அமைந்துள்ளது. இப்படி ஒரே பார்வையில் அத்தனை நாயன்மார்களையும், ரிஷபத்தில் அமர்ந்த சிவன் பார்வதி என அனைவரையும் பார்க்க முடிவது தமிழகத்தில் இந்தக் கோவிலில் மட்டும்தான். இது ஒரு சிற்ப அதிசயம் ஆகும்.

இக்கோவில் வாயிலில் இரண்டு துவார பாலகர்கள் சிற்பங்கள் உள்ளன. இந்தத் துவார பாலகர்கள் சிரித்த வண்ணம் உள்ளனர். துவார பாலகர்கள் சிரித்த வண்ணம் இருப்பது போன்ற அமைப்பு, வேறு எங்குமே கிடையாது. இங்கு உள்ள துவாரபாலகர் சிலைகள் மட்டுமே சிரித்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்ற துவாரபாலகர்களின் சிற்பங்கள் இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள துவாரபாலகர் சிலைகள், குகைகளை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளன.

Read More
சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்

சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்

சங்கு, சிப்பி, கிளிஞ்சல்களாலான அபூர்வ வெள்ளை நிற நந்தி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகிலுள்ள, சுசீந்திரத்தில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோவில். இக்கோவிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், ஒன்றின் மேல் ஒன்றாக, சிவலிங்க வடிவில் தாணுமாலயன் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்கள்.

இக்கோவில் கோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால் மிகப்பெரிய வெள்ளை நிற நந்தியை நாம் காணலாம்.இந்த நந்தியானது 13 அடி உயரமும் 21 அடி நீளமும் 6 அடி அகலமும் கொண்டது. இந்த நந்தி வெள்ளை நிற சுண்ணாம்பு, சங்கு, சிப்பி, கிளிஞ்சல்கள் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்டதாகும். இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நந்திகளில், இந்த நந்தியும் ஒன்றாகும்

Read More
திருமீயச்சூர் மேகநாதர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருமீயச்சூர் மேகநாதர் கோவில்

முகத்தின் ஒரு பக்கத்தில் கோபத்தையும், மறுபக்கத்தில் நாணத்தையும் வெளிப்படுத்தும் அபூர்வ அம்பிகை

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையின் அருகிலுள்ள பேரளம் ரயில் நிலையத்திலிருந்து, மேற்கே ஒரு கி.மீ. தொலைவில் அமைந்து உள்ள தேவார தலம் திருமீயச்சூர் மேகநாதர் கோவில். இறைவியின் திருநாமம் லலிதாம்பிகை.

திருமீயச்சூர், ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் நோன்றிய திருத்தலம். இங்குதான் ஸ்ரீ ஹயக்ரீவர், அகத்திய முனிவருக்கு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்தார். அகத்தியரும் ஒரு பௌர்ணமி நாளன்று ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தினால் திருமீயச்சூர் லலிதாம்பிகையை வழிபட்டதுடன், ஸ்ரீலலிதா நவரத்தின மாலை என்ற பாடலையும் தமிழில் இயற்றி அம்பிகைக்கு அர்ப்பணித்தார். இத்தலத்துக்கு வந்து, லலிதா சகஸ்ரநாமத்தையும், லலிதா நவரத்னமாலையையும் படிப்பவர்களுக்கு அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும்.

இக்கோவில் விமானத்தின் கீழ் தெற்கில் ஷேத்திரபுராணேச்வரர், பார்வதியின் முகவாயைப் பிடித்துச் சாந்தநாயகியாக இருக்கச் சொல்லி வேண்டுவது போன்ற வடிவில் காணப்படும் சிற்ப அழகை வேறு எந்தக் கோவிலிலும் காண்பது அரிது. இந்தச் சிற்பத்தை ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால் அம்பாள் கோபமுடன் இருப்பது போலத் தோன்றும். இதே சிற்பத்தை மறுபக்கம் சென்று பார்த்தால், அம்பாள் சாந்த சொரூபியாக நாணத்துடன் காணப்படுவாள்.இந்த கோவிலில் நாம் அவசியம் தரிசிக்க வேண்டிய அபூர்வமான சிற்பமாகும் இது. இப்படி அம்பிகை இரு வேறு முக பாவணையை வெளிப்படுத்துவதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்ச்சி உள்ளது.

ஒரு சமயம் சிவபெருமானிடம் பெற்ற சாபத்தினால், சூரிய பகவானின் திருமேனி கருகி போனது. சூரியன், சாப விமோசனம் பெற திருமீயச்சூரில் 7 மாத காலம் கடுந்தவம் புரிந்தும் மேனி நிறம் மாறவில்லை. சூரியன் வாய்விட்டு அலறி இறைவனை அழைக்க, இறைவனோடு தனித்திருந்த பார்வதி, சூரியனின் அலறலினால் தன்னுடைய ஏகாந்தத்துக்கு ஏற்பட்ட இடையூரால் சூரியன் மேல் கோபம் அடைந்தாள்.அவனுக்கு சாபம் அளிக்க முற்பட்டாள். முன்னரே சாபத்தால் வருந்திக் கொண்டிருக்கும் சூரியனை மேலும் வருத்த வேண்டாம் என்றும் அமைதி கொள்ளுமாறும் சிவபெருமான் கூற, பார்வதி சாந்தநாயகி ஆனாள். இந்த நிகழ்ச்சியின் காரணமாகத்தான், அம்பிகை தன்னுடைய முகத்தில் இருவேறு பாவங்களைக் கொண்டிருக்கிறார்.

Read More
திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்
Alaya Thuligal Alaya Thuligal

திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்

அபய முத்திரையுடன் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தியின் வித்தியாசமான தோற்றம்

திருச்சியில் இருந்து 23 கி.மீ. தொலைவிலும், லால்குடியில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள தலம் திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம், வேதத்தின் பெயரால் அமைந்துள்ள ஒரே தலம் திருமங்கலம். நான்கு வேதங்களில் ஒன்றான சாமவேதத்தைக் கொண்டு இங்குள்ள இறைவன் சாமவேதீசுவரர் என்றழைப்பது தனிச்சிறப்புடையது. இறைவியின் திருநாமம் லோகநாயகி. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவாரம் வைப்பு தலம் இது.

பொதுவாக சிவாலயங்களில், தட்சிணாமூர்த்தி சிவமுத்திரையுடன்தான் காட்சியளிப்பார். ஆனால், ஆனால், இக்கோவிலில் அவருடைய தோற்றம் வித்தியாசமாக இருக்கின்றது. இங்கு தட்சிணாமூர்த்தி தனது வலது கரத்தில் அபய முத்திரை காட்டி பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். இதனால் இங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு சகல தோஷங்களும் நீங்கப் பெற்று, குழந்தைகளுக்கு கல்விச் செல்வமும் குழந்தை இல்லாதவரகளுக்கு குழந்தைப் பாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் வியாழக்கிழமையன்று எண்ணெய், பால், தேன் அபிஷேகம் செய்து தயிர் சாதம், சுண்டல் நெய்வேத்தியம் செய்து 11 நெய் தீபமிட்டு விளக்கேற்ற வேண்டும். 11 வாரங்கள் வியாழக்கிழமைகளில் விரதமிருந்தால், குழந்தைப் பேறு கிடைக்கும் பக்தர்களின் நம்பிக்கை.

Read More
கும்பகோணம் தசாவதாரப் பெருமாள் கோவில் (ஸ்ரீ சரநாராயணப் பெருமாள் சன்னதி)
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கும்பகோணம் தசாவதாரப் பெருமாள் கோவில் (ஸ்ரீ சரநாராயணப் பெருமாள் சன்னதி)

பெருமாள் சங்கு, சக்கரத்தினை கை மாற்றி ஏந்தி இருக்கும் அபூர்வ காட்சி

பெருமாளின் பின்புறம் தசாவதார மூர்த்திகள் இருக்கும் அரிய காட்சி

கும்பகோணம் நகரில் பெரிய கடைவீதியில் அமைந்துள்ளது சரநாராயணப்பெருமாள் கோவில். 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில், வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவில் ஆகும். நம்மாழ்வார் திருமங்கை ஆழ்வார்களால் ஸ்ரீ சாரங்கபாணியுடன் இணைந்து, மங்களாசாசனம் செய்யப் பெற்றது.

இக்கோவில் மூலவர் சரநாராயணப் பெருமாள். சிரித்த முகத்துடன், ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாக காட்சி தருகிறார். பொதுவாக பெருமாள் வலதுகையில் சக்கரத்தையும் இடது கையில் சங்கையும் ஏந்திருப்பார். ஆனால் இத்தல பெருமாள், சற்று வித்தியாசமாக, வலது கையில் சங்கையும், இடது கையில் சக்கரத்தையும் ஏந்தி காட்சி தருகிறார்.

சன்னதியில் சரநாராயண பெருமாளின் பின்புறம், மகாவிஷ்ணுவின் தசாவதார மூர்த்திகள் காணப்படுகின்றனர். தசாவதார மூர்த்திகளின் தனித்தலமாக இக்கோவில் போற்றப்படுகிறது. அதனால்தான் இக்கோவிலை தசாவதாரக் கோவில் என்றும் அழைக்கின்றனர்.

இக்கோவில் கடக ராசிக்காரர்களுக்கு உரிய கோவிலாகவும், நவக்கிரக பரிகாரத்தலமாகவும் விளங்குகின்றது. வெள்ளிக்கிழமைகளில் இக்கோவிலை வழிபடுவது மிகவும் சிறந்தது.

Read More
திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோவில்

யானை மேல் முருகன் அவர்ந்திருக்கும் அபூர்வ காட்சி

காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில், 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருமாகறல். இறைவன் திருநாமம் திருமாகறலீஸ்வரர். இறைவியின் திருநாமம் திரிபுவனநாயகி.

இத்தலத்தில் முருகப்பெருமான், யானை மீது அமர்ந்து காட்சி அளிப்பது நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும். திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. இந்திரன் முருகனுக்கு திருமணப் பரிசாக, தனது பட்டத்து யானையான ஐராவதம் என்ற வெள்ளை யானையை கொடுத்தான். புதுமணத்தம்பதிகளை வெள்ளை யானையில் அமரச் செய்து அக்காட்சியை கண்ணார கண்டு மகிழ்ந்தான். மகாவிஷ்ணுவும் இக்காட்சியை காண விரும்ப முருகன், இத்தலத்தில் வெள்ளை யானை மீது அமர்ந்து காட்சி தந்தார்.

Read More
தேவன்குடி கோதண்ட ராமர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

தேவன்குடி கோதண்ட ராமர் கோவில்

கண் கொடுத்த கோதண்டராமர்

தென் இந்தியாவின் அயோத்தி என்று போற்றப்படும் தலம்

மன்னார்குடிக்கு வடகிழக்கே, காவிரியின் துணை நதி கோரையாற்றின் தென்கரையில் உள்ள தேவன்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது கோதண்ட ராமர் கோவில்..

முற்காலத்தில் தேவர்கள் இந்த கிராமத்தில் வசித்து வந்ததால் இவ்வூர் தேவன்குடி என்னும் பெயரை பெற்றதாகவும். இங்கு இருக்கும் சிவனை இந்திரன் இந்திரலோகத்தில் இருந்து வந்து பூஜித்ததால் இங்கு அருள் பாலிக்கும் சிவன், இந்திரபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் என்றும் தல புராணம் கூறுகின்றது.

ராமாவதாரத்தில் தென்னகம் நோக்கிய பயணத்தில் ஸ்ரீராமர், இளையபெருமாளோடு சீதையைத் தேடி வந்த இடங்களுள் தேவன்குடியும் ஒன்று. இக்கோவிலில். ஸ்ரீசீதா, லட்சுமண, பரத, சத்ருகன, அனுமன் சமேதமாக ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி அருள்பாலித்து வருகிறார். தென் இந்தியாவின் அயோத்தி என்று இத்தலம் போற்றப்படுகிறது.

முற்காலத்தில் இந்த ராமர் கோவிலில் கண் தெரியாத ஒருவர் தினமும் பிரதட்சணம் செயது வந்தார். ஒருநாள் இவ்வாறு வலம் வருகையில் திடீரென்று கண் பார்வை திரும்ப பெற்றதால், தன்னுடைய நிலங்களை இந்த கோவிலுக்கு நன்றியுடன் கொடுத்து விட்டார். அதனால் இந்த ராமருக்கு 'கண் கொடுத்த கோதண்டராமர்' என்ற பெயர் உண்டாயிற்று.

இந்த கோவில் மணி சுமார் 800 கிலோ எடை கொண்டது. மிகப்பெரிய இந்த மணியின் ஒலி அக்கம்பக்கத்து ஆறு ஏழு கிராமங்களுக்குக் கேட்குமாம்.

Read More
திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்

திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்

பைரவர், காலபைரவர் ஆகிய இருவரும் ஒன்றாக இருக்கும் அபூர்வ காட்சி

விஷக்கடிக்கு நிவாரணம் அளிக்கும் விபூதி பிரசாதம்

திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ளது திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம், வேதத்தின் பெயரால் அமைந்துள்ள ஒரே தலம் திருமங்கலம். நான்கு வேதங்களில் ஒன்றான சாமவேதத்தைக் கொண்டு இங்குள்ள இறைவன் சாமவேதீசுவரர் என்றழைப்பது தனிச்சிறப்புடையது. இறைவியின் திருநாமம் லோகநாயகி. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவாரம் வைப்பு தலம் இது.

பொதுவாக சிவன் கோவில்களில் பைரவர் அல்லது காலபைரவர் எழுந்தருளி இருப்பார்கள். ஆனால், இக்கோவிலில், கிழக்கு பிரகாரத்தில் பைரவரும், காலபைரவரும் சேர்ந்து எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும். காலபைரவர் தனது திருக்கரங்களில் ஆயுதங்கள் ஏந்தி காட்சி தருகிறார். இந்த இரட்டை பைரவர்களுக்கு அர்த்த ஜாம பூஜை செய்த பிறகு தரப்படும் விபூதி பிரசாதமானது, விஷக்கடியால் ஏற்படும் துன்பங்களை நிவர்த்தி செய்கிறது. மேலும் பில்லி, சூனியம், ஏவல் போன்ற பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்கின்றது.

Read More
இராஜபதி கைலாசநாதர் கோவில்

இராஜபதி கைலாசநாதர் கோவில்

லிங்க வடிவில் எழுந்தருளி இருக்கும் நவக்கிரகங்கள்

தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் தலம்

திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் உள்ள குரும்பூர் என்ற ஊரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இராஜபதி கைலாசநாதர் கோவில். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. இச்சிவாலயம் நவகைலாயங்களில் ஒன்றாகவும், கேது தலமாகவும் போற்றப்படுகிறது. இத்திருக்கோயிலை வழிபடுவது கும்பகோணம் அருகில் உள்ள, கேதுத் தலமான கீழப்பெரும்பள்ளம் திருக்கோயிலை வழிபடுவதற்கு சமமாகும் என கூறப்படுகிறது. காளஹஸ்திக்கு இணையான தலம் என்பதால் இத்தலம், தென் காளஹஸ்தி என்று போற்றப்படுகின்றது. இத்தலத்தில் கண்ணப்ப நாயனாருக்கு தனி சன்னதி உள்ளது.

அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் தன் குருவான அகத்தியரின் உதவியுடன் சிவபெருமானை நேரில் தரிசித்து, அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்று விரும்பினார். தனது குருவிடம் அதற்கான வழிமுறைகளைக் கேட்டபோது அவர், தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை மிதக்க விட்டு அவை ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு மூலம் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைக்கும் என்றும் அதன் மூலம் முக்தி அடையலாம் என்று தனது சீடருக்கு உபாயம் சொன்னார். உரோமச முனிவர் 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டு, அந்த மலர்களை தொடர்ந்து சென்றார். அந்த தாமரை மலர்கள் ஒதுங்கிய தலங்களில் வழிபட்டு, உரோமச முனிவர் முக்தி அடைந்தார். அம்மலர்கள் கரை ஒதுங்கிய இடங்கள் தான் இப்போது நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உரோமச முனிவர் மிதக்க விடப்பட்ட தாமரை மலர்களில் எட்டாவது மலர் மதுரை சந்திரகுல பாண்டிய மன்னரின் அரண்மனை இருந்த இப்பகுதியில் ஓதுங்கியது. ராஜாவின் அரண்மனை இங்கு இருந்ததால் இவ்வூர் இராஜபதி எனப் பெயர் பெற்றது.

தாமிரபரணி நதிக்கரையில் உள்ள 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தென்திருப்பேரை 8. ராஜாதிபதி 9. சேர்ந்தபூமங்கலம் ஆகிய கோவில்கள், நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது.

பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரக சன்னதி இருக்கும். இங்கு நவ லிங்க சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இப்படி நவகிரகங்கள் லிங்க வடிவில் எழுந்தருளி இருப்பது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும். இந்த லிங்க வடிவில் இருக்கும் நவகிரகங்களுக்கு பக்தர்கள் தம் கைகளாலேயே அபிஷேகம் செய்யலாம் என்பது மேலும் ஒரு சிறப்பாகும்.

Read More
பாளையங்கோட்டை முப்பிடாதி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

பாளையங்கோட்டை முப்பிடாதி அம்மன் கோவில்

மூன்று முகம் கொண்ட முப்பிடாதி அம்மன்

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது முப்பிடாரி அம்மன் கோவில்.

மகிசாசுரனை அழிக்க, அம்பிகை எட்டு பெண் குழந்தைகளாக நாகலோகத்தில் பிறந்தாள். அவர்களில் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தைதான் முப்பிடாதி. அஷ்ட காளியரில் மூன்றாவதாக மூன்று தலைகளுடன் அவதரித்தவள் முப்பிடாதி அம்மன். பிடரி என்றால் தலை என்று பொருள். மூன்று தலைகள் இருந்தமையால் முப்பிடரி என்று அழைக்கப்பட்ட இந்த அம்மன் பின்னர் முப்பிடாரி என்று அழைக்கப்படலானார். இதுவே மருவி முப்பிடாதி என்றானது. இந்த அம்மனுக்கான கோவில் திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் அமைந்துள்ளன.

இந்த அம்மனுக்கு மூன்று முகம் தோன்றியதற்கு பின்னணியில் ஒரு ஒரு புராண நிகழ்ச்சி உள்ளது. இந்த அம்மன் சிவனை நோக்கி தவம் செய்து சிவனிடம் 103 சிவலிங்கம் பெற்றார். பின்பு ஒரு நாள் சிவனடியார்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்ய பால் கொண்டு செல்லும் போது, அதனை வாங்கி பருகினாள். இதனால் கோபம் அடைந்த சிவன் தான் வழங்கிய சிவலிங்கத்தை, திருமாலை வாங்கி வர வேண்டினார். திருமாலும் வாங்க வரச் சென்றார். இதனை அறிந்த அம்பிகை மூன்று சிவலிங்கத்தை விழுங்கினார். ஆகையால் அம்மனுக்கு மூன்று முகம் தோன்றியது, இதனால் அம்மனுக்கு முப்பிடாரி அம்மன் என்று பெயர் வந்தது.

Read More
இடுகம்பாளையம் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

இடுகம்பாளையம் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவில்

பிரமாண்ட திருமேனியுடன் நம்மை நேர்பார்வை கொண்டு ஆசீர்வதிக்கும் அபூர்வ ஆஞ்சநேயர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில், இடுகம்பாளையத்தில் அமைந்துள்ளது ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவில். இக்கோவில் 700 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இந்தக் கோவிலுக்கு 'ஸ்ரீ அனுமந்தராயசாமி கோயில்' என்ற பெயரும் உண்டு. கிருஷ்ணதேவராயரின் ராஜகுருவான ஶ்ரீவியாசராய தீர்த்தர் இந்த இடத்துக்கு வருகை புரிந்தபோது, இங்கிருந்த பாறையொன்றில் ஆஞ்சநேயர் தியானம் செய்வது போன்ற காட்சி தெரிந்தது. எனவே, அந்தப் பாறையில் ஜெயமங்கள ஆஞ்சநேயரின் திருவுருவத்தைத் தாமே பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

இக்கோவிலில், ஜெயமங்கள ஆஞ்சநேயர் வேறெங்கும் காண இயலாத அபூர்வத் தோற்றத்தில் காட்சி தருகிறார். ஜெயமங்கள ஆஞ்சநேயர். எட்டு அடி உயரம் கொண்ட பாறையில் புடைப்புச் சிற்பமாக, ஆறு அடி உயரமும், ஐந்து அடி அகலமும் கொண்டு மிக பிரமாண்டமாக, நம்மை நேருக்கு நேர் பார்த்து ஆசீர்வதிக்கும் கோலத்தில் கம்பீரமாகக் காட்சிதருகிறார்.

ஆஞ்சநேயரின் திருவடிகளில் தாமரை மலர் போன்ற தண்டை அணிந்தும், வலக் கரத்தில் சுதர்சன சக்கரம் பொறிக்கப்பட்டு ஆசீர்வாதம் செய்யும் நிலையிலும், இடக் கரத்தில் சவுகந்திக மலரை ஏந்தியபடி தொடையில் ஊன்றிக் காட்சி தருகிறார். ஆஞ்சநேயரின் வால், ஆஞ்சநேயரின் தலைப்பகுதிக்குப் பின்புறம் இடப்புறமாக மேல் நோக்கி நீண்டிருக்க, வாலின் நுனியில் மணி கட்டப்பட்டிருக்கிறது. ஆஞ்சநேயரின் வாலுக்கு நவகிரகங்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக ஐதீகம். வாலின் நுனியில் உள்ள மணியை மானசீகமாக வழிபட்டு வேண்டிக்கொண்டால், நவகிரக தோஷங்கள் விலகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஜெயமங்கள ஆஞ்சநேயரை புத்திரப்பேறு கிடைக்கவும், திருமணத் தடை நீங்கவும் பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

Read More
திருப்பனையூர் சௌந்தரேஸ்வரர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

திருப்பனையூர் சௌந்தரேஸ்வரர் கோவில்

துணையிருந்த விநாயகர் (கரிகால சோழன், தன் அரசினை மீட்க உதவிய விநாயகர்)

திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் உள்ள ஆண்டிப்பந்தலில் இருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருப்பனையூர். இறைவன் திருநாமம் சௌந்தரேஸ்வரர், அழகியநாதர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி.

இக்கோவிலில் தனிச்சன்னதியில் துணை இருந்த விநாயகர் எழுந்தருளி இருக்கிறார். இந்த விநாயகர் இப்பெயரை பெறுவதற்கு பின்னால், சோழ நாட்டு வரலாற்று நிகழ்ச்சி ஒன்று உள்ளது.

முற்காலச் சோழர்களில் மிகவும் புகழ் பெற்றவன் கரிகாலச் சோழன். இவன் சிறியவனாக இருக்கும்போது தாயாதிகளின் சூழ்ச்சியால் அவனது தந்தை கொல்லப்பட்டார். தந்தையை கொன்ற தாயாதிகள் கரிகாலனையும் கொன்று சோழ நாட்டைக் கைப்பற்ற முனைந்தபோது. அவனது தாய்மாமன் 'இரும்பிடர்த்தலையார்' என்னும் சங்கப் புலவர், பிறர் அறியாமல், குழந்தையையும் தாயையும் பனையூருக்கு அனுப்பிவைத்தார். அரசி, தன் மகனுடன் இவ்வூருக்கு வந்து, இங்கு அமைந்துள்ள சௌந்தரேஸ்வரர் கோவிலில் அடைக்கலம் புகுந்து, இத்தலத்து விநாயகரிடம் முறையிட, விநாயகரின் துணையால் கரிகாலன் எட்டு ஆண்டுகள் இத்தலத்தில் பாதுகாப்பாக இருந்தான்.

பங்காளிகளுக்குப் பயந்து தன் தாயோடு இளவயதில் இவ்வூரில் தலைமறைவாகத் தங்கி வளர்ந்து வந்த கரிகால் சோழனுக்குத் துணையாய் இருந்து அருளி அவனைப் பேரரசனாக்கினார். கரிகாலச் சோழனுக்குத் துணையிருந்ததனால், இத்தல விநாயகர் 'துணையிருந்த விநாயகர்' என்னும் பெயர் பெற்றார்.

Read More