தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில்
மானுட உருவம் கொண்டு அம்பிகை இறைவனை பூஜை செய்த தலம்
சிவலிங்கத் திருமேனியில் எழுந்தருளியிருக்கும் அபூர்வ விநாயகர்
திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கோவிந்தவல்லி. கோவிந்தவல்லி என்றால் உயிர்களுக்கெல்லாம் தலைவி என பொருள் உண்டாம். இந்த அம்பிகைக்கு சிவகாமசுந்தரி, கோவர்த்தனாம்பிகை அம்மன் போன்ற பல்வேறு பெயர்களும் உண்டு.
இமயமலை கேதார்நாத் தலத்தில் உள்ள கேதாரீசுவரரை வழிபட்டால் என்ன பலனோ, அதே பலன் தரக்கூடிய தலம், தின்னக்கோணம். இத்தலத்து இறைவனின் சிவலிங்கத் திருமேனியானது பசு வடிவில் சுயம்பாக கிழக்கு மேற்காக 7.5 அடி நீளமும் 3 அடி உயரமும் கொண்டது.
பசுவுக்கு நெற்றியில் திருநீற்றுப்பட்டை, நிறைய மாலைகள், ஆபரணங்கள், வஸ்திரங்கள் உடலை சுற்றி சார்த்தி படுத்திருந்தால் எப்படி இருக்குமோ, அது போல் தான் பசுபதீஸ்வரர் சுயம்புவாக பசு உருவில் காட்சி தருகிறார். (newly added )
ஒரு சமயம் கைலாயத்தில் சிவபெருமான், பார்வதிதேவிக்கு வேதசிவாகமப் பொருளை உணர்த்திக் கொண்டிருந்தபோது, அம்பிகையின் கவனம் அவ்வழியே சென்ற காமதேனுவின் மீது திரும்பியது. தேவியின் கவனம் அந்த காமதேனு மீது மாறுவதை உணர்ந்து சிவபெருமான் கோபம் அடைந்தார்.
அம்பிகையை நோக்கி 'பூலோகத்தில் திண்ணக்கோணம் அடைந்து பங்குனி மாத வளர்பிறையில் வரும் வசந்த நவராத்திரி என்னும் ஒன்பது ராத்திரி நாள்கள் நீ தவமிருக்கும்போது, நான் பசுவாக உனக்கு காட்சியளிப்பேன். அதன் பின் என்னை வந்து நீ அடைவாயாக' என்று பார்வதி தேவிக்கு சாபம் இட்டார். அதற்கான விமோசனத்தையும் அருளினார்.
அதன்படி மானுட உருவம் கொண்டு இடையர் குலத்தில் அம்பிகை பிறந்து, சிவபெருமானை நோக்கி தவமிருந்து வரம் பெற்று மீண்டும் அடைந்தது இந்தக் கோவிலில்தான்.
சிவபெருமானால் சாபம் விட்டு, மானுட வேடம் பூண்டு, பின்னர் தவமிருந்து தேவி அவரிடம் இணைந்த திருக்கோயில் என்பதால், பங்குனி மாத வளர்பிறையில் வசந்த நவராத்திரி உற்சவம் இறைவிக்கு நடத்தப்படுகிறது.
சிவலிங்கத் திருமேனியில் எழுந்தருளியிருக்கும் அபூர்வ விநாயகர்
இத்தலத்தில் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் லிங்கோத்பவ வலம்புரி விநாயகரின் தோற்றமானது அபூர்வமான ஒன்றாகும்.
இவர் சிவலிங்க உருவம் கொண்டு, அதில் நான்கடி உயர திருமேனியுடன், புடைப்புச் சிற்பமாக வலம் சுழித்த துதிக்கையுடன் காட்சி தருகிறார். அதனால்தான் இவர் லிங்கோத்பவ வலம்புரி விநாயகர் என அழைக்கப்படுகிறார். இப்படி சிவலிங்கத் திருமேனியில் எழுந்தருளியிருக்கும் விநாயகரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
முசிறியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தின்னக்கோணம்