தாத்தையங்கார்பேட்டை காசி விசுவநாத சுவாமி கோவில்

தாத்தையங்கார்பேட்டை காசி விசுவநாத சுவாமி கோவில்

பஞ்ச முக பைரவர்

திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்தில் உள்ள தாத்தையங்கார்பேட்டை என்னும் தலத்தில் அமைந்துள்ளது காசி விசுவநாத சுவாமி கோவில்.

பொதுவாக சிவன் கோவில்களின் காவலராகக் கருதப்படும் பைரவர் நாய் வாகனத்துடன்தான் எழுந்தருளியிருப்பார். ஆனால் அவர் இத்தலத்தில் பஞ்ச முகங்களுடன், சம்ஹார மூர்த்தியாக சிம்ம வாகனத்தில் அருள் பாலிக்கிறார், அவருடைய இத்தகைய கோலத்தை நாம் வேறு எந்ந தலத்திலும் காண முடியாது.

திருமணத்தடை உள்ளவர்கள், தொழிலில் பாதிப்பு ஏற்பட்டவர்கள், ராகு திசை தோஷம் உடையவர்கள், எதிரிகளால் அல்லல் படுபவர்கள் போன்றவர்களுக்கு இவர் பரிகார தெய்வமாகத் திகழ்கிறார். மாதத்தின் வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி தினங்களில் பக்தர்கள் பூசணிக்காய், தேங்காய், மிளகு தீபமேற்றி வழிபட்டு தங்களது பரிகார பிரார்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.

Read More
திருச்சி வெளிகண்டநாத சுவாமி கோவில்

திருச்சி வெளிகண்டநாத சுவாமி கோவில்

சூரியன்,சந்திரனின் அபூர்வக் கோலம்

திருச்சி மாநகரம் மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரத்திலுள்ள பாலக்கரை பகுதியில் அமைந்துள்ளது வெளிகண்டநாத சுவாமி கோவில். இறைவி சுந்தரவல்லி.

பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் சூரியன்,சந்திரன் உள்பட எல்லா நவக்கிரகங்களும் நின்ற நிலையில் எழுந்தருளியிருப்பார்கள். ஆனால் இத்தலத்தில் வெளிகண்டநாத சுவாமி கருவறைக்கு நேர் எதிர் திசையில் சூரியனும், சந்திரனும் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார்கள். இவர்களின் இந்தக் கோலம் மிகவம் விசேடமானது என்று தலபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சூரிய பூஜை வழிபாடு என்பது எல்லா சிவாலயங்களிலும், தமிழ் மாதங்களில், குறிப்பிட்ட மூன்று நாட்கள்தான் நடைபெறுவது வழக்கம். ஆனால் இக்கோவிலில் மாசி மற்றும் ஐப்பசி மாதம் முழுவதும் சூரிய பூஜை நடைபெறுவது தனிச் சிறப்புடையதாகும்.

Read More
ஊட்டத்தூர் சுத்தரத்தினேசுவரர் கோவில்

ஊட்டத்தூர் சுத்தரத்தினேசுவரர் கோவில்

சிறுநீரக நோய்களைத் தீர்க்கும் பஞசநதன நடராஜர்

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பாடலூர் என்ற ஊரிலிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள தலம் ஊட்டத்தூர். இறைவன் திருநாமம் சுத்தரத்தினேசுவரர். இறைவி அகிலாண்டேசுவரி.

இக்கோவிலில் தனிச் சன்னதியில் பஞ்சநதன நடராஜர் அருள் பாலிக்கிறார்.எட்டு அடி உயரத் திருமேனி உடைய இவர் ஆசியக் கண்டத்திலேயே மிகப் பெரிய நடராஜர் என்ற பெருமை உடையவர். இவர் சூரிய பிரகாசிப்புத் தருகின்ற, அரிய வகைக் கல்லான பஞ்சநதன என்ற கல்லால் ஆனவர். இத்தகைய கல்லாலான சிற்பங்களை கோவில்களில் காணபது என்பது மிக மிக ஆபூர்வம்.

சிறுநீரகத்தில் கல் உருவாகி அவதிப்படுபவர்கள், சிறுநீரகம் செயலிழந்து அதனால் ரத்தம் சுத்தகரிப்பு செய்ய வேண்டியவர்கள் என சிறுநீரக பாதிப்புக்கு உள்ளானவர்கள். இத்தலத்துக்கு ஒரு கிலோ வெட்டிவேரை வாங்கி வந்து அதனை 48 துண்டுகளாக்கி பின் அதனை மாலையாகத் தொடுத்து பஞ்சநதன நடராஜருக்கு சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் அந்த மாலையையும், இத்தலத்து தீர்த்தமான பிரம்ம தீர்த்தத்தையும் தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

வெட்டிவேரை தினம் ஒரு துண்டு வீதம் பிரம்ம தீர்த்தத்தில் ஊற வைத்து அதன் சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீரக பாதிப்பு குறைகின்றது என்று பக்தர்கள் கூறுகின்றனர். வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானவர்கள் இங்கு வந்து வழிபட்டு தங்கள் சிறுநீரக நோய் குணமடைந்து செல்கின்றனர்.

Read More
பெருங்குடி அகத்தீஸ்வரர் கோவில்

பெருங்குடி அகத்தீஸ்வரர் கோவில்

சாய்ந்த நிலையில், சயனக் கோலத்தில் இருக்கும் அபூர்வ சிவலிங்கத் திருமேனி

கண் நோய்களை தீர்க்கும் அகத்தீஸ்வரர்

திருச்சியிலிருந்து வயலூர் செல்லும் வழியில், சுமார் ஒன்பது கி.மீ. தொலைவில், சோமரசம் பேட்டைக்கு அருகே இருக்கிறது, பெருங்குடி கிராமம். இத்தலத்து இறைவனின் திருநாமம் அகத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் சிவகாமசுந்தரி. இறைவனார் பெயர் `பெருமுடி பரமேஸ்வரனார் என்றே அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டது. அகத்தியர் வழிபட்ட சுயம்பு லிங்கமாகக் கருதப்படுவதால் இவர் `அகத்தீஸ்வரர்' என்றும், `அகத்தீஸ்வரமுடையார்' என்றும் பெயர்பெற்றார். இக்கோவில் ராஜராஜனின் தந்தையான சுந்தரச்சோழனின் காலத்தில் எழுப்பப்பட்டது.

கருவறைக்குள் அகத்தீஸ்வரர்,சுயம்புலிங்க மூர்த்தியாக வடக்குத் திசை நோக்கி சாய்ந்த நிலையில், கிழக்குத் திசை பார்த்து ஆனந்த சயனக் கோலத்தில் காட்சியளித்து வருவது மிகவும் விசேஷமானது. இப்படி சிவலிங்கத் திருமேனி சாய்ந்த நிலையில், சயனக் கோலத்தில் இருக்கும் தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இவரை வழிபட்டால், கண் நோய்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை.

கல்வெட்டில் பொறிக்கப்பட்ட, சிவபெருமான் கண் நோய் தீர்த்த வரலாறு

இக்கோவில் இறைவனிடம் தன் மகளின் கண்நோய் குறித்து வேண்டுதல் செய்து பலன் பெற்ற பக்தன் ஒருவன் இறைப்பணிக்குக் கழஞ்சுபொன் கொடையளித்த சம்பவம் ஒன்று வரலாற்றில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 13-ம் நூற்றாண்டில் கூத்தன் என்னும் சிவபக்தன், இத்தலத்தில் வாழ்ந்துவந்தார். அவருக்கு நல்லமங்கை என்று ஒரு மகள் இருந்தாள். சிறுவயதில் அவளின் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கிவிட்டது. கூத்தன் எவ்வளவோ வைத்தியம் செய்தும் பார்வை குறைபாடு சரியாகவில்லை. ஒரு கட்டத்தில் நல்லமங்கை பார்வை முழுவதையும் இழந்தாள்.

வெளியூர்களில் வாழும் பெரும் வைத்தியர்களிடம் சென்று வைத்தியம் பார்க்கலாம் என்று கூத்தன் முடிவு செய்து, அதற்கெனப் பணத்தைச் சேர்க்கத் தொடங்கினான். கி.பி 1268, ஆண்டில், ஹொய்சாள மன்னன் ராமநாதன் இக்கோவிலில் திருப்பணி செய்ய ஆரம்பித்தான். அவனிடம் இருந்த நிதி தீர்ந்து விட்டதால், கோயில் வேலை அப்படியே நின்றுபோனது. இறைவனின் திருப்பணி நின்றுபோனதால் மனம் வருந்திய கூத்தன், தன் மகள் நல்லமங்கையின் கண் வைத்தியத்துக்கென வருடக்கணக்காக உழைத்துச் சேர்த்து வைத்திருந்த மூன்று கழஞ்சு பொன்னையும் கோயில் திருப்பணிக்குக் கொடை அளித்தான். அதனால் கோவில் திருப்பணிகள் நடந்து முடிந்தன.

மகள் கண் வைத்தியத்துக்குச் சேர்த்து வைத்திருந்த பொன்னை, கோயில் திருப்பணிக்குச் செலவிட்டு விட்டதால் கூத்தன் வைத்திய செலவுக்கு மீண்டும் பணம் சேர்க்க வேண்டியதாயிற்று. வேறுவழியின்றி இத்தலத்து இறைவன் திருவடிகளில் விழுந்து சரணடைந்தான். அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. சிவபெருமான் அருளால் நல்லமங்கைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வை தெரிய ஆரம்பித்தது. சில நாள்களில் அவளுடைய கண்கள் பிரகாசமாகி முழுமையாகப் பார்வை திரும்பியது. கூத்தன் இறைவனுடைய அருளை நினைத்து நெக்குருகினான். தன் துயர் துடைக்க இறைவன் இருக்கும்போது தனக்குப் பணம் எதற்கு என்று முடிவுசெய்து அவன் சேர்க்கும் பணத்தையெல்லாம் இறைவனின் திருப்பணிக்கே வழங்கினான். இறைவனுக்கு கழஞ்சு பொன் பட்டம் செய்து சாற்றித் தன் நன்றியைத் தெரிவித்தான்.

இந்தப் பொன் கொடுத்த நிகழ்வு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டில் வடித்து வைக்கப்பட்டிருக்கிறது.

Read More
உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவில்

வளைகாப்பு நாயகி குங்குமவல்லி அம்மன்

திருச்சி மாநகரின் ஒரு பகுதியான உறையூர், முற்காலத்தில் சோழ மன்னர்களின் தலைநகராக விளங்கியது. உறையூரின் மத்தியில் அமைந்துள்ளது, சுமார் 1800 ஆண்டுகள் பழமையான தான்தோன்றீஸ்வரர் கோவில். இக்கோவில் கர்ப்பிணி பெண்களுக்கான கோவில் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

சூரவாதித்தன் என்ற சோழ மன்னனின் மனைவி காந்திமதி. சிவ பக்தையான இவள், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமியை தினமும் வழிபடும் வழக்கம் உள்ளவள. காந்திமதி கருவுற்றிருந்த சமயம் ஒருநாள், தாயுமான சுவாமியை தரிசிக்க திருச்சி மலைக்குச் சென்றபோது களைப்பின் காரணமாக நடக்க முடியாமல். மயங்கி அமர்ந்தாள். அப்போது காந்திமதியின் முன் தோன்றிய சிவபெருமான், நீ மிகவும் பிரயாசைப்பட்டு என்னை தேடி வர வேண்டாம். உன்னைப் பார்க்க நானே வந்துவிட்டேன். உனக்கு காட்சி தந்த இந்த இடத்தில் லிங்க ரூபமாக, 'தான்தோன்றி ஈசனாக' எப்போதும் இருந்து உன்னைப் போன்ற கர்ப்பிணிப் பெண்களை காத்து நிற்பேன் என்று கூறி மறைந்தார். சிவபெருமானுடன் பார்வதி தேவியும் இந்தத் தலத்தில் குங்குமவல்லியாக எழுந்தருளி பெண்களின் மங்கலம் காக்கும் தேவியாக அருள்பாலிக்கிறாள். இவள் வளைகாப்பு நாயகி என்றும் திருச்சி மாநகரப் பெண்களால் அன்போடு அழைப்படுகிறாள்.

கோவில் கருவறையில் தான்தோன்றீஸ்வரர் கிழக்கு முகமாக ஏழடி கொண்ட பிரமாண்ட வடிவாக அருள்கிறார். குங்குமவல்லி, இரு கரங்களில் அங்குசம் மற்றும் தாமரை ஏந்தி நின்ற கோலத்தில் அழகுற காட்சி தருகிறாள்.

குங்குமவல்லி தேவிக்கு, ஒவ்வொரு ஆண்டும் வளையல் காப்புத் திருவிழா ஆடிப்பூரம் மற்றும் தை மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் இந்த வளையல் விழா வெகு பிரசித்தம்.

விழாவின் முதல் நாளில் கர்ப்பிணிப் பெண்கள் குங்குமவல்லி அம்மனுக்கு சுகப்பிரசவம் வேண்டி வளையல்களைக் காணிக்கையாக அளிப்பார்கள். அதேபோல் இரண்டாம் நாள் திருமணமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி வளையல்களைக் காணிக்கையாக தருவார்கள். விழாவின் மூன்றாம் நாளில் திருமணமாகாத கன்னிப்பெண்கள் தங்களின் திருமண தடை நீங்கி நல்ல வரன் கிடைக்க வளையல்களைக் காணிக்கையாக தருவார்கள்.. வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாள்களிலும் குங்குமவல்லி வளையல் அலங்காரத்தில் வெகு அழகாகக் காட்சி அளிப்பாள். பிறகு பூஜை வழிபாட்டுக்குப் பின்னர் காணிக்கையாகப் பெறப்பட்ட வளையல்கள் பிரசாதமாகத் தரப்படும்.

இந்தத் தலத்தில் வழிபட்டால் களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், நாக தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருமணம் கைகூட, குழந்தைப்பேறு உண்டாக மாநிலம் முழுவதிருந்தும் ஏராளமான பெண்கள், கூட்டம் கூட்டமாக இந்த கோவிலுக்கு வருகிறார்கள். வேண்டுதல் நிறைவேறி குழந்தைப் பிறந்தவுடன் இங்கு வந்து வளையல் மாலை போடும் சடங்கு அநேகமாக எல்லா நாளிலும் இங்கு நடக்கிறது. சுருங்கச் சொன்னால் குழந்தை வரம் வேண்டுவோருக்கு இந்த கோவில் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

Read More
லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில்

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில்

கைகளில் வீணையோடு நின்ற கோலத்தில் காட்சி தரும் வீணா தட்சிணாமூர்த்தி

திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் வழியில், 23 கி.மீ. தொலைவில் உள்ள தலம் லால்குடி. இறைவனின் திருநாமம் சப்தரிஷீஸ்வரர். இறைவியின் திருநாமம் பெருதிருப்பிராட்டியார். இவ்வூர் பக்கம் படையெடுத்து வந்த முகமதிய மன்னன் மாலிக் கபூர் இத்திருக்கோவிலின் சிவப்பு கோபுரத்தை கண்டு உருதுமொழியில் லால்குடி (லால் – சிவப்பு, குடி – கோபுரம்) என்று அழைக்க, அதுவே இவ்வூருக்கு பெயராகி அழைக்கபடுகிறது.

இத்தலத்தில் வீணையைக் கையிலேந்தி, சற்றே வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கின்றார் தட்சிணாமூர்த்தி. இவரை 'வீணா தட்சிணாமூர்த்தி' என்றே தலபுராணம் குறிப்பிடுகின்றது. இசைக்கு தலைவன் சிவபெருமான். இதை உணர்த்தும் வகையில் அழகிய சடை முடியோடும், கைகளில் வீணையோடும், நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் இத்தலத்து தட்சிணாமூர்த்தி.

பிரார்த்தனை

இவரை வணங்கினால் உயர்பதவி, கல்வியில் முன்னேற்றம், நினைத்த படிப்பு படிக்கும் அமைப்பைக் கொடுப்பார். வியாழக் கிழமைகளில் இவருக்கு சந்தனக் காப்பிட நினைத்தக் காரியம் கைகூடும். வெண்தாமரை அர்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் கொடுக்க மனம் ஒருமுகப்படும். மேலும் இவர்க்கு தேனாபிசேகம் செய்தால் தேன் போன்ற இனிமையான குரல்வளம் கிடைக்கும்.

Read More
உத்தமர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

உத்தமர் கோவில்

மும்மூர்த்திகளும் தங்கள் மனைவியருடன் அருள்பாலிக்கும் திவ்ய தேசம்

திருச்சி சேலம் வழியில், சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள திவ்ய தேசம் உத்தமர் கோவில். பெருமாளின் திருநாமம் புருசோத்தமன். இத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் தங்கள் மனைவியருடன் அருள்பாலிக்கிறார்கள். இப்படி மும்மூர்த்திகளையும் ஒரே தலத்தில் தரிசிப்பது அபூர்வம்.

சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம்

ஒரு சமயம், சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி அவரை தனது கணவன் என நினைத்து பணிவிடை செய்தாள். இதைக்கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாலமும் (மண்டை ஓடு) அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாலத்தை பிரிக்க முடியவில்லை. அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாலமே எடுத்துக் கொண்டது. எவ்வளவு உணவு இட்டாலும் கபாலம் மட்டும் நிறையவேயில்லை. பசியில் வாடிய சிவன், அதனை பிச்சைப்பாத்திரமாக ஏந்திக்கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அவர் உத்தமர் கோவில் தலத்திற்கு வந்தபோது பெருமாள், சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும்படி மகாலட்சுமியிடம் கூறினார். அவளும் கபாலத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசி நீக்கியது. இதனால் தாயார் 'பூரணவல்லி' என்ற பெயரும் பெற்றாள்.மகாவிஷ்ணுவும் பள்ளிகொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி தந்தார்.

மும்மூர்த்திகளின் திருவீதி உலா

கார்த்திகை தீப திருவிழாவன்று, மும்மூர்த்திகளும் ஒன்றாக திருவீதி உலா வருவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்..

மும்மூர்த்திகளும் மனைவியருடன் எழுந்தருளி இருப்பதால், தம்பதியர் இங்கு வழிபட்டால் குடும்பம் சிறக்கும் என்பது நம்பிக்கை. வாரிசு இல்லாமல் தவிப்பவர்கள், கொடிய நோயால் துடிப்பவர்கள், இங்குள்ள புருஷோத்தமனிடம் மனம்விட்டு பிரார்த்தித்தால் நிச்சயம் நல்லது நடக்கும்.

Read More
ஆமூர் ரவீஸ்வரர் கோவில்

ஆமூர் ரவீஸ்வரர் கோவில்

பைரவர் இரட்டை வாகனத்துடன் இருக்கும் அரிய தோற்றம்

கல்வியில் சிறக்க அருளும் இரட்டை வாகன பைரவர்

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஆமூர் ரவீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவள்ளி. இத்தலத்து இறைவனை வழிபட்டு சூரியபகவான் தன்னுடைய அதீத உஷ்ணத்தை குறைத்துக் கொண்டார். எனவே இத்தலம் சூரிய தோஷம், பித்ரு தோஷம், ஜாதக தோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரத்தலமாக விளங்குகின்றது.

பொதுவாக சிவாலயங்களில் பைரவர் தெற்குத் திசை நோக்கி தான் எழுந்தருளியிருப்பார். ஆனால், இத்தலத்தில் இறைவன் ரவீஸ்வரரின் சன்னதி மண்டபப் பகுதியில், மேற்குத் திசை நோக்கி இரட்டை வாகனத்தில் பைரவர் எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

பைரவர் தனது வாகனமான நாயுடன் தான் காட்சி அளிப்பார் . ஆனால், இக்கோவிலில் வலதுபுறத்தில் நாய் வாகனத்துடனும், இடதுபுறத்தில் ரிஷப வாகனத்துடனும் பைரவர் எழுந்தருளியிருப்பதால், இவர் இரட்டை வாகன பைரவர் என்றழைக்கப்படுகிறார். இந்த இரட்டை வாகன பைரவர் கல்விக்கு அதிபதியாக போற்றப்படுகிறார். தேர்வுகளை எழுதுவோர் இந்த சன்னதியில் வந்து பைரவரை வழிபட்டுச் சென்றால் கல்வியில் சிறந்து விளங்குவர், அவர்கள் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் திக்கிப் பேசும் குழந்தைகள், படிக்காத குழந்தைகள் இந்த இரட்டை வாகன பைரவரை வழிபட்டு தங்கள் நாவில் தேன் தடவிச் சென்றால் அவர்களது குறைகள் நீங்கும்.

Read More
திருச்சி காளிகா பரமேஸ்வரி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருச்சி காளிகா பரமேஸ்வரி கோவில்

திருமேனியில் தாலிச் சரடுடன் காட்சிதரும் அம்மன்

திருச்சி நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது காளிகா பரமேஸ்வரி கோவில். இந்த அம்மன் அமர்ந்த நிலையில் தன் நான்கு கரங்களில் டமருகம், பாசம், சூலம், கபாலம் ஆகியவற்றை ஏந்தி காட்சி தருகிறாள். அம்மனின் கழுத்தில் திருமாங்கல்யம் துலங்குவது மிகவும் சிறப்பான அம்சமாகும். விக்கிரகத்தின் அமைப்பிலேயே தாலிச் சரடு இருப்பது வேறு எங்கும் காண இயலாத அற்புத அமைப்பாகும்.

இந்த அம்மனிடம் வேண்டிக்கொள்ளும் பெண்களுக்கு திருமணப்பேறு விரைவில் கிடைக்கிறது. திருமணம் நிச்சயம் ஆனதும் மணமகளின் தாலியை அன்னையின் பாதத்தில் வைத்து, அர்ச்சனை செய்து பெற்றுக் கொள்ளும் வழக்கம் இங்கு உள்ளது.

Read More
அன்பில் மாரியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

அன்பில் மாரியம்மன் கோவில்

சமயபுரம் மாரியம்மனின் மூத்த சகோதரி

கண் நோய்களை தீர்க்கும் பச்சிலை மூலிகை சாறு

திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது அன்பில் மாரியம்மன் கோவில். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு உட்பட்ட உபகோவில் ஆகும். 700 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.

பிரசித்தி பெற்ற ஏழு மாரியம்மன் கோவில்களில் இக்கோவில் ஒன்றாகும். சமயபுரம், நார்த்தா மலை, வீரசிங்க பேட்டை, கண்ணனூர், புன்ணை நல்லூர், திருவேற்காடு, அன்பில் மாரியம்மன் ஆகிய சிறப்பு மிக்க மாரியம்மன் தலங்களில் அன்பில் மாரியம்மன் மற்ற அனைத்து மாரியம்மன்களுக்கும் மூத்த சகோதரியாக விளங்குகின்றாள். அன்பில் மாரியம்மனுக்கு ஏழு குழந்தைகள் உள்ளன. சமயபுரம் மாகாளிகுடி கோயில் அருகில் வலது புறத்தில் ஓர் தெய்வீக வீட்டில் புற்றோடு, தன் குழந்தையோடு தங்கை மகமாயி அனுமதியோடு அமர்ந்திருக்கிறாள், மற்ற கோவில்களில் மாரியம்மனுக்கு குழந்தை கிடையாது.

குழந்தை வேண்டி அம்மனை வழிபட்டால் பலன் கிடைக்கும். கண் சம்பந்தமான நோய்கள் தீர இந்த அம்மனை வழிபடலாம். நண்பகல் 12.00 மணியளவில் கண் குறைபாடு உள்ளவர்களுக்கு பூசாரியால் பச்சிலை மூலிகைகளால் ஆன சாறு கண்களில் பிழிந்து விடப்படுகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் கண் நோயில் இருந்து குனமடைவதாக நம்பப்படுகிறது. அம்மை இருக்கும் காலத்தில் இந்த கோவிலில் வந்து தங்கி பூஜை செய்தால் பலன் கிடைக்கும்.

Read More
வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோவில்

வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோவில்

ஆலயத்துளிகள் வாசகர்களுக்கு,

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

மகாலட்சுமி சிவபெருமானிடம் ஐஸ்வர்ய மகுடம் பெற்ற தலம்

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், குணசீலம் கோவிலை அடுத்து, ஆனால் முசிறிக்கு 6 கி.மீ. முன்னால் உள்ள தலம் வெள்ளூர். இத்தலத்து இறைவன் திருநாமம் திருக்காமேஸ்வரர். இறைவியின் திருநாமம் சிவகாமசுந்தரி. திருக்காமேஸ்வரர் பெருமானை வணங்கினால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்தும் வகையிலேயே இந்த ஊருக்கு வெள்ளூர் என்ற பெயர் ஏற்பட்டது.

வேறு எந்த சிவாலயத்திலும் இல்லாத வகையில், இங்கே மகாலட்சுமி கோவில் கொண்டிருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். கோவிலின் குபேர பாகத்தில் மகாலட்சுமி தவம் செய்யும் கோலத்தில், ஐஸ்வர்ய மகாலட்சுமி என்ற திருநாமத்தோடு சிவலிங்கத்துடன் கூடிய ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த ஐஸ்வர்ய மகுடத்தை தலையில் சூட்டியவாறு, அமர்ந்த திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்

தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். அந்த அமிர்தம் தேவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டுமென எண்ணிய மகாவிஷ்ணு, மோகினி அவதாரமெடுத்தார். அசுரர்களை மயக்கி லவண சமுத்திரம் எனும் உப்பு நிறைந்த கடலில் அசுரர்களை மூர்ச்சையாகும்படி செய்துவிட்டு திரும்பும்போது சிவபெருமானின் பார்வையில் மோகினி தென்பட்டாள். மோகினியின் அழகைக்கண்டு சிவபெருமான் மோகிக்க ஹரிஹரபுத்திரர் எனும் ஐயப்பன் அவதரித்தார். இதைக் கேள்விப்பட்ட மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி கோபம் கொண்டாள். உடனே வைகுண்டத்தை விட்டு வெளியேறி பூலோகம் வந்தாள். இங்கு வில்வாரண்ய க்ஷேத்திரம் எனும் வெள்ளூரில்,மகாலட்சுமி சிவபெருமானை பிரதிஷ்டை செய்து தவம் செய்யலானாள். பல யுகங்களாக தவம் செய்தும் சிவபெருமான் காட்சி தரவில்லை. உடனே மகாலட்சுமி தன்னை வில்வமரமாக மாற்றிக்கொண்டு சிவலிங்கத் திருமேனியில் வில்வமழையாகப் பொழிந்து சிவபூஜை செய்தாள். பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான் மகா லட்சுமியின் முன் தோன்றி, ஹரிஹரபுத்திர அவதாரத்தின் நோக்கத்தை விளக்கிக்கூறி மகாலட்சுமியை சாந்தப்படுத்தினார். பின் மகாலட்சுமியை ஸ்ரீவத்ஸ முத்திரையுடன் கூடிய சாளக்ராமமாக மாற்றி, மகாவிஷ்ணுவின் இதயத்தில் அமரச் செய்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் நிரந்தரமாக இடம் பெற செய்தார்.

வில்வமரமாகத் தோன்றி, வில்வமழை பொழிந்து சிவபூஜை செய்ததின் பலனாக இத்தலத்தில் மகாலட்சுமிக்கு ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை அளித்து மகாலட்சுமியை சகல செல்வத்துக்கும் அதிபதி ஆக்கினார். அதனால் இத்தலத்தில் மகாலட்சுமி, ஐஸ்வர்ய மகாலட்சுமி என்ற திருநாமத்துடன், தல விருட்சமான வில்வ மரத்தடியில் தவக்கோலத்தில் இருந்து அருள்பாலிக்கின்றாள். திருவருட்பாலிக்கிறாள். இத்தலத்திலேயே தங்கி இங்கு வரும் பக்தர்களுக்கு அவரவர் பாவ புண்ணியத்திற்கேற்ப செல்வத்தை அருளும்படி கூறினார். இவள் அபய, வரத திருக்கரங்களோடு, மேலிரு கரங்களில் தாமரை மலருடன் காட்சி தருகிறாள். ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்யும் முன் வில்வமரத்துக்கே முதலில் பூஜை செய்கிறார்கள். மகாலட்சுமிக்கு ஐஸ்வர்ய மகுடத்தை அருளியதால் இத்தல இறைவனுக்கு ஐஸ்வர்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு.

இத்தலத்தின் பிற சிறப்புகள்

சுக்கிரன், ஈசனை வழிபட்டு யோகத்திற்கு அதிபதி ஆனதும், குபேரன் தனாதிபதி ஆனதும் இத்தலத்தில்தான் என தலபுராணம் கூறுகிறது. முப்பத்து முக்கோடி தேவர்களும் தினமும் ஆகாய மார்க்கமாக இங்கு வந்து ஈசனை வழிபடுவதாக ஓலைச்சுவடிகளில் காணப்படுகிறது. ராவணன் சிவவழிபாடு செய்து ஈஸ்வரப் பட்டம் பெற்றதும் இத்தலத்தில்தான். ஈசன் காமனை நெற்றிக் கண்ணால் சுட்டெரித்தாலும் அவன் எய்த மன்மத பாணம் அம்பிகை மீதுபட, தேவி சிவகாம சுந்தரியானாள் அவளே இங்கு சிவனுடன் உறையும் நாயகியாய் வீற்றிருக்கிறாள். மகேசன், மன்மதனை மன்னித்து அரூப அழகுடலை அளித்ததால், சிவபிரான் திருக்காமேஸ்வரர் என்றும், மன்மதனுக்கு வைத்தியம் அருளியதால் வைத்தியநாதராகவும் பெயர் பெற்றார்.

சுக்கிர தோஷ பரிகார தலம்

தங்கம், வெள்ளி நகை செய்பவர்கள் தங்கள் தொழில் அபிவிருத்திக்காக இங்கு வருகிறார்கள். சுக்கிர தோஷம் உடையவர்கள்,வெள்ளிக்கிழமைகளில் 16 வகையான அபிஷேகம் செய்து 16 நெய்தீபம் ஏற்றி, 16 செந்தாமரை மலர்கள் சாத்தி, 16 முறை வலம் வந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும். கடன் தொல்லைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறலாம் . தாமரை மலர் சாற்றி அட்சய திரிதியை அன்று மஹாலட்சுமியை வழிபட்டால் சகல செல்வங்களும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
வாத்தலை பாதாள ஈஸ்வரர் கோவில்

வாத்தலை பாதாள ஈஸ்வரர் கோவில்

திருநாள்ளாறு தலத்திற்கு இணையான தலம்

சனியால் அகல பாதாளத்தில் விழுந்தவர்கள் நன்மை பெற வழிபட வேண்டிய தலம்

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் 21 கி.மீ தொலைவில் (குணசீலத்திற்கு முன்னால் 2 கி.மீ ), அமைந்துள்ளது வாத்தலை பாதாள ஈஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பாதாள ஈஸ்வரி. சப்த ரிஷிகள் வழிபட்ட தலம்.

ஒரு சமயம் சனி பகவான் சிவபெருமானை ஏழரை நாழிகை நேரம் பிடிக்க முற்பட்ட போது, சனியிடம் இருந்து தப்பிக்க சிவபெருமான் பாதாளத்தில் ஒளிந்து கொண்டார். அதனால் தான், இத்தலத்து இறைவனுக்கு பாதாள ஈஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. அதற்கு ஏற்றார்போல் இத்தலத்து மூலவரை தரிசிக்க, நாம் தரைமட்டத்தில் இருந்து பல படிகள் கீழே இறங்கி செல்ல வேண்டும். சிவபெருமானை பிடிக்க வந்த சனி பகவான் மூலவருக்கு எதிரில் இடதுபுறம் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

ஏழரை சனி, அஷ்டமத்து சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி முதலிய சனி தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய பரிகாரத் தலம் இது. அதனால் இத்தலம் திருநள்ளாறுக்கு இணையான தலம் என்று போற்றப்படுகிறது.சனிபகவனால் பாதிக்கப்பட்டு பெரிய இழப்பை சந்தித்தவர்கள், இந்த தலத்தில் வழிபட்டால் அந்த இழப்பிலிருந்து மீண்டு வரலாம். இந்த தலத்தை தரிசனம் செய்த பிறகு படி ஏறி மேலே செல்லும் போது முழுவதும் சனி தோஷம் நிவர்த்தி ஆகி நமது வாழ்க்கை அடுத்த கட்டம் நோக்கி முன்னேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கம் நெல் அளவைத் திருநாள்

நெல் அளவை கணக்கிட, படியளக்கும் பெருமாள்

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திவ்ய தேசம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். உலகத்து உயிர்களை காத்து ரட்சிப்பவர் பெருமாள். இதைத்தான் 'பகவான் எல்லோருக்கும் படி அளக்கிறான்' என்று வழக்கத்தில் சொல்வார்கள். ஆனால், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் நிஜமாகவே, வருஷத்துக்கு ஏழு தடவை படியளக்கிறார். சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி ,தை ,மாசி மற்றும் பங்குனி என ஏழு மாதங்களில் நெல் அளவை திருநாள், ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வருகிறது.மாதங்களின் பிரம்மோற்சவ காலங்களில் அதன் ஏழாம் திருநாளன்று, நெல் அளவைக் கண்டருளப்படுகிறது.

நெல் அளவைத் திருநாள் அன்று, கருவறையிலிருந்து, ஸ்ரீதேவி - பூதேவி துணைவரக் கிளம்புகிறார் நம்பெருமாள்.

நெல் அளவைத் திருநாள் அன்று, கருவறையில் இருந்து நம்பெருமாள் இந்தப் பட்டத்துக்கு தானிய வரவு எவ்வளவு?; செலவு எவ்வளவு? மீதி இருப்பு எவ்வளவு?... என்று கணக்கிட்டுப் பார்க்க, ஸ்ரீதேவி பூதேவி சகிதமாகக் கிளம்புகிறார். கணவரின் சரிபங்கான மனைவிக்கு எல்லா விஷயமும் தெரிந்திருக்க வேண்டும். தம்பதிகளிடையே எந்த ஒளிவு மறைவும் கூடாது என்று நமக்கு உணர்த்துவதற்காகத்தான், நெல் அளவைத் திருநாள் அன்று பூதேவி ஸ்ரீதேவி சகிதமாக எழுந்தருளுகிறார்.

நம்பெருமாள். ஆரியபட்டாள் வாசல் வழியே வந்து செங்கமலத் தாயார் சன்னிதி எனப்படும் திருக்கொட்டாரம் முன்பு நாலு கால் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அப்போது பாசிப்பயறும் பானகமும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றன. செங்கமலத் தாயார் சன்னிதி பூஜை பரிசாரகம் செய்பவர் ஒரு தட்டில் வெற்றிலைப் பாக்கு வைத்து நம் பெருமாளை எதிர் சென்று வணங்கி வரவேற்கிறார். அவருக்கு மரியாதை செய்யப்படுகிறது.

பெருமாள் அருகில் இருக்கும் ஸ்தானிகர் அருளிப்பாடி, கார் அளப்பானை அழைக்கிறார். ஸ்தானிகர் குரல் கேட்டு, 'ஆயிந்தேன் ஆயிந்தேன்' எனச் சொல்லி விரைந்து சென்று பெருமாள் முன்பு மிகப் பணிவாக நிற்கிறார் அளவைக்காரர். அவருக்கு தீர்த்தம், சந்தனம், மஞ்சள்பொடி அளித்து, பரிவட்டம் கட்டி, சடாரி சாத்தி மரியாதை செய்யப்படுகிறது. பெருமாள் பாதமான சடாரி சாத்தினாலே அளவைக்காரருக்கு உத்தரவு வந்துவிட்டது என்று பொருள். உடனே கார் அளப்பான் எனப்படும் அளவைக்காரர், பித்தளை மரக்கால் கொண்டு நெல்லை அளக்கத் தொடங்குகிறார். திருவரங்கம் என சொல்லி முதல் மரக்கால் நெல்லை அளந்து போடுகிறார். அடுத்து பெரிய கோயில் எனக் கூறி இரண்டாவது மரக்கால் நெல்லை அளந்து போடுகிறார். அதன் பின்னர் வரிசையாக மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என அளக்கப்படுகிறது. ஒன்பது என அளக்கும்போது எங்கிருந்தோ அசரீரியாக ஒரு குரல் கேட்கிறது. ‘நிரவி விட்டு அள’ என்று ஸ்தானிகர்தான் குரல் கொடுக்கிறார். ‘சரியாக அளந்து போடு’ என்று பெருமாளை கட்டளையிடுவதாக இது ஐதீகம்.

அந்தக் காலத்தில் இருந்து எல்லாமே எம்பெருமானின் நேரடி பார்வை நடைபெற்று வந்துள்ளதாக நம்பிக்கை. தெய்வ காரியங்களுக்கு வேண்டிய அனைத்து பொருட்களும் திருக்கொட்டாரத்தில் இருந்து எடுத்து அனுப்பப்படுகிறது. அந்த வகையில் திருக்கொட்டாரம் ஒரு பொக்கிஷம். அங்கு ஆறு தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைந்துள்ளன. நாடு செழிக்கவும் மக்கள் ஆரோக்கியமும், தானிய உற்பத்தி சேமிப்பும் மிக மிக முக்கியம். தற்போதும் அதை வலியுறுத்தி வருகிறது ஸ்ரீரங்கம் கோயிலின் நெல் அளவைத் திருநாள்.

உலகம் யாவுக்கும் படி அளப்பவர் பெருமாள். ஒவ்வொன்றாக எண்ணிப் போட்டால் எந்தக் காலத்தில் எண்ணி முடிப்பது? அதனால் அதன் பின்னர் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம், பத்து லட்சம், கோடி, கோடியோ கோடி என அளந்து போடப்படுகிறது. தனது நேரடிப் பார்வையில் 'நெல் அளவை' கண்ட நம்பெருமாள், அதன் பிறகு ஸ்ரீதேவி பூதேவியுடன் இணைந்து பூந்தேரில் எழுந்தருளி வீதி உலா வருகிறார், உலகிற்கெல்லாம் படியளக்கும் பெருமாள். இப்படியாக, ஸ்ரீரங்கத்தில் நெல் அளவை திருநாள் கொண்டாடப்படுகிறது .

Read More
ஆதிகுடி அங்குரேசுவரர் கோவில்

ஆதிகுடி அங்குரேசுவரர் கோவில்

சனி பகவானின் கால் ஊனம் சரியான தலம்

உடல் ஊனம், பக்கவாதம், விபத்தால் அங்கங்களின் வலிமை இழப்பு போன்ற குறைபாடுகளை போக்கும் தலம்

திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஆதிகுடி அங்குரேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் பிரேமாம்பிகை. அங்குரம் எனக் கூறப்படும் மண்வெட்டியால் தோண்டியபோது வந்த லிங்கம் என்பதால், இக்கோவில் இறைவனுக்கு அங்குரேசுவரர் எனப் பெயர் உண்டானது. முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் கட்டப்பட்டது இந்த ஆலயம்.

அகஸ்தியரால் வழிபடப்பட்ட தலம். சனி பகவான் தனது குறை நீங்கப் பெற்ற தலம் என தலபுராணம் கூறுகிறது. உடல் ஊனம், பக்கவாதம் மற்றும் நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களைப் போக்கும் ஒரு சக்திவாய்ந்த பரிகாரத் தலமாக இக்கோவில் விளங்குகின்றது.

இக்தலத்தில் வழிபட்டுதான் சனி பகவானின் கால் ஊனம் சரியானது. இக்கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் மிகப் பெரிய அளவில் விமல லிங்கம் அமைந்துள்ளது. இங்கு சனி பகவான் எப்போதும் விமல லிங்க மூர்த்தியை வழிபடுவதால், ஆதிகுடி அங்குரேசுவரர் கோவிலில், விமலலிங்க மூர்த்தி வழிபாடே சனி பகவான் வழிபாடாகவும் கருதப்படுகிறது.

இக்கோவிலில் உள்ள விமல லிங்கம், மிகப் பெரிய அளவில் இருப்பதுடன் ஆலயத்தில் நுழைந்தவுடன் கண்களைக் கவரும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

 உடல் சார்ந்த குறைபாடுகள், பக்கவாதம் மற்றும் அங்க வலிமை குறைபாடுகளை நீக்கும் "வெண்ணெய் காப்பு" வழிபாட்டிற்கு இத்தலம் மிகவும் பிரசித்தி பெற்றது. இத்தலத்து இறைவன், தன்னை ஆராதிக்கும் பக்தர்களின் உடல் ஊனத்தையும், மன ஊனத்தையும் விலக்கி அருள்புரிவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

விபத்தால் அங்க வலிமை இழந்திருந்தால், நடப்பு சந்ததியினர் ஊனம் அடைந்திருந்தால், பக்கவாதம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த விமல லிங்கத்தின் வலதுபுறத்தில் நன்றாகத் திரண்ட வெண்ணெய் காப்பும், இடதுபுறத்தில் வெண்ணெய் காப்பின் மேல் நிறைய மாதுளை முத்துகளைப் பதித்து வழிபட்டால் குணம் நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இத்தலம் நீத்தார் கடன் செய்யவும் உகந்த திருத்தலமாகும். இவ்வூரை காசிக்கு இணையாகச் சொல்வதுண்டு. இக்கோவிலுக்கு எதிரிலேயே மயானம் உள்ளது. தென் தமிழகத்தில் ஸ்ரீவாஞ்சியம் மற்றும் ஆதிகுடி என்ற இவ்விரு சிவத்தலத்திற்கு எதிரில் மட்டுமேதான் சுடுகாடு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Read More
திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்

வள்ளி மட்டும் மயிலாசனத்தில் அமர்ந்திருக்கும் அரிய காட்சி

திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம், வேதத்தின் பெயரால், சாமவேதீசுவரர் என்று அழைக்கப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இறைவியின் திருநாமம் லோகநாயகி. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவாரம் வைப்பு தலம் இது.

வள்ளியை திருமணம் செய்து கொண்ட பிறகு முருகப்பெருமான் எழுந்தருளிய தலம் தான் திருமங்கலம். பொதுவாக வள்ளியும், தெய்வானையும் முருகனோடு நின்ற கோலத்தில் தான் காட்சி அளிப்பார்கள். ஆனால் வள்ளிக்கு மயிலாசனத்தை முருகப்பெருமான் வழங்கியது இங்குதான். அதனால் மற்ற கோவில்களில் இல்லாத சிறப்பு இங்கு உண்டு. அதாவது முருகப்பெருமானும், தெய்வானையும் நின்ற கோலத்தில் இருக்க, மயிலின் மேல் அமர்ந்த கோலத்தில் வள்ளி காட்சியளிப்பது இக்கோவிலில் மட்டும்தான்.

இங்குள்ள முருகப்பெருமான் மற்ற கோவில்களில் உள்ளது போன்று, ஆறுமுகமும் 12 கரங்களும் இல்லாமல், ஆறுமுகமும், ஆனால் நான்கு கைகளுடன் சம்ஹார மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். கணவன்-மனைவி ஒற்றுமைக்கு இக்கோவில் முருகனை வழிபடுவது சிறப்பு. பிரிந்த தம்பதியினர் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால், தம்பதியினர் கூடி வாழக்கூடிய நிலை ஏற்படும் என்பது ஐதீகம்.

.

Read More
திருப்பைஞ்ஞீலி  ஞீலிவனேஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோவில்

திருமணத்தடை நீங்க வாழை மரத்திற்கு தாலி கட்டும் பரிகார பூஜை

எமதர்மன் குழந்தை வடிவில் இருக்கும் அபூர்வ தோற்றம்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 21 கி.மீ. தொலைவிலும், மண்ணச்சநல்லூரிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள தேவாரத் தலம் திருப்பைஞ்ஞீலி. இறைவனின் திருநாமம் ஞீலிவனேஸ்வரர். இக்கோவிலில் அம்மன் சன்னதி இரண்டு உள்ளது. ஒரு சன்னதியில் நீள்நெடுங்கண் நாயகியும், மற்றொரு சன்னதியில் விசாலாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிக்கின்றனர். ஞீலி என்பது மனிதர்கள் உண்ண இயலாத இறைவனுக்கு மட்டுமே படைப்பாகிற ஒரு வகைக் கல்வாழை. பைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். பசுமையான ஞீலி வாழையை தலவிருட்சமாக பெற்றதால் திருப்பைஞ்ஞீலி என்று இத்தலம் பெயர் பெற்றது.

சப்த கன்னியர் வாழை மர வடிவில் எழுந்தருளி இருக்கும் தலம்

பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிகளும் தங்களது திருமணத்திற்கு முன்பு இத்தலம் வந்து அம்பாளின் தரிசனம் வேண்டித் தவம் செய்தனர். அவர்களுக்கு அம்பாள் காட்சி தந்து, தகுந்த காலத்தில் நல்ல வரன்கள் அமையப்பெற்று சிறப்புடன் வாழும்படி வரம் தந்தாள். சப்தகன்னிகள் அம்பாளை இங்கே எழுந்தருளும்படி வேண்டினர். எனவே அம்பாள் இங்கே எழுந்தருளினாள். அவள் சப்த கன்னிகளிடம், 'நீங்கள் வாழை மரத்தின் வடிவில் இருந்து நீண்டகாலத்திற்கு என் தரிசனம் காண்பீர்கள்' என்றாள். அதன்படி சப்த கன்னிகள் வாழை மரங்களாக மாறி இங்கேயே தங்கினர்.

வாழை மரத்திற்கு தாலி கட்டும் பரிகார பூஜை

இந்த ஆலயத்துக்கென்றே விசேஷ வழிபாடான கல்(யாண) வாழைகளுக்கு முன்னே அமர்ந்து செய்து கொள்ளும் பரிகார பூஜை மற்றும் தோஷ நிவர்த்தி பூஜை அதிசயமானது. திருமண தோஷம் உள்ளவர்கள் வாழை மரத்திற்கு தாலி கட்டிப் பரிகார பூஜைகள் செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனநாதர் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்று கிழமை தினங்களில் பரிகாரம் செய்ய செல்வது சிறந்தது. இங்கு காலையும் மாலையும் வாழை பரிகார பூஜை செய்யப்படுகிறது. இதனால் நாகதோஷ நிவர்த்தி, திருமணத்தடை விலகுதல், பூரண ஆயுள் போன்ற மங்கலங்கள் நிறைவேறுமாம்.பிற மதத்தினரும் இந்த கல்வாழை பரிகார பூஜையில் கலந்து கொள்வது தனிச்சிறப்பாகும்.

எமதர்மன் குழந்தை வடிவில் இருக்கும் அபூர்வ தோற்றம்

இத்தலத்தில் அருளும் யமதர்மராஜனை சனிக்கிழமைகளில் வழிபட, சனி பகவான் அருள் கிட்டும்.

இத்தலத்தில் எமதர்மனுக்கு என்று அமைந்துள்ள தனிச் சன்னதி, ஒரு குடைவரைக் கோவிலாகும். பூமிக்கு அடியில் சற்று பள்ளத்தில் உள்ள இந்த குடைவரைக் கோவிலில் புடைப்பு சிற்பமாக சோமஸ்கந்தர் ரூபத்தில் சிவன் அம்பாள் இருவருக்கும் இடையே முருகன் அமர்ந்திருக்க,சுவாமியின் பாதத்தின் கீழே குழந்தை வடிவில் எமதர்மன் இருக்கிறார். இறைவன் பெயர் மிருத்யுஞ்சயர் , தாயார் தாட்சாயணி . மிருத்யுஞ்சயர் என்றால் எம பயம் போக்குபவர் என்று அர்த்தம். அதனால் இந்த சன்னதி முன்பு திருக்கடவூரில் செய்வது போல சஷ்டியப்தபூர்த்தி, ஆயுள்விருத்தி ஹோமம் ஆகியவை நடத்துகின்றனர்.

திருக்கடவூர் தலத்தில், மார்க்கண்டேயனுக்காக எமதர்மனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் சிவபெருமான். இதனால் உலகில் இறப்பு என்பதே இல்லாமல் போக பூமியின் பாரம் அதிகரித்தது. பாரம் தாங்காத பூமிதேவி சிவபெருமானிடம் முறையிட்டாள். சிவபெருமான் அதற்கிணங்கி தைப்பூச நாளன்று மீண்டும் எமதர்மனை இத்தலத்தில் தன் பாதத்தின் அடியில் குழந்தை உருவில் எழும்படி செய்து, தர்மம் தவறாமல் நடந்து கொள்ளும்படி அறிவுரை கூறி மீண்டும் தன் பணியை செய்து வரும்படி அருள் செய்தார்.

எமதர்மன் சனி பகவானுக்கு அதிபதி என்பதாலும், எமனுக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளதாலும், இத்தலத்தில் நவக்கிரக சன்னதி இல்லை . இத்தலத்தில் அருளும் யமதர்மராஜனை சனிக்கிழமைகளில் வழிபட, சனி பகவான் அருள் கிட்டும். அதனால் சனிபகவானின் பாதிப்புக்கு உள்ளானவர்கள் இக்கோவிலுக்கு வந்து பிராத்தனை செய்கின்றனர்.

Read More
தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில்

தென் கேதார்நாத் என்று போற்றப்படும் தலம்

வேதங்கள், நான்கு தூண்களாக இறைவனின் அருகில் இருக்கும் அபூர்வ அமைப்பு

திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கோவிந்தவல்லி.

இமயமலை கேதார்நாத் தலத்தில் உள்ள கேதாரீசுவரரை வழிபட்டால் என்ன பலனோ அதே பலன் தரக்கூடிய தலம், தின்னக்கோணம். இத்தலத்து இறைவனின் சிவலிங்கத் திருமேனியானது பசு வடிவில் சுயம்பாக கிழக்கு மேற்காக 7.5 அடி நீளமும் 3 அடி உயரமும் கொண்டது.

பசுவுக்கு நெற்றியில் திருநீற்றுப்பட்டை, நிறைய மாலைகள், ஆபரணங்கள், வஸ்திரங்கள் உடலை சுற்றி சார்த்தி படுத்திருந்தால் எப்படி இருக்குமோ, அது போல் தான் பசுபதீஸ்வரர் சுயம்புவாக பசு உருவில் காட்சி தருகிறார்.

மூலவர் பசுபதீசுவரர், கேதார்நாத் இறைவனைப் போல பசுவின் திருமேனி கொண்டு முகவாயைத் தரையில் வைத்து படுத்திருக்கும் நிலையில் அமைந்துள்ளதால், இத்தலம் தென் கேதார்நாத் என்று போற்றப்படுகின்றது.

எனவே கேதார்நாத் சிவாலாயத்துக்குச் செல்ல முடியாதவர்கள், தின்னக்கோணம் கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டால், கேதார்நாத் சென்று வந்ததன் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கேதார்நாத் இறைவனைப் போல அமைந்துள்ளதால், இத்தலம் தென் கேதார்நாத் என்று போற்றப்படுகின்றது.

இறைவன் பசுபதீசுவரரின் வலது பக்கத்தில் நான்கு தூண்கள் ஒரே வரிசையில் அமைந்துள்ளன. இப்படி மூலவரின் பக்கத்தில் தூண்கள் அமைந்திருப்பதை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது. இந்த அமைப்பு இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

வேதங்களின் பொருளை சிவபெருமான் விளக்கிக் கொண்டிருந்தபோது பார்வதி தேவியின் கவனம், அருகில் இருந்த காமதேனுவின் மீது சென்றது. அதனால் சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவி, இத்தலத்தில் தவமிருந்து மீண்டும் இறைவனை அடைந்தார்.

அந்த வகையில் நான்கு வேதங்களின் பெருமைகளையும் உணர்த்தும் வகையில், இக்கோவிலின் கருவறைத் தூண்கள் நான்கும், வேதங்கள் நான்கை எடுத்துரைப்பதாகக் கூறப்படுகின்றன.

பிராத்தனை

பித்ருக்களால் விடப்பட்ட சாபம், தோஷம், களத்ர தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும் பரிகாரத்தலமாக தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் திருக்கோவில் விளங்குகிறது.

பசுக்கு எதாவது தீங்கு இழைத்து அதனால் சாபம் பெற்றவர்கள், பசுவும் கன்றும் தானம் வழங்க வேண்டிய தலம் இது. திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க இங்கு வந்து வழிபடலாம்.

Read More
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்

வைகுண்ட ஏகாதசியின் சிறப்புகள்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாக நிகழ்வது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வருடம் முழுவதும் விழாக்கள் நடைபெறுவதால், இது 'பூலோக வைகுண்டம்'என்று அழைக்கப்படுகிறது. ஆண்டின் 365 நாட்களில் 322 நாட்கள் பெருமாளுக்கு பல்வேறு சிறப்புத் திருவிழாக்கள் மற்றும் உற்சவங்கள் நடைபெறுகின்றன.அத்தகைய திருவிழாக்களில் முதன்மை பெறுவது வைகுண்ட ஏகாதசி ஆகும். அதன் சிறப்பை இப்பதிவில் நாம் காணலாம்.

திதிகளில் பெருமாளுக்கு உகந்தது ஏகாதசி திதி. வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் வரும் ஏகாதசி திதிகள் சிறப்புமிக்கவை.பெருமாளுக்கு இருக்கப்படும் விரதங்களில் மிக முக்கியமானது ஏகாதசி விரதம்.

ஏகாதசி விரதம்

முன்னொருகாலத்தில் வாழ்ந்த முரன் என்னும் அசுரன் தேவர்களையும், மனிதர்களையும் துன்புறுத்திவந்தான். அவர்கள் தங்களை காப்பாற்றும் படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். முரனுடன் விஷ்ணு போரிட்டு வெற்றி பெற்றார். பிறகு சென்று ஓய்வெடுத்து கொண்டிருந்தார். அப்போது முரன், பெருமாளைக் கொல்ல வாளை ஓங்கியபோது, விஷ்ணு தன் உடலிலுள்ள சக்தியை ஒரு பெண் வடிவத்தில் தோற்றுவித்தார். அவள் முரனுடன் போரிட்டு வென்றாள்.

அசுரனை வென்ற பெண்ணுக்கு ஏகாதசி என்று பெயர் சூட்டினார் பெருமாள். அசுரனை வென்ற நாள் ஏகாதசி என அழைக்கப்படும் என்றும், அன்று தன்னை வழிபடுவோருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாகவும் வரமளித்தார். அந்த தினமே வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஏகாதசி திதி விஷ்ணுவின் அம்சமாக கருதப்படுவதால், ஏகாதசி தினத்தில் விரதம் இருந்தால் திருமாலின் அருளை முழுவதுமாக பெற முடியும். ஏகாதசி விரதம், பாவங்களை போக்குவதுடன் மோட்சத்தை தரக் கூடியது. வாழ்நாள் முழுவதும் ஏகாதசி விரதம் இருப்பவருக்கு மறுபிறவி கிடையாது. தேவர்களுக்கு நிகரான அந்தஸ்தினை அவர்கள் பெறுவார்கள். அதிலும் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி எனப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி உற்சவம்

பிரம்மாவின் அகங்காரத்தை அழிக்கத் தோன்றிய மது - கைடபர் ஆகிய அசுரர்கள் தேவர்கள், முனிவர்கள் என அனைவருக்கும் தொல்லை கொடுத்தனர். அவர்களை அழிக்க விஷ்ணு ஒரு மாதம் தொடர்ந்து போரிட்டார். பின்பு அவர்களை சம்ஹாரம் செய்தார். ஆனால் அவர்கள் விஷ்ணுவிடம் பெற்ற வரத்தின் காரணமாக வைகுண்டப் பதவியை அடைந்தனர். அப்படி அவர்கள் பரம பத வாசலை அடைந்தநாள் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி. அன்று பெருமாள் அவர்களுக்காக வைகுண்ட வாசலைத் திறந்தருளினார். பெருமாளைச் சரணடைந்த அசுரர்கள், 'தங்களுக்கு மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி அன்று வைகுண்ட வாசலைத் திறந்தருளியது போல பெருமாள் கோயில்களில் இந்த நாளில் சொர்க்க வாசலைக் கடக்கிறவர்களுக்கும் வைகுண்ட வாசலைத் திறந்தருள வேண்டும் என்றும் அந்த நாள் ஒரு உற்சவமாகக் கொண்டாடப்பட வேண்டும்' என்றும் வேண்டிக்கொண்டனர். பெருமாளும் அதற்கு இசைந்தார். அந்த ஏகாதசி திதியே வைகுண்ட ஏகாதசி எனப் போற்றப்படுகிறது.

வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியா விட்டாலும், வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமாவது விரதம் இருந்து பெருமாளை வழிபட வேண்டும். வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்தால் இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்களையும் நீக்கக் கூடியது. வைகுண்ட ஏகாதசி அன்று இறப்பவர்களுக்கும் மறுபிறவி என்பது கிடையாது. வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர்.

Read More
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கநாதரின் பாதணிகள்

ஸ்ரீரங்கம் கோவிலில் 'ஏழு' என்ற எண்ணிக்கையில் அமைந்த சிறப்பு அம்சங்கள்

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இக்கோவில் மூலவர் ரங்கநாதப் பெருமானுக்கு, ஆறு மாதத்திற்கு ஒருமுறை அவர் காலில் அணிந்திருக்கும் பாதணிகள் மாற்றப்படுகின்றன.

இந்த பாதணிகள் ஒவ்வொன்றும் சுமார் இரண்டிலிருந்து, மூன்று அடி நீளம் உள்ளது. இவை சுமார் 30-40 அடி உயரம் கொண்ட ஒரு மனிதருக்கானதைப் போன்று இருக்கும். இந்த பாதணிகள் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரத்யேகமாகச் செய்யப்படுகின்றன.

வலது பாதணி ஒருவரிடமும், இடது பாதணி மற்றொருவரிடமும், செய்யக் கொடுப்பார்கள். இருவரும், ஒரே ஊரில் இல்லாமல், வெவ்வேறு ஊர்களில் இருப்பவர்கள். 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு பாதணிகளைச் செய்வார்கள்.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை பழைய பாதணிகளை ஸ்ரீரங்கநாதரின் திருவடிகளை விட்டு கழட்டிவிட்டு, புதிய பாதணிகளை மாற்றிவிடுவார்கள். அதிசயமான விஷயம் என்னவென்றால், திருவடிகளை விட்டு, எடுத்துள்ள, பழைய பாதணிகள் இரண்டிலும், பாத பகுதிகளில், தேய்மானம் இருக்கும்.

இவ்வாறு, மாற்றியுள்ள, தேய்மானம் அடைந்த, ஸ்ரீ ரங்கநாதர் பாதணிகள் ஸ்ரீரங்கம் திருக்கொட்டாரத்தில் தூணில் மாட்டி வைக்கப்படும். ஸ்ரீரங்கம் கோவில் சென்றால், இந்த அரங்கன் அணிந்து, தேய்மானம் கண்டுள்ள, பழைய பாதணிகளை, கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம்.

ஸ்ரீரங்கம் கோவிலில் 'ஏழு' என்ற எண்ணிக்கையில் அமைந்த சிறப்பு அம்சங்கள்

108 வைணத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாக திகழும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் 'ஏழு' என்ற எண்ணிக்கையில் பல சிறப்பு அம்சங்கள் அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை நாம் இங்கே காணலாம்.

ஏழு உலகங்களை அடக்கியது இந்த கோவில் என்ற பொருளில் ஏழு பிரகாரங்களுடன், ஏழு மதில்களைக் கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்.

பெரிய என்ற சொல்லால் அழைக்கப்படும் ஏழு பெருமை உடைய அம்சங்கள் இக்கோவிலில் அமைந்துள்ளது. அவை, 1) பெரிய கோவில், 2) பெரிய பெருமாள், 3) பெரிய பிராட்டியார், 4) பெரிய கருடன், 5) பெரிய வசரம். 6) பெரிய திருமதில் 7) பெரிய கோபுரம் ஆகியவை ஆகும். இப்படி அனைத்தும் 'பெரிய' என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.

ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் ஏழாவது அவதாரமாகும். கோவிலில் நான்கு திசைகளிலும் ராமபிரான் சன்னதி அமைந்திருப்பது ஒரு தனி சிறப்பாகும்.

பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் ஏழு கோபுரங்கள் உள்ளன.

கோவிலில் உள்ள ஏழு பிரகாரங்களிலும் பெருமாளின் ஏழு திருவடிகள் உள்ளன.

இக்கோவிலில் நடைபெறும் ஏழு சேவைகள், வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும்.

இக்கோவில் வளாகத்தில் உள்ள ஏழு மண்டபங்களில், உற்சவர் நம்பெருமாள் ஒரு நாள் மட்டுமே எழுந்தருள்வார். 

Read More
தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில்

மானுட உருவம் கொண்டு அம்பிகை இறைவனை பூஜை செய்த தலம்

சிவலிங்கத் திருமேனியில் எழுந்தருளியிருக்கும் அபூர்வ விநாயகர்

திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கோவிந்தவல்லி. கோவிந்தவல்லி என்றால் உயிர்களுக்கெல்லாம் தலைவி என பொருள் உண்டாம். இந்த அம்பிகைக்கு சிவகாமசுந்தரி, கோவர்த்தனாம்பிகை அம்மன் போன்ற பல்வேறு பெயர்களும் உண்டு.

ஒரு சமயம் கைலாயத்தில் சிவபெருமான், பார்வதிதேவிக்கு வேதசிவாகமப் பொருளை உணர்த்திக் கொண்டிருந்தபோது, அம்பிகையின் கவனம் மாறும்படியாக காமதேனு அவ்வழியே செல்ல, தேவியின் கவனம் அந்த காமதேனு மீது மாறுவதை உணர்ந்து கோபமடைந்த சிவபெருமான், அம்பிகையை நோக்கி 'பூலோகத்தில் திண்ணக்கோணம் அடைந்து பங்குனி மாத வளர்பிறையில் வரும் வசந்த நவராத்திரி என்னும் ஒன்பது ராத்திரி நாள்கள் நீ தவமிருக்கும்போது, நான் பசுவாக உனக்கு காட்சியளிப்பேன். அதன் பின் என்னை வந்து நீ அடைவாயாக' என்று பார்வதி தேவிக்கு சாபமிட்டு அதற்கான விமோசனத்தையும் அருளினார். அதன்படி மானுட உருவம் கொண்டு இடையர் குலத்தில் அம்பிகை பிறந்து, சிவபெருமானை நோக்கி தவமிருந்து வரம் பெற்று மீண்டும் அடைந்தது இந்தக் கோவிலில்தான்.

சிவபெருமானால் சாபம் விட்டு, மானுட வேடம் பூண்டு, பின்னர் தவமிருந்து தேவி அவரிடம் இணைந்த திருக்கோயில் என்பதால், பங்குனி மாத வளர்பிறையில் வசந்த நவராத்திரி உற்சவம் இறைவிக்கு நடத்தப்படுகிறது.

சிவலிங்கத் திருமேனியில் எழுந்தருளியிருக்கும் அபூர்வ விநாயகர்

இத்தலத்தில் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் லிங்கோத்பவ வலம்புரி விநாயகரின் தோற்றமானது அபூர்வமான ஒன்றாகும். இவர் சிவலிங்க உருவம் கொண்டு, அதில் நான்கடி உயர திருமேனியுடன், புடைப்புச் சிற்பமாக வலம் சுழித்த துதிக்கையுடன் காட்சி தருகிறார். அதனால்தான் இவர் லிங்கோத்பவ வலம்புரி விநாயகர் என அழைக்கப்படுகிறார். இப்படி சிவலிங்கத் திருமேனியில் எழுந்தருளியிருக்கும் விநாயகரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

Read More