திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்

வள்ளி மட்டும் மயிலாசனத்தில் அமர்ந்திருக்கும் அரிய காட்சி

திருச்சி மாவட்டம்  லால்குடியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம்,  வேதத்தின் பெயரால், சாமவேதீசுவரர் என்று அழைக்கப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இத்தல இறைவனின் அருளால் ஜைமினி முனிவர் சாமவேதத்தை 1000 கிளைகளாகப் பிரித்தார். எனவே இவ்விறைவனுக்கு சாமவேதீஸ்வரர் என்று பெயர் வந்தது.

மூன்று கோடி சிவலிங்கத்தைத் தரிசனம் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ, அந்த பலன் திருமங்கலம் சாமவேதீசுவரரைத் தரிசித்தால் கிடைக்கும் என்று தலபுராணம் கூறுகின்றது. (newly added)

இறைவியின் திருநாமம் லோகநாயகி. பரசுராமர் வழிபட்ட தலம். இங்குள்ள தீர்த்தம் பரசுராம தீர்த்தம் எனவும் இத்தலம் பரசுராமேஸ்வரம் எனவும் அழைக்கப்படுகிறது. சண்டீஸ்வரர் வழிபட்ட தலம். சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவாரம் வைப்பு தலம் இது.

 ரைக்வ ரிஷி பித்ரு சாபம் நீங்க இங்கு வணங்க வந்தார். ஆனால் இங்கு நதி இல்லாததால் கயா செல்ல சங்கல்பித்தார். இறைவன் உடனே அங்கேயே கயாபல்குனி என்ற நதியை உருவாக்கினார். இங்கு பித்ரு வழிபாடு செய்ய கயாவில் செய்த புண்ணியம் கிட்டும்.

 வள்ளியை திருமணம் செய்து கொண்ட பிறகு முருகப்பெருமான் எழுந்தருளிய தலம் தான் திருமங்கலம். பொதுவாக வள்ளியும், தெய்வானையும் முருகனோடு நின்ற கோலத்தில் தான் காட்சி அளிப்பார்கள். ஆனால் வள்ளிக்கு மயிலாசனத்தை முருகப்பெருமான் வழங்கியது இங்குதான்.

அதனால் மற்ற கோவில்களில் இல்லாத சிறப்பு இங்கு உண்டு. அதாவது முருகப்பெருமானும், தெய்வானையும் நின்ற கோலத்தில் இருக்க, மயிலின் மேல் அமர்ந்த கோலத்தில் வள்ளி காட்சியளிப்பது இக்கோவிலில் மட்டும்தான்.

இங்குள்ள முருகப்பெருமான் மற்ற கோவில்களில் உள்ளது போன்று, ஆறுமுகமும் 12 கரங்களும் இல்லாமல், ஆறுமுகமும், ஆனால் நான்கு கைகளுடன் சம்ஹார மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். கணவன்-மனைவி ஒற்றுமைக்கு இக்கோவில் முருகனை வழிபடுவது சிறப்பு. பிரிந்த தம்பதியினர் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால், தம்பதியினர் கூடி வாழக்கூடிய நிலை ஏற்படும் என்பது ஐதீகம்.

 

திருச்சி மாவட்டம்  லால்குடியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலம்.

Previous
Previous

திருச்சி ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் கோவில்

Next
Next

மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவில்