கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில்
நவக்கிரகங்களை சுற்றமுடியாதபடி இருக்கும் அபூர்வ வடிவமைப்பு
கும்பகோணம் சென்னை சாலையில், 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில். இக்கோயில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. ] கங்கை ஆறு வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக, கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரத்தை முதலாம் இராசேந்திரன் அமைத்து அங்கு இக்கோவிலையும் கட்டினான். லிங்க வடிவில் உள்ள இறைவன் பிரகதீஸ்வரரின் உயரம் 13 அடி. சுற்றளவு 59 அடி.
இக்கோவில் உள்ளே நுழைந்து செல்லும்போது வலது பக்கம் நவக்கிரக பீடமுள்ளது. இந்த கோவிலில் நவக்கிரகங்கள் அமைந்திருக்கும் விதம் விந்தையானது. பொதுவாக சிவாலயங்களில் நவக்கிரகங்கள், தனித்தனியாக ஒரு பீடத்தின் மேல் எழுந்தருளி இருப்பார்கள். ஆனால், இங்கு ஒன்பது கிரகங்களும் ஒரே கல்லில் வான சாஸ்திர முறைப்படி செதுக்கப்பட்டுள்ளன. இந்த கல்லில் தாமரைப்பூ வடிவில் நவக்கிரகங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. தாமரை மலர் வடிவ பீடத்தின் நடுவில், 7 குதிரைகள் பூட்டிய தேரில் மேற்கு நோக்கி சூரிய பகவான் அமர்ந்துள்ளார். தேரை அருணன் சாரதியாக இருந்து ஓட்டுகிறான். தேரிலுள்ள 10 கடையாணிகளும் கந்தர்வர்களை குறிப்பிடுகின்றன. சூரியனைச் சுற்றி, மற்ற எட்டு கிரகங்களும் தாமரை மலர் இதழ்கள் போன்ற அமைப்பில் உள்ளன. ஒருபுறம் 12 பேர் நாதஸ்வர கருவிகளை இசைக்கும் கோலத்தில் காட்சி தருகின்றனர்.
பொதுவாக கோவில்களில் நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபடுவோம். ஆனால் இக்கோவிலில் அவற்றை சுற்றி வந்த வழிபட முடியாதபடி நவக்கிரகங்களை வடிவமைத்திருப்பது, வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத ஒரு அரிய காட்சியாகும். நவக்கிரகங்கள் இந்த உலகை சுற்றி வருகின்றன. எனவே அதை யாரும் சுற்றக்கூடாது என்பதன் அடிப்படையில் இங்கு நவக்கிரகங்களை சுற்றமுடியாதபடி மண்டப அமைப்பு உள்ளது.
ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோவில்
அந்தணர் வேடத்தில் தோன்றி அரசனின் பிரச்சனையை தீர்த்த பொய்யாமொழி பிள்ளையார்
மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில், மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் ஆக்கூர். இறைவன் திருநாமம் தான்தோன்றீசுவரர். இறைவியின் திருநாமம் வாள் நெடுங்கன்னி அம்மன்.
இக்கோவில் தெற்கு குளக்கரையில் உள்ள ஒரு சன்னதியில் வீற்றிருக்கும் பிள்ளையார், பொய் சொல்லா பிள்ளையார் (பொய்யாமொழி பிள்ளையார்) என்று அழைக்கப்படுகிறார். இவர் அரசருக்கு அவருடைய பிரச்சனைக்குத் தீர்வு சொல்லும் வகையில் பிராமண வேடத்தில் தோன்றியவர், எனவே இவர் பொய்யாமொழி விநாயகர் என்றும் போற்றப்படுகிறார்.
இத்தலத்தில் கோச்செங்கட்சோழன் தான்தோன்றீசுவரர் கோவில் கட்டத் துவங்கினான். கோவில் பணிகள் நடக்கும் போது, முதலில் கோவிலுக்கான மதில் சுவரை எழுப்பினான். காலையில் கட்டப்பட்ட மதில் சுவர் இரவில் தானாக விழுந்து விடும். இப்படி பலமுறை நடந்தது. கோச்செங்கட்சோழனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. பொல்லாப் பிள்ளையார் அந்தண ரூபத்தில் வந்து மன்னனிடம் என்ன பிரச்னை என்று கேட்கிறார். அதற்கு மன்னன், சிவனுக்கு கோவில் கட்ட வேண்டும், ஆனால் மதில் சுவர் கட்டியவுடன் இடிந்து விழுந்து விடுகிறது என்றான். அதற்கு விநாயகர், நீ இங்குள்ள குளத்தில் மூன்றே முக்கால் நாழிகை மூழ்கி எழுந்து பார். உனக்கு எல்லாம் சரியாகும் என்றார். மன்னனுக்கோ, குளத்தில் மூழ்கினால் மதில் சுவர் எப்படி நிற்கும் என்று சந்தேகம். இதையறிந்த விநாயகர், காசியை விட இந்த குளத்திற்கு வீசம் அதிகம். நீ குளித்து எழுந்து பார் என்றார். அதன்படி கோச்செங்கட்சோழன் குளத்தில் மூழ்கி எழ, மதில் சுவரில் இருந்து கருவறை வரை எல்லாம் சரியாக அமைந்தது.
இப்படி கோச்செங்கட்சோழனுக்கு அருளிய பொல்லாப் பிள்ளையார் நம் அனைவர்களுக்கும் வேண்டியதை வேண்டியபடி தந்தருள்கிறார்.
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்
இடுப்பில் குழந்தையை தாங்கிய வடிவில் உள்ள அம்பிகையின் அரிய தோற்றம்
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத் தலம் திருவெண்காடு. இறைவன் திருநாமம் சுவேதாரண்யேசுவரர். இறைவியின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை, பெரியநாயகி.
திருஞான சம்பந்தர் திருவெண்காட்டின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. ஆதலின், இத்தலத்தை மிதித்தற்கஞ்சி 'அம்மா' என்று அழைத்தார். அது கேட்டுப் பெரியநாயகி அம்மை அங்கு தோன்றி திருஞானசம்பந்தரை இடுப்பில் வைத்துக்கொண்டு கோவிலுக்கு அழைத்து வந்தார். பிள்ளையைத் தம் இடுப்பில் தாங்கிய வடிவில் உள்ள அம்பாளின் சிலை பிரம்ம வித்தியாம்பிகை கோவிலின் மேற்கு உட்பிரகாரத்தில் உள்ளது. சம்பந்தர் அம்பாளைக் கூப்பிட்ட இடத்திலுள்ள குளத்தைக் 'கூப்பிட்டான் குளம்' என்பர். அது இன்று 'கேட்டான் குளம்' என்று வழங்குகிறது. அங்குள்ள விநாயகர், ஞானசம்பந்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில்
முருகப் பெருமான் வேலும் மயிலும் இல்லாமல் தனித்து நிற்கும் தேவாரத்தலம்
முன்புறம் ஐந்து முகங்களும், பின்னால் ஆறாவது முகமும் அமைந்திருக்கும் முருகனின் அபூர்வ தோற்றம்
திருப்பூர் நகரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம், திருமுருகன்பூண்டி. இறைவன் திருநாமம் முருகநாதேசுவரர், திருமுருகநாதர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. முருகனால் இத்தலத்து சிவபெருமான் பிரதிஷ்டைசெய்யப்பட்டதால், திருமுருகநாதர் என்று அழைக்கப்படுகிறார். இதை விளக்கும் விதமாக, முருகன் சன்னதியில் லிங்கம் ஒன்று உள்ளது. முருகன் இங்கு வந்து சிவனை வழிபடும் முன்பு, தனது வேலை, கோயிலுக்கு வெளியே சற்று தள்ளி தரையில் ஊன்றினார். மயில் வாகனத்தை அதன் அருகில் நிறுத்தி வைத்தார். இதனால் வேலும் மயிலும் இல்லாமல், தனித்து நிற்கிறார்.
பெரும்பாலான கோவில்களில், சுப்ரமணியர் சிலை, முன்புறம் மூன்று முகங்களும், பின்னால் மூன்று முகங்களுடனும் அமைந்திருக்கும். இக்கோவிலில் மட்டும், ஐந்து முகங்கள் முன்புறமும், ஆறாவது முகம், பின்னாலும் அமைந்துள்ளது. அந்த முகம், 'அதோ முகம்' என அழைக்கப்படுகிறது. இம்முகத்தை கண்ணாடியில் மட்டுமே பார்க்க முடியும். அதேபோல், தமிழகத்தில் தெற்கு நோக்கி சுப்ரமணிய சுவாமி அமர்ந்திருப்பது இத்தலத்து தனிச்சிறப்பு. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலுக்கு வந்து, வழிபட்டு, அதோ முகத்தை பார்த்தால், மனநிலை சரியாகி விடும் என்பது நம்பிக்கை.
மணிமங்கலம் ராஜகோபால சுவாமி கோவில்
சங்கும், சக்கரமும் இடம் மாறி இருக்கும் பெருமாளின் வித்தியாசமான தோற்றம்
சென்னை மாநகரம் தாம்பரம் பகுதியிலிருந்து 9 கி.மீ. தொலையில் அமைந்துள்ளது மணிமங்கலம் ராஜகோபால சுவாமி கோவில். தாயார் திருநாமம் செங்கமலவல்லி. இக்கோவில் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
கருவறையில் மூலவர் ராஜகோபாலர் நான்கு கைகளுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். பொதுவாக பெருமாள் கோவில்களில் வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் பெருமாள் வைத்திருப்பார். ஆனால் இத்திருத்தலத்தில் வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரமும் வைத்திருக்கும் கோலத்தில் அருள் பாலிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
கிருஷ்ணராக அவதரித்த மகாவிஷ்ணு, குருக்ஷேத்ர போரின்போது, அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்தார். போரில் ஆயுதங்களை பயன்படுத்த மாட்டேன் என உறுதி பூண்டிருந்த அவர், போர் அறிவிப்பிற்காக, சங்கு மட்டும் வைத்துக்கொண்டார். அவரது சங்கின் ஒலியைக் கேட்டதுமே, எதிரிப்படையினர் அஞ்சி நடுங்கினர். இவ்வாறு கிருஷ்ணர் குருக்ஷேத்ர போரின்போது, வலது கையில் சங்கு வைத்து ஊதியதன் அடிப்படையில் இங்கு மகாவிஷ்ணு, வலது கையில் சங்கு வைத்தபடி காட்சி தருகிறார். வலது கையில் இருக்க வேண்டிய சக்கரம், இடது கையில் இருக்கிறது.
சிவன் சன்னதிகளில்தான், கோஷ்டத்தில் விநாயகர் இருப்பார். ஆனால், இக்கோயிலில் பெருமாள் சன்னதி கோஷ்டத்தில் விநாயகர் இருப்பது தனி சிறப்பாகும். மேலும் கோஷ்டத்தில் ஒரு கையில் தண்டம், மற்றோர் கையில் பிரயோக சக்கரத்துடன் காட்சி தரும் இரண்டு பெருமாள் திருமேனிகளையும் தரிசிக்கலாம். வடக்கு கோஷ்டத்தில் வலது காலை மடக்கி அமர்ந்து, இடது கையை தரையில் ஊன்றியபடி, பிரயோகச் சக்கரத்துடன் பரமபதநாதர் காட்சி தருகிறார். இவரிடம் வேண்டிக்கொள்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
வெளியகரம் பிருத்வீச்வரர் கோவில்
முருகப் பெருமான் ஒரு முகமும், நான்கு கரங்களும் கொண்டு காட்சி அளிக்கும் திருப்புகழ் தலம்
திருத்தணியிலிருந்து 37 கி.மீ தொலைவில், கொசஸ்தலை ஆற்றின் கரையில் அமைந்த தலம் வெளியகரம் பிருத்வீச்வரர் கோவில். நகரி வழியாகவும் (63 கி.மீ) செல்லலாம். இறைவியின் திருநாமம் புவனேஸ்வரி அம்மன். இத்தலத்திற்கு வெள்ளிகரம், வள்ளிகரம் என்ற பெயர்களும் உண்டு.
இத்தலத்து முருகப் பெருமான் சுமார் மூன்றடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். அவருக்குப் பின்புறம் மயில் உள்ளது. அவர் ஒரு முகமும், நான்கு கரங்களும் கொண்டுள்ளார். பின்னிரு கரங்களில் வஜ்ர சக்தியும், முன் வலக் கரம் அபய முத்திரையிலும், முன் இடக் கரம் இடுப்பிலும் வைத்தபடி காட்சி அளிக்கிறார். இரு புறமும் வள்ளி,தேவயானை உள்ளனர்.
இத்தலத்து முருகனை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் போற்றி பாடியுள்ளார். மொத்தத் திருப்புகழ்ப் பாடல்களிலும் எட்டு விதமான சந்தங்கள் வந்துள்ள ஒரே தலப் பாடல் வெளியகரத்துக்கு மட்டுமே உரியது. வெள்ளிகரம் முருகனைப் பாடிய ஒன்பது திருப்புகழ் பாடல்களில் (நவ ரத்ன திருப்புகழ்) வள்ளி மலை, வள்ளியின் பிறப்பு, வள்ளி குருவியோட்டிய தினைப் புனம், அவள் கொடுத்த தினை மாவு, அவள் மீது மையல் கொண்டது, அவள் கரம் பிடித்தது ஆகியவற்றையும் பாடி இன்புறுகிறார்.
பிரதோஷ வகைகள்
பிரதோஷ வகைகள்
சிவாலயங்களில் மாதத்தில் இருமுறை பிரதோஷ வழிபாடு செய்யப்படுகிறது. பிரதோஷ வழிபாட்டில் 20 வகைகள் உள்ளன. அவை, நித்திய பிரதோஷம், பட்சப் பிரதோஷம், மாசப் பிரதோஷம், நட்சத்திரப் பிரதோஷம், பூரண பிரதோஷம், திவ்யப் பிரதோஷம், தீபப் பிரதோஷம், அபயப் பிரதோஷம் (சப்தரிஷி பிரதோஷம்), மகா பிரதோஷம், உத்தம மகா பிரதோஷம், ஏகாட்சர பிரதோஷம், அர்த்தநாரி பிரதோஷம், திரிகரண பிரதோஷம், பிரம்மப் பிரதோஷம், அட்சரப் பிரதோஷம், கந்தப் பிரதோஷம், சட்ஜ பிரதோஷம் மற்றும் மேலும் சில. ஒவ்வொரு பிரதோஷ வகைக்கும் தனிப்பட்ட வழிபாட்டு முறைகளும், பலன்களும் உண்டு.
நித்திய பிரதோஷம்
தினமும் மாலை வேளையில் சூரிய அஸ்த்தமனத்திற்கு முந்தைய 90 நிமிடங்கள் நித்திய பிரதோஷம் எனப்படும். இந்த நேரத்தில் தினம் தோறும் சிவனை வணங்குவது நல்லது.
பட்சப் பிரதோஷம்
அமாவாசைக்குப் பிறகு வரும் திரயோதசி திதியில் வரும் பிரதோஷம்.
மாசப் பிரதோஷம்
ஒவ்வொரு மாதமும் வரும் பிரதோஷம்.
நட்சத்திரப் பிரதோஷம்
குறிப்பிட்ட நட்சத்திரம் வரும் பிரதோஷம்.
பூரண பிரதோஷம்
பௌர்ணமி திதியில் வரும் பிரதோஷம்.
திவ்ய பிரதோஷம்.
பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தால் அது திவ்ய பிரதோஷம் எனப்படும். அன்று மரகத லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் முன்ஜென்ம கர்மம் விலகும்.தீராத வியாதிகள் தீரும். வழக்கு தொல்லைகள் அகலும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். இதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் பஞ்சலோகத்தால் ஆன சிவலிங்கத்திற்கு அபிழேகம் செய்தும் பூரண பலனை பெறலாம்.
தீபப் பிரதோஷம்
தீபங்கள் ஏற்றி வழிபடப்படும் பிரதோஷம். உங்கள் வயது என்னவோ அதற்க்கு ஏற்றார் போல் அதே எண்ணிக்கையில் விளக்கேற்றி வணங்கலாம்.
மகா பிரதோஷம்
தேய்பிறை திரயோதசி திதியும், சனிக்கிழமையும் சேர்ந்து வருவது மகா பிரதோஷம் எனப்படும். அன்று முறையாக விரதம் இருந்து சிவாலயம் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
சப்தரிஷி பிரதோஷம்
பிரதோஷ காலத்தில் முறையாக பூஜைகளை முடித்த பின், வெட்ட வெளியில், வானம் முழுமையாக தெரிகிற இடத்தில் நின்று கவனித்தால் சப்தத ரிஷி மண்டலம் என்று சொல்லக்கூடிய நட்ச்சத்திர கூட்டம் தெரியும். அந்த ரிஷிகளை வணங்கினால் அவர்கள் ஆசிர்வாதம் கிடைக்கும். ஒரு வேலை வானம் தெளிவாக தெரியாவிட்டால் கிழக்கு முகம் நின்று சப்த ரிஷிகளை மனதில் தியானித்து வணங்கலாம்.
ஏகாட்ச்சர பிரதோஷம்
வருடத்தில் ஒரு முறை மட்டும் வரும் மகா பிரதோஷத்தை ஏகாட்ச்சர பிரதோஷம் என்பார்கள். அன்றைய தினம் சிவாலயம் சென்று ஓம் என்ற பிரணவ மந்திரத்தை சொல்லி வழிபட்டால் கோடி தோஷம் விலகும்.
அர்த்தநாரி பிரதோஷம்
வருடத்தில் இரண்டு முறை மட்டும் மகா பிரதோஷம் வந்தால், அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் பிரிந்து வாழும் தம்பதிகள் சிவாலயம் சென்று வழிபட்டால் ஓன்று சேர்ந்து வாழலாம். மேலும் கருத்து வேற்றுமையோடு வாழும் தம்பதிகள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் எல்லா நம்மையும் பெறலாம். பிரித்தவர்கள் கூடுவார்கள்.
திரிகரண பிரதோஷம்
வருடத்திற்கு மூன்று முறை மகா பிரதோஷம் வந்தால் அதை திரிகரண பிரதோஷம் என்பார்கள். இதை முறையாக கடைபிடித்தால் இல்லாமை என்ற சொல் இல்லாமல் போய்விடும். அஷ்ட லக்ஷ்மிகளின் அருளாசியும் கிட்டும்.
பிரம்ம பிரதோஷம்
பிரம்மாவிற்கு திருவண்ணாமலையில் ஏற்பட்ட சாபம் நீங்க,ஒரு வருடத்தில் வரும் நான்கு சனிக்கிழமைகளில் வந்த சனி பிரதோஷத்தை முறையாக கடைப்பிடித்து சாப விமோசனம் பெற்றார். நாமும் இந்த பிரதோஷத்தை கடிபிடித்தால் முன்னோர் சாபம், முன்வினை பாவம் எல்லாம் விலகிவிடும்.
ஆட்சரப பிரதோஷம்
வருடத்தில் ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அதற்க்கு இந்த பெயர். தாருகா வனத்து ரிஷிகள் தான் என்ற அகந்தை கொண்டு ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனார் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்கு பாடம் புகட்டினார். தங்கள் தவறை உணர்ந்த ரிஷிகள் இந்த பிரதோஷ விரதத்தை கடைப்பிடித்து சாப விமோசம் பெற்றதால் இதற்கு இந்த பெயர் வந்தது. தெரிந்தே தவறுகள் செய்தவர்கள் இதை அனுஷ்டிக்கலாம்.
கந்தப் பிரதோஷம்
சனிக்கிழமையும், திரயோசசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம் என்று பெயர். இது முருக பெருமான் சூர சம்ஹாரத்திற்கு முன் வழிபட்டதால், இந்த பெயர் வந்தது. முருகனருள் வேண்டுபவர்கள் இந்த வழிபாட்டை செய்யலாம்.
சட்ஜ பிரபா பிரதோஷம்
தேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறைபிடிக்க பட்டனர். ஏழு குழந்தைகளை கம்சன் கொன்றான். எனவே எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை அவர்கள் அனுஷ்ட்டித்ததால் கிருஷ்ணன் பிறந்தான். வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்து அதை கடைபிடித்தால் பிறவி என்னும் பெரும் கடலை நீந்தி, பிறப்பில்லா பெருமையை பெறலாம்.
அஷ்டதிக் பிரதோஷம்
ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷம் முறையாக கடைபிடித்தால், அஷ்ட்டதிக் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த புகழ், கீர்த்தி, செல்வாக்கு ஆகியவற்றை தருவார்கள்.
நவகிரக பிரதோஷம்
வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால் அது நவகிரக பிரதோஷம். இப்படி ஒன்பது பிரதோஷம் வருவது மிக மிக அரிது. அப்படி வந்தால், அதை நீங்கள் அனுஷ்ட்டித்தால் சகல கிரக தோஷமும் விலகும். தடை பட்ட திருமணம், புத்திர பாக்கியம், வேலை வாய்ப்பு, பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை எல்லாம் கிட்டும்.
துத்த பிரதோஷம்
வருடத்தில் பத்து மகா பிரதோஷம் வந்து (இதற்கு வாய்ப்புகள் குறைவுதான்), அந்த பத்து பிரதோஷத்தையும் அனுஷ்ட்டித்தால் இந்த உலகமே கையில் கிடைத்த மாதிரி உச்சாணி கொம்புக்கு போவார்கள்.
திருக்குறுங்குடி நின்ற நம்பி பெருமாள் கோவில்
கருடன் தன் இரு கைகளிலும் ஆமை, யானை ஆகியவற்றை பிடித்துக் கொண்டிருக்கும் அபூர்வ சிற்பம்
திருநெல்வேலியில் இருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருக்குறுங்குடி நின்ற நம்பி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் பல அற்புதமான, நுணுக்கமான சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருக்கின்றது.
இக்கோவிலில் கோபுரத்தின் உள் நுழைந்ததும் வலது பக்கம், கருடன் ஆமை, யானை ஆகியவற்றை தன் இரு கைகளிலும் பிடித்துக் கொண்டு, முனிவர்களுடன் கூடிய மரக்கிளையை தன் அலகிலும் வைத்துக் கொண்டு கந்தமாதன மலையை நோக்கி பறப்பது போன்ற அழகிய புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. கருடனின் இடது கையில் ஆமையும் அதன் அருகில் ஆலமரம் ஒரு கிளை முறிந்த நிலையில் இருப்பதும், முறிந்த கிளையில் ஆல இலையின் வடிவம் தத்ரூபமாக கனி மற்றும் மொட்டுக்களோடு வடித்திருப்பதும், தலைகீழாகத் தவம் புரியும் வால்கில்ய (மிகச் சிறிய உருவம் உடையவர்கள்) முனிவர்களும், சிறகுகள் விரிந்த நிலையில் கருடன் பறப்பது போன்ற அமைப்பும், கருடனின் கால் அடியில் கடல் என்று குறிப்பிட நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் மகர மீன் செதுக்கியிருப்பதும், கந்தமாதன மலை அருகில் அமைத்திருப்பதும், அந்த மலையில் ஒரு புலியின் வடிவம் அமைதிருப்பதும் இந்த அற்புதமானதும், அரியதுமான சிற்பத்தின் சிறப்புகள் ஆகும்.
இந்த சிற்பத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் காட்சியானது, மகாபாரதத்தின் முதல் பகுதியான ஆதி பர்வத்தின் உட்பிரிவான ஆஸ்தீக பர்வத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
கருங்குளம் வெங்கடாசலபதி கோவில்
சந்தனக்கட்டை வடிவில் பெருமாள்
திருநெல்வேலியிலிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் வழியில் சுமார் 18 கி. மீ தொலைவில் உள்ள கருங்குளத்தில் இருக்கும் வகுளகிரி என்ற சிறிய மலைக் குன்றின் மீது அமையப் பெற்றுள்ளது கருங்குளம் வெங்கடாசலபதி கோவில். மேலே ஏறிச் செல்ல படிக்கட்டுகளும், சாலை வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
திருப்பதியிலிருந்து பெருமாள் இங்கு வந்தமையால் இந்த கோவில் 'தென் திருப்பதி' என்று சிறப்பிக்கப்படுகிறது. திருப்பதிக்குப் போக முடியாத பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகளை இந்த வகுளகிரி பெருமாள் கோவிலில் நிறைவேற்றலாம்.
பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனக்கட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு, சக்கரம் இருக்கிறது. இங்கு மூலவர் பெருமாள் சந்தன கட்டைகளாக இருந்தாலும், பால், சந்தனம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்தும் இதுவரை எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட வில்லை என்பது அதிசயமாக கருதப்படுகிறது.
சந்தனக்கட்டை வடிவில் பெருமாள் எழுந்தருளிய வரலாறு
முற்காலத்தில் சுபகண்டன் என்னும் அரசன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு சிறந்த விஷ்ணு பக்தன். அவனுக்கு ஒரு முறை கண்ட மாலை என்னும் கொடிய நோய் பீடித்தது. தனது அந்த கொடிய நோய் நீங்க அவன் பெருமாளை பல கோவில்கள்தோறும் சென்று வழிபட்டு வந்தான். அப்படி அவன் ஒரு முறை திருப்பதி சென்று வெங்கடாசலபதி பெருமாளை வணங்கி தன் நோய் தீர மனமுருக வேண்டி நின்றான். அவனது பக்திக்கு இறங்கிய திருப்பதி பெருமாள், அன்று இரவு சுபகண்டனின் கனவில் தோன்றி, எனக்குச் சந்தனக் கட்டைகளால் தேர் ஒன்றைச் செய்வாயாக அப்படி செய்யும் போது அவற்றில், இரண்டு சந்தனக் கட்டைகள் மிச்சமாக இருக்கும். அந்த சந்தன கட்டைகளை தெற்கே இருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள வகுளகிரி மலையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் உன் நோய் நீங்கப் பெறுவாய் என கூறி அருள் புரிகிறார்.
கனவில் இருந்து திடுக்கிட்டு எழுந்த மன்னன் சுபகண்டன், மறுநாளே திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளுக்கு சந்தன மரக் கட்டைகளைக் கொண்டு தேர் செய்யத் தொடங்கினான். அவன் தேரை செய்து முடிக்கும் தருவாயில் அவனது கனவில் பெருமாள் கூறியவாறே, இரண்டு சந்தன கட்டைகள் மிச்சமாகின்றன. அந்த சந்தன கட்டைகளை எடுத்துக் கொண்டு, தென் பாண்டி நாட்டை அடைந்த சுபகண்டன், அங்கே தாமிரபரணி ஆற்றின் கரையில் இருந்த வகுளகிரி பகுதியை கண்டறிந்து கனவில் பெருமாள் கூறியபடியே தான் கொண்டு வந்திருந்த சந்தன கட்டைகளை முறைப்படி பிரதிஷ்டை செய்து தாமிரபரணியில் மூழ்கி பெருமாளை வழிபட அவனது நோய் நீங்கப் பெற்றதாக இக் கோவில் வரலாறு கூறப்படுகிறது.
இங்கு மலை மீது உள்ள கோவிலின் கருவறையில் சுபகண்டனால் கொண்டு வரப்பட்ட இரண்டு சந்தன கட்டைகளில் தான் பெருமாள் எழுந்தருளி காட்சியளிக்கிறார். சந்தன கட்டைகளுக்கு வஸ்திரம் அணிவித்து, திருநாமம் சாத்தி பெருமாள் அலங்காரம் செய்யப்படுகிறது.
வல்லம் ஏகௌரியம்மன் கோவில்
இரண்டு திருமுகங்கள் கொண்ட அபூர்வ அம்மன்
தஞ்சையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வல்லம் என்ற ஊரில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஏகௌரியம்மன் கோவில் உள்ளது. சோழ மன்னர்களின் வழிபாட்டு தெய்வமாக விளங்கியவள். இந்த தேவி அக்னி கிரீடம் அணிந்து, எட்டு திருக்கரங்களுடன், பத்மபீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். ஒன்றன்மீது ஒன்றாக அமைந்த இரண்டு திருமுகங்களுடன் காட்சி தருகிறாள். ஒரு தலை கோரைப் பல்லுடன் உக்கிரமாக உள்ளது. இதற்கு மேலுள்ள மற்றொரு தலை அமைதியே வடிவமாக உள்ளது. தீயவர்களை அழிக்க உக்கிரமுடன் ஒரு முகம், வழிபடும் அடியவர்களின் துயர் நீக்க சாந்தமுடன் மற்றொரு முகத்துடனும் காட்சி அளிக்கிறாள். எட்டு கைகளில் சூலம், கத்தி, உடுக்கை, நாகம், கேடயம், மணி, கபாலமும், பார்வதியின் அம்சத்தை உணர்த்தும் விதமாக கிளியும் உள்ளது. இப்படி ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு இரண்டு திருமுகங்கள் அமைந்திருப்பது ஒரு அபூர்வமான தோற்றமாகும்.
அம்மனுக்கு ஏகௌரி என்ற பெயர் வந்த வரலாறு
முன்னொரு காலத்தில் தஞ்சன் என்ற அரக்கன் சிவனை நினைத்து கடும் தவம் புரிந்து, ஒரு பெண்ணை தவிர யாராலும் தன்னை வெல்ல முடியாது என்ற வரத்தை பெற்றான். பின்னர் தஞ்சன், ஆணவத்தால் முனிவர்களையும், தேவர்களையும் மிகவும் கொடுமைப் படுத்தினான். தேவர்கள் சிவபெருமானிடம் தஞ்சனின் கொடுமைகள் குறித்து முறையிட்டனர். சிவபெருமான் பார்வதி தேவியை அழைத்து அரக்கனை அழிக்க ஆணையிட்டார். ஈசனின் ஆணையை ஏற்ற பார்வதி தேவி சிம்ம வாகன மேறி எட்டுக்கரங்களிலும் ஆயுதம் ஏந்தி புறப்பட்டாள். தேவிக்கும், தஞ்சனுக்கும் கடும்போர் ஏற்பட்டது.
போரின் இறுதியில், தஞ்சன் எருமைக் கடாவாக மாறி தேவியைத் தாக்கினான். தேவி எருமைக் கடாவாக வந்த அரக்கனை வாளால் தலை வேறு, உடல் வேறு என இரண்டு துண்டாக்கினாள்.
உயிர் பிரியும் நேரத்தில் தஞ்சன் தேவியைப் பணிந்து, இந்த பகுதி எனது பெயரால் தஞ்சாபுரி என்று அழைக்கப்பட வேண்டும் என்று வேண்டினான். தேவி, அவன் கேட்ட வரத்தை வழங்கினாள் . அரக்கனை வதைத்த பின்னும், அம்மனின் ஆக்ரோஷம் அடங்கவில்லை. அதே உக்கிரத்துடன் வல்லத்தில் அலைந்து திரிந்தாள். இதனால் நாடெங்கும் வறட்சி உண்டாயிற்று. நாடெங்கும் பஞ்சம், பசி, பட்டினி என மக்கள் தவித்தனர். நிலைமையை உணர்ந்த சிவபெருமான் பார்வதியை ;ஏ கவுரி; சாந்தம் கொள் என்று கேட்டுக்கொண்டார். அம்மையின் கோபம் சற்று தணிந்தது. நெல்லிப்பள்ளம் என்ற குளத்தில் மூழ்கினாள். அப்போது பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து அங்கேயே எழுந்தருளவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கு ஏகௌரி அம்மனாக அருள்புரிந்து வருகிறாள். அம்மன் அரக்கனை வதம் செய்தது ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமை ஆகும். எனவே அன்றைய தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து, தீ மிதித்து அம்மனை சாந்தப் படுத்துகின்றனர்.
குழந்தை பாக்கியத்திற்கு எலுமிச்சை பழச்சாறு பிரசாதம் தரும் நடைமுறை
குழந்தை வரம் வேண்டி இத்தலத்துக்கு வரும் பெண்களுக்கு எலுமிச்சம் பழத்திற்கு பதிலாக எலுமிச்சை பழச்சாறை பிரசாதமாகத் தருகிறார்கள். வேறு எந்த தலத்திலும் இப்படி ஒரு நடைமுறை இல்லை.
ஏகௌரி அம்மனின் இருபுறமும் ராகு கேது எழுந்தருளி இருக்கிறார்கள். அதனால் இத்தலம் கால சர்ப்ப தோஷம் , களத்திர தோஷம், திருமணத்தடை போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த பரிகார தலமாக இருக்கிறது.
தில்லைஸ்தானம் (திருநெய்த்தானம்) சீனிவாசப் பெருமாள் கோவில்
அமிர்த கலசம் ஏந்திய ஆஞ்சநேயரின் அபூர்வ தோற்றம்
திருவையாற்றிலிருந்து 2 கி.மீ. தொலைவில், காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தில்லை ஸ்தானம் (திருநெய்த்தானம்) என்ற கிராமத்தில் அமைந்துள்ள வைணவத் தலம் சீனிவாசப் பெருமாள் கோவில். கருவறையில் சீனிவாசப் பெருமாள் ஸ்ரீதேவி - பூதேவியுடன், நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
இக்கோவிலின் வடக்குப் பகுதியில் அனுமன் கையில் அமிர்த கலசத்தை ஏந்தியபடி அருள்புரிகிறார். அனுமனின் இந்த தோற்றமானது ஒரு அரிய காட்சியாகும். இதன் பின்னணியில் ராமாயண நிகழ்ச்சி ஒன்று உள்ளது. சீதாதேவி வனவாசத்தின் போது ஒரு நாள் மயக்கமடைய, அனுமன் கலசத்தில் இருந்த அமிர்தத்தை சீதைக்கு தர, சீதையின் மயக்கம் தெளிந்ததாம். சீதையின் நோய் தீர்த்த அமிர்த கலசத்துடன் கூடிய இந்த அனுமனை வேண்டுவதால் நோய்கள் குணமாவதாக பக்தர்களின் நம்பிக்கை.
வியாபாரம் பெருகவும், திருமணம் விரைந்து நடக்கவும், நோய்கள் தீரவும் அனுமனிடம் வேண்டிக் கொள்ளும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் அனுமனுக்கு அபிஷேகம் செய்து வெண்ணெய் காப்பிட்டு, தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
திருவையாறு சப்தஸ்தானத் தலங்களில் இத்தலமும் ஒன்று.
ஆமூர் ரவீஸ்வரர் கோவில்
பைரவர் இரட்டை வாகனத்துடன் இருக்கும் அரிய தோற்றம்
கல்வியில் சிறக்க அருளும் இரட்டை வாகன பைரவர்
திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஆமூர் ரவீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவள்ளி. இத்தலத்து இறைவனை வழிபட்டு சூரியபகவான் தன்னுடைய அதீத உஷ்ணத்தை குறைத்துக் கொண்டார். எனவே இத்தலம் சூரிய தோஷம், பித்ரு தோஷம், ஜாதக தோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரத்தலமாக விளங்குகின்றது.
பொதுவாக சிவாலயங்களில் பைரவர் தெற்குத் திசை நோக்கி தான் எழுந்தருளியிருப்பார். ஆனால், இத்தலத்தில் இறைவன் ரவீஸ்வரரின் சன்னதி மண்டபப் பகுதியில், மேற்குத் திசை நோக்கி இரட்டை வாகனத்தில் பைரவர் எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
பைரவர் தனது வாகனமான நாயுடன் தான் காட்சி அளிப்பார் . ஆனால், இக்கோவிலில் வலதுபுறத்தில் நாய் வாகனத்துடனும், இடதுபுறத்தில் ரிஷப வாகனத்துடனும் பைரவர் எழுந்தருளியிருப்பதால், இவர் இரட்டை வாகன பைரவர் என்றழைக்கப்படுகிறார். இந்த இரட்டை வாகன பைரவர் கல்விக்கு அதிபதியாக போற்றப்படுகிறார். தேர்வுகளை எழுதுவோர் இந்த சன்னதியில் வந்து பைரவரை வழிபட்டுச் சென்றால் கல்வியில் சிறந்து விளங்குவர், அவர்கள் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் திக்கிப் பேசும் குழந்தைகள், படிக்காத குழந்தைகள் இந்த இரட்டை வாகன பைரவரை வழிபட்டு தங்கள் நாவில் தேன் தடவிச் சென்றால் அவர்களது குறைகள் நீங்கும்.
வள்ளிமலை முருகன் கோவில்
முருகன் வள்ளியை காதலித்த இடம்
முருகனை கணவனாக அடைய வள்ளி திருமாலை வழிபட்ட தலம்
திருமாலின் பாதம் பொறித்த சடாரி சேவை செய்யப்படும் திருப்புகழ் தலம்
வேலூர் மாநகரில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும், ராணிப்பேட்டையில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது வள்ளிமலை முருகன் கோவில். முருகப் பெருமான் வள்ளியை காதலித்து கரம் பிடித்த ஊர் என்பதால் இவ்விடத்திற்கு வள்ளிமலை என பெயர் வந்தது. வள்ளி இந்த ஊரில் பிறந்து வளர்ந்ததும் வள்ளிமலை என பெயர் பெற காரணமாகும். இக்கோவில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மலை மேல் உள்ள கோவிலுக்கு செல்ல 454 படிக்கட்டுகள் உள்ளன. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம் இது.
மலைக்கோவிலில் சுப்பிரமணியர் குடவறை சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். இங்கு முருகன் சன்னதியில், முருகன் கருவறைக்கு மேலே விமானத்திற்கு பதிலாக கோபுரம் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். வள்ளி வேடர் குலத்தில் வளர்ந்ததால், அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது. ஒரு சமயம், முருகன், வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு வள்ளியின் தந்தை நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது.
கன்னிப்பருவத்தில் வள்ளி தினைப்புனம் காக்கும் பணி செய்தாள். அடிவாரம் மற்றும் மலைக்கோவிலில் 'குமரி வள்ளி'க்கு சன்னதி இருக்கிறது. இவள் கையில் பறவை விரட்ட பயன்படுத்தும் உண்டி வில், கவண் கல் வைத்திருக்கிறாள். தினைப்புனத்தில் வள்ளியை சந்தித்த முருகன், வள்ளியைத் திருமணம் செய்ய விரும்பினார். முருகனை கணவனாக அடைய விரும்பிய வள்ளி, இத்தலத்தில் திருமால் பாதத்தை வைத்து வழிபட்டாள். இதனால் இங்கு பக்தர்களுக்கு திருமாலின் பாதம் பொறித்த சடாரி சேவை செய்யப்படுகிறது.
முருகன் வள்ளியை மணக்க விரும்பியதையறிந்த நம்பிராஜன், திருத்தணியில் முருகனுக்கு முறைப்படி வள்ளியை திருமணம் செய்து கொடுத்தார். நம்பிராஜனின் வேண்டுதலுக்கு இணங்க, இங்குள்ள குன்றில் முருகன் எழுந்தருளினார்.
முருகன், தெய்வானை திருக்கல்யாணம் கந்தசஷ்டிக்கு மறுநாள் நடக்கிறது. மாசி பௌர்ணமியன்று, இத்தலத்தில் முருகன் வள்ளி திருமணம் நடைபெறுகிறது.
வயலக்காவூர் வாசீஸ்வரர் (வானதீஸ்வரர்) கோவில்
மும்மூர்த்திகளும் எழுந்தருளி இருக்கும் அரிதான காட்சி
சுவாசம், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்க வழிபட வேண்டிய தலம்
உத்திரமேரூரில் இருந்து 26 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வயலக்காவூர் வாசீஸ்வரர் கோவில். இக்கோவில் வானதீஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இறைவியின் திருநாமம் ஏலவார்குழலி .வயல் என்ற புல் வகை இவ்வூரிலுள்ள குளத்தில் மிகுதியாக வளர்வதால், இவ்வூர் ‘வயலக்காவூர்’ என்று அறியப்படுகிறது. இந்த புல் வகையை கூரை வேய பயன்படுத்துகிறார்கள். இந்த கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது.
மூலவரின் பரிவார தெய்வங்களாக பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, பெருமாள், பிரம்மா, துர்க்கை காணப்படுகின்றனர். இக்கோவிலில் லிங்கோத்பவர் இருக்க வேண்டிய இடத்தில், பெருமாள் காட்சி தருவது ஒரு அரிதான காட்சியாகும். மும்மூர்த்திகளும் இங்கு எழுந்தருளி இருப்பதால் இந்த தலத்திற்கு மும்மூர்த்தி தலம் என்று பெயர்.
வாசி என்பது யோகத்தில், மூச்சின் இயக்கத்தைக் குறிக்கிறது. மூச்சை நெறிப்படுத்துவது வாசி எனப்படும். இத்தலத்து இறைவன் வாசீஸ்வரரை வழிபட்டால் சுவாசம், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் எல்லாம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவில்
வியக்க வைக்கும் அதிசயத் தூண் - கோவில் தூணுக்குள் வெளியே எடுக்க முடியாதபடி உருளும் கல் பந்து
திருச்சியிலிருந்து முசிறி செல்லும் சாலையில் 15 கி.மீ தூரத்தில் உள்ள தேவாரத்தலம் திருவாசி. இறைவன் திருநாமம் மாற்றுரைவரதீஸ்வரர். இறைவியின் திருநாமம் பாலாம்பிகை.
நமது முன்னோர்கள் கோவில்களில் வடித்து வைத்துள்ள சிற்பங்களும், கலை நயம் மிக்க சிற்ப வேலைப்பாடுகளும் நம்மை பிரமிக்க வைக்கும். அப்படிப்பட்ட ஓர் அற்புதமான வேலைப்பாட்டை, இந்த கோவிலில் நுழைந்தவுடன் வலதுபுறம் இருக்கும் ஒரு தூணில் நாம் காணலாம்.
இந்த தூணின் மூன்று பக்கங்களில் சுமார் ஒரு அடி நீளத்திற்கு நீள் செவ்வக துவாரம் அமைந்திருக்கின்றது. தூணுக்குள் கல்லாலான ஒரு பந்து இருக்கின்றது. இந்தப் பந்தை நாம், தூணுக்குள் ஒரு அடி தூரத்திற்கு மேலும் கீழும் நகர்த்த முடியும். ஆனால் அந்தக் கல் பந்தை நாம் தூணை விட்டு வெளியே எடுக்க முடியாது. இப்படி ஒரே கல்லிலான தூணில் மூன்று பக்கம் துவாரம் ஏற்படுத்தி, அதன் உள்ளிருக்கும் கல்லை பந்து போல் வடிவமைத்து ஆடவிட்டு இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது.
கோவை கோனியம்மன் கோவில்
தம்பதி சமேதராக அருள்பாலிக்கும் நவக்கிரகங்கள்
கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற கோனியம்மன் கோவில். இக்கோவிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது. இவ்வூர் மக்கள் இந்த அம்மனை என்று 'கோவையின் அரசி' எனவும் அன்புடன் அழைக்கின்றனர்.
பொதுவாக கோவில்களில் நவக்கிரகங்கள் தனித்தனியாக அமர்ந்து அருள்பாலிப்பார்கள். ஆனால் கோனியம்மன் கோவிலில் நவக்கிரகங்கள் தம்பதி சமேதராக அமர்ந்து அருள்பாலிப்பது விசேஷமானது ஆகும். கோனியம்மனுக்கு வலப்புறத்தில் நவக்கிரக சந்நிதியில், தம்பதி சமேதராக நவக்கிரகங்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். இங்கு நவக்கிரக நாயகர்கள் தம்பதி சமேதராக வீற்றிருப்பது தனிச்சிறப்பாகும்.
நவக்கிரக சன்னதிகளில் வழக்கமாக சூரியபகவான் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து அருள் வழங்குவார். இங்குள்ள சன்னதியில் சூரியபகவான் மேற்கு நோக்கி உள்ளார். கோனியம்மன் வடக்கு நோக்கிய நிலையில் அருள்பாலிப்பதால் ஆகமவிதிப்படி, சூரியபகவான் மேற்கு நோக்கி உள்ளார். சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் இருக்க, அவரது இரு மனைவிகள் உஷா, பிரத்யுஷா உடன் இருக்கின்றனர். சந்திரபகவான், அவரது மனைவிகள் கிருத்திகா, ரோகிணி ஆகியோருடனும், மற்ற நவக்கிரகங்கள் செவ்வாய் பகவான் - சக்திதேவி, புதன் பகவான் - ஞானதேவி, குருபகவான் - தாராதேவி, சுக்கிர பகவான் - சுகீர்த்தி, சனி பகவான் -நீலாதேவி, ராகுபகவான் - சிம்ஹி , கேதுபகவான் - சித்திரலேகா ஆகியோர் தம்பதி சமேதராக காட்சி அளிக்கின்றனர்.
இந்த நவக்கிரகங்களை வணங்குவதால், சனி தோஷம், சுக்ர தோஷம் என அனைத்துவிதமான தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
எழுமேடு பச்சைவாழியம்மன் கோவில்
பச்சை நிற சேலை மட்டுமே அணியும் அம்மன்
சிலம்பு மற்றும் உடுக்கையை இசைத்தவாறு செய்யப்படும் பூஜை
கடலூர்-பண்ருட்டி சாலையில் சுமார் 16 கி.மீ தொலைவில் உள்ளது எழுமேடு கிராமம். இந்த கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அம்மனுக்கு எப்பொழுதும் பச்சை நிற சேலை மட்டுமே அணிவிக்கிறார்கள். மேலும் காணிக்கையாக பச்சை நிற சேலை மட்டுமே வழங்குகிறார்கள். இந்த அம்மன் இந்த கிராமத்தின் காவல் தெய்வமாக விளங்குவதால், பூஜை செய்யும்போது, அம்மனுக்கு மிகவும் பிடித்தமான சிலம்பு மற்றும் உடுக்கையை இசைத்தவாறு பூஜை செய்கிறார்கள். இப்படி இசைத்தவாறு பூஜை செய்வது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
திருமண பாக்கியம் கிடைக்கவும், பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேரவும் இங்கு வந்து வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு பச்சை நிற புடவை சாத்தி தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
சிவகாசி காசிவிஸ்வநாதர் கோவில்
சிவபெருமான் காசியிலிருந்து வந்து தங்கிய தலம்
தட்சிணாமூர்த்தியை கை கூப்பி வணங்கும் சனகாதி முனிவர்கள்
விருதுநகரில் இருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ள தலம், சிவகாசி காசி விஸ்வநாதர் கோவில். இறைவியின் திருநாமம் விசாலாட்சி.
சிவன் காசியிலிருந்து வந்து தங்கிய இடம் என்பதால் சிவன் காசி என்று அழைக்கப்பட்ட இவ்வூர், சிவகாசி என்று சுருங்கியது. வடக்கே காசி, தெற்கே தென்காசி, நடுவில் சிவகாசி உள்ளன.
இக்கோவிலில் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் போன்ற சனகாதி முனிவர்கள், தட்சிணாமூர்த்தியை வணங்கிய நிலையில் அருள்பாலிக்கின்றனர். இப்படி சனகாதி முனிவர்கள் கை கூப்பி வணங்கும் நிலையில் காட்சி அளிப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
காஞ்சிபுரம் திருக்கள்வனூர் ஆதிவராகப் பெருமாள் கோவில்
அம்மனின் சக்தி பீடத்தில் அமைந்துள்ள திவ்ய தேசம்
இக்கோவில் சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலின் உள்ளே அமைந்துள்ளது. பெருமாள் திருநாமம் கள்வப்பெருமாள் (ஆதிவராகப் பெருமாள்). தாயார் திருநாமம் அஞ்சிலை வல்லி நாச்சியார் (சவுந்தர்யலட்சுமி).
சைவக் கோவில்களுக்குள் பாடல் பெற்ற பெருமாள் கோவில் (திவ்ய தேசம்) அமைந்திருப்பது சிதம்பரம் நடராஜர் கோவிலிலும், காஞ்சிபுரத்தில் உள்ள இந்தத் தலத்திலும், ஏகாம்பரேஸ்வரர் கோவிலிலும் மட்டுமே. முதலில் காமாட்சி அம்மனின் கருவறை சுவரில் உள்ள அரூப மகாலட்சுமியை வழிபட்ட பிறகே, கள்வப் பெருமாளையும் அஞ்சிலைவல்லி நாச்சியாரையும் வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
இந்த திவ்யதேசம் காமாட்சி அம்மன் கோவிலின் உள்ளே ஒரு தூணுக்கு இடையில் சந்நிதி போன்ற ஒரு சிறிய இடத்தில் அமைந்துள்ளது. பூஜைகளை சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர். மூலவர் ஸ்ரீ ஆதி வராகப் பெருமாள் (கள்வப்பெருமாள் ) நின்ற திருக்கோலத்தில், மேற்கு நோக்கிய அபய ஹஸ்தத்துடன் அருள்பாலிக்கிறார். தாயாருக்கு தனி சன்னதி இல்லை. ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திரு நிலாத்திங்கள் துண்ட பெருமாள் தாயாருடன் இணைந்திருப்பதை போல், இத்தலத்திலும் தாயார் அஞ்சிலை வல்லி நாச்சியார் பெருமாளுடன் இணைந்திருக்கின்றார். முதலில் காமாட்சி அம்மனின் கருவறை சுவரில் உள்ள அரூப மகாலட்சுமியை வழிபட்ட பிறகே, கள்வப் பெருமாளையும் அஞ்சிலைவல்லி நாச்சியாரையும் வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
மகாலட்சுமி, ஒருமுறை தனது அழகைப் பற்றி அகங்காரம் கொண்டபோது, விஷ்ணு அவளுக்கு சாபமிட்டார். சாபத்தால் தன் அழகை இழந்த மகாலட்சுமி, அதை மீண்டும் பெறுவதற்காக காமாட்சி அம்மனை நாடினாள். அப்போது, மகாலட்சுமியும் காமாட்சியும் பேசிக் கொண்டிருந்ததைக் கள்ளத்தனமாக விஷ்ணு மறைந்திருந்து கேட்டார். இதை அறிந்த காமாட்சி, விஷ்ணுவை 'கள்வன்' என்று செல்லமாக அழைத்தார். அதனால், இந்தக் கோவிலில் பெருமாள், கள்வப் பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
திருக்கள்வனூர் பெருமாளை வணங்குபவர்களுக்கு, இழந்த அழகு, செல்வம், கணவன்-மனைவி ஒற்றுமை ஆகியவை திரும்பக் கிடைக்கும். திருகள்வனூர் கள்வப் பெருமாளையும், காமாட்சி அம்மனையும் வேண்டிக் கொண்டால் அண்ணன் - தங்கை ஒற்றுமை சிறப்பாக அமையும் என்பத ஐதீகம். இங்கு காமாட்சி அம்மனே பிரதான தெய்வம் என்பதால், பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் ஏதும் கிடையாது. தனியாக விழாக்களும் கிடையாது.
கேதார கௌரி விரதம்
கேதார கௌரி விரதம்
கேதார கௌரி விரதத்தின் சிறப்பு
கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய எட்டு விரதங்களுள் ஒன்றாகும். இவ்விரதத்தினைப் பொதுவாக பெண்களே அனுஷ்டிப்பார்கள். கேதார கௌரி விரதம் ஐப்பசி மாதத்தில் அமாவாசை நாளில் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆண்டு தோறும் புரட்டாசி மாத சுக்கில பட்ச தசமி முதல் ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசைவரை, இருபத்தொரு நாட்கள் கைக்கொள்ளும் விரதமாகும். இந்த விரதத்தை முதலில் கடைப்பிடித்தவள் உமையவளே.
கேதார கௌரி விரதத்துக்கும், அர்த்தநாரீஸ்வரருக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கேதாரம் என்பது இமயமலைச்சாரலைக் குறிப்பதாகும். அதாவது மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என்பர். இந்த இமயமலைக் கேதாரப்பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். சக்திரூபமான பார்வதி தேவி சிவனை நினைந்து வழிபட்டு, அதன் பலனாக சிவபெருமானும் பார்வதி தேவியும், அர்த்தநாரியாகவும், அர்த்தநாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும்.
ஐப்பசி மாத கிருஷ்ணபட்சம் தேய்பிறை சதுர்த்தசியில், பார்வதி தேவியை எண்ணி நோன்பிருந்தால் நல்ல கணவனையும். திருமணமாகி இருந்தால் கணவனின் அன்பையும், குறையற்ற இல்லறத்தையும், செல்வங்களையும் பெறலாம் என்பதற்காக தொடங்கியதே கேதாரகௌரி விரதமாகும். தீபாவளி திருநாளில், கேதார கெளரி நோன்பு கொண்ட நாளில், வயது முதிர்ந்த தம்பதிக்கு புத்தாடை வழங்கி, மங்கலப் பொருட்கள் கொடுத்து நமஸ்கரித்தால், பிரிந்த தம்பதியும் ஒன்று சேருவார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
திருச்செங்கோடு கோவில் அர்த்தநாரீஸ்வரர் திருமேனி, வெள்ளை பாஷாணத்தால் ஆன திருவுருவம் ஆகும். இந்த திருமேனியின் இடப்பாதியில் பெண்மையின் நளினமும், வலப்பாதியில் ஆண்மையின் கம்பீரமும் இழையோடும். கண்களில்கூட, வலக்கண்ணுக்கும் இடக்கண்ணுக்கும் துல்லியமான வித்தியாசம் தெரிகிறது. தீபாவளியையொட்டி கேதார கௌரி நோன்பிருக்கும் பெண்மணிகள், திருச்செங்கோடு சென்று அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டால் விரத பலன் பன்மடங்காகக் கிடைக்கும்.
தீபாவளித் திருநாளில், கேதார நோன்பு இருந்தாலும், இல்லையென்றாலும் அன்றைய நாளில், சிவபார்வதியை வணங்குவதும், பசுவுக்கு அன்னமிடுவதும் விசேஷ பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம். தீபாவளியையொட்டி கேதார கௌரி நோன்பிருக்கும் பெண்மணிகள், திருச்செங்கோடு சென்று அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டால் விரத பலன் பன்மடங்காகக் கிடைக்கும். தீபாவளித் திருநாளில், கேதார நோன்பு இருந்தாலும், இல்லையென்றாலும் அன்றைய நாளில், சிவபார்வதியை வணங்குவதும், பசுவுக்கு அன்னமிடுவதும் விசேஷ பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.