தரப்பாக்கம் கைலாசநாதர் கோவில்
கிரகண நேரத்தில் நடை திறந்திருக்கும் கோவில்
மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் கைலாசநாதர்
சென்னை பல்லாவரத்தில் இருந்து அனகாபுத்தூர் செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தரப்பாக்கம் எனும் கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் கைலாசநாதர் இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில். இங்குள்ள மூலவர் மேற்கு நோக்கி அமைந்துள்ளது தலத்தின் சிறப்பு. இத்தலத்து ஆவுடையார் சிறியதாக இருக்கிறார்.
பொதுவாக கிரகண நேரத்தில் அனைத்துக் கோவில்களின் நடை அடைக்கப்படும். இதற்கு காரணம் சூரிய, சந்திர கிரகணம் நிகழும் நேரம் தோஷமானதாகக் கருதப்படுவது தான். ஆனால் இக்கோவிலில் கிரகண வேளையில் நடை திறந்து, கிரகண துவக்கத் திலும், முடியும் நேரத்திலும் விசேஷ அபிஷேகம் செய்கின்றனர். இது கிரகண கோவில் என்பதை உணர்த்தும் விதமாக முன் மண்டபத் திலுள்ள ஒரு தூணில், சூரிய, சந்திரரை ராகு, கேது விழுங்கும் சிற்பம் உள்ளது.
உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவில்
வளைகாப்பு நாயகி குங்குமவல்லி அம்மன்
திருச்சி மாநகரின் ஒரு பகுதியான உறையூர், முற்காலத்தில் சோழ மன்னர்களின் தலைநகராக விளங்கியது. உறையூரின் மத்தியில் அமைந்துள்ளது, சுமார் 1800 ஆண்டுகள் பழமையான தான்தோன்றீஸ்வரர் கோவில். இக்கோவில் கர்ப்பிணி பெண்களுக்கான கோவில் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
சூரவாதித்தன் என்ற சோழ மன்னனின் மனைவி காந்திமதி. சிவ பக்தையான இவள், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமியை தினமும் வழிபடும் வழக்கம் உள்ளவள். காந்திமதி கருவுற்றிருந்த சமயம் ஒருநாள், தாயுமான சுவாமியை தரிசிக்க திருச்சி மலைக்குச் சென்றபோது களைப்பின் காரணமாக நடக்க முடியாமல். மயங்கி அமர்ந்தாள்.
அப்போது காந்திமதியின் முன் தோன்றிய சிவபெருமான், நீ மிகவும் பிரயாசைப்பட்டு என்னை தேடி வர வேண்டாம். உன்னைப் பார்க்க நானே வந்துவிட்டேன். உனக்கு காட்சி தந்த இந்த இடத்தில் லிங்க ரூபமாக, 'தான்தோன்றி ஈசனாக' எப்போதும் இருந்து உன்னைப் போன்ற கர்ப்பிணிப் பெண்களை காத்து நிற்பேன் என்று கூறி மறைந்தார்.
சிவபெருமானுடன் பார்வதி தேவியும் இந்தத் தலத்தில் குங்குமவல்லியாக எழுந்தருளி பெண்களின் மங்கலம் காக்கும் தேவியாக அருள்பாலிக்கிறாள். இவள் வளைகாப்பு நாயகி என்றும் திருச்சி மாநகரப் பெண்களால் அன்போடு அழைப்படுகிறாள்.
கோயில் கருவறையில் தான்தோன்றீஸ்வரர் கிழக்கு முகமாக ஏழடி கொண்ட பிரமாண்ட வடிவாக அருள்கிறார். குங்குமவல்லி, இரு கரங்களில் அங்குசம் மற்றும் தாமரை ஏந்தி நின்ற கோலத்தில் அழகுற காட்சி தருகிறாள்.
குங்குமவல்லி தேவிக்கு, ஒவ்வொரு ஆண்டும் வளையல் காப்புத் திருவிழா ஆடிப்பூரம் மற்றும் தை மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் இந்த வளையல் விழா வெகு பிரசித்தம்.
விழாவின் முதல் நாளில் கர்ப்பிணிப் பெண்கள் குங்குமவல்லி அம்மனுக்கு சுகப்பிரசவம் வேண்டி வளையல்களைக் காணிக்கையாக அளிப்பார்கள். அதேபோல் இரண்டாம் நாள் திருமணமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி வளையல்களைக் காணிக்கையாக தருவார்கள். விழாவின் மூன்றாம் நாளில் திருமணமாகாத கன்னிப்பெண்கள் தங்களின் திருமண தடை நீங்கி நல்ல வரன் கிடைக்க வளையல்களைக் காணிக்கையாக தருவார்கள்.
வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாள்களிலும் குங்குமவல்லி வளையல் அலங்காரத்தில் வெகு அழகாகக் காட்சி அளிப்பாள். பிறகு பூஜை வழிபாட்டுக்குப் பின்னர் காணிக்கையாகப் பெறப்பட்ட வளையல்கள் பிரசாதமாகத் தரப்படும்.
இந்தத் தலத்தில் வழிபட்டால் களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், நாக தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருமணம் கைகூட, குழந்தைப்பேறு உண்டாக மாநிலம் முழுவதிருந்தும் ஏராளமான பெண்கள், கூட்டம் கூட்டமாக இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.
வேண்டுதல் நிறைவேறி குழந்தைப் பிறந்தவுடன் இங்கு வந்து வளையல் மாலை போடும் சடங்கு அநேகமாக எல்லா நாளிலும் இங்கு நடக்கிறது. சுருங்கச் சொன்னால் குழந்தை வரம் வேண்டுவோருக்கு இந்த கோவில் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
காரமடை நஞ்சுண்டேசுவரர் கோவில்
இரண்டு ஆவுடையார்களுடன் இருக்கும் அபூர்வ சிவலிங்கத் திருமேனி
நஞ்சுண்டேஸ்வரர் செந்நிறமாக காட்சி அளிக்கும் தனிச்சிறப்பு
கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 29 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது காரமடை நஞ்சுண்டேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் லோகநாயகி. இக்கோவில் 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
இத்தலத்து மூலவர் நஞ்சுண்டேஸ்வரர் செந்நிறமாக காட்சியளிப்பது ஒரு தனிச் சிறப்பாகும். மேலும் இறைவனின் சிவலிங்கத் திருமேனிக்கு பிரதான ஆவுடையார் தவிர, சன்னதிக்குள் சிவலிங்கத்தைச் சுற்றி, மற்றொரு ஆவுடையார் போன்ற அமைப்பில் தரையில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இவர் இரண்டு ஆவுடையார்களுடன் காட்சி தருகிறார். இப்படி இரண்டு ஆவுடையார்களுடன் இருக்கும் சிவலிங்கத் திருமேனியை நாம் வேறு எந்த கலத்திலும் தரிசிக்க முடியாது.
சிவ பெருமான், அமிர்தம் எடுப்பதற்காக பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்த ஆலகால விஷத்தை உட்கொண்டு பிரபஞ்சத்தைக் காப்பாற்றினார். விஷத்தை சிவ பெருமான் பிரதோஷ நேரத்தில் தான் அருந்தினார் என்பதால், இந்த சிவனுக்கு பிரதோஷ நேரத்தில் விசேஷ வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த நேரத்தில் விஷக்கடி பட்டவர்கள் இறைவனிடம் வேண்டிக்கொண்டால் விஷக்கடியால் ஏற்பட்ட உடல் பிரச்னைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
சிதம்பரம் நடராஜர் கோவில்
நமது தேசிய கொடி கோபுரத்தில் ஏற்றப்படும் ஒரே தலம்
ஒவ்வொரு வருடமும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட்15 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒரு விசேஷம் உண்டு. இந்தியாவிலேயே, தில்லை சிதம்பரத்தில் மட்டும் தான் சுதந்திர தினத்தில் நமது தேசிய கொடி கோவிலின் கோபுரத்தின் மீது ராஜ கம்பீரத்துடன் ஏற்றப்படுகிறது.
நாடு சுதந்திரம் அடைந்தது முதல், சுதந்திரத் தினமும் குடியரசு தினமும் உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொண்டாடப்படுகிறது. மேற்கு கோபுரம் வாயில் முன் மண்டபம் அருகே, நாடு சுதந்திரம் அடைந்ததைக் கல்வெட்டாகப் பொறித்து வைத்துள்ளனர் தீட்சிதர்கள்.
சுதந்திரத் தினத்தன்று காலை கோயிலில் முதல் கால பூஜை முடிந்தவுடன், கனக சபையில் நடராஜர் பாதத்தின் கீழ் தேசியக் கொடியை வெள்ளி தட்டில் வைத்து தீட்சிதர்கள் சிறப்பு பூஜைகளைச் செய்வார்கள். நாட்டின் நலனுக்காகவும், மக்கள் நோய் நொடியின்றி வாழவும் பூஜை செய்யப்படுகிறது.
பின்னர், அர்ச்சகர் எடுத்து வர பிரகாரம் வழியாக மேள, தாளம் முழங்கியவாறு தேசியக் கொடியை ஊர்வலமாக கொண்டு வந்து 152 அடி உயரமுள்ள கிழக்கு ராஜகோபுர உச்சியில் தேசியக் கொடியை தீட்சிதர்கள் ஏற்றுவார்கள். பின்னர் அங்கு இருக்கும் பக்தர்களுக்கு இனிப்பு வழங்குவார்கள்.
அப்போது கோவிலுக்கு வருவோர் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்வார்கள். இது வேறெந்த வழிபாட்டுத் தலத்திலும் இல்லாத சிறப்பாகும். பின்னர் கோவிலுக்கு வரும் பொதுமக்களுக்கு லட்டு உள்ளிட்ட இனிப்புகள் வழங்கப்படும்.
இதேபோல், குடியரசுத் தினத்தன்றும் தேசியக் கொடி ஏற்றப்படுகிறது.
உடுமலைப்பேட்டை சீனிவாச ஆஞ்சநேயப் பெருமாள் கோவில்
பெருமாள் கருவறைக்குள் எழுந்தருளி இருக்கும் ஆஞ்சநேயர்
அட்சதை பிரசாதமாக வழங்கப்படும் தனிச்சிறப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ளது சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவில். கருவறையில் முதலவர் சீனிவாச பெருமாள் இரண்டரை அடி உயரத்தில் பாலவடிவில் நின்ற கோலத்திலும், அவருக்கு வலப்புறத்தில் ஆஞ்சநேயர் வணங்கிய கோலத்திலும் உள்ளனர். ராமபக்தரான ஆஞ்சநேயர், பெருமாள் கோவில்களில் தனி சன்னதியில் இருப்பதைப் பார்த்திருக்கலாம். ஆனால், இக்கோவிலில் கருவறையில் பெருமாள் அருகிலேயே ஆஞ்சநேயர் இருப்பது சிறப்பம்சம்.
ஆஞ்சநேயரும், பெருமாளும் இணைந்துள்ளதால், சீனிவாச ஆஞ்சநேயப் பெருமாள் என்று மூலவருக்கு பெயர் சூட்டப்பட்டது. மூலவர் சீனிவாச பெருமாள், மகாலட்சுமியை தனது மார்பில் தாங்கியவர் என்பதால் இங்கு தாயாருக்கு தனிச்சன்னதி இல்லை. பிரசாதமாக அட்சதை வழங்கப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
பல்லாண்டுகளுக்கு முன்பு, குழந்தைப்பேறு இல்லாமல் இருந்த பெருமாள் பக்தர் ஒருவர், குழந்தை வேண்டி திருப்பதி வெங்கடேசரை தொடர்ந்து வணங்கி வந்தார். ஓர்நாள், ஆஞ்சநேயரிடம் முறையிட்ட அவர், 'எனக்கு குழந்தை வரம் அருள, பெருமாளிடம் பரிந்துரைக்கமாட்டாயா!' என்று கூறி வேண்டினார். அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய ஆஞ்சநேயர், 'அரசமரங்கள் நிறைந்த வனத்தின் நடுவே உள்ள புற்றின் அருகில் பெருமாள் சிலை கவனிப்பாரற்று கிடக்கிறது. அச்சிலையை எடுத்து கோவில் கட்டி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும்' என்றார். அதன்படி பக்தர், பெருமாளை கண்டெடுத்து கோவில் கட்டினார். குழந்தை வரமும் கிடைத்தது. பின்னர் தனக்கு அருளிய ஆஞ்சநேயரையும் பெருமாளின் அருகிலேயே வைத்தார்.
வரலட்சுமி விரதம்
தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள்அனுஷ்டிக்கும் வரலட்சுமி விரதம்
தாலி பாக்கியம் நிலைக்க பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதுண்டு. தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் லட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். லட்சுமிதேவியை குறித்து வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள். ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள். தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதெனக் கருதி நடந்தாள். இதுபோலவே பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்க சுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.
லட்சுமிதேவி எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள். அவள் பொறுமை மிக்கவள். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே.வரலட்சுமி விரதம் இருப்பதால் கீழ்க்கண்ட பலன்கள் ஏற்படும்.
வரலட்சுமி விரத பலன்கள்
1. உயர்ந்த ஞானம் கிடைக்கும்.
2. மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
3. மங்கல வாழ்வு அமையும்.
4. மனதில் உள்ள விருப்பங்கள் ஈடேறும்.
5. கல்யாணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
வாணியம்பாடி அதிதீசுவரர் கோவில்
நந்தி மீது அமர்ந்துள்ள தட்சிணாமூர்த்தி
வேலூர் - ஆம்பூர் - கிருஷ்ணகிரி சாலையில், வேலூரில் இருந்து 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் வாணியம்பாடி. இத்தலத்து இறைவன் திருநாமம் அதிதீசுவரர். இறைவி பெரியநாயகி. இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. காசியப முனிவரின் மனைவி, அதிதி வழிபட்டதால் இத்தல இறைவனுக்கு அதிதீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
பிரம்மதேவனால் ஊமையாகும்படி சபிக்கப்பட்ட சரஸ்வதி தேவி (வாணி ), இத்தல இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். வாணி ஊமைத் தன்மை மாறி, உரக்கப் பாடிய இடம் வாணி பாடி என்று அழைக்கப் பெற்று பின்னாளில் மருவி வாணியம்பாடி என மாறியது.
இக்கோவில் இறைவன் கருவறையின் சுற்றுச்சுவரில் எழுந்தருளி உள்ள தட்சிணாமூர்த்தி மான், மழு ஏந்தி, யோக பட்டை, சின் முத்திரையுடன் நந்தி மீது அமர்ந்துள்ளார். தட்சிணாமூர்த்தியின் இந்த தோற்றம் இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும், திக்குவாய், ஊமைத்தன்மை நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்
சூடிக்கொடுத்த நாச்சியார்
108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. தமிழ்நாடு அரசு சின்னத்தில் போடப்பட்டுள்ள கோபுரம், இக்கோவிலின் கோபுரம் என்பது இத்தலத்துக்கு கூடுதல் சிறப்பு.
திருவில்லிப்புத்தூர் தலத்தில் மூலவர் வடபத்ரசாயி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் மட்டுமே ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் ஆகிய மூவரும் ஒரே ஸ்தானத்தில் காட்சியளிக்கிறார்கள்.
மகாலட்சுமியின் அம்சமாகிய ஸ்ரீ ஆண்டாள் மானிட ரூபமாக அவதரித்து, ஸ்ரீரங்க மன்னருக்கு பாமாலை சூட்டி பின் பூமாலை சூட்டிய பெருமை வாய்ந்த தலம்தான் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர்.
இத்தலத்தில் பிறந்த பெரியாழ்வார், கருடாழ்வாரின் அம்சமாக பிறந்ததாக ஐதீகம். தன் மகளை, திருமாலுக்கு திருமணம் செய்து கொடுத்தபோது, மாப்பிள்ளைக்கு அருகில் நின்றுகொண்டாராம். இதன் அடிப்படையில் இத்தலத்தில் ரங்கமன்னாருக்கு அருகில் கருடாழ்வார் இருக்கிறார்.
திருவில்லிப்புத்தூர் தலத்தில்தான் ஆண்டாள் பிறந்து வளர்ந்தார். பெரியாழ்வாரின் மகளாக பிறந்த ஆண்டாள், பெருமாளுக்கு சாற்றப்படும் பூவை, அவள் ஒவ்வொரு முறையும் அவள் தலையில் வைத்து அழகு பார்த்ததற்கு பின் கொடுத்திருக்கிறாள். இதனை அறியாத பெரியாழ்வார் பெருமாளுக்கு பூவை போட்டிருக்கிறார்.
ஒருமுறை பூவில் தலைமுடி இருப்பது கண்டு பெரியாழ்வார் அஞ்சி, அதை தவிர்த்து வேறு பூவை சூட்டினார். உடனே இறைவன், 'ஆழ்வார்! கோதையின் கூந்தலில் சூட்டிய பூவையே நான் விரும்புகிறேன். அதையே எனக்கு சூட்டு' என்றார். இன்றளவும் ஆண்டாளுக்குச் சாத்தப்படும் மாலை, மறு நாள் காலையில் வடபெருங்கோயில் உடையவருக்கு சாத்தப்படுகிறது.
மேலும் இந்த நகரம் திருமகளே, தெய்வீக குழந்தையாக ஆண்டாள் என்று பிறந்ததின் காரணமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் என்று பெயரிடப்பட்டது. அது திருமகளைக் குறிக்கும் வண்ணம் தமிழ் வார்த்தையான 'திரு' என்ற அடைமொழி கொண்டு திருவில்லிப்புத்தூர் என்று வழங்கப்படுகிறது.
ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பெருமாளை வேண்டி திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களை பாடினாள். இதில் திருப்பாவை 30 பாசுரங்களும், நாச்சியார்திருமொழி 143 பாசுரங்களும் கொண்டுள்ளது. ஸ்ரீனிவாசபெருமாளுக்கு திருப்பாவை என்ற பாசுரத்தால் பாமாலை பாடி பூமாலை சூடிக்கொடுத்ததால் 'சூடிக்கொடுத்த நாச்சியார்' என்ற பெயரும் உண்டு. பெரியாழ்வார், பெருமாளுக்கு பல்லாண்டு பாடிய திருத்தலம் இது.
திருப்பதி பெருமாளுக்கு புரட்டாசி 3 வது சனிக்கிழமை பிரம்மோற்சவத்துக்கு, ஆண்டாளுக்கு சூட்டிய மாலை அணிவிக்கப்படுகிறது. இங்கு ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலிலிருந்து திருமணப் பட்டுப் புடவை வருகிறது. மதுரையில் சித்திரைத் திருவிழா அழகர் எதிர் சேவையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கள்ளழகர் அணிகிறார்.
ஆடிப்பூர திருவிழா
இங்கு ஆண்டாள் கோவிலில், ஆண்டுதோறும் ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆடிப்பூர திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். ஆடிப்பூர தேரோட்ட திருவிழாவின் முக்கிய அம்சமான திருவாடிப்பூர தேரோட்டம் ஆடிப்பூர நட்சத்திரத்தன்று நடைபெறுகிறது.
துளசி மாடத்தில் அவதரித்து தன்னையே நினைத்து தன்னையே மணந்த ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆண்டுதோறும் ஆடிப்பூர நாளில் பட்டு வஸ்திரம் பரிசளிப்பது சிறப்பம்சமாகும். அந்த பட்டு வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து, ரங்கமன்னாருடன் இணைந்து ஆடிப்பூர தேரோட்டத்தில் எழுந்தருளி வலம் வருவார். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
வைத்திகோவில் முத்து மாரியம்மன் கோவில்
காளி தேவி சொரூபத்துடன் பஞ்ச பூதங்களின்மீது அமர்ந்திருக்கும் மாரியம்மன்
சமயபுரம் மாரியம்மனின் தங்கை
புதுக்கோட்டையில் இருந்து அண்டகுளம் எனும் ஊருக்குச் செல்லும் வழியில் 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வைத்திகோவில் முத்து மாரியம்மன் கோவில். மக்களின் வழக்கில் கொன்னையூர் அம்மன், விராடபுரம் அம்மன், கண்ணப்புரம் அம்மன், சமயபுரம் மாரியம்மன், நார்த்தாமலை அம்மன், தென்னக்குடி அம்மன், வைத்திகோவில் முத்துமாரி அம்மன் ஆகிய ஏழு பேரும் சகோதரிகள் என்கிறார்கள். இவர்களில் கடைக்குட்டி வைத்திகோவில் முத்துமாரியம்மன்.
இங்கு அம்மன் காளி தேவி சொரூபத்துடன், பஞ்ச பூதங்களின்மீது அமர்ந்திருப்பது தனிச்சிறப்பாகும். இந்த அம்மன் கன்னிப் பருவத்துடன் திகழ்வதாக ஐதீகம்.
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் முத்துமாரியின் சன்னிதிக்கு வந்து அர்ச்சனை செய்து, கரும்புத் தொட்டில் எடுப்பதாக வேண்டிக் கொண்டால் விரைவில் குழந்தை வரம் வாய்க்கும். திருமணத் தடை உள்ளவர்கள் அம்மனுக்குக் காப்பரிசி, பால், பட்டுப் பாவாடை மற்றும் தங்கத்திலோ வெள்ளியிலோ பொட்டு செய்து சமர்ப்பித்து வழிபட்டால், விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது ஐதீகம்.
ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் இங்கே விசேஷம். இந்த நாட்களில் அம்மனுக்குப் பாலபிஷேகம் செய்வதால், நமது இல்லத்தில் சகல சுபிட்சங்களும் பெருகும். இந்தத் தினங்களில் மஞ்சள், குங்குமம் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்ய மாங்கல்ய பலம் பெருகும்.இந்தக் கோவிலின் பங்குனித் திருவிழாவும், பூச்சொரிதல் வைபவமும் வெகு பிரசித்தம். விழாவின் 13 நாட்களும் அரிசியும் வெல்லமும் சேர்ந்த காப்பரிசிதான் அம்மனுக்கு நைவேத்தியம். மேலும் விழாவை யொட்டி, பழைமை மாறாமல் மண் சட்டியில் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றுவது இந்தக் கோவிலின் சிறப்பம்சம்.
சீர்காழி தாடாளப் பெருமாள் கோவில்
தவிட்டுப்பானையில் ஒளித்து வைக்கப்பட்ட தாடாளன் பெருமாள்
கட்டிடப்பணி சிறக்க நிலத்தின் மணலை வைத்து பூமி பூஜை செய்யப்படும் திவ்ய தேசம்
சீர்காழியிலுள்ள தாடாளப் பெருமாள் கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதை காழிச்சீராம விண்ணகரம் என்று கூறுவர். 'தாள்' என்றால் 'பூமி அல்லது உலகம்', 'ஆளன்' என்றால் 'அளந்தவன்' என்று பொருள். தன் திருவடியால் பெருமாள் மூன்று உலகங்களையும் அளந்தவர் என்பதால் இவருக்கு ஆண்டாள் இவருக்கு "தாளாளன்' என்ற பெயரை சூட்டினாள். பின்னாளில் அப்பெயர் தாடாளன் என்று மருவி விட்டது. ஒருசமயம் இத்தலம் அழிந்து போனது. அப்போது இந்தக் கோவிலில் இருந்த உற்சவ பெருமாள் விக்ரகத்தை, ஒரு மூதாட்டி தவிட்டுப்பானையில் வைத்து பாதுகாத்து வந்தார். எனவே இப்பெருமாளுக்கு தவிட்டுப்பானைத் தாடாளன் என்ற பெயர் ஏற்பட்டது. திருமங்கையாழ்வார் அம்மூதாட்டியிடம் இருந்து உற்சவ பெருமாள் விக்ரகத்தை பெற்று, மீண்டும் கோவிலில் சேர்த்தார்.
உற்சவமூர்த்தி தாடாளன் பெருமாள், மூலவர் பெருமாள் பூமியில் ஊன்றிய வலது பாதத்துக்கு முன்னே நிற்கின்றார். அதனால் மூலவர் பெருமாளின் வலது பாதத்தை நாம் தரிசிக்க முடியாது. வைகுண்ட ஏகாதசியன்று மட்டும், உற்சவரை அவருடைய இடத்திலிருந்து நகர்த்தி வைப்பார்கள். அன்றைய தினம் மட்டுமே, நாம் மூலவரின் வலது பாதத்தையும் தரிசிக்க முடியும். இந்த தரிசனம் கண்டவர்களுக்கு மறுபிறவி கிடையாதென்பது ஐதீகம்.
உலகையே ஒரு அடியில் அளந்த பெருமாள் என்பதால் இங்கு பூமி, வாஸ்து பூஜை செய்யும் முன்பு சுவாமியிடம் தங்களது நிலத்தின் மணலை வைத்து வேண்டிக்கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் நிலம் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீரங்கம் காவேரி அம்மன் கோவில்
காவேரி அன்னைக்கு நன்றி செலுத்தும் ஆடிப்பெருக்கு விழா
ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப் பதினெட்டாம் பெருக்கு என்று தமிழக மக்கள் விமரிசையாக கொண்டாடுகிறார்கள்.பதினெட்டு என்ற எண் வெற்றியைக் குறிக்கும். மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன.
தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வரும் விழாக்களில், காவிரிக்கென பிரத்யேகமான விழாவாக ஆடிப்பெருக்கு விழா உள்ளது. பயிர் செழிக்க வளம் அருளும் காவேரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில்தான் இந்த ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளின் கரைகளில் மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
ஆடிப்பெருக்கன்று காவேரிக்கரையில் இளம் பெண்களும், புதுமண தம்பதிகள் மற்றும் திருமணமான பெண்கள் புத்தாடை உடுத்திக் கொண்டு பழங்கள், அவல், ஊறவைத்த இனிப்பு கலந்த அரிசி, புதிய மாங்கல்ய மற்றும் மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி ஆகியவற்றை வைத்து மஞ்சள் மற்றும் மணலால் உருவாக்கப்பட்ட பிள்ளையார் முன் படையல் செய்து வழிபடுவார்கள். தாலி பாக்கியம் நிலைக்க சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கு அன்று புது தாலி மாற்றிக் கொள்வர். இந்த நன்னாளில் புதுமண பெண்ணிற்கு தாலி பிரித்து கோர்ப்பர் . எந்த ஒரு புது மற்றும் நல்ல காரியங்களை ஆடிப்பெருக்கு அன்று ஆரம்பித்தால் , அந்த காரியம் மேலும் மேலும் பெருகும் என்பது ஐதீகம்.
காவேரித் தாயாருக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அளிக்கும் சீர்வரிசைகள்
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் அமைந்துள்ளது காவேரி அம்மன் கோவில். இங்குதான் கீழ் இரு கரங்களில் புனித கலசம் தாங்கி, மேலிரு கரங்களில் அக்கமாலையும் மலர்ச் செண்டும் தாங்கி நின்ற கோலத்தில் அருளுகிறாள் காவேரி அன்னை.
காவேரி அன்னை, ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் தங்கையாக கருதப்படுகிறாள். ஆடியில் காவேரித்தாய் கருவுற்றிருப்பதாக ஐதீகம். எனவேதான் தனது தங்கையான காவேரி யை காண ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சீர்வரிசையுடன் ஆடிப்பெருக்கு அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள படித்துறைக்கு எழுந்தருள்வார். அன்று ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து காவேரித் தாயாருக்கு சீர்வரிசைகளை யானைமீது கொண்டு வருவார்கள். அந்தச் சீர்வரிசைகளில் விதவிதமான மங்கலப் பொருட் கள், மாலைகள், புதிய ஆடைகள் ஆகியவற்றுடன் தாலிப்பொட்டு ஒன்றும் இருக்கும். இதனை அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் முன்னிலையில் அங்குள்ள காவேரித் தாயாருக்குப் படைத்து, காவேரி நதியில் சமர்ப்பிப்பார்கள்.
காவேரிக்கு பெருமாள் சீர்வரிசை அளிக்கும் காட்சியைக் கண்டால் `கோடி புண்ணியம்' கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்பின், பெருமாள் பல்லக்கில் ஏறி கோவிலை நோக்கிச் செல்வது வழக்கம். அன்று அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை விழாக்கோலம் காணும். பெருமாள் கோவிலில் நுழையும்போது, வெளியில் உள்ள ஆண்டாள் சந்நிதிக்கு முன் எழுந்தருள்வார். அங்கே ஸ்ரீஆண்டாளும் பெருமாளும் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த அற்புதமான காட்சியை ஆடிப் பதினெட்டு அன்று ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும்பொழுது, தம்பதியர் தரிசித்தால் வாழ்வில் வசந்தம் வீசும். கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, காவேரியில் நீராடிய நாள் ‘ஆடிப்பெருக்கு' என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழா
தென்னிந்தியாவில் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது, பவானி கூடுதுறை. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவில் ஆடிப்பெருக்கு அன்று அதிகாலையில் திறக்கப்படும். கூடுதுறையில் நீராடிவிட்டு பக்தர்கள், இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.
அட்சய திரிதியை தினத்தை விட, ஆடிப்பெருக்கு சிறப்பான நன்னாளாகும். இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். ஒருவர் செய்யும் நற்செயல்களால், எவ்வாறு புண்ணியம் பெருகுகிறதோ, அதுபோல் இந்த நாளில் தொடங்கும் எந்தக் காரியமும் நன்மை அளிக்கும் வகையிலேயே நிறைவு பெறும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில்
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு இணையான தலம்
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் ரோட்டில் 24 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில். இறைவியின் திருநாமம் சிவகாமி அம்மன். தாமிரபரணி நதிக்கரையில் ரோமரி முனிவரால், மலர்கள் மூலம் கண்டறியப்பட்ட நவகைலாயத் தலங்களில் இது ஆறாவது தலமாகும்.
நவதிருப்பதிகளில் சூரியன் வணங்கும் வைகுண்டநாதர் திருக்கோவிலும் இவ்வூரில் உள்ளது. நவதிருப்பதிகளில் ஒன்றும், நவகைலாயத்தில் ஒன்றும் ஒரேயிடத்தில் அமைந்த திருத்தலம் இதுவாகும்.
ஐந்து வயது வரை வாய்பேசாது ஊமையாயிருந்து பின்னர்,திருச்செந்தூர் முருகன் அருள் பெற்று பாடும் அருள் பெற்ற ஸ்ரீகுமரகுருபரசுவாமிகள் பிறந்த ஊர் இதுவாகும். இவர் பூலோக வைகுண்டமாகவும், பூலோக கைலாயமாகவும் இவ்வூர் திகழ்ந்ததாகத் தமது கைலைக்கலம்பகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இக்கோவில் சனி பகவானுக்கு உரிய பரிகார தலமாகும். இக்கோவிலில் சனீஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கைலாசநாதருக்கும், சனிக்கும் விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.
சனி தசையால் பாதிக்கப் பட்டுள்ளவர்கள் இங்கு பரிகாரம் செய்துகொண்டால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும், இழந்த சொத்துக்களை மீண்டும் பெறலாம் என்பது நம்பிக்கை.
இக்கோயிலை வழிபடுவது திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலை வழிபடுவதற்கு சமமாகும் என கூறப்படுகிறது. சனிப்பெயர்ச்சியின்போது பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள், இங்கு வேண்டிக்கொண்டால் சனியின் உக்கிரம் குறையும் என்பது நம்பிக்கை.
நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள்
நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி, இக்கோவிலில் உள்ள அழகிய நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்களும் சிற்பங்களும், நாயக்கர் கால மற்றும் பாண்டிய கால கட்டிடக்கலைத் திறனுக்குச் சிறந்த சான்றுகளாக விளங்குகின்றன.
இங்குள்ள யாளியின் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. யாளியின் வால்கள், சுருண்டிருக்கும் நிலையில் வடிவமைத்திருப்பது நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றது. யாளியின் வாயில் உள்ள உருளும் பந்து நாயக்கர் கால சிற்பங்களின் சிறப்பு அம்சம்.
அது போல இளம் மங்கைகளின் எழில் தோற்றமும், அவர்கள் ஆடை அணிகலன்களின் நுணுக்கமான வேலைப்பாடும் காண்பவர்களின் கண்களை கவரும் விதத்தில் உள்ளன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
விவசாயம் செழிக்க நடைபெறும் மீனாட்சி அம்மன் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா
அர்த்தநாரீஸ்வரராக காட்சி தரும் மீனாட்சி அம்மன்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். இதனாலேயே 'ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி' என்று மீனாட்சி அம்மனை பெருமைப்படுத்தி சொல்லுவர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், மீனாட்சி அம்மனுக்கு மட்டும் உரிய திருவிழாக்கள் ஆடி முளைக்கொட்டு திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு ஆகியவை ஆகும்.
ஆடி முளைக்கொட்டு விழா, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் ஒன்றாகும். "ஆடிப்பட்டம் தேடி விதை" என்ற பழமொழியின்படி, நாடு மற்றும் வீடுகள் செழிக்க முளைப்பாரி இட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.
விவசாயிகள் ஆடி மாதம் விதை விதைத்து நாற்று நட்டு விவசாய பணிகளை மேற்கொள்வர். தங்கள் நிலங்களில் பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வர். விவசாயம் செழிக்கவும், நாடு வளம் பெறவும் வகை செய்யும் ஐதீகத்தில் அமைந்ததே ஆடி முளைக்கொட்டுத் திருவிழாவாகும்.
10 நாட்கள் நடைபெறும் இந்த ஆடி முளைக்கொட்டு திருவிழா நாட்களில், மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இருவேளை ஆடி வீதியில் சிம்மம், வெள்ளி ரிஷபம், கிளி போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிபார்.
திருவிழாவின் 6ஆம் நாளில், மீனாட்சி அம்மன் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருள்வது விசேஷமான ஒன்று.
அர்த்தநாரீஸ்வரராக காட்சி தரும் மீனாட்சி அம்மன்
ஆடி முளைக்கொட்டு உற்சவத்தின் ஒன்பதாம் நாள் இரவு மீனாட்சி அம்மன் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் வலம் வருவார்.
மீனாட்சி அம்மன், சுவாமியின் ஜடாமகுட கீரிடம், திருமடல், அபய அஸ்தம் அணிந்து, வலது புறம் சிவனின் அம்சமாக வேட்டியும், இடது புறம் சக்தியின் அம்சமாக சேலையும் அணிந்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருவது, இத்திருவிழாவின் தனிச்சிறப்பாகும். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த நிகழ்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பத்தாம் நாள் நிறைவு விழாவன்று மீனாட்சி அம்மன் கனக தண்டியல் வாகனத்தில் உலகமே போற்றும் சயன திருக்கோலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். இதுவும் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் கோலாகலமான நிகழ்வாகும்.
மதுரை முக்தீஸ்வரர் கோவில்
கல்வியிலும், இசைக்கலையிலும் சிறந்து விளங்க அருள்புரியும் வீணாதர தட்சிணாமூர்த்தி
மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது முக்தீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் மரகதவல்லி தாயார். சிவனின் 64 திருவிளையாடல்களில், இரண்டாவது திருவிளையாடல் நடந்த இடம் தான், முக்தீஸ்வரர் கோவில்.
மதுரையின் பஞ்சபூதத் தலங்களாக ஐந்து சிவாலயங்கள் உள்ளன. நீர்த் தலமாக செல்லூர் திருவாப்புடையார் கோவில், ஆகாயத் தலமாக சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோவில், நில தலமாக இம்மையிலும் நன்மை தருவார் கோவில், நெருப்புத்தலமாக தெற்கு மாசிவீதி திருவாலவாயர் கோவில் ஆகியவை உள்ளன. வாயுத் தலமாக தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில் விளங்குகின்றது.
இக்கோவிலில் இரண்டு தட்சிணாமூர்த்திகள் எழுந்தருளி இருக்கிறார்கள். இறைவன் கருவறையின் சுற்றுச்சுவரில் ஒருவரும், இறைவன் சன்னதியின் முன் உள்ள தூணில் மற்றொருவரும் காட்சி அளிக்கிறார்கள். இவற்றில் தூணில் எழுந்தருளி உள்ள தட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவர் கைகளில் வீணையை ஏந்தியபடி காட்சியருள்வதால் வீணை தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். பொதுவாகவே தட்சிணாமூர்த்தியை 'ஞானத்தின் கடவுள்' என்று போற்றுவோம். அவரை வணங்கி வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்களாம். இந்த தட்சிணாமூர்த்தி வீணை ஏந்தி இருப்பதால் இவரை வேண்டிக்கொண்டால் கல்வியிலும், இசைக்கலையிலும் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்.
கர்மவினைகளால் துன்புறுபவர்கள் இந்த முக்தீஸ்வரர் ஆலயத்துக்கு வந்து வேண்டிக்கொண்டால், உடனே நிவாரணம் பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கோயில்பதாகை சுந்தரராஜ பெருமாள் கோவில்
தவம் செய்யும் நிலையில் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் கருடாழ்வார்
சென்னை ஆவடியில் இருந்து, செங்குன்றம் செல்லும் வழியில் மூன்று கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோயில்பதாகை சுந்தரராஜ பெருமாள் கோவில். தாயார் திருநாமம் சுந்தரவல்லி. இக்கோவில், 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
பொதுவாக பெருமாள் கோவில்களில், பெருமாள் எதிரில் கருடாழ்வார் நின்ற கோலத்தில் அஞ்சலி முத்திரையுடன் அல்லது கைகட்டி சேவகம் செய்யும் நிலையில் காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில் கருடாழ்வார், தவம் செய்யும் நிலையில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். கருடாழ்வாரின் இந்த தோற்றத்தை, நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி, கருட பஞ்சமி என அழைக்கப்படும். அன்று பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடாழ்வாருக்காக, கருட பஞ்சமி என்ற விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த விரதம் குழந்தைகளுக்காகவும், உடன் பிறந்தவர்களுக்காகவும் கடைபிடிக்கப்படுகிறது.
தட்டான்குட்டை பச்சைத் தண்ணீர் மாரியம்மன் கோவில்
தண்ணீரில் விளக்கு எரியும் அதிசயம்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே மூன்று கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தட்டான்குட்டை என்ற ஊரில் அமைந்துள்ளது பச்சைத் தண்ணீர் மாரியம்மன் கோவில்.
பல நூற்றாண்டுகள் பழமையான இக்கோவிலில் பல நூற்றாண்டுகள் பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி திருவிழாவின் போது தண்ணீரில் விளக்கு எரியும் அதிசயம் நிகழ்கின்றது. இந்த அதிசயம் 300 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகின்றது. பங்குனி திருவிழாவின் போது, தண்ணீரில் விளக்கை எரிய வைக்க, அதிகாலையில் பூசாரிகள் கோவில் கிணற்றில் புனித நீராடி, குடத்தில் தண்ணீரை எடுத்து வருவார்கள். அப்போது, அவர்கள் அம்மன் முன்பு சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்த விளக்கில் இருந்த எண்ணெய் முழுவதையும் வடித்துவிட்டு கிணற்றில் இருந்து கொண்டு வந்த தண்ணீரை அந்த விளக்கில் ஊற்றுவார்கள். பின்னர், அந்த விளக்கில் தீபம் ஏற்றியபோது, விளக்கு, எண்ணெயில் எரிவது போல் தண்ணீரிலும் சுடர்விட்டு எரியும்.
இந்த அதிசயக் காட்சியை திருவிழாவிற்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கண்டு, பக்தி பரவசம் அடைவார்கள். தண்ணீரில் அதிகாலையில் பற்ற வைக்கப்பட்ட விளக்கு, சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் எரிந்து பின்னர் அணைந்தவிடும். அதன்பின்னர் எண்ணெயை கொண்டு விளக்கில் மீண்டும் தீபம் ஏற்றப்படும். தண்ணீரில் விளக்கு எரியும் இந்த அதிசயம், திருவிழா நடக்கும் நாள் அன்று மட்டுமே நடைபெறும். மற்ற நாட்களில் வழக்கம்போல் எண்ணெயை கொண்டுதான் விளக்கு எரிய வைக்கப்படும்.
முன்னோர் காலத்தில் ஒருமுறை கோவில் விளக்கில் எண்ணெய் தீர்ந்து போனதாகவும், அப்போது கோவில் பூசாரி ஊர் தர்மகர்த்தாவிடம் அம்மனுக்கு விளக்கு வைக்க, எண்ணெய் வாங்க பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த தர்மகர்த்தா, ஒரு வித விரக்தியுடன் பணம் இல்லை என்றும், சக்தியுள்ள மாரியம்மன் தானே, தண்ணீரை ஊற்றி பற்றவை விளக்கு எரியும் என்றும் கூறியுள்ளார். அதேபோல் கோவில் பூசாரிகள் தண்ணீர் ஊற்றி விளக்கை பற்ற வைத்தனர். அப்போது அம்மன் முன்பு பற்ற வைக்கப்பட்ட விளக்கு சுடர் விட்டு எரிந்துள்ளது. அப்போது தண்ணீரில் விளக்கு எரிந்த அதிசயத்தை பார்த்த கோயில் பூசாரிகளும், பொதுமக்களும் வியப்பில் ஆழ்ந்தனர். இதனால் அன்று முதல் இங்குள்ள மாரியம்மன் ‘பச்சைத் தண்ணீர் மாரியம்மன்’ என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.
நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோவில்
நாகை நீலாயதாக்ஷி அம்மனுக்கு நடத்தப்படும் தனித்துவமான ஆடிப்பூரத் திருவிழா
நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைநகரான நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தேவார தலம் காயாரோகணேசுவரர் கோவில் ஆகும். இறைவியின் திருநாமம் நீலாய தாட்சி. அம்பிகையை, பெண்ணின் ஐந்து பருவ நிலைகளில் சித்தரித்து வணங்கப்படும் ஐந்து அக்ஷித் தலங்களுள், இத்தலமும் ஒன்றாகும். இத்தலத்தில், நீலாயதாக்ஷி பூப்படைந்த கன்னியாக இருந்து அருள் பாலிக்கிறார். அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றான இத்தலம், நேத்திர (அம்பிகையின் கண் விழுந்த) பீடம் ஆகும்.
ஆடித் திங்களில் வரும் பூரம் நன்னாளில் தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த உலகை படைத்தும், காத்தும் வரும் உமாதேவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவதும் ஆடிப்பூரம் அன்றுதான்.
எல்லா கோவில்களிலும் ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவது போல், நாகை நீலாயதாக்ஷி அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்படுவதில்லை. அதற்கு காரணம் இந்த தலத்தில் தான் அம்பிகை கன்னிப் பருவம் எய்தினாள். அதனால் இந்தக் கோவிலில் ஆடிப்பூர நிகழ்ச்சிகள் சற்று தனித்துவமான முறையில் நடைபெறுகின்றது. இக்கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். பத்தாம் நாளான ஆடிப்பூரத்தன்று திருவிழா நிறைவு பெறும்.
ஆடிப்பூரத்தன்று காலையில் முளை கட்டின பச்சைப் பயிறுக்கு, சூர்ணோற்சவம் செய்து, அதை மூலவர் நீலாயதாக்ஷி அம்பிகையின் புடவைத் தலைப்பில் முடிச்சிட்டு அம்பிகையின் இடுப்பில் கட்டி விடுவார்கள். பின்னர் நீலாயதாக்ஷி அம்மனுக்கு வெள்ளை புடவை சார்த்தி வீதி புறப்பாடு நடைபெறும். இந்த முளைக்கட்டிய பச்சைப் பயிறு பிரசாதம், குழந்தைப் பேறின்மை, கர்ப்பப்பை பிரச்சனை, வயதாகியும் பூப்படையாமல் இருத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும் என்பது ஐதீகம்.
ஆடிப்பூரத்தன்று மாலையில் நீலாயதாக்ஷி அம்மனுக்கு ஆடிப்பூரம் கழித்தல் என்னும் சடங்கு நடத்தப்படும். இச்சடங்கு பெண்கள் பருவம் அடைந்த போது செய்யப்படும் சடங்கு முறைகளை ஒத்ததாக இருக்கும்.
ஆடிப்பூரத்தன்று இரவு நீலாயதக்ஷி அம்மன் சிறப்பான ஆடை அலங்காரத்துடன், பின்னால் அழகிய ஜடை தரித்து ஜெகஜோதியாய் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பீங்கான் ரதத்தில் வீதி உலா வருவார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
ஆண்டாள் கையில் இருக்கும் கல்யாண கிளியின் சிறப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றால் நம் நினைவுக்கு வருவது ஆண்டாள் கோவில். அந்தக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஆண்டாளின் சிறப்பு அடையாளங்களாக அவரது சாய்ந்த கொண்டையும், அவரது தோளில் வீற்றிருக்கும் கிளியும் விளங்குகின்றன.
மதுரை ஸ்ரீமீனாட்சிக்கு வலத்தோளில் கிளி இருக்கும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு இடத்தோளில் கிளி இருக்கும். ஆண்டாளின் இடது கையில் உள்ள கிளி கல்யாண கிளி என்று அழைக்கப்படுகின்றது.இந்தக் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது. கிளி மூக்கு – மாதுளம் பூ, மரவல்லி இலை – கிளியின் உடல்;, இறக்கைகள் – நந்தியாவட்டை இலையும் பனை ஓலையும்;, கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள்;, கிளியின் கண்களுக்கு காக்காய்ப் பொன் என்று சொல்லப்படும் பொருளைப் பயன்படுத்துவார்கள். இவற்றை பயன்படுத்தி கிளியை உருவாக்குகின்றனர். கிளியின் கழுத்துக்கு ஆபரணமாக பனை ஓலையும், பச்சிலைகளும் சாத்தப்படுகின்றன. கிளி அமர்ந்திருக்கும் பூச்செண்டானது நந்தியாவட்டைப் பூ, செவ்வரளிப்பூ ஆகியவற்றால் ஆனது. கிளியை தினசரி மாலை 6.30. மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜையின் போது தாயார் ஆண்டாளின் இடது தோளில் சார்த்துவது வழக்கம். அந்தக் கிளி, இரவு அர்த்தசாமப் பூஜை வரை ஆண்டாளின் தோளில் வீற்றிருக்கும். அதற்குப் பிறகு ஆண்டாளுக்குச் சார்த்தப்பட்ட மாலை முதலானவற்றைக் களையும் 'படி களைதல்' எனும் நிகழ்வின்போது, கிளியும் அகற்றப்படும்.
ஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், என்ன வரம் வேண்டும்? என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்! என்று வேண்டிக் கொண்டார் என்றும், அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது. ஆண்டாள், பெருமாளிடம் காதல் கொண்டு, காதல் தூது சென்றதால், அந்தக் கிளிக்கு ‘கல்யாணக் கிளி’ என்றும் பெயர் உண்டு .பக்தர்கள் தங்களின் கோரிக்கைகளை கூறும் பொழுது அதைக் கேட்கும் கிளியும் அடிக்கடி ஞாபகப்படுத்தி ஆண்டாளிடம் பிரார்த்தனையை நினைவு படுத்துமாம். பக்தர்கள் ஒரு கோரிக்கை வைத்தால், அதனை கல்யாணக் கிளி செய்து முடிக்குமாம்.
மயிலாடுதுறை மயூரநாதர் கோவில்
அக்னி கிரீடம் தரித்த சனி பகவானின் அபூர்வ தோற்றம்
மயிலாடுதுறை மாவட்டத்தின் தலைநகரான மயிலாடுதுறையின் மையப்பகுதியில் அமைந்துள்ள தேவாரத் தலம் மயூரநாதர் கோவில். இறைவியின் திருநாமம் அபயாம்பிகை. அம்பிகை மயில் வடிவில் சிவபெருமானை வழிபட்ட தலம் இது.
பொதுவாக சிவாலயங்களில் நவக்கிரகங்கள் வேதப் பிரதிஷ்டை முறையில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஒரு சில தலங்களில் மட்டும் தான் அவை வேத ஆகம விதிப்படி அமைக்கப்பட்டிருக்கும். நவக்கிரகங்கள் வேதாகம விதிப்படி அமைக்கப்பட்டிருக்கும் போது, சூரிய பகவான் நடுவில் எழுந்தருளி இருப்பார். பாவக்கிரகங்களான சனி ,செவ்வாய், ராகு, கேது ஆகிய நால்வரும் வெளிச்சுற்றில் நான்கு மூலைகளில் எழுந்தருளிப்பார்கள். சுபகிரகங்களான சந்திரன்,புதன், குரு, சுக்கிரன் ஆகிய நால்வரும் சூரிய பகவானுக்கும் பாவக்கிரகங்களுக்கும் நடுவில் எழுந்தருளி இருப்பார்கள். நவகிரகங்களில் சனி பகவான் தான் வழக்கமாக அணியும் ராஜ கிரீடத்திற்கு பதிலாக, 'ஜுவாலா கேசம்' (அக்னி கிரீடம்) அணிந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். பொதுவாக மாரியம்மன் போன்ற உக்கிரக நிலையில் உள்ள தெய்வங்கள் தான் அக்னி கிரீடம் அணிந்து இருப்பார்கள். இப்படி அக்னி கிரீடம் தரித்த சனி பகவானை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில்
நித்திய சுமங்கலி என்னும் சிறப்பு பெயர் கொண்ட மாரியம்மன்
பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க அருளும் அம்மன்
ராசிபுரத்திலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில் அமைந்துள்ளது நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில். கொல்லிமலை, அலவாய் மலை, நைனாமலை, போத மலை என்னும் நான்கு மலைகளுக்கு மத்தியில் அமைந்த கோவில் இது. அம்மனுக்கு இத்தகைய சிறப்பு பெயர் கொண்ட தலம் வேறு எங்கும் கிடையாது. கருவறையில் நித்திய சுமங்கலி மாரியம்மன் சதுர வடிவ ஆவுடையாரில் அமர்ந்திருக்கின்றாள். நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு முன்பு, முதலில் இத்தலத்தில் சுயம்புவாக தோன்றிய மாரியம்மன் லிங்க வடிவில் காட்சி தருகிறாள். அம்மனுக்கு எதிரே யாளி வாகனம் இருக்கிறது.
பொதுவாக மாரியம்மன் கோயில்களில் விழாக்காலங்களில் மட்டும் அம்பிகைக்கு எதிரே கம்பம் நடப்படும். இந்த கம்பத்தை அம்பிகையின், கணவனாக கருதி பூஜை செய்வர். ஆனால், இத்தலத்தில் அனைத்து நாட்களிலும் அம்பிகை எதிரே கம்பம் இருக்கிறது. அம்பிகை, தனது கணவனாக கருதப்படும் கம்பத்தை நேரே பார்த்துக் கொண்டிருப்பதால் இவளிடம் வேண்டிக்கொள்ள, பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என்பது ஐதீகம். எனவே இந்த அம்மனை, 'நித்ய சுமங்கலி மாரியம்மன்' என்று அழைக்கிறார்கள்.
குழந்தைவரம் வேண்டுவோர் இங்கு ஒரு வித்தியாசமான பிரார்த்தனை செய்கின்றனர். ஐப்பசி விழாவின்போது அம்மனுக்கு எதிரேயுள்ள பழைய கம்பத்தை எடுத்துவிட்டு, புதிய கம்பம் நடுகின்றனர். பழைய கம்பத்தை இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள தீர்த்தக் கிணற்றிற்கு கொண்டு செல்கின்றனர். அப்போது கம்பத்திற்கு தயிர் சாத நைவேத்யம் படைத்து பூஜை நடக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் கம்பத்தை வணங்கி, எலுமிச்சை தீபமேற்றி, தயிர் சாத பிரசாதம் வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் குழந்தை பாக்கியம் கிடைப்பதாக நம்புகிறார்கள். மேலும் ஒவ்வொரு மாதத்திலும் மகம் நட்சத்திரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. அம்மனுக்கு எதிரே ஊஞ்சல் மண்டபம் உள்ளது. இங்குள்ள ஊஞ்சலில் அம்பிகையின் பாதம் பொறிக்கப்பட்டிருக்கிறது. புத்திரத்தடை உள்ள பெண்கள் இந்த ஊஞ்சலை ஆட்டி, அம்பிகையிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.