மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
விவசாயம் செழிக்க நடைபெறும் மீனாட்சி அம்மன் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா
அர்த்தநாரீஸ்வரராக காட்சி தரும் மீனாட்சி அம்மன்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். இதனாலேயே 'ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி' என்று மீனாட்சி அம்மனை பெருமைப்படுத்தி சொல்லுவர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், மீனாட்சி அம்மனுக்கு மட்டும் உரிய திருவிழாக்கள் ஆடி முளைக்கொட்டு திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு ஆகியவை ஆகும்.
இந்த ஆண்டின் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா 27.7.2025 அன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 05.08.2025 (செவ்வாய்க்கிழமை) வரை நடக்கின்றது. ஆடி முளைக்கொட்டு விழா, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் ஒன்றாகும். விவசாயிகள் ஆடி மாதம் விதை விதைத்து நாற்று நட்டு விவசாய பணிகளை மேற்கொள்வர். தங்கள் நிலங்களில் பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வர். விவசாயம் செழிக்கவும், நாடு வளம் பெறவும் வகை செய்யும் ஐதீகத்தில் அமைந்ததே ஆடி முளைக்கொட்டுத் திருவிழாவாகும்.
10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா நாட்களில், மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இருவேளை ஆடி வீதியில் வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிபார். திருவிழாவின் 6ஆம் நாளில், மீனாட்சி அம்மன் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருள்வது விசேஷமான ஒன்று.ஆடி முளைக்கொட்டு உற்சவத்தின் ஒன்பதாம் நாள் இரவு மீனாட்சி அம்மன் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் வலம் வருவார். மீனாட்சி அம்மன், சுவாமியின் ஜடாமகுட கீரிடம், திருமடல், அபய அஸ்தம் அணிந்து, வலது புறம் சிவனின் அம்சமாக வேட்டியும், இடது புறம் சக்தியின் அம்சமாக சேலையும் அணிந்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருவது, இத்திருவிழாவின் தனிச்சிறப்பாகும்.
அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் மீனாட்சி அம்மன்