இரும்பை மாகாளேசுவரர் கோவில்
கையில் ஏடு ஏந்தியிருக்கும் சந்திரனின் அபூர்வ தோற்றம்
கல்வி , கலைகளை பக்தர்களுக்கு அருளும் கலா சந்திரன்
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் வட்டத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம், இரும்பை மாகாளேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மதுரசுந்தர நாயகி. இத்தலம் திண்டிவனத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
இக்கோவில் பிரகாரத்தில் சந்திரன், மேற்கு பார்த்தபடி தனிச்சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார். இவர் தனது இடது கையில் ஏடு ஒன்றை ஏந்தியிருப்பது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத காட்சியாகும். கையில் ஏடு வைத்திருப்பது, இவர் கல்வி, கலைகளுக்கு காரகனாக விளங்குகிறார் என்பதை குறிப்பிடுகிறது. எனவே இவர் கலா சந்திரன் என்று குறிப்பிடப்படுகின்றார். பக்தர்கள் இவருக்கு பால் சாதம் நைவேத்யமாக படைத்து வணங்குகின்றனர். இதனால் கல்வி, கலைகளில் சிறந்து விளங்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மனோதிடம் அதிகரிக்கவும் இவரை வழிபடலாம். ஒருவருக்கு மாதத்தில், உத்தேசமாக, இரண்டரை நாள் வரை சந்திராஷ்டமம் வரும். இந்த காலத்தில் மனோதிடம் குறையும். செயல்களில் தடை உண்டாகும் என்பது ஜோதிடவிதி. இந்த பாதிப்பு சந்திராஷ்டம காலத்தில் ஏற்படக்கூடாது என வேண்டி, கலா சந்திரனுக்கு பால்சாதம் நைவேத்யம் செய்து வழிபடலாம்.
.
காரைக்கால் காரைக்கால் அம்மையார் கோவில்
சிவபெருமானால் 'அம்மையே' என்று அழைக்கப்பட்ட பெண் நாயன்மார்
புதுச்சேரி மாநிலத்திலுள்ள காரைக்காலில் அமைந்துள்ளது காரைக்கால் காரைக்கால் அம்மையார் கோவில். சேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தில் கூறப்பட்டுள்ள 63 நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் ஒருவர்தான் பெண் இனத்தைச் சேர்ந்தவர். சிவபெருமானால் 'அம்மையே' என்று அழைக்கப்பட்டச் சிறப்புக்குரியவர். இசைத் தமிழால் இறைவனைப் பாடியவர். சிவபெருமானால் மாங்கனி தந்து அவர் ஆட்கொள்ளப்பட்ட வரலாறு, அவர்தம் பக்தியின் சிறப்பை நமக்கு உணர்த்துகின்றது. அதைப் பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் மாங்கனி திருவிழா காரைக்காலம்மையார் கோவிலில் நடைபெறுவது வழக்கம்.
சிவபெருமான் மாங்கனி தந்து காரைக்கால் அம்மையாரை ஆட்கொண்ட வரலாறு
காரைக்காலிலுள்ள குலத்தைச் சேர்ந்த தனதத்தன் என்பவருக்கு மகளாக பிறந்தவர்காரைக்கால் அம்மையார். இவர் இயற் பெயர் புனிதவதி. சிறுவயது முதல் சிவ பக்தியிலும், சிவனடியார்களுக்கு தொண்டு புரிவதிலும் சிறந்தவர். புனிதவதி வளர்ந்து திருமண வயதை அடைந்ததும், பரமதத்தன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.திருமணத்துக்கு பிறகும் புனிதவதி சிவனடியார்களுக்கு தொண்டு செய்து வந்தார். ஒரு நாள் பரமதத்தனுக்கு தனக்கு கிடைத்த மாங்கனிகளை தனது வேலையாட்கள் மூலம் வீட்டிற்கு கொடுத்து அனுப்பினான். அப்போது சிவபெருமான், ஒரு சிவனடியார் வேடத்தில் அங்கு வந்தார் சிவன். தாம் பசியுடன் இருப்பதாகவும், உண்ண ஏதாவது உணவு தருமாறும் புனிதவதியை வேண்டினார். அப்போது உணவு தயாரகவில்லை என்பதால் தனது கணவன் கொடுத்து அனுப்பிய மாங்கனிகளில் இருந்து ஒன்றை எடுத்து சிவனடியாருக்கு உண்ணக்கொடுத்தார். அதனை உண்ட சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமானும் புனிதவதியை வாழ்த்தி மறைந்தார். மதிய உணவு உண்பதற்காக வீட்டிற்கு பரமதத்தன், தனது மனைவி புனிதவதியிடம் மாங்கனிகளை எடுத்து வா என்று கேட்டார். புனிதவதியோ, சிவனடியாருக்கு கொடுத்த ஒரு மாங்கனி போக மீதம் இருந்த மற்றொரு மாங்கனியை தன் கணவனிடம் கொண்டு வந்து கொடுத்தார். அக்கனியை உண்ட பரமதத்தன், இரண்டாவது மாங்கனியையும் எடுத்து வருமாறு கூறினார்.
சிவபெருமான் கொடுத்த மாங்கனி
இதைக் கேட்ட புனிதவதி, பூஜை அறைக்கு சென்று சிவபெருமானிடம் மாம்பழம் கொடுத்து அருளுமாறு வேண்டினார். சிவனும் உடனே புனிதவதிக்கு மாங்கனியை அருளினார். அதனை பெற்றுக் கொண்ட புனிதவதி, தன் கணவன் பரமதத்தனிடம் மாங்கனியை கொடுத்தாள். அக் கனியை உண்ட பரமதத்தனுக்கு தான் முன்பு சாப்பிட்ட மாங்கனியை விட இரண்டாவது கனி மிகவும் சிறப்பான சுவையுடன் இருந்ததால், புனிதவதியிடம் மாங்கனி சுவையின் வேறுபாடு பற்றி கேட்டான். கணவனின் கேள்விக்கு பொய் சொல்ல விரும்பாத புனிதவதி நடந்தவற்றை மறைக்காமல் தனது கணவனிடம் தெரிவித்தாள். இதனைக் கேட்ட பரமதத்தன், அப்படியானால் சிவபெரு மானிடம் இருந்து இன்னொரு மாங்கனி பெற்றுத் தருமாறு வேண்டினான். புனிதவதியும் சிவபெருமானை வேண்ட இன்னொரு மாங்கனியும் கிடைத்தது. இதனைக் கண்ட பரமதத்தன் தன் மனைவி ஒரு தெய்வம் என்று எண்ணி அவளது காலில் விழுந்து வணங்கினார். தன் மனைவியை விட்டு விலகி பாண்டிய நாடு வந்த பரமதத்தன், குலசேகரன் பட்டிணத்தில் தங்கி வணிகம் செய்ய ஆரம்பித்தான். பிறகு அங்கேயே ஒரு பெண்ணை மணந்து வாழ்ந்து வந்தான். அந்த பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு தனது முதல் மனைவியின் பெயரான புனிதவதி என்று பெயரிட்டு அழைத்து வந்தான். இந்த தகவலை அறிந்த புனிதவதியார் குலசேகரன்பட்டிணம் வந்து, ஊர் எல்லையில் உள்ள ஒரு மண்டபத்தில் அமர்ந்து கொண்டு கணவனுக்கு அழைப்பு விடுத்தார். தனது இரண்டாவது மனைவி, மகளுடன் வந்து முதல் மனைவியான காரைக்கால் அம்மையார் காலில் விழுந்து வணங்கி, அங்கு கூடியிருந்த மக்களையும் வணங்க வைத்தான்.
காரைக்கால் அம்மையார் சிவபெருமானிடம் பெற்ற வரம்
காரைக்கால் அம்மையார் குலசேகரபட்டினத்தில் கணவருடன் சேர நினைத்து அது இயலாமல் போகவே, கணவனுக்கு தேவையற்ற இந்த இளமையும், அழகும், தனக்கு வேண்டாம் என இறைவனிடம் கூறி துறவறத்திலேயே யாரும் துணியாத நிலையான பேய் வடிவினை வரமாகக் கேட்டுப் பெற்றார். காரைக்கால் சென்று அம்மை அப்பரை வணங்கிய பின்னர் அங்கிருந்து கயிலாயம் புறப்பட்டுச் சென்றார். காலால் நடப்பது குற்றம் என்று எண்ணிய புனிதவதியார், தனது தலையாலேயே கயிலாயத்தில் நடந்து சென்றார். அப்போது இறைவன், 'அம்மையே! நலமாக வந்தனையோ? நம்மிடம் வேண்டுவது யாது?'' என்று புனிதவதியை நோக்கி கேட்டார். அதற்கு அம்மையார்,'இறைவா! உன்மீது என்றும் நீங்காத அன்போடு நான் இருக்க வேண்டும். பிறவாமை வேண்டும், மீண்டும் பிறந்தால் உம்மை என்றும் மறவாமை வேண்டும். அனுதினமும் உன் திருவடியின் கீழ் இருந்து என்றும் உன் திருநாமத்தை பாடிக் கொண்டிருக்கும் வரம் வேண்டும்' என்று கேட்டார். உடனே சிவபெருமான், 'அம்மையே! நீவீர் பூலோகத்தில் உள்ள திருவாலங்காட்டில் எனது திருவடியின்கீழ் இருந்து பாடும் வரம் தந்தோம்' என்று அருளினார். அதன்படி இன்றும் திருவாலங்காட்டில் உள்ள நடராஜப் பெருமானின் ரத்தின சபையில் காரைக்கால் அம்மையார் அமர்ந்து சிவபெருமானின் நடனத்தை கண்டு மகிழ்கிறார் என்பது ஐதீகம். 63 நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார்தான் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
சிவபெருமானைத் துதித்து, காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி, திருஇரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்தத்திருப்பதிகம் போன்ற நூல்களைப் பாடியுள்ளார்.
பிள்ளை வரம் தரும் மாங்கனித் திருவிழா
இந்த ஆண்டு மாங்கனி திருவிழா ஜூலை மாதம் 8 முதல் 11ம் தேதி வரை, கைலாசநாதர் கோவிலில் நடைபெறுகின்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 8-ந் தேதி மாப்பிள்ளை அழைப்பும், 9ந் தேதி காரைக்கால் அம்மையாருக்கும், பரம தத்தருக்கும் திருக்கல்யாணமும், 10-ந் தேதி சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் பவளக்கால் சப்பரத்தில் வீதியுலாவும் நடைபெற்றது. பிச்சாண்டவர் வீதியுலாவின்போது பக்தர்கள், தங்கள் நேர்த்திக்கடனை தீர்க்கும் வகையில், மாங்கனிகளை வாரி இறைப்பார்கள். அப்போது மக்கள் உயரமான இடத்திலிருந்து வீதியில் மாங்கனிகளை வீசுவர். மாடிகளிலிருந்து இறைக்கப்படும் மாம்பழங்கள் வானத்திலிருந்து மாம்பழ மழை பொழிவதைப் போல் தெரியும். இந்த மாங்கனிகளை பிடித்து சாப்பிட்டால் திருமணம் கை கூடும் என்பதும், குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதும் ஐதீகம் . குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாங்கனிகளை தங்களது சேலையில் தாங்கி பிடித்துக் கொள்வர்.ஜூலை 11-ந் தேதி வெள்ளிக்கிழமை, அம்மையாருக்கு, சிவபெருமான் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
பிள்ளை வரம் வேண்டி காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு வந்து மாங்கனி திருவிழாவின்போது மாங்கனிகளை படைத்து வழிபட்டால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
திருக்குரக்குக்கா குந்தளேசுவரர் கோவில்
ஆஞ்சநேயர் தன்னுடைய குண்டலத்தை படைத்து சிவபெருமானை வழிபட்ட தேவார தலம்
மயிலாடுதுறையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்குரக்குக்கா. இறைவன் திருநாமம் குந்தளேசுவரர். இறைவியின் திருநாமம் குந்தளநாயகி.
ஆஞ்சநேயர் சிவபெருமானை வழிபட்ட தலம் இது. இக்கோவிலில் ஆஞ்சநேயர் சன்னதி, இறைவன் குந்தளேசுவரர் சன்னதி எதிரே அமைக்கப்பட்டுள்ளது. திருமால், ராமாவதாரம் எடுத்தபோது, அவருக்கு உதவுவதற்காக சிவபெருமானே ஆஞ்சநேயராக வந்தார். எனவே, ஆஞ்சநேயர் சிவஅம்சம் ஆகிறார். அவ்வகையில் இத்தலத்தில் சிவபெருமானே, தன்னை வழிபடும் கோலத்தில் இருப்பதாக ஐதீகம். எனவே இவரை, 'சிவஆஞ்சநேயர்' என்றும், 'சிவபக்த ஆஞ்சநேயர்' என்றும் அழைக்கிறார்கள். இந்தத் திருநாமம் உடைய ஆஞ்சநேயர் வேறு எங்கும் கிடையாது. இவரே இத்தலத்தில் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார். ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடக்கிறது.
ராவணனை வதம் செய்த தோஷம் நீங்க, ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்ய எண்ணிய ராமர், சிவலிங்கம் கொண்டு வரும்படி ஆஞ்சநேயரை இமயமலைக்கு அனுப்பினார். ஆஞ்சநேயரும் சிவலிங்கம் எடுத்து வரச் இமயமலைக்குச் சென்றார். இதனிடையே ஆஞ்சநேயர் வர கால தாமதம் ஆனதால், சீதாதேவி கடல் மணலில் லிங்கம் சமைக்கவே, ராமர் அந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். அதன்பின்பு லிங்கத்துடன் வந்த ஆஞ்நேயர், ராமர் சிவபூஜை செய்துவிட்டதை அறிந்து கோபம் கொண்டார். மேலும், மணல் லிங்கத்தை தனது வாலால் உடைக்க முயன்றார். முடியவில்லை.
சிவ அபச்சாரம் செய்ததால் மன்னிப்பு வேண்டிய ஆஞ்சநேயர் இத்தலத்தில் சிவபூஜை செய்தார். அப்போது சிவபெருமானுக்கு மலருடன், தான் காதில் அணிந்திருந்த குண்டலத்தையும் படைத்து வணங்கி மனஅமைதி பெற்றார். ஆஞ்சநேயர் குண்டலம் வைத்து வழிபடப்பட்டவர் என்பதால், இத்தல சிவன் 'குண்டலகேஸ்வரர்' என்றும் பெயர் பெற்றார்.
பிரார்த்தனை
இவரை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சளுக்கை சுகர் நாராயணப் பெருமாள் கோவில்
ஏழடி உயர திருமேனி உடைய பெருமாள்
குழந்தைப் பேறு அளிக்கும் பெருமாள்
காஞ்சிபுரத்திலிருந்து 39 கி.மீ. தொலைவிலும், வந்தவாசியில் இருந்து 8 கி.மீ.தொலைவிலும் உள்ள சளுக்கை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது சுகர் நாராயணப் பெருமாள் கோவில். தாயார் திருநாமம் சுகந்தவல்லித் தாயார். கி.பி.1061 ஆம் ஆண்டு சோழ அரசனான முதலாம் ராஜேந்திர சோழனின் மகனான சோழ கேரளனுடைய நினைவாக, அவருடைய தம்பியால் கட்டப்பட்ட கோவில் இது. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் குறிப்பிடப்படும் சிறப்பு வாய்ந்த தலங்களில் இதுவும் ஒன்று.
கருவறையில் மூலவர் சுகர் நாராயணப் பெருமாள் 7 அடி உயரத்தில் கம்பீரமான தோற்றத்தில் காட்சி தருகிறார். அவர் தனது வலது கரத்தில் பிரயோக சக்கரத்தை ஏந்தி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். பெருமாளுடன் ஸ்ரீதேவியும் பூதேவியும் எழுந்தருளி இருக்கிறார்கள். பெருமாளின் முன் சுகப்பிரம்ம மகரிஷியும், பரத்வாஜ முனிவரும் மண்டியிட்டு, பெருமாளை சேவித்த வண்ணம் உள்ளார்கள்.
இந்த பெருமாள், குழந்தைபேறு இல்லாதவர்கள் வேண்டினால் அவர்களுக்கு உடனடியாக குழந்தைப் பேறு அளிக்கும் வரப்பிரசாதி. இங்கு வேண்டிக் கொண்டு குழந்தைபேறு பெற்றவர்கள், மீண்டும் இந்த கோவிலுக்கு வந்து குழந்தையின் எடைக்கு சமமாக தங்களால் முடிந்த காணிக்கையை துலாபாரம் நடத்தி சமர்ப்பிகிறார்கள். இது இந்த கோவிலின் விசேஷமான அம்சம் ஆகும்.
எழுச்சூர் நல்லிணக்கீஸ்வரர் கோவில்
பிராணாயாமம் செய்து கொண்டு, காயத்ரி மந்திரம் கேட்கும் தோரணையில் இருக்கும் அபூர்வ நந்தி
ஆபரண அலங்காரங்களுடன் இருக்கும் மிகவும் அழகான நந்தி
சென்னை தாம்பரம் - காஞ்சிபுரம் வழியில், ஒரகடம் சாலை சந்திப்பில் இருந்து சுமார் நான்கு கி.மீ .தொலைவில் அமைந்துள்ளது எழுச்சூர் நல்லிணக்கீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் தெய்வநாயகி. 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
இக்கோவிலில் அமைந்திருக்கும் நந்தி, வேறு எந்த கோவிலிலும் காண முடியாத பல தனித்துவமான அம்சங்கள் கொண்டவராக விளங்குகின்றார். இந்த விசித்திரமான நந்தியில் அழகான ஆபரணங்கள் மற்றும் ஆடைகள் உள்ளன. இந்த ஆபரணங்கள், ஆடைகள் அனைத்தும் அதன் உடலில் அதில் செதுக்கப்பட்டுள்ளன.
நந்தி கழுத்தில் விரிவான அலங்காரங்களை அணிந்துள்ளார். ருத்ராட்சத்தால் செய்யப்பட்ட மாலைகள், ஒரு இரும்புச் சங்கிலி, சலங்கை மற்றும் மணிகளால் செய்யப்பட்ட மாலை ஆகியவை அவற்றில் அடங்கும். நான்கு வேதங்களைத்தான் அவர் தனது கழுத்தில் ஆபரணங்களாக அணிந்துள்ளார். அவரது நெற்றியில் ஒரு அழகான நெத்தி சுட்டி அலங்கரிக்கிறது. மேலும் அவரது உடலில் அழகாக செதுக்கப்பட்ட வஸ்திரம் (சால்வை) மற்றும் ஒரு ஒட்டியானம் (இடுப்பு அலங்காரம்) அமைந்துள்ளது.
இந்த நந்தி 'ரஜோ குண' நந்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த நந்தி தேவர் அமர்ந்திருக்கும் தோற்றமானது, 'பிராணயாம கோலம்' (சுவாசப் பயிற்சி செய்தல்) என்று அழைக்கப்படுகிறது. மேலும் நந்தியின் காதுகள் வழக்கத்திற்கு மாறாக நிமிர்ந்த வடிவத்தில் கூர்மையாக செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள நந்திகேசுவரர் பிராணயாம செய்து, காயத்ரி மந்திரத்தைக் கேட்கும் தோரணையில் இருக்கின்றார்.
நந்தியின் பற்களின் வரிசை கூட மிகவும் துல்லியமாக, மிகச்சிறிய விவரங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. நந்தி வலது பக்கத்தில் நாக்கை நீட்டி நாசியை அடைந்து காணப்படுகிறது. ஒரு முன் கால் பின்னோக்கி மடிக்கப்பட்டுள்ளது, மற்றொன்று நீட்டிய நிலையில் உள்ளது. பின் கால்களில், ஒன்று மடிக்கப்பட்டுள்ளது, மற்றொரு கால் அதன் வயிற்றுக்குக் கீழே செல்கிறது, இந்த கால் மறுபுறம் நீட்டிக் காணப்படுகிறது. அதேபோல் வால் வயிற்றுக்குக் கீழே சென்று அதன் இடது பக்கத்தில் நீண்டுள்ளது.
சுருங்கச் சொன்னால், இந்த நந்தி தேவர் நமது முன்னோர்களின் சிற்பக்கலை திறனுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
ஆலயத்துளிகள் தனது ஐந்தாம் ஆண்டில் இன்று அடி எடுத்து வைக்கின்றது.
வாசகர்களின் ஆதரவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சுகுமார் & பல்லவி
அருணகிரிநாதருக்கு நடராசர் போல திருத்தாண்டவம் ஆடிக்காட்டிய செந்தில் ஆண்டவன்
ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாக்களில், ஏழாம் நாளன்று நடைபெறும் 'சிவப்புச் சாத்தி' உற்சவம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று இரண்டு மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.
திருப்புகழ் பாடல் இயற்றிய அருணகிரிநாதர் 800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். இவர் எழுதிய 'திருப்புகழ்' தேவாரத்திற்கு இணையாகவும், 'கந்தர் அலங்காரம்' திருவாசகத்திற்கு இணையாகவும், 'கந்தர் அனுபூதி' திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றன. ஒரு சமயம் அருணகிரிநாதர், திருப்பரங்குன்றம் தலத்திற்கு வந்து முருகனை வழிபட்டார். பின்பு திருச்செந்தூர் புறப்பட்டார்.வழி எல்லாம் ஒரே காடாக இருந்தபடியால் அருணகிரிநாதர் வழி தெரியாமல் திகைத்து நின்றார்.அந்நேரம் மயில் ஒன்று காட்சி தந்து,வழிகாட்டி அருணகிரிநாதரை திருச்செந்தூருக்கு அழைத்து வந்தது. திருச்செந்தூரில், முருகப்பெருமான் வடிவில் சிவபெருமானைக் கண்ட அருணகிரிநாதர் 'கயிலை மலையனைய செந்தில்' என்று சிறப்பித்துப் பாடினார்.செந்திலாண்டவனை தம்முடைய தந்தையைப் போல ஆடிக் காட்ட அழைத்தார்.முருகப்பெருமானும், அருணகிரிநாதருக்கு நடராசர் போல திருத்தாண்டவம் ஆடிக் காட்டினார்.
இந்தக் காட்சியை தற்போதும் நினைவு கூறும் வகையில், திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாக்களில், ஏழாம் நாளன்று 'சிவப்புச் சாத்தி' செய்யப்படும் நாளில், ஆறுமுகப்பெருமான் எழுந்தருளும் சப்பரத்தின் பின்பகுதியில் முருகப் பெருமான் நடராசர் போல ஆடல் காட்சி தருகிறார். சிவப்பு சாத்தி' என்பது திருச்செந்தூர் முருகப் பெருமானின் மாசித்திருவிழாவின் ஏழாம் நாளில் சுவாமி சண்முகப்பெருமான் அணிந்து கொள்ளும் அலங்காரத்தைக் குறிக்கிறது. ஏழாம் நாளன்று இங்கு சுவாமி சிவப்பு நிற பட்டுத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு, சிவப்பு மலர்களால் மலர்மாலைகள் சூடப்பட்டு, தங்கச் சப்பரத்தில் நடராசர் போல ஆடும் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார். இந்த நாளில் முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக காட்சி தருவதாக ஐதீகம். இவ்வாறு, முருகப்பெருமான் நடராசராக காட்சி தருவது, திருச்செந்தூர் முருகனின் திருவிழாக்களில், முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும்.
சதுரங்கப்பட்டினம் மலைமண்டல பெருமாள் கோவில்
தலையில் குடுமியுடன் இருக்கும் அபூர்வ ஆஞ்சநேயர்
கை சுண்டு விரலில் மோதிரத்துடனும், வாயில் இரண்டு கோரை பற்களுடனும் இருக்கும் வித்தியாசமான தோற்றம்
சென்னையிலிருந்து கல்பாக்கம் செல்லும் பாதையில் கல்பாக்கத்திற்கு அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது மலைமண்டல பெருமாள் கோவில். இத்தலம் சற்றே மலை போன்ற அமைப்பின் மேல் உள்ளதால் மலை மண்டல பெருமாள் என்று அழைக்கப்படுகின்றார். மலைமண்டல பெருமாளுக்கு கிரி வரதராஜப் பெருமாள் என்ற திருநாமும் உண்டு. தாயார் திருநாமம் பெருந்தேவி. இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
இக்கோவிலில் 400 ஆண்டுகளுக்கு முந்தைய விஜயநகர பேரரசு காலத்திய அனுமன் சிற்பம் ஒன்று உள்ளது. கலை நுணுக்கத்தோடு செய்யப்பட்ட இந்த சிற்பத்தில், பல அதிசய அம்சங்கள் உள்ளன. இந்த ஆஞ்சநேயரின் தலையில் குடுமி அமைந்துள்ளது. அந்தக் குடுமியானது அவரின் தலையின் பின்புறம் முடிந்த நிலையில் காணப்படுகிறது. அவரின் வாலானது, உடம்பின் பின்புறத்தில் தொடங்கி தலையின் உச்சியில் போய் சுருட்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இவரது வாயில் இரண்டு கோரை பற்கள் வெளியே துருத்திக்கொண்டு தெரிகின்றன. இவர் இரண்டு கைகளையும் புஷ்பாஞ்சலி அஸ்த நிலையில் (புஷ்பங்களை அர்ச்சனை செய்யும் பாவனையில்) வைத்துக் கொண்டிருக்கிறார். இவரது கை சுண்டு விரலில் மோதிரம் அமைந்திருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். திருப்பதி பெருமாளுக்கு இருப்பது போல் கால் முட்டிக்கு கீழ் ஆபரணமும், பின்புறம் திருவாசியும் (பிரபை) இருப்பது மேலும் ஒரு சிறப்பாகும்.
திருபுவனை தோத்தாத்திரி பெருமாள் கோவில்
வேறு எங்கும் காண முடியாத, கருவறையை ஒட்டி சிறிய பிரகாரம் அமைந்துள்ள கோவில்
தோஷங்கள் தீர்க்க, நெய் தீபம் ஏற்றி சிறிய பிரகாரத்தில் 48 சுற்றுக்கள் சுற்றி வழிபாடு
புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு- விழுப்புரம் நெடுஞ்சாலையில், புதுச்சேரியில் இருந்து மேற்கே 21 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்தில் இருந்து கிழக்கே 19 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது திருபுவனை தோத்தாத்திரி பெருமாள் கோவில். தாயார் திருநாமம் பெருந்தேவி தாயார். 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
பொதுவாக கோவில்களில், கருவறையில் மூலவர் எழுந்தருளி இருப்பதும், அவருக்கு எதிரில் பக்தர்கள் வணங்கும் விதமாகவும் கோவில் வடிவமைப்பு இருக்கும். ஆனால் திருபுவனையில் கருவறையை ஒட்டி சுற்றி வரும் விதமாக, சிறிய பிரகாரம் அமைந்துள்ளது, வேறு எங்கும் காண முடியாத இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
மூலவர் தோத்தாத்திரி பெருமாள், தமிழில் 'தெய்வநாயகப்பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். தோத்தாத்திரி பெருமாள் சுகாசன கோலத்தில் ஒரு காலை மடக்கி, மறுகாலைத் தொங்கவிட்டு, மந்தகாசப் புன்னகை பூத்து எழிலாகக் காட்சியளிக்கின்றார். இவருக்கு இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி அமர்ந்துள்ளனர். பெருமாளின் திருமுகம், அதில் உள்ள அவயங்கள் மிகவும் எடுப்பாக உள்ளன.
திருபுவனை தோத்தாத்திரி பெருமாள் கோவில், குருவும், சுக்ரனும் ஐக்கியமான தலமாகப் போற்றப்படுகிறது. இத்தலம், தோஷங்கள் தீர்க்கும் பரிகார தலமாக விளங்குகின்றது.எனவே நவக்கிரக தோஷம், கர்ப்ப தோஷம், களப்பிர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து நெய் தீபம் ஏற்றி, கருவறையில் அமைந்துள்ள சிறிய பிரகாரத்தில் 48 சுற்றுக்கள் சுற்றி வருவது, நன்மை பயப்பதாக அமைந்துள்ளது. கல்வி, பதவி என அனைத்து பிரார்த்தனைகளுக்கும் ஏற்ற தலமாக உள்ளது.
தொட்டியம் அனலாடீசுவரர் கோவில்
சந்திர ரூபமாக காட்சியளிக்கும் திரிபுரசுந்தரி அம்மன்
அம்மன் உச்சிக்காலப் பூஜையின் போது வழங்கப்படும் ஈஸ்வர தீர்த்தப் பிரசாதம்
திருச்சியிலிருந்து சேலம் செல்லும் வழியில், 53 கி.மீ. தொலைவில் உள்ள தொட்டியம் என்ற நகரில் அமைந்திருக்கின்றது அனலாடீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. இக்கோவிலில் அனலாடீஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி சன்னிதிகள் கிழக்கு திசை நோக்கி, அருகருகே அமைந்து சக்தியும் சிவமுமாக காட்சியளிப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
சிவபெருமான் திரிபுரசம்ஹாரத்திற்கு புறப்பட்டு வந்த போது, இத்தலத்தில் பிரம்மன் யாகம் ஒன்றை செய்து கொண்டிருந்தார். அந்த யாக குண்டத்தில் சிவ பெருமான் நர்த்தனம் செய்த காரணத்தால், இத்தலத்து இறைவன் வட மொழியில் 'அக்னி நர்த்தீஸ்வரர்' என்று அழைக்கப்பட்டார். அதுவே தற்போது அனலாடீசுவரர் என்ற திருநாமத்தோடு விளங்குகிறது.
சிவபெருமான் நர்த்தனம் புரிந்த யாககுண்டம், தற்போது 'ஈசுவரத் தீர்த்தம்' என்றழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தம் அம்மன் திரிபுரசுந்தரி சன்னிதிக்கு நேர் எதிரில் அமைந்துள்ளது. நாள்தோறும் அம்மனுக்கு நடைபெறும் உச்சிக்காலப் பூஜையின் போது, பக்தர்களுக்கு ஈசுவரத் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இங்குள்ள திரிபுரசுந்தரி அம்பாளை வணங்குவதால் உடலுக்கும், உள்ளத்திற்கும் வலிமை சேர்ப்பதுடன், குளிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றது.
திரிபுரசுந்தரி என்றால் தமிழில் அழகு உடையவர் என்று பொருள். அதாவது அழகுடையவராக எழுந்தருளி, தன்னை நாடி வரும் பக்தர்களின் தேவையை அறிந்து அதைத் தீர்த்து வைக்கும் இறைவியாக அம்மன் திகழ்கிறார். பொதுவாக சிவாலயங்களில் பரிவார தெய்வங்களாக சூரியனும் சந்திரனும் அருகருகே எழுந்தருளி இருப்பார்கள். இத்தலத்தில் சந்திர ரூபமாக அம்மன் காட்சியளிப்பதால், இக்கோவிலில் சந்திரன் கிடையாது. சூரியன் மட்டுமே எழுந்தருளியுள்ளார்.
பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோவில்
இரண்டு தட்சிணாமூர்த்திகள் எழுந்தருளி உள்ள தேவார தலம்
மயிலாடுதுறையில் இருந்து (மயிலாடுதுறை -மணல்மேடு சாலையில்) 8 கி.மீ. தொலைவில், காவிரி நதியின் வடகரையில் அமைந்துள்ள தேவார தலம் பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. முற்காலத்தில் இத்தலத்தின் பெயர் திருஅன்னியூர்.
ரதி வழிபட்டதால் ரதீசுவரர் என்றும், பாண்டவர்கள் வழிபட்டுள்ளதால் பாண்டதவேசுவரர் என்றும், அக்னிதேவன் வழிபட்டுள்ளதால் அக்னீஸ்வரர் என்றும் மற்ற பெயர்களும் இத்தல இறைவனுக்கு உண்டு.தீரா வெண்குஷ்டத்தால் அவதியுற்ற ஹரிச்சந்திர மகாராஜா இத்தலத்தில் நீராடி, இறைவனின் கட்டளைப்படி வைகாசி விசாக நன்னாளில் தயிர் சாதம் நிவேதனம் செய்து, ஆபத்சகாயரை வணங்கி, வழிபட்டு விமோசனம் பெற்றுள்ளார். வெண்குஷ்ட நோய் உள்ளவர்கள் இத்தலம் வந்து வழிபட நிவாரணம் கிடைக்கும்.
பொதுவாக சிவாலயங்களில் கருவறை சுற்றுச்சுவரில் ஒரு தட்சிணாமூர்த்தி எழுந்தருளி இருப்பார். ஆனால் இக்கோவிலில் அருகருகே இரண்டு தட்சிணாமூர்த்திகள் எழுந்தருளி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். இதில் மேதா தட்சிணாமூர்த்திக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இவரது காலுக்கு கீழே நந்தியும் இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டால் கல்வி, கேள்விகளில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை. புதிதாக பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பவர்கள், இவ்விரு தட்சிணாமூர்த்திக்கு விசேஷ பூஜைகள் செய்து வழிபட்டால் குழந்தைகளின் கல்வி சிறக்கும் என்பது ஐதீகம்.
திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோவில்
தர்ப்பணம் செய்யும் பலனை இரட்டிப்பாக்கி தரும் திவ்ய தேசம்
சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரத்திற்கு மேற்கே 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருப்புட்குழி. பெருமாள் திருநாமம் விஜயராகவ பெருமாள். தாயார் திருநாமம் மரகதவல்லித் தாயார். திரு என்றால் மரியாதை. புள் என்றால் ஜடாயு. குழி என்றால் ஈமக்கிரியை செய்தல். ராமர் ஜடாயுவிற்கு இத்தலத்தில் ஈமக்கிரியை செய்ததால் இத்தலம் திருப்புட்குழி ஆனது. மூலவர் விஜயராகவப் பெருமாள் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு அருள்பாலிக்கிறார்.
ராவணன் சீதையை சிறை எடுத்து செல்லும் வழியில் பறவைகளின் அரசனாகிய ஜடாயு சீதையை மீட்க ராவணனுடன் போரிட்டது. அவனால் வெட்டப்பட்டு மரணத்தருவாயில் இருந்தது. சீதையை தேடி அவ்வழியே வந்த ராமலட்சுமணரிடம் சீதையை ராவணன் கடத்தி சென்ற விஷயத்தை தெரிவித்தது. மரணத்தை எதிர் நோக்கி இருக்கும் தனக்கு ராமனே ஈமக்கிரியைகள் செய்ய வேண்டும் எனவும், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி தந்து அருள வேண்டும் எனவும் வேண்டியபடி உயிர்விட்டது. அதன்படி ஜடாயுவை தன் வலதுபக்கம் வைத்து தீ மூட்டி ஈமக்கிரியைகளை செய்தார். இதனால் ஏற்பட்ட வெப்பம் தாளாமல் வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி தாயார் இடப்புறமும், இடப்புறம் இருந்த பூதேவித்தாயார் வலப்புறமும் மாறி அருள்பாலிப்பதாக புராணங்கள் கூறுகிறது. எனவே தான் இங்கு மட்டும் தாயார் சன்னதி பெருமாளுக்கு இடது புறமும், ஆண்டாள் சன்னதி பெருமாளுக்கு வலதுபுறமும் அமைந்துள்ளது குறிப்படத்தக்கது. ஜடாயுவின் வேண்டுகோளின் படி ராமர், தன் அம்பினால் உண்டாக்கப்பட்ட தீர்த்தத்தில் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்தார். எனவே இங்கு தீர்த்தம் ஜடாயு புஷ்கரிணி என அழைக்கப்படுகிறது. ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால் அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் கொடிமரமும், பலி பீடமும் கோவிலுக்கு வெளியில் உள்ளது.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் சிறந்த தலங்களில் இதுவும் ஒன்று. ராமபிரானே இங்கு ஈமக்கிரியைகள் செய்துள்ளதால், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்பவர்கள் அமாவாசையன்று இத்தலத்தில் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சிதம்பரம் நடராஜர் கோவில்
நடராஜப் பெருமானின் குஞ்சிதபாதம்
தீராத வியாதிகளைத் தீர்க்கும் குஞ்சிதபாத தரிசனம்
சிதம்பரத்தில் நடராஜப் பெருமான், தனது இடது பாதத்தை வளைந்து தூக்கித் திருநடனம் ஆடும் கோலத்தில் நமக்கு காட்சி தருகிறார். நடராஜப் பெருமானின் தூக்கிய திருவடிக்கு குஞ்சிதபாதம் என்று பெயர்.
சிவபெருமான் தனது இடது பாகத்தை, தன் மனைவி பார்வதி தேவிக்கு கொடுத்து விட்டார். சிவபெருமானே, நடராஜர் என்னும் பெயரில் நடனம் ஆடுகிறார். அவர் நடனம் ஆடும் போது, மனைவிக்குரிய இடது பாதம், தரையில் பட்டால் அவளுக்கு வலிக்குமே என, இடது காலை உயர்த்திக் கொண்டார்.
எமதர்மராஜன், மார்க்கண்டேயனைத் துரத்திப் பாசக்கயிற்றை வீசிய போது மார்க்கண்டேயன், சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். அப்போது எமனின் பாசக்கயிறு சிவலிங்கத்தின் மேல் பட்டது. இதனால் சிவபெருமான் கோபம் அடைந்து, எமனை இடது காலால் எட்டி உதைத்தார். தாயும்-தந்தையுமான சிவ-சக்தியை மார்க்கண்டேயன் சரண் அடைந்ததால் சிவபெருமான், சக்தி தேவியின் அம்சமான தனது இடது பாகத்தில் உள்ள பாதத்தால் எமனை எட்டி உதைத்தார். அந்த இடது கால் சக்தி தேவியின் அம்சம் என்கிறது புராணம்.
அதனால் நடராஜப் பெருமானைத் தரிசிக்கும் போது கண்டிப்பாக அவரது இடது காலைத் தரிசிக்க வேண்டும். நடராஜப் பெருமானின் குஞ்சிதபாதத்தை தரிசனம் செய்தால், தீராத வியாதியும் நீங்கும். செய்வினை பாதிப்பு, சனீஸ்வரால் ஏற்படும் தொல்லை மற்றும் பொதுவாக ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் நீங்கும். மோட்சம் கிடைக்கும். உடல் வலிமை பெறும் என்கிறது சாஸ்திரம்.
குஞ்சிதபாதம் என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. மூலிகை வேர்களால் செய்யப்பட்ட ஒரு மாலை நடராஜரின் தூக்கிய பாதத்திற்கு அணிவிக்கப்படும்போது, அந்த மாலைக்கு 'குஞ்சிதபாதம்' என்று பெயர். மேலும், இந்த மாலையை நடராஜரின் பாதங்களில் அணிவிப்பது ஒரு சிறப்பு பூஜையாக கருதப்படுகிறது.
செப்பறை அழகிய கூத்தர் கோவில்
உலகில் முதல் முதலில் செய்யப்பட்ட நடராஜர் சிலை
சிதம்பரத்திற்கு அடுத்து நடராஜ பெருமான் தேரோட்டம் நடைபெறும் ஒரே தலம்
திருநெல்வேலி மாநகரிலிருந்து 33 கி.மீ. தொலைவில் (ராஜவல்லிபுரம் கிராமம் வழியாக) அமைந்துள்ளது செப்பறை அழகிய கூத்தர் கோவில். மூலவர் திருநாமம் நெல்லையப்பர். இறைவியின் திருநாமம் காந்திமதி. உற்சவர் அழகிய கூத்தர் (நடராஜர்).
.சிதம்பரத்தை ஆட்சி செய்த சிங்கவர்மன் என்னும் மன்னன், நமச்சிவாயமூர்த்தி என்ற சிற்பியைக் கொண்டு நடராஜர் சிலையை உருவாக்க ஆணையிட்டான். அதன்படி சிற்பியும் மிக நேர்த்தியாக நடராஜர் சிலையை செய்துமுடித்தார். அந்த நடராஜர் சிலை தாமிரத்தால் செய்யப்பட்டு பிரமிக்கவைக்கும் அழகில் தோன்றினாலும், அதற்கு பதிலாக தங்கத்தினால் சிலையைச் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் எனக் கருதி தங்கத்தால் மற்றொரு நடராஜர் சிலையைச் செய்ய ஆணையிட்டான். சிற்பி அதனையும் சிறப்பாக செய்து முடித்தார். ஆனால் மன்னன் வந்து காணும்போது அந்த தங்க நடராஜர் சிலை மீண்டும் தாமிரச் சிலையாகவே மாறி காட்சியளித்தது. இதனால் வருந்திய மன்னரின் கனவில் தோன்றிய சிவபெருமான், நான் உன் கண்களுக்கு மட்டுமே தங்கமாகத் தெரிவேன். பிறர் கண்ளுக்குத் தாமிரமாகவே தெரிவேன் என்று கூறியருளினார். இதனால், மகிழ்ந்த மன்னர் அந்த இரண்டாவதாக செய்யப்பட்ட நடராஜரையே சிதம்பரத்தில் நிறுவினான்.
முதலில் செய்யப்பட்ட தாமிரச்சிலையை வைத்திருந்த சிற்பியின் கனவில் தோன்றிய சிவபெருமான் அந்தச் சிலையை எடுத்துக்கொண்டு தென்னாட்டுக்குச் செல்லுமாறு அவனுக்கு ஆணையிட்டார். அதன்படி அவன் கொண்டுவந்த முதல் தாமிர நடராஜர் சிலையே பின்னர் இங்கு செப்பறையில் அழகிய கூத்தராக அமர்ந்தார்.
கோவில் அமையப்பெற்றுள்ள இப்பகுதியை மணப்படைவீடு என்னும் நகரை தலைநகராகக் கொண்டு ராமபாண்டியன் என்னும் மன்னனர் ஆட்சி செய்து வந்தார். ராமபாண்டிய மன்னர் திருநெல்வேலியில் உறையும் சுவாமி நெல்லையப்பர் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார். அதன் காரணமாக தினமும் திருநெல்வேலி சென்று சுவாமி நெல்லையப்பரை தரிசித்த பிறகே உணவருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருமுறை தாமிரபரணியில் பெரும் வெள்ளம் வந்துவிட்டதனால் அவரால் ஆற்றைக் கடந்து திருநெல்வேலிக்கு செல்லமுடியவில்லை. அன்று முழுவதும் ராமபாண்டியன் மனம்வருந்தி உணவருந்தாமலே இருந்தார். அன்று இரவில் மன்னரின் கனவில் சுவாமி நெல்லையப்பர் தோன்றி,'இனிமேல் உன் மாளிகைக்கு அருகிலேயே நான் கோவில் கொள்ள முடிவு செய்துள்ளேன் என கூறியதுடன், சிதம்பரத்திலிருந்து சிற்பி ஒருவன் தனது நடனம் புரியும் வடிவமுடைய விக்ரகத்துடன் வருவான். அந்த விக்ரகத்தை உன் மாளிகையின் அருகில் பிரதிஷ்டை செய்து கோவில் கட்டு. கோவில் கட்டுமிடத்தின் அருகே குழிக்குள் எறும்புகள் ஊர்ந்துசெல்லும். அந்த இடத்தில் லிங்கம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்துவிடு, என திருவாய் மலர்ந்தருளினார்.
அதன்படியே, சிற்பி ஒருவர் வடதிசையிலிருந்து நடராஜரின் விக்ரகம் ஒன்றை சுமந்து வந்தார். வழியில் ஓரிடத்தில் சிலை மிகவும் கனத்தது. அதற்கு மேல் அவரால் சிலையை சுமக்க முடியவில்லை. எனவே சற்று நேரம் இளைப்பாறும் பொருட்டு, அச்சிலையை அவர் ஒரு இடத்தில் இறக்கி வைத்துவிட்டு, களைப்பினால் தூங்கி விட்டார். கண்விழித்து பார்த்தபோது சிலையை காணவில்லை. அவர் பதைபதைத்து மன்னனிடம் முறையிட்டார். ராமபாண்டியன் அதிர்ச்சியடைந்து சிலையை தேடிச்சென்றார். அப்பொழுது ஓரிடத்தில் (தற்பொழுது கோவில் அமையபெற்றுள்ள இடத்தில்) சலங்கை ஒலியும், யாரோ நடனமாடும் சப்தமும் கேட்டது. அந்த இடத்தில் மன்னர் சென்று பார்த்தபோது, நடராஜரின் சிலை இருப்பதனையும், . அதன் பக்கத்திலேயே ஒரு குழியில் எறும்புகள் ஊர்ந்து சென்று கொண்டிருப்பதையும் கண்டார். உடனே ராமபாண்டியன் மகிழ்வடைந்து லிங்கம் ஒன்றை எறும்புகள் ஊர்ந்த குழியின் மீது, சுவாமி உத்தரவிட்டபடியே பிரதிஷ்டை செய்தார். நடராஜருக்கும் செப்பு தகடுகளால் வேயப்பட்ட நடன சபை ஒன்றை உருவாக்கி தனி சன்னதி அமைத்தார். இவர் நெல்லையப்பரின் மீது கொண்டிருந்த பக்தியால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்திற்கு ஸ்ரீ நெல்லையப்பர் என்றும், அம்மைக்கு ஸ்ரீ காந்திமதி என்றும் திருநெல்வேலி திருக்கோவிலின் பெயரையே சூட்டிமகிழ்ந்தார்.
செப்பு தகடுகளால் வேயப்பட்ட தாமிரசபைக்குள் சிவகாமி அம்மை உடனாய அழகியகூத்தர் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள அழகியகூத்தப்பெருமானுக்கு,. நடைபெறும் ஆனி உத்திரம் மற்றும் மார்கழி திருவாதிரை அபிஷேகத்திற்கு வருடந்தோறும் பழனியில் இருந்து பஞ்சாமிர்தம் வரவழைக்கப்படுகிறது. மார்கழி மாதம் திருவாதிரைக்கு முதல் நாள் நடராஜ பெருமான் திருத்தேரில் உலா வருவார். சிதம்பரம் தலத்திற்கு அடுத்தபடியாக இங்கு தான் நடராஜ பெருமானுக்கு என தனித்தேர் உள்ளது என்பது தனிச்சிறப்பாகும்.
தஞ்சை பெரிய கோவில்
தஞ்சை பெரியகோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும் ஆஷாட நவராத்திரி
தஞ்சை பெரிய கோவின் தெற்கு பிரகாரத்தில் வராகி அம்மனுக்கு தனிக் கோவில் இருக்கிறது. சப்தகன்னியரில் ஒருவரான வராகி அம்மன், திருமாலின் வராக அம்சமாக கருதப்படுகிறார். இவர் வராகமெனும் பன்றி முகத்தையும், எட்டு கரங்களையும் உடையவர். வராகி அம்மன்,வலது கையில் உலக்கையுடனும், இடது கையில் கலப்பையுடனும் காட்சி தருகிறார்.
மாமன்னர் ராஜராஜ சோழனின் குலதெய்வம் வராகி அம்மன். ராஜராஜ சோழன் போருக்கு செல்லும் முன்பு வராகி அம்மனை வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் இந்த அன்னையின் அருள் பெற்றுதான் எந்த செயலையும் தொடங்குவார்.
இக்கோவிலில் எழுந்தருளி உள்ள வாராகி அம்மனுக்கு, ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா ஆனி மாதம் அமாவாசை தினத்தன்று தொடங்கி (இந்த ஆண்டு 25.06.2025 முதல்) 10 நாட்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும், வேறெங்கும் நடைபெறுவது இல்லை.
இவ்விழாவில் முதல் நாள் சுமார் 100 கிலோ கொண்ட இனிப்பு வகைகளான ஜாங்கிரி, லாடு, குலோப்ஜாமுன், மைசூர்பாகு, பால்கோவா உள்ளிட்ட இனிப்பு வகைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் தினமும் சிறப்பு அலங்காரமாக மஞ்சள் அலங்காரம், குங்கும அலங்காரம், சந்தன அலங்காரம், தேங்காய் பூ அலங்காரம், மாதுளை அலங்காரம், நவதானிய அலங்காரம், வெண்ணெய் அலங்காரம், கனிவகை அலங்காரம், காய்கறி அலங்காரம், புஷ்ப அலங்காரம் ஆகியவை நடைபெறும்.
வராகி அம்மனுக்கு உகந்த நிறம் பச்சை நிறம் என்பதால், வராகி விரதம் இருக்கும் நாட்களில் பச்சை நிற விரிப்பின் மீது அமர்ந்து, இலுப்பை எண்ணெயைத் தீபமாக ஏற்றி வழிபடலாம். வளர்பிறை பஞ்சமி திதியில், வராகி அம்மனை வழிபட்டால் தீய சக்திகள் விலகி நன்மைகள் ஏற்படும்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்
பெருமாள் தன் மார்பில் சிவலிங்கத்தை தரித்த அபூர்வ தோற்றம்
பாண்டிய நாட்டு தேவாரப் பாடல் பெற்ற 14 தலங்களில் ஒன்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில். இறைவியின் திருநாமம் காந்திமதி அம்மன்.
மூலவர் நெல்லையப்பர் சன்னதிக்கு வடப்புறமாக கிடந்த கோலத்தில் பெரிய உருவத்துடன் ரெங்கநாதர் அனந்த சயன கோலத்தில் காட்சி தருகிறார். அவரது திருமுகம் வானத்தை நோக்கியும், இடது கையால் வில்வத்தைப் பிடித்துக்கொண்டும், வலது கையால் சிவலிங்கத்திற்கு பூஜை செய்து கொண்டும் காட்சி அளிக்கிறார்.
வேணுவன நாதருக்கு வடப் புறமாக கிடந்த கோலத்தில் பெரிய உருவத்துடன் ரெங்கநாதரின் தரிசனம் காணக் கிடைக்காத கண்கொள்ளாக் காட்சி. முகத்தை வானத்தை நோக்கியும், இடது கையால் வில்வத்தைப் பிடித்துக்கொண்டும், வலது கையால் சிவலிங்கத்திற்கு பூஜை செய்தும் காட்சியளித்தார். அவரது அருகில் உற்சவர் நெல்லை கோவிந்தர் மார்பில் சிவலிங்கத்துடன் காட்சி தருகிறார். பொதுவாக பெருமாள் தனது மார்பில் மகாலட்சுமியை தாங்கி இருப்பார். ஆனால், பெருமாள் இப்படி மார்பில் சிவலிங்கத்தை தரித்த கோலத்தை,நாம் இத்தலத்தை தவிர வேறு எந்த தலத்திலும் காண்பது அரிது. தன் தங்கையை மணந்த சிவபெருமானை, சிவபெருமான் பெருமாள் தன் மார்பில் தாங்கியுள்ளார். அதன் அடிப்படையில் தான் பெருமாள் மார்பில் சிவலிங்கம் அமைந்திருக்கின்றது. இவரது கையில் தாரை வார்த்துக் கொடுத்த தீர்த்த பாத்திரமும் இருக்கின்றது.
ஐப்பசியில் நடைபெறும் கல்யாண உற்சவத்தின் 11வது நாளில், உற்சவப் பெருமாள் நெல்லை கோவிந்தர், கச்சி மண்டபத்திற்குச் செல்கிறார். இறைவன் மற்றும் அம்பாளின் கூட்டு ஊர்வலத்திற்குப் பிறகு, நெல்லை கோவிந்தர் அம்பாளின் கையை நெல்லைப்பருக்கு வழங்குகிறார். வருடத்தில் இதுவே அவர் தனது கருவறையிலிருந்து வெளியே வரும் ஒரே முறை.
திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில்
சிவபெருமான் அம்பிகைக்கு குருவாக இருந்து உபதேசம் செய்த தலம்
இறைவன் திருக்கல்யாணம் நடைபெறாத தலம்
திருச்சி நகரில் அமைந்துள்ள தேவார தலம் திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் அகிலாண்டேசுவரி.
அகிலாண்டேசுவரி என்பதற்கு உலகத்தை ஆள்பவள் என்று பொருள். இத்தலத்தில் இருக்கும் ஜம்பு லிங்கம் அம்பிகையால் செய்யப்பட்டது. ஒரு முறை இத்தலத்திற்கு வந்த அம்பிகை, காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் அமைத்து சிவபெருமானை வழிபட்டார். நீரால் செய்யப்பட்டதால் அந்த லிங்கம் ஜம்புகேசுவரர் எனப் பெயர் பெற்றது. திருவானைக்காவல் பஞ்சபூதத் தலங்களில் அப்புத்(நீர்) தலமாகும்
அகிலாண்டேசுவரி அம்மன் காலையில் லட்சுமியாக, உச்சிக் காலத்தில் பார்வதியாக, மாலையில் சரஸ்வதியாகத் திகழ்வதால், அம்பிகைக்கு மூன்று வண்ண உடை அலங்காரங்கள் மூன்று வேளைகளிலும் செய்யப்படுகிறது. சிவபெருமான், அம்பாளுக்கு இத்தலத்தில் குருவாக இருந்து உபதேசம் செய்ய, அம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்தாள். எனவே மாணவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். சிவபெருமான் குருவாக இருந்து பார்வதிக்கு உபதேசித்த தலம் என்பதால் இங்கு திருக்கல்யாணம் நடப்பதில்லை. திருமணமும் நடைபெறுவதில்லை.
அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்
வலது கையில் எழுத்தாணியும், இடது கையில் ஏடும் வைத்திருக்கும் சண்டிகேசுவரரின் அபூர்வ தோற்றம்
சிவபெருமானிடம் நம் கோரிக்கைகளை குறிப்பெடுத்து சமர்ப்பிக்கும் சண்டிகேசுவரர்
கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.
சிவாலயங்களில் ஆலயச்சுற்று வரும்போது கருவறை அபிஷேக நீர் விழும் கோமுகி அருகில், சிறு சன்னதியில் இருக்கும் சண்டிகேசுவரர் எப்போதும் தியானத்தில் இருப்பவர், சிவபெருமானுக்கு படைக்கப்படும் பொருள்கள், சண்டிகேசுவரரின் பெயரால் கணக்கு வைக்கப்படுகின்றன.
இக்கோவிலில் சண்டிகேசுவரர் தனி சன்னதியில் எழுந்தருளி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.பெரும்பாலும் சண்டிகேசுவரர், தன்னுடைய ஆயுதமாக மழுவுடன் காணப்படுகிறார். ஆனால் இத்தலத்தில் சண்டிகேசுவரர் தனது வலது கையில் எழுத்தாணியும், இடது கையில் ஏடும் வைத்திருப்பது வேறு எந்த கோவிலிலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும். இக்கோவிலில் நடைபெறும் அர்த்தஜாம பூஜையின் போது நாம் சண்டிகேஸ்வரரிடம் நம் கோரிக்கைகளை தெரிவித்தால், அதை அவர் தனது கையில் இருக்கும் ஏட்டில் எழுத்தாணியால் குறிப்பெடுத்துக் கொண்டு, அவற்றை சிவபெருமானிடம் சமர்ப்பித்து விடுவார் என்பது ஐதீகம்.
திருவள்ளூர் வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில்
ஆனி அமாவாசை தெப்ப உத்சவம்
பெருமாள், கனகவல்லி தாயார் மற்றும் உற்சவர் முத்தங்கி சேவை
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற திருத்தலமாகும். இங்கு அமாவாசை தினங்களில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி அமாவாசையை முன்னிட்டு மூன்று நாட்கள் பெருமாள் மற்றும் தாயார் முத்தங்கி சேவை மற்றும் தெப்ப உத்சவம் நடைபெறும். இந்த ஆண்டிற்கான ஆனி அமாவாசையான, வரும் 25 முதல் 27ம் தேதி வரை, மூன்று நாட்கள் தெப்ப உத்சவம் நடைபெற உள்ளது.
ஆனி அமாவாசை அன்று மூலவர் பெருமாள், கனகவல்லி தாயார் மற்றும் உற்சவருக்கு முத்தங்கி சேவை நடைபெறும். உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய், கண்ணாடி மண்டபத்தில் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு தரிசனம் தருவார். ஆனி மாத தெப்ப உற்சவத்தின் போது தினமும் மாலை 6 மணியளவில், உற்சவர் வீரராகவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் 'ஹிருதாபநாசினி' குளத்தில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளி, மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இந்த தெப்ப உற்சவத்தில் கலந்து கொண்டு வழிபட்டால் தீராத நோய்கள் அனைத்தும் தீரும் என்பதோடு, சகலவிதமான சௌகரியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்காக பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் உப்பு, கரும்பு, வெல்லம், பால் போன்றவைகளை தீர்த்தக் குளத்தில் கரைத்து வழிபாடு செய்வார்கள்.
தலையநல்லூர் பொன்காளியம்மன் கோவில்
காதில் தோடாக ராகு - கேதுக்களை அணிந்திருக்கும் அம்மன்
ஆயிரம், ஆயிரம் தீவட்டியுடன் அம்மன் தேரில் வரும் அற்புதக் காட்சி
ஈரோட்டில் இருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிவகிரி அருகே அமைந்திருக்கிறது தலையநல்லூர் பொன்காளியம்மன் கோவில். இக்கோவில் மிகவும் பழமையானது.
கோவில் கருவறையில் வீற்றிருக்கும் பொன்காளி அம்மன், ருத்ர காளியாகத் தோன்றுகிறாள். தன் தலையில் கிரீடமாக அக்னி ஜுவாலையையும், காதில் தோடாக ராகு - கேதுக்களையும் அணிந்திருக்கிறாள். மேலும் தன்னுடைய எட்டு கரங்களிலும் சூலம், டமருகம், கட்கம், கேடயம், பட்சி, கிண்ணம், கண்டம், அக்னியை தாங்கியிருக்கிறாள். அதோடு அசுரன் ஒருவனை காலில் மிதித்த கோலமாகவும், உதட்டில் புன்னகையுடன் அன்னையின் திருக்காட்சி இருக்கிறது.
பொன்காளியம்மனை ராகுகாலம், அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களில் வழிபாடு செய்தால், இல்வாழ்க்கையில் எல்லாவித சிறப்பும் ஏற்படும். மேலும், இந்த அம்மன் திருமணம், குழந்தைபாக்கியம் மற்றும் சகல செல்வங்களையும் வாரி வழங்குகின்றாள்.
இந்த அம்மனின் தேர் திருவிழா இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த தேர் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.தேரின் முன்வடமாகவும், பின்வடமாகவும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப்பந்தம் ஏந்தி செல்வார்கள். இந்த ஆயிரம் ஆயிரம் தீவட்டியுடன் அம்மன் செல்லும் அற்புதத்தைக் காண கண்கள் கோடி வேண்டும்.
பஞ்சேஷ்டி அகத்தீசுவரர் கோவில்
மிருதங்கம் வாசிக்கும் நந்திகேசுவரர்
சென்னை - கல்கத்தா நெடுஞ்சாலையில், 31 கி.மீ தொலைவில், செங்குன்றம், காரனோடை ஊர்களைக் கடந்தால் வரும் தச்சூர் கூட்டு ரோட்டில் இருந்து, சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளது பஞ்சட்டி அகத்தீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. அகத்தியர் வந்து வழிபாடு செய்ததால் இறைவனுக்கு, அகத்தீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.
பத்தாம் நூற்றாண்டு முதலாம் இராஜராஜனால் கட்டப் பட்ட பஞ்சேஷ்டி, அகத்தீசுவரர் கோவிலின் இராஜகோபுரத்தில் செதுக்கப் பட்ட நந்திதேவரின் அரிய காளை மாட்டு முகமும், மனித உடலும் கொண்ட நந்திகேசுவரர் சிற்பம் உள்ளது.
இந்த நந்தி தேவர், காளை முகம், மற்றும் 4 கைகளுடன் அலிதாசனத்தில் (இயக்கத்தைப் பரிந்துரைக்கிறார்) நின்று காணப்படுகிறார். வலது மேல் கரம் திரிசூலத்தை ஏந்தியும், இடது மேல் கரம் உடுக்கை ஏந்தி உள்ளதையும், கீழ் வலது மற்றும் இடது கைகள் மிருதங்கம் வாசிப்பதைக் காணலாம்.
நந்தி தேவர் மிருதங்கம் வாசிக்கும் இந்த கோலத்தை வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது.
சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடும்போது, நந்திதேவர் மிருதங்கத்தை வாசித்தார். நந்திதேவர் மிருதங்கம் வாசிப்பதன் மூலம், ஆடலுக்கும் பாடலுக்கும் தேவையான தாளங்களை வகுத்தார். சிவபெருமான் நடனமாடும்போது, நந்திதேவர் மிருதங்கம் வாசித்து, அதை அழகுபடுத்துகிறார். எனவே, நந்திதேவர் மிருதங்கம் வாசிப்பது என்பது ஆன்மீக மற்றும் இசை ரீதியாக ஒரு முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது.