எழுச்சூர் நல்லிணக்கீஸ்வரர் கோவில்
முருகப்பெருமான் வடக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் அரிய காட்சி
ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஆறுமுகப்பெருமான், தேவ மயில் மற்றும் திருவாசி
சென்னை தாம்பரம் - காஞ்சிபுரம் வழியில், ஒரகடம் சாலை சந்திப்பில் இருந்து சுமார் நான்கு கி.மீ .தொலைவில் அமைந்துள்ளது எழுச்சூர் நல்லிணக்கீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் தெய்வநாயகி. 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
பொதுவாக, முருகன் கோவில்கள் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி இருக்கும். முருகன் வடக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் கோவில்கள் அரிதானவை. இக்கோவிலில் வள்ளி-தெய்வானை சமேதராக முருகப்பெருமான், ஆறு முகங்களோடு வடக்கு நோக்கி எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும். மேலும் ஒரே கல்லில் திருவாசியுடன் கூடிய வடிவமைப்பில் ஆறுமுகப் பெருமான் தேவ மயில் மீது அமர்ந்து ஒரு காலைத் தொங்க விட்டுக் கொண்டும் மற்றொரு காலை மடக்கி வைத்துக் கொண்டும் காட்சி அளிப்பது மற்றும் ஒரு தனி சிறப்பாகும்.
ஆறுமுகரைப் பார்த்துக் கொண்டு அவருக்கு எதிரே மயில் வாகனம் கம்பீரமாகக் காட்சி அளிக்கும். ஆறுமுகப் பெருமான் தமது வலப் புறத்து ஆறு கைகளில் வர முத்திரையும், சக்தி, அம்பு, கத்தி, சக்கரம், பாசம் போன்ற ஐந்து ஆயுதங்களையும், இடப் புறத்து ஆறு கைகளில் அபய முத்திரையும், வஜ்ரம், வில், கேடயம், சங்கு, அங்குசம் போன்ற ஆயுதங்களையும் தாங்கி உள்ளார். முருகன் இத்தலத்தில் சாந்த ரூபத்தில் இருப்பதால் இக்கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெறுவது கிடையாது.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், அந்த தோஷம் நீங்க, இத்தலத்து முருகப்பெருமானை பிரார்த்தனை செய்கிறார்கள்.
அறகண்டநல்லூர் அதுல்யநாதேசுவரர் கோவில்
சனி பகவான் தனது வாகனமான காகத்தின் மேல் காலை வைத்தபடி இருக்கும் வித்தியாசமான கோலம்
திருக்கோயிலூரில் இருந்து 2 கி.மீ. (விழுப்புரத்தில் இருந்து 37 கி.மீ.) தொலைவிலுள்ள தேவார தலம் திருஅறையணிநல்லூர் (அறகண்டநல்லூர்). இறைவன் திருநாமம் அதுல்யநாதேசுவரர். இறைவியின் திருநாமம் அழகிய பொன்னம்மை.இக்கோவில் ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது.
இக்கோவிலில், நவக்கிரகத்தில் உள்ள சனீஸ்வரர் வலது காலை தூக்கி, காகத்தின் மீது வைத்தபடி வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு அருகிலேயே மற்றொரு சனீஸ்வரர் நின்ற கோலத்தில் தனியாகவும் இருக்கிறார். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமைகளில் இவ்விரு சனீஸ்வரருக்கும் எள் படைத்து வழிபடுகின்றனர்.
இங்குள்ள காலபைரவர் நாய் வாகனம் இல்லாமல் காட்சி தருவதும், துர்க்கை அம்மன் தெற்கு பார்த்தபடி இருப்பதும் வித்தியாசமான தரிசனம் ஆகும்.
திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில்
மருத்துவச்சி அம்மன் என்று போற்றப்படும் பாகம்பிரியாள்
ராமநாதபுரம் மாவட்டம், தேவாரப் பாடல் பெற்ற தலமான திருவாடானையிலிருந்து 11 கி. மீ. தொலைவில், தொண்டி கடற்கரை அருகே திருவெற்றியூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது பாகம்பிரியாள் கோவில். இறைவன் திருநாமம் வல்மீக நாதர். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். இந்த கோவில் பழமை வாய்ந்ததும், விஷம் முறிக்கும் திருத்தலமாகவும் கருதப்படுகிறது.
தீராத நோய்களையும் தீர்ப்பவளாக அருளுவதால் இத்தலத்து அம்பிகை பாகம் பிரியாளை 'மருத்துவச்சி அம்மன்' என்றும் அழைக்கிறார்கள். விவசாயிகள் தங்கள் நிலத்தில் பணி துவங்கும் முன், விதை நெல்லை பாகம்பிரியாள் சன்னதியில் வைத்து பூஜித்துச் செல்கின்றனர். முதலில் அறுவடை செய்யும் நெல்லையும் இவளுக்கு காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இப்பகுதியில் யாரேனும் விஷப்பூச்சிகளால் கடிபட்டால், அவர்களை கோயிலுக்கு கொண்டு வருகின்றனர். அவர்களை கோவில் எதிரேயுள்ள வாசுகி தீர்த்தத்தில் மூழ்கச்செய்து, மண்டபத்தில் படுக்க வைத்து, அம்பிகைக்கு அபிஷேகம் செய்த தீர்த்த பிரசாதம் தருகின்றனர். தற்போதும் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களை தீர்த்தக்குளத்தில் அமுக்கி குளிக்க வைப்பதால், 'அமுக்கிப் போட்டா சரியாப்போகும்' என்று சொல்லும் வழக்கம் உள்ளது.
இக்கோவிலில் வியாழக்கிழமை இரவு தங்கி, வெள்ளிக்கிழமை காலையில், கோவில் முன் உள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடி, பாகம்பிரியாள் உடனுறை பழம்புற்றுநாதர் எனும் வல்மீகநாதரை வழிபடுவதால் தோல் நோய்கள், விஷக்கடிகள் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலத்து அம்பிகையை வணங்கி தீர்த்தம் பருகினால் புற்றுநோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பெண்களுக்கான பிரார்த்தனை தலம்
பெண்களின் பிரச்னைகளுக்கான பிரதான பிரார்த்தனை தலம் இது. திருமணம், குழந்தை பாக்கியம், ஆரோக்கியம் என எதற்காகவும் இங்கு வேண்டிக்கொள்ளலாம். இங்கு வழிபடும் பக்தைகள் 'தங்கி வழிபடுதல்' என்னும் சடங்கைச் செய்கிறார்கள். வியாழனன்று மாலையில் அம்பிகையை வணங்கி, அன்றிரவில் கோயிலிலேயே தங்கி விடுகின்றனர். மறுநாள் வாசுகி தீர்த்தத்தில் நீராடி திரும்புகின்றனர்.
இந்த அம்பிகை தாயுள்ளம் கொண்டவள். இவ்வூர் மக்கள் தங்கள் சொத்துக்களை அம்பிகைக்குரியதாக கருதுகின்றனர். அதனால் தாய்வழி சொத்தாக மகள்களுக்கு சொத்தை எழுதி வைக்கின்றனர்.
திருக்கள்ளில் சிவாநந்தீஸ்வரர் கோவில்
பைரவருக்கு மிளகாய் பொடி அபிஷேகம் செய்யும் வித்தியாசமான நடைமுறை
சென்னை - பெரியபாளயம் சாலையிலுள்ள கன்னிப்புத்தூர் (கன்னிகைப்பேர்) என்ற கிராமத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத் தலம் திருக்கள்ளில். இத்தலத்தை தற்போது திருகண்டலம் என்று அழைக்கிறார்கள். இறைவன் திருநாமம் சிவாநந்தீஸ்வரர். இறைவி திருநாமம் ஆனந்தவல்லி அம்மை.
இக்கோவிலில் பைரவருக்கு மிளகாய் பொடி அபிஷேகம் செய்வது ஒரு வித்தியாசமான நடைமுறையாகும். காணாமல் போன பொருட்களை திரும்பப் பெறவும், திருமணத் தடைகள் நீங்கவும் இந்த அபிஷேகம் செய்யப்படுகிறது. மிளகாய் பொடி அபிஷேகம் என்பது ஒரு சக்தி வாய்ந்த சடங்காகும். இது எதிர்மறை சக்திகளை நீக்கி, கிரகங்களின் செல்வாக்கை எதிர்த்து, பக்தர்களுக்கு பாதுகாப்பை வழங்குகின்றது. பொருட்கள் கிடைத்தவுடன், பைரவருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். இந்த நடைமுறை பைரவரின் அருளைப் பெறவும், தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றவும் செய்யப்படுகிறது.
பூந்தமல்லி வரதராஜர் பெருமாள் கோவில்
பெருமாள் தலைக்குப் பின்னால் சூரியன் அமைந்திருக்கும் தனிச்சிறப்பு
சூரியனுக்கான பரிகார தலம்
சென்னையில் இருந்து 25 கிமீ தொலைவில் அமைந்துள்ளது பூந்தமல்லி வரதராஜர் பெருமாள் கோவில். தாயார் திருநாமம் புஷ்பவல்லி. இத்தல தாயார், மல்லிகை மலரில் அவதரித்ததால் 'புஷ்பவல்லி' என்று பெயர். இவள் பூவில் இருந்தவள் என்பதால், இந்த ஊர் 'பூவிருந்தவல்லி' என்றானது. அதுவே மருவி பூந்தமல்லி என்று அழைக்கப்படுகிறது. இக்கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது.
ராமானுஜரின் குருவான திருக்கச்சிநம்பிகளின் அவதார தலமான இந்தக் கோவிலில் திருப்பதி வெங்கடேசர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், காஞ்சி வரதராஜப் பெருமாள் சன்னதிகளும் உண்டு. மூவருக்கும் தனித்தனியாக பிரம்மோற்ஸவம் நடப்பது சிறப்பு.
இத்தலத்து மூலவரான வரதராஜப்பெருமாள், புண்ணியகோடி விமானத்தின் கீழ், பின் தலையில் சூரியனுடன் இருக்கிறார். பெருமாள் தலைக்குப் பின்னால் சூரியன் அமைந்திருப்பது ஒரு தனி சிறப்பாகும். இதனால் இக்கோவில் சூரிய தலமாகவும் கருதப்படுகிறது. இது சூரியதலம் என்பதால், ஜோதிட ரீதியாக சூரிய திசை நடப்பவர்கள், தந்தையுடன் கருத்து வேறுபாடு உள்ளவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டோர் இத்தல பெருமாளை வழிபட்டால் நலம் கிடை க்கும்.
தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், இத்தல வரதராஜப்பெருமாளுக்கு செவ்வரளி மாலை அணிவித்து, திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில்
திருச்சிராப்பள்ளி நகரில் அமைந்துள்ள தேவாரத் தலமான திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில் பஞ்சபூதத் தலங்களில் அப்புத்(நீர்) தலமாகும். இறைவன் திருநாமம் ஜம்புகேஸ்வரர் . இறைவியின் திருநாமம் அகிலாண்டேசுவரி. இத்தலத்து முருகனை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார்
இத்தலத்தில் முருகப்பெருமான் ஜம்பு தீர்த்தக்கரையில், தன் காலடியில் அசுரனை அடக்கும் கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்துக்கு வந்த அருணகிரியார், தனக்கு காமம் என்னும் எதிரியால் தொந்தரவு உண்டாகக்கூடாது என்று முருகனிடம் வேண்டிக் கொண்டார். முருகனும், காமத்தை அசுரத்தன்மைக்கு ஒப்பிடும் வகையில், ஒரு அசுரனாக்கி, காலின் அடியில் போட்டு அடக்கிய நிலையில் காட்சி தருகிறார். முருகப்பெருமானின் இத்தகைய தோற்றத்தைக் காண்பது அபூர்வம்.
தேவராயன் பேட்டை (திருச்சேலூர்) மச்சபுரீஸ்வரர் கோவில்
மகாவிஷ்ணு மச்ச அவதாரத்தின் போது சிவபெருமானை வழிபட்ட தலம்
மீன் ராசிக்கான பரிகார தலம்
கந்த சஷ்டி கவசம் பாடிய பால தேவராயன் சுவாமிகள் பிறந்த தலம்
கும்பகோணம் தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள பண்டாரவாடை (19 கி.மீ.) என்ற ஊருக்கு மிக அருகில் அமைந்துள்ள தேவராயன் பேட்டை கிராமத்தில் அமைந்துள்ளது மச்சபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் சுகந்த குந்தளாம்பிகை. மகாவிஷ்ணு முதல் அவதாரமான மச்ச அவதாரம் எடுத்து, இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமானை வழிபட்டதால் இறைவன் மச்சபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இது ஒரு திருஞானசம்பந்தர் பாடிய தேவார வைப்புத் தலமாகும். முருகப்பெருமான் மீது கந்த சஷ்டி கவசம் பாடிய பால தேவராயன் சுவாமிகள் பிறந்த புண்ணிய தலம். தஞ்சை பெரிய கோவிலுக்கும் முற்பட்ட கோவில் இது.
ஒருமுறை படைப்புக் கடவுளான பிரம்மனிடமிருந்து ஹயகிரீவன் என்ற அரக்கன் படைப்புக்குரிய வேதங்களை கவர்ந்து சென்று கடலுக்கு அடியில் ஒளிந்து கொண்டான். இதனால் படைப்புத்தொழில் தடைபட மகாவிஷ்ணு மச்சஅவதாரம் எடுத்து கடலுக்கடியி்ல் சென்று அரக்கனுடன் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்து படைப்புத் தொழிலை காப்பாற்றினார். அரக்கனைக் கொன்ற தோஷத்திலிருந்து வீடுபட இங்குள்ள சிவபெருமானை வழிபட்டு சுய உருவம் அடைந்தார். மகாவிஷ்ணு மச்ச அவதாரம் எடுத்து வழிபட்டதால் வைணவர்களும் வழிபடும் சிவஸ்தலமாக விளங்குகிறது. இவ்வாலயம் மீன் ராசி பரிகாரத் தலமாக விளங்குகிறது.
திங்கள்கிழமை, பிரதோஷம், உச்சிக் காலத்தில் மச்சபுரீஸ்வரை வழிபட்டு பிரார்த்தனை செய்தால் வேண்டியவை நிறைவேறும். குழந்தை பாக்கியம், கல்வி முன்னேற்றம், பார்வைக் குறைபாடு, செவித்திறன் அதிகரித்தல் ஆகியவற்றுக்காக பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். மீன ராசிக்காரர்கள், வேதம் ஓதுவோர், ஜோதிடர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வழிபட வேண்டிய கோவில் இது.
பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில்
சிம்ம யாளியின் வாயில் இருந்து தொங்கும் கல் சங்கிலி
நடுவில் தாமரை மலருடன் நுணுக்கமான வேலைப்பாடு உடைய ராசி சக்கரம்
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி நகரில் அமைந்துள்ளது 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சுப்பிரமணிய சுவாமி கோவில். 'பொழில்வாய்ச்சி' (பொழில் வாய்ந்த ஊர் -மருவி பொள்ளாச்சி என்று தற்பொழுது அழைக்கப்படுகிறது) என்ற பழமையான பெயர் கொண்ட இவ்வூர் 'முடிகொண்ட சோழநல்லூர்' என்று மூன்றாம் குலோத்துங்க சோழர் காலத்தில் அழைக்கப்பட்ட வளமான ஊராகும்.
இக்கோவில் ஒரு சிற்பக் கலை பொக்கிஷமாக விளங்குகின்றது. முருகனது கருவறையையொட்டி, தென்புறத்தில் சுந்தரேசுவரர் மற்றும் மீனாட்சி அம்மன் ஆகியோரின் சன்னிதிகள் உள்ளன. இவற்றிற்கு முன்னால் 24 துாண்கள் கொண்ட திருமண மண்டபம் உள்ளது. இந்த தூண்களில் புடைப்புச் சிற்பங்களாக உரலை இழுத்துச் செல்லும் கண்ணன்,தடாதகைப்பிராட்டியார், கங்காளர், துர்க்கை, அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், கண்ணப்ப நாயனார், தசாவதாரக் காட்சிகள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
சிவன் சந்நதிக்கு நேர் மேலே விதானத்தில் ஒரே கல்லில் நடுவில் தாமரை மலருடன், 12 ராசிகள் உருவ வடிவில் சதுரமான அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளன. அதனையொட்டி, ஒரே கல்லில் சிம்ம யாளியின் வாயினின்றும் மூன்று வளையங்கள் ஒன்றில் ஒன்றாக பிணைத்து, கல் சங்கிலி தொங்குகின்றது. மேற்கூரையில் உள்ள சிம்ம யாளி மிகுந்த கலை நுணுக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. கொடி போன்ற பூ வேலைப்பாடுகள், சிம்மத்தின் முன்னங்கால் பகுதி, பின்னங்கால் தொடைப்பகுதி, வால் பகுதிகளில் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும்.நான்கு கல் வளையங்கள் கொண்ட கற்சங்கிலியை சிம்ம யாளி வாயில் கவ்விப் பிடிப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. சங்கிலியின் கடைசி வளையத்தின் அடியில் அழகிய தாமரை மலர் நுட்பமான வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது.
உரலை இழுத்துச் செல்லும் கண்ணன்
நாரதர் அளித்த சாபத்தினால் இரு தேவர்கள், மரங்களாக மாறி, நந்த மகாராஜாவின் அரண்மனை முற்றத்தில் தோன்றி வளர்ந்தனர். பிருந்தாவனத்தில் விளையாடிக்கொண்டிருந்த கண்ணனின் குறும்புகள் தாங்காத தாய் யசோதை கண்ணனை உரலில் கட்டினாள். உரலை இழுத்துக்கொண்டே கண்ணன், அவ்விரு மரங்களின் இடை வெளியில் புகுந்து சென்றபோது, மரங்களினிடையே உரல் சிக்கிக் கொண்டது. கண்ணன் அதை பலமாக இழுத்த போது, மரங்கள் வேரோடு சாய்ந்து, அவைகளில் இருந்து நளகூவரன், மணிக்கிரீவன் என்னும் அழகான தேவர்கள் தோன்றினார்கள்.
தடாதகைப் பிராட்டி
தடாதகைப் பிராட்டி (ஸ்ரீ மீனாட்சி) போர்க்கோலம் பூண்டு திக்விஜயம் செல்லும் அரிய சிற்பம் இவ்வாலயத் தூணில் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோவில் தூண்களில் இருக்கும் இது போன்ற பல பேரழகு புடைப்புச் சிற்பங்கள், பழங்கால சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
நல்லிசேரி ஜம்புநாத சுவாமி கோவில்
இரட்டை விநாயகர்கள் எழுந்தருளியுள்ள தலம்
இடையூறுகளை ஏற்படுத்தும் நிக்கிரக விநாயகரும், துன்பங்களை போக்கும் அனுகிரக விநாயகரும் அருகருகே இருக்கும் அரிய காட்சி
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நல்லிசேரி கிராமம். இத்தலத்து இறைவன் ஜம்புநாத சுவாமி. இறைவியின் திருநாமம் அலங்கார வல்லி. சப்த கன்னியரில் வைஷ்ணவி தேவி வழிபட்ட தலம் இது. ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இக்கோவில். ஒரு காலத்தில் ஊரைச் சுற்றிலும் வயல்கள், வாய்க்கால்கள் நிறைந்திருந்தன. ஊரைச் சுற்றிய அனைத்துப் பகுதி அறுவடை நெல்லும் இங்கு கொண்டுவந்து குவித்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. அதனால் இந்த ஊருக்கு நெல்லுச்சேரி என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில், அதுவே நல்லிச்சேரி என்று மருவியது.
கோவிலின் பிரதான தெற்கு வாசலில் உள்ளே நுழைந்ததும் நமக்கு இரட்டை விநாயகர்கள் காட்சி தருகிறார்கள். ஒருவர் நிக்கிரக விநாயகர், மற்றொருவர் அனுகிரக விநாயகர். நிக்கிரக விநாயகர் நமக்கு இடையூறுகளை, கஷ்டங்களை ஏற்படுத்தித் தருபவர். அனுகிரக விநாயகர் நம்முடைய துன்பங்களை, துயரங்களை நீக்குபவர். அதனால் இங்கு வரும் பக்தர்கள் மத்தியில் இந்த இரட்டை விநாயகருக்கு அதிக மதிப்பு உள்ளது. இனிமேல் எந்தக் கஷ்டத்தையும் தந்துவிடாதே என்று நிக்கரக விநாயகரிடமும், இதுவரை தந்துவரும் கஷ்டங்களைப் போக்கிவிடு என்று அனுக்கிரக விநாயகரிடமும் தோப்புக் கரணம் போட்டு பக்தர்கள் வேண்டிக் கொள்கிறார்கள்.
இரும்பை மாகாளேசுவரர் கோவில்
இசைக்கலையில் சிறந்து விளங்க அம்பிகைக்கு தேன் அபிஷேகம்
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் வட்டத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம், இரும்பை மாகாளேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மதுரசுந்தர நாயகி. இத்தலம் திண்டிவனத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
இத்தலத்து அம்பிகை மதுரசுந்தர நாயகி தனிச்சன்னதியில் தாமரை மலர் பீடத்தின் மேல், தெற்கு பார்த்தபடி மகாலட்சுமியின் அம்சத்துடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள். இங்கு கடுவெளி சித்தர் என்னும் சித்தர் அரசமரத்தின் அடியில் தவம் செய்தபோது, அம்பாள் குயில் வடிவத்தில் அம்மரத்தில் தங்கியிருந்து சித்தரை கண்காணித்து, அவரது தவத்தின் மேன்மையை தன் குரலால் சிவபெருமானிடம் சொல்வாளாம். இதனால் இத்தலத்து அம்பிகைக்கு 'குயில்மொழி நாயகி' என்று பெயர் ஏற்பட்டது. பேச்சு சரியாக வராதவர்கள், இசை கற்பவர்கள், இசைக் கலைஞர்கள் அம்பாளுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டு, அதனை நாக்கில் தடவிக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் குரல் வளம் சிறக்கும், கலைகளில் சிறந்து விளங்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பாடி திருவலிதாயநாதர் கோவில்
குரு பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ள தேவார தலம்
சிறப்பு வாய்ந்த குரு பரிகார தலம்
சென்னை மாநகரின் ஒரு பகுதியான பாடியில் அமைந்துள்ள தேவார தலம் திருவலிதாயநாதர் கோவில். இறைவன் திருநாமம் திருவலிதாயநாதர், திருவல்லீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஜெகதாம்பிகை, தாயம்மை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
குரு பகவான், தன்னுடைய சாப விமோசனத்திற்காக சிவபெருமானை வழிபட்ட தலம் இது. குரு பகவான், சிவ பூஜை செய்து வழிபட்ட திருத்தலம் என்பதால், இது குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் குரு பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும். இங்குள்ள குரு பகவானுக்கு, மஞ்சள் வஸ்திரம் சாத்தி, முல்லைப் பூவைக் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் சகல விதமான தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தத் தலத்தில் அருளும் குரு பகவானுக்கு, வியாழக்கிழமை அன்று காலை மற்றும் மாலை வேளைகளிலும், குருப்பெயர்ச்சி காலத்தின் போதும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுகின்றது. இதில் கலந்து கொண்டு குரு பகவானை வணங்கினால், தோஷங்கள் அனைத்தும் நீங்கி, நற்பலன்களை அடையலாம். திருமண தடை நீங்க, நல்ல வரன் அமைய வியாழக்கிழமைகளில் இங்குள்ள குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுகிறார்கள்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்
நரசிம்மரின் யோக நிலையை கலைக்காமல் இருக்க நடுவில் சப்தம் எழுப்பும் நாக்கு இல்லாத மணிகள்
நோய்கள் நீங்குவதற்காக உப்பு, மிளகு காணிக்கை
சென்னை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள திவ்ய தேசம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 61 வது திவ்ய தேசம். கருவறையில் மூலவர் பார்த்தசாரதி பெருமாள், தன் குடும்ப சமேதராக காட்சியளிக்கிறார். இந்தப் பெருமாள் ,அர்ஜுனனுக்கு உதவியாக வந்த கிருஷ்ணாவதாரம் என்பதால்,அருகில் ருக்மிணி தாயார் இருக்கிறாள். வலப்புறத்தில் அண்ணன் பலராமர், இடதுபுறத்தில் தம்பி சாத்யகி, மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோரும் இருக்கின்றனர்.
இக்கோவிலில் யோக நரசிம்மர் தனி சன்னதியில் யோக பீடத்தில் எழுந்தருளி இருக்கிறார். இவரே இத்தலத்தின் முதல் மூர்த்தியாவார். காலையில் இவருக்கே முதல் பூஜை நடக்கிறது. அத்ரி மகரிஷிக்கு காட்சி தந்த நரசிம்மர் இவர். இவரது சன்னதியில் உள்ள மணிகளில் மட்டும் சப்தம் எழுப்பும் நாக்குகள் இல்லை. நரசிம்மர் யோக நிலையில் இருப்பதால் மணி ஒலிக்கும் சப்தமும், பேச்சு சப்தமும் கேட்கக்கூடாது என்கின்றனர். எனவே, இவரது சன்னதியில் அலங்காரத்திற்காக கதவில் இருக்கும் மணிகள்கூட, நடுவில் சப்தம் எழுப்பும் நாக்கு இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது. பக்தர்கள் இவரிடம் வேண்டிக் கொண்டு உப்பு, மிளகை இவரது சன்னதிக்கு பின்புறத்தில் காணிக்கையாக செலுத்துகிறார்கள். தனால் நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.
சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்
பக்தனுக்காக, பொட்டு வைத்துக் கொள்ள சிரம் தாழ்த்திய சென்னி ஆண்டவர்
பெருந்துறையில் இருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில். 1749 அடி உயரம் உடைய இந்த மலைக்கு மேல் செல்ல வாகன வசதிகள் உண்டு. சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது இக்கோவில்.
ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் யுத்தம் நடந்தபோது, ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் இது . அதனால் இந்த மலைக்கு சிரகிரி என்ற பெயரும் உண்டு. (சிரகிரி - சிரம் - சென்னி, கிரி-மலை).அருணகிரிநாதரால் பாடல் பெற்ற திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். பால தேவராய சுவாமிகள் எழுதிய 'கந்த சஷ்டி கவசம்' அரங்கேற்றிய தலம்.
இங்கு முருகன் தண்டாயுதத்தை வலக்கரத்தில் ஏந்தி, இடது திருக்கரத்தை இடுப்பில் வைத்தபடி ஞான தண்டாயுதபாணியாகக் காட்சியளிக்கிறார். இந்த மலையின் ஒரு பகுதியில் நொய்யல் ஆற்றுக்கு அருகில் வாழ்ந்து வந்த ஒருவர் வளர்க்கும் பசு தினந்தோறும் யாருக்கும் தெரியாமல் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சொரிந்தது. இதை ஒருநாள் கவனித்து விட்ட பசுவின் உரிமையாளர் அந்த குறிப்பிட்ட இடத்தை தோண்டிப்பார்க்க அங்கு அழகிய முருகப்பெருமான் சிலை இடுப்பு வரை நல்ல வேலைப்பாட்டுடன் இருக்க, இடுப்புக்குக்கீழ், கரடு முரடாக ஒரு வடிவமின்றி இருந்ததால் அதை வடிவமைக்க அந்த சிலை மீது சிற்பி உளியால் அடித்தபொழுது ரத்தம் பீரிட்டு வந்தது கண்டு, பயந்து வேலை அப்படியே நிறுத்தப்பட்டது, பின்பு, அங்கு வாழ்ந்த சரவண முனிவர் அருளாசிப்படி ஆண்டவர் அப்படியே இருக்கப் பிரியப்படுகிறார் என்று அறிந்து சிலையை அப்படியே சென்னிமலை மீது பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்று வரலாறு கூறுகிறது. சிலை இடுப்புக்குக் கீழ் வேலைப்பாடற்று இருப்பதை இன்றும் காணலாம். இத்தல முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்தபின் தயிரானது புளிப்பதில்லை என்ற அதிசயமும் நிகழ்கிறது.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னால் செங்கத்துறையான் என்னும் குடியானவன், இங்கு பண்ணையாரிடம் மாடு மேய்க்கும் வேலை செய்து வந்தார். முருக பக்தனான அவரை தடுத்தாட் கொண்ட முருகன், அவர் மூலம் இந்த கோவிலை கட்ட வைத்தார். அவனுக்கு முருகன், நிலத்தம்பிரான் என்று நாமக்கரணம் சூட்டினார்.
ஒரு நாள் சிவாச்சார்யார் வராததால், சென்னியாண்டவருக்கு நிலத்தம்பிரானே பூஜை செய்தார். நிலத்தம்பிரான் பூஜையின் போது முருகனின் நெற்றியில் பொட்டு வைக்க முயற்சித்தபோது, அப்போது குள்ளமான தம்பிரானுக்கு ஆண்டவர் நெற்றி எட்டாததால், சென்னி ஆண்டவர் தலையைக் கொஞ்சம் தாழ்த்தினாராம். அதனால் இன்றும் சென்னியாண்டவரின் தலை தாழ்ந்தபடியே இருக்கிறது.
அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்
சிவ குடும்பத்தினர் அனைவரும் ஒரே இடத்தில் எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி
வருடத்திற்கு ஒருமுறை, வைகாசி விசாகத்தன்று மட்டும் வீதியுலா வரும் சோமநாத சுவாமி
கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.
சிவன் கோவில்களில், சிவபெருமான் பார்வதி தேவியோடும், இருவருக்கும் நடுவில் முருகனோடும், சோமாஸ்கந்த மூர்த்தியாக காட்சியளிப்பார். இக்கோவிலில் சிவபெருமான் குடும்ப சகிதமாக ஒரே இடத்தில் எழுந்தருளி இருப்பது ஒரு தனிச் சிறப்பாகும். இங்கு பிள்ளையார், சிவபெருமான், முருகன் மற்றும் பார்வதி தேவி சுதை வடிவில் வரிசையாக காட்சி அளிக்க, பிள்ளையாரின் வலதுபுறம் சண்டிகேஸ்வரரும், பார்வதி தேவியின் இடதுபுறம் மனோன்மணி (சிவபெருமானின் உபசக்தி) அம்பிகையும் உடன் இருக்கிறார்கள்.
இவர்கள் அறுவரின் உலோக திருமேனிகளும் இக்கோவிலில் உள்ளன. வைகாசி திருவிழாவின் போது, வைகாசி விசாகத்தன்று சோமநாதர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.திருக்கல்யாணம் முடிந்த பிறகு இந்த அறுவரும் வீதி உலாவுக்கு புறப்படுவார்கள். அப்போது உற்சவர் சோமநாத சுவாமியும், அம்பிகையும் ரிஷப வாகனத்திலும், பிள்ளையார், முருகன், சண்டிகேஸ்வரர் ஒரு ஒரு மரப்படி சட்டத்திலும், சிவபெருமானின் உபசக்தி மனோன்மணி தனியாக ஒரு சப்பரத்திலும் எழுந்தருள்வார்கள்.
எப்படி திருவாரூர் தியாகராஜர் வருடத்திற்கு ஒருமுறை திருத்தேரில் உலா வருவாரோ, அது போல இத்தலத்து சோமநாத சுவாமியின் உற்சவத் திருமேனி, வைகாசி விசாகத்தன்று மட்டும்தான் வீதியுலா வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறகண்டநல்லூர் அதுல்யநாதேசுவரர் கோவில்
பிரதோஷ நந்தி மற்றும் அதிகார நந்தி இரு வேறு திசைகளில் சாய்ந்தபடி இருக்கும் தேவார தலம்
திருக்கோயிலூரில் இருந்து 2 கி.மீ. (விழுப்புரத்தில் இருந்து 37 கி.மீ.) தொலைவிலுள்ள தேவார தலம் திருஅறையணிநல்லூர் (அறகண்டநல்லூர்). இறைவன் திருநாமம் அதுல்யநாதேசுவரர். இறைவியின் திருநாமம் அழகிய பொன்னம்மை. இக்கோவில் ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது.
இக்கோவிலில் அதிகார நந்தியும், பிரதோஷ நந்தியும் தங்கள் தலையை சாய்த்தவாறு இருப்பது வித்தியாசமான தோற்றமாகும்.இதன் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது, பிற சமயத்தினர் கோவிலை அடைத்து சுவாமி வழிபாட்டை நிறுத்தி வைத்திருந்தனர். திருஞானசம்பந்தர் பதிகம் பாடி கோவில் கதவை திறந்து மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வந்தார். அப்போது அவர் எளிதாக சுவாமியை தரிசனம் செய்ய, பிரதோஷ நந்தி வலதுபுறமாகவும், அதிகார நந்தி இடது புறமாகவும் சற்று சாய்ந்து கொடுத்தது. இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள இரண்டு நந்திகளும் இரு வேறு திசைகளில் திரும்பியபடியே இருக்கின்றது.இப்படி இந்த இரு நந்திகளும் இருக்கும் கோலத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
கரிசூழ்ந்த மங்கலம் வெங்கடாசலபதி கோவில்
மூலவராக சக்கரத்தாழ்வாரும், உற்சவராக வெங்கடாஜலபதி பெருமாளும் இருக்கும் அரிய தலம்
சுக்கிர பகவானுக்குரிய பரிகார தலம்
திருநெல்வேலியில் இருந்து 25 கி.மீ. தொலைவில், சேரன்மாதேவிக்கு மிக அருகில் அமைந்துள்ள தலம் கரிசூழ்ந்த மங்கலம் வெங்கடாசலபதி கோவில். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில். இத்தலத்தின் மூலவராக சக்கரத்தாழ்வாரும், உற்சவராக பூதேவி ஸ்ரீதேவி சமேத வெங்கடாஜலபதி பெருமாளும் இருக்கின்றனர். இந்தியாவிலேயே மூலவர் சக்கரத்தாழ்வாராகவும் உற்சவர் வெங்கடாஜலபதியாகவும் காணப்படுகின்ற நிலை குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஓரிரு இடங்களில் தான் உள்ளன.
மூலவர் சுதர்சன சக்கரத்தில் முன்புறம் 16 திருக்கைகளுடன் கூடிய மகா சுதர்சன மூர்த்தியாகவும், பின்புறம் யோக நரசிம்மராகவும் காட்சியளிப்பது இத்திருக்கோயிலின் சிறப்பு அம்சமாகும்.முன்புறம் காட்சிதரும் ஸ்ரீ சுதர்சனர் சங்கு, சக்கரம், அங்குசம், மழு, ஈட்டி, தண்டு, கலப்பை, அக்னி, கத்தி, வேல், வில், பாசம், வஜ்ராயுதம், கதாயுதம், உலக்கை, சூலம் போன்ற ஆயுதங்களை தாங்கி பதினாறு கரங்களுடன் காட்சித் தருகிறார். இவருக்குப் பின்புறம் காணப்படும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி நான்கு கரங்களுடன் காட்சித் தருகிறார்.தசாவதாரங்களில் வராக அவதாரம் நரசிம்ம அவதாரம் ஆகியவற்றின் குணங்களை இவர் ஒருங்கே பெற்றவர். திருமால் இவரிடம் ஆயுள் ஆரோக்கியம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அளிக்கும் உரிமையைத் தந்துள்ளார்.
சக்கரத்தாழ்வாராகிய சுதர்சன மூர்த்தி சுக்கிரனுக்கு அதிபதி. எனவே இத்தலம் சுக்கிரனுக்குரிய பரிகார தலமாக விளங்குகின்றது.
திருமணமாகி பல வருடங்கள் ஆன நிலையில் குழந்தைப் பேறு இல்லாத தம்பதியினர் இப் பெருமாள் கோவிலில் அபிஷேக ஆராதனைகள் செய்து சிறிய குழந்தைகளுக்கு தாமிரபரணி நதி படித்துறையில் பாயாசம் வழங்கினால் குழந்தைச் செல்வம் கிடைக்கும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஆகும். . இங்குள்ள நரசிம்மருக்குப் பிரதோஷ காலங்களில் தொடர்ச்சியாகப் பதினொன்று பிரதோஷ நாட்களில் பானகம் படைத்து வழிபட்டால் பக்தர்கள் நினைத்து வேண்டியது நிறைவேறும்.
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோவில்
அம்மனுக்குத் தக்காளியால் அர்ச்சனை செய்து, தக்காளி மாலை சாத்தி வழிபடும் வித்தியாசமான நடைமுறை
காரைக்குடி நகரின் மீனாட்சிபுரம் பகுதியில் அமைந்துள்ளது முத்து மாரியம்மன் கோவில். கருவறையில் முத்து மாரியம்மன் நின்ற கோலத்தில் கருணைப் பார்வையும்,கனிவு சிரிப்புமாகக் காட்சி தந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள் . இக்கோவிலில் அம்மனுக்கு தக்காளியால் அர்ச்சனை செய்வதும், தக்காளி மாலை சாத்தியும் வழிபாடு செய்வது வேறு எந்த அம்மன் தலத்திலும் இல்லாத நடைமுறையாகும்.
அம்மனுக்குத் தக்காளியால் அர்ச்சனை செய்து, தக்காளி மாலை சாத்தி வழிப்பட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோவிலில் மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், நேர்த்திக்கடன் நேர்ந்து பால்குடம் எடுப்பது தனி சிறப்பாகும்.
திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்
இடக்காலைச் சுற்றியவாறு அமர்ந்து, இரண்டு முனிவர்களுடன் மட்டும் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் வித்தியாசமான தோற்றம்
திருச்சி – தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள துவாக்குடி என்ற ஊரிலிருந்து, நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் நெடுங்களம். இறைவன் திருநாமம் நித்திய சுந்தரேசுவரர், திருநெடுங்களநாதர், இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி.
இக்கோவிலில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தியின் அமைப்பு சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். கருவறையின் தெற்குப் பக்கத்திலுள்ள தேவ கோட்டத்தில் யோக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். யோக தட்சிணாமூர்த்தி சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும், இடது கரத்தில் தீச்சுடரைத் தாங்கியவாறும், இடக்காலைச் சுற்றியவாறு யோகப் பட்டம் விளங்கவும் காட்சி தருகிறார். பொதுவாக நான்கு சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் கோலத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் இரண்டு முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் கோலத்தில் இருப்பது வித்தியாசமான தோற்றமாகும்.
திருவந்திபுரம் தேவநாத பெருமாள் கோவில்
ஆதிசேஷன் தன் வாலால் தரையில் அடித்து உருவாக்கிய தீர்த்தம்
உப்பு, மிளகு , வெல்லம் போட்டு பிரார்த்தனை செய்தால் வியாதிகளை குணப்படுத்தும் சேஷ தீர்த்தம்
கடலூா் நகரத்திலிருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் 3 கி.மீ. தூரத்தில் உள்ள திவ்ய தேசம் திருவந்திபுரம். பெருமாள் திருநாமம் தேவ நாதன்,தெய்வநாயகன்.தாயார் திருநாமம் வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார்(பார்க்கவி). உற்சவர் திருநாமம் அச்சுதன், மூவராகிய ஒருவன்.
தேவர்களுக்கு தலைமை தாங்கியதால் பெருமாளுக்கு இங்கு தேவநாதன் என்ற திருநாமம் உண்டாயிற்று. இத்தலத்திலே ஸ்ரீமந்நாராயணன் நித்ய வாசம் செய்ய இருப்பதை அறிந்த ஆதிசேசன் இங்கு ஒரு நகரத்தை உண்டு பண்ணினான். அதுதான் திரு அஹீந்த்ர(ஆதிசேஷ)புரம் என பெயர் பெற்று விளங்கியது.
ஒரு சமயம் பெருமாளுக்கு தீர்த்த தாகம் ஏற்பட்டபோது அங்கிருந்த கருடாழ்வாரிடம் தீர்த்தம் கொண்டு வரப் பணித்தார். அவர் எடுத்து வர தாமதம் ஆனதால், ஆதிசேஷனிடம் நீர் கொண்டு வருமாறு பணித்தார். ஆதிசேஷன் தன் வாலால் தரையில் அடித்து பெருமாளுக்கு தீர்த்தம் தந்தார். அதனால் அதற்கு சேஷ தீர்த்தம் என்று பெயர் வந்தது. இது ஒரு பிரார்த்தனை கிணறு ஆகும். இது கோவிலின் உள்ளே தெற்கு பிரகாரத்தில் உள்ளது. இதில் உப்பு, மிளகு , வெல்லம் போட்டு பிரார்த்தனை செய்தால் வியாதிகள் குணமாகும். கட்டி,பால் உண்ணி ஆகியவை மறையும். சர்ப்ப தோசம் உள்ளவர்கள் இங்குள்ள சர்ப்பத்தை வழிபட்டால் தோசம் நீங்கும்
வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் கோவில்
முருகன் இளமை, குடும்பஸ்தர், முதுமை என மூன்று கோலங்களில் காட்சி தரும் ஒரே தலம்
குருடராகவும், ஊமையாகவும் இருந்த சிற்பி குழந்தை வடிவ முருகன் சிலையை வடித்த அற்புதம்
சேலம் - கள்ளக்குறிச்சி சாலையில் 64 கி.மீ. தொலைவில் உள்ளது காட்டுக்கோட்டை. இங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது வட சென்னிமலை பாலசுப்பிரமணியர் கோவில். மலை மீது அமைந்துள்ள இக்கோவிலுக்கு செல்ல சாலை வசதி உண்டு.
இக்கோவிலில் முருகப் பெருமான் இளமை, முதுமை, குடும்பஸ்தர் என்று மூன்று கோலங்களில் காட்சி அருள்வது தனிச்சிறப்பாகும். முருகப் பெருமான், கருவறையில் பாலசுப்பிரமணியராக குழந்தை வடிவில் (இளமை) மேற்கு நோக்கியபடி சிரித்த கோலத்தில் காட்சி அருள்கிறார். அவர் அருகில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி துறவற கோலத்தில் (முதுமை) அருள்பாலிக்கிறார். உற்சவ மூர்த்தி வள்ளி, தெய்வயானையுடன் கிரகஸ்த கோலத்தில் (குடும்பஸ்தராக) அருள்பாலிக்கிறார்.
சுமார் 300 ஆண்டுகால பழமையான இக்கோவிலில் தொடக்கத்தில் ஐந்து நிலை ராஜ கோபுரம், சுயம்பு மூர்த்தி சன்னதியும், அருகில் தண்டாயுதபாணி சன்னதியும் மட்டும் இருந்தது. கடந்த நூற்றாண்டில்தான் குழந்தை வடிவ முருகன் சிலை இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதன் பின்னணியில் முருகன் நடத்திய அற்புத திருவிளையாடல் உள்ளது.
அப்பன்ன சுவாமிகள் என்பவர் வைணவ பக்தர். இருப்பினும் வடசென்னிமலை முருகனிடத்தில் அதீத பக்தி கொண்டவர். அவர் ஒரு குழந்தை வடிவ முருகன் சிலையை இக்கோவிலில் பிரதிஷ்டை செய்ய விரும்பினார். இதனால் முருகனின் குழந்தை வடிவ சிலை ஒன்றை செய்வதற்காக காஞ்சிக்கு சென்று மகாப்பெரியவரை நேரில் சந்தித்து, வடசென்னிமலை முருகன் கோவிலுக்கு குழந்தை வடிவ சிலையை எந்த சிற்பியிடம் செய்தால், சிலை நன்றாக இருக்கும் என்று கேட்டார். அதற்கு மகாப்பெரியவர் திருவண்ணாமலையில் உள்ள இரமணர் ஆசரமத்தில் வைத்தியநாத சிற்பி என்றொருவர் இருக்கிறார். அவரிடம் சிலையை செய்து பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். உடனே அப்பன்ன சுவாமிகள் திருவண்ணாமலைக்குச் சென்று இரமணர் ஆசிரமத்தில் இருக் கும் வைத்தியநாத சிற்பியை சந்தித்தார். ஆனால் வைத்தியநாத சிற்பி பார்வை தெரியாத குருடராகவும் , வாய்ப்பேச முடியாத ஊமையாகவும் இருப்பதை கண்டு பயந்தார். பார்வையற்ற இந்த சிற்பியால் எப்படி சிலை செய்ய முடியும் என்ற சந்தேகத்தோடு இருந்தார். காஞ்சிப் பெரியவர் தம்மை சோதிப்பதாக நினைத்து வைத்தியநாத சிற்பியிடம் வடசென்னி மலை முருகன் கோயிலுக்கு குழந்தை வடிவ சிலை ஒன்றை வடித்து தருமாறு உரத்த குரலில் வேண்டினார். அதற்கு சம்மதம் தெரிவித்த சிற்பி, அப்பன்ன சுவாமிகளை ஏழு நாட்கள் கழித்து வருமாறு சைகையில் தெரிவித்தார்.
ஏழு நாட்கள் கழித்து அப்பன்ன சுவாமிகள் சிற்பியை சந்தித்தபோது, அங்கு குழந்தை வேலன் விக்கிரகத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். அதற்குள்ளாக அற்புதமான குழந்தை வேலன் சிலையை அழகாக வடித்து முடித்திருந்தார் சிற்பி. இது எப்படி சாத்தியமானது என வியந்து நின்ற அப்பன்ன சுவாமிகள், குழந்தை வேலன் சிலையை பயபக்தியுடன் சிற்பியிடமிருந்து பெற்றுச் சென்று வடசென்னிமலை முருகன் கோவிலில் பிரதிஷ்டை செய்தார். சேலம் ஆத்தூரில் இருந்து 15 கிமீ தூரத்தில் உள்ள வடக்குமரை கிராமத்தில் அப்பன்ன சுவாமிகளது ஜீவ சமாதி உள்ளது.
ஒரே சமயத்தில் முருகப் பெருமானின் மூன்று கோலங்களையும் வணங்கினால், அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் பௌர்ணமி தினத்தில் கிரிவலம் வந்து முருகப் பெருமானை வணங்கினால் தீமைகள் விலகும் என்பது ஐதீகம்.இங்குள்ள குழந்தை வடிவில் உள்ள முருகனை அம்மாவசை முடிந்து வளர்பிறை சஷ்டியில் விரதம் இருந்து வழிபட்டு வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.