கொடுவாய் நாகேசுவரர் கோவில்
அஸ்திவாரம் இல்லாமல் மணல் மேல் கற்கோவில் அமைந்துள்ள வித்தியாசமான கட்டிட அமைப்பு
அகழி அமைப்பில் அமைந்துள்ள இறைவன், இறைவி சன்னதிகள்
திருப்பூர் மாவட்டம், அவினாசிபாளையத்திற்குத் தெற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கொடுவாய் நாகேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கோவர்த்தனாம்பிகை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
நாகேசுவரர், கோவர்த்தனாம்பிகை சன்னதிகள் இரண்டும், அகழி அமைப்பில் அமைந்துள்ளது. கோவிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அமைப்பு உள்ளது. அஸ்திவாரத்துக்கு கீழ், பல நூறு அடிக்கு வெறும் மணல் மட்டுமே போடப்பட்டுள்ளது. அருகில், ஆறுகள் ஏதும் இல்லாத நிலையில், மணல் போட்டு அதன் மீது கற்கள் அடுக்கி, கோவில் அமைக்கப்பட்டுள்ளதும், கருவறை, மண்டப சுவர்களை சுற்றிலும், அகழி அமைக்கப்பட்டு, கற்களால் வடிகால் போல் கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது. பழங்காலத்தில், இதைச்சுற்றிலும் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்ததாக, செவிவழி செய்திகள் சொல்லப்படுகின்றன. நவக்கிரக கோவில் புதுப்பிக்கும்போது, 250 லாரி மணல் மட்டுமே அஸ்திவாரமாக போடப்பட்டுள்ளதை பார்த்து, இப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
இப்படி அஸ்திவாரம் இல்லாமல், மணல் மேல் கற்கோவில் அமைந்துள்ளதும், கோவில் அகழி அமைப்பில் உள்ளதும், பழங்கால கட்டட கலையின் சிறப்பை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது.
இக்கோவிலில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்து உள்ளன. யாழி அமைப்பு, அன்னப் பறவை, சுவாமி சன்னதி மேற்கூரையில், சந்திர, சூரிய கிரகணத்தை விளக்கும் பாம்பு பிடிக்கும் கதை, அம்பாள் சன்னதி முன், சுந்தரர் பாடியதையடுத்து, முதலை வாயிலிருந்து குழந்தை வெளியேறுவது, ஆடல் மகளிர் சிற்பங்கள் என அற்புதமான சிற்பங்கள் காணப்படுகின்றன. மீன், நடனமாடும் பெண், பாம்பு, குதிரையில் ஒரு சிப்பாய் பன்றியைக் கொல்வது, பாம்புடன் பாம்பு பிடிப்பவன், ஒரு புலி ஒரு பெண்ணைத் தாக்குவது போன்ற சிலைகள் கோவிலின் சுவர்களில் உள்ளன. ஒரே கல்லிலான மிக உயரமான தீபஸ்தம்பம், இக்கோவிலின் மற்றொரு தனிச்சிறப்பாகும்.
திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவில்
பக்தர்களை பார்த்த வண்ணம் சயனித்திருக்கும் பெருமாளின் அரிதான கோலம்
திருப்பூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வீரராகவப் பெருமாள் கோவில். இந்த கோவிலில் வீரராகவ பெருமாள், கனகவல்லித்தாயார் மற்றும் பூமிதேவித்தாயாருடன் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீகனகவல்லித்தாயார் தனி சன்னிதியில் அமர்ந்த நிலையிலும், ஸ்ரீபூமாதேவி தாயார் நின்ற கோலத்திலும் தனி சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்கள் இந்த கோவிலுக்கு வந்து, வீரராகவ பெருமாளை வழிபட்டுச் சென்றனர். இத்தலத்துக்கும், ராமாயணத்திற்கும் மிகுந்த தொடர்பு உண்டு. ராமாயண காலத்தில் வாலியின் இருப்பிடமான, நொய்யல் நதியின் தென்பகுதி தற்போது 'வாலிபாளையம்' என்று அழைக்கப்படுகிறது. வாலியின் மனைவி தாரையின் இருப்பிடமே தாராபுரமானது. சுக்ரீவன் வழிபட்ட தலம் ஒன்று, சர்க்கார் பெரியபாளையத்தில் 'சுக்ரீஸ்வரன் கோவில்' என்ற பெயரில் உள்ளது.
இக்கோவில் மூலவர் வீரராகவர் பெருமாள், புஜங்க சயனமாக தென்திசையில் சிரம் வைத்து, வட திசை திருப்பாதம் நீட்டி, மேற்குத் திசை முதுகு காட்டி, கிழக்குத் திசையில் திருமுகம் காட்டி, ஆனந்த நிலையில் பள்ளி கொண்டிருக்கிறார். பொதுவாக சயனக்கோலத்தில் அருள்பாலிக்கும் பெருமாளின் திருமுகம் மேல் நோக்கி அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில் தன்னை வணங்கும் பக்தர்களை பார்த்த வண்ணம் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு. இப்படி பக்தர்களை பார்த்த வண்ணம் சயன கோலத்தில் இருக்கும் பெருமாளை வேறு எந்தக் கோவிலிலும் காண முடியாது.
நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் கோவில்
நாக தோஷம் போக்கும் நாகாபரண விநாயகர்
நாகப்பட்டினத்தில் உள்ள காயாரோகணேஸ்வரர் கோவிலின் நுழைவாசலில், நாகாபரண விநாயகர் தனிச் சன்னதி கொண்டு அருள் பாலிக்கிறார். ஆலயத்தின் முகப்பில் வீற்றிருக்கும் இந்த விநாயகர், உடலில் நாகத்தை ஆபரணமாக சூடி, தலைக்கு மேலே ஐந்து தலை நாகம் குடை பிடித்தபடி இருக்க அதன் கீழே காட்சி தருகிறார். இவர் நாகத்தையே தன்மார்பினில் பூணூலாகவும், இடையில் கடி சூத்திரமாகவும் அணிந்திருக்கிறார். இதன் காரணமாகவே இந்த விநாயகருக்கு, 'நாகாபரண விநாயகர்' என்று பெயர் வந்தது.
சர்ப்ப ராஜன் தனக்கிருந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய இத்தலத்து இறைவனை வழிபட வந்தபோது,முதலில் இந்த நாகாபரண பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து அவருக்கு பூஜை செய்தான். பின்னர் காயாரோகணரை வழிபட்டு தோஷ நிவர்த்தி அடைந்தான்.
சர்ப்ப ராஜனே பிரதிஷ்டை செய்து வணங்கிய விநாயகர் இவர் என்பதால், ராகு-கேது சம்பந்தப்பட்ட தோஷங்கள் அனைத்தும் இவரை வழிபடுவதால் விலகும். கால சர்ப்ப தோஷம், நாகதோஷம், களத்திர சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இவருக்கு, ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொண்டால், அந்த தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். ராகு- கேது பெயர்ச்சியின்போது இவருக்கு விசேஷ பூஜைகளும் நடக்கிறது.
மானந்தகுடி ஏகாம்பரேசுவரர் கோவில்
சனகாதி முனிவர்களுடனும், சப்த ரிஷிகளுடனும் இருக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து, 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மானந்தகுடி. இறைவன் திருநாமம் ஏகாம்பரேசுவரர். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். முற்காலத்தில் இத்தலம் அனுமன் ஆனந்த குடி என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னர் மானந்த குடி என்றானது.
இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, மற்ற தலங்களை விட மிகவும் விசேஷமான கோலத்தில் காட்சி அளிக்கிறார். இவரது பீடத்தில் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களும், ரிஷிகளும் இருக்கின்றனர். மேலும் நந்தியும் இந்த பீடத்தில் இடம் பெற்றிருக்கின்றது. தட்சிணாமூர்த்தியின் இத்தகைய கோலத்தை மற்ற தலங்களில் நாம் காண்பது அபூர்வம்.
பொன்னேரி திருஆயர்பாடி கரிகிருஷ்ண பெருமாள் கோவில்
அரியும் அரணும் சந்தித்துக் கொள்ளும் அபூர்வ திருவிழா
இந்தியாவிலேயே வேறு எங்கும் நடத்தப்படாத சந்திப்பு விழா
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திருஆயர்பாடியில் ஆரணி ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது சவுந்தர்யவல்லி சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில். இக்கோவில் 1,500 ஆண்டுகள் பழமையானது. சோழமன்னன் கரிகாலன் கட்டியதால் கோவிலுக்கு கரிகிருஷ்ண பெருமாள் கோவில் என்ற பெயர் ஏற்பட்டது .
அதேபோன்று பொன்னேரியின் மையப்பகுதியில், ஆரணி ஆற்றங்கரையில் 9-ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் 5-ம் நாள் கரிகிருஷ்ண பெருமாளும், அகத்தீஸ்வரரும் சந்திக்கும் 'சந்திப்பு திருவிழா', ஆண்டுதோறும் இப்பகுதியில் பிரசித்தி பெற்ற விழாவாக நடைபெற்று வருகிறது. அகத்திய முனிவருக்கும், பரத்வாஜருக்கும் கரிகிருஷ்ண பெருமாள், அகத்தீஸ்வரர் ஒருசேர வந்து காட்சி அளித்ததை உணர்த்தும்விதமாக பொன்னேரியில் இவ்விழா நடைபெறுகிறது. அரியும் அரணும் ஒன்றே என உலகத்திற்கு உணர்த்தும் விதமாக இந்த சந்திப்பு திருவிழா நடைபெற்று வருகின்றது.
சந்திப்பு திருவிழாவின் போது ஆனந்தவல்லி தாயார், விநாயகர், முருகர் மற்றும் சண்டிகேஸ்வரருடன் அகத்தீஸ்வர பெருமான் ரிஷப வாகனத்திலும், கரிகிருஷ்ண பெருமாள் கருட வாகனத்திலும் ஒருசேர பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த சந்திப்பு விழா இந்தியாவிலேயே வேறு எங்கும் நடத்தப்படாத திருவிழாவாகும். அப்போது அங்கு கூடியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் 'கோவிந்தா.. கோவிந்தா' கோஷமும், 'நமச்சிவாய.. நமச்சிவாய' கோஷமும் விண்ணை பிளக்கும்.
பத்துகாணி காளிமலை பத்ரகாளி அம்மன் கோவில்
தென்னிந்தியாவின் வைஷ்ணவி தேவி கோவில் என்று போற்றப்படும் பத்ரகாளி அம்மன் கோவில்
மலையின் மீது பொங்கலிடும் தென்னிந்தியாவின் ஒரே புண்ணிய தலம்
கன்னியாகுமரி-கேரள எல்லையான பத்துகாணி அருகே, கன்னியாகுமரி மாவட்டத்தின் திருவட்டாறு தாலுகாவில், கடல் மட்டத்தில் இருந்து 3000 அடி உயரத்தில், உள்ள காளிமலையில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தமான பத்ரகாளி அம்மன் கோவில். இக்கோவில் தென்னிந்தியாவின் வைஷ்ணவி தேவி கோவில் என்று போற்றப்படுகின்றது. மலை உச்சியில் இருக்கும் காளிதேவி கோயிலுக்கு ஜீப்பைத் தவிர எந்த வாகனமும் இந்த வழுக்கும் ரோட்டில் போகமுடியாது. நடந்து சென்றால் ஆறு கிலோமீட்டர் தூரம் ஆகும். இதில் இரண்டு கிலோமீட்டர் தூரம் காட்டு வழியாக செல்ல வேண்டும். இந்த மலை மிகவும் வசீகரமான இடம். மலையின் ஒரு பக்கம் கேரளாவின் அழகை மேலிருந்து பார்க்கலாம். மறுபக்கம் தமிழகத்தின் இயற்கை அழகைப் பார்க்கலாம்.
காளிமலையில் துர்காதேவி, தர்ம சாஸ்தா, நாகயட்சி, சப்த கன்னியர் போன்ற தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன. குழந்தை பேறு கிடைக்காதவர்கள் குழந்தை கிடைப்பதற்காக இம்மலையில் வந்து நாகயட்சிக்கு பூஜை செய்து அருள் பெற்று செல்கின்றனர். சித்ரா பெளர்ணமிதான் இங்கு விசேஷம். அப்போது பல பெண்கள் பொங்கலிட்டு காளிதேவியை வழிபடுகிறார்கள். தென்னிந்தியாவில் மலையின் மீது பொங்கலிட்டு வழிபடும் ஒரே புண்ணிய தலம் காளிமலை ஆகும்.
அகத்திய முனிவருக்கு மும்மூர்த்திகள் காட்சி தந்த மலை இது. அவர் உருவாக்கிய தீர்த்தம் தான் காளி தீர்த்தம். இந்த காளி தீர்த்தம் கோடையிலும் வற்றாதது. மருத்துவ குணம் கொண்ட இந்த நீரை நோய் தீர்க்கும் மருந்தாக பக்தர்கள் வீடுகளில் பாதுகாத்து வருகிறார்கள்.
துர்காஷ்டமியின் போது கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு பக்தர்கள் இருமுடி கட்டி, புனித நீர் சுமந்து பாதயாத்திரை செல்வது வழக்கம்.
காஞ்சிபுரம் சித்திரகுப்தன் கோவில்
நம் பாபப் புண்ணிய கணக்கெடுக்கும் சித்ரகுப்தன்
அசுவினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன் தரும் தலம்
ஒவ்வொரு வீட்்டிலும் வரவு செலவுக் கணக்கு எழுதுவது என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம். ஆனால் நம் ஒவ்வொருடைய புண்ணியச் செயல்களையும் பாபக் காரியங்களையும் தனித் தனியே பட்டியலிட்டு அதை எமதர்மராஜனுக்குக் கொடுப்பவர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் சித்திரகுப்தன். எமதர்மராஜன், சித்திரகுப்தன் தரும் நம் பாவப் புண்ணியக் கணக்கை ஆராய்ந்து, அதில், நாம் செய்திருந்த புண்ணியங்கள் அதிகமானால் நமக்கு மோட்சப் பதவியும் பாவக் காரியங்கள் மிகுதியானால் மறுபிறவியும் நமக்கு அளித்திடுவார்.
சித்திரகுப்தனுக்கென்று தனி கோவில் காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரகுப்தன் வலது காலைத் தொங்க விட்டும் இடது காலை மடித்தும் அமர்ந்த நிலையில் காட்சித் தருகின்றார். அவர் வலக் கையில் எழுத்தாணியும் இடக் கையில் ஏடும் இருக்கின்றது.
சித்திரகுப்தனின் கதை
எமதர்மராஜன் சிவபெருமானை ஒரு நாள் கைலாயத்தில் சந்தித்து தனக்கு பூலோகத்திலுள்ள ஆன்மாக்களின் பாவப் புண்ணியங்களைப் பரிசீலித்து அந்த ஆன்மாக்களின் அடுத்த நிலை என்ன என்பதுப் பற்றி முடிவு எடுக்க மிகுந்த சிரமமாக உள்ளது என்றும் அதனால் பாவப் புண்ணியக் கணக்குகளை நிர்வகிக்க தனக்கு ஒரு உதவியாளர் வேண்டுமென்றும் வேண்டுகோள் வைத்தார். சிவபெருமான் பிரம்மதேவனிடம் எமதர்மராஜனின் வேண்டுகோளை நிறைவேற்றித் தருமாறு உத்திரவிட்டார்.
பிரம்மதேவன் எமதர்மனுக்கு ஒரு சகோதரனைப் படைத்து அச்சகோதரனே எமதர்மராஜனுக்குப் பாவப் புண்ணியக் கணக்கு எழுத உதவியாக இருக்கட்டும் என்று தீர்மானித்தார்,
பிரம்மதேவன் வானவில்லின் ஏழு வர்ணங்களிலிருந்து நீளாதேவி என்னும் பெண்ணைப் படைத்தார்.பின்னர நீளாதேவிக்கும் எமதர்மராஜனின் தந்தையான சூரிய தேவனுக்கும் திருமணம் நடந்தது. இவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தைதான் சித்திரகுப்தன். சித்திரை மாதம் சித்ரா பௌணர்மி தினத்தன்று பிறந்ததால் முதலில் சித்திரைப்புத்திரன் என்று பெயரிட்டார்கள். பின்னர் சித்திரகுப்தன் என்று அழைக்க ஆரம்பிததார்கள். சித்திரகுப்தன் குழந்தையாய் பிறந்தபோது, அவன்பிற்காலத்தில் நிர்வகிக்கப் போகும் கணக்குப் பணியைக் குறிக்கும் விதத்தில், இடது கை உள்ளங்கை ரேகைகளில் ஏடு போன்ற அமைப்பும் வலது கை உள்ளங்கை ரேகைகளில் எழுத்தாணிப் போன்ற அமைப்பும் இருந்ததாம்.
சித்திரகுப்தன் வளர்ந்தபின் மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொண்டான். அதன் பின்னர் தந்தை சூரியதேவனால் பாவப் புண்ணியக் கணக்கு எழுத, எமதர்மராஐனுக்கு உதவியாக இருப்பதற்காக, அனுப்பப் பட்டான்.
சித்திரகுப்தனை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள்
நவக்கிரகங்களில் கேது பகவான, ஒரு ஜாதகரின் மோட்சப் பதவியை தீர்மாணிப்பதால் அவருக்கு மோட்சகாரகன் என்ற பெயறும் உண்டு. நம் பாவப் புண்ணியக் கணக்கின் அடிப்படையில் நமக்கு மறுபிறவியா அல்லது மோட்சமா என்று தீர்மானிக்கும் சித்திரகுப்தன்தான் கேது பகவானின் அதிதேவதை ஆவார்.
எனவே சித்திரகுப்தனை வணங்கினால், கேது பகவானால் ஏற்படக்கூடிய தீயப் பலன்களெல்லாம் விலகி நற்பலன்கள் உண்டாகும். ஐந்து பௌணர்மிகளில் சித்திரகுப்தனைத் தொடர்ந்து தரிசித்து அர்ச்சனை செய்தால், திருமணம் கைக்கூடும். இத்தலம் கேது நிவர்த்தி தலம் என்பதால், கேது திசை ஆரம்பிக்கும் நிலையில் உள்ளவர்களும் மற்றும் அசுவினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் இந்த ஆலயத்தில் அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபடுவது மிகுந்த நற்பலன்களக் கொடுக்கும்.
தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில்
தென்குடித்திட்டை - தமிழகத்தில் குரு பெயர்ச்சிக்கு சிறந்த தலம்
தஞ்சாவூருக்கு வடமேற்கே 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் தென்குடித்திட்டை. இறைவன் திருநாமம் வசிட்டேசுவரர். இறைவியின் திருநாமம் உலகநாயகியம்மை.
தமிழகத்தில் குரு பெயர்ச்சிக்கு சிறந்த தலம் என்றால் அது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோவில்தான். குருபகவான் இக்கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில், தெற்கு நோக்கி தனி சன்னதியில், ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். சனி பகவானுக்கு பரிகாரம் செய்ய உகந்த கோவிலிலாகவும் இது விளங்குகின்றது.
நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது.
இவருக்கு இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும் குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வியாழ பகவானுக்குரிய நாளாகிய வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குருபகவானுக்கும் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர் களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம். மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும். குரு பகவானின் அதி தேவதைகளான பிரம்மன், இந்திரன் ஆகியோரை வழிபட்டாலும் குரு மகிழ்ச்சி கொண்டு பலன்களை வழங்குவார். ஜாதகத்தில் குரு பலவீனமாகவோ, தோஷத்துடனோ இருந்தால், நவமி அன்று சண்டி ஹோமம் செய்வது சிறப்பான பலனை தரும்.
சந்தான பாக்கியம் அளிக்கும் தலமாக இத்திருத்தலம் விளங்குகிறது. மேலும் கடன் தொல்லை அகலவும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படவும் இங்கு வந்து வழிபடுகின்றனர்.
திருக்கோட்டூர் கொழுந்துநாதர் கோவில்
தனி சன்னதியில் மூலவராக எழுந்தருளி இருக்கும் பிரதோஷ மூர்த்தி
மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் 16 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கோட்டூர். இறைவன் திருநாமம் கொழுந்துநாதர். இறைவியின் திருநாமம் தேனாம்பிகை. இந்திரன் பூஜித்ததால் இத்தலத்திற்கு இந்திரபுரி என்ற பெயர் உண்டு. இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானையும் இத்தல இறைவனை வழிபட்டது. கோடு என்றால் யானை. அதனால் இத்தலம் கோட்டூர் எனப் பெயர் பெற்றது.
பொதுவாக சிவாலயங்களில் பிரதோஷ காலங்களில், கோவில் பிராகாரத்தில் வலம் வருவதற்காக அமைந்துள்ள உற்சவமூர்த்தியே பிரதோஷ நாயகர் என்று அழைக்கப்படுகின்றார். உமாதேவியை தனது இடக்கரத்தால் அணைத்திருப்பதால் இவருக்கு அணைத்தெழுந்த நாதர் என்ற பெயரும் உண்டு. இவர் ஒன்றரை அடி உயரத்தில் சிறிய உருவத்துடன் காணப்படுவார். ஆனால் இந்த பிரதோஷ மூர்த்தி, இக்கோவிலில் பெரிய உருவத்துடன் தனி சன்னதியில் மூலவராக எழுந்தருளி இருக்கிறார். இப்படி மூலவராக காட்சி அளிக்கும் பிரதோஷ மூர்த்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
திரிசூலம் திரிசூலநாதர் கோவில்
திருமண வரம் தரும் திரிபுரசுந்தரி
கல்வி, ஞானம், யோகம் அனைத்தும் அருளும் அம்பிகை
சென்னையில் விமானநிலையத்துக்கு அருகில் உள்ள திரிசூலம் ரயில் நிலையத்திலிருந்து ஒரு கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது திரிசூலம் திரிசூலநாதர் கோவில். இக்கோவிலில் இரண்டு அம்பிகைகள் எழுந்தருளி உள்ளார்கள். திரிசூலநாதர் கருவறையில் சொர்ணாம்பிகை இருக்க மற்றொரு பிரதான அம்பிகை திரிபுரசுந்தரி தனி சந்நிதியில், தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறாள்.
கம்பீரமும் அழகுமாகக் காட்சி தரும் திரிபுரசுந்தரி அம்பிகை கரங்களில் அட்சமாலையையும், தாமரை மலரையும் ஏந்தியபடி இருக்கின்றாள். திரிபுரசுந்தரி அம்பிகையை வணங்கினால், கல்வி, ஞானம், யோகம் அனைத்தும் பெறலாம். சகல செல்வங்களையும் தந்தருள்வாள் இந்த அன்னை என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
இக்கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் திரிபுரசுந்தரி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுவது தனிச்சிறப்பாகும். திருமணம் கைகூட வேண்டும், சந்தான பாக்கியம் கிடைக்கவேண்டும், கடனில் இருந்து மீளவேண்டும் என்று வேண்டிக் கொள்கின்ற பக்தர்கள், வேண்டுதல் நிறைவேறுவதற்காகவும் பிரார்த்தனை பலித்ததற்காகவும் அம்பாளுக்கு சந்தனக்காப்பு செய்து, தரிசிக்கின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் - புதுத்தாலி மாற்றிக் கொள்ளும் சுமங்கலிகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. மதுரை சித்திரை திருவிழா 12 நாட்கள் நடைபெற்றாலும் 8, 9, 10 ஆம் நாட்களில் நடைபெறும் பட்டாபிஷேகம், திக்கு விஜயம், அதையடுத்து மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் இன்று மே 8-ந் தேதி காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் மேற்கு, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
திருமண மேடை ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட, பல லட்சம் ருபாய் மதிப்புள்ள வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படும். இந்தத் திருக்கல்யாணத்தைக் காண திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்பிரமணியசுவாமி, தெய்வானை, பவளக்கனிவாய்பெருமாள் ஆகியோர் புறப்பட்டு வருவார்கள். வேத மந்திரங்கள் ஓத, பவளக்கனிவாய் பெருமாள் தாரை வார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கப்படும். மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழும் போது வானில் இருந்து வண்ண மலர்கள் தூவப்படும். அப்போது திருமண நிகழ்ச்சியை காண வந்திருக்கும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட திருமணமான பெண்கள், தங்கள் கழுத்தில் உள்ள தாலியை மாற்றி புதுத்தாலி அணிந்து கொள்வார்கள். மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தின் போது புது தாலிச்சரடு மாற்றிக் கொண்டால், தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என்பது ஐதீகம். இப்படி ஒரு நடைமுறை, வேறு எந்த கோவில் திருவிழாவிலும் கடைபிடிக்கப்படுவதில்லை.
திருக்கல்யாணம் முடிந்தபின் மீனாட்சி அம்மனும், சுவாமியும் திருக்கல்யாண கோலத்தில், கோவிலின் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். மாலையில் மாப்பிள்ளை சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும், புதுப்பெண் மீனாட்சி பூப்பல்லக்கிலும் வீதி உலா வருவார்கள். தம்பதியரின் அழகைக் காண பட்டி தொட்டி எங்கும் இருந்தும் மக்கள், மதுரைக்கு திரண்டு வருவார்கள். மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை கண்ணார கண்டால் நம் வீட்டில் மணமாகாமல் இருக்கும் மகளுக்கோ, மகனுக்கோ திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்
தமிழகத்திலேயே மிகப்பெரிய திருமேனி உடைய சக்கரத்தாழ்வார்
108 வைணவத் திவ்ய தேசங்களில் திருவரங்கம், திருவேங்கடம் அடுத்து மிக முக்கியமான திவ்ய தேசமாக கருதப்படுவது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் ஆகும். தாயார் திருநாமம் பெருந்தேவித் தாயார்.
இக்கோவிலின் பிரதான குளத்திற்கு அனந்த சரஸ் என்று பெயர். இந்த அனந்த சரஸ் குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் சன்னதி அமைந்துள்ளது. தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார், ஏழு அடி உயரத் திருமேனியுடன் இருக்கின்றார். இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார். இவரே இந்த ஆலயத்தில் பிரதான மூர்த்தியாக இருக்கிறார். இவரை வழிபட்ட பிறகே மூலவரான வரதராஜ பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். இங்குள்ள உற்சவர் சக்கரத்தாழ்வார் மிகவும் விசேஷமானவர். இவரைச் சுற்றியுள்ள அலங்கார வளைவில் 12 சக்கரத்தாழ்வார் உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
சக்கரத்தாழ்வார் பெருமானை வணங்கினால் திருமணத்தடை நீங்கும், வழக்குகளில் வெற்றி கிடைக்கும், வாழ்வில் வளமும் நிம்மதியும் அடையலாம் என்பது ஐதீகம். சக்கரத்தாழ்வரை தரிசனம் செய்து பின்னர் ஸ்ரீவரதராஜ பெருமாளை தரிசனம் செய்து பசு வெண்ணெய்யில் சர்க்கரை கலந்து ஏழைக் குழந்தைகளுக்கு அளித்தால் அக்னியால் விளையும் ஆபத்துக்கள் தவிர்க்கப்படும்.
திருவேட்டக்குடி சுந்தரேசுவரர் கோவில்
சிவபெருமானும், முருகனும் வில்லேந்திய கோலத்தில் இருக்கும் அபூர்வ காட்சி
சிவபெருமான் வேடனாகவும், அம்பாள் தலையில் பானையை வைத்தபடி வேடன் மனைவி போலவும் காட்சி தரும் வித்தியாசமான உற்சவ மூர்த்திகள்
புதுச்சேரி மாநிலம் மாவட்டம் காரைக்காலில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருவேட்டக்குடி. இறைவன் திருநாமம் சுந்தரேசுவரர், திருமேனி அழகர். இறைவியின் திருநாமம் சௌந்தரநாயகி, சாந்தநாயகி.
கருவறையில் மூலவர் திருமேனி அழகர் என்கிற சுந்தரேசுவரர் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். உயரமான பாணத்துடன் தீபாராதனை ஒளி திருமேனியில் தெளிவாகத் தெரிகின்றபடி காட்சி அளிக்கிறார். அம்பாள் சாந்தமான கோலத்தில் இருப்பதால் இவளை சாந்தநாயகி என அழைக்கின்றனர்.
சிவபெருமான் மீனவர், வேடன் என இரண்டு வடிவங்களில் வந்து அருள் செய்த தலம் இது. இங்கு சிவபெருமானின் உற்சவர் வேட மூர்த்தியாக கையில் வில் மற்றும் சூலம் ஏந்தியும், அம்பாள் தலையில் பானையை வைத்தபடி வேடன் மனைவி போலவும் காட்சி தருவது வித்தியாசமான தரிசனம் ஆகும். சிவபெருமான் வேடராக வந்தபோது, அவருடன் முருகனையும் அழைத்து வந்தார். இதன் அடிப்படையில் இங்கு முருகனும் கையில் வில்லுடன் காட்சியளிக்கிறார். ஒரே தலத்தில் சிவபெருமான், முருகன் இருவரையும் வில்லுடன் தரிசனம் செய்வது அபூர்வம்.
இங்கு வேடன் வடிவில் சிவபெருமான் காட்சி தருவதின் பின்னணியில் மகாபாரதம் கதை ஒன்று உள்ளது. பாண்டவர்கள் வனவாசம் செய்த போது அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அவ்வாறு தீர்த்த யாத்திரை செய்த போது பல தலங்களில் சிவபெருமானை ஆராதித்தான். அப்படி வழிபட்ட தலங்களில் இத்தலமும் ஒன்று. வேதவியாசர் அர்ச்சுனனிடம், சிவனை வணங்கி பாசுபத அஸ்திரம் பெற்றால் எளிதில் துரியோதனரை வெற்றி கொள்ளலாம் என ஆலோசனை கூறினார். அதன்படி அர்ச்சுனன் இத்தலத்திற்கு வந்து சிவனை வேண்டி தவமிருந்தார். அவனது தவத்தை கலைப்பதற்காக, துரியோதனன் முகாசுரனை அனுப்பினார் .
பன்றி வடிவில் வந்த அசுரன் அர்ச்சுனனது தவத்தை கலைக்க முயன்றான். அர்ச்சுனன் அசுரனை அம்பால் வீழ்த்தினான். அப்போது ஒரு வேடன் தன் மனைவி, மகனுடன் அங்கு வந்து பன்றியை தான் வீழ்த்தியாக கூறி எடுத்துச் செல்ல முயன்றார். அர்ச்சுனன் அவரிடம் பன்றியை தர மறுத்தான். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிவபெருமான், தானே வேடன் வடிவில் வந்ததை உணர்த்தி, பாசுபத அஸ்திரம் கொடுக்கச் சென்றார். அருகிலிருந்த அம்பாள் சிவனிடம், 'ஆயுதங்களில் உயர்ந்ததான பாசுபதாஸ்திரம் பெறுவதற்கு அர்ச்சுனன் தகுதிபெற்றவன்தானா?' என்று சந்தேகம் எழுப்பினாள். சிவன் அவளிடம், 'அர்ஜுனன் மஸ்யரேகை (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன். எனவே, அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம்' என்றார். அர்ச்சுனனும் அம்பாளிடம் பணிந்து நின்று தன் ரேகைகளை காட்டினான். அதன்பின் அம்பாள் சம்மதிக்கவே சிவன் பாசுபத அஸ்திரத்தை அர்ச்சுனனிடம் கொடுத்தார். அர்ச்சுனன் தனக்கு அருள் செய்ததைப் போல இங்கிருந்து அனைவருக்கும் அருளும்படி வேண்டவே சிவபெருமான் இத்தலத்தில் எழுந்தருளினார்.
இறைவனின் திருமேனி நாதர் என்ற பெயருக்கு ஏற்ப, இத்தலத்து இறைவனை வழிபட்டால், நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் அருளுவார்.
இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் கோவில்
ஐந்து மூலவர்கள் இருக்கும் தேவார தலம்
பஞ்சபாண்டவர்கள் ஐந்து பேருக்கும் சிவபெருமான் தனித்தனியே காட்சி கொடுத்த தலம்
வைத்தீசுவரன்கோவில் – திருப்பனந்தாள் சாலையில் உள்ள மணல்மேடு என்ற ஊருக்கு வடக்கே ஒரு கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம் இலுப்பைபட்டு. இத்தலத்தின் புராண பெயர் திருமண்ணிப் படிக்கரை. சிவபெருமான் ஆலகால விஷத்தை பருகியபோது பார்வதி தேவி, சிவபெருமானின் கழுத்தை தன் கரங்களால் அழுத்தி விஷத்தை தொண்டையிலேயே நிற்கச் செய்த கோவில் இது.
பொதுவாக சிவன் கோவில்களில் ஒரு மூலவர் மட்டும்தான் இருப்பார். அரிதாக சில சிவன் கோயில்களில் இரண்டு மூலவர்கள் இருப்பார்கள். ஆனால் இக்கோவிலில் ஐந்து மூலவர்கள் அருள் பாலிப்பது ஒரு தனி சிறப்பாகும். இதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.
பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்தபோது, இத்தலத்தில் சில காலம் தங்கியிருந்தனர். சிவபூஜை செய்ய விரும்பிய அவர்கள், இங்கு தேடிப் பார்த்தும் சிவலிங்கம் எதுவும் கிடைக்க வில்லை. எனவே, அவர்கள் ஐந்து பேரும் ஒரு இலுப்பை மரத்தின் அடியில், இலுப்பைக்காயில் விளக்கேற்றி சிவனை மானசீகமாக வணங்கினர். சிவபெருமான் அவர்கள் ஐந்து பேருக்கும், தனித்தனி மூர்த்தியாக காட்சி தந்தார். அவர்கள் சிவபெருமானிடம், தங்களுக்கு அருளியதைப் போலவே இங்கிருந்து அனைவருக்கும் அருள் செய்ய வேண்டுமென வேண்டிக் கொண்டனர். சிவபெருமானும் ஐந்து மூர்த்திகளாக எழுந்தருளினார். தற்போதும் இக்கோவிலில் ஐந்து லிங்கங்கள் தனித்தனி சன்னதியில் இருக்கின்றது.
தர்மர் வழிபட்ட சிவன் நீலகண்டேஸ்வரர், அர்ஜுனன் வழிபட்ட சிவன் படிகரைநாதர், பீமனால் வழிபடப்பட்டவர் மகதீஸ்வரர், நகுலன் வழிபட்டவர் பரமேஸ்வரர், சகாதேவன் வழிபட்டவர் முத்துகிரீஸ்வரர் என்ற பெயர்களில் அருளுகின்றனர். இவர்களில் நீலகண்டேஸ்வரர், படிகரைநாதருக்கு அம்பிகை சன்னதி உண்டு. இவர்களில் நீலகண்டேஸ்வரர், படிகரைநாதருக்கு அம்பிகை சன்னதி உண்டு. படிகரைநாதர் சன்னதியிலேயே மங்களாம்பிகை தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். மற்றொரு அம்பிகையான அமிர்தகரவல்லி தனி சன்னதியில் எழுந்தருளி இருக்கிறாள். பீமன் வழிபட்ட சிவன், சோடச லிங்கமாக, 16 பட்டைகளுடன் இருக்கிறார். பதினாறு செல்வமும் பெற இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்
கால சர்ப்பங்கள் சாளரத்தில் எழுந்தருளி இருக்கும் அபூர்வ காட்சி
சகல நாக தோஷங்களுக்கான நிவர்த்தி தலம்
கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.
இக்கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள சாளரத்தில்,இரண்டு கால சர்ப்பங்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்தபடி காட்சி தருகின்றன. பொதுவாக சன்னதிகளில் அல்லது கோவில் மண்டபங்களில் காட்சி தரும் சர்ப்பங்கள், இங்கு சாளரத்தில் எழுந்தருளி இருப்பது ஒரு தனி சிறப்பாகும். இந்த சாளரத்தில் ஆதிசேஷன், வாசுகி, தட்சகன், கார்க்கோடகன், அனந்தன், குளிகன், சங்கபாலன், பத்மன் ஆகிய எட்டு நாகங்களும் சூட்சும ரூபத்தில் இருக்கின்றன. இந்த சாளரத்து நாகங்களை வழிபட்டால் சகல நாக தோஷங்களும் விலகும். இதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.
ஒரு சமயம் சிவபெருமானின் திருமேனியில் ஆபரணங்களாக உள்ள நாகங்களுக்கு, சிவபெருமானை வழிபடும் போது தங்களைத்தான் வழிபடுகிறார்கள் என்ற கர்வம் ஏற்பட்டது. இதனால் சிவபெருமானின் சாபத்தை பெற்றார்கள். நாகங்கள் சிவபெருமானிடம் சாப விமோசனம் வேண்டி நின்றபோது, சிவபெருமான் அவர்களை சிவராத்திரி அன்று, ஆலமர விழுதை நாராக எடுத்து, அகத்தி பூவை வைத்து மாலையாக தொடுத்து இத்தலத்தில் தன்னை வழிபட்டால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார். இந்த வழிபாட்டை அன்று தவறவிட்டால் சாப விமோசனம் கிடையாது என்றும் நிபந்தனை விதித்தார். அதனால் தான் இன்றும் இத்தலத்தில் ஆலமர விழுதுகள் தரையை தொடுவதில்லை, அகத்தி மரத்தில் பூக்கள் பூப்பதில்லை.
இக்கோவில் சாளரத்தில் சூட்சும ரூபத்தில் இருக்கும் அஷ்ட நாகங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இரண்டு தீபம் ஏற்றி , சுவாமி அம்பாளுக்கு அர்ச்சனை செய்து, அம்பாள் சன்னதியில் உளுந்து, கொள்ளு தானம் செய்து ஒன்பது வாரங்கள் வழிபட்டால் ராகு கேது தோஷம், கால சர்ப்ப தோஷம், அனைத்து நாக தோஷங்களும் விலகும்.
திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் கோவில்
சூரியனும் சந்திரனும் ஒருவரை ஒருவர் நேர் முகமாக பார்த்தபடி இருக்கும் அரிய காட்சி
மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் சுமார் 7 கி.மீ. தூரத்தில் உள்ள தேவாரத்தலம் திருநின்றியூர். இறைவன் திருநாமம் மகாலட்சுமிபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் உலகநாயகி, லோகநாயகி. மகாலட்சுமி இத்தலத்தில் சிவனை வழிபட்டு அருள் பெற்றாள். எனவே, இத்தலத்து இறைவன் மகாலட்சுமீஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றார். மகாலட்சுமி (திருமகள்) வழிபட்டதால் இவ்வூர் திருநின்றியூர் என்று பெயர் பெற்றது. இத்தலம் மூவர் தேவாரப் பாடலும் பெற்ற சிறப்புடையதாகும்.
பொதுவாக, அனைத்து சிவாலயங்களிலும், ஈசானிய(வடகிழக்கு) மூலையில் நவக்கிரகங்கள் மேற்கு திசை முகமாக அமைக்கப்பட்டிருக்கும். நவகிரகங்களின் நடுவில் சூரிய பகவான் கிழக்கு முகமாகவும்,, சூரியனுக்கு கிழக்கில் சுக்கிரன் கிழக்கு முகமாகவும், மேற்கில் சனி மேற்கு முகமாகவும், வடக்கில் குரு வடக்கு முகமாகவும், தெற்கில் செவ்வாய் தெற்கு முகமாகவும், வடகிழக்கில் புதன் வடக்கு முகமாகவும், தென் கிழக்கில் சந்திரன் மேற்கு முகமாகவும், வட மேற்கில் கேது தெற்கு முகமாகவும் தென் மேற்கில் ராகு தெற்கு முகமாகவும் இடம் பெற்றிருப்பார்கள். ஆனால் இக்கோவிலில் சூரியனும் சந்திரனும் ஒருவரை ஒருவர் நேர் முகமாக பார்த்தபடி எழுந்தருளி இருப்பது வேறு எந்த கோவிலிலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்.
மணலூர் ஏழுலோகநாயகி அம்மன் கோவில்
சப்தமாதர்களின் ஒன்று சேர்ந்த உருவமாக காட்சி தரும் அபூர்வ அம்மன்
விளைச்சலுக்கு அருள் வழங்கும் தலம்
கும்பகோணம் -மயிலாடுதுறை பாதையில் ஆடுதுறையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் (சூரியனார் கோவிலுக்கு அருகில்) உள்ளது மணலூர் ஏழுலோகநாயகி அம்மன் கோவில். பல நூற்றாண்டுகள் பழமையானது இக்கோவில். இப்பகுதி மக்களுக்கு காவல் தெய்வமாக ஏழுலோகநாயகி விளங்குகிறாள். ஊருக்கு வெளியில், வயல்வெளிகளுக்கு இடையே இந்த அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனின் சிலை ஒரு தாமரை குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.அம்மனின் விருப்பத்திற்கு இணங்க, உரல், உலக்கை ஒலி இல்லாத இடத்தில், அதாவது ஊருக்கு வெளியில் அம்மனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த அம்மனின் திருவுருவம் பிராம்மி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, மாஹேந்திரி, சாமுண்டா என்று அழைக்கப்படும் சப்தமாதர்களின் ஒன்று சேர்ந்த உருவமாகும். அதனால்தான் இந்த அம்மனுக்கு ஏழுலோகநாயகி என்ற திருநாமம் ஏற்பட்டது.
கருவறையில், ஏழுலோகநாயகி அம்மன் உயரமான திருமேனியுடன் வலது காலை மடித்தும், இடது காலை தொங்கவிட்டும் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். எட்டுத் திருக்கரங்களிலும் சூலம், வேதாளம், கத்தி, உடுக்கை, கபாலம், மணி, உலக்கை முதலிய ஆயுதங்களை ஏந்தி, தலையை சற்று சாய்த்து, கண்களில் கருணை பொங்க தோற்றம் அளிக்கின்றாள்.
இக்கோவில் விளைச்சலுக்கு அருள் வழங்கும் ஒரு சிறப்புமிக்க தலமாகப் போற்றப்படுகிறது.
பிரம்மதேசம் கைலாசநாதர் கோவில்
பித்ரு தோஷம் நீக்கும் கங்காள நாதர்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் என்ற ஊரிலிருந்து, 4 கி.மீ. தூரத்தில் உள்ள தலம் பிரம்மதேசம். இறைவன் திருநாமம் கைலாசநாதர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இந்த கோவிலின் புராண பெயர் 'அயனீச்சுவரம்'. ராஜ ராஜ சோழனால் இக்கோவில் கட்டப்பட்டு, பின்னர் விஜயநகர பேரரசர்களால் விரிவாகப்பட்டது. பிரம்மதேசம் கைலாசநாதர் கோவிலுக்கு சென்று வந்தால் காசிக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். நவ கைலாய தலங்களில், சூரியனுக்குரிய தலம் இது.
இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் கங்காள நாதர் பார்ப்பவரை பரவசமடையச் செய்யும், கலையம்சம் மிக்க மூர்த்தியாக விளங்குகின்றார். கங்காள நாதர், என்பது அறுபத்து மூன்று சிவ திருமேனிகளுள் ஒன்றாகும். இக்கோவிலில் கங்காள நாதர் ஏழடி உயரத் திருமேனியுடன், நீண்ட கைகளும் கால்களும் உடையவராய், பீடம் ஏதுமின்றி தேர்ந்த வேடுவனைப் போல் நிற்கிறார். இடது கையில் கங்காளம் எனப்படும் உடுக்கை போன்றதொரு வாத்தியம், வலது கையில் எலும்பைப் போன்றதொரு தண்டம். இடது கால் பூமியில் அழுந்தப் பதிந்திருக்க வலக்கால் சற்றே வளைந்து நடந்து செல்வதைப் போன்ற தோற்றம். மலரும் பிறையும், சர்ப்பமும் சூடிய ஜடா மகுடமும். பெருக்கிய காதுகளில் ஒரு காதில் மிகப்பெரிய குண்டலமும் அணிந்து இருக்கிறார். புன்னகையும், கருணையும், அருளும் ததும்பும் கண்களை உடைய திருமுகத்துடன் காட்சி அளிக்கிறார். நான்கு கரங்களில் பின்னிரு கரங்களில் ஒரு கையில் பாணமும், மறுகையில் முத்திரையும் தாங்கி இருக்கின்றார். அவரைச் சுற்றி இசைக்கருவிகளோடு அவரது முழங்கால் உயரத்திற்கு 5 பூத கணங்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். உச்சிக்கு மேலே சுவற்றில் புடைப்புச் சிற்பமாக இந்திராதி தேவர்கள், விஷ்ணு, ரிஷி புங்கவர்கள், கின்னரர், கிம்புருடர், குதிரை, யானை, அப்சரஸ்கள் காட்சி அளிக்கிறார்கள். இதில் சில அப்சரஸ்களின் உருவங்கள் சுதை சிற்பமாக செய்யப்பட்டு வஸ்திரமும் வர்ண கலாபமும் கொண்டு அழகு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த கங்காளநாதரை அமாவசையன்று காலை தரிசனம் செய்தால் பித்ரு தோஷம் முதல் அனைத்து வகை தோஷங்களும் நீங்கும்.
விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில்
அட்சய திருதியைக்கு உரிய தனிச்சிறப்புத் தலம்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் விளங்குளம் . இறைவன் திருநாமம் அட்சயபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் அபிவிருத்தி நாயகி.
கருவறையில் அட்சயபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இவர், சனி பகவானுக்கு அருளிய தினம் ஓர் அட்சய திருதியை நாள். எனவே இறைவன், அட்சயபுரீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார். அட்சயம் என்றால் வளர்வது என்று அர்த்தம். இத்தலத்திற்கு ஒருமுறை வந்து போனாலே பக்தர்களின் இல்லத்தில் செல்வம் உள்ளிட்ட பதினாறு பேறுகளும் தழைத்து வளரும் என்பது ஐதீகம்.
செல்வங்கள் அனைத்துக்கும் அதிபதியான குபேரன், ஈசனை வழிபட்டே சங்கநிதி, பதுமநிதிகளைப் பெற்றான் என்கிறது புராணம். அப்படி குபேரன் செல்வங்களைப் பெற்று அளகாபுரிக்கு அரசனானதும், அட்சயபுரீஸ்வரரின் அருளால்தான் என்பதால் இத்தலம் அட்சய திருதியைக்கு உரிய தனிச்சிறப்புத் தலமாகக் கூறப்படுகிறது.
அம்பிகை அபிவிருத்தி நாயகி, மேல் இரு கரங்களில் தண்டத்தையும், தாமரையையும் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் புன்னகை தவழ தென்திசை நோக்கி அருள்பாலிக்கின்றாள். அம்பிகையின் திருநாமமும், அபிவிருத்தி நாயகி என அமைந்திருப்பது, இத்தலத்தில் வழிபட்டால், மேலும் மேலும் செல்வங்கள் வளரும் என்பதையே உறுதிப்படுத்துகிறது. கணவருக்கு நிகராக, இவளும் நமக்கெல்லாம் அபிவிருத்தியைத் தந்தருளும் கருணைக் கடல் என்று பக்தர்கள் போற்றுகின்றனர்.
அட்சய திருதியை நாளில், மூலவர் சிவனாருக்கு சந்தனக் காப்பில் மாதுளை முத்துக்கள் பதித்து, சிறப்பு பூஜைகள் நடைபெறும். பிறகு, சனீஸ்வரருக்கு புனுகு கலந்த சந்தனக் காப்பு செய்வித்து, எள், அரிசி, கோதுமை, பாதாம்பருப்பு, குங்குமப்பூ மற்றும் நவதானியங்களைப் பதித்து அலங்கரிப்பார்கள்.
அட்சய திருதியை நாளிலும் வெள்ளி, ஞாயிறு, திங்கட்கிழமை முதலான நாட்களிலும் விளங்குளம் வந்து, சிவபார்வதியைத் தரிசித்தால், சகல செல்வங்களும் பெற்று இனிதே வாழலாம் என்பது ஐதீகம்.
புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அட்சயதிருதியை நாளில் நடந்த சில நிகழ்வுகள்
- வேத வியாசர், மகாபாரதத்தை விநாயகர் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நாள் அட்சய திருதியை.
- திருமாலின் பத்து அவதாரங்களில் ஒருவரான பரசுராமர் அவதரித்த நாள்
- நான்கு யுகங்களில் முதல் யுகமான கிருத யுகத்தில், பிரம்மன் உலகத்தைப் படைத்தது அட்சய திருதியை நாளில்தான்
- இரண்டாவது யுகமான கிரேதா யுகம் தோன்றிய நாளும் ஒரு அட்சய திருதியை அன்றுதான்
-காசியில் அன்னபூரணியிடம் அன்னம் பிச்சை பெற்று, சிவனின் தோஷம் நீங்கிய நாளும் அட்சய திருதியைதான்
- பகீரதனின் தவத்தால் கங்கை பூமிக்கு வந்ததும் ஒரு அட்சய திருதியை அன்றுதான்
- கிருஷ்ணன் தன் நண்பன் குசேலனிடமிருந்து அவல் மூட்டையை பெற்றுக் கொண்டு அவருடைய வறுமையை நீக்கிய நாள் அட்சய திருதியை.
- கிருஷ்ணன், துரியோதனன் சபையில் திரௌபதியின் மானத்தை காப்பாற்றியதும் ஒரு அட்சய திருதியை அன்றுதான்
ஆமப்பள்ளம் பழநியாண்டீஸ்வரர் கோவில்
பழநி ஆண்டவர் கையில் தண்டத்திற்கு பதிலாக வேல் ஏந்தி இருக்கும் அபூர்வ தோற்றம்
சீர்காழியில் இருந்து 10 கி.மீ. தொலைவில், திருமுல்லைவாயில் செல்லும் வழியில் அமைந்துள்ளது ஆமப்பள்ளம் பழநியாண்டீஸ்வரர் கோவில். பல நூற்றாண்டுகள் பழமையானது இக்கோவில். கருவறையில் முருகன் பழனி ஆண்டவர் கோலத்தில் நமக்கு தரிசனம் தருகிறார். இக்கோவிலில் முருகன் மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு சிறப்பாகும். மேலும் பழநி ஆண்டவர் கோலத்தில் இருக்கும் முருகனுக்கு கையில் தண்டத்துக்கு பதிலாக வேல் இருப்பது ஒரு தனி சிறப்பாகும்.
இத்தலத்தில் பழநி ஆண்டவர் கோலத்தில் முருகன் எழுந்தருளி இருப்பதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆமப்பள்ளத்தில் ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். பழநி முருகன் மேல் பக்தி கொண்டிருந்த அவர் அடிக்கடி பழநி செல்லும் வழக்கம் கொண்டிருந்தார். பழநி முருகன் நம் ஊரில் இருந்தால், நாம் நினைத்த நேரத்தில் அவரை தரிசித்து அருள் பெறலாமே என்ற எண்ணம் ஒரு நாள் அவர் மனதில் தோன்றியது. செல்வந்தரான அவர் பழநி சென்று தங்கி, முருகன் சிலை வடிக்கச் செய்தார். சிலை உருவானது. அசப்பில் பழநி முருகன் போலவே சிலை அமைந்தது கண்டு மகிழ்ந்த அந்த செல்வந்தர், சிலையை தன் ஊரான ஆமப்பள்ளம் கொண்டு வந்தார். தனது சொத்துக்களை விற்று முருகனுக்கு ஓர் அழகிய ஆலயம் கட்டி, அதில் பழநி ஆண்டவர் சிலையை பிரதிஷ்டை செய்தார். முருகன் அன்றிலிருந்து பழநியாண்டீஸ்வரர் என்ற திருநாமத்துடன் ஆமப்பள்ளத்தில் அருள்புரியலானார்.
முருகனை ஆண்டி கோலத்தில் தரிசிப்பது, பல நன்மைகளைத் தரும். ஆண்டி கோலத்தில் தரிசனம் செய்வதால், வாழ்க்கையில் உள்ள தடைகள் விலகி, நன்மைகள் உண்டாகும்.
குடும்பத்தில் மனத்துயரங்கள் தீர இங்குள்ள முருகனை வேண்டிக் கொள்கிறார்கள். இக்கோவிலில் திருமணம், வீடுகட்டுவதற்கான தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டியும் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். இத்தலத்தில் திருமண தடை நீங்க பெண்கள் 11 கார்திகை விரதமிருந்து முருக பெருமானை வழிபட்டு, சுமங்கலி பெண்களுக்கு வஸ்திரம் தானம் அளித்தால் உடனே திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.