
பங்குனி உத்திரத் திருவிழா
பங்குனி உத்திரத்தின் முக்கிய சிறப்புகள்
தமிழ் பஞ்சாங்கத்தின் 12-வது மாதமான பங்குனியும், 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் பங்குனி உத்திரம். ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நம் கோவில்களில் விழாக்கள் நடத்துவது வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள். இந்த நாளுக்குரிய முக்கிய சிறப்புகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பங்குனி உத்திர விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள். மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான். மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள்.
பர்வத ராஜன் தவத்தால் பத்மத்தில் அவதரித்த பார்வதியை சிவபெருமான் கரம் பிடித்த நாளும் பங்குனி உத்திரம்தான்.
சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான். அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான்.
ஸ்ரீரங்க மன்னார்- ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்த நாளும் இதுதான். இந்நாளில் வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாரும் திருமாலும் காட்சி தருவார்கள்.
முருகப் பெருமான், சிவபெருமானுக்கு பிரணவப் பொருளை உபதேசித்த நாள் பங்குனி உத்திரம். அன்று அடியார்கள் காவடி எடுத்து முருகனை வழிபடுகிறார்கள். முருகன் தெய்வானையை இந்த நாளில் தான் திருமணம் புரிந்து கொண்டார். அத்துடன் வள்ளியின் அவதார தினமும் இதுதான்.
தசரத மைந்தர்கள் ஸ்ரீராமன்- சீதை, லட்சுமணன்- ஊர்மிளா, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்- ஸ்ருதகீர்த்தி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சந்திரன் 27 நட்சத்திரங்களை மனைவிகளாக ஏற்றுக் கொண்ட தினமும் இதுதான்.
தனது தவத்தைக் கலைத்ததால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார் சிவபெருமான். இதனால் வருந்திய ரதிதேவி, மன்மதனை உயிர்ப்பித்துத் தருமாறு சிவபெருமானிடம் வேண்டினாள். அதனால் மனம் இரங்கிய ஈசன், அவள் கண்களுக்கு மட்டும் தெரியும்படி மன்மதனை உயிர்ப் பித்தார். இது நிகழ்ந்ததும் பங்குனி உத்திரத் திருநாளில்தான்.
பங்குனி உத்திர விரதம் மேற் கொண்டு அருகே உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டால் சகல பாவங்களும் தொலையும். 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருந்தவர்களின் மறு பிறவி தெய்வத் பிறவியாக அமையும். இந்த விரதத்தை கடை பிடித்துதான் தேவர்களின் தலைவனான இந்திரன் தனது மனைவியான இந்திராணியையும், படைத்தல் கடவுளான பிரம்மன் தனது மனைவியான சரஸ்வதியையும் பெற்றார்.
பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கு திருமணம் கைகூடும். காஞ்சியில் காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள். பங்குனி மாதம் திருமழப்பாடியில் நடைபெறும் நந்தி கல்யாணத்தை தரிசித்தால் மணமாகா தவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என் பது ஐதீகம்.
பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும். அன்று தண்ணீர்ப்பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்
பங்குனி உத்திரத் திருவிழா
அறுபத்து மூவர் திருவிழா
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவின் மிகச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி அறுபத்து மூவர் திருவிழாவாகும்.
சேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. இவர்கள். சிவபெருமானினமீது தீராத பக்தியும், சிவனுக்கும், சிவனடியார்களுக்கும் தொண்டு புரிவதே தங்கள் உயிர் மூச்சாக வாழ்ந்தவர்கள். இவர்களின் பெருமைகளை உலகம் உணர, சிவபெருமான் பல திருவிளையாடல்களை இவர்கள் வாழ்க்கையில் நிகழ்த்தினார். பல சோதனைகள் வந்தாலும் இவர்கள் சிவபக்தியில் இருந்தும், சிவத்தொண்டிலிருந்தும் வழுவாது இருந்து பேரும், புகழும், சிவன் அருளும் பெற்றார்கள்.
சிவபெருமானை வழிபடுவதால் கிடைக்கும் பலன், சிவப்பணி ஆற்றிய சிவனடியார்களை வழிபட்டாலும் கிடைக்கும்' என்று திருத்தொண்டர் தொகை இயற்றிய சுந்தரமூர்த்து சுவாமிகளும், பெரியபுராணம் இயற்றிய சேக்கிழாரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அத்தகைய அடியார்களைக் கொண்டாடி வணங்கும் திருவிழாவாகவே மயிலாப்பூர் கபாலீஸ்வர் கோவிலில் நடைபெறும் 'அறுபத்துமூவர் விழா' விளங்குகிறது.
மயிலாப்பூர் அறுபத்து மூவர் திருவிழாவின் தனிச் சிறப்பு
மயிலாப்பூர் அறுபத்துமூவர் விழா நடைபெறும் நாளில், சிவனடியாரின் மகத்துவம் உணர்த்தும் மற்றுமொரு வைபவமும் நடைபெறுகிறது. அதுதான் திருஞானசம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்தெழச் செய்த நிகழ்ச்சியாகும்.
சிவநேசர் என்னும் சிவபக்தர், தனது மகள் பூம்பாவையை திருஞானசம்பந்தருக்குத் திருமணம் செய்துவைக்க விரும்பினார். ஆனால். விதிவசமாக பூம்பாவை பாம்பு தீண்டி இறந்துவிட்டாள். அவளுடைய அஸ்தியை ஒரு குடத்தில் வைத்து, திருஞானசம்பந்தரின் வரவுக்காகக் காத்துக்கொண்டிருந்தார் சிவநேசர். திருஞானசம்பந்தர் மயிலைக்கு வந்திருப்பதைக் கேள்விப்பட்ட சிவநேசர், அஸ்தி குடத்தை எடுத்துக்கொண்டு வந்து திருஞானசம்பந்தரைப் பணிந்து வணங்கி, நடந்த சம்பவத்தைக் கூறினார்.
திருஞானசம்பந்தர் சிவபெருமானை வணங்கி,
மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலைக்
கட்டிட்டங்கொண்டான் கபாலீச்சரமமர்ந்தான்
ஒட்டிட்டபண்பினுருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்...’
என்ற பதிக்கத்தைப் பாடி இறந்துபோன பூம்பாவையை உயிர்த்தெழச் செய்கிறார்.
தன்னுடைய பக்தராக இருந்தாலும், சிவநேசரின் மகளைத் தாமே உயிர்ப்பிக்காமல், தம்மையே பாடிப் போற்றும் திருஞானசம்பந்தரின் அருளால் உயிர்த்தெழச் செய்து, சிவபெருமானும் தம் அடியார்களின் பெருமையை திருஞானசம்பந்தர் மூலம் இந்தத் தலத்தில் உலகத்தவர்க்கு உணர்த்தியருளினார் என்பதால்தான் மயிலையில் நடைபெறும் அறுபத்து மூவர் விழா தனிச் சிறப்பு கொண்டதாகப் போற்றப்படுகிறது.
அறுபத்தி மூவர் திருவிழா
பங்குனி பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாள், அறுபத்தி மூவர் திருவிழா நடைபெறுகிறது. வெள்ளி விமானத்தில் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், பிள்ளையார், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் இவர்களோடும் அறுபத்து மூன்று நாயன்மார்களோடும் காட்சியளித்து வீதி உலா வருவார். மயிலாப்பூர் காவல் தெய்வமான கோலவிழி அம்மன், முண்டகக்கன்னியம்மன், அங்காளபரமேஸ்வரி, வீரபத்திரர் ஆகியோரும் தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பல ஊர்களிலிருந்து இவ்விழாவிற்கு வருகை தருவார்கள்.
இவ்வீதிஉலாவின் போது பெண்கள் பலர் மாடவீதிகளில் பொங்கல் வைத்து இறைவனுக்கு படைப்பார்கள். நாள்பட்ட வியாதிகளும், தீராத நோய்களும் இதனால் குணமாகும் என்பது பக்தர்களின் ஐதீகம்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி தேர் திருவிழா
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவின் ஏழாம் நாள் காலை தேரோட்டம் நடைபெறும். முதலாவதாக சிறிய தேரில் விநாயகர் உலா வர, அதை தொடர்ந்து பெரிய தேரில் கபாலீஸ்வரர் பவனி வருவார். அவரைப் பின்தொடர்ந்து கற்பகாம்பாள், வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேரில் வருவார்கள்.
கபாலீஸ்வரர், கைகளில் வில்லும் அம்பும் ஏந்தி பார் வேட்டைக்குச் செல்லும் கோலத்தில், மேளதாளம், நாதஸ்வரம் முழங்க, பக்தர்கள் கூட்டத்தின் நடுவே நான்கு மாட வீதிகளிலும் தேரில் பவனி வருவார். கபாலீஸ்வரரின் தேரோட்டத்தை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, பல வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
சகட தோஷத்தை நீக்கும் தேரோட்டம்
ஒருவருடைய ஜனன ஜாதகத்தில், குருவுக்கு 6, 8, 12 மிடங்களில் சந்திரன் நின்றால் அது சகட யோகமாகும். இந்த யோகம் இருப்பவர்கள் சில நேரங்களில் உச்சத்திலும் சில நேரங்களில் துன்பப்பட்டுக்கொண்டும் இருப்பார்கள். தேர் அசைந்து சென்று ஓரிடத்தில் நிலைத்தன்மை பெற்றுவிடும். அதுபோல, திருக்கோவில்களின் தேரோட்டத்தை தரிசிப்பது, ஒருவரின் சகட தோஷத்தை போக்கி, ஏற்ற இறக்கங்களை நீக்கி, நிலையான வாழ்வை தந்துவிடும் என்பது நம்பிக்கை. கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம் பார்ப்பவர் அனைவரும், சகடதோஷம் நீங்கி நிலையான வாழ்வு பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழா - வெள்ளி ரிஷப வாகன காட்சி
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவின் ஐந்தாம் நாள் இரவு, இறைவன் வெள்ளி ரிஷப வாகனத்தில் மயிலாப்பூர் மாடவீதிகளில் பவனி வருவார். அவருடன் கற்பகாம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் தங்க மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் வலம் வருவார்கள். பஞ்சமூர்த்திகளும் மறு நாள் காலையில்தான் கோவிலுக்குத் திரும்புவார்கள்.
இந்த ஆண்டு வெள்ளி ரிஷப வாகன காட்சி, 7.4.2025, திங்கட்கிழமை இரவு 1.30 மணிக்கு தொடங்க உள்ளது.
வெள்ளி ரிஷப வாகன காட்சியை தரிசித்தால், திருஞானசம்மந்தருக்கு ஞானப்பால் ஊட்டியதுபோல் ஞானம் வேண்டி நிற்பவருக்கெல்லாம் ஞானப்பால் கிட்டிவிடும் என்பது நிச்சயம்.

மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில்
சீதையின் கையை பிடித்தபடி இருக்கும் ராமபிரானின் ஆபூர்வ தோற்றம்
ராம லட்சுமண சகோதரர்கள் வில்லும் அம்பும் ஏந்தி ஏரியை காத்த அதிசயம்
சென்னை-திருச்சி ஜி.எஸ்.டி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டிலிருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில். மகிழ மரங்கள் (வகுளம் என்றும் குறிப்பிட ப்படும்) அதிகம் இருந்த காரணத்தால் வகுளாரண்ய ஷேத்திரம் என்றும் அதற்கு பெயர் உண்டு. அந்தப் பகுதியை ஆட்சிபுரிந்த மதுராந்தக சோழன் நினைவாக அப்பகுதி மதுராந்தகம் என்றும், கல்வெட்டுக்களில் மதுராந்தக சதுர்வேதி மங்களம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இக்கோவில் கருவறையில் ராமபிரான் எட்டு அடி உயர திருமேனியுடன், சீதை மற்றும் அவரது சகோதரர் லட்சுமணனுடன் காட்சி தருகிறார். சீதையை மீட்க செல்லும் வழியில், ராமபிரான் விபண்டக மகரிஷி ஆசிரமத்தில் தங்கி, அவர் உபசரிப்பை ஏற்றுக்கொண்டு, அவரது வேண் டுதலுக்கேற்ப அயோத்தி திரும்பும் வழியில் சீதையுடன் திருமண கோலத்தில் இங்கு காட்சி தந்தார். பொதுவாக கோவில்களில் ராமபிரானுக்கு சீதை சற்று தள்ளி நிற்பது போலவே, சிலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இக்கோவிலில் ராமபிரான் சீதையின் கையை பிடித்தபடி இருக்கும் தோற்றமானது, வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும். விபண்டகருக்கு காட்சி தந்தபோது, சீதையின் மீதான அன்பினை வெளிப்படுத்தும் விதமாக ராமபிரான் இவ்வாறு காட்சி தந்ததார். தம்பதியர் ஒற்றுமையுடன் திகழ இவரைத் தரிசிக்கிறார்கள். இவர்களை வணங்கியபடி விபண்டக மகரிஷியும் மூலஸ்தானத்திற்குள்ளேயே இருக்கிறார். சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஜனகவல்லி தாயாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இந்த தாயார் சன்னதி திருப்பணியின் பின்னணியில் ஒரு சுவையான வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.
ஏரி காத்த ராமர்
சுமார் 230 ஆண்டுகளுக்கு முன்னர் லயோனல் பிளேஸ் என்ற ஆங்கிலேயர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தார். கோவிலுக்கு பின்புறம் ஒரு ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழைக்காலங்களில் தண்ணீர் நிறைந்து அடிக்கடி கரை உடைப்பு ஏற்படும். இதனால், வெள்ளம் ஊருக்குள் புகுந்து மக்கள் பாதிப்பிற்குள்ளாகினர். ஆங்கிலேய கலெக்டர் லயோனல் பிளேஸ் ஏரிக்கரையை பலமுறை முயற்சித்தும் பலனளிக்கவில்லை. ஒருசமயம் அவர் இக்கோவிலுக்கு வந்தபோது, அர்ச்சகர்கள் தாயார் சன்னதியை திருப்பணி செய்து தரும்படி கேட்டுக் கொண்டனர். அவர் 'உங்கள் தெய்வத்துக்கு சக்தியிருந்தால், இவ்வருடம் பெய்யும் மழையில் ஏரி உடைப்பெடுக்காமல் இருக்கட்டும். அப்படியிருந்தால், நான் தாயார் சன்னதி திருப்பணியை செய்து தருகிறேன்,'என்றார். மழைக்காலம் துவங்கவே வழக்கம்போல் ஏரி நிரம்பியது. எந்த நேரத்திலும் உடையலாம் என்ற நிலையில், ஏரியைப் பார்வையிட அவர் சென்றார். அப்போது, அங்கே இரண்டு இளைஞர்கள் கையிலிருந்த வில்லில் அம்பு பூட்டி ஏரிக்கரையில் காவலாக நின்றனர். அந்த அம்பில் இருந்து மின்னல் போல் ஒளி கிளம்பியது. அதன் பிறகு ஏரிக்கரை உடையவில்லை. மகிழ்ந்த கலெக்டர் லயோனல் பிளேஸ், ராம லட்சுமணரே இளைஞர்களாக வந்திருந்து ஏரிக்கரையை காத்து நின்றனர் என்று அறிந்தார். பின்பு, தாயார் சன்னதியைக் கட்டிக் கொடுத்தார். இச்சம்பவம் குறித்த கல்வெட்டு தாயார் சன்னதியில் உள்ளது. 'இந்த தர்மம் கும்பினி ஜாகிர் கலெக்டர் லியோனெல் ப்ளேஸ் துரை அவர்களது' என்ற வாசகத்தை இன்றும் நாம் அந்தக் கல்வெட்டில் பார்க்கலாம். ஏரி உடையாமல் காத்தருளியதால் சுவாமிக்கு, 'ஏரி காத்த ராமர்' என்ற பெயர் ஏற்பட்டது.
ராமநவமி பஞ்ச அலங்காரம்
ராமநவமி விழா இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படும். ராமநவமியன்று காலையில் கோடலி முடிச்சுடன் பஞ்ச கச்ச அலங்காரம், ஒரு வஸ்திரம் மட்டும் அணிவிக்கும் ஏகாந்த அலங்காரம், மதியம் திருவாபரண அலங்காரம், மாலையில் புஷ்பங்களுடன் வைரமுடி தரித்த அலங்காரம், இரவில் முத்துக் கொண்டை, திருவாபரணத்துடன் புஷ்ப அலங்காரம் என ஒரே நாளில் சுவாமிக்கு ஐந்து வித அலங்காரத்துடன் விசேஷ பூஜை நடக்கும்.

திருக்களாச்சேரி நாகநாதர் கோவில்
நாக தோஷம் நீக்கும் நாகநாதர்
ராகு கேது தோஷ நிவர்த்தி தலம்
மயிலாடுதுறையில் இருந்து பொறையார் செல்லும் பாதையில் 25 கி.மீ. தூரத்தில் (திருக்கடையூருக்குத் தென்மேற்கில் 6 கிமீ தொலைவில்) உள்ளது திருக்களாச்சேரி. இறைவன் திருநாமம் நாகநாதர். இறைவியின் திருநாமம் சிவகாம சுந்தரி. முன்னர் திருகுராசேரி என வழங்கப்பட்ட ஊர் தற்போது திருக்களாச்சேரி என அழைக்கப்படுகிறது.
ஒருமுறை சிவபெருமானும், பிரம்மனும் சொக்கட்டான் ஆடியபோது யார் வென்றது என பிரச்னை ஏற்ப்பட்டபோது பிரம்மன் சிரிக்கிறான். அதனால் சிவனின் கோபத்திற்கு ஆளான பிரம்மனை பாம்பாக மாற சபிக்கிறார் இறைவன். சிவபெருமானின் சாபத்தினால் திருக்குரா மர வடிவம் பெற்ற உமையம்மையும், நாகப்பாம்பு வடிவம் பெற்ற பிரமனும், சாபவிமோசனம் பெறுவதற்காக இத்தலத்திற்கு வந்தனர். இத்தலத்தில் நாகநாதரை வழிட்டுத் தவமிருந்து சாபவிமோசனம் பெற்றதாகத் தலவரலாறு கூறுகிறது. விஷ்ணு பிடாரனாகி பிரம்மனின் பேழை திறக்கப்பட்டு ஆடிய தலம் பேழைக்குடி. இங்கு நந்தியின் அருகில் பாம்பு பெட்டியும் பிடாரவடிவமும் உள்ளது. இங்கு உமையம்மை தங்கியிருந்து தவம் செய்யும் காலத்தில் இவ்வூரின் எட்டுத் திசைகளிலும் அஷ்ட பைரவர்கள் காவல் புரிந்ததற்கான சான்றுகள் உள்ளன.
மேலும் இத்தலத்தில் நாகநாதரான சிவலிங்கத்தைச் சுற்றிலும் பாம்புப் புற்றும் அப்புற்றில் உள்ள பாம்பு நாளும் சிவலிங்கத்தினை தரிசிப்பதாக கூறுகின்றனர். உமையம்மை திருக்குரா மர வடிவில் நாகநாதர் அருகே நின்று அவரை வழிபட்டு வருகிறாள்.
இங்கேயுள்ள ஸ்ரீநாகநாதரை ராகு காலம் மற்றும் அனைத்து வேளைகளிலும் வழிபட்டால், ராகு கேது தோஷம், நாக தோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழா - அதிகார நந்தி சேவை
'மயிலையே கயிலை' என்னும் பெருமையுடையது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில். இக்கோவிலில் நடைபெறும் பங்குனி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளன்று நடைபெறும் அதிகார நந்தி சேவை, ஐந்தாம் நாள் அன்று இரவு நடைபெறும் வெள்ளி ரிஷப வாகன காட்சி, ஏழாம் நாள் திருத்தேர், எட்டாம் நாள் நடைபெறும் அறுபத்து மூவர் திருவிழா, பத்தாம் நாள் இரவு நடைபெறும் திருக்கல்யாணம் ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
சென்னைக்கு பெருமை மயிலை என்றால், மயிலை கபாலீஸ்வரருக்குப் பெருமை அதிகார நந்தி சேவை. இந்த ஆண்டு அதிகார நந்தி சேவை 5.4.2025, சனிக்கிழமையன்று காலை 6.00 மணிக்கு தொடங்க உள்ளது.
ரிஷபத்தின் முகமும் (காளையின் முகம்) சிவனின் உருவமும் கொண்ட அதிகார நந்தி, ஞானத்தின் தலைவனாகக் கருதப்படுகிறார். சிவபெருமானின் வாகனமான நந்தி பகவான். வேதங்களின் முதல்வனாகப் போற்றப்படுகின்றார். 'நந்தி' என்ற சொல்லுக்கு 'மகிழ்ச்சி' என்று பொருள். நான்கு மறைகளையும் ஈசன், நந்தி தேவருக்குத்தான் முதலில் கூறியதாக புராணங்கள் கூறுகின்றன. அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக இருப்பதால், அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.
வெள்ளியாலான அதிகார நந்தி வாகனம்
இக்கோவில் அதிகார நந்தி வாகனம் 108 ஆண்டுகள் பழமையானது. அதற்கு முன்னால் மரத்தாலான அதிகார நந்தி வாகனம்தான். பயன்பாட்டில் இருந்தது. இப்போதைய நந்தி வாகனத்தை வழங்கியவர், வந்தவாசி அருகே இருக்கும் தண்டரை கிராமத்தைச் சேர்ந்த த.செ .குமாரசாமி என்பவர். இவரின் குடும்பம், ஆயுர்வேத சித்த மருத்துவத்தை பாரம்பரியமாக, பல தலைமுறைகளாக செய்து வந்தனர். வெள்ளியாலான இந்த அதிகார நந்தி வாகனம் உருவாக்கும் பணி, 1912ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1917 ல் நிறைவு பெற்றது. அப்போதைய மதிப்பில் 48 ஆயிரம் ரூபாய் செலவில் உருவான இந்த அதிகார நந்தி வாகனத்தின் தற்போதைய மதிப்பு, மூன்று கோடி ரூபாய் ஆகும்.

நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோவில்
ஏழு அடி உயர திருமேனி உடைய அபூர்வ மகாலட்சுமி
மகாலட்சுமியின் அருகில் இரண்டு ஐராவதங்களும்,சங்க நிதியும், பதும நிதியும் இருக்கும் அரிய காட்சி
நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தேவார தலம் காயாரோகணேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் நீலாயதாக்ஷி அம்மன். நீலாயதாக்ஷி அம்மன், இத்தலத்தின் அரசியாக இருந்து பரிபாலனம் செய்வதால், அவருக்கே இங்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அதனால் இங்கு வீதிகளின் பெயர்கள் கூட நீலா வடக்கு வீதி, நீலா தெற்கு மடவிளாகம் என்று இருக்கின்றது. இதுபோல அம்மனின் பெயர் தாங்கிய வீதிகள் வேறு எந்த தலத்திலும் இல்லை.
இக்கோவிலில் இறைவன் சன்னதியின் வாயு மூலையில் எழுந்தருளி இருக்கும் மகாலட்சுமி பல தனிச்சிறப்புகளை கொண்டவர். இத்தலத்து மகாலட்சுமியானவள் கருங்கல்லால் ஆன ஏழு அடி உயர திருமேனி உடையவள். இவ்வளவு பெரிய திருமேனி உடைய மகாலட்சுமியை வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது. பொதுவாக சிவாலயங்களில் மகாலட்சுமி இரு கால்களையும் மடக்கி அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில், தனது இரு கால்களையும் தொங்கவிட்ட நிலையில், அர்தத ஆசன கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது ஒரு தனிச்சிறப்பு ஆகும். மேலும் மகாலட்சுமி தனித்தோ அல்லது இரு யானைகள் உடனிருக்க கஜலட்சுமி கோலத்தில் காட்சி தருவாள். ஆனால் இத்தலத்தில் மகாலட்சுமியின் அருகில் இரண்டு ஐராவதங்களும் (நான்கு தந்தங்கள் உடைய தேவலோகத்து வெள்ளை யானை), சங்க நிதியும் பதும நிதியும் (இந்த இரு தெய்வ மகளிரிடமும் தான் குபேரன் தன் செல்வங்களைக் கொடுத்து வைத்துள்ளான்) உடன் இருப்பது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்.

திருமானூர் கைலாசநாதர் கோவில்
நாக தோஷத்தை நிவர்த்தி செய்யும் தட்சிணாமூர்த்தி
முயலகன் கையில் பாம்பு இருக்கும் அரிய காட்சி
தஞ்சாவூரில் இருந்து 19 கி.மீ. தொலைவில், கொள்ளிடம் ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது திருமானூர் கைலாசநாதர் கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். 900 வருடங்கள் பழமையானது இத்தலம். இத்தலத்தில் ஒரே நேரத்தில் இறைவனையும், இறைவியையும் தரிசிக்கக் கூடிய வகையில் சன்னதிகள் அமைந்துள்ளது தனி சிறப்பாகும்.
இக்கோவிலின் வெளிப்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி எழுந்தருளி உள்ளார். தட்சிணாமூர்த்தி வலது கையில் சின்முத்திரை ஜெபமாலை, இடது கையில் ஓலைச்சுவடி, உடுக்கை, அக்னி பிழம்பு ஆகியவற்றை ஏந்தி காலடியில் முயலகன் மீது கால் பதித்துள்ளார். பொதுவாக முயலகன் கையில் கத்தியும், கேடயமும் தான் இருக்கும். ஆனால் இக்கோவிலில், முயலகன் கையில் பாம்பு இருக்கின்றது. இப்படி தட்சிணாமூர்த்தி காலடியில் இருக்கும் தட்சிணாமூர்த்தி கோலத்தை நாம் எங்கும் தரிசிக்க முடியாது. எனவே இங்குள்ள தட்சிணாமூர்த்தி நாக தோஷத்தை நிவர்த்தி செய்யும் மூர்த்தியாக விளங்குகிறார். இந்த தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை தீபம் ஏற்றி வழிபட்டால் நாக தோஷம் நீங்கும்.

மேலச்செவல் நவநீத கிருஷ்ணன் கோவில்
சாளக்கிராமத்திலான அபூர்வ நவநீத கிருஷ்ணன்
குழந்தை பாக்கியம் அருளும் ரோகிணி நட்சத்திர வழிபாடு
திருநெல்வேலியிலிருந்து 26 கிமீ தொலைவில், அம்பாசமுத்திரம் தாலுகாவில் அமைந்துள்ளது மேலச்செவல் நவநீத கிருஷ்ணன் கோவில். 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில். கருவறையில் மூலவர் நவநீத கிருஷ்ணன், சாளக்கிராமத்திலான திருமேனி உடையவர். அவர் குழந்தை வடிவில், இரண்டு கைகளிலும் வெண்ணை உருண்டை வைத்துக்கொண்டு நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
இந்தக் கோவில் உருவானதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது. முன்னொரு காலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர், அசதி காரணமாக வெயிலிலேயே படுத்து உறங்க தொடங்கி விட்டார்.அப்பொழுது ஒரு பாம்பு அங்கு வந்து, அவரது தலைக்கு மேலே தனது படத்தை எடுத்து அவருக்கு நிழல் அளித்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு சிறுவன், அவரைப் பார்த்து பிற்காலத்தில் நீங்கள் அரச பதவியை அடைவீர்கள் என்றும், அப்படிப்பட்ட நிலையை அடைந்தால், அவர் எதிர்காலத்தை கணித்த தனக்கு வெகுமதி அளிக்க வேண்டும் என்றும் கூறினான். பின்னர் படிப்பறிவில்லாத மாடு மேய்ப்பவருக்கு திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் வேலை கிடைத்து, மிகக் கடின உழைப்பால் விரைவில் அமைச்சராக உயர்ந்தார். தன் எதிர்காலத்தை கணித்த சிறுவனைத் தேடியும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அவர் இங்கு வந்து, மேலசெவல் என்ற இடத்தில் நவநீத கிருஷ்ணர் கோவிலைக் கட்டினார்.
இந்த நவநீத கிருஷ்ணரை ரோகிணி நட்சத்திர நாளில், பால் பாயசம் படைத்து வழிபட்டால், குழந்தை இல்லாத தம்பதியருக்கு, சந்தான பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோவிலில்,மாதந்தோறும் ரோகிணி நட்சத்திரத்தன்று காலையில் மூலவருக்கு விசேஷ அலங்காரங்கள் செய்து உற்சவரை டோலோத்சவம் நடத்தி நாமசங்கீர்த்தனம் செய்து குழந்தை பாக்கியம் பெறுவதற்கு தம்பதிகளின் நட்சத்திரம் கோத்ரம் பெயரில் விசேஷ அர்ச்சனைகள் செய்கிறார்கள். இந்த பூஜையில் கலந்து கொண்டு, ஏராளமான வெளியூர் தம்பதிகள் சந்தான பாக்கியம் அடைந்து இருக்கிறார்கள்.
திருமணம் தடை அகல, புத்திர பாக்கியம் கிடைக்க, மாங்கல்ய தோஷம் நீங்க, நெஞ்சக நோய் தீர, எதிரிகளை வெற்றிபெற, அதிகாரப் பதவி கிடைக்க இங்கு வந்து வழிபடுகிறார்கள்.

சென்னிமலை சுப்ரமணியசுவாமி கோவில்
செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்யும் சென்னிமலை முருகன்
வள்ளி-தெய்வானை தேவியர் இருவரும், ஒரே கல்லில் பிரபையுடன் வீற்றிருக்கும் தனிச் சிறப்பு
ஈரோட்டில் இருந்து 27 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள திருப்புகழ் தலம் சென்னிமலை. மலைக்கு மேலே செல்ல, 1320 படிக்கட்டுகளும், 4 கி.மீ. நீளம் உள்ள தார் சாலையும் உள்ளது. 3000 ஆண்டுகள் பழமையானது இக்கோவில். கந்தசஷ்டி கவசம் பாடல் அரங்கேறிய திருத்தலம் இது.
இங்கு முருகன் அக்னி மூர்த்தியாக (இரண்டு தலைகளைக் கொண்ட முருகப்பெருமான்) காட்சியளிக்கிறார். முருகப்பெருமான் செவ்வாய் அம்சமாகவே அருள்பாலிப்பதால், இத்தலம், செவ்வாய் பரிகார தலமாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உடையவர்கள், இத்தலத்தில் முருகனுக்கு நெய்தீபம் ஏற்றி, வழிபட்டால், செவ்வாய் தோஷத்துக்கான காரணிகள் நீங்கி, நல்ல வாழ்க்கையை அடைவார்கள். சூரசம்ஹாரத்தின் போது குரு பரிகார தலமான திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டால், குரு தோஷம் நிவர்த்தி பெறும். அது போல கந்தசஷ்டியின் போது சென்னிமலை முருகனை வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும்.
இத்தலத்தில் மூலவரே செவ்வாய் அம்சமாக விளங்குவதால், அவரைச் சுற்றி நவக்கிரகங்களின் மற்ற எட்டு கிரகங்களும் அமைந்து அருள்பாலிக்கிறார்கள். இங்கு மூலவர் சென்னிமலை ஆண்டவரை வலம் வந்து வணங்கினாலே, நவக்கிரகங்களையும் வழிபட்ட பலன் உண்டு. இங்கு முருகப்பெருமானுக்கு பால், தயிர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தயிர், புளிப்பதில்லை என்பது இந்த ஆலயத்தின் அதிசய நிகழ்வாகும்.
இங்கு வள்ளி-தெய்வானை தேவியர் இருவரும், ஒரே கல்லில் பிரபையுடன் வீற்றிருக்கும் தனிச் சந்நிதி வேறு எங்கும் காண முடியாத சிறப்பாகும்.

மரண தண்டனையை மாற்றிய முருகன் பாடல்
நம் நாட்டு விடுதலைக்காக போராடிய இஸ்லாமியரின் உயிரை காத்த முருகன் பாடல்
சுமார் 100 ஆண்டுகளுக்கு முந்திய காலகட்டத்தில் திரைப்படம் நம் நாட்டில் வெகுவாக வேரூன்றவில்லை. நாடகங்களும் இசைக் கச்சேரியும் தான் மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது. இசைப் பாடகர்களையும், நாடக நடிகர்களையும் மேடையில் நேரில் பார்க்க மக்கள் ஆர்வம் கொண்டிருந்தனர். நாடகங்களில் ஆர்மோனியம் வாசிப்பவர்கள் மேடையின் ஓரத்தில், திரை மறைவில் வாசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் இந்த நிலையை மாற்றி, மக்கள் எதிரில் ஆர்மோனியத்தை வாசித்த முதல் இசைக் கலைஞர் காதர் பாட்ஷா. திருச்சி உறையூர் பகுதியில் பிறந்தவர். மக்கள் மத்தியில் பிரபலமான ஆர்மோனியக் கலைஞர்.புகழ் பெற்ற நாடக நடிகர், நடிகைகளுக்கு இணையாக மக்களால் ரசிக்கப்பட்டவர் ஆர்மோனியம் காதர் பாட்ஷா. ஒலிபெருக்கி இல்லாத காலத்திலேயே ஐந்தரை கட்டையில் இவர் பாடும் பாட்டும், ஆர்மோனிய இசையும் அரங்கத்தின் கடைசி வரிசையில் இருப்பவருக்கும் தெளிவாகக் கேட்கும். அப்போது புகழ்பெற்றிருந்த இசைக்குழுக்கள் எல்லாம் காதர் பாட்ஷாவின் ஆர்மோனியத்துக்காக காத்திருந்தன. அவர் இடம் பெற்றால் 'சக்கரவர்த்தி காதர் பாட்ஷாவின் ஆர்மோனிய இசையுடன்...' என்று விளம்பரம் செய்வார்கள். அதற்காகவே கூட்டம் கூடும். இவருக்கு ஆர்மோனிய சக்கரவர்த்தி என்ற பட்டப் பெயரும் உண்டு.
காதர் பாட்ஷா தனது கச்சேரிகளில் தேசபக்தி பாடல்களும், இந்து இஸ்லாமிய ஒற்றுமை குறித்த பாடல்களும், இஸ்லாமிய பாடல்களும், இந்து கடவுள்கள் பற்றிய பாடல்களையும் பாடுவார். தடை செய்யப்பட்ட தேசபக்தி பாடல்களை இவர் பாடியதால் ஆங்கிலேய அரசு இவரை கைது செய்தது. விடுதலை செய்யப்பட்ட பிறகும், அவர் சுதந்திரப் போராட்டத்திற்காக தொடர்ந்து தேசபக்தி பாடல்களை பாடி வந்தார்.
இதனால் கோபம் அடைந்த ஆங்கிலேய அரசு, காதர் பாட்ஷாவின் மீது பொய்யான ஒரு கொலை வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தது. வழக்கின் முடிவில் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவரை தூக்கில் போடுவதற்கான நாள் வந்தது. அவரை தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்ல சிறை வார்டன், தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ஊழியர், சிறை டாக்டர் ஆகிய மூன்று ஆங்கிலேயர்கள் அவரிடம் வந்தனர். அவரை தூக்கில் போடும் முன் அவரது கடைசி ஆசை என்ன என்று சிறை அதிகாரிகள் கேட்க, அவர் தன் ஆர்மோனியத்தை இசைத்து, ஒரு பக்தி பாடல் பாட விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார். சிறை அதிகாரிகள் அதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அவருக்கு ஆர்மோனியம் பெட்டி தருவிக்கப்பட்டு, கொடுக்கப்பட்டது.
காதர் பாட்ஷா தனது கம்பீர குரலில் கானம்,தாளம்,பல்லவி,சரணம் ஸ்ருதிநயம் பிசகாமல் கீழ்க்கண்ட முருகன் பாடலை பாடினார்.
சுருளி மலை மீதில் மேவும் சீலா – உனைத்
தோத்திரத்தேன் சுப்ரமண்ய வேலா – பசுந்
தோகைமயில் மீதில் ஏறி
வாருடனே காத்தருளும் ஐயா – முருகைய்யா
அவர் பாட ஆரம்பித்ததும், அந்த மூன்று ஆங்கிலேயர்களும் மெய்மறந்து கேட்டிருக்கிறார்கள். காதர் பாட்ஷா அந்தப் பாடலை பாடி முடிக்க முக்கால் மணி நேரம் ஆனது. இதனால் தூக்குக் தண்டனை நிறைவேற்றும் நேரத்தை, ஆங்கிலேய அதிகாரிகள் தவற விட்டனர். தூக்கு தண்டனை நிறைவேற்ற குறிக்கப்பட்ட நேரம் தவறினால், ஒருவரை தூக்கில் போட முடியாது, மீண்டும் நீதிபதியிடம் முன் நிறுத்தி புதிய தேதியை பெற வேண்டும் என்பது சிறை விதி.
காதர் பாட்ஷாவை அதிகாரிகள் மீண்டும் நீதிபதியிடம் முன் நிறுத்தி, அவரை மீண்டும் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை உத்தரவிடுமாறு வேண்டினர். அந்த நீதிபதியும் ஒரு ஆங்கிலேயர். முந்தைய உத்தரவின்படி தூக்கிலிடுவது கால தாமதத்திற்கான காரணத்தை நீதிபதி வினவினார். மூன்று ஆங்கிலேய அதிகாரிகளும் நடந்ததை அவரிடம் விவரித்தனர். ஆங்கிலேயரான அந்த நீதிபதி தானும் அப்பாடலை கேட்க விரும்புவதாக கூறி, காதர் பாட்ஷாவிடம் ஒரு ஆர்மோனிய பெட்டியை கொடுக்குமாறு உத்தர விட்டார்.
காதர் பாட்ஷா மீண்டும் சிறையில் பாடிய அந்த முருகன் பாடலை, நீதிபதி முன் பாடினார். பாடலைக் கேட்ட ஆங்கிலேய நீதிபதியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவர் தனது உத்தரவில், மீண்டும் காதர் பாட்ஷாவை தூக்கிலிடுவதை ரத்து செய்து அவரை விடுதலை செய்து உத்தர விட்டார். அவர் தனது உத்தரவில், இப்படி உள்ளத்தை உருக்கும் பாடலை பாடும் ஒருவர் நிச்சயம் கொலை செய்யும் அளவிற்கு கொடூர மனம் படைத்தவராக இருக்க மாட்டார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில்
யானை, சிங்கம், ஆடு, மான், முதலை முதலிய மிருகங்களின் உருவக் கலவையை கொண்ட வினோத விலங்கு சிற்பம்
கும்பகோணத்திற்கு மேற்கே 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் வேதநாயகி.
உலகெங்கும் அமைந்துள்ள கலைப் பொக்கிஷங்களைத் தேர்ந்தெடுத்துப் பாதுகாத்துவரும் UNESCO நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட கோவில் இது. இக்கோவிலில் நிரம்பி வழியும் சிற்பங்களும், அவற்றின் பேரழகும், நுணுக்கங்களுமே, இக்கோவிலை சிற்பிகளின் கனவு என்று போற்றப்பட வைக்கின்றது. இந்த தலம் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது. அடிக்கு 1000 சிற்பங்கள் என்ற புகழ் மொழியையும் கொண்ட கோவில் இது.
கோயிலின் மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். காட்டில் அலைந்து திரியும் வேடனான அவர் அணிந்திருக்கும் காலணியின் தோற்றம், காட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு செய்த வடிவமைப்பைக் கொண்டிருப்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
கோவில் தூண்களில் யானை, குதிரை, யாளி போன்ற விலங்குகளின் உருவங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், ஐராவதேசுவரர் சன்னதியின் முன்புறம் அமைந்துள்ள மண்டபத்தின் தூண்களில், ஒரு வினோத மிருகம் அந்த மண்டபத்தையே தாங்கிக் கொண்டுள்ளது போன்ற அமைப்பில் காணப்படுகின்றது. அந்த மிருகம், யானையின் தந்தம், தும்பிக்கை, சிங்கத்தின் தலை, பற்களுடன் கூடிய முக அமைப்பு, செம்மறி ஆட்டின் கொம்பு, மாடு அல்லது மான் இவற்றின் காது, முதலையின் கால் அவற்றின் நக அமைப்பு என நிறைய மிருகங்கள் ஒன்று சேர்ந்து அமைந்த வினோத உருவமாக, இந்தச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இத்தகைய, பல மிருகங்களின் உருவக் கலவையை கொண்ட வினோத விலங்கின் சிற்பத்தை வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாது.
இக்கோவிலின் சிற்பக்கலை சிறப்பிற்காகவே, நாம் அனைவரும் அவசியம் சென்று தரிசிக்க வேண்டிய தலம் இது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
கையில் அன்ன உருண்டை வைத்திருக்கும் அன்னப் பெருமாள்
சுக்கிர தோஷத்தை நிவர்த்திக்கும் தானிய லட்சுமி
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திவ்ய தேசம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இக்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் அன்னப் பெருமாள் எழுந்தருளி இருக்கிறார். இவர் கைகளில் கலசம், தண்டம், அன்ன உருண்டை வைத்திருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள உணவு பஞ்சமில்லாத நிலை ஏற்படும்.
அன்னப்பெருமாள் கோவில் பிரகாரத்தில் தானிய லட்சுமிக்கு சன்னதி இருக்கிறது. தானிய லட்சுமிக்கு வலப்புறம் கிருஷ்ணர், இடதுபுறம் நரசிம்மர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. சுக்கிர கிரகத்தால் பாதிக்கப்படும் ஜாதகதாரர்கள் இவளுக்கு வெண் பட்டு, வெள்ளை மலர் அணிவித்து, வெண் மொச்சை தானியம் படைத்து வழிபடுகிறார்கள். ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவங்களின் போது, ஏழாம் திருநாளன்று நம்பெருமாள் வருஷத்துக்கு ஏழு தடவை ஸ்ரீதேவி - பூதேவி துணைவர தானிய லட்சுமி சன்னதி அருகில் எழுந்தருளி நெல் அளக்கும் வைபவம் காண்கிறார்.

தேனூர் நந்திகேஸ்வரர் கோவில்
அம்பிகையின் பின்புறம் அமைந்த மிகப் பெரிய ஸ்ரீ சக்கரம்
வயிற்று நோய்களுக்கு அருமருந்தாகும் அம்பிகையின் அபிஷேக சந்தனம்
திருச்சிராப்பள்ளி - துறையூர் நெடுஞ்சாலையில்,திருச்சிராப்பள்ளியில் இருந்து 34 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தேனூர். இறைவன் திருநாமம் நந்திகேஸ்வரர். இறைவியின் திருநாமம் மகா சம்பத் கௌரி. திருஞானசம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் போற்றப்பட்ட தேவார வைப்பு தலம்.தேவலோக பசுவான காமதேனு, பூலோகம் வந்து இத்தல இறைவனிடம் விமோசனம் கேட்டு வழிபாடு செய்தது. தினமும் தன்னுடைய பாலை சொரிந்து வழிபட்டதால் இத்தலம் காமதேனூர் என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி தேனூர் என்றானது.
நந்திதேவர் தவமியற்றிய தலம் இது.தன்னை வழிபடும் அடியாரின் பெயரையே தனக்குச் சூட்டிக்கொண்டு, தன் பக்தரைக் கவுரவிக்கும் குணம் கொண்டவர் சிவபெருமான். அந்த வகையில் தன்னை வழிபட்டுப் பேறுபெற்ற நந்தியின் நினைவைப் போற்றும் விதமாக, இத்தல ஈசன் நந்திகேஸ்வரர் என்ற திருப்பெயரோடு அருள் வழங்குகின்றார்.
இத்தலத்து அம்பிகை மகா சம்பத் கௌரி நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.மேல் இரு கரங்களில் மலர்களைத் தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரையோடும் காணப்படுகிறாள். எழிலார்ந்த அம்பிகையின் திருமுகம் தரிசிப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தும். அம்பிகையின் பின்புறம் மிகப் பெரிய ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது. இப்படி மிகப்பெரிய ஸ்ரீ சக்கரம் பின்புறம் அமைந்த அம்பிகையை வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது.
தீராத வயிற்று வலி, குடல் நோய், சூலை நோய் உள்ளவர்களுக்கு இத்தலத்து அம்பிகையின் அபிஷேக சந்தனம் அருமருந்தாக விளங்குகின்றது.நோயுற்றவர்கள் அம்பிகைக்கு அபிஷேகம் செய்த சந்தனத்தை பயன்படுத்தினால், அவர்களின் நோய் பூரணகுணமாகும் என்பது ஐதீகம். இந்தப் பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகவும் இது இருக்கின்றது.

திருப்பரங்குன்றம் சத்யகிரீஸ்வரர் கோவில்
பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டியபடி இருக்கும் அபூர்வ அமைப்பு
சிவனுக்கு நேரே மகாவிஷ்ணு இருக்கும் அபூர்வ காட்சி
நந்தி, மூஞ்சூறு, மயில் ஆகிய மூன்று வாகனங்கள் அருகருகே இருக்கும் அரிய காட்சி
மதுரைக்கு தென்மேற்கில் 8 கி.மீ.தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருப்பரங்குன்றம் சத்யகிரீஸ்வரர் கோவில். இது ஒரு குகைக்கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. சுப்ரமணியசுவாமி சந்நிதி, துர்க்கையம்மன் சந்நிதி, கற்பக விநாயர் சந்நிதி, சத்தியகிரீஸ்வரர் சந்நிதி, பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதி ஆகிய ஐந்து சந்நிதிகள் இங்கு உள்ளன.
பொதுவாக சிவன் கோவில்களில், விநாயகர், முருகன், துர்க்கை, பெருமாள் ஆகியோர் பிரகார தெய்வங்களாகவே இருப்பர். ஆனால், திருப்பரங்குன்றத்தில் சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டியே அருளுகின்றனர். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம்.
துர்க்கையம்மன் காலுக்கு கீழே மகிஷாசுரனுடன் நின்றகோலத்தில் இருக்கிறாள். இவளுக்கு இடப்புறத்தில் கற்பக விநாயகர் கையில் கரும்பு ஏந்திக்கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்து வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவரைச் சுற்றி பல ரிஷிகள் வணங்கியபடி இருக்கின்றனர். துர்க்கைக்கு வலது புறம் தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் சுப்பிரமணியர் வடக்கு நோக்கி இருக்கிறார். இவருக்கு அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர்.சத்யகிரீஸ்வரர் கிழக்கு பார்த்து தனிக்கருவறையில் இருக்கிறார். இவருக்கு நேரே மகாவிஷ்ணு, பவளக்கனிவாய் பெருமாளாக மகாலட்சுமியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அருகில் மதங்க மகரிஷியும் இருக்கிறார். பொதுவாக சிவனுக்கு நேரே நந்தி இருக்கவேண்டிய இடத்தில் மகாவிஷ்ணு இருக்கிறார். இது அபூர்வமான அமைப்பாகும். எனவே இக்கோயிலை 'மால்விடை கோயில்' (மால் - திருமால், விடை - நந்தி) என்கின்றனர். பெருமாள் தன் மைத்துனராகிய சிவபெருமானுக்கு சேவை செய்வதற்காக நந்தியின் இடத்தில் இருக்கிறார். மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணத்தின்போது, இவரே பார்வதியை தாரை வார்த்துக் கொடுக்கச் செல்கிறார்.
சிவன் கோவில்களில் நந்தி, விநாயகர் சன்னதியில் மூஞ்சூறு, முருகன் சன்னதியில் மயில் என அந்தந்த சுவாமிகளுக்குரிய வாகனங்கள்தான் சுவாமி எதிரில் இருக்கும். ஆனால் இத்தலத்தில் சிவபெருமான், விநாயகர், முருகன் ஆகிய மூவருக்குமான வாகனங்கள் கொடிமரத்திற்கு அருகில் அமைந்திருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். ஒரு பீடத்தின் நடுவில் நந்தியும், வலதுபுறத்தில் மூஞ்சூறும், இடப்புறம் மயில் வாகனமும் இருக்கிறது. இம்மூன்று வாகனங்களும் தெற்கு நோக்கி இருப்பது மேலும் ஒரு சிறப்பாகும்.

இலஞ்சி குமாரர் கோவில்
முருகனுக்கு செலுத்தப்படும் வித்தியாசமான காணிக்கை
மாதுளை முத்துக்களால் ஆன வேல் மற்றும் சேவல் கொடியை செலுத்தும் பக்தர்கள்
தென்காசியிலிருந்து 5 கி.மீ. தொலைவில், இலஞ்சி என்னும் ஊரில் அமைந்துள்ளது இலஞ்சி குமாரர் கோவில். இலஞ்சி என்ற சொல்லுக்கு மகிழம் என்ற பொருள் உண்டு.இத்தலத்து மூலவர் சிவபெருமானின் திருநாமம் இருவாலுக ஈசர். அகத்திய முனிவரால் வெண் மணலில் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் இவர். தேவநாகரியில் வெண்மணல், 'இருவாலுகம்' என்று அழைக்கப்படுவதால் இத்தலத்துச்சிவனுக்கு இருவாலுக ஈசர் என்ற பெயர் ஏற்பட்டது. இறைவியின் திருநாமம் இருவாலுக ஈசர்க்கினியாள்.
இத்தலத்து முருகப்பெருமான், திருவிலஞ்சிக்குமாரர் மிகவும் பிரசித்தி பெற்றவர். இவருக்கு இருவாலுக நாயகர் என்ற பெயரும் உண்டு. இத்தலத்தில் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தானே மும்மூர்த்திகளாகவும் இருந்து செயல்படுவதை உணர்த்தியவர். வேண்டும் வரத்தை அளிப்பதால் வரதராஜப்பெருமான் என்றும் அழைக்கப்படுகிறார். கபிலர், துர்வாசர், காசிபர்,ஆகியோர் 'உண்மையான பரம்பொருள் யார்?' என்று கேட்க 'நானே பரம்பொருள்' என்று சொல்லித் தனக்குத் தானே வரதராஜப்பெருமான் எனும் தொல்பெயர் சூட்டிக் கொண்டார். வரதன் என்றால் வரம் தரும் வள்ளல். வேண்டுவோர்க்கு வேண்டியது கொடுக்கும் வள்ளலாக இத்தலத்துக் குமரன் உள்ளார்.
இக்கோவிலில் பிரார்த்தனை வைக்கும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை சற்று வித்தியாசமாக நிறைவேற்றுகிறார்கள். முருகப் பெருமானை பிரார்த்திக்கும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதும், மாதுளை முத்துக்களால் ஆன வேல் மற்றும் சேவல் கொடியைக் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

தஞ்சாவூர் கலியுக வெங்கடேசப்பெருமாள் கோவில்
நித்திய சொர்க்கவாசல் கொண்ட பெருமாள் கோவில்
வருடம் முழுவதும் சொர்க்கவாசல் திறந்திருக்கும் ஒரே பெருமாள் கோவில்
தஞ்சாவூரில் தெற்கு வீதியில் அமைந்துள்ளது கலியுக வெங்கடேசப்பெருமாள் கோவில். கருவறைக்குள் மூலவர் கலியுக வேங்கடேச பெருமாள், நின்ற கோலத்தில் மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் தாங்கி, கீழிரு கரங்களில் அபய, வரத முத்திரை காட்டி ஸ்ரீதேவி பூதேவி சகிதமாக காட்சி தருகிறார்.
பொதுவாக பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசி அன்று ஒரு நாள் மட்டுமே சொர்க்கவாசல் திறந்திருக்கும். பெருமாள் கோவில்களில் எல்லாம், வடக்கு வாசல் என்பதுதான் வைகுண்ட ஏகாதசியன்று, சொர்க்கவாசல் என்ற பெயரில் திறக்கப்படும். மேலும் மூலவர் சன்னிதிக்கு நேராகத்தான் ராஜகோபுரமும் நுழைவு வாசலும் இருக்கும். ஆனால், இந்தக் கோவிலில் வடக்கு நோக்கி இருக்கும் மூன்று நிலை ராஜகோபுரம் ஒன்றுதான் ஒரே நுழைவு வாயில் ஆகும். இக்காரணத்தால், இக்கோவிலில் நித்திய சொர்க்கவாசல் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் வடதிசை ராஜகோபுரம் கொண்ட ஒரே பெருமாள் கோவில் இதுவாகும். வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் வழியாக செல்ல இயலாத பக்தர்கள் ஆண்டு முழுவதும், தினமும் நித்திய சொர்க்கவாசல் வழியாக உள்ளே சென்று பெருமாளை தரிசனம் செய்து அதே சொர்க்கவாசல் வழியாக வெளியே வரலாம் . எனவே, இந்தத் தலம் நித்திய சொர்க்கவாசல் கொண்ட பெருமாள் கோவில் என்ற பெயரைப் பெற்றுள்ளது. இக்கோவிலில் நித்திய சொர்க்கவாசல் அமைந்ததன் பின்னணியில், ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் கனவில் தோன்றிய திருப்பதி வேங்கடேச பெருமாள், தஞ்சையில் தனக்கு வடக்கு நோக்கியபடி நித்திய சொர்க்கவாசல் போல நுழைவு வாசல் வைத்து ஒரு கோயில் கட்டு என பணித்தார். இந்தத் தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கலியுக வேங்கடேச பெருமாளாக எழுந்தருளி காட்சி தருவேன். இத்தலத்தில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளிலும் ,திருவோணம் நட்சத்திரம் மற்றும் வைகுண்ட ஏகாதசி அன்றும் நித்திய சொர்க்கவாசல் வழியாக வந்து என்னை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் வழியாக சென்ற பலனையும், வைகுண்ட பதவியும் தந்தருள்வேன் என்று கூறி மறைந்தார்.
இக்கோவிலை 12 முறை சுற்றி வந்து நல்லெண்ணெய் தீபம் இட்டு வழிபட்டால் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கணவன் மனைவி ஒற்றுமை, தொழில் விருத்தி ஆகிய பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

காஞ்சிபுரம் ஐராவதேசர் கோவில்
ஐராவதம் என்னும் வெள்ளையானை வழிபட்டு தலைமை பதவி பெற்ற தலம்
சோடச தாராலிங்கம் அமைந்த கோவில்
காஞ்சிபுரம் ராஜா தெருவில், கச்சபேஸ்வரர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது ஐராவதேசர் கோவில். காஞ்சி புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 108 சிவன் கோவில்களில் ஒன்றாக இந்த கோவில் கருதப்படுகிறது.
தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்த காலத்தில், அக்கடலில் தோன்றியதுதான் நான்கு தந்தங்களையுடைய ஐராவதம் என்னும் வெள்ளையானை. இத்தலத்தில் ஐராவதம் என்னும் அந்த வெள்ளையானை, சிவலிங்கம் நிறுவி ஐராவதேசர் என்னும் அப்பெருமானைப் பூஜை செய்து வழிபட்டு, யானைகட்குத் தலைமையாகவும், இந்திரனைத் தாங்குதற்குகான வாகனம் என்னும் நிலைமையையும் பெற்றது.
சிவலிங்கத்தில் உள்ள பாணப்பகுதியில் பட்டைகள் அமைந்துள்ள சிவலிங்கம் 'தாராலிங்கம்' என்று கூறப்படுகின்றது. தாராலிங்கங்கள் ஐந்து வகைப்படும். அவை 4, 8, 16, 32, 64 என்ற விகிதத்தில் பட்டைகள் அதாவது தாரைகள் அமைந்திருக்கும். இத்தலத்து மூலவர் பாணப்பகுதியில் 16 பட்டைகள் காணப்படுகின்றன. 16 பட்டைகள் கொண்ட லிங்கம் 'சோடச தாராலிங்கம்' என்று அழைக்கப்படுகின்றது.

சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்
சனி பகவான் தன் மனைவி நீலாதேவியுடன் ராகுவின் சன்னதியில் இருக்கும் அபூர்வ காட்சி
சீர்காழியில், சிரபுரம் பகுதியில் அமைந்துள்ளது நாகேஸ்வரமுடையார் கோவில். இறைவியின் திருநாமம் பொன்நாகவள்ளி. இத்தலத்து இறைவனை வழிபட்டு ராகு பகவான் கிரக பதவி அடைந்தார்.இத்தலத்தில் ராகு பகவானுக்கும், கேது பகவானுக்கும் தனித்தனி சன்னதிகள் இருப்பது, ஒரு தனி சிறப்பாகும்.
சனிபகவான், ராகுவின் நண்பர் என்பதால், இக்கோவிலில் சனி பகவான் தன் மனைவி நீலாதேவியுடன் ராகுவின் சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார். இப்படி சனி பகவான் தன் மனைவியுடனும், ராகுவுடனும் இருப்பது, வேறு எந்த தலத்திலும் காணக் கிடைக்காத அபூர்வ காட்சி ஆகும்.
இக்கோவில் சிறந்த ராகு, கேது பரிகார தலமாகும். ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரமான மாலை 4.30 மணியளவில் இக்கோவிலில் உள்ள விநாயகர், சுவாமி அம்பாள் ஆகியோரை வணங்கியபின், ராகுபகவானின் சன்னதியில் மாக்கோலமிட்டு தோல் நீக்காத முழு உளுந்து பரப்பி, அதன்மீது நெய்தீபம் ஏற்றி, அறுகம்புல் மற்றும் மந்தாரை மலர்களால் பூஜிக்க வேண்டும். அதோடு ராகுபகவானின் சன்னதியை வலமிருந்து இடமாக (அப்பிரதட்சணம்) ஒன்பது முறையும் அடிபிரதட்சணம் செய்து பதினொரு வாரங்கள் வழிபடவேண்டும். இதனால் ஜனனகால ஜாதகத்தில் ராகுபகவான் பாதகமான இடத்தில் அமைந்ததால் ஏற்படக்கூடிய திருமணத்தடை, களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் முதலிய தோஷங்கள் நீங்கி, நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.