திருமானூர் கைலாசநாதர் கோவில்
நாக தோஷத்தை நிவர்த்தி செய்யும் தட்சிணாமூர்த்தி
முயலகன் கையில் பாம்பு இருக்கும் அரிய காட்சி
அரியலூரில் இருந்து சுமார் 26 கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து 19 கி.மீ தொலைவிலும், கொள்ளிடம் ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது திருமானூர் கைலாசநாதர் கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். இவ்வூரின் பழமையான பெயர் திரைமூர்.
900 வருடங்கள் பழமையானது இக்கோவில். சோழர் காலத்தில், ராஜராஜ சோழனின் பாட்டியும், உத்தம சோழனின் தாயாருமான செம்பியன் மாதேவி மகாராணியால் கட்டப்பட்டது. இத்தலத்தில் ஒரே நேரத்தில் இறைவனையும், இறைவியையும் தரிசிக்கக் கூடிய வகையில் சன்னதிகள் அமைந்துள்ளது தனி சிறப்பாகும்.
இக்கோவில் மூலலிங்கம் நவபாஷாணத்தால் ஆன லிங்கம் ஆகும். அதனால் மூலமூர்த்தியின் அபிஷேக தீர்த்தத்தை பருகினால் அனைத்து நோய்களும் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இக்கோவிலின் வெளிப்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி எழுந்தருளி உள்ளார். தட்சிணாமூர்த்தி வலது கையில் சின்முத்திரை ஜெபமாலை, இடது கையில் ஓலைச்சுவடி, உடுக்கை, அக்னி பிழம்பு ஆகியவற்றை ஏந்தி காலடியில் முயலகன் மீது கால் பதித்துள்ளார்.
முயலகன் கையில் பாம்பு இருக்கும் அரிய காட்சி
பொதுவாக முயலகன் கையில் கத்தியும், கேடயமும் தான் இருக்கும். ஆனால் இக்கோவிலில், முயலகன் கையில் பாம்பு இருக்கின்றது. இப்படி தட்சிணாமூர்த்தி காலடியில் இருக்கும் தட்சிணாமூர்த்தி கோலத்தை நாம் எங்கும் தரிசிக்க முடியாது.
நாக தோஷத்தை நிவர்த்தி செய்யும் தட்சிணாமூர்த்தி
எனவே இங்குள்ள தட்சிணாமூர்த்தி நாக தோஷத்தை நிவர்த்தி செய்யும் மூர்த்தியாக விளங்குகிறார். இந்த தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை தீபம் ஏற்றி வழிபட்டால் நாக தோஷம் நீங்கும்.
இங்கு பிரதோஷ வழிபாடு மிகவும் சிறப்பாக நிகழ்த்தப்படும். பிரதோஷ நாளில் பக்தர்கள் அதிக அளவில் இந்த கோவிலுக்கு வருகை தருகிறார்கள்.
கையில் பாம்புடன் முயலகன்