இலஞ்சி குமாரர் கோவில்

அகத்திய முனிவரால் வெண் மணலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்

முருகனுக்கு செலுத்தப்படும் வித்தியாசமான காணிக்கை

மாதுளை முத்துக்களால் ஆன வேல் மற்றும் சேவல் கொடியை  செலுத்தும்  பக்தர்கள்

 தென்காசியிலிருந்து 5 கி.மீ. தொலைவில்,  இலஞ்சி என்னும் ஊரில் அமைந்துள்ளது இலஞ்சி குமாரர் கோவில். இலஞ்சி என்ற சொல்லுக்கு மகிழம் என்ற பொருள் உண்டு.

இத்தலத்து மூலவர் சிவபெருமானின் திருநாமம் இருவாலுக ஈசர். அகத்திய முனிவரால் வெண் மணலில் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் இவர். தேவநாகரியில் வெண்மணல், 'இருவாலுகம்' என்று அழைக்கப்படுவதால் இத்தலத்துச்சிவனுக்கு இருவாலுக ஈசர் என்ற பெயர் ஏற்பட்டது. இறைவியின் திருநாமம்  இருவாலுக ஈசர்க்கினியாள்.

இத்தலத்து முருகப்பெருமான், அகத்திய முனிவருக்கு ஞான உபதேசம் அருளினார். குற்றால வைணவ தலத்தை சிவஸ்தலமாக மாற்றிய பெருமையுடையவர் அகத்தியர்.

இமயமலையில் அம்மை அப்பரின் திருமணத்தைக் காண அனைத்துப் பகுதியில் உள்ளவர்களும் வடதிசையில் வந்து குவிந்ததால், வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்ததது. அதைச் சரி செய்ய சிவபெருமான் அகத்திய மாமுனிவரை தென்திசை செல்ல பணிந்தார்.

இறைவனின் கட்டளையை சிரமேற்கொண்டு தென் திசை புறப்பட்ட அகத்தியர் பொதிகை மலையின் குற்றாலத்திற்கு வந்தார். அப்போது குற்றாலத்தில் உள்ள திருக்கோயில் வைணவத் திருக்கோயிலாக இருந்ததால் வைணவர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.

எனவே அவர் சித்ரா நதி தீர்த்ததிற்கு வந்து வெண்மணலால் சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்தார். தேவநாகரியில் வெண்மணல், இருவாலுகம்என்று அழைக்கப்படுவதால் இத்தலத்துச் சிவனுக்கு இருவாலுக ஈசர் என்ற பெயர் ஏற்பட்டது.

வந்த வேலை முடிய வேண்டுமே என எண்ணிய அகத்தியர் முருகப்பெருமானை வேண்டினார். முருகப்பெருமானும் அகத்தியர் முன்னே தோன்றி வைணவ வேடத்திலேயே குற்றாலம் செல்.அங்கு சென்று அங்குள்ள திருமாலைக் குறுக்கி குற்றாலநாதராக்குக எனப் பணித்தார். அகத்தியரும் அவ்வாறே செய்து தான் வந்த நோக்கத்தை நிறைவேற்றினார்.

இத்தலத்து முருகப்பெருமான், திருவிலஞ்சிக்குமாரர்  மிகவும் பிரசித்தி பெற்றவர். இவருக்கு இருவாலுக நாயகர் என்ற பெயரும் உண்டு. இத்தலத்தில் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தானே மும்மூர்த்திகளாகவும் இருந்து செயல்படுவதை உணர்த்தியவர்.

வேண்டும் வரத்தை அளிப்பதால் வரதராஜப்பெருமான் என்றும் அழைக்கப்படுகிறார். கபிலர், துர்வாசர், காசிபர்,ஆகியோர் 'உண்மையான பரம்பொருள் யார்?' என்று கேட்க 'நானே பரம்பொருள்' என்று சொல்லித் தனக்குத் தானே வரதராஜப்பெருமான் எனும் தொல்பெயர் சூட்டிக் கொண்டார். வரதன் என்றால் வரம் தரும் வள்ளல். வேண்டுவோர்க்கு வேண்டியது கொடுக்கும் வள்ளலாக இத்தலத்துக் குமரன் உள்ளார்.

முருகனுக்கு செலுத்தப்படும் வித்தியாசமான காணிக்கை

மாதுளை முத்துக்களால் ஆன வேல் மற்றும் சேவல் கொடியை  செலுத்தும்  பக்தர்கள்

 இக்கோவிலில் பிரார்த்தனை வைக்கும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை சற்று வித்தியாசமாக நிறைவேற்றுகிறார்கள். முருகப் பெருமானை பிரார்த்திக்கும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதும், மாதுளை முத்துக்களால் ஆன வேல் மற்றும் சேவல் கொடியைக் காணிக்கையாக செலுத்துகின்றனர். 

 
Previous
Previous

திருப்பரங்குன்றம் சத்யகிரீஸ்வரர் கோவில்

Next
Next

தஞ்சாவூர் கலியுக வெங்கடேசப்பெருமாள் கோவில்