
திருலோக்கி ஸ்ரீக்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் கோவில்
பெருமாளுக்கு வித்தியாசமாக வில்வத்தால் அர்ச்சனை செய்யப்படும் தலம்
கும்பகோணம் - அணைக்கரை வழியில் திருப்பனந்தாள் அருகில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருலோக்கி ஸ்ரீக்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் கோவில். தாயார் திருநாமம் ஷீரநாயகித்தாயார்,ரங்கநாயகித்தாயார். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கோவில் தல விருட்சம் வில்வம். அதனால் இத்தலத்தில் வித்தியாசமாக பெருமாளுக்கு,சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
மூலவர் ஸ்ரீக்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள், திருப்பாற்கடலில் (க்ஷீராப்தி என்றால் சமஸ்கிருதத்தில் பால் என்று பொருள்) எழுந்தருளியுள்ள கோலத்தில், காட்சி அளிக்கிறார். அவர் சயன கோலத்தில் தெற்கு நோக்கியும், வடக்கு நோக்கிய பாதங்களுடன் மற்றும் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். – ஆதிசேஷன். ஸ்ரீதேவி மற்றும் பூதேவி முறையே அவரது தலை மற்றும் பாதங்களில் அமர்ந்துள்ளனர், மேலும் பிரம்மா அவரது தொப்புளிலிருந்து வெளிப்படுவதைக் காணலாம். அவரது திருமேனி மணல், புனுகு, ஜவ்வாது, சாம்பிராணி மற்றும் பல மூலிகைப் பொருட்களால் செய்யப்பட்ட உருவமாகும். அதனால் அவருக்கு திருமஞ்சனம் செய்யப்படுவதில்லை, தைல காப்பு (சிறப்பு எண்ணெய்) மட்டுமே பூசப்படும்.
தம்பதிகளுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் கோவில்
ஒருமுறை, விஷ்ணு பகவான் தனது பக்தர்களுக்காக, மகாலட்சுமியைத் தனியாக விட்டுவிட்டு, சிறிது நேரம் பூலோகத்திற்கு வந்தார். விஷ்ணு இல்லாமல் மகாலட்சுமி ஒரு நொடி கூட தனியாக இருக்க முடியாது. எந்த நேரத்திலும் தனிமையில் விடப்படாததற்காக, அவள் வருத்தமடைந்து இந்த இடத்தில் தவம் செய்தாள். இந்த தலத்து தீர்த்தத்தில் மகாலட்சுமி நீராடி, வில்வ மரத்தடியில் தவம் செய்து இறைவனின் மார்பில் நிரந்தரமாக வசிக்கும் வரம் பெற்றாள்.
தம்பதிகளுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்த, இக்கோவில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.திருமணமான தம்பதிகளுக்கு இடையே ஏதேனும் தவறான புரிதல்கள் (அல்லது) அவர்களுக்கு இடையே ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க பக்தர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். எனவே, திருமணமான தம்பதியினருக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலோ அல்லது பிரிந்திருந்தாலோ, தாயாரை இங்கு வழிபடுவதன் மூலம் பிரச்சனைகள் நீங்கும்.

திருலோக்கி சுந்தரேசுவரர் கோயில்
குரு பகவானுக்கு 'குருபலம்' வழங்கிய உமாமகேஸ்வரர்
கும்பகோணம் - அணைக்கரை வழியில் திருப்பனந்தாள் அருகில் 5 கி.மீ. தொலைவில் திருலோக்கி அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் சுந்தரேசுவரர். இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி.
இத்தலத்தில்தான் குரு பகவான் உமாமகேஸ்வரரை பூஜித்து மக்களுக்கு குருபலம் அருளும் வரம் பெற்றார்.
நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவானுக்கு பொன்னன் என்ற பெயரும் உண்டு. பொன்னுக்கு ஏமம் என்ற ஒரு பெயரும் உண்டு. இத்தலத்தில் குரு, ஈசனை வழிபட்டு அருள் பெற்றதால் ஏமநல்லூர் என்ற பெயர் முற்காலத்தில் இந்த தலத்திற்கு இருந்தது. குரு பகவான் இத்தலத்தில் இறைவன் சுந்தரேசுவரரை உள்ளன்போடு பூஜை செய்து வந்தார். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் ரிஷப வாகனத்தில் உமாதேவியோடு அவருக்கு காட்சி தந்து,.'இந்த தலத்துக்கு வந்து உனது பார்வை பெறும் எல்லோரும் எல்லாவிதமான தோஷங்களும் விலகி 'குரு பலம்' பெற்று அவர்களது இனிய இல்லறம் சிறக்க ஆசிர்வதிக்கிறேன்; என்று அருளினார். இப்படி குரு பகவான் 'குருபலம்' பெற்ற நாள் சித்திரை மாதம் அவிட்ட நட்சத்திரம் (குருவின் பிறந்த நட்சத்திரம்) ஆகும். இந்த கோலத்தை தரிசித்த குரு பகவான் தனது வழக்கமான அபய முத்திரை விடுத்து, இங்கே மட்டும் அஞ்சலி முத்திரையில் கும்பிட்ட பெருமானாகக் காட்சியளிக்கிறார்.
ரிஷப வாகன உமாமகேஸ்வரரின் அற்புத எழில் கோலம்
இக்கோவில் மகா மண்டபத்தில், ரிஷப வாகன உமாமகேஸ்வரரை நாம் தரிசிக்கலாம். அதி அற்புதமான அழகு உடைய இந்த வடிவம் பார்ப்பவரை பரவசமடையச் செய்யும். ரிஷப வாகனத்தில் அம்பிகையை ஆலிங்கனம் செய்தபடி ஈசன் காட்சியளிக்கும் அழகே அலாதியானது. இடபத்தின் (காளையின்) முதுகின் மேலுள்ள அம்பாரியில் அமைந்திருக்கும் ஆசனத்தின் மீது ஒரு காலை மடித்தும், ஒரு காலை தொங்கவிட்ட நிலையிலும் சடா மகுட தாரியாக ஒளிவட்டத்துடன் சிவபெருமான் அமர்ந்துள்ளார். அவரது வலப் பின்கரத்தில் திரிசூலம் உள்ளது. வலது முன்கரத்தால் அபயம் காட்டுகின்றார். இடக்கரங்களால் அருகே அமர்ந்துள்ள தேவியை அணைத்துள்ளார். அணிகலன்களும், உத்ரபந்தமும், புரிநூலும் தரித்துள்ள சிவபெருமானின் உடல் சற்றே வளைந்த நிலையில் தேவியைத் தாங்குகின்றது
சிவபெருமானுக்கு மேலே அழகிய மகர தோரணம் காணப் பெறுகின்றது. மகர தோரணத்திற்கு மேலே ஆணும் பெண்ணும் என எட்டு கந்தர்வர்கள் வீணை, உடுக்கை, மத்தளம், குழல், சிறுபறை, கைத்தாளம் போன்ற இசைக் கருவிகளை இசைத்தவாறு, மிதந்த வண்ணம் திகழ்கின்றனர்.
உமாதேவி தன் இடக்காலைக் குத்திட்டவாறு, வலக்காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்துள்ளார். இடக்கரத்தில் மலர் ஒன்றினை ஏந்தியுள்ளார். நீண்ட கீழாடையுடன், ஒரு புறம் சரிந்த கொண்டையுடன் தன்னை அணைத்தவாறு அமர்ந்துள்ள சிவபெருமானின் முதுகினைத் தன் வலக்கரத்தால் பற்றியுள்ளார். பெருமானும், அம்மையும் அமர்ந்திருக்கும் மகர தோரணத்தோடு அமைந்துள்ள அம்பாரியின் பின்புறம் ஒரு சிவலிங்கம் புடைப்பு சிற்பமாக அமைந்துள்ளது.
சிவபெருமான் உமாதேவி அமர்ந்திருக்கும் அம்பாரியானது, படுத்த நிலையில் உள்ள ஒரு காளையின் திமிலோடு இணைந்து ஒரே சிற்பமாக உள்ளது. காளை சிறிய கொம்புகள், விரிந்த காதுகள் ஆகியவற்றுடன் தோல் மடிப்புகளுடன் உள்ளது. பெரிய உருண்டை கோர்க்கப் பெற்ற கழுத்து கயிறு, சங்கிலி மாலை, மணிச்சக்கரங்கள் கோர்க்கப் பெற்ற பெரிய மாலை காளையின் கழுத்தை அணி செய்கின்றன. உமாமகேஸ்வரரின் அதி லாவண்ய ரூபத்தை தரிசிக்கவாவது, நாம் ஒரு முறை திருலோக்கி செல்ல வேண்டும்.
மன்மதன் மீண்டும் உயிர் பெற்ற தலம்
திருக்குறுக்கை தலத்தில், சிவனின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதனை, அவனது மனைவி ரதிதேவியின் வேண்டுதலின் பேரில் சிவன் உயிர்ப்பித்து அளித்த சிறப்புக்குரிய தலம் இதுவாகும். ரதி - மன்மதன் இருவரும் உமாமகேச்வரருக்கு எதிரில், ஐந்தடி உயரத்தில், அவர்களின் இருபுறமும் இரண்டு மங்கையர். உடனிருக்க காட்சி தருகிறார்கள். இந்த தெய்வீக காதலர்களின் சிலாரூபம் மிகுந்த நேர்த்தியும், கலைநயமும் உடையது ஆகும். இச்சிலையும் பார்ப்பவரின் மனதைக் கொள்ளை கொள்ளும்,
இல்லறம் அமைய, இனிக்க அருளும் தலம்
வரன் அமையாத இளைஞர்கள், இளம் பெண்கள், பிரிந்து போன தம்பதிகள், திருமணமாகியும் மணவாழ்க்கையில் பிரச்னையுள்ளவர்கள், விதி வசத்தால் முதல் திருமண வாழ்க்கை சரிவர அமையாதவர்கள் எல்லோரும் இங்கு வந்து உமாமகேச்வரப் பெருமானையும், குருபகவானையும் தரிசித்து பலன் பெறுகிறார்கள்.
தனுசு ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய குரு பரிகாரத் தலம் இது.

கிடாத்தலைமேடு துர்காபுரீஸ்வரர் கோவில்
மன்மதனுக்கு கரும்பு வில்லையும், புஷ்ப பானங்களையும் மீண்டும் வழங்கிய காமுகாம்பாள்
கணவன் மனைவி ஒற்றுமைக்கு வேண்டிக் கொள்ளும் தலம்
மயிலாடுதுறையிலிருந்து சுமார் 16. கி.மீ. தொலைவிலும், திருமணஞ்சேரியில் இருந்து 3.கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது, கிடாத்தலைமேடு துர்காபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் காமுகாம்பாள். ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது இக்கோவில்.
ஒரு சமயம் கயிலாயத்தில் தவத்திலிருந்த சிவபெருமானின் கவனத்தை பார்வதி தேவியின் பக்கம் திருப்புவதற்காக, சிவபெருமான் மீது காமதேவனாகிய மன்மதன் மலர்க்கணையை ஏவினான். இதனால் தவம் கலைந்து கோபமுற்ற சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணால் மன்மதனை அங்கேயே எரித்து சாம்பலாக்கினார். தனது கணவனுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்து வருந்திய ரதி தேவி, பொன்னூர் என்னும் இடத்தில் ஒரு தவச்சாலை அமைத்து தவமிருந்தார். பிறகு சிவபெருமான் திருமணக் கோலத்தில் அருளும் திருமணஞ்சேரிக்கு வந்து அவரை தரிசித்த ரதி தேவி தனது கணவனை உயிர்ப்பிக்க வேண்டி சிவபெருமானிடம் மன்றாடினாள்.
ரதி தேவியின் பக்திக்கு இரங்கிய சிவபெருமான், மன்மதனை உயிர்ப்பிக்கிறார். சிவனால் உயிர்ப்பிக்கப்பட்ட மன்மதன் இந்த துர்காபுரீஸ்வரர் தலத்தில் உறையும் ஈசனை கண்டு வணங்கி, பார்வதி தேவியையும் வழிபடுகிறான். மன்மதனின் பக்தியைக் கண்டு மனம் இரங்கிய பார்வதி தேவி, அவனுக்குக் தன் கையில் இருந்த கரும்பு வில்லையும், புஷ்ப பானங்களையும் மீண்டும் வழங்குகிறார். காமனாகிய மன்மதனுக்கு அருள்பாலித்ததால் இந்தத் தலத்தில் அம்பாளுக்கு ஸ்ரீ காமுகாம்பாள் என்னும் திருநாமம் ஏற்பட்டது. எல்லோருடைய காமமான துன்பத்தை போக்குவதாலும் இந்தப் பெயர் ஏற்பட்டது. மேலும், ரதிதேவிக்கு மாங்கல்ய பாக்கியத்தை அளித்தவள் இந்த ஸ்ரீகாமுகாம்பாள் அம்பிகை.
மன்மதனுக்கு அருள்பாலித்த தலமாதலால் இது கணவன் மனைவி ஒற்றுமைக்கு வேண்டிக் கொள்ளும் தலமாகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

காட்டுசெல்லூர் வேம்பிஅம்மன் கோவில்
துர்க்கையின் இடது கையில் கிளி ஏறிச் செல்லும் அபூர்வ தோற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது காட்டுசெல்லூர் எனும் கிராமம். இங்கே கோவில் கொண்டிருப்பவள் வேம்பிஅம்மன்.
இந்தக் கோவிலில் சுமார் 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த, பல்லவர் காலத்தைச் சார்ந்த துர்க்கையின் சிற்பம் விசேடமானது. சுமார் நாலரை அடி உயரம்; இரண்டரை அடி அகலத்துடனும் நின்ற கோலத்தில் நிறுவப்பட்டிருக்கும் துர்க்கை சிற்பம் நான்கு திருக்கரங்களுடன் திகழ்கிறது. மேலிரு கரங்களில் பிரயோகச் சக்கரமும் சங்கும், கீழ் வலக்கரத்தில் ஞான முத்திரை திகழ கீழ் இடக் கரத்தை இடுப்பில் வைத்தும் தரிசனம் தருகிறாள். சில சிவாலயங்களில் துர்கை தன் இடது கையில் கிளி வைத்திருப்பாள். ஆனால் இக்கோவிலில், துர்க்கையின் இடது கையில், கிளி ஒன்று ஏறிச் செல்வது போல் இருப்பது தனிச்சிறப்பு. இத்தகைய துர்கையின் தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.
இந்தக் கோவிலில் , விஜயதசமி நாளில் அம்பு போடும் திருவிழா வெகு பிரசித்தம்.

பழனிமலை தண்டாயுதபாணி கோவில்
பழனி மலைக்கு அன்னக்காவடி எடுத்த சென்னைக் கவிஞர்
45 நாட்கள் சாதத்தை சூடாக வைத்திருந்த முருகனின் அருட் கருணை
பழனிமலை தெய்வம் தண்டாயுதபாணிக்கு பிரார்த்தனை செய்து கொண்டு, தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் பக்தர்கள் காவடி எடுப்பது வழக்கம். முருகப் பெருமானுக்கு தைப்பூசத் திருநாளில், மற்ற விசேஷ நாட்களைவிட, பல லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு காவடி எடுத்து வருவார்கள். காவடி எடுத்தலில் பால்காவடி, பன்னீர்க்காவடி, பஞ்சாமிர்தக் காவடி, சர்க்கரைக் காவடி, சந்தனக் காவடி, புஷ்பக்காவடி, சேவல் காவடி, சர்ப்பக் காவடி எனப் பல வகை உண்டு. தனக்கு காவடி எடுக்க விரும்பிய பக்தனுக்கு, முருகன் செய்த அருள் லீலைகளை இப்பதிவில் பார்க்கலாம்.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர், சென்னை ராயபுரம் அங்காளம்மன் கோயிலின் அருகில், துரைசாமிக் கவிராயர் என்பவர் வாழ்ந்தார். பரம்பரையாக கவிபாடும் ஆற்றலும், பக்தியும் கொண்ட குடும்பம் அவருடையது. தினமும் பழனியாண்டவர் மீது பாடல் பாடி வழிபட்ட பிறகு துறவி, ஏழைகள் என அனைவருக்கும் உணவளித்து விட்டு, அதன் பிறகே உண்பது வழக்கம். இவ்வாறு அவர் வாழ்ந்து வரும் நாளில், அவரது வருமானம் குறைந்தது. ஒரு கட்டத்தில், கடன் தருவார் யாருமின்றி வருந்தினார். என்றாலும், தன் மனைவியின் திருமாங்கல்யத்தை விற்று அதனைக் கொண்டு அன்னதானத்தை விடாமல் செய்துவந்தார். அப்படியிருக்கையில் ஒரு சமயம் அவரைக் கடுமையான நோய் தாக்கியது. ஒவ்வொரு நாளும் அவர் உடல் வலியினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். தினமும் பழனி முருகனை நினைந்து அரற்றிவிட்டுப் பின்பு உறங்கி விடுவார். ஒரு நாள் இரவில் அழகிய இளைஞன் ஒருவன் அவர் முன் தோன்றினான். தனது கையிலிருந்த ஒரு தைலத்தைப் பஞ்சில் தோய்த்து, அவரது உடலில் தடவினான். கவிராயர் பேச இயலாது கை குவித்தபோது, ”அன்பரே! கவலையற்க! நாளை குணமாகிவிடும்” என்று கூறி மறைந்தான். கவிராயர் திடுக்கிட்டு எழுந்தார். பழனிப் பரம்பொருளை எண்ணிக் கைகுவித்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். பழனிமலை முருகன் அருளால் கவிராயரது நோயின் கடுமை குறைந்து, இரண்டொரு நாளில் நன்கு குணம் பெற்றார்.
மகிழ்ச்சி அடைந்த துரைசாமிக் கவிராயர், பழனி முருகனுக்கு 'அன்னக்காவடி' எடுத்து வருவதாகப் பிரார்த்தனை செய்து கொண்டார். ரயில் வசதிகூட சரியாக இல்லாத அந்தக் காலத்தில் இத்தகைய பிரார்த்தனையை எப்படிச் செலுத்துவது? மிகக் கடினமாயிற்றே! எனினும், அன்னக்காவடி செலுத்துவதில் உறுதியுடன் இருந்து, அதற்கு அருள முருகன் திருவருளை வேண்டித் துதித்தார். துரைசாமிக் கவிராயரது இந்த எண்ணத்தை நிறைவேற்ற பழனிக் குமரன் திருவுளம் கொண்டான். அதையொட்டி, கவிராயர் வீட்டருகில் வசித்த குயவர் ஒருவரது கனவில் தோன்றினான். 'துரைசாமிக் கவிராயர் பழனிக்கு அன்னக்காவடி எடுக்க விரும்புகிறார். அவருக்குச் சோறு வடிக்க பானை செய்து கொடு!' என்று உத்தரவிட்டு மறைந்தான். அதேபோல், அரிசி வியாபாரம் செய்யும் கந்தன் செட்டியார் கனவில் தோன்றி, கவிராயருக்கு அரிசி கொடுக்குமாறு கூறினான். 'பானையும் அரிசியும் வரும்; பெற்றுக்கொள்' என்று கவிராயர் கனவிலும் அருளினான் முருகன். அவ்வாறே பானையும் அரிசியும் வந்து சேர்ந்தன. சோறு வடித்து, அதை இரு பானைகளிலும் (குடுவை) நிரப்பி, அன்னக் காவடியாகக் கட்டினார் கவிராயர். பழனி முருகனைப் பிரார்த்தனை செய்துகொண்டு, அன்னக்காவடியுடன் புறப்பட்டார்.
அவர் பழனி சென்றடைய 45 நாட்களாயிற்று. துரைசாமிக் கவிராயர் அன்னக்காவடி சமர்ப்பிக்க வருகிறார். அவரை மேளதாளம், கோயில் மரியாதைகளுடன் நன்கு வரவேற்க ஆவன செய்க!' என்று கோயில் குருக்கள் மற்றும் அதிகாரிகள் கனவில் பழனியாண்டவர் கட்டளையிட்டார். அவர்களும் கவிராயரது வருகையை எதிர்பார்த்த வண்ணம் காத்திருந்தனர். பழனிமலை அடிவாரத்தை அடைந்தார் கவிராயர். முரசு முழங்கியது; நாதஸ்வரம், தவில் ஆகியன ஒலித்தன. மாலை மரியாதைகளுடன் துரைசாமிக் கவிராயரை வரவேற்றனர் கோயில் அதிகாரிகள். அன்னக் காவடியைச் சுமந்துகொண்டு படியேறி பழனி தண்டாயுதபாணியின் சந்நிதியை அடைந்தார் கவிராயர்.
'பழனிப் பரமனே! அன்னக்காவடி செலுத்த எளியேன் விண்ணப்பித்தபோது, அதற்கு வேண்டிய அனைத்தையும் தந்து உதவிய உமது பேரருளை எப்படிப் புகழ்வது! எமது பிரார்த்தனையை நிறைவேற்றுவதில் உமக்கு இத்தனை இன்பமா? உன் கருணைக்கு என்னால் என்ன கைம்மாறு செய்ய இயலும்!' என்று கூறி, அன்னக் கலயத்தைத் திறந்தார். ஆஹா! ஆஹா! என்ன அதிசயம்! ஒன்றரை மாதத்துக்கு முன்பு சமைத்துக் கட்டிய சோற்றில் இருந்து ஆவி மேலெழுந்தது. அப்போதுதான் சமைத்த அன்னம் போல் சூடாக இருந்தது. பழனி முருகனின் திருவிளையாடலை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார் கவிராயர்.
அப்போது துரைசாமிக் கவிராயர் பக்திப் பரவசம் பொங்க பின்வரும் பாடலைப் பாடினார்.
#பல்லவி
மகிமை பொய்யா? மலைக் குழந்தை வடிவேல் முருகையா (மகிமை)
#அனுபல்லவி
உன் மகிமை என் அளவினில் செல்லாதா? என் மனத்துயரை நின் அருள் வெல்லாதா? (மகிமை)
#சரணம்
சமைத்துக் காவடி தன்னில் காட்டிய சாதம்- நின் சன்னிதி வைத்துத் துதி செய்ய
அமைத்து நாள் சென்றும் அப்போது சமையலான அன்னமாய்க் காட்டும் அதிசயம்..! (மகிமை)
இந்த நிகழ்வை கண்ட அனைவரது உள்ளமும், உடலும் சிலிர்த்தது.

இலங்குடி பெரிய ஆண்டவர் கோவில்
ரத்தம் போன்ற சிவப்பு நிற திரவத்தை தன் வாயில் இருந்து சுரந்து கொண்டிருக்கும் அதிசய நந்தி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், ஆலங்குடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் உள்ளது இலங்குடி என்ற கிராமம். கிராமத்தின் எல்லையில் பல நூற்றாண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது.இறைவன் திருநாமம் பெரிய ஆண்டவர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி.
இக்கோவிலுக்கு வெளியே திறந்த வெளியில் ஒரு அதிசய நந்தி சிலை உள்ளது. இந்த நந்தி சிலையின் வாய்பகுதியில் இருந்து ஒரு திரவம் எப்பொழுதுமே சுரந்து கொண்டே இருக்கிறது. இந்த திரவம் பார்ப்பதற்கு எண்ணெய் போன்று வழவழப்பாக உள்ளது. நறுமணமும் எண்ணெய் போன்றே உள்ளது. தொடர்ந்து வழிந்து கொண்டே இருக்கும் இந்த திரவத்தால் சிலைக்கு அணிவிக்கப்பட்ட பட்டு ஆடையும் நனைந்தபடியே உள்ளது. பக்தர்கள் இந்த திரவத்தை பிரசாதமாக நெற்றியில் இட்டுகொள்கின்றனர். சிலர் இதை தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். இந்த திரவத்திற்கு மருத்துவ குணம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அந்த நந்தி சிலையை அந்த இடத்தில் இருந்து ஒரு அடி நகர்த்தி வைத்தும் ரத்தம் வடிந்தே படியே தான் இருந்தது. இக்கோவிலில் எத்தனையோ கற்சிலைகள் இருந்தாலும் அந்த குறிப்பிட்ட நந்தி சிலையில் இருந்து மட்டும் எப்படி அந்த திரவம் வழிகிறது என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை.
மழையின் அளவை விவசாயிகளுக்கு சுட்டிக் காட்டும் நந்தி
நந்தி வாயில் இருந்து வழியும் சிவப்பு நிற திரவத்தின் அளவு, அந்த வருடத்தின் மழை அளவை குறிப்பதாக கிராம மக்கள் நம்புகின்றனர். இந்த நந்தி சிலையின் வாயில் திரவம் அதிகமாக சுரந்தால், அந்த வருடம் விவசாயம் நன்றாக இருக்கும் என்று கிராம மக்கள் சொல்கிறார்கள்.

கும்பகோணம் ராமசாமி கோவில்
காண்போரை அசரவைக்கும் ஆளுயர சிற்பங்கள்
தென்னக அயோத்தி என சிறப்பு பெற்ற ராமசாமி கோவில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. மூலவர் ராமரும், சீதையும் பீடத்தில் அமர்ந்திருக்க, பரதன் குடை விரிக்க, இலக்குவன் அஞ்சலி பந்தத்துடன் நிற்க, சத்ருகனன் வெண்சாமரம் வீச, அனுமன் கையில் வீணையையும், சுவடியையும் ஏந்தியிருக்கிறார்.
இக்கோவில், கி.பி.1600 முதல் கி.பி.1645 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. இக்கோவில் மகா மண்டபத்தில் உள்ள அனைத்து தூண்களிலும் இருக்கும் சிற்பங்கள் காண்போரை பிரம்மிக்க வைக்கும். இந்த மகாமண்டபத்தில் காணப்படும் சிற்பங்கள் ஆளுயர சிற்பங்களாக உள்ளன. இந்த மண்டபத்தில் உள்ள 64 தூண்களிலும் செய்யப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள் நம்மை அசரடிக்கின்றன. இப்போது போல் எவ்வித தொழில்நுட்ப வசதிகளோ, இயந்திரங்களோ இல்லாத போதும் இங்கு செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களின் கலை நுணுக்கமும், வடிவமைப்பும் நம் முன்னோர்களின் கலைத்திறனை உலகிற்கு பறைசாற்றுகின்றது. பல நூற்றாண்டுகள் ஆனாலும் அழியாத பெருமையை கொண்டுள்ளது இக்கோவில் சிற்பங்கள்.
இந்த மண்டபத்து தூண்களில் திருமாலின் பல அவதாரங்கள், மீனாட்சி கல்யாணம்,இராமர், சீதை, லட்சுமணர், அனுமார், சுக்ரீவன் பட்டாபிஷேகம், ரதி, மன்மதன் போன்ற நெஞ்சத்தை கொள்ளை கொள்ளும் சிற்பங்கள் அமைந்துள்ளன.
இராமாயண ஓவியம்
இக்கோவிலின் உள் பிரகாரத்தில் இராமாயணம் முழுவதும் மூன்று வரிசைகளில், 219 சுவர் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இப்பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்தால் இராமாயணம் முழுவதையும் சித்திரத்தில் கண்டு களிக்கலாம். ஒவ்வொரு முறை வலம் வரும்போது, ஒவ்வொரு வரிசை என்ற நிலையில் சித்திர இராமாயணம் முழுவதையும் பார்த்து, படித்து அறிந்து கொள்ளலாம். இந்த சித்திர இராமாயணம் நாயக்கர் கால ஓவியக்கலைக்கு ஒரு சான்றாகும்.
சுருங்கச் சொன்னால், கும்பகோணத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக இந்த கோவிலும், இதில் உள்ள கலை நுணுக்கம் மிகுந்த சிற்பங்களும், இராமாயண ஓவியங்ககளும் வெகுவாக கவர்கின்றது.

ஆதிகுடி அங்குரேசுவரர் கோவில்
சனி பகவானின் கால் ஊனம் சரியான தலம்
உடல் ஊனம், பக்கவாதம், விபத்தால் அங்கங்களின் வலிமை இழப்பு போன்ற குறைபாடுகளை போக்கும் தலம்
திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஆதிகுடி அங்குரேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் பிரேமாம்பிகை. அங்குரம் எனக் கூறப்படும் மண்வெட்டியால் தோண்டியபோது வந்த லிங்கம் என்பதால், இக்கோவில் இறைவனுக்கு அங்குரேசுவரர் எனப் பெயர் உண்டானது.
இக்தலத்தில் வழிபட்டுதான் சனி பகவானின் கால் ஊனம் சரியானது. இக்கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் மிகப் பெரிய அளவில் விமல லிங்கம் அமைந்துள்ளது. இங்கு சனி பகவான் எப்போதும் விமல லிங்க மூர்த்தியை வழிபடுவதால், ஆதிகுடி அங்குரேசுவரர் கோவிலில், விமலலிங்க மூர்த்தி வழிபாடே சனி பகவான் வழிபாடாகவும் கருதப்படுகிறது.
விபத்தால் அங்க வலிமை இழந்திருந்தால், நடப்பு சந்ததியினர் ஊனம் அடைந்திருந்தால், பக்கவாதம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இக்கோவிலில் காட்சியளிக்கும் விமல லிங்கத்தின் வலதுபுறத்தில் நன்றாகத் திரண்ட வெண்ணெய் காப்பும், இடதுபுறத்தில் வெண்ணெய் காப்பின் மேல் நிறைய மாதுளை முத்துகளைப் பதித்து வழிபட்டால் குணம் நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இத்தலம் நீத்தார் கடன் செய்யவும் உகந்த திருத்தலமாகும். இவ்வூரை காசிக்கு இணையாகச் சொல்வதுண்டு. இக்கோவிலுக்கு எதிரிலேயே மயானம் உள்ளது. தென் தமிழகத்தில் ஸ்ரீவாஞ்சியம் மற்றும் ஆதிகுடி என்ற இவ்விரு சிவத்தலத்திற்கு எதிரில் மட்டுமேதான் சுடுகாடு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

தென்னேரி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம்
இரண்டு கைகளிலும் பாசம் தாங்கி இருக்கும் அபூர்வ அம்பிகை
சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில், சுங்குவார் சத்திரத்திலிருந்து இடதுபக்கம் திரும்பிச்சென்றால் 10 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது தென்னேரி கிராமம். இறைவன் திருநாமம் ஆபத்சகாயேஸ்வரர். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான தலம் இது. இவ்வூரிலுள்ள ஏரி, திரையனேரி என்று முற்காலத்தில் அழைக்கப்பெற்றது. ஏரியின் பெயரே மருவி இன்று தென்னேரி ஆனது.
இத்தலத்து அம்பிகை ஆனந்தவல்லி சாந்த சொரூபியாய், தெற்கு நோக்கி நின்ற கோலத்தில், நான்கு திருக்கரங்களோடு காட்சி தருகிறார். மேற்கரங்கள் இரண்டும் பாசம் தாங்கியும், கீழ் இரண்டு கரங்கள் அபய வரதம் தாங்கியும் அருளுகின்றார்.பொதுவாக அம்பிகையானவள் ஒரு கரத்தில் தான் பாசம் தாங்கி இருப்பாள். இப்படி மேல் இரண்டு கைகளிலுமே பாசம் தாங்கி இத்தலத்து அம்பிகை காட்சி அளிப்பது, வேறு எங்கும் காண முடியாத அரிய தோற்றமாகும்.
எமதர்மனின் திசை தெற்கு. அம்பிகை தெற்கு நோக்கி எழுந்து அருளி இருப்பதன் நோக்கமே, பக்தர்களை எமவாதனையிலிருந்தும், மற்ற துன்பங்களிலிருந்தும் காப்பதற்காகத்தான். அதற்காகத்தான், பக்தர்களை காக்கும் ரட்சையாக, இரண்டு பாசங்களை தன் மேல் இரண்டு கைகளில் ஏந்தி இருக்கிறார். அதனால்தான் திருமணத்தடை நீக்கும், பலவித நோய்களை தீர்க்கும் இத்தலத்துக்கே சிறப்பாக கருதப்படும் அஷ்டகந்தம் சாற்றிய ரட்சையை, சுவாமியிடம் வைத்து பூஜித்து பின்னர் அம்பிகை திருப்பாதங்களில் வைத்து பிரசாதமாக தருகிறார்கள்.
இந்தக் கோவிலை பற்றிய முந்தைய பதிவு
திருமணத் தடை நீ்க்கும் அஷ்டகந்தம் சாற்றிய ரட்சை (20.01.2025)
பலவிதமான நோய்களைத் தீர்க்கும் அபிஷேக விபூதி

ஏரகரம் கந்தநாதசுவாமி கோவில்
முருகன் சிவபெருமானைப் பூசித்து சூரசம்ஹாரத்திற்கு அஸ்திரங்கள் பெற்ற திருப்புகழ் தலம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள தேவார வைப்புத்தலம் ஏரகரம் கந்தநாதசுவாமி கோவில். இறைவனின் திருநாமம் ஸ்கந்த நாதர், சங்கரநாதர். இறைவியின் திருநாமம் சங்கரநாயகி அம்மன். இக்கோவில் முருகனின் நான்காம் படை வீடான சுவாமிமலைக்கு அருகில் உள்ளது. இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்றது.
ஒரு சமயம் அசுரர்களால், முனிவர்களின் தவத்திற்கு இடையூறு ஏற்பட்டது. அப்போது சிவபெருமான் முருகனை அழைத்து முனிவர்களைக் காத்திடும்படிக் கூறியதோடு, ஒரு அஸ்திரத்தையும் வழங்கி அதனை செலுத்தும் இடத்தை அவருடைய அகமாக அமைத்துக்கொள்ளும்படி அருளியுள்ளார். முருகனின் அஸ்திரம் பூமியில் பாய்ந்த இடம் ஏரகம்.
இத்தலத்து இறைவன் சன்னதியின் பின்புறம் முருகன், ஆதிகந்தநாதசுவாமி திருநாமத்தோடு எழுந்தருளி உள்ளார். இச்சன்னதியில் முருகன் ஒரு முகம், நான்கு கரங்கள் கொண்டு நின்ற நிலையில் ராஜகோலத்தில் உள்ளார். பின் கரங்களில் வஜ்ர சக்தியும் திரிசூலமும் கொண்டுள்ளார். முன் வலக்கரத்தால் அபயம் காட்டியும் இடக் கரத்தை இடுப்பில் ஊன்றியபடியும் அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தில் தான் முருகன் சிவபெருமானைப் பூசித்து சூரசம்ஹாரத்திற்குப் பல அஸ்திரங்களைப் பெற்றார். இக்கோவிலில் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்தசஷ்டி விழாவில், முருகன் சங்கரியம்மையிடம் சக்திவேல் பெற்று சூரசம்ஹாரத்திற்கு செல்லும் வைபவம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பிரார்த்தனை
இத்தலத்து முருகனை சஷ்டி விரதம் இருந்து வழிபட்டால், திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

திருச்சி ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் கோவில்
நரசிம்மரின் மடியில், அஞ்சலி ஹஸ்தத்துடன் சேவை சாதிக்கும் மகாலட்சுமி தாயாரின் அபூர்வத் தோற்றம்
திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 10 நிமிட நடைபயணத்தில் அமைந்துள்ளது ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் கோவில். திருவரங்கம் தலத்துடன் தொடர்புடைய நரசிம்ம தலங்கள் மூன்று ஆகும். அவை காவேரியின் வடகரையில் அமைந்துள்ள காட்டழகிய சிங்கர், காவேரி தென் கரையில் அமைந்துள்ள ஆற்றழகிய சிங்கர், மேட்டழகிய சிங்கர் ஆகும். ஆற்றழகிய சிங்கர் ஆற்றின் கரையில் இருந்ததால், காவிரிக்கரை ஆற்றழகிய சிங்கர் என்ற பெயர் வழங்கி நிலைத்தது. எந்தவகையான வெள்ளம் வந்தாலும் காப்பாற்றி கரை சேர்க்கும் ஒரே தெய்வமாக, ஆற்றழகிய சிங்கர் இருக்கிறார். ஆதலால், காவிரிக் ஆற்றைக் கடந்து செல்பவர்களும், வருபவர்களும் அவரை வணங்கி விட்டுச் செல்லுவதும், பலன் பெறுவதும் பழக்கத்தில் இருந்தது.
கருவறையில் மூலவர் ஸ்ரீஆற்றழகிய சிங்கப்பெருமாள் தன் மடியினில் மகாலட்சுமியை அமர்த்திக் கொண்டு, லட்சுமி நரசிம்மராக 'ஆற்றழகிய சிங்கர்' என்ற திருநாமத்தோடு கிழக்கு நோக்கி சேவை அருளுகிறார். மகாலட்சுமி தாயார் கை கூப்பி, அஞ்சலி ஹஸ்தத்துடன் காட்சி அளிப்பது வேறு எந்த தலத்திலும் காண முடியாத ஒரு அரிய காட்சியாகும்.
மகாலட்சுமி தாயார் அஞ்சலி ஹஸ்தத்துடன் சேவை சாதிப்பதால் இந்த தலமானது பிரார்த்தனை தலமாகக் கருதப்படுகிறது, வைணவ சமயத்தின்படி தாயாரை வணங்கியப்பிறகு, பெருமாளை சேவிக்க வேண்டும் என்பது சம்பிரதாயம். இதில் தாயாரின் பணியாக கூறப்படுவது என்னவென்றால், பக்தர்களின் குறைகளை திருமாலிடம் எடுத்து கூறுவதே ஆகும். ஆதலால், அந்த பரிபூர்ணமான கைங்கர்யம், இந்த தலத்தில் மகாலட்சுமி தாயார் அஞ்சலி ஹஸ்தத்துடன் செய்து வருவதால், பக்தர்கள் பெருமாளிடம் வைக்கும் கோரிக்கைகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
பிரார்த்தனை
இத்தலத்தில், திருமணத்தடை நீங்க சனிக்கிழமை 5 வாரம் ஜாதகத்தை வைத்து பூஜையும், வேலை, லட்சுமி கடாட்சம் கிட்டவும், கடன் சுமை நீங்க, குடும்ப ஒற்றுமை, மக்கட்பேறு, வியாபார அபிவிருத்தி போன்றவற்றிற்காக சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்
வள்ளி மட்டும் மயிலாசனத்தில் அமர்ந்திருக்கும் அரிய காட்சி
திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம், வேதத்தின் பெயரால், சாமவேதீசுவரர் என்று அழைக்கப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இறைவியின் திருநாமம் லோகநாயகி. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவாரம் வைப்பு தலம் இது.
வள்ளியை திருமணம் செய்து கொண்ட பிறகு முருகப்பெருமான் எழுந்தருளிய தலம் தான் திருமங்கலம். பொதுவாக வள்ளியும், தெய்வானையும் முருகனோடு நின்ற கோலத்தில் தான் காட்சி அளிப்பார்கள். ஆனால் வள்ளிக்கு மயிலாசனத்தை முருகப்பெருமான் வழங்கியது இங்குதான். அதனால் மற்ற கோவில்களில் இல்லாத சிறப்பு இங்கு உண்டு. அதாவது முருகப்பெருமானும், தெய்வானையும் நின்ற கோலத்தில் இருக்க, மயிலின் மேல் அமர்ந்த கோலத்தில் வள்ளி காட்சியளிப்பது இக்கோவிலில் மட்டும்தான்.
இங்குள்ள முருகப்பெருமான் மற்ற கோவில்களில் உள்ளது போன்று, ஆறுமுகமும் 12 கரங்களும் இல்லாமல், ஆறுமுகமும், ஆனால் நான்கு கைகளுடன் சம்ஹார மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். கணவன்-மனைவி ஒற்றுமைக்கு இக்கோவில் முருகனை வழிபடுவது சிறப்பு. பிரிந்த தம்பதியினர் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால், தம்பதியினர் கூடி வாழக்கூடிய நிலை ஏற்படும் என்பது ஐதீகம்.
.

மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவில்
நிலம், வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் பரிகார தலம்
நிலத்து மண்ணை சுவாமி மீது வைத்து அர்ச்சனை செய்யும் வித்தியாசமான பரிகார பூஜை
திருச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவில். இறைவியின் திருநாமம் அறம் வளர்த்த நாயகி. பஞ்சபூதங்களுள் பூமிக்கான தலமாக விளங்கும் இக்கோவில்2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. முற்காலத்தில் மண் அரக்கநல்லூர் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர், பின்னர் பெயர் மருவி மண்ணச்சநல்லூர் என்றானது.
இங்கு பூமிக்குரிய நாயகனாக இத்தலத்து இறைவன் பூமிநாதசுவாமி இருப்பதால், மண் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்னைகளுக்கும் இங்கு வந்தால் தீர்ந்து விடும் என்பது ஐதீகம்.பூமிநாத சுவாமி 16 விதமான தோஷங்களை நீக்கி அருள்பவர் என்று அகத்திய மாமுனிவர் தனது நூலில் குறிப்பிட்டு உள்ளார்.
இங்கு மண் சம்பந்தப்பட்ட பிரச்சனை நீங்க நடத்தப்படும் பரிகார பூஜை சற்று வித்தியாசமானது. நாம் வாங்க அல்லது விற்க நினைக்கும் மனையின் வடகிழக்கு மூலை மண்ணை ஒரு நல்ல நாளில் புதன் ஹோரையில் எடுத்து மஞ்சள் நிறத் துணியில் கட்டி கோயிலுக்கு எடுத்து வரவேண்டும். கொடி மரத்து விநாயகருக்கு விளக்கேற்றி, பிறகு அம்பிகைக்கு இரண்டு தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். அடுத்து பூமிநாத சுவாமிக்கு இரண்டு தீபங்கள் ஏற்றி, கொண்டு வந்திருக்கும் மண்ணை பூமிநாத சுவாமி மீது வைத்து அர்ச்சனை செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். பிறகு கோயிலை ஒருமுறை வலம் வந்து அந்த மண்ணை வில்வ மரத்தடியில் போடவேண்டும்.
கோவிலை இரண்டாவது முறை வலம் வந்து, வன்னி மரத்தடி மண்ணை எடுத்து மஞ்சள் துணியில் கட்டிக்கொள்ள வேண்டும். மூன்றாவது முறையும் கோவிலைச் சுற்றி வந்து வணங்க வேண்டும். அடுத்த நாள் காலை, புதன் ஹோரை நேரத்தில், நம் நிலத்தில் மண் எடுத்த இடத்தில் கோவிலில் இருந்து கொண்டு வந்த மண்ணைப் போட்டு தூப தீபம் ஏற்றி வணங்க வேண்டும். பிறகு மண் எடுத்து வந்த துணியில் ஒரு நாணயத்தை முடிந்து, பூஜை அறையில் வைக்க வேண்டும். என்ன வேண்டினோமோ அது நிறைவேறியதும், பூமிநாத சுவாமிக்கும் அம்பாளுக்கும் அர்ச்சனை செய்து முடிந்து வைத்த நாணயத்தை சுவாமிக்கு காணிக்கை செலுத்த வேண்டும் என்பது இங்கு கடைப்பிடிக்கப்படும் ஒரு வேண்டுதல்.இந்த வேண்டுதலால் பூமி சம்மந்தமான எல்லா பிரச்னைகளும் நீங்கி விடுகின்றன என்பது இங்கு வந்து வேண்டிக்கொள்ளும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.

திருவெக்கா சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவில்
பெருமாள் வலமிருந்து இடமாக சயனித்திருக்கும் திவ்யதேசம்
ஆழ்வார் சொன்னதைக் கேட்டு, தனது பாம்பு படுக்கையை சுருட்டிக் கொண்டு கிளம்பிய பெருமாள்
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 51 ஆவது திவ்ய தேசம், சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள திருவெக்கா சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவில். தாயார் திருநாமம் கோமளவல்லித் தாயார். பொதுவாக பெருமாள் கோவில்களில் சயனக் கோலத்தில் இருக்கும் பெருமாள், இடமிருந்து வலமாக படுத்திருப்பார். மற்ற கோவில்களில் இருப்பதை போலவே ஆரம்பத்தில் இக்கோவிலிலும், பெருமாள் இடமிருந்து வலமாக தான் சயனித்திருந்தார். பின்னர் அவர் தனது இடது கையை தலைக்கு வைத்துக்கொண்டு, வலமிருந்து இடமாக வித்தியாசமான சயனக் கோலத்தில் காட்சி அளிக்க தொடங்கினார். இதன் பின்னணியில், ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி உள்ளது.
பன்னிரண்டு ஆழ்வார்களில், நான்காவது ஆழ்வாரான திருமழிசையாழ்வார், திருவெக்கா பெருமாள் கோவிலில் தனது சீடன் கணிக்கண்ணனுடன் சேவை செய்து வந்தார். இவர்களின் ஆசிரமத்தை, ஒரு மூதாட்டி நாள்தோறும் தூய்மை செய்து வந்தார் . தனக்குச் சேவகம் செய்த மூதாட்டிக்கு அவள் வேண்டுகோள்படி, இளமை திரும்பப் பெருமாளிடம் திருமழிசையாழ்வார் வேண்டினார். அவ்வாறே பெருமாளும் அருள, மூதாட்டி இளமையைத் தி்ரும்பப் பெற்றார்.
இச்செய்தியை அறிந்த காஞ்சி மன்னன், தானும் முதுமை நீங்கி இளமை திரும்ப்ப் பெற விரும்பினான். மன்னன் கணிக்கண்ணனிடம், 'தனக்கும் இளமை திரும்புமாறு உங்கள் குருநாதரிடம் சொல்லவேண்டும்' என்று கேட்டார். கணிக்கண்ணனோ, 'குருவின் கருணையை சேவையின் மூலம் பெறலாமே ஒழிய, உத்தரவின் வழியாகப் பெறமுடியாது' என்று சொல்லி மறுத்தார். மன்னன் கோபம் கொண்டு கணிக்கண்ணனை நாடு கடத்துமாறு உத்தரவிட்டார். இதைக் கேள்விப்பட்டதும் மனம் வருந்திய கணிக்கண்ணன் தன் குருவிடம் விடைபெற்றுக்கொள்ள வந்தார். தன் சேவையைத் தொடர முடியாத நிலையைச் சொல்லி, அந்த ஊரிலிருந்து வெளியேறுவதாகக் கூறினார். இதைக் கேட்ட திருமழிசையாழ்வார், 'வா இருவரும் சென்று பெருமாளிடம் முறையிடுவோம்' என்று சொல்லிக் கோவிலுக்குச் சென்றனர். அங்கு தன் மனக் குறை வெளிப்படுத்தி, ஆழ்வார் ஒரு பாசுரம் பாடினார்
கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டா -துணிவுடைய
செந்நாப் புலவன்யான் செல்கின்றேன் நீயுமுந்தன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள், என்று பெருமாளுக்கு கட்டளை போட்டுவிட்டு புறப்பட்டார் திருமழிசையாழ்வார். உடனே ஆழ்வார் சொன்னவண்ணம், பெருமாளும் தனது பாம்பு படுக்கையை சுற்றிக்கொண்டு கிளம்பிவிட்டார் அவரோடு, பெருமாள் மார்பிலே வாசம் செய்யும் திருமகளும் காஞ்சிமாநகரை விட்டு நீங்கினாள். காஞ்சிபுரம் தன் களையை இழந்தது.
காஞ்சிபுரத்தை விட்டு கிளம்பிச் சென்ற ஆழ்வார், கணிகண்ணன், பெருமாள், திருமகள் ஆகியோர் ஒரு நாள் இரவு தங்கியிருந்த இடம் 'ஓர் இரவு இருக்கை' என அழைக்கப்பட்டது. பின்னாளில் அது மருவி 'ஓரிக்கை' என இந்நாளில் அழைக்கப்படுகிறது.
மறுநாள் பூஜை செய்ய வந்த அர்ச்சகர்கள், கருவறையில் பெருமாள் இல்லாதது கண்டு வருந்தினர். மன்னனிடம் இதைப் பற்றி முறையிட்டனர். காரணத்தையறிந்த மன்னன், தவறையுணர்ந்து ஆழ்வாரைத் தஞ்சம் அடைந்து, சீடனுக்கான நாடு கடத்தும் ஆணையையும் திரும்பப் பெற்றான். ஆழ்வாரும் அவனை மன்னித்து,
கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் - துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக்கொள், என்று பெருமாளை பாடினார்.
திருமழிசையாழ்வார் தன் மேல் வைத்திருந்த பக்திக்கும், அவர் பாடும் பாசுரங்களின் மேல் வைத்திருந்த பிரியத்திற்கும் கட்டுப்பட்டு, உடனே பெருமாள் தன் பாம்புப் பாயை சுருட்டிக் கொண்டு ஆழ்வாருடன் திருவெக்கா வந்து, மீண்டும் படுத்துக்கொண்டார். இப்படி ஆழ்வார் சொன்னபடி பெருமாள் நடந்து கொண்டதால் தான், அவருக்கு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.
பெருமாள் அவசரமாக திருவெக்கா வந்து மீண்டும் படுத்ததினால்தான், அவர் வலமிருந்து இடமாக படுத்துக் கொண்டார். இப்படி அவர் இக்கோவிலில், திருமழிசை ஆழ்வார் தன்னை புகழ்ந்து பாடுவதை கேட்பதற்காக, வலமிருந்து இடமாக சயனித்திருப்பது ஒரு தனி சிறப்பாகும். பெருமாளின் திருவடிகளை தொழுதபடி சரஸ்வதி தேவி அமர்ந்திருப்பதும் இக்கோவிலின் தனித்துவமான சிறப்பம்சமாகும்.

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில்
அமர்ந்த நிலையில் காட்சி தரும் நவக்கிரகங்களின் வித்தியாசமான தோற்றம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நகரின் ஒரு பகுதியாக விளங்கும் கோவில்பட்டியில் அமைந்துள்ளது கைலாசநாதர் கோவில். இறைவியின் திருநாமம் செண்பகவல்லி அம்மன். இத்தலத்தில், இறைவனும் இறைவியும் மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரகங்கள் நின்ற நிலையில் தான் காட்சி அளிப்பார்கள். ஆனால் இக்கோவிலில் நவகிரகங்கள் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்கள். நவக்கிரகங்களின் இந்த வித்தியாசமான தோற்றத்தை, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.

நங்கநல்லூர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் நவநீத கிருஷ்ணன் கோவில்
தை மாதம் மூன்றாம் வெள்ளியன்று நடைபெறும் விசேடமான திருமாங்கல்யச் சரடு உற்சவம்
சென்னை, நங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ளது, ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் நவநீதகிருஷ்ணன் கோயில். இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. நங்கையாகிய லட்சுமி தோன்றிய இந்த இடம், நங்கை நல்லூராகி இன்று நங்கநல்லூராய் திரிந்து உள்ளது. இந்தத் தலம், பரசுராமரின் தந்தை ஜமதக்னி முனிவர் மகா யக்ஞம் செய்த இடம். தூண் வடிவில் உள்ள கருவறையில், மூலவர் லட்சுமி நரசிம்மர், ஐந்தடி உயரத் திருமேனியுடன், தன் மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி, கீழ் வலக்கரம் அபய முத்திரையுடனும், இடது கரத்தால் மடியில் உள்ள லட்சுமியை அணைத்தபடியும் காட்சி தருகிறார். வடக்குபுற சந்நிதியில் நர்த்தன கிருஷ்ணர் ஆடியபடி அருள்பாலிக்கிறார்.
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் தூண் வடிவில் உள்ள கருவறையில் தாயாருடன் காட்சி தருகிறார். திருக்கரங்களில் சங்கு, சக்கரத்துடன், ஒரு கை அபய ஹஸ்தம் காட்ட, மற்றொரு கை ஸ்ரீ லக்ஷ்மி தேவியை அணைத்துக் கொண்டிருக்க, எழிலே உருவாக, கருணை பொங்கும் முகத்துடன், கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்.
இந்தக் கோவிலில் ஆண்டுதோறும், தை மாதம் மூன்றாம் வெள்ளியன்று நடைபெறும், திருமாங்கல்யச் சரடு உற்சவம் எனும் திருக்கல்யாணம் விசேடமானது. அன்றைய தினம் கல்யாண கோலத்தில் தாயாரும், எம்பெருமானும் காட்சி தருகின்றனர். பத்தாயிரத்திற்கும் மேலான திருமாங்கல்யச் சரடுகள் தாயாருக்கு சாற்றப்பட்டு, பின்னர் அவை சுமங்கலிகளுக்கும், கன்னிப் பெண்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இவற்றை அணிவதன் மூலம் திருமண பந்தம் நீண்டு வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்பதும், மணமாகாத பெண்களுக்கு உடனடியாக வரன் கூடும் என்பதும் ஐதீகம். இந்த நிகழ்வு வேறு எந்தத் தலத்திலும் காணக் கிடைக்காத ஒரு சிறப்பான நிகழ்வாகும்.
அமெரிக்க ஆஞ்சநேயர்
இங்குள்ள ராமர் சந்நிதி முன் எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேயருக்கு ‘அமெரிக்க ஆஞ்சநேயர்’ என்ற செல்லப் பெயரும் உண்டு. வெளிநாட்டுக்குச் செல்வதில் தடை, பிரச்சனைகள் உள்ளவர்கள் இவரை வேண்டிக் கொண்டு வழிபட்டால் அந்தத் தடையை நீக்கித் தருகிறார் என்பது இவருக்கு இருக்கும் சிறப்பு.

அத்தாள நல்லூர் மூன்றீசுவரர் கோவில்
இடது பாதம் மேல் நோக்கி இருக்குமாறு அமர்ந்துள்ள தட்சிணாமூர்த்தியின் அபூர்வத் தோற்றம்
அம்பாசமுத்திரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, அத்தாள நல்லூர் மூன்றீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை. இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இந்தக் கோவிலின் மேற்குப் பிரகாரத்தில் மூன்று சிறிய சன்னதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒரு சிறிய சிவலிங்கத் திருமேனியும், அதற்கு முன்பாக ஒரு நந்தியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு மூன்று ஈசர்கள் எழுந்தருளியிருப்பதால், கருவறை மூலவருக்கு மூன்றீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி வலது காலைத் தொங்கவிட்டு, வலது முட்டியின் மீது இடது பாதம் முழுமையாக மேல் நோக்கி இருக்குமாறு அமர்ந்துள்ளார். அவரது இடது கை நாகத்தை தொட்ட நிலையில் இருக்கின்றது. தட்சிணாமூர்த்தியின் இந்த அபூர்வ தோற்றமானது, நாம் வேறு எந்த கோவிலிலும் காண முடியாத ஒன்றாகும்.

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவில்
பெருமாள் தாயார் திருக்கோலத்திலும், தாயார் பெருமாள் திருக்கோலத்திலும் காட்சி தரும் 'மாற்றுத் திருக்கோலம்' சேவை
மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள திவ்யதேசம் திருஇந்தளூர். பெருமாள் திரு நாமம் பரிமளரங்கநாதர்.தாயாரின் திருப்பெயர் பரிமளரங்கநாயகி, சந்திரசாபவிமோசனவல்லி. பஞ்சரங்க தலங்களில், இத்தலம் பஞ்சரங்கம் என்று அழைக்கப்படுகிறது. காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள ஐந்து மேடான நதித்தீவுகள் அல்லது நதித்திட்டுகள் பஞ்சரங்க தலங்கள் சென்று அழைக்கப்படுகின்றன. ரங்கம் என்றால் ஆறு பிரியும் இடத்தில் உள்ள மேடான பகுதி என்று பொருள்.
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதருக்கு தை அமாவாசையன்று பரிமள ரங்கநாதருக்கு தாயாரைப் போலவும், தாயாரான சந்திர சாப விமோசனவல்லிக்கு பெருமாளைப் போலவும் அலங்காரம் செய்வார்கள். இதனை 'மாற்றுத் திருக்கோலம்' என்று அழைப்பார்கள்.
'மாற்று திருக்கோலம்' என்பது, பெருமாள் மற்றும் நாச்சியார் ஆகியோரின் திருக்கோலம் ஆகும். இது, பெருமாள் நாச்சியார் திருக்கோலம் அல்லது தாயார் பெருமாள் திருக்கோலம் என்றும் அழைக்கப்படுகிறது.

வெள்ளக்கோவில் வீரகுமாரசுவாமி கோவில்
பக்தர்கள், தங்கள் பிரார்த்தனை நிறைவேற வெடி போடும் முருகன் தலம்
ஆண்கள் மட்டுமே மூலவரை தரிசிக்கும் கோவில்
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் என்ற ஊரில் வீரகுமாரசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகப் பெருமான் வீரத் தோற்றத்தில் கன்னி குமரனாகக் காட்சி தருகிறார். 600 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலில் முருகப்பெருமான் புற்று வடிவில் எழுந்தருளி இருக்கிறார். இவர் காலில் பாதக் குறடு கவசம் அணிந்தும், இடுப்பில் தாங்குச்சையும், உடைவாளும், குத்துவாளும், வலது கையில் சூலாயுதமும் கொண்டு, கன்னி தெய்வமாகக் காட்சியளிக்கிறார். இவர் புற்றுமண்ணாலான திருமேனி உடையவர் என்பதால், சந்தன அபிஷேகம் மட்டுமே செய்கிறார்கள்.
இவர் கன்னி தெய்வமாகக் காட்சி தருவதால், பெண்கள் யாரும் கோவிலுக்குள் செல்வது கிடையாது. பெண்கள் உள்ளே செல்லக்கூடாது என்று எந்தவிதக் கட்டுப்பாடும் இங்கு இல்லை. ஆனாலும், பெண் பக்தர்கள் உள்ளே சென்று மூலவரை தரிசிப்பது இல்லை எனத் தாங்களாகவே முடிவெடுத்து, கடைப்பிடித்தும் வருகிறார்கள். மாறாக, ‘குறட்டு வாசல்’ எனப்படும் முன்புற வாசலில் நின்று சப்த கன்னியரை வணங்கிச் செல்லும் வழக்கம் நீடிக்கிறது.
பொட்லி போடுதல் என்ற சிறப்புப் பரிகாரம், காலங்காலமாகவே இக்கோவிலில் நடைபெற்று வருகிறது. பொட்லி என்பது ஒரு வகை வெடி ஆகும். இக்கோயிலில் வெடிக்கப்படும் பொட்லி வெடியின் சத்தம் வீரகுமாரசுவாமிக்கு விருப்பமான ஒன்று. தங்களின் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் வீரகுமாரசுவாமியை தரிசித்துவிட்டு, கோயிலின் எதிரே உள்ள பொட்லி போடும் மண்டபத்துக்குச் சென்று, தங்களின் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து, பொட்லி போடுவார்கள். இந்த வெடிச் சத்தத்தைக் கேட்டு வீரகுமாரசுவாமி பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்பது ஐதீகம். பொதுவாக திருமணத்தடை நீங்கவும், கல்வியில் சிறக்கவும் பொட்லி வெடி போடுவது வழக்கம்.
இக்கோவில் பக்தர்கள் கனவில் முருகன் குதிரை வாகனத்தில் காட்சி தந்ததால், இக்கோவிலில் குதிரை முருகனின் வாகனமாக கருதப்படுகிறது. இரண்டு ஐம்பொன் குதிரை சிலைகள் இக்கோவிலில் நிறுவப்பட்டுள்ளன. மேலும், தங்கள் பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், இக்கோவிலுக்கு சுதையால் ஆன குதிரைகளைக் காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

விராதனூர் அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் கோவில்
ரிஷப வாகனத்தின் மேல் சுவாமியும், அம்பாளும் அமர்ந்த கோலத்தில் மூலவராய் உள்ள ஒரே தலம்
மூலவருக்கு, வேறு எந்த தலத்திலும் இல்லாத திருநாமம் அமையப் பெற்ற தலம்
மதுரையிலிருந்து 14 கி.மீ.தூரத்தில், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது விராதனூர் அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் கோவில். பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் ரிஷபாரூட மூர்த்தி, உப மூர்த்தியாகத்தான் இருப்பார். ஆனால் இக்கோவிலில், ரிஷப வாகனத்தின் மேல் சுவாமியும் அம்பாளும் அமர்ந்த கோலத்தில் மூலவராய் எழுந்தருளி இருப்பது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சி ஆகும். அதேபோல், நம் நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத வகையில், மூலவருக்கு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் என்ற திருநாமம் அமைந்திருப்பதும், ஒரு தனி சிறப்பாகும். இப்படிப்பட்ட திருநாமம் அமைந்ததற்கு பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு திருஉத்திரகோசமங்கை எனும் ஊரில் வாழ்ந்த ஒருவர் தன் மனைவியுடனும்,தன் மகன்கள் மற்றும் மகளுடன் சேர்ந்து, அழகர்கோவிலுக்கு சென்று தன் பேரக்குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்தி வருவதற்காக மாட்டுவண்டி கட்டிக் கொண்டு இவ்வழியாக வந்தார்.
இக்கோவில் அமைந்துள்ள இவ்விடத்தில் தமது மாட்டுவண்டியை நிறுத்தி அங்கு இருந்த ஆலமரத்தின் கிளையொன்றில் தொட்டிலை கட்டி குழந்தையை துயில் கொள்ள வைத்துவிட்டு, பெண்கள் உணவு சமைக்க, ஆண்கள் அனைவரும் அருகாமையில் ஓடும் நதியில் நீராடி திரும்பி வந்து பார்த்தபோது, தொட்டிலில் துயில் கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை.
அவர்கள், கடவுளே ஏன் இந்த சோதனையென இருகரம் கூப்பி ஆகாயத்தை நோக்கியபோது, அவர்களின் கண்களுக்கு ஆகாயத்தில் அக்குழந்தை அந்தரத்தில் மிதப்பதைக் கண்டு பதைபதைத்தனர். அதேவேளையில் அந்த ஆலமரத்தின் உச்சியில் இருந்து ஓர் அசரீரியின் குரல் கேட்டது. 'நீங்கள் கட்டிய தொட்டிலுக்கு அடியில் உங்களின் அழுதகண்ணீரை ஆற்றும் வல்லமை படைத்த சிவன் சிலையொன்று பூமியினுள் புதையுண்டு கிடக்கிறது.அவரின் திருஉருவச்சிலையை வெளிக் கொணர்ந்து வழிபடுவதாக வாக்கு தந்தால், அந்தரத்தில் காணும் அந்த குழந்தை அடுத்த கணமே தொட்டிலில் துயில் கொள்ளும் என்றுரைத்தது.செய்தியைக் கேட்டதும் அவர்கள் அத்தனை பேருமே அப்படியே செய்கிறோம் என தரையில் விழுந்து வணங்கி சத்தியம் செய்ததாகவும் அடுத்தகணமே தொட்டிலில் குழந்தையை பொக்கை வாய் சிரிப்புடன் கண்டார்கள். இறைவனின் கட்டளைப்படி அவர்களும் பூமியினுள் புதையுண்டு கிடந்த ரிஷபாரூடர் சிலையை வெளியில் எடுத்து வைத்து, கோவில் கட்டி வழிபாடு செய்தார்கள். குழந்தையை காணாமல் அழுத கண்ணீரை போக்கியதால், இறைவனுக்கு 'அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்' என்ற திருநாமம் சூட்டப்பட்டது. பிரதோஷ காலங்களில் மூலவரையே ரிஷபாரூடராக வழிபடலாம் என்பது இக்கோவிலின் மற்றும் ஒரு தனிச்சிறப்பாகும்.
இடப வாகனமாக இருக்கும் மகாவிஷ்ணு
ஒரு சமயம், தேவர்கள் அசுரர்கள் தொல்லையினால், கயிலாயம் சென்று தங்களை காப்பாற்ற சிவனிடம் முறையிட்டனர். சிவன் தேவர்களால் செய்யப்பட்ட தேரில் ஏறி அசுரர்களுடன் போருக்கு புறப்பட்டார். தேரின் அச்சு முறிந்து விட்டது. சிவபெருமானிடம் கொண்ட அன்பின் காரணமாக மகாவிஷ்ணு காளை உருவம் கொண்டு சிவபெருமானை ஏற்றிச் சென்றார். இதன் பின் சிவபெருமானுக்கு 'ரிஷபாரூடர்' என்ற திருநாமம் உண்டாயிற்று. மகாவிஷ்ணு இங்கு இடபவாகனமாக இருப்பதால் சிவனையும், சக்தியையும், பெருமாளையும் ஒரே மூலஸ்தானத்தில் தரிசிக்கலாம்.