நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில்
அமர்ந்த நிலையில் காட்சி தரும் நவக்கிரகங்களின் வித்தியாசமான தோற்றம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நகரின் ஒரு பகுதியாக விளங்கும் கோவில்பட்டியில் அமைந்துள்ளது கைலாசநாதர் கோவில். இறைவியின் திருநாமம் செண்பகவல்லி அம்மன். இத்தலம் மதுரைக்கு வடக்கே 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
இக்கோவில் கயிலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் கோவில் எனவும் அழைக்கப்படுகிறது. இறைவனும் இறைவியும் மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.
இத்தலத்தில், இக்கோவில் 1400 ஆண்டுகள் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பல்லவர் காலத்தைச் சேர்ந்த இந்த ஆலயம், ‘சைலேஸ்வரம்’ என்றும் பழங்காலத்தில் அழைக்கப்பட்டது. பல்லவர் மன்னர் நிருபத்துங்கன் (கி.பி. 869 - 880) காலத்தில், ஒரு பாறைப்பரப்பின் மீது இந்த கோவில் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரகங்கள் நின்ற நிலையில் தான் காட்சி அளிப்பார்கள். ஆனால் இக்கோவிலில் நவகிரகங்கள் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்கள். நவக்கிரகங்களின் இந்த வித்தியாசமான தோற்றத்தை, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.
இத்தலத்தில் நடைபெறும் 1008 சங்காபிஷேகம் மற்றும் வைகாசி தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றவை. கார்த்திகை மாத சோமவாரங்களில் 1008 சங்குகள் வைத்து சிறப்பு சங்காபிஷேகம், மலர் அலங்காரம் மற்றும் யாகங்கள் செய்யப்படுகின்றன. வைகாசி திருவிழா, கொடியேற்றம், திருக்கல்யாணம் மற்றும் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறும்.
இக்கோவிலின் தூண்கள் பழைமையைப் பறைசாற்றுகின்றன. மேலும் குமாரசம்பவம் தொடர்பான ஓவியங்கள் இக்கோவிலில் காணப்படுகின்றன.
மதுரைக்கு வடக்கே 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது நத்தம் கோவில்பட்டி.