தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில்
தென் கேதார்நாத் என்று போற்றப்படும் தலம்
வேதங்கள், நான்கு தூண்களாக இறைவனின் அருகில் இருக்கும் அபூர்வ அமைப்பு
திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கோவிந்தவல்லி.
இமயமலை கேதார்நாத் தலத்தில் உள்ள கேதாரீசுவரரை வழிபட்டால் என்ன பலனோ அதே பலன் தரக்கூடிய தலம், தின்னக்கோணம். இத்தலத்து இறைவனின் சிவலிங்கத் திருமேனியானது பசு வடிவில் சுயம்பாக கிழக்கு மேற்காக 7.5 அடி நீளமும் 3 அடி உயரமும் கொண்டது.
பசுவுக்கு நெற்றியில் திருநீற்றுப்பட்டை, நிறைய மாலைகள், ஆபரணங்கள், வஸ்திரங்கள் உடலை சுற்றி சார்த்தி படுத்திருந்தால் எப்படி இருக்குமோ, அது போல் தான் பசுபதீஸ்வரர் சுயம்புவாக பசு உருவில் காட்சி தருகிறார்.
மூலவர் பசுபதீசுவரர், கேதார்நாத் இறைவனைப் போல பசுவின் திருமேனி கொண்டு முகவாயைத் தரையில் வைத்து படுத்திருக்கும் நிலையில் அமைந்துள்ளதால், இத்தலம் தென் கேதார்நாத் என்று போற்றப்படுகின்றது.
எனவே கேதார்நாத் சிவாலாயத்துக்குச் செல்ல முடியாதவர்கள், தின்னக்கோணம் கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டால், கேதார்நாத் சென்று வந்ததன் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கேதார்நாத் இறைவனைப் போல அமைந்துள்ளதால், இத்தலம் தென் கேதார்நாத் என்று போற்றப்படுகின்றது.
இறைவன் பசுபதீசுவரரின் வலது பக்கத்தில் நான்கு தூண்கள் ஒரே வரிசையில் அமைந்துள்ளன. இப்படி மூலவரின் பக்கத்தில் தூண்கள் அமைந்திருப்பதை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது. இந்த அமைப்பு இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
வேதங்களின் பொருளை சிவபெருமான் விளக்கிக் கொண்டிருந்தபோது பார்வதி தேவியின் கவனம், அருகில் இருந்த காமதேனுவின் மீது சென்றது. அதனால் சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவி, இத்தலத்தில் தவமிருந்து மீண்டும் இறைவனை அடைந்தார்.
அந்த வகையில் நான்கு வேதங்களின் பெருமைகளையும் உணர்த்தும் வகையில், இக்கோவிலின் கருவறைத் தூண்கள் நான்கும், வேதங்கள் நான்கை எடுத்துரைப்பதாகக் கூறப்படுகின்றன.
பிராத்தனை
பித்ருக்களால் விடப்பட்ட சாபம், தோஷம், களத்ர தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும் பரிகாரத்தலமாக தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் திருக்கோவில் விளங்குகிறது.
பசுக்கு எதாவது தீங்கு இழைத்து அதனால் சாபம் பெற்றவர்கள், பசுவும் கன்றும் தானம் வழங்க வேண்டிய தலம் இது. திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க இங்கு வந்து வழிபடலாம்.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன கோவிலில் கனு உற்சவம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் நாளில் கனு உற்சவம் நடைபெறுவது வழக்கம். அப்போது, விவசாயிகள் தங்களது வயலில் புதியதாக விளைந்த காய்கறிகள், பழங்கள், கரும்பு, நெல் ஆகியவற்றை காமாட்சியம்மனுக்கு படைப்பதற்காக கொண்டு வருவார்கள். அவற்றைக் கொண்டு கோவில் முழுவதும் அலங்கரிக்கப்படும்.
கனு உற்சவத்தையொட்டி, மூலவர் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். உற்சவர் காமாட்சி அம்மன், லட்சுமி, சரஸ்வதியுடன் கேடயத்தில் உலா வந்து கோவில் வளாகத்துக்குள் உள்ள கனு மண்டபத்துக்கு எழுந்தருள்வார். அங்கு தேவியர் மூவருக்கும் காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
கனு உற்சவம் என்பது பெண்கள் தங்கள் சகோதரர்கள் நலமுடன் வாழவும், உணவுத் தட்டுப்பாடு வராமல் மகிழ்ச்சி நிலவவும் வேண்டி காமாட்சி அம்மனுக்கு நடத்தப்படுகிறது. காய்கறிகள் மீது பிரியமானவள் காமாட்சி என்பதால் அம்மனுக்கு 'சாகம்பரி' என்ற பெயரும் உண்டு. எனவே கனு உற்சவத்தின்போது காய்கறிகள், பழங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. அம்மன் சந்நிதிகளில் ஏராளமான மரக்கிளை, காய், கனிகளால் பரப்பி வைத்து அம்பிகையை அலங்காரம் செய்வர். இதற்கு ‘சாகம்பரி அலங்காரம்' என்று பெயர்.
சாகம்பரியைப் பற்றி ஆதிசங்கரர் தன்னுடைய முதல் நூலான கனகதாரா ஸ்தோத்திரத்தில் 'கீர்தேவதேதி'என்னும் பாடலில் "சாகம்பரீதி' எனக் குறிப்பிடுகின்றார்.
காஞ்சிப் பெரியவர் விரும்பிய சாகம்பரி அலங்காரத்திற்கு, ஏற்பாடு செய்த காமாட்சி அம்மன்
ஒரு போகி பண்டிகையன்று காமாட்சியம்மன் கோவிலுக்கு காஞ்சிப் பெரியவர் வந்தார். அங்கிருந்த சாஸ்திரியிடம், 'பொங்கலன்று அம்பாளை சாகம்பரியாக அலங்காரம் (காய்கறிகளால் அலங்கரித்தல்) செய்யுங்கள். இந்த வடிவில் அம்பாளை தரிசித்தால் பாவம் தீரும். புத்திர பாக்கியம், ஆரோக்கியம் உண்டாகும். அம்பாளை மட்டுமின்றி கோவிலின் எல்லா இடங்களிலும் காய்கறி, பழங்களால் தோரணம் கட்டுங்கள்' என்றார். இதற்கு இரண்டு மூன்று லோடு காய்கறியை தருவிக்க வேண்டுமே! ஒரே நாளில் அது சாத்தியமில்லையே!, என்று நினைத்த சாஸ்திரி, 'அதை அடுத்த ஆண்டு நடத்தலாமே!' என்றார் பணிவுடன். காஞ்சிப் பெரியவர் அவரிடம்,'அம்பாளிடம் விருப்பத்தைச் சொல்லிட்டேன். அவள் பாத்துக்குவா'என்று சொல்லி விட்டார்.
அன்று மாலை சென்னை கொத்தவால் சாவடியில் இருந்து மூன்று லாரிகள் கோவில் முன் வந்து நின்றது. பணியாளர்கள் விபரம் கேட்ட போது, சென்னையைச் சேர்ந்த தம்பதி ஒருவரின் ஏற்பாட்டின் மூலம் கோவில் முழுவதும் காய்கறி அலங்காரம் செய்ய சரக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தனர். உடனே பெரியவருக்கும் தகவல் அனுப்பப்பட்டது. பொங்கலன்று கோவிலுக்கு வந்த பெரியவர் எங்கும் காய்கறி, பழத் தோரணம் இருப்பது கண்டு மகிழ்ந்தார்
அம்பிகையை சாகம்பரியாக தரிசித்த பெரியவர், பக்தர்களிடம், 'பொங்கலன்று சூரியனை வழிபட்டால் ஆரோக்கியம் உண்டாகும். இன்று தர்ப்பணம் செய்வது அவசியம். அம்பாளை சாகம்பரியாக தரிசித்தால் நினைத்தது நிறைவேறும். நாளை கோபூஜை செய்யுங்கள். நாளை மறுநாள் உடன்பிறந்தவர் நலனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்'என்று சொல்லி ஆசியளித்தார்.
திருசோபுரம் சோபுரநாதர் கோவில்
தட்சிணாமூர்த்தியின் திருமேனியைத் தட்டினால் மரத்தை தட்டின ஒலி எழும் அதிசயம்
மஞ்சள் வஸ்திரத்திற்கு பதிலாக வித்தியாசமாக வெள்ளை வஸ்திரம் அணியும் தட்சிணாமூர்த்தி
கடலூர் – சிதம்பரம் சாலையில், 18 வது கி.மீ. தொலைவில் உள்ள ஆலப்பாக்கம் என்ற ஊரில் இருந்து இரண்டு கி.மீ.தூரத்தில் உள்ள தேவார தலம் திருச்சோபுரம். இறைவன் திருநாமம் சோபுரநாதர், மங்களபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் சோபுர நாயகி, தியாகவல்லியம்மை.கோயில் உள்ள பகுதி திருச்சோபுரம் என்றும், பக்கத்தில் உள்ள பகுதி தியாகவல்லி என்றும்
அழைக்கப்படுகிறது. திரிபுவனச் சக்கரவர்த்தி முதல் குலோத்துங்கனின் பட்டத்து மனைவியான தியாகவல்லியால் திருப்பணி செய்யப்பட்ட காரணத்தால், இத்தலம் தியாகவல்லி என்று பெயர் பெற்றது.
இத்தலத்து தட்சிணாமூர்த்தி சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். வழக்கமாக வலது கையில் நாகமும், இடது கையில் அக்னியும் ஏந்தியிருக்கும் தட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் இடது கையில் நாகம், வலது கையில் அக்னி என மாற்றி வைத்துள்ளார். மேலும் அவர், இத்தலத்தில் இசையின் வடிவமாக அருளுகிறார். கருங்கல்லாலான இவரது திருமேனியை தட்டிப் பார்த்தால், மரத்தை தட்டினால் எந்த ஓசை எழுமோ, அந்த ஓசை கேட்கிறது. இத்தகைய தட்சிணாமூர்த்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இவர் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு ஞானத்தை அருள்வதால், இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவிக்காமல், வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுவது மற்றுமொரு சிறப்பம்சம்.
இசையில் வல்லமை பெற விரும்புபவர்கள், இசையின் வடிவமாக விளங்கும் இவருக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக் கொள்கின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்
திருவண்ணாமலை நந்தி உயிர் பெற்றெழுந்து கால் மாற்றி அமர்ந்த அதிசயம்
பொதுவாக சிவாலயங்களில் ஈசனை பார்த்தப்படி இருக்கும் நந்தி தனது இடது காலை மடக்கி வலது காலை முன்வைத்து அமர்ந்து இருக்கும். ஆனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள பெரிய நந்தி தனது வலது காலை மடக்கி இடது காலை முன்வைத்து அமர்ந்துள்ளது. இதன் பின்னணியில் ஆச்சரியமான ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.
முன்னொரு காலத்தில், திருவண்ணாமலை கோவிலை முகலாய மன்னன் ஒருவன் கைப்பற்றினான். அப்போது ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டை சுமந்துக் கொண்டு சென்றனர். உடனே முகலாய மன்னன், எதற்காக இந்த காளைமாட்டை சுமந்து செல்கிறீர்கள் என்று கேட்டான். உடனே சிவபக்தர்கள், இந்த காளை மாடு, எங்கள் இறைவன் சிவபெருமானின் வாகனம். எங்கள் இறைவனை சுமப்பவரை நாங்கள் சுமப்பது எங்களுக்கு இந்த பிறவியில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று கூறினார்கள்.
இதைக் கேட்டு கோபமுற்ற முகலாய மன்னன், அந்த காளை மாட்டை இரண்டு துண்டாக வெட்டினான். .எங்கே உங்கள் ஈசன் வந்து இதை ஒன்று சேர்த்து உயிர் கொடுப்பாரா என்று ஏளனமாக வினவினான். அதிர்ச்சி அடைந்த சிவ பக்தர்கள் அண்ணாமலையார் சன்னதிக்கு ஓடோடி சென்று கண்ணீர் மல்க முறையிட்டனர். அப்போது அண்ணாமலையார் அசரீரியாக, அவர்களிடம் வடக்கு திசையில் ஒருவன் ஓம் நமச்சிவாய மந்திரம் சொல்லிக் கொண்டிருப்பான் அவனை அழைத்து வாருங்கள் என்று கூறினார். இதையடுத்து சிவபக்தர்கள் வடக்கு திசை நோக்கி சென்றனர். அங்கு வாலிபன் ஒருவன் ஓம் நமச்சிவாய என்று சொல்லியபடி ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தான். வாலிபனை பார்த்த சில பக்தர்கள் இவன் காளை மாட்டுக்கு உயிர் கொடுப்பானா என்று சந்தேகப்பட்டார்கள். அடுத்த வினாடி அவர்களை நோக்கி புலி ஒன்று பாய்ந்தது. அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை சொல்லி புலியை தடுத்து நிறுத்தினான். இதனால் வாலிபன் மீது நம்பிக்கை கொண்ட சிவபக்தர்கள், அண்ணாமலையார் கோவிலில் நடந்ததை அவனிடம் விவரித்தார்கள்.
உடனே அந்த வாலிபன் கோவிலுக்கு புறப்பட்டான். கோவிலுக்குள் வந்ததும் இரண்டு துண்டாக வெட்டுப்பட்டு கிடந்த காளை மாட்டை பார்த்தான். கண்ணீர் மல்க நமச்சிவாய மந்திரத்தை கூறினான். அவன் சொல்ல சொல்ல வெட்டுப்பட்டு கிடந்த மாடு ஒன்றாக இணைந்து உயிர் பெற்றது.
இதைக் கண்டு ஆத்திரமும் அவமானமும் அடைந்த முகலாய மன்னன், இந்த வாலிபனுக்கு இன்னும் சில போட்டிகள் வைக்க விரும்புகிறேன். அதில் இந்த வாலிபன் வெற்றி பெற்றால் என்னிடம் உள்ள பொருட்கள் அனைத்தையும் இந்த ஆலயத்துக்கு தந்து விடுகிறேன். இல்லையென்றால் இந்த ஆலயத்தை இடித்து தகர்த்து விடுவேன என்றான். அவனது இந்த சவாலை வாலிபன் ஏற்றுக் கொண்டான். உடனே முகலாய மன்னன் ஒரு தட்டு நிறைய மாமிசத்தை கொண்டு வர உத்தரவிட்டான். அந்த மாமிசத்தை அண்ணாமலையாருக்கு படையுங்கள். அவருக்கு உண்மையிலேயே சக்தி இருந்தால் அவை பூக்களாக மாறட்டும் என்றான். அவன் உத்தரவுப்படி மாமிசத்தை அண்ணாமலையார் அருகே கொண்டு சென்றனர். அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அடுத்த வினாடி மாமிச துண்டங்கள் அனைத்தும் பல்வேறு வகை பூக்களாக மாறின.
இதையும் முகலாய மன்னனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வாலிபனுக்கு அடுத்த போட்டியாக ராஜ கோபுரத்தின் அருகே உள்ள பெரிய நந்தியை உயிர் பெற்று எழ வைக்கச் சொன்னான். அப்படி உயிர் பெற்றெழுந்த நந்தியை கால்களை மாற்றி அமர வைக்க வேண்டும் என்றும் சவால் விட்டான். இந்த சவாலையும் ஏற்றுக் கொண்ட வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அந்த மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல நந்தி உயிர் பெற்று எழுந்தது. தனது கால்களை மாற்றி அமர்ந்தது. இதை கண்டதும் முகலாய மன்னனுக்கு கை-கால்கள் நடுங்கியது. அண்ணாமலையார் ஆலயத்துக்கு நிறைய பொன்னும் பொருளும் கொடுத்து விட்டு அங்கிருந்து வெளியேறினான்.
முகலாய மன்னனுக்கு அற்புதங்களை நிகழ்த்தி காட்டிய வாலிபன்தான் பிற்காலத்தில் வீரேகிய முனிவராக மாறி திருவண்ணாமலை வடக்கில் உள்ள சீனந்தல் எனும் கிராமத்தில் வசித்து வந்தார். அவர் நினைவாக அந்த ஊரில் ஒரு மடம் உள்ளது. அவரைப் போற்றும் வகையில் ராஜகோபுரம் அருகே கால் மாற்றி அமர்ந்த நந்தி தனது தலையை வடக்கு திசை நோக்கி லேசாக சாய்த்தபடி உள்ளது. அன்று முதல் பெரிய நந்தி தனது வலது காலை மடித்தும் இடது காலை முன்வைத்தும் அமர்ந்துள்ளது.
தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்
சிவபெருமான் பக்தனுக்காக வயலில் விவசாய வேலை பார்த்த தலம்
கடலூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தூரத்திலுள்ள தேவாரத்தலம் திருத்திணை சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில். தற்போது இந்தத் தலம், தீர்த்தனகிரி என்று அழைக்கப்படுகிறது. இறைவியின் திருநாமம் நீலாம்பிகை, ஒப்பிலா நாயகி.
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த ஒரு விவசாய தம்பதியினரான பெரியான் என்னும் பள்ளனும் அவன் மனைவியும் சிவபெருமான் மீது தீவிர பக்தியுடன் இருந்தனர். அவர்கள் தினமும் தாங்கள் உணவு அருந்துவதற்கு முன் யாராவது ஒருவருக்காவது உணவு அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.
ஒருநாள் சிவபெருமான் அவர்களது பக்தியை சோதிப்பதற்காக எவரும் அத் தம்பதியரின் வீட்டுக்கு செல்லாதபடி செய்துவிட்டார். அதனால், விவசாயி தன் வயலில் வேலை செய்யும் பணியாளர்கள் யாருக்காவது உணவு அளிக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் வயலுக்குச் சென்றார். அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. அப்போது, சிவபெருமான் முதியவர் வடிவம் தாங்கி அங்கே வந்தார். விவசாயி அவரிடம், தான் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். முதியவர் அவரிடம், 'நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே, உன் வயலில் எனக்கு ஏதாவது வேலை கொடுத்தாள், அதற்கு கூலியாக வேண்டுமானால் சாப்பிடுகிறேன்' என்றார். விவசாயியும் ஒப்புக்கொண்டு, தன் வயலை உழும்படி கூறினார். முதியவர் வயலில் இறங்கி உழுதார்.
தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு வயலுக்குத் திரும்பினர். அப்போது, வயலில் விதைக்கப்பட்டிருந்த தினைப்பயிர் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. நிலத்தை உழுத உடனேயே இத்தனை பயிர் விளைந்ததை கண்டு ஆச்சரியமடைந்த விவசாயி, சந்தேகத்துடன் முதியவருக்கு அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் சாதம் பரிமாறினார். முதியவர் சாப்பிட்ட பின்பு, அவரிடம் 'ஒரே நாளில் பயிர் விளைந்தது எப்படி?' எனத் தன் சந்தேகத்தைக் கேட்டார். சிரித்த முதியவர் சிவனாக சுயரூபம் காட்டி அத்தம்பதியருக்கு முக்தி கொடுத்து, இத்தலத்தில் சிவலிங்கமாக எழுந்தருளினார். அதிசயமாக ஒரே நாளில் தினை விளைந்ததால் இத்தலம் தினைநகர் என்று பெயர் பெற்றது.
சிவபெருமான், சுயம்புலிங்கமாக சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். வயலில் வேலை செய்ததால் சிவபெருமான், 'விவசாயி' என்றும் பெயர் பெற்றார்.அவர் நிலத்தை உழ ஏர் மற்றும் நீர் இறைக்கும் கலம் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் என்பதால், அவையும் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன.
நடராஜரின் தாண்டவத்திற்கு இசைக்கும் திருமால், பிரம்மா
இத்தலத்தில் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் நடராஜரின் திருவடிக்கு கீழே, திருமால் சங்கு ஊதியபடியும், பிரம்மா மத்தளம் வாசித்தபடியும் இருக்கின்றனர். திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவன் நடனமாடும் இக்காட்சியை காண்பது மிகவும் அபூர்வம். திருமாலும் பிரம்மாவும் இசைத்துக் கொண்டிருப்பதால், இவர்கள் இருவரையும் 'இசையமைப்பாளர்' என்று அழைக்கும் வழக்கமும் இருக்கிறது. நடனம், இசை பயில்பவர்கள் இவருக்கு பூஜை செய்து வேண்டிக்கொண்டால், கலையில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை.
காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவில்
ஆருத்ரா தரிசனத்திற்கு, காவிரியாற்றில் பரிசலில் பவனி வரும் நடராஜப்பெருமான்
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். திருவாதிரை நட்சத்திர தினத்தில் செய்யப்படும் மகா அபிஷேகத்தையும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தையும் காண பக்தர்கள் குவிவார்கள்.
ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம். பொதுவாக எல்லா சிவாலயங்களிலும், நடராஜப் பெருமான், பக்தர்களின் ஆருத்ரா தரிசனத்திற்கு வீதியுலா வருவது வழக்கம். ஆனால்,ஈரோடு மாவட்டம், காங்கயம்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள நட்டாற்றீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனம் சற்று வித்தியாசமாக நடைபெறுகிறது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள நடராஜப்பெருமான், பக்தர்களின் ஆருத்ரா தரிசனத்திற்காக, ஒரு பரிசலில் எழுந்தருளியும், அவருக்கு முன்னால் மற்றொரு பரிசலில் மேள வாத்தியங்கள் இசை முழங்கிக் கொண்டு செல்ல, காவிரி நதியில் கோவிலைச் சுற்றி வருவார்.
இரண்டு நிலைகளாக அமைந்திருக்கும் கோவில்
ஈரோட்டிலிருந்து கொடுமுடி வழியாக கரூர் செல்லும் வழியில் காங்கயம்பாளையம் அமைந்துள்ளது. இங்குதான் காவிரியின் நடுவில் நட்டாற்றீஸ்வரர் கோவில் கொண்டிருக்கிறார். கோவிலின் இருபுறமும் காவிரி ஆறு சுழித்துக்கொண்டு ஓடுகிறது. கோயிலுக்குச் செல்பவர்கள் வருடத்தில் சுமார் ஒன்பது மாதங்கள் ஆற்றை பரிசலில் கடந்து சென்றுதான் தரிசனம் செய்து வர வேண்டும். இக்கோவில் இரண்டு நிலைகளாக அமைந்துள்ளது. மேல் தளத்தில் நட்டாற்றீஸ்வரரும், கீழ் தளத்தில் நல்லநாயகி அம்பாளும் அருள்கிறார்கள். இருவரும் விவாக கோலத்தில் அருள்வது விசேஷ அம்சம்.
கயிலையில் நிகழ்ந்த சிவபெருமான்-பார்வதி திருக்கல்யாணத்தைத் தரிசிப்பதற்காக எல்லோரும் கயிலையில் குவிந்துவிட, உலகின் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதைச் சமன்செய்ய அகத்தியரை, சிவபெருமான்தென்புலம் அனுப்பினார். அந்தத் திருமணத்தைப் பார்க்க முடியாத அகத்தியருக்கு, சிவபெருமான் அவர் வேண்டிய தலங்கள்தோறும் திருமணக் காட்சி தந்து அருளினார். ஒரு சமயம், அகத்தியருக்கு அசுரஹத்தி தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க, காவிரியின் உற்பத்தி ஸ்தானம் முதல் கடலில் கலக்கும் முகத்துவாரம் வரையுள்ள காவிரி ஆற்றின் மையப்புள்ளியாக உள்ள இடத்தில் மணலில் லிங்கம் செய்து சிவ பூஜை செய்ய, பாவம் போகும் என அகத்தியர் உணர்ந்தார். காவிரி ஆற்றின் நடுவில் பூஜை செய்ய இடம் தேர்ந்தெடுக்க காவிரி ஆற்றங்கரையோரம் அகத்தியர் சென்ற போது முருகன் முன் வந்து அகத்தியரை அழைத்து வந்து காவிரியில் நடு இடத்தைத் தேர்ந்தெடுத்து காட்டினார். காவிரி ஆற்றின் நடுவில் இருந்த அந்தக் குன்றில் மணலில் லிங்கம் ஒன்றைப் பிடித்து வைத்து அகத்தியர் பூஜை செய்தார். காட்டில் விளைந்திருந்த கம்பை எடுத்து கையால் திரித்து மாவாக்கி, நீர் விட்டுக் காய்ச்சி இறைவனுக்குப் படைத்தார். அகத்தியரால் வணங்கப்பட்ட அந்த சிவலிங்கம் நடு ஆற்றில் குடி கொண்டதால், 'நட்டாற்றீஸ்வரர்' எனவும் அகத்தியரால் மண்ணால் பிடித்து வைத்து வணங்கப்பட்டதால், அகத்தீஸ்வரர் எனவும் அழைக்கப்பட்டார்.
பிராத்தனை
நட்டாற்றீஸ்வரரின் நல்லருளால், தம்பதிகளின் வாழ்வில் பிணக்குகள், பிரச்னைகள் நீங்கி தாம்பத்தியம் சிறந்தோங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குடல், வயிறு தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் வந்து வழிபட்டுச் செல்லும் தலமாக இது உள்ளது.
நத்தம் வாலீஸ்வரர் கோவில்
பிரதோஷ நாயகர் அம்பிகையைத் தனது இடக்கரத்தால் அணைத்துக் கொண்டிருக்கும் அபூர்வத் தோற்றம்
சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்செட்டி என்ற ஊரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நத்தம் வாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி.
பிரதோஷ காலங்களில் கோவில் பிராகாரத்தில் வலம் வருவதற்காக அமைந்துள்ள உற்சவமூர்த்தியே பிரதோஷ நாயகர் என்று அழைக்கப்படுகின்றார். ஏறத்தாழ ஒன்றரை அடி உயரம் உடைய இந்த மூர்த்தி சந்திரசேகரரைப் போன்ற தோற்றமுடையவர்.பன்னிரு கரங்களில் மான்,மழுவும், முன்னிரு கைகளில் அபய,வரத முத்திரையும் தாங்கியவராய் நின்ற நிலையில் விளங்குகின்றார்.தலையில் ஜடாமகுடம் விளங்க,அதில் வெண்பறை,கங்கை,ஊமத்தை மலர் தரித்தவராய் மூன்று கண்களும் கருத்த கண்டமுடையவராய் எல்லையில்லா மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன் அமைந்துள்ளார்.அவரது இடப்புறத்தில் அம்பிகை தனது வலக் கரத்தில் நீலோற்பல மலர் ஏந்தி,இடது கரத்தைத் தொங்கவிட்ட நிலையில் நின்றவாறு காட்சியளிக்கின்றாள். பிரதோஷ தினத்தின் மாலையில் இந்தப் பிரதோஷ மூர்த்தியை இடப வாகனத்தில் வைத்து அலங்கரித்துக் கோவிலின் உட்பிராகாரத்தில் வலம் வருகின்றனர்.
இந்தத் தலத்தில் பிரதோஷ நாயகர் அம்பிகையை தனது இடது கையால் அணைத்திற்கும் தோற்றமானது ஒரு அரிய காட்சியாகும்.இதற்கு பின்னணியில் ஒரு புராண நிகழ்ச்சி உள்ளது.
ஒரு சமயம் சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்த முற்பட்ட போது, பார்வதி தேவி அஞ்சினாள். அவளுடைய பயத்தைப் போக்கும் வகையில், சிவபெருமான் அவளை அணைத்துக் கொண்டார். இந்த அடிப்படையில் சிவபெருமான் அம்பிகையைத் தனது இடக்கரத்தால் அணைத்துக் கொண்டிருப்பது போன்ற பிரதோஷ நாயகர் உருவம் அமைக்கப் பெற்றது.இந்த மூர்த்தியை உமா ஆலிங்கன மூர்த்தியென்றும், அணைத்தெழுந்த நாதர் என்றும் அழைக்கின்றனர்.
காமாட்சி விளக்கினை ஏற்றி வைத்துக்கொண்டு, பிரதோஷ நாயகருடன் வலம் வரும் திருமண தடை நீக்கும் வழிபாடு
உமா ஆலிங்கனராய் உள்ள இந்தத் தலத்து பிரதோஷ மூர்த்தியை, பிரதோஷ காலத்தில் வழிபட்டு பிரதோஷ சுவாமி புறப்பாட்டின் போது சுவாமிக்கு சுண்டல் நிவேதனம் செய்து முல்லை, நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சனை செய்து, திருமணம் ஆகவேண்டிய பெண்கள் கையில் காமாட்சி விளக்கினை ஏற்றி வைத்துக்கொண்டு சுவாமியுடன் மூன்று வலம் வருகையில் திருமணம் கைகூடும். இம்மாதிரி 5 பிரதோஷங்கள் செய்ய வேண்டும். திருமணமாகாத ஆண்களின் தாய், இம்மாதிரி பிரார்த்தனை செய்து வலம் வரும்போது அவர்களின் பிள்ளைகளுக்கு திருமணம் கை கூடும்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசலை பெருமாள் கடந்து செல்லும் ஒரே முருகன் தலம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம், மதுரைக்கு தென்மேற்கில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்டார்.
இக்கோவில் ஒரு குடைவரைக் கோவிலாகும். ஆறுபடை வீடுகளில் இத்தலத்தில்தான் முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். மேலும், முருகப்பெருமானின் கையிலுள்ள வேலுக்கே பால் அபிஷேகமும், மஞ்சன நீராட்டுகளும் நடைபெறுகின்றன. முருகப்பெருமானின் இடப்பக்கம் தெய்வானையும், வலப்பக்கம் நாரதரும் வீற்றிருக்கின்றனர். இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவபெருமான்), பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி, ஒரே குடவரையில் இங்கு அருளுகின்றனர். குடவரையின் மேற்குப் பகுதியில் சத்தியகிரீஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறைக்கு கிழக்குப் பகுதியில் பவளக்கனிவாய் பெருமாள் மேற்கு திசை நோக்கி வீற்றிருக்கிறார். அவருக்கு இருபுறமும் மகாலட்சுமி மற்றும் மதங்கமாமுனிவர் திருவுருவங்களும் உள்ளன. இக்கோவிலில் பவளக்கனிவாய் பெருமாள் வீற்றிருந்து அருள்பாலிப்பது, வேறு எந்த தலத்துக்கும் இல்லாத தனிச்சிறப்பாகும். சிவபெருமானுக்கு எதிரே நந்தி இருக்கவேண்டிய இடத்தில் பெருமாள் இருப்பதால், இவருக்கு 'மால் விடை' எனும் சிறப்பு பெயரும் உண்டு. இத்தகைய அமைப்பு வேறு எந்த தலத்திலும் இல்லை.
முருகப்பெருமானின் திருத்தலத்திலேயே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவது திருப்பரங்குன்றத்தில் மட்டும்தான் என்பதும் சிறப்புக்குரியது. வைகுண்ட ஏகாதசி அன்று, இக்கோவிலில் உள்ள கம்பத்துடி மண்டபத்திலிருந்து மடப்பள்ளி மண்டபம் செல்லும் வழியில் உள்ள பெரிய கதவிற்கு சந்தனம் பூசி, மாலைகள் சாற்றப்பட்டு பூஜைகள் நடைபெறும். இந்த பெரிய கதவு தான், சொர்க்கவாசல் ஆக கருதப்பட்டு வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கடந்து செல்கிறார்.
கலை நயம் மிக்க நுணுக்கமான சிற்பங்கள்
இக்கோவிலில் கலை நயம் மிக்க நுணுக்கமான சிற்பங்கள் பார்ப்பவர்களின் கண்ணுக்கு விருந்தாக அமைகின்றது.
கோவில் வாயிலை அடுத்து உள்ளே அமைந்துள்ளது ஆஸ்தான மண்டபம். இம்மண்டபம் சுந்தர பாண்டியன் மண்டபம் என்றும் வழங்கப்படுகிறது. அழகிய கண்கவர் கலை நயம் கொண்ட சிற்பங்களுடன், 48 தூண்களுடன் இம்மண்டபம் இராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது..
மண்டபத் தூண்களில் யாளிகள், குதிரை வீரர்கள், பத்திரகாளி, துர்க்கை, நர்த்தன விநாயகர், வீரபாகு, சிவனார் திரிபுரம் எரிக்கும் காட்சி, திருமால் மற்றும் மகா லட்சுமியின் சிற்பங்கள் அற்புத வேலைப்பாடுகளுடன் செதுக்கப் பெற்றுள்ளன.
பிரம்மன் வேள்வி வளர்த்துத் திருமணச் சடங்குகள் நடத்த, இந்திரன் தேவயானையை முருகனுக்குத் தாரை வார்த்துக் கொடுக்க, தேவயானையைக் கைத்தலம் பற்றிய பெருமிதத்துடன், அதே வேளையில் நாணம் கலந்த மகிழ்ச்சியுடன் இருப்பது போன்று முருகப் பெருமானின் திருமணக் கோலம் எழிலுற வடிவமைக்கப் பெற்றுள்ளது.
இக்கோவிலில் திருவாட்சி மண்டபம் என்னும் பெரிய கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்திற்கு ஆறுகால் மண்டபம் என்ற பெயரும் உண்டு. இம்மண்டபத்தின் முன் புறம் ஏறும் படிகளின் இரு பக்கங்களிலும் தேர் இழுக்கும் இரு குதிரைகள் உள்ளன. இவை ஒரே கல்லில் செய்யப்பட்டு கலை நயத்துடன் விளங்குகின்றன. இந்த குதிரைகளின் உடலில் காணப்படும் அணிகலன்கள் மிகுந்த நுணுக்கத்துடன் செய்யப்பட்டுள்ளன.
இம்மண்டபத்தின் தூண்களில் மீனாட்சி அம்மனின் திக்விஜயம், ஹயக்ரீவர், நரசிம்மர், ஆஞ்சநேயர், மன்மதன், ஆலவாய் அன்னல், வராகிஅம்மன் என்று பல்வேறு அழகிய, தெய்வீக சிற்ப சிலைகள் உள்ளன.
இறைவன் சத்தியகிரீசுவரர் சந்நிதி வாயிலிலுள்ள துவாரபாலர்களின் உருவங்களில் காணப்படும் ஆடை மடிப்பு கலையம்சங்களும், இதர சிற்ப அம்சங்களும் பிரமிக்கத்தக்கவையாக உள்ளன.
ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதர் கோவில்
வைகுண்ட ஏகாதசி உற்சவம் வித்தியாசமாக கொண்டாடப்படும் திவ்ய தேசம்
மணித்துளி தரிசனம் தந்து பிறவா நிலை தரும் பெருமாள்
திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியிலிருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள திவ்ய தேசம் ஸ்ரீவைகுண்டம். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 81 வது திவ்ய தேசம் ஆகும்.
விஷ்ணு இத்தலத்தில் வைகுண்ட நாதராய் எழுந்தருளி இருப்பதின் பின்னணியில் உள்ள புராண வரலாறு
பிரம்ம தேவனிடமிருந்து அசுரன் சோமுகன் வேதங்களைத் திருடிச் சென்றுவிட, பிரம்மா விஷ்ணுவிடம் உதவி வேண்டுகிறார். தாமிரபரணிக்கரையில் உள்ள கலசதீர்த்தத்தில் நீராடி வைகுண்டத்திலுள்ள நாராயணனை நோக்கி அவர் தவம்புரிய, நாராயணனும் வேதங்களை மீட்டு அவருக்கு உதவும்பொருட்டு, அதே தலத்தில் வைகுண்டநாதராய் எழுந்தருளினார் என்கிறது இக்கோவிலின் தலபுராணம்.
மூலவர் வைகுண்டநாதர் ஆதிசேஷன் குடைபிடிக்க, நான்கு கரங்களுடன், மார்பில் மகாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். பொதுவாக பெருமாள் ஆதிசேஷனில் சயனித்தபடி இருப்பார். ஆனால் இங்கு ஆதிசேஷன் குடைபிடிக்க பெருமாள் நின்ற திருக்கோலத்தில் இருப்பது தனிசிறப்பாகும். தாயார் திருநாமம் வைகுண்டநாச்சியார்.
உற்சவர் சோரநாதர் (கள்ளபிரான்) பூதேவி, ஸ்ரீதேவியுடன் காட்சி தருகிறார். இவருக்குரிய தாயாரின் திருநாமம் சோர நாச்சியார். இரண்டு தாயார்களுக்கும் தனித்தனி சன்னிதி உள்ளன.
வைகுண்ட ஏகாதசி உற்சவம் வித்தியாசமாக கொண்டாடப்படும் திவ்ய தேசம்
இந்த வைகுண்டநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவம் மற்ற பெருமாள் கோவில்களை விட சற்று வித்தியாசமாக அனுசரிக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று உற்சவர் கள்ளபிரானை அர்த்த மண்டபத்திற்குள் கொண்டு செல்வார்கள். அதே தருணம் மூலவர் வைகுண்ட பெருமாள் சன்னதியை அடைத்து விடுவார்கள். பின் கண் இமைக்கும் நேரத்திற்குள் நடை திறந்து, சுவாமிக்கு தீபாராதனை காட்டி உடனே அடைத்து விடுவர். ஒரு சில மணித்துளிகளுக்குள் இந்த வைபவம் நடந்து முடிந்து விடும். இதற்கு மணித்துளி தரிசனம் என்று பெயர். இவ்வேளையில் சுவாமியை தரிசித்தால், பிறப்பில்லா நிலை கிடைக்கும் என்பது ஐதீகம்.
உற்சவர் கள்ளபிரானுக்கு 108 போர்வை சாற்றும் வைபவம்
ஒவ்வொரு வருடமும் தை முதல் நாளில் உற்சவர் கள்ளபிரானுக்கு, 108 போர்வைகள் அணிவித்து பூஜை செய்வது வழக்கம். பின், உற்சவர் கள்ளபிரான் கொடிமரத்தைச் சுற்றி வருவார். அதன்பின், ஒவ்வொரு போர்வையாக எடுத்து அலங்காரத்தைக் கலைப்பார்கள். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் உள்ள அனைத்து பெருமாள்களும், இந்நாளில் கள்ளபிரான் வடிவில் காட்சி தருவதாக ஐதீகம்.
சூரிய தோஷ நிவர்த்தி தலம்
பாண்டிய நாட்டு நவதிருப்பதி என்பது திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒன்பது வைணவத் திவ்ய தேசங்களைக் குறிக்கும்.நவதிருப்பதி தலங்களில் முதலாவதான இத்தலம் சூரியனுக்குரியது.
சித்திரை மற்றும் ஐப்பசி மாத பவுர்ணமியன்று காலையில் சூரிய ஒளி வைகுண்டநாதர் பாதத்தில் விழும். இதற்கு ஏற்றாற்போல் சுவாமி சன்னதி எதிரிலுள்ள கொடி மரம், பலிபீடம் தென்புறம் விலகியிருக்கிறது. ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக இங்கு வேண்டிக்கொள்ளலாம்.
ஒரே தலத்திலேயே வைகுண்டநாதர் கோவிலும், கைலாசநாதர் கோவிலும் அமைந்திருக்கும் தனிச்சிறப்பு
இந்த தலத்திலேயே, கைலாசநாதர் கோவிலும் உள்ளது. ஒரே ஊரில் கைலாசநாதர் கோவிலும், வைகுண்ட நாதர் கோவிலும் அமைந்திருப்பது வைகுண்டம், கயிலாயம் என இரண்டையும் தரிசித்த பலன் கிடைக்கும்.
கண்களையும், கருத்தையும் கவரும் சிற்பங்கள்
இக்கோவிலில் கண்களையும், கருத்தையும் கவரும் வகையில் ஏராளமான சிற்பங்கள் அமைந்துள்ளன. சிற்பக்கலை ரசிகர்களுக்கு இக்கோவில் ஒரு அரிய பொக்கிஷமாகும். நவநாரி குஞ்சரம் என்னும் யானை உருவ வடிவில் அமைந்திருக்கும் ஒன்பது பெண்கள், பஞ்ச நாரி துரகம் என்னும் குதிரை உருவ வடிவில் அமைந்திருக்கும் ஆகிய சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
வைகுண்ட ஏகாதசியின் சிறப்புகள்
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாக நிகழ்வது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வருடம் முழுவதும் விழாக்கள் நடைபெறுவதால், இது 'பூலோக வைகுண்டம்'என்று அழைக்கப்படுகிறது. ஆண்டின் 365 நாட்களில் 322 நாட்கள் பெருமாளுக்கு பல்வேறு சிறப்புத் திருவிழாக்கள் மற்றும் உற்சவங்கள் நடைபெறுகின்றன.அத்தகைய திருவிழாக்களில் முதன்மை பெறுவது வைகுண்ட ஏகாதசி ஆகும். அதன் சிறப்பை இப்பதிவில் நாம் காணலாம்.
திதிகளில் பெருமாளுக்கு உகந்தது ஏகாதசி திதி. வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் வரும் ஏகாதசி திதிகள் சிறப்புமிக்கவை.பெருமாளுக்கு இருக்கப்படும் விரதங்களில் மிக முக்கியமானது ஏகாதசி விரதம்.
ஏகாதசி விரதம்
முன்னொருகாலத்தில் வாழ்ந்த முரன் என்னும் அசுரன் தேவர்களையும், மனிதர்களையும் துன்புறுத்திவந்தான். அவர்கள் தங்களை காப்பாற்றும் படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். முரனுடன் விஷ்ணு போரிட்டு வெற்றி பெற்றார். பிறகு சென்று ஓய்வெடுத்து கொண்டிருந்தார். அப்போது முரன், பெருமாளைக் கொல்ல வாளை ஓங்கியபோது, விஷ்ணு தன் உடலிலுள்ள சக்தியை ஒரு பெண் வடிவத்தில் தோற்றுவித்தார். அவள் முரனுடன் போரிட்டு வென்றாள்.
அசுரனை வென்ற பெண்ணுக்கு ஏகாதசி என்று பெயர் சூட்டினார் பெருமாள். அசுரனை வென்ற நாள் ஏகாதசி என அழைக்கப்படும் என்றும், அன்று தன்னை வழிபடுவோருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாகவும் வரமளித்தார். அந்த தினமே வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஏகாதசி திதி விஷ்ணுவின் அம்சமாக கருதப்படுவதால், ஏகாதசி தினத்தில் விரதம் இருந்தால் திருமாலின் அருளை முழுவதுமாக பெற முடியும். ஏகாதசி விரதம், பாவங்களை போக்குவதுடன் மோட்சத்தை தரக் கூடியது. வாழ்நாள் முழுவதும் ஏகாதசி விரதம் இருப்பவருக்கு மறுபிறவி கிடையாது. தேவர்களுக்கு நிகரான அந்தஸ்தினை அவர்கள் பெறுவார்கள். அதிலும் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி எனப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி உற்சவம்
பிரம்மாவின் அகங்காரத்தை அழிக்கத் தோன்றிய மது - கைடபர் ஆகிய அசுரர்கள் தேவர்கள், முனிவர்கள் என அனைவருக்கும் தொல்லை கொடுத்தனர். அவர்களை அழிக்க விஷ்ணு ஒரு மாதம் தொடர்ந்து போரிட்டார். பின்பு அவர்களை சம்ஹாரம் செய்தார். ஆனால் அவர்கள் விஷ்ணுவிடம் பெற்ற வரத்தின் காரணமாக வைகுண்டப் பதவியை அடைந்தனர். அப்படி அவர்கள் பரம பத வாசலை அடைந்தநாள் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி. அன்று பெருமாள் அவர்களுக்காக வைகுண்ட வாசலைத் திறந்தருளினார். பெருமாளைச் சரணடைந்த அசுரர்கள், 'தங்களுக்கு மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி அன்று வைகுண்ட வாசலைத் திறந்தருளியது போல பெருமாள் கோயில்களில் இந்த நாளில் சொர்க்க வாசலைக் கடக்கிறவர்களுக்கும் வைகுண்ட வாசலைத் திறந்தருள வேண்டும் என்றும் அந்த நாள் ஒரு உற்சவமாகக் கொண்டாடப்பட வேண்டும்' என்றும் வேண்டிக்கொண்டனர். பெருமாளும் அதற்கு இசைந்தார். அந்த ஏகாதசி திதியே வைகுண்ட ஏகாதசி எனப் போற்றப்படுகிறது.
வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியா விட்டாலும், வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமாவது விரதம் இருந்து பெருமாளை வழிபட வேண்டும். வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்தால் இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்களையும் நீக்கக் கூடியது. வைகுண்ட ஏகாதசி அன்று இறப்பவர்களுக்கும் மறுபிறவி என்பது கிடையாது. வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கநாதரின் பாதணிகள்
ஸ்ரீரங்கம் கோவிலில் 'ஏழு' என்ற எண்ணிக்கையில் அமைந்த சிறப்பு அம்சங்கள்
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இக்கோவில் மூலவர் ரங்கநாதப் பெருமானுக்கு, ஆறு மாதத்திற்கு ஒருமுறை அவர் காலில் அணிந்திருக்கும் பாதணிகள் மாற்றப்படுகின்றன.
இந்த பாதணிகள் ஒவ்வொன்றும் சுமார் இரண்டிலிருந்து, மூன்று அடி நீளம் உள்ளது. இவை சுமார் 30-40 அடி உயரம் கொண்ட ஒரு மனிதருக்கானதைப் போன்று இருக்கும். இந்த பாதணிகள் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரத்யேகமாகச் செய்யப்படுகின்றன.
வலது பாதணி ஒருவரிடமும், இடது பாதணி மற்றொருவரிடமும், செய்யக் கொடுப்பார்கள். இருவரும், ஒரே ஊரில் இல்லாமல், வெவ்வேறு ஊர்களில் இருப்பவர்கள். 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு பாதணிகளைச் செய்வார்கள்.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை பழைய பாதணிகளை ஸ்ரீரங்கநாதரின் திருவடிகளை விட்டு கழட்டிவிட்டு, புதிய பாதணிகளை மாற்றிவிடுவார்கள். அதிசயமான விஷயம் என்னவென்றால், திருவடிகளை விட்டு, எடுத்துள்ள, பழைய பாதணிகள் இரண்டிலும், பாத பகுதிகளில், தேய்மானம் இருக்கும்.
இவ்வாறு, மாற்றியுள்ள, தேய்மானம் அடைந்த, ஸ்ரீ ரங்கநாதர் பாதணிகள் ஸ்ரீரங்கம் திருக்கொட்டாரத்தில் தூணில் மாட்டி வைக்கப்படும். ஸ்ரீரங்கம் கோவில் சென்றால், இந்த அரங்கன் அணிந்து, தேய்மானம் கண்டுள்ள, பழைய பாதணிகளை, கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம்.
ஸ்ரீரங்கம் கோவிலில் 'ஏழு' என்ற எண்ணிக்கையில் அமைந்த சிறப்பு அம்சங்கள்
108 வைணத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாக திகழும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் 'ஏழு' என்ற எண்ணிக்கையில் பல சிறப்பு அம்சங்கள் அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை நாம் இங்கே காணலாம்.
ஏழு உலகங்களை அடக்கியது இந்த கோவில் என்ற பொருளில் ஏழு பிரகாரங்களுடன், ஏழு மதில்களைக் கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்.
பெரிய என்ற சொல்லால் அழைக்கப்படும் ஏழு பெருமை உடைய அம்சங்கள் இக்கோவிலில் அமைந்துள்ளது. அவை, 1) பெரிய கோவில், 2) பெரிய பெருமாள், 3) பெரிய பிராட்டியார், 4) பெரிய கருடன், 5) பெரிய வசரம். 6) பெரிய திருமதில் 7) பெரிய கோபுரம் ஆகியவை ஆகும். இப்படி அனைத்தும் 'பெரிய' என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.
ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் ஏழாவது அவதாரமாகும். கோவிலில் நான்கு திசைகளிலும் ராமபிரான் சன்னதி அமைந்திருப்பது ஒரு தனி சிறப்பாகும்.
பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் ஏழு கோபுரங்கள் உள்ளன.
கோவிலில் உள்ள ஏழு பிரகாரங்களிலும் பெருமாளின் ஏழு திருவடிகள் உள்ளன.
இக்கோவிலில் நடைபெறும் ஏழு சேவைகள், வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும்.
இக்கோவில் வளாகத்தில் உள்ள ஏழு மண்டபங்களில், உற்சவர் நம்பெருமாள் ஒரு நாள் மட்டுமே எழுந்தருள்வார்.
கோவில்பட்டி பூவனநாதசுவாமி கோவில்
உயரமான திருமேனியுடைய செண்பகவல்லி அம்மன்
நிற்கும் நிலையில் உள்ள அம்பாளை உட்கார்ந்து இருப்பது போல் அலங்காரம் செய்யும் தனிச்சிறப்பு
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி நகரத்தில் அமைந்துள்ளது பூவனநாதசுவாமி கோவில். இறைவியின் திருநாமம் செண்பகவல்லி அம்மன். இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
‘சதுங்கன்’, ‘பதுமன்’ என்ற இரண்டு சர்ப்பத் தலைவர்கள் இத்தல இறைவனைப் பூவனப் பூக்களால் அர்ச்சித்ததால் இத்தல இறைவனுக்கு ‘பூவனநாதர்’ என்ற திருநாமம் பெற்றார். இறைவனும், இறைவியும் கிழக்கு பார்த்தபடி அருள்புரியம் சிவாலயங்களில் இத்தலமும் ஒன்று.
அகத்தியரின் தோஷத்தை நீக்கிய தலம்
ஈசனின் திருமணத்தின் போது வடபுறம் தாழ்ந்து தென்புறம் உயர்ந்த நிலையில், உலகை சமன் செய்யும் வகையில், இறைவனின் ஆணைப்படி அகத்தியர் பொதிகை மலை நோக்கிப் பயணித்தார். வழியில் எதிர்த்த அரக்கர்களான வாதாபி மற்றும் வில்வனன் ஆகியோரை வதைத்ததால், பிரம்மஹத்தி தோஷம் நீங்க இத்தலத்தில் எழுந்தருளிய பூவனநாதரைப் பூஜித்து தோஷம் நீங்கப் பெற்றார். அகத்தியர் ஏற்படுத்திய தீர்த்தமே இத்தலத்தில் அகத்திய தீர்த்தமாகப் போற்றப்படுகிறது.
தமிழ்நாட்டிலேயே உயரமான திருமேனியுடைய செண்பகவல்லி அம்மன்
இந்த தலத்தில்தான், தமிழ்நாட்டிலேயே உயரமான திருமேனியுடைய செண்பகவல்லி அம்மன் அருள்பாலிக்கிறாள். இந்த அம்மனின் உயரம் சுமார் 7 அடி. செண்பக மன்னனால் எழுப்பப்பட்டது இந்தக் கோவில் என்பதால் இத்தல இறைவிக்கு செண்பகவல்லி எனப் பெயர் சூட்டப்பட்டது.
மதுரையில் மீனாட்சி அம்மன் எப்படியோ, அதுபோல கோவில்பட்டியில், செண்பகவல்லி அம்மன் முக்கியத்துவம் பெற்று இருக்கிறார். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மதுரைக்கு அடுத்தபடியாக, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் அம்பிகையே அரசாட்சி செய்கிறாள்.
நிற்கும் நிலையில் உள்ள அம்பாளை உட்கார்ந்து இருப்பது போல் அலங்காரம் செய்யும் தனிச்சிறப்பு
பொதுவாக எல்லா கோவில்களிலும் மூல விக்கிரகம் எந்த நிலையில் உள்ளதோ அந்த நிலையிலேயே அலங்காரம் செய்வது வழக்கம். ஆனால் இந்த தலத்தில், நிற்கும் நிலையில் உள்ள அம்பாளை உட்கார்ந்து இருப்பது போல் அலங்காரம் செய்கிறார்கள். இந்த வழக்கம், இத்தலத்தின் சிறப்பு அம்சமாகும்.
இத்தல அம்மனுக்கு புடவை சாத்தியும், ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கியும் வழிபாடு செய்தால், பேச்சுக் குறைபாடு உள்ளவர்களுக்கு, அந்தக் குறை படிப்படியாக சரியாகும் என்பது ஐதீகம்.
குமரமலை பாலதண்டாயுதபாணி கோவில்
வாதம் நோய் தீர்க்கும் குமரமலை முருகன்
புதுக்கோட்டையிலிருந்து காரையூர் செல்லும் வழியில் 12 கி.மீ., சென்றால் குமரமலை விலக்கு வரும். அங்கிருந்து சற்றுதூரம் நடந்தால் மலை அடிவாரத்தை அடையலாம். மலையில் 45 படி ஏறினால் கோவிலை அடையலாம். சுவாமிக்கு பாலதண்டாயுதபாணி என்ற திருநாமம்.
குமரமலை முருகனின் வரலாறு
குமரமலை பகுதியில் சேதுபதி என்ற தீவிர முருக பக்தர் வாழ்ந்து வந்தார். அவர் சிறு வயது முதலே பழநிக்கு பாதயாத்திரை மேற்கொள்பவர். 80 வயதைக் கடந்த நிலையில், ஒருமுறை கார்த்திகையன்று பழனிக்கு காவடி எடுத்துச் செல்ல முடியாத அளவுக்கு அவர் உடல் நோயுற்றது. 'பழனிக்குச் சென்று வழிபட முடியவில்லையே? இனி நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்?' என்ற வேதனைப்பட்ட அவர் கனவில் தோன்றிய முருகன், இத்தனை ஆண்டுகள் நீ என்னைத் தேடி வந்தாய். இந்த ஆண்டு உன்னைத் தேடி நான் வருகிறேன். உன் ஊருக்கு அருகிலுள்ள குன்றில் சங்குச் செடிகள் வளர்ந்து கிடக்கும் இடத்திற்கு காலையில் நான் வருவேன். அங்கு வந்து என்னைத் தரிசனம் செய்து வழிபடு. நான் அங்கு குடிகொண்டதற்கு அடையாளமாக அந்த இடத்தில் ஒரு விபூதிப் பை, உத்திராட்ச மாலை, பிரம்பு, எலுமிச்சம் பழம் ஆகியவை இருக்கும்.
அந்த இடத்தில் மேற்கு நோக்கி ஒரு வேலை வைத்து நீயும் இப்பகுதி மக்களும் வழிபடுங்கள். இனி இந்தக் குன்று 'குமரமலை' என்ற பெயருடன் விளங்கும். இப்பகுதி மக்கள் அனைவரும் அனைத்து நன்மைகளும் பெறுவார்கள்! என்று சொல்லி மறைந்தார்.
கனவில் முருகன் சொல்லியபடி சங்குச் செடிகளின் இடையில் இருந்த விபூதிப் பை, பிரம்பு, உத்திராட்ச மாலை, எலுமிச்சம் பழம் அனைத்தையும் கண்டு, பழனி முருகன் வந்தமர்ந்த இடத்தில்,அவர் அருளாணைப்படி ஆள் உயர வேலை பிரதிஷ்டை செய்து, அப்பகுதி மக்களும் வழிபட்டனர்.
வேலை எடுத்து விட்டு, அந்த இடத்தில் பழனி தண்டாயுதபாணியின் திருவுருவத்தை எழுந்தருளச் செய்யலாம் என்று திட்டமிட்ட போதும் முருகன் தோன்றி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் இருக்கும் சிற்பியின் பெயரைச் சொல்லி, 'அவர் ஒரு முருகன் சிலையை வடிவமைத்து வைத்திருக்கிறார். அதை நான் சொன்னதாகச் சொல்லி கேள், தருவார். வாங்கி வந்து நான் வந்து நின்ற சங்குச் செடி மண்டிக் கிடக்கும் இடத்தில் மேற்கு நோக்கி வைத்து வழிபடுங்கள்' என்று சொல்லி மறைந்தார்.
அந்த இடத்தில் கோவில் கட்டி, சிற்பியிடம் பெற்ற பாலமுருகன் சிலையை பிரதிஷ்டை செய்தார்.
சங்கு சுனைத் தீர்த்தம்
குமரமலைக்கு மேல் சங்கு வடிவிலான சுனைத்தீர்த்தம் உள்ளது. இங்கிருந்தே சுவாமிஅபிஷேகத்துக்கு தேவையான புனித நீர் எடுக்கப்படுகிறது. கோவிலில் வழங்கப்படும் இந்த தீர்த்தத்தை பக்தர்கள் பருகுவதன் மூலம் நோய் நொடிகள் நீங்குவதாகவும் நம்பிக்கையுள்ளது.
வாதநோய்க்கு பிரார்த்தனை
வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குமரமலை அடிவாரத்திலுள்ள தீர்த்தத்தில் நீராடி முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வதுடன், அர்ச்சனை செய்து வழிபட்டு செல்வதால் வாதம் நோய் நீங்குகிறது.
வேலுக்கு வளையல் கட்டி, சுகப் பிரசவத்திற்கு பிரார்த்தனை
இப்பகுதி பெண்கள் தங்கள் வளைகாப்பு நிகழ்ச்சியன்று அர்த்தமண்டபத்திலுள்ள வேலில் வளையல்களை கட்டி வழிபடுகின்றனர். இவ்வாறு செய்தால் பிரசவம் எளிமையாகும் என்பது நம்பிக்கை. குமரமலைக்கு சஷ்டி திதிகளில் வந்து விரதம் இருப்பதன் மூலம் திருமணத்தடை நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும் செய்வதாக நம்பிக்கையுள்ளது.
சாலாமேடு அஷ்டவராகி அம்மன் கோவில்
உலகிலேயே வராகியம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோவில்
விழுப்புரத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் சாலாமேடு எனும் ஊரில் அஷ்டவராகி கோவில் உள்ளது. உலகிலேயே வராகியம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோவிலாகக் கருதப்படுகிறது.
திருமாலின் வராக அம்சமாக கருதப்படும் வராகியம்மன், ராஜ ராஜேஸ்வரி அம்மனின் குதிரைப்படைத்தலைவியாகவும், பத்மாவதி அம்மனின் காவல் தெய்வமாகவும், சப்தகன்னியரில் ஒருவராகவும் அறியப்படுகிறார். மகா வராகி, ஆதி வராகி, ஸ்வப்னவராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி, மகிஷாருடா வராகி, அச்வாருடா வராகி என்போர் எட்டு வராகிகள் (அஷ்டவராகி) என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த எட்டு தெய்வங்களையும் உள்ளடக்கிய கோவில் தான் சாலாமேட்டில் அமைந்துள்ளது.
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமான வராகியை வணங்கினால் பகைவரை அழித்து பக்தரை காத்திடுவாள். கொடிய ஏவல், பில்லி சூனியத்தில் இருந்தும் காப்பாற்றுவாள். வராகியை வணங்கும் எவருக்கும் அனைத்து செல்வங்களும் வந்து சேரும்.ஞாயிறு கிழமைகளில் வாராகியை வழிபட்டால் நோய்கள் தீரும். திங்கட்கிழமைகளில் வழிபட்டால் மன நல பாதிப்புகள் நீங்கும். வீடு நிலம் தொடர்பான பிரச்சினைகள்தீர செவ்வாய்கிழமைகளில் வராகியை வழிபடலாம். கடன் தொல்லைகள் தீர புதன்கிழமை வழிபடலாம். குழந்தை பேறு கிடைக்க வியாழக்கிழமை வழிபடலாம். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் வியாழக்கிழமை வழிபடலாம். வெள்ளிக்கிழமை வழிபட நினைத்த காரியம் நிறைவேறும்.
கேட்ட வரம் தரும் வராகி காயத்ரி மந்திரம்
வராகி அம்மனுக்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபிப்போருக்கு கேட்ட வரங்கள் கிடைக்கும்.
வராகி காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்
இழந்த செல்வம், சொத்து, சொந்தங்களை மீட்டுத் தரும் வராகி அம்மன்
வராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள், மண் அகலில் கருநீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முடிந்து, அதில் நல்லெண்ணெய் விட்டு தீபமிட்டு மனதார வேண்டினால் இழந்த அனைத்தையும் திரும்ப பெறலாம்.
சிறுபுலியூர் கிருபா சமுத்திரப் பெருமாள் கோவில்
குழந்தை வடிவில் பெருமாள் சயனக் கோலத்தில் இருக்கும் திவ்ய தேசம்
மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் அமைந்துள்ள கொல்லுமாங்குடி என்னும் இடத்தில் இருந்து, கிழக்கே 2 கி.மீ. தூரத்தில் உள்ள திவ்யதேசம் சிறுபுலியூர். மூலவர் பெயர் தலசயனப் பெருமாள். தாயார் பெயர் திருமாமகள் நாச்சியார். உற்சவர் பெயர் கிருபா சமுத்திரப் பெருமாள்.
சிதம்பரம் நடராசர் அருளியபடி வியாக்கிரபாதர் (புலிக்கால் முனிவர்), திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாளை வணங்கி மோட்சம் பெற்றதால் இத்தலத்திற்கு திருச்சிறுபுலியூர் எனப் பெயராயிற்று.
புலிக்கால் முனிவராகிய வியாக்ரபாதர் தில்லை நடராஜப்பெருமானிடம் பல்லாண்டு காலம் தவமிருந்து முக்தி வேண்டினார். இவரது வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமான், சிறுபுலியூர் சென்று பெருமாளை வணங்க ஆணையிட்டார். அதன்படி இத்தலம் வந்து பெருமாளை வேண்டினார். பெருமாளும் அவருக்கு முக்தி கொடுத்து மூலஸ்தானத்தில் தன் அருகில் வைத்து கொண்டார். தில்லையில் நடராஜரின் அருகில் இருக்கும் பதஞ்சலியும் (ஆதிசேஷன்), வியாக்ரபாதரும் மூலஸ்தானத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கன்வ முனிவருக்கும் இத்தலத்தில் பெருமாள் அனுக்கிரஹம் புரிந்தார். இத்தலத்தில் ஆதிசேஷனுக்கும் தனி கோயில் உள்ளது
பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலம் ஸ்ரீரங்கம், மற்றொன்று திருச்சிறுப்புலியூர். ஸ்ரீரங்கத்தில் மிகப்பெரிய வடிவில் சயனித்திருக்கும் பெருமாள், திருச்சிறுபுலியூரில் பாலகனாக சயனத்தில் உள்ளார் என்பது இன்னொரு விசேஷம். பெருமாள் பள்ளி கொண்ட தலங்களில் இங்கு மட்டும் தான் குழந்தை வடிவில், சயன நிலையில் உள்ளார். இப்படி பெருமாளை குழந்தையாக சயன கோலத்தில் நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. கருடாழ்வாருக்கு பெருமாள் அபயமளித்த தலமாக இருப்பதால், பூமிக்கு கீழ் கருடன் சந்நிதி அமைந்துள்ளது. மிக உயர்ந்த இடத்தில் ஆதிசேஷனுக்கு சன்னதி உள்ளது.
மாங்கல்ய தோஷம், கால சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், பாலாரிஷ்ட தோஷம், திருமணத்தில் தடை, நவக்கிரக பரிகாரம், குழந்தையின்மை போன்ற பல பிரச்சனைகளுக்கு இது பரிகாரத் தலமாக விளங்குகின்றது. தீராத நோய், மன நல பாதிப்பு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்தால் விரைவில் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில்
மானுட உருவம் கொண்டு அம்பிகை இறைவனை பூஜை செய்த தலம்
சிவலிங்கத் திருமேனியில் எழுந்தருளியிருக்கும் அபூர்வ விநாயகர்
திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கோவிந்தவல்லி. கோவிந்தவல்லி என்றால் உயிர்களுக்கெல்லாம் தலைவி என பொருள் உண்டாம். இந்த அம்பிகைக்கு சிவகாமசுந்தரி, கோவர்த்தனாம்பிகை அம்மன் போன்ற பல்வேறு பெயர்களும் உண்டு.
ஒரு சமயம் கைலாயத்தில் சிவபெருமான், பார்வதிதேவிக்கு வேதசிவாகமப் பொருளை உணர்த்திக் கொண்டிருந்தபோது, அம்பிகையின் கவனம் மாறும்படியாக காமதேனு அவ்வழியே செல்ல, தேவியின் கவனம் அந்த காமதேனு மீது மாறுவதை உணர்ந்து கோபமடைந்த சிவபெருமான், அம்பிகையை நோக்கி 'பூலோகத்தில் திண்ணக்கோணம் அடைந்து பங்குனி மாத வளர்பிறையில் வரும் வசந்த நவராத்திரி என்னும் ஒன்பது ராத்திரி நாள்கள் நீ தவமிருக்கும்போது, நான் பசுவாக உனக்கு காட்சியளிப்பேன். அதன் பின் என்னை வந்து நீ அடைவாயாக' என்று பார்வதி தேவிக்கு சாபமிட்டு அதற்கான விமோசனத்தையும் அருளினார். அதன்படி மானுட உருவம் கொண்டு இடையர் குலத்தில் அம்பிகை பிறந்து, சிவபெருமானை நோக்கி தவமிருந்து வரம் பெற்று மீண்டும் அடைந்தது இந்தக் கோவிலில்தான்.
சிவபெருமானால் சாபம் விட்டு, மானுட வேடம் பூண்டு, பின்னர் தவமிருந்து தேவி அவரிடம் இணைந்த திருக்கோயில் என்பதால், பங்குனி மாத வளர்பிறையில் வசந்த நவராத்திரி உற்சவம் இறைவிக்கு நடத்தப்படுகிறது.
சிவலிங்கத் திருமேனியில் எழுந்தருளியிருக்கும் அபூர்வ விநாயகர்
இத்தலத்தில் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் லிங்கோத்பவ வலம்புரி விநாயகரின் தோற்றமானது அபூர்வமான ஒன்றாகும். இவர் சிவலிங்க உருவம் கொண்டு, அதில் நான்கடி உயர திருமேனியுடன், புடைப்புச் சிற்பமாக வலம் சுழித்த துதிக்கையுடன் காட்சி தருகிறார். அதனால்தான் இவர் லிங்கோத்பவ வலம்புரி விநாயகர் என அழைக்கப்படுகிறார். இப்படி சிவலிங்கத் திருமேனியில் எழுந்தருளியிருக்கும் விநாயகரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில்
சரசுவதி தேவி வீணையை வித்தியாசமாக ஏந்தி இருக்கும் அரிய காட்சி
சனீஸ்வரருக்கு பச்சை ஆடை உடுத்தும் வித்தியாசமான நடைமுறை
சூரிய மண்டல ஆகாய ராசிச் சக்கரம் அமைந்திருக்கும் தனிச்சிறப்பு
தேனியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள உத்தமபாளையம் என்ற ஊரில், சுருளியாற்றங்கரையில் அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காளத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. ஆந்திர மாநிலத்தில் இருக்கும் காளஹஸ்திக்கு இணையான தலம் என்பதால், இக்கோவிலை. பக்தர்கள் தென்னகத்து காளகஸ்தி என்று அழைக்கின்றனர்.
இக்கோவிலில், இறைவி ஞானாம்பிகை சன்னதியின் பின்பக்கம் சரசுவதி தேவி, மூன்றரை அடி உயரத் திருமேனியுடன், சற்று வித்தியாசமான தோற்றத்தில் எழுந்தருளி இருப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.பொதுவாக சரசுவதி தேவி, வீணையை தன் மடியிலிருத்தி தன் கை விரல்களால் அதை மீட்டும் நிலையில் காட்சி தருவார். ஆனால், இக்கோவிலில் சரசுவதி தேவி வீணையை தன் இடது கரத்தில் செங்குத்தாக, தம்புராவை வைத்திருப்பது போல் காட்சி அளிப்பது, வேறு எந்த கோவிலிலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்.
சனீஸ்வரருக்கு பச்சை ஆடை உடுத்தும் வித்தியாசமான நடைமுறை
நவகிரகங்களில், சனீஸ்வரருக்கு உரிய வஸ்திரம் கருப்பு நிறம் . எனவே, சனீஸ்வரருக்கு அனைத்து கோவில்களிலும் கருப்பு நிறத்திலான ஆடையை அணிவித்து வழிபடுவதுதான் வழக்கம். ஆனால் இக்கோவிலில் கல்வியில் சிறந்து விளங்க மாணவர்கள், இறைவன் காளத்தீஸ்வரர், இறைவி ஞானாம்பிகை ஆகியோரை வழிபட்டு, இங்குள்ள சனீஸ்வரருக்கும் பச்சை ஆடை அணிவித்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. கல்விக்கு உரியவரான புதனுக்கு உடுத்தும் பச்சை நிற ஆடையைப் போன்று, சனீஸ்வரருக்குப் பச்சை நிற ஆடையினை அணிவித்து வேண்டுவதன் மூலம், மாணவப் பருவத்தில் சனியின் பிடியிலிருந்து விடுபட்டு கல்வியில் சிறப்புகளைப் பெற முடியும் என்பது இத்தலத்து பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.
சூரிய மண்டல ஆகாய ராசிச் சக்கரம் அமைந்திருக்கும் தனிச்சிறப்பு
இக்கோவிலின் சிவன் சன்னதி முன்பாக இருக்கும் மண்டபத்தின் மேற்கூரையில் ராசி, நட்சத்திரக் கட்டங்களுக்கு மத்தியில் வாஸ்து பகவான் சடாமுடியுடன் பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது போன்று இருக்கிறது. வாஸ்து பகவானின் தலைக்கு மேலே பிரம்மா, அம்பிகை இருவரும் வழிபாடு செய்வது போன்ற சிற்பம் இருக்கிறது. இம்மூவரையும் ஒரு நாகம் சுற்றியிருப்பது போன்று உள்ளது. அருகில் சூரியன், சந்திரன், வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோர் இருக்கின்றனர். வாஸ்து பகவானைச் சுற்றிலும் 27 நட்சத்திரங்களுக்கான மிருகங்கள், 12 ராசிகளுக்கான சின்னங்கள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன. இதனையடுத்து, நடுவில் சூரியனும், சுற்றிலும் 12 ராசிகளும் கொண்ட 'சூரிய மண்டல ஆகாய ராசிச் சக்கரம்' இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே ஆவுடையார் கோவில், உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில் ஆகிய இரண்டு தலங்களில் மட்டுமே, இந்த சூரிய மண்டல ஆகாய ராசிச் சக்கரம் இருக்கின்றது. இது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
நிலம், வீடு தொடர்பான பிரச்சனைகளை உடையவர்கள், இந்தச் சக்கரங்களின் கீழ் நின்று இறைவனை வழிபட்டால் அவர்களின் பிரச்சனை விரைவில் தீர்ந்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்
மகாலட்சுமி இழந்த தன்னுடைய செல்வங்களை மீட்டெடுத்த தலம்
மகாலட்சுமிக்கு வெண்ணெய் காப்பு சாற்றப்படும் தனிச்சிறப்பு
திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம், வேதத்தின் பெயரால், சாமவேதீசுவரர் என்று அழைக்கப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இறைவியின் திருநாமம் லோகநாயகி. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவாரம் வைப்பு தலம் இது.
இக்கோவிலில் கஜலட்சுமி தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கிறாள். கஜலட்சுமி அதாவது திருமகள் இத்தலத்து இறைவனை பூஜை செய்து இழந்த தன்னுடைய செல்வங்களை மீட்டெடுத்தாள். மகாலட்சுமி தன்னுடைய மங்களங்களை திரும்ப அடைந்ததால், இத்தலத்துக்கு திருமங்கலம் என்று பெயர் ஏற்பட்டது. பொதுவாக ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு செய்து வழிபடுவது வழக்கம். இக்கோவிலில் கஜலட்சுமிக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபடுவது ஒரு தனி சிறப்பாகும். இந்த கஜலட்சுமிக்கு வெண்ணெய் காப்பு செய்து வழிபட்டால், இழந்த செல்வங்களை மீட்டெடுக்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மூன்று பெண் உருவங்களுக்கு, வெறும் நான்கு கால்களை மட்டுமே கொண்டு வடிவமைக்கப்பட்ட வினோதமான சிற்பம்
நம் கோவில்கள், நம் முன்னோர்கள் கட்டிடக்கலையிலும், சிற்பக்கலையிலும் அடைந்திருந்த உன்னத நிலையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. இந்தக் கோவிலில் ஒரு தூணில், ஆறு அங்குல நீளம், ஆறு அங்குல அகலம் உள்ள ஒரு சதுர பரப்பளவில், மூன்று பெண் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதில் நடுவில் இருக்கும் பெண் நம்மை நேராக பார்த்த நிலையிலும், மற்ற இரு பெண்களில் ஒருத்தி தனது உடலை வலது பக்கம் சாய்த்த நிலையிலும், மற்றொருத்தி இடது பக்கம் சாய்த்த நிலையிலும் காட்சியளிக்கின்றனர்.
இந்த சிற்பத்தில் வினோதம் என்னவென்றால், மூன்று பெண்களுக்கு ஆறு கால்கள் இன்றி, வெறும் நான்கு கால்களை கொண்டே வடிவமைத்திருக்கிறார்கள். நடுவில் இருக்கும் பெண்ணின் இரு கால்கள் ஆனது மற்ற இரு பெண்களுக்கும், பொதுவான கால் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிற்பத்தை செதுக்கிய சிற்பியின் கற்பனைத் திறனும், அதை நுணுக்கமான சிறிய சிற்பமாக செதுக்கி இருக்கும் விதமும், நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும்.
படவேடு சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகப்பெருமானுக்கு தேவசேனாபதி என்ற பட்டம் சூட்டிய தலம்
முருகப்பெருமான் மயில் மீது நின்றபடி இருக்கும் அபூர்வக் காட்சி
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் அமைந்துள்ள படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் கோவில் அருகே உள்ள குன்றின் மீது சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
படை வீடு என்றால் படைகள் தங்கும் இடம் என்று பொருள். அன்னை ரேணுகாதேவி இத்தலத்தில் படையுடன் வந்து மன்னனுக்கு அருளியதால், படைவீடு எனவும், இராச கம்பீர சம்புவராயர் எனும் அரசன் தனது படைகளுடன் இத்தலத்தில் தங்கி போரிட்டதால் படைவீடு என பெயர் பெற்று, நாளடைவில் படவேடு என்று பெயர் மருவியது.
முருகப்பெருமானுக்கு தேவசேனாபதி என்ற மணிமகுடம் சூட்டிய படைவீடு
படவேடு ரேணுகாதேவி ஆலயத்துக்கு எதிரேயுள்ள குன்றில் வந்தமர்ந்த முருகப்பெருமானுக்கு, அந்தணர்கள் வேத முழக்கம் செய்ய, தேவேந்திரன் அபிஷேக ஆராதனை செய்து சர்வ உபச்சாரங்களையெல்லாம் நிகழ்த்தி, சிவசுப்பிரமணியனுக்கு தேவசேனாதிபதி என்றபடி மணிமகுடம் சூட்டி பட்டாபிஷேகம் நடத்தினான்.
முருகப்பெருமான் மயில் மீது நின்றபடி இருக்கும் அபூர்வக் காட்சி
குன்றின் மீது உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல 300 கருங்கல்லான படிகள் உள்ளன. இக்கோவில் கருவறையில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக கிழக்கு பார்த்து எழுந்தருளி இருக்கிறார். பொதுவாக முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் அல்லது மயிலுடன் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார்.
ஆனால், இக்கோவிலில் வடக்கு முகம் பார்த்து தோகை விரிக்காமல் நிற்கும் மயில் மீது முருகன் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பது அபூர்வமான ஒன்றாகும். அந்த மயில் பாம்பைக் கவ்வியிருக்க, பாம்பு படம் விரித்து ஆடாமல் தலை சாய்ந்து தொங்கியபடி இருப்பதும், எங்கும் காணமுடியாத காட்சியாகும். இக்கோவில் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்ற தலம் ஆகும். அவரது திருப்புகழ் பாடலில் இத்தலம் சோமீசர் கோயில் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இக்கோவில் சிம்ம ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோவிலாகும். மேலும் நாகதோஷம் உடையவர்களுக்கு இக்கோவில் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகின்றது.
தஞ்சாவூர் பிரதாப வீரஆஞ்சநேயர் (மூலை அனுமார்) கோவில்
ஆஞ்சநேயர் குழந்தையாக தன் தாயின் மடியில் அமர்ந்திருக்கும் அபூர்வ சிற்பம்
மூல நட்சத்திர நாட்களில் வழிபட்டால் படிப்பில் தடை, திருமணத் தடை ஆகியவற்றை தகர்த்தெறியும் மூலை அனுமார்
தஞ்சை பெரியகோவிலில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில், மேல வீதியும் வடக்கு ராஜ வீதியும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது, பிரதாப வீரஆஞ்சநேயர் (மூலை அனுமார்) கோவில். மராட்டிய மன்னர் பிரதாப சிம்மனின் (கி.பி.1739-1763) காலத்தில், அவரால் இக்கோவில் கட்டப்பட்டது. கோவில் அமைந்த மேல வீதியும், வடக்கு ராஜவீதியும் இணையும் இடம், வடமேற்கு வாயுமூலை ஆகும். வாயுவின் மைந்தன் அனுமன், வடமேற்கு வாயுமூலையில் நின்றபடி அருள்பாலிப்பதால், இந்த அனுமனை மூலை அனுமார் என்று சொல்கிறார்கள்.
தஞ்சாவூர் மன்னன் பிரதாபசிம்மன், பிரதாப வீரஆஞ்சநேயரை தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தான். ஒருமுறை எதிரிப் படையினர் நாட்டை முற்றுகையிட்டபோது, பிரதாப சிம்மராஜா மூலை அனுமாரை வேண்டினார். ஆஞ்சநேயர் வானர சேனைகளை உருவாக்கி எதிரிநாட்டு படையை ஓட ஓட விரட்டினார். தன் வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் பிரதாபசிம்மன் ஆஞ்சநேயருடன் ஐக்கியமானான். எனவேதான் இவருக்கு பிரதாப வீரஆஞ்சநேயர் என்ற பெயர் ஏற்பட்டது.
முகலாய படையெடுப்பின் போது காஞ்சிபுரத்தில் இருந்த பங்காரு காமாட்சி அம்மன் சிலை தஞ்சைக்கு எடுத்து வரப்பட்டது. சிலைக்கு அடைக்கலம் தர அனைவரும் பயந்தபோது, இந்த தலத்திலேயே சிலையை மறைத்து வைத்திருந்தனர். இராம பக்தர்களின் கனவில் தோன்றிய அனுமான், பங்காரு காமாட்சி அம்மனுக்கு தன் கோவில் அருகிலேயே கோவில் அமைக்கும்படி ஆணையிட்டார்.
படிப்பில் தடை, திருமணத்தடை, வியாதிகள், தொடர்ந்து துன்பங்கள் நேர்ந்தால் மூலை அனுமாரை, மூல நட்சத்திர நாட்களில் வழிபடுவது சிறப்பு. அன்று 18 அகல் விளக்குகள் ஏற்றி 18 முறை மவுனமாக கோவிலை வலம் வந்தால், குறைகள் விலகி நலம் பயக்கும்.
18 அமாவாசைகள் 18 முறை வலம் வந்து மூலவருக்கு 18(அ)56(அ)108 எலுமிச்சை பழங்களாலான மாலையை சாற்றி வழிபட்டால் எப்பேர்ப்பட்ட கிரக தோஷமும் வாஸ்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். மார்கழி மாதம் 108 முறை வலம் வந்து, மூலை அனுமாரை வழிப்பட்டால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும்.
இக்கோவிலில் அனுமன் ஜெயந்தி அன்று 18 அபிஷேகப் பொருட்களை பக்தர்கள் கொண்டு வந்து கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அனுமன் ஜெயந்தி அன்று பக்தர்கள் அவரவர் இல்லத்தில் பிரார்த்தனை செய்து எடுத்து வந்த மஞ்சள் பூசிய தேங்காயை, கோவில் உட்பிரகாரத்தில் தீபமேற்றி வழிபடும் இடத்தில் உள்ள அனுக்கிரக ஆஞ்சநேயர் முன் வேண்டி சிதறு தேங்காய் எறிந்து பிரார்த்தனை காணிக்கையாக ரூ.18 உண்டியலில் செலுத்தி வழிபாடு செய்தால், எண்ணியவை எண்ணியபடி நடைபெறும் என்பது ஐதீகம்.
இக்கோவிலில் மூலை அனுமாரின் வாலில் சனீஸ்வரபகவான் உட்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். சனி தோஷம் உட்பட நவக்கிரகங்கள் தோஷங்கள் மற்றும் வாஸ்து தோஷங்கள் ஆகியவற்றை இவர் நீக்குகிறார்.
ஆஞ்சநேயர் குழந்தையாக இருந்த போது, தன் தாயின் மடியில் அமர்ந்திருந்த சிற்பம் இந்தக் கோவில் கோபுரத்தில் அமைந்துள்ளது. இது நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாத அபூர்வ சிற்பமாகும்.
இது தவிர, 12 ராசிகள் அடங்கிய ராசி மண்டல சிற்பமும் இருக்கிறது. அவரவர் ராசி முன்பு நின்று மூலை அனுமாரிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால், பிரார்த்தனைகள் நிறைவேறும்.