திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசலை பெருமாள் கடந்து செல்லும் ஒரே முருகன் தலம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம், மதுரைக்கு தென்மேற்கில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்டார்.
இக்கோவில் ஒரு குடைவரைக் கோவிலாகும். ஆறுபடை வீடுகளில் இத்தலத்தில்தான் முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். மேலும், முருகப்பெருமானின் கையிலுள்ள வேலுக்கே பால் அபிஷேகமும், மஞ்சன நீராட்டுகளும் நடைபெறுகின்றன.
முருகப்பெருமானின் இடப்பக்கம் தெய்வானையும், வலப்பக்கம் நாரதரும் வீற்றிருக்கின்றனர். இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவபெருமான்), பவளக்கனிவாய் பெருமாள், கற்பக விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி, ஒரே குடவரையில் இங்கு அருளுகின்றனர். குடவரையின் மேற்குப் பகுதியில் சத்தியகிரீஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.
கருவறைக்கு கிழக்குப் பகுதியில் பவளக்கனிவாய் பெருமாள் மேற்கு திசை நோக்கி வீற்றிருக்கிறார். அவருக்கு இருபுறமும் மகாலட்சுமி மற்றும் மதங்கமாமுனிவர் திருவுருவங்களும் உள்ளன. இக்கோவிலில் பவளக்கனிவாய் பெருமாள் வீற்றிருந்து அருள்பாலிப்பது, வேறு எந்த தலத்துக்கும் இல்லாத தனிச்சிறப்பாகும்.
சிவபெருமானுக்கு எதிரே நந்தி இருக்கவேண்டிய இடத்தில் பெருமாள் இருப்பதால், இவருக்கு 'மால் விடை' எனும் சிறப்பு பெயரும் உண்டு. இத்தகைய அமைப்பு வேறு எந்த தலத்திலும் இல்லை.
முருகப்பெருமானின் திருத்தலத்திலேயே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவது திருப்பரங்குன்றத்தில் மட்டும்தான் என்பதும் சிறப்புக்குரியது.
வைகுண்ட ஏகாதசி அன்று, இக்கோவிலில் உள்ள கம்பத்துடி மண்டபத்திலிருந்து மடப்பள்ளி மண்டபம் செல்லும் வழியில் உள்ள பெரிய கதவிற்கு சந்தனம் பூசி, மாலைகள் சாற்றப்பட்டு பூஜைகள் நடைபெறும். இந்த பெரிய கதவு தான், சொர்க்கவாசல் ஆக கருதப்பட்டு வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கடந்து செல்கிறார்.
கலை நயம் மிக்க நுணுக்கமான சிற்பங்கள்
இக்கோவிலில் கலை நயம் மிக்க நுணுக்கமான சிற்பங்கள் பார்ப்பவர்களின் கண்ணுக்கு விருந்தாக அமைகின்றது.
கோவில் வாயிலை அடுத்து உள்ளே அமைந்துள்ளது ஆஸ்தான மண்டபம். இம்மண்டபம் சுந்தர பாண்டியன் மண்டபம் என்றும் வழங்கப்படுகிறது. அழகிய கண்கவர் கலை நயம் கொண்ட சிற்பங்களுடன், 48 தூண்களுடன் இம்மண்டபம் இராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மண்டபத் தூண்களில் யாளிகள், குதிரை வீரர்கள், பத்திரகாளி, துர்க்கை, நர்த்தன விநாயகர், வீரபாகு, சிவனார் திரிபுரம் எரிக்கும் காட்சி, திருமால் மற்றும் மகா லட்சுமியின் சிற்பங்கள் அற்புத வேலைப்பாடுகளுடன் செதுக்கப் பெற்றுள்ளன.
பிரம்மன் வேள்வி வளர்த்துத் திருமணச் சடங்குகள் நடத்த, இந்திரன் தேவயானையை முருகனுக்குத் தாரை வார்த்துக் கொடுக்க, தேவயானையைக் கைத்தலம் பற்றிய பெருமிதத்துடன், அதே வேளையில் நாணம் கலந்த மகிழ்ச்சியுடன் இருப்பது போன்று முருகப் பெருமானின் திருமணக் கோலம் எழிலுற வடிவமைக்கப் பெற்றுள்ளது.
இக்கோவிலில் திருவாட்சி மண்டபம் என்னும் பெரிய கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்திற்கு ஆறுகால் மண்டபம் என்ற பெயரும் உண்டு.
இம்மண்டபத்தின் முன் புறம் ஏறும் படிகளின் இரு பக்கங்களிலும் தேர் இழுக்கும் இரு குதிரைகள் உள்ளன. இவை ஒரே கல்லில் செய்யப்பட்டு கலை நயத்துடன் விளங்குகின்றன. இந்த குதிரைகளின் உடலில் காணப்படும் அணிகலன்கள் மிகுந்த நுணுக்கத்துடன் செய்யப்பட்டுள்ளன.
இம்மண்டபத்தின் தூண்களில் மீனாட்சி அம்மனின் திக்விஜயம், ஹயக்ரீவர், நரசிம்மர், ஆஞ்சநேயர், மன்மதன், ஆலவாய் அன்னல், வராகி அம்மன் என்று பல்வேறு அழகிய, தெய்வீக சிற்ப சிலைகள் உள்ளன.
இறைவன் சத்தியகிரீசுவரர் சந்நிதி வாயிலிலுள்ள துவாரபாலர்களின் உருவங்களில் காணப்படும் ஆடை மடிப்பு கலையம்சங்களும், இதர சிற்ப அம்சங்களும் பிரமிக்கத்தக்கவையாக உள்ளன.
மதுரைக்கு தென்மேற்கில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது