ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கநாதரின் பாதணிகள்
ஸ்ரீரங்கம் கோவிலில் 'ஏழு' என்ற எண்ணிக்கையில் அமைந்த சிறப்பு அம்சங்கள்
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இக்கோவில் மூலவர் ரங்கநாதப் பெருமானுக்கு, ஆறு மாதத்திற்கு ஒருமுறை அவர் காலில் அணிந்திருக்கும் பாதணிகள் மாற்றப்படுகின்றன. இந்த பாதணிகள் ஒவ்வொன்றும் சுமார் இரண்டிலிருந்து மூன்று அடி நீளம் உள்ளது. இவை சுமார் 30-40 அடி உயரம் கொண்ட ஒரு மனிதருக்கானதைப் போன்று இருக்கும். இந்த பாதணிகள் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரத்யேகமாகச் செய்யப்படுகின்றன. வலது பாதணி ஒருவரிடமும், இடது பாதணி மற்றொருவரிடம், செய்யக் கொடுப்பார்கள். இருவரும், ஒரே ஊரில் இல்லாமல், வெவ்வேறு ஊர்களில் இருப்பவர்கள். 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு பாதணிகளைச் செய்வார்கள்.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை பழைய பாதணிகளை ஸ்ரீரங்கநாதரின் திருவடிகளை விட்டு கழட்டிவிட்டு, புதிய பாதணிகளை மாற்றிவிடுவார்கள். அதிசயமான விஷயம் என்னவென்றால், திருவடிகளை விட்டு, எடுத்துள்ள, பழைய பாதணிகள் இரண்டிலும், பாத பகுதிகளில், தேய்மானம் இருக்கும். இவ்வாறு, மாற்றியுள்ள, தேய்மானம் அடைந்த, ஸ்ரீ ரங்கநாதர் பாதணிகள் ஸ்ரீரங்கம் திருக்கொட்டாரத்தில் தூணில் மாட்டி வைக்கப்படும்.ஸ்ரீரங்கம் கோவில் சென்றால், இந்த அரங்கன் அணிந்து, தேய்மானம் கண்டுள்ள, பழைய பாதணிகளை, கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம்.
ஸ்ரீரங்கம் கோவிலில் 'ஏழு' என்ற எண்ணிக்கையில் அமைந்த சிறப்பு அம்சங்கள்
108 வைணத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாக திகழும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் 'ஏழு' என்ற எண்ணிக்கையில் பல சிறப்பு அம்சங்கள் அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை நாம் இங்கே காணலாம்.
.ஏழு உலகங்களை அடக்கியது இந்த கோவில் என்ற பொருளில் 'ஏழு பிரகாரங்களுடன், ஏழு மதில்களை' கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்.
பெரிய என்ற சொல்லால் அழைக்கப்படும் ஏழு பெருமை உடைய அம்சங்கள் இக்கோவிலில் அமைந்துள்ளது. அவை, 1) பெரிய கோவில், 2) பெரிய பெருமாள், 3) பெரிய பிராட்டியார், 4) பெரிய கருடன், 5) பெரிய வசரம். 6) பெரிய திருமதில் 7) பெரிய கோபுரம் ஆகியவை ஆகும். இப்படி அனைத்தும் 'பெரிய' என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.
ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். 'ராமாவதாரம் ஏழாவது' அவதாரமாகும். கோவிலில் நான்கு திசைகளிலும் ராமபிரான் சன்னதி அமைந்திருப்பது ஒரு தனி சிறப்பாகும்.
பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 'ஏழு கோபுரங்கள்' உள்ளன.
கோவிலில் உள்ள ஏழு பிரகாரங்களிலும் பெருமாளின் ஏழு திருவடிகள் உள்ளன.
இக்கோவிலில் நடைபெறும் ஏழு சேவைகள், வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும்.
இக்கோவில் வளாகத்தில் உள்ள ஏழு மண்டபங்களில், உற்சவர் நம்பெருமாள் ஒரு நாள் மட்டுமே எழுந்தருள்வார்.