அம்மன்

பார்வதிதேவி இந்து சமயத்தில் முப்பெரும் தேவியர் எனப் போற்றப்படும் பெண் தெய்வங்களில் ஒருவராவார்.இந்த மூன்று தெய்வங்களில்,சரஸ்வதி தேவி கல்வி கடவுளாகவும், லட்சுமி தேவி செல்வத்தை அருளுபவளாகவும்,பார்வதிதேவி வீரத்தை கொடுப்பவராகவும் போற்றப்படுகின்றனர்,பார்வதிதேவி,சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானின் துணைவியார் ஆவார்.விநாயகர்,முருகன் ஆகிய இருவரும் இவரின் பிள்ளைகளே ஆவார்கள்.
பார்வதிதேவி சிவபெருமானை அடைவதற்காக சிவபூஜை செய்த தலங்கள் பல உண்டு.அதுபோல சிவபெருமானிடம் மந்திரோபதேசம் பெற்ற தலங்களும்,தான் பெற்ற சாபத்திலிருந்து விமோசனம் பெற பசுவாகவும், மயிலாகவும் வடிவெடுத்து சிவ பூஜைசெய்த தலங்களும் இருக்கின்றன.பார்வதிதேவி மானிட ரூபமெடுத்து பாண்டியனின் மகளாக வளர்ந்து பின்னர் சிவபெருமானை கரம்பிடித்து ஸ்ரீமீனாட்சியாக அரசாண்ட தலம்தான் மதுரை..
இப்படி பல தலங்களில் பல கோலங்களில் காட்சி தரும் பார்வதி தேவியின் அருள் சிறப்பையும், அவர் காட்சிதரும் வடிவத்தின் சிறப்பம்சங்களையும் அறிய கீழே உள்ள ஆலய லிங்கைக் கிளிக் பண்ணவும்.
அம்மனின் கருவறை கதவு தானாகவே திறக்கும் அதிசய காட்சி
அருப்புக்கோட்டை நகரின் மேற்குப்பகுதியான பாவடித்தோப்பு என்னுமிடத்தில் அமைந்துள்ளது ஆயிரம் கண் மாரியம்மன் கோவில். 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது கோவில். கோவிலின் பின்பக்கம் பிரம்மாண்டமான தெப்பக்குளம் அமைந்துள்ளது. இதனாலேயே இந்த அம்மனின் திருநாமம் அருள்மிகு தெப்பக்குள ஆயிரங்கண் மாரியம்மன் என வழங்கப்படுகிறது. கருவறையில் நின்ற கோலத்தில் சாந்த சொரூபியாக திரிசூலம் ஏந்தியவண்ணம் அம்பிகை மாரியம்மன் காட்சி அளிக்கிறாள்.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் நடைபெறும் பொங்கல் விழா இந்த வட்டார பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த பொங்கல் விழா பன்னிரெண்டு நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. தினமும் உற்சவர் புறப்பாடாகி வீதியுலா எழுந்தருளும் வைபவமும் நடைபெறும். எட்டாம் திருவிழாவை ஒட்டி அன்று மாலையில் கோவில் முன்பாக பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கன பெண்கள் கலந்துகொள்வர்.
கதவு திறக்கும் நிகழ்வைப் பொறுத்து, பொங்கல் அன்று இரவு சரியாக 12:00 மணிக்கு நடை சாத்தப்படும். பின்பு அதன் பின் கோவில் முழுவதும் தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்யும் நிகழ்வு நடைபெறும். ஈரம் காய்ந்த பின் பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கிழக்கு, மேற்கு , தெற்கு , வாசல் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின் அபிஷேகம் நடைபெறும். கடைசியாக விபூதி அபிஷேகம் நடைபெறும். புது வஸ்திரம் உடுத்தி, அலங்காரங்களும் ஆபரணங்களும் சாத்தி அம்மனை எழில் கோலமாக்கி, நைவேத்திய படையலும் இட்டு, தூப தீபம் காட்டி முடித்து, அர்த்த மண்டபக் கதவை அடைத்துவிடுவார்கள்.
பிறகு தலைமை பூசாரி தேங்காய், வேப்பிலையுடன் வெளியே வந்து கருவறையை 3 சுற்று சுற்றுவார் . தலைமை பூசாரி கருவறையை சுற்றும் போது நிலை கதவில் உள்ள பல மணிகள் தானாக ஆடுவதை கவனித்து பார்த்தால் தெரியும் . பின் கருவறை படியில் கையில் உள்ள தேங்காயை வைத்து சிதறு காய் போடுவார் .
பக்தர்கள் சூழ, பக்தர்களின் கரவொலி மற்றும் மொத்த பக்தர்களும் புல்லரித்து பக்தி கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கும் போது நிலை வாசலில் தேங்காய் உடைபடும். அந்த சத்தம் கேட்ட அடுத்த வினாடி கோவிலின் மிகப் பெரிய இரண்டு கதவுகளும் தானாக திறக்கும்.
கோவிலுக்கு உள்ளே கருவறையிலும் , கதவு அருகிலும் யாரும் இருக்க மாட்டார்கள். இது இன்று நேற்றல்ல, கோவில் உருவான நாளில் இருந்து இந்த அதிசயம் நடந்து கொண்டு வருகிறது. பக்தர்கள் பக்தி பரவசத்தில் தாயை வணங்கி செல்வார்கள்.
அந்த வகையில் இந்த வருட பங்குனித் திருவிழாவின் ஒரு அங்கமாக இந்த நிகழ்வு கடந்த 15.04.2025 அன்று நடை சாத்தப்பட்டு 16.04.2025 அன்று நள்ளிரவு 12.00 மணிக்கு நிகழ்ந்தது.
பூக்குழியில் வாடாத மல்லிகைச் சரங்கள்
ஒன்பதாம் திருவிழா அன்று பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும், அக்கினிச் சட்டி ஏந்தி நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கும். திருவிழாவின் ஒன்பதாம் நாள் மாலையில், கோவில் முன்பாக இரண்டு ஆள் உயரத்துக்கு, பல டன் விறகுகள் அடுக்கப்பட்டு தீ மூட்டப்படும். மேலும் மேலும் விறகுக் கட்டைகளைப் போட்டுக் கொண்டே இருப்பர். அம்மனுக்கு நேர்ந்துகொண்ட பக்தர்கள் இப்பூக்குழியில் இறங்கி நடப்பர். இதற்குமுன் மல்லிகைச் சரங்களைப் பூக்குழிக்கு நான்கு பக்கங்களிலும் எல்லைக்கோடாக போட்டுவைப்பர். அது தீ ஜூவாலையினால் வாடாமல், கருகாமல் புதுமலர்போலவே மணம் வீசியபடியிருக்கும். அம்மன் பூக்குழியை பார்வையிட்ட பின்னரே மல்லிகைச் சரங்கள் வாடும்.
நேர்த்திக் கடனாக செலுத்தப்படும் பொம்மைகள்
பக்தர்கள் பல்வேறு உருவ பொம்மைகளை வாங்கி, கோவிலை சுற்றி வந்து அம்மனுக்கு செலுத்தி தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறார்கள்.
வலக் கரத்தினை உச்சி மீது வைத்து ஒற்றை காலில் தவமிருக்கும் தபசு அம்மன்
மூன்று பௌர்ணமி தினங்களில் வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்
கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில், கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் சாக்கோட்டை . இறைவன் திருநாமம் அமிர்தகலசநாதர். இறைவியின் திருநாமம் அமிர்தவல்லி. அம்மன் அமிர்தவல்லி இறைவனை நோக்கி நின்று திரும்பியுள்ள காட்சி ஒரு தனிச்சிறப்பாகும்.
இத்தலத்தை குறித்து மூன்று புராண வரலாறுகள் உள்ளது. ஒன்று ஊழிக் காலத்தில் உயிர்களை அடக்கிய கலசம் இங்கு தங்கியது அதனால் இத்தலம் கலயநல்லூர் என்று வழங்கபடுகிறது. இரண்டாவது பிரம்மன் இங்கு இறைவனை பூஜித்து பேறு பெற்றான். மூன்றாவது இறைவன் உமையம்மையின் தவத்தினை கண்டு அம்மைக்கு வரம் கொடுத்து திருமணம் புரிந்து கொண்டார்.
அம்பிகையின் தபசு கோலத்தை நாம் ஒரு தனி சன்னதியில் காணலாம். தவக்கோலத்தில் இருக்கும் இந்த தபசு அம்மன், வலது காலை மட்டும் தரையில் ஊன்றி இடக்காலை மடக்கி வலது தொடையில் ஏற்றி பொருந்திட மடக்கி பதிந்து பாதம் மேல் நோக்கிட நிற்கிறாள். வலக் கரத்தினை உச்சி மீது உள்ளங்கை கவிழ வைத்து இடக் கரத்தினை திருவயிற்றின் கீழ் அங்கை (உள்ளங்கை) மேல் நோக்க வைத்து நேராக நின்று தவமிருக்கின்றார். இந்த கோவிலில் இந்த சன்னதி தனி சிறப்பு கொண்டு விளங்குகிறது. தபசு அம்மனுக்கு, மூன்று பௌர்ணமி தினங்களில் 48 அகல் விளக்குகள் ஏற்றி, அர்ச்சனை செய்து வழி பட வேண்டும். இதனால் தாமதமாகும் திருமணங்கள் விரைவில் நடந்தேறும் என்பது ஐதீகம். பல வெளியூர் பக்தர்கள் இங்கு வந்து திருமணத் தடை நீங்க வழிபடுகிறார்கள். மேலும் இக்கோவில் அறுபதாம் திருமணத்திற்கும் உகந்த தலம் ஆகும்.
ஏழு அடி உயர திருமேனி உடைய அபூர்வ மகாலட்சுமி
மகாலட்சுமியின் அருகில் இரண்டு ஐராவதங்களும்,சங்க நிதியும், பதும நிதியும் இருக்கும் அரிய காட்சி
நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தேவார தலம் காயாரோகணேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் நீலாயதாக்ஷி அம்மன். நீலாயதாக்ஷி அம்மன், இத்தலத்தின் அரசியாக இருந்து பரிபாலனம் செய்வதால், அவருக்கே இங்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அதனால் இங்கு வீதிகளின் பெயர்கள் கூட நீலா வடக்கு வீதி, நீலா தெற்கு மடவிளாகம் என்று இருக்கின்றது. இதுபோல அம்மனின் பெயர் தாங்கிய வீதிகள் வேறு எந்த தலத்திலும் இல்லை.
இக்கோவிலில் இறைவன் சன்னதியின் வாயு மூலையில் எழுந்தருளி இருக்கும் மகாலட்சுமி பல தனிச்சிறப்புகளை கொண்டவர். இத்தலத்து மகாலட்சுமியானவள் கருங்கல்லால் ஆன ஏழு அடி உயர திருமேனி உடையவள். இவ்வளவு பெரிய திருமேனி உடைய மகாலட்சுமியை வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது. பொதுவாக சிவாலயங்களில் மகாலட்சுமி இரு கால்களையும் மடக்கி அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில், தனது இரு கால்களையும் தொங்கவிட்ட நிலையில், அர்தத ஆசன கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது ஒரு தனிச்சிறப்பு ஆகும். மேலும் மகாலட்சுமி தனித்தோ அல்லது இரு யானைகள் உடனிருக்க கஜலட்சுமி கோலத்தில் காட்சி தருவாள். ஆனால் இத்தலத்தில் மகாலட்சுமியின் அருகில் இரண்டு ஐராவதங்களும் (நான்கு தந்தங்கள் உடைய தேவலோகத்து வெள்ளை யானை), சங்க நிதியும் பதும நிதியும் (இந்த இரு தெய்வ மகளிரிடமும் தான் குபேரன் தன் செல்வங்களைக் கொடுத்து வைத்துள்ளான்) உடன் இருப்பது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்.
அம்பிகையின் பின்புறம் அமைந்த மிகப் பெரிய ஸ்ரீ சக்கரம்
வயிற்று நோய்களுக்கு அருமருந்தாகும் அம்பிகையின் அபிஷேக சந்தனம்
திருச்சிராப்பள்ளி - துறையூர் நெடுஞ்சாலையில்,திருச்சிராப்பள்ளியில் இருந்து 34 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தேனூர். இறைவன் திருநாமம் நந்திகேஸ்வரர். இறைவியின் திருநாமம் மகா சம்பத் கௌரி. திருஞானசம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் போற்றப்பட்ட தேவார வைப்பு தலம்.தேவலோக பசுவான காமதேனு, பூலோகம் வந்து இத்தல இறைவனிடம் விமோசனம் கேட்டு வழிபாடு செய்தது. தினமும் தன்னுடைய பாலை சொரிந்து வழிபட்டதால் இத்தலம் காமதேனூர் என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி தேனூர் என்றானது.
நந்திதேவர் தவமியற்றிய தலம் இது.தன்னை வழிபடும் அடியாரின் பெயரையே தனக்குச் சூட்டிக்கொண்டு, தன் பக்தரைக் கவுரவிக்கும் குணம் கொண்டவர் சிவபெருமான். அந்த வகையில் தன்னை வழிபட்டுப் பேறுபெற்ற நந்தியின் நினைவைப் போற்றும் விதமாக, இத்தல ஈசன் நந்திகேஸ்வரர் என்ற திருப்பெயரோடு அருள் வழங்குகின்றார்.
இத்தலத்து அம்பிகை மகா சம்பத் கௌரி நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.மேல் இரு கரங்களில் மலர்களைத் தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரையோடும் காணப்படுகிறாள். எழிலார்ந்த அம்பிகையின் திருமுகம் தரிசிப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தும். அம்பிகையின் பின்புறம் மிகப் பெரிய ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது. இப்படி மிகப்பெரிய ஸ்ரீ சக்கரம் பின்புறம் அமைந்த அம்பிகையை வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது.
தீராத வயிற்று வலி, குடல் நோய், சூலை நோய் உள்ளவர்களுக்கு இத்தலத்து அம்பிகையின் அபிஷேக சந்தனம் அருமருந்தாக விளங்குகின்றது.நோயுற்றவர்கள் அம்பிகைக்கு அபிஷேகம் செய்த சந்தனத்தை பயன்படுத்தினால், அவர்களின் நோய் பூரணகுணமாகும் என்பது ஐதீகம். இந்தப் பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகவும் இது இருக்கின்றது.
பள்ளியறை இல்லாத, பள்ளியறை பூஜை நடைபெறாத தேவார தலம்
சீர்காழியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் வங்கக் கடலோரம் அமைந்துள்ள தேவாரத் தலம், திருமுல்லைவாசல். இறைவன் திருநாமம் முல்லைவனநாதர், மாசிலாமணீசர். இறைவியின் திருநாமம் அணிகொண்ட கோதையம்மை. சத்தியானந்த சவுந்தரி.
எல்லா பெரிய சிவத்தலங்களிலும் பள்ளியறை உண்டு. தினமும் அதிகாலை வேளையிலும், இரவு வேளையிலும் பள்ளியறை பூஜை நடப்பது வழக்கம். ஆனால் இக்கோவிலில் பள்ளியறை இல்லை. பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிந்து கொள்ள இங்குள்ள முல்லைவன நாதரை அம்பாள் வழிபட்டதால், சிவபெருமான் குருவாக இருந்து அம்பாளுக்கு உபதேசித்தார். எனவே இத்தலத்தில் சிவபெருமான் குருவாக வீற்றிருக்கிறார். உமாதேவி வழிபட்டுத் தட்சிணாமூர்த்தியிடம் ஐந்தெழுத்து உபதேசம் பெற்ற தலமாதலால், இங்கு பள்ளியறை பூஜையும் நடத்துவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இது மற்ற சிவன் கோவிலில் இருந்து மாறுபட்ட நடைமுறையாகும். சூரிய, சந்திர கிரகணம், அமாவாசை காலங்களில் இங்கு வந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு மறு பிறப்பில்லை என்பது ஐதீகம்.
அம்பிகையும் திருவாசியும் ஒரே கல்லில் உருவாக்கப்பட்டிருக்கும் அபூர்வ வடிவமைப்பு
பௌர்ணமி அன்று வழிபட்டால் புத்திர பாக்கியம் அருளும் அம்பிகை
நாமக்கல் நகரில் இருந்து தெற்கில் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோகனூர் என்ற ஊரில், காவிரி நதியின் கரையில் அமைந்துள்ளது அசலதீபேஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் அசலதீபேஸ்வரர். இறைவியின் திருநாமம் மதுகரவேணி. தீப வழிபாட்டுடன் தொடர்புடைய தலம் என்பதால், இறைவனது சன்னதியில் எப்போதும் அணையாதீபம் எரிந்து கொண்டிருக்கிறது. இத்தீபம் அசையாமல் எரிவதால் சுவாமி, அசலதீபேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அசலம் என்றால் அசையாதது என்று பொருள். சுவாமி, இத்தலத்தில் தியான கோலத்தில் இருப்பதால், தீபம் அசைவதில்லை.
இத்தலத்தில் அசலதீபேஸ்வரர் மேற்கு நோக்கியும், அம்பாள் மதுகரவேணி கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். சிவன் அம்பிகை இருவரும் ஒருவருக்கொருவர் வலப்புறமாக காட்சி தரும்படி இத்தலம் அமைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய அமைப்பை வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாது.
தனது சகோதரன் விநாயகருடன் நடந்த போட்டியில் தனக்கு மாம்பழம் கிடைக்காததால் முருகப்பெருமான் கோபித்துக்கொண்டு கைலாயத்தை விட்டு புறப்பட்டார். அவரைத் தேடிக் கொண்டு புறப்பட்ட அம்பிகை தன் மகனை முதன் முதலாக இந்த தலத்தில் கண்டதால், இவ்வூர் மகனூர் என்று அழைக்கப்பட்டதாகவும், அதுவே பின்னர் மருவி மோகனூர் என்று மாறியது.
முருகனை நேரில் பார்த்தவுடனேயே பாசத்தில் இந்த அம்பிகை பால் சொரிந்தாளாம். எனவே இவள் மதுகரவேணி என்று அழைக்கப்படுகிறாள். மது என்றால் பால் என்று பொருள். பவுர்ணமிதோறும் இவளுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அந்நேரத்தில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த அம்பிகையை வழிபட்டால், புத்திரப்பேறு உண்டாகும் என்பது ஐதீகம்.
சமயபுரம் மாரியம்மனின் பச்சை பட்டினி விரதம்
மாசி மாத கடைசி ஞாயிறு முதல் 28 நாட்கள், பக்தர்களின் நலனுக்காக மாரியம்மன் கடைபிடிக்கும் விரதம்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்லும் வழியில் 15 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில். ஒட்டுமொத்த உலகத்தில் உள்ள அத்தனை மாரியம்மன் கோயில்களுக்கும் தலைமை பீடமானதுதான் சமயபுரம் ஆகும்.
கருவறையில் மாரியம்மன், தனது திருமுடியில் தங்கக் கிரீடம் அணிந்து, குங்கும நிற மேனியுடன், நெற்றியில் வைரப்பட்டை ஒளிவீச, இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு மிகப்பெரிய திருமேனியுடன் காட்சி தருகிறாள். அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். தனது எட்டு கைகளில் கத்தி, உடுக்கை, தாமரை, திரிசூலம், கபாலம், மணி, வில், பாசம் ஆகியவைகளைத் தாங்கி உள்ளாள். அன்னையின் வலது காலின் கீழ் மூன்று அசுரர்களின் தலைகள் காணப்படுகின்றன. உட்கார்ந்த கோலத்தில், இந்த அம்மனைப் போல பெரிய திருமேனி உடைய அம்மனை வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது. இந்த அம்மனின் திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டதால் அம்மனுக்கு 'மூலிகை அம்மன்' என்ற பெயரும் உண்டு. சுதை வடிவமானவள் என்பதால் இந்த அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது.
சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் சங்கடங்கள் போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் பக்தர்கள் விரதம் இருந்து தங்கள் வேண்டுதல் நிறைவேற அம்மனை பிரார்த்திக்கிறார்கள். ஆனால் சமயபுரம் மாரியம்மனே, உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது, சகல சௌபாக்கியங்கள் கிடைக்கவும், ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு அம்சமாகும். அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் நாட்களில், அம்மனை மனதில் கொண்டு, ஊர் மக்களும் தங்கள் வீடுகளில் அம்மன் படத்தை வைத்து வழிபட்டு விரதம் கடைபிடிப்பது வழக்கம். அடுப்பு தீயில் தாளிக்காமல், காலில் செருப்பு அணியாமல், இளநீரும் நீர் மோரும் அருந்தி மஞ்சள் ஆடை உடுத்தி மகமாயியின் அருள் வேண்டி இருக்கும் விரதம் இது.
அம்மனின் பச்சை பட்டினி விரதம் இனிதே நடைபெற வேண்டும் என்பதற்காக கருவறையில் உள்ள அம்மனுக்கு பக்தர்கள் பூக்களை அபிஷேகம் செய்வார்கள். இதனை பூச்சொரிதல் என்பார்கள்.
பூச்சொரிதல் நாள் முதல் 28 நாட்களுக்கு, அம்மனுக்கு தளிகை, நெய்வேத்தியம் கிடையாது. இளநீர், கரும்பு, பானகம், துள்ளுமாவு, நீர்மோர் மட்டுமே மாரியம்மனுக்கு கொடுக்கப்படுகிறது.
திருமணத்தின் போது சிவபெருமான், பார்வதி தேவியின் கரத்தை பற்றிக்கொண்டு அக்னிகுண்டத்தை வலம் வரும் அரிய காட்சி
சிவபார்வதி திருமணம் நடந்தபோது, அவர்களுடைய வயதை பற்றிய அரிய தகவல்
கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.
இக்கோவிலில் இறைவன் சன்னதியின் சுற்றுச்சுவரில், சிவபெருமான் கல்யாணசுந்தரர் என்ற திருநாமத்தோடும்,பார்வதி தேவி கோகிலாம்பாள் என்ற திருநாமத்தோடும் திருமண கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள். திருமணஞ்சேரி, திருவீழிமிழலை போன்ற தலங்களில் சிவபெருமானும் பார்வதி தேவியும் திருமண கோலத்தில் எழுந்தருளி இருந்தாலும், இத்தலத்தில் அவர்களின் திருமணக் கோலம் சற்று வித்தியாசமானதாகவும் அரிதாகவும் அமைந்திருக்கின்றது. இத்தலத்தில் சிவபெருமான் பார்வதி தேவியின் கரத்தை பற்றிக்கொண்டு, திருமண சடங்கிற்கான அக்னிகுண்டத்தை வலம் வரும் நிலையில் காட்சி தருவது, வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாத அரிய காட்சியாகும்.சிவபெருமானின் இடது புறம் திருமண சடங்கிற்கான அக்னி குண்டம் இடம் பெற்றிருக்கின்றது.மேலும் இருவர் கரங்களிலும் திருமண சடங்கின் போது அணிவிக்கப்படும் கங்கணமும் இருக்கின்றது.
இத்தலத்தில் சிவபெருமான் பார்வதி தேவி திருமணம் நடந்தபோது, சிவபெருமானுக்கு 18 வயது என்றும் பார்வதி தேவிக்கு ஒன்பது வயது என்றும் தல புராணம் குறிப்பிடுகின்றது. இப்படி இவர்கள் திருமணம் நடந்த போது, இவர்களின் வயதை குறிப்பிட்டு இருப்பது ஒரு அரிய தகவலாகும். வேறு எந்த சிவபார்வதி திருமணம் நடைபெற்ற தலத்திலும், அவர்கள் திருமண வயதைப் பற்றிய குறிப்பு இடம் பெறவில்லை.
இக்கோவில் ஒரு திருமண தடை நிவர்த்தி தலம் ஆகும். திருமணம் ஆகாதவர்கள் இங்கு உள்ள கல்யாண சுந்தரருக்கு அபிஷேகம் செய்து, மாலை சாற்றி, சுவாமி மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்றால், மூன்று மாதங்களில் அவர்களுக்குத் திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் காட்சி தரும் காளி அம்மன்
திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவார தலம் திருப்பாச்சூர். இறைவன் திருநாமம் வாசீஸ்வரர். இறைவியின் திருநாமம் தங்காதலி. இத்தலம் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
இக்கோவிலில் காளி அம்மன் தனி சன்னதியில் தன் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் காட்சி தருகிறாள். இதன் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.
ஒருமுறை குரும்பன் என்ற உள்ளூர் தலைவன், சோழ மன்னன் கரிகாலனுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தத் தவறினான். குரும்பன், காளி தேவியின் தீவிர பக்தன். நிலுவைத் தொகையை மீட்பதற்காக மன்னன் தன் பகுதிக்கு படையெடுத்த போது, அரசனையும் அவனது படையையும் தோற்கடிக்க உதவும்படி காளியிடம், குரும்பன் வேண்டிக் கொண்டான். சோழ மன்னன் கரிகாலன், சிவபக்தனாக இருந்ததால் சிவபெருமானிடம் உதவிக்காக வேண்டினான். சிவபெருமான் காளியை கட்டுப்படுத்தவும், கட்டவும் நந்தியை அனுப்பினார். நந்தி காளியை தோற்கடித்து அவளை தங்கச் சங்கிலியால் கட்டினார். இந்த சம்பவத்தை எடுத்துரைக்கும் வகையில், இந்தக் கோவில் காளி தேவியின் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் உள்ளன. இவள் சொர்ண காளி என்று அழைக்கப்படுகிறாள்.
கர்ப்பிணி கோலத்தில் உள்ள அபூர்வ அம்பிகை
சிவபெருமான் போல் நெற்றிக்கண் உடைய அம்பிகை
தினமும் முப்பெரும் தேவியராக அருள் பாலிக்கும் அம்பிகை
உலக ஜீவராசிகளின் கை ரேகைகளை தன் கரத்தில் கொண்ட அம்பிகை
கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப்பெற்ற தலம்.
இத்தலத்து அம்பிகை சௌந்தரநாயகிக்கு, சிவபெருமான் போல் நெற்றியில் மூன்றாவது கண் அமைந்திருக்கின்றது. அம்பிகைக்கு மஞ்சள் அபிஷேகம் செய்யும்போது அவருடைய மூன்றாவது கண்ணை நாம் தரிசிக்க முடியும்.
இந்த அம்பிகை அபிஷேக நேரங்களில் கர்ப்பிணி பெண் தோற்றத்தில் காட்சி அளிக்கிறாள். சந்தனாபிஷேகம் செய்யும்போது , ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு இருப்பதுபோன்ற அம்பிகையின் மேடிட்ட வயிற்றை நாம் தரிசிக்க முடியும். இப்படி கர்ப்பிணி தோற்றத்தில் காட்சி அளிக்கும் அம்பிகையை, வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. கர்ப்பிணி கோலத்தில் அம்மன் உள்ளதால், இங்கு உள்ள அம்பாளை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
இந்த அம்பிகை காலையில் மஹிஷாசுரமர்த்தினியாக சிவப்பு நிற புடவையிலும், மதியம் லட்சுமியாக பச்சை நிறப்புப் புடவையிலும், மாலையில் சரஸ்வதியாக வெள்ளை நிற புடவையிலும் காட்சி அளிக்கின்றாள்.
இந்த அம்மனின் உள்ளங்கையில், உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் கை ரேகைகளும் அடங்கி இருப்பதாக ஐதீகம். பாலாபிஷேகம் செய்யும் போது அம்மனின் உள்ளங்கை ரேகைகளை நாம் பார்க்கலாம்.
திருமணமாகாத பெண்களும் ஆண்களும் இங்கு வந்து அர்ச்சனை, அபிஷேகம் செய்தால் அவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை. பிரிந்த கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழக்கூடிய அமைப்பு கிடைக்கும்.
தனித்துவமான, திருமேனி வடிவமைப்புள்ள அம்பிகை
மூக்குத்தி போடுவதற்கான துவாரமும், தலைப்பின்னலில் ஜடை குஞ்சத்துடன் இருக்கும் அரிய காட்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் அமைந்துள்ளது சந்திரசூடேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை. பச்சையம்மன், பர்வதம்மன் என்ற பெயர்களும் உள்ளன.
தமிழ்நாட்டில் மலைமீது அமைந்த ஒரு சில சிவாலயங்களில் இந்த சந்திரசூடேஸ்வரர் கோவிலும் ஒன்று. மலை மேல் அமைந்துள்ள இக்கோவிலை அடைய சுமார் 200 படிகள் உள்ளன. வாகனங்கள் செல்ல சாலை வசதியும் உள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையானது இத்தலம்.ஹொய்சளர்களால் ஆளப்பட்ட இவ்வூர் ஹோசூர் என்ற பெயர் பெற்றது. இம்மாவட்டத்தில் தங்கத்தேர் அமைந்த ஒரே கோவில் இது ஒன்றேயாகும்.
இத்தலத்து இறைவி மரகதப் பச்சை நிறம் கொண்ட திருமேனி உடையவர். ஒரு சமயம் சிவபெருமான், தான் தங்கியிருந்த இத்தலத்திற்கு பார்வதிதேவியை அழைத்துவர ஒரு திருவிளையாடலை நடத்தினார். ஒளிவீசும் உடும்பு வடிவம் கொண்டு கயிலை மலையின் உத்தியான வனத்தில் இருந்த பார்வதிதேவிக்கு அருகே வந்தார். அந்த அதிசய உடும்பைக் கண்ட பார்வதி, அதைப் பிடிக்க தோழிகளுடன் சென்றார். உடும்பானது, அவர்களின் கைகளில் அகப்படாமல் காடு, மலைகளைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் தேவி அந்த உடும்பின் வாலை பிடிக்க, அவரது உடல் பச்சை நிறமானது.
கருவறையில் நான்கு கரங்களுடன், நின்ற நிலையில் காட்சி தரும் அம்பிகையின் மூக்கில் மூக்குத்தி போடுவதற்கான துளை அமைந்துள்ளதும், அம்பிகையின் பின்னல் ஜடை ,குஞ்சத்துடன் அமைந்துள்ளதும் அதிசயமான காட்சியாகும். இப்படிப்பட்ட தனித்துவமான வடிவமைப்புள்ள அம்பிகையை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. அம்பிகைக்கு முன்பு ஸ்ரீசக்ரம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீசக்ரத்தின் முன் ஆடி வெள்ளி, தைவெள்ளி, நவராத்திரி நாட்களில் சண்டி ஹோமம் நடைபெறும். அழகு மிளிரும் திருமுகத்துடன் காட்சி தரும் அம்பிகை, பெண்களுக்கு குழந்தை செல்வம், குடும்ப ஐஸ்வர்யம் அளிப்பதில் வல்லவள்.
மூக்குத்தி அணிய சிற்பியிடம் சிலையில் திருத்தம் செய்ய சொன்ன துர்க்கை அம்மன்
மயிலாடுதுறையிலிருந்து சுமார் 16. கி.மீ. தொலைவிலும், திருமணஞ்சேரியில் இருந்து 3.கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது, கிடாத்தலைமேடு துர்காபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் காமுகாம்பாள். ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது இக்கோவில். கிடாத்தலையோடு கூடிய மகிஷாசுரன் தேவர்களைக் கொடுமைப்படுத்தியபோது, அவர்கள் வந்து அபயம் அடையவே துர்க்கை அம்மன், அவனுடைய தலையை வெட்டினாள். அந்தத் தலை விழுந்த இடம் கிடாத்தலைமேடு என்றழைக்கப்படுகிறது.
துர்க்கை அம்மன், மகிஷாசுரனை வதம் செய்த பிறகு தனக்கேற்பட்ட தோஷத்தைப் போக்கிக்கொள்ள இந்தத் தலத்திலுள்ள சிவபெருமானை வழிபாடு செய்தார். துர்க்கை அம்மனின் தோஷத்தைப் போக்கியதால், இந்தத் தலத்து இறைவனுக்கு துர்காபுரீஸ்வரர் என்னும் திருநாமம் ஏற்பட்டது.
இத்தலத்தில் தனி சன்னிதியில், துர்க்கை அம்மன், கிடா வடிவிலுள்ள மகிஷனின் தலை மீது நின்ற திருக்கோலத்தில், சிம்ம வாகனத்தில் எட்டு கரங்களுடன் காட்சியளிக்கிறாள். இரண்டு கரங்களில் வரத அபய முத்திரையும், ஐந்து கரங்களில் சக்கரம், பானம், கத்தி உள்ளிட்டவற்றை கேடயமாக தரித்தும் ஓர் இடது கரத்தை தொடையில் பதித்த ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
மூக்குத்தி அணியும் துர்க்கை அம்மன்
இங்கு எழுந்தருளியுள்ள துர்க்கைக்கு அழகான மூக்குத்தி ஒன்று அணிவிக்கப்படுகிறது. இந்த மூக்குத்தி அணிவதற்கென்று துர்கை அம்மனின் இடது நாசியில், ஒரு சிறு துவாரம் ஒன்று காணப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான கதை உள்ளது. துர்கையம்மனை பிரதிஷ்டை செய்ய தீர்மானித்து, சிற்பியிடம் ஒரு துர்க்கை அம்மனின் திருவுருவ சிலை ஒன்றை வடிவமைக்க சொன்னார்கள்.
சிற்பியும் அழகான துர்க்கை சிலையை வடிவமைத்தார். ஒரு நாள் இரவில், சிற்பியின் கனவில் தோன்றிய துர்க்கை அம்மன், 'எனக்கு ஒரு அழகான மூக்குத்தியினை அணிவிக்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு சிலையில் நாளை ஒரு திருத்தம் செய்' என்று அம்பாள் சொன்னதும், திடுக்கிட்ட சிற்பி, 'வேலைகள் அனைத்தும் பூர்த்தி ஆகி விட்டதே. இந்த நேரத்தில் நாசியில் நான் உளியை வைத்தால் சிலை பின்னமாகிவிடாதா?' என்று நடுக்க குரலில் சிற்பி கேட்டான்.
துர்க்கை அம்மன் மெல்லிய சிரிப்புடன் 'வருந்தாதே.. என் நாசியின் மீது உன் உளியை மட்டும்வை. பிறகு எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்லி மறைந்தாள். மறுநாள் காலையில், துர்க்கை அம்மன் கூறியதை போலவே, அம்மன் சிலையில் இருக்கும் நாசி பகுதியில் உளியை வைத்தான். என்ன அற்புதம்! அடுத்த கணமே தானாகவே அங்கு மிகச் சிறிய ஒரு துவாரம் ஏற்பட்டது. நடந்த எல்லாவற்றையும் ஊர் பெரியோர்களிடம் சிற்பி தெரிவித்தார். அன்று முதல் துர்க்கை அம்மனுக்கு மூக்குத்தி அணிவிக்கும் வழக்கம் ஏற்பட்டது.
துர்க்கை அம்மனின் திருமுகத்தில் அரும்பும் வியர்வைத் துளிகள்
இன்னொரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால், விழாக் காலங்களில் துர்க்கை அம்மனின் திருமுகத்தில் வியர்வைத் துளிகள் அரும்புகின்றன. அதே போல், துர்கைக்கு நேர் எதிரே சுமார் 20 அடி உயரத்தில் சூலம் ஒன்றும் உள்ளது. சூலத்தின் அடிபாகம் 20 அடி ஆழம் வரை பூமிக்கு அடியில் செல்கிறது. துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் நடக்கும் போதெல்லாம், இந்த சூலத்திற்கும் அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.
இவை தவிர, ஐந்தடி நீளத்தில் ஒரு சூலமும், ஒரு அடி நீளத்தில் மற்றுமொரு சூலமும் உள்ளன. இதனை ஸ்ரீ சாமுண்டேஸ்வரியின் வடிவமாக பார்க்கப்படுகிறது. எலுமிச்சை பழத்தில் சிறிதளவு தேனை தடவி இந்த சூலத்தில் குத்தி வழிபட்டு வந்தால், ஏவல், பில்லி, சூனியம் விலகும். மேலும், சூலத்திற்கு அபிஷேகங்கள் செய்து வழிபட்டால், கால்நடைகளுக்கு ஏற்பட்டிருக்கும் கொடிய நோய்கள் அகன்றுவிடும்.
சுவாசினி பூஜைக்கு சுமங்கலியாக வந்த துர்க்கை அம்மன்
1990-ல், 300 சுமங்கலியை அழைத்து 'சுவாசினி பூஜை' நடத்த துர்க்கை சந்நதியில் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆனால், 299 சுமங்கலிகள் மட்டுமே பூஜைக்கு வந்திருந்தனர். மனமுருகி துர்க்கையிடம் வேண்டிக் கொண்டனர் விழாவின் ஏற்பாட்டாளர். சரியாக பூஜைகளை ஆரம்பிக்கும் முன்பாக, ஒரு வயதான சுமங்கலியாக வந்திருந்து பூஜைகளில் கலந்து கொண்டு, மங்கள பொருட்களை பெற்றுக் கொண்டு, உணவை உண்டு அதன் பின் மறைந்துவிட்டார்.
விழா ஏற்பாட்டாளர்கள் எங்கு தேடியும், அந்த வயதான சுமங்கலியை காணவில்லை. திடீர் என்று ஒரு பக்தைக்கு அருள் வரவே 'அந்த வயதான சுமங்கலி பெண்ணாக வந்தது நான்தான்’ (துர்க்கை) என்றும், விழா திருப்தியாக இருந்ததாகவும் கூற, அனைவரும் மெய்சிலிர்த்து போனார்கள்.
தோஷங்களை நிவர்த்தி செய்யும் துர்க்கை அம்மன்
கன்னி தோஷம், காள தோஷம், நாக தோஷம், திருமண ஸ்தான தோஷம் போன்ற தோஷங்களை நிவர்த்தி செய்து அருள்கிறாள் இந்த துர்க்கை அம்மன்.
மன்மதனுக்கு கரும்பு வில்லையும், புஷ்ப பானங்களையும் மீண்டும் வழங்கிய காமுகாம்பாள்
கணவன் மனைவி ஒற்றுமைக்கு வேண்டிக் கொள்ளும் தலம்
மயிலாடுதுறையிலிருந்து சுமார் 16. கி.மீ. தொலைவிலும், திருமணஞ்சேரியில் இருந்து 3.கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது, கிடாத்தலைமேடு துர்காபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் காமுகாம்பாள். ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது இக்கோவில்.
ஒரு சமயம் கயிலாயத்தில் தவத்திலிருந்த சிவபெருமானின் கவனத்தை பார்வதி தேவியின் பக்கம் திருப்புவதற்காக, சிவபெருமான் மீது காமதேவனாகிய மன்மதன் மலர்க்கணையை ஏவினான். இதனால் தவம் கலைந்து கோபமுற்ற சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணால் மன்மதனை அங்கேயே எரித்து சாம்பலாக்கினார். தனது கணவனுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்து வருந்திய ரதி தேவி, பொன்னூர் என்னும் இடத்தில் ஒரு தவச்சாலை அமைத்து தவமிருந்தார். பிறகு சிவபெருமான் திருமணக் கோலத்தில் அருளும் திருமணஞ்சேரிக்கு வந்து அவரை தரிசித்த ரதி தேவி தனது கணவனை உயிர்ப்பிக்க வேண்டி சிவபெருமானிடம் மன்றாடினாள்.
ரதி தேவியின் பக்திக்கு இரங்கிய சிவபெருமான், மன்மதனை உயிர்ப்பிக்கிறார். சிவனால் உயிர்ப்பிக்கப்பட்ட மன்மதன் இந்த துர்காபுரீஸ்வரர் தலத்தில் உறையும் ஈசனை கண்டு வணங்கி, பார்வதி தேவியையும் வழிபடுகிறான். மன்மதனின் பக்தியைக் கண்டு மனம் இரங்கிய பார்வதி தேவி, அவனுக்குக் தன் கையில் இருந்த கரும்பு வில்லையும், புஷ்ப பானங்களையும் மீண்டும் வழங்குகிறார். காமனாகிய மன்மதனுக்கு அருள்பாலித்ததால் இந்தத் தலத்தில் அம்பாளுக்கு ஸ்ரீ காமுகாம்பாள் என்னும் திருநாமம் ஏற்பட்டது. எல்லோருடைய காமமான துன்பத்தை போக்குவதாலும் இந்தப் பெயர் ஏற்பட்டது. மேலும், ரதிதேவிக்கு மாங்கல்ய பாக்கியத்தை அளித்தவள் இந்த ஸ்ரீகாமுகாம்பாள் அம்பிகை.
மன்மதனுக்கு அருள்பாலித்த தலமாதலால் இது கணவன் மனைவி ஒற்றுமைக்கு வேண்டிக் கொள்ளும் தலமாகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
துர்க்கையின் இடது கையில் கிளி ஏறிச் செல்லும் அபூர்வ தோற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது காட்டுசெல்லூர் எனும் கிராமம். இங்கே கோவில் கொண்டிருப்பவள் வேம்பிஅம்மன்.
இந்தக் கோவிலில் சுமார் 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த, பல்லவர் காலத்தைச் சார்ந்த துர்க்கையின் சிற்பம் விசேடமானது. சுமார் நாலரை அடி உயரம்; இரண்டரை அடி அகலத்துடனும் நின்ற கோலத்தில் நிறுவப்பட்டிருக்கும் துர்க்கை சிற்பம் நான்கு திருக்கரங்களுடன் திகழ்கிறது. மேலிரு கரங்களில் பிரயோகச் சக்கரமும் சங்கும், கீழ் வலக்கரத்தில் ஞான முத்திரை திகழ கீழ் இடக் கரத்தை இடுப்பில் வைத்தும் தரிசனம் தருகிறாள். சில சிவாலயங்களில் துர்கை தன் இடது கையில் கிளி வைத்திருப்பாள். ஆனால் இக்கோவிலில், துர்க்கையின் இடது கையில், கிளி ஒன்று ஏறிச் செல்வது போல் இருப்பது தனிச்சிறப்பு. இத்தகைய துர்கையின் தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.
இந்தக் கோவிலில் , விஜயதசமி நாளில் அம்பு போடும் திருவிழா வெகு பிரசித்தம்.
இரண்டு கைகளிலும் பாசம் தாங்கி இருக்கும் அபூர்வ அம்பிகை
சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில், சுங்குவார் சத்திரத்திலிருந்து இடதுபக்கம் திரும்பிச்சென்றால் 10 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது தென்னேரி கிராமம். இறைவன் திருநாமம் ஆபத்சகாயேஸ்வரர். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான தலம் இது. இவ்வூரிலுள்ள ஏரி, திரையனேரி என்று முற்காலத்தில் அழைக்கப்பெற்றது. ஏரியின் பெயரே மருவி இன்று தென்னேரி ஆனது.
இத்தலத்து அம்பிகை ஆனந்தவல்லி சாந்த சொரூபியாய், தெற்கு நோக்கி நின்ற கோலத்தில், நான்கு திருக்கரங்களோடு காட்சி தருகிறார். மேற்கரங்கள் இரண்டும் பாசம் தாங்கியும், கீழ் இரண்டு கரங்கள் அபய வரதம் தாங்கியும் அருளுகின்றார்.பொதுவாக அம்பிகையானவள் ஒரு கரத்தில் தான் பாசம் தாங்கி இருப்பாள். இப்படி மேல் இரண்டு கைகளிலுமே பாசம் தாங்கி இத்தலத்து அம்பிகை காட்சி அளிப்பது, வேறு எங்கும் காண முடியாத அரிய தோற்றமாகும்.
எமதர்மனின் திசை தெற்கு. அம்பிகை தெற்கு நோக்கி எழுந்து அருளி இருப்பதன் நோக்கமே, பக்தர்களை எமவாதனையிலிருந்தும், மற்ற துன்பங்களிலிருந்தும் காப்பதற்காகத்தான். அதற்காகத்தான், பக்தர்களை காக்கும் ரட்சையாக, இரண்டு பாசங்களை தன் மேல் இரண்டு கைகளில் ஏந்தி இருக்கிறார். அதனால்தான் திருமணத்தடை நீக்கும், பலவித நோய்களை தீர்க்கும் இத்தலத்துக்கே சிறப்பாக கருதப்படும் அஷ்டகந்தம் சாற்றிய ரட்சையை, சுவாமியிடம் வைத்து பூஜித்து பின்னர் அம்பிகை திருப்பாதங்களில் வைத்து பிரசாதமாக தருகிறார்கள்.
இந்தக் கோவிலை பற்றிய முந்தைய பதிவு
திருமணத் தடை நீ்க்கும் அஷ்டகந்தம் சாற்றிய ரட்சை (20.01.2025)
பலவிதமான நோய்களைத் தீர்க்கும் அபிஷேக விபூதி
திருமணத்தடை நீங்க வாழை மரத்திற்கு தாலி கட்டும் பரிகார பூஜை
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 21 கி.மீ. தொலைவிலும், மண்ணச்சநல்லூரிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள தேவாரத் தலம் திருப்பைஞ்ஞீலி. இறைவனின் திருநாமம் ஞீலிவனேஸ்வரர். இக்கோவிலில் அம்மன் சன்னதி இரண்டு உள்ளது. ஒரு சன்னதியில் நீள்நெடுங்கண் நாயகியும், மற்றொரு சன்னதியில் விசாலாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிக்கின்றனர். ஞீலி என்பது மனிதர்கள் உண்ண இயலாத இறைவனுக்கு மட்டுமே படைப்பாகிற ஒரு வகைக் கல்வாழை. பைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். பசுமையான ஞீலி வாழையை தலவிருட்சமாக பெற்றதால் திருப்பைஞ்ஞீலி என்று இத்தலம் பெயர் பெற்றது.
சப்த கன்னியர் வாழை மர வடிவில் எழுந்தருளி இருக்கும் தலம்
பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிகளும் தங்களது திருமணத்திற்கு முன்பு இத்தலம் வந்து அம்பாளின் தரிசனம் வேண்டித் தவம் செய்தனர். அவர்களுக்கு அம்பாள் காட்சி தந்து, தகுந்த காலத்தில் நல்ல வரன்கள் அமையப்பெற்று சிறப்புடன் வாழும்படி வரம் தந்தாள். சப்தகன்னிகள் அம்பாளை இங்கே எழுந்தருளும்படி வேண்டினர். எனவே அம்பாள் இங்கே எழுந்தருளினாள். அவள் சப்த கன்னிகளிடம், 'நீங்கள் வாழை மரத்தின் வடிவில் இருந்து நீண்டகாலத்திற்கு என் தரிசனம் காண்பீர்கள்' என்றாள். அதன்படி சப்த கன்னிகள் வாழை மரங்களாக மாறி இங்கேயே தங்கினர்.
வாழை மரத்திற்கு தாலி கட்டும் பரிகார பூஜை
இந்த ஆலயத்துக்கென்றே விசேஷ வழிபாடான கல்(யாண) வாழைகளுக்கு முன்னே அமர்ந்து செய்து கொள்ளும் பரிகார பூஜை மற்றும் தோஷ நிவர்த்தி பூஜை அதிசயமானது. திருமண தோஷம் உள்ளவர்கள் வாழை மரத்திற்கு தாலி கட்டிப் பரிகார பூஜைகள் செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.
திருப்பைஞ்ஞீலி ஞீலிவனநாதர் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்று கிழமை தினங்களில் பரிகாரம் செய்ய செல்வது சிறந்தது. இங்கு காலையும் மாலையும் வாழை பரிகார பூஜை செய்யப்படுகிறது. இதனால் நாகதோஷ நிவர்த்தி, திருமணத்தடை விலகுதல், பூரண ஆயுள் போன்ற மங்கலங்கள் நிறைவேறுமாம்.பிற மதத்தினரும் இந்த கல்வாழை பரிகார பூஜையில் கலந்து கொள்வது தனிச்சிறப்பாகும்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன கோவிலில் கனு உற்சவம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் நாளில் கனு உற்சவம் நடைபெறுவது வழக்கம். அப்போது, விவசாயிகள் தங்களது வயலில் புதியதாக விளைந்த காய்கறிகள், பழங்கள், கரும்பு, நெல் ஆகியவற்றை காமாட்சியம்மனுக்கு படைப்பதற்காக கொண்டு வருவார்கள். அவற்றைக் கொண்டு கோவில் முழுவதும் அலங்கரிக்கப்படும்.
கனு உற்சவத்தையொட்டி, மூலவர் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். உற்சவர் காமாட்சி அம்மன், லட்சுமி, சரஸ்வதியுடன் கேடயத்தில் உலா வந்து கோவில் வளாகத்துக்குள் உள்ள கனு மண்டபத்துக்கு எழுந்தருள்வார். அங்கு தேவியர் மூவருக்கும் காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
கனு உற்சவம் என்பது பெண்கள் தங்கள் சகோதரர்கள் நலமுடன் வாழவும், உணவுத் தட்டுப்பாடு வராமல் மகிழ்ச்சி நிலவவும் வேண்டி காமாட்சி அம்மனுக்கு நடத்தப்படுகிறது. காய்கறிகள் மீது பிரியமானவள் காமாட்சி என்பதால் அம்மனுக்கு 'சாகம்பரி' என்ற பெயரும் உண்டு. எனவே கனு உற்சவத்தின்போது காய்கறிகள், பழங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. அம்மன் சந்நிதிகளில் ஏராளமான மரக்கிளை, காய், கனிகளால் பரப்பி வைத்து அம்பிகையை அலங்காரம் செய்வர். இதற்கு ‘சாகம்பரி அலங்காரம்' என்று பெயர்.
சாகம்பரியைப் பற்றி ஆதிசங்கரர் தன்னுடைய முதல் நூலான கனகதாரா ஸ்தோத்திரத்தில் 'கீர்தேவதேதி'என்னும் பாடலில் "சாகம்பரீதி' எனக் குறிப்பிடுகின்றார்.
காஞ்சிப் பெரியவர் விரும்பிய சாகம்பரி அலங்காரத்திற்கு, ஏற்பாடு செய்த காமாட்சி அம்மன்
ஒரு போகி பண்டிகையன்று காமாட்சியம்மன் கோவிலுக்கு காஞ்சிப் பெரியவர் வந்தார். அங்கிருந்த சாஸ்திரியிடம், 'பொங்கலன்று அம்பாளை சாகம்பரியாக அலங்காரம் (காய்கறிகளால் அலங்கரித்தல்) செய்யுங்கள். இந்த வடிவில் அம்பாளை தரிசித்தால் பாவம் தீரும். புத்திர பாக்கியம், ஆரோக்கியம் உண்டாகும். அம்பாளை மட்டுமின்றி கோவிலின் எல்லா இடங்களிலும் காய்கறி, பழங்களால் தோரணம் கட்டுங்கள்' என்றார். இதற்கு இரண்டு மூன்று லோடு காய்கறியை தருவிக்க வேண்டுமே! ஒரே நாளில் அது சாத்தியமில்லையே!, என்று நினைத்த சாஸ்திரி, 'அதை அடுத்த ஆண்டு நடத்தலாமே!' என்றார் பணிவுடன். காஞ்சிப் பெரியவர் அவரிடம்,'அம்பாளிடம் விருப்பத்தைச் சொல்லிட்டேன். அவள் பாத்துக்குவா'என்று சொல்லி விட்டார்.
அன்று மாலை சென்னை கொத்தவால் சாவடியில் இருந்து மூன்று லாரிகள் கோவில் முன் வந்து நின்றது. பணியாளர்கள் விபரம் கேட்ட போது, சென்னையைச் சேர்ந்த தம்பதி ஒருவரின் ஏற்பாட்டின் மூலம் கோவில் முழுவதும் காய்கறி அலங்காரம் செய்ய சரக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தனர். உடனே பெரியவருக்கும் தகவல் அனுப்பப்பட்டது. பொங்கலன்று கோவிலுக்கு வந்த பெரியவர் எங்கும் காய்கறி, பழத் தோரணம் இருப்பது கண்டு மகிழ்ந்தார்
அம்பிகையை சாகம்பரியாக தரிசித்த பெரியவர், பக்தர்களிடம், 'பொங்கலன்று சூரியனை வழிபட்டால் ஆரோக்கியம் உண்டாகும். இன்று தர்ப்பணம் செய்வது அவசியம். அம்பாளை சாகம்பரியாக தரிசித்தால் நினைத்தது நிறைவேறும். நாளை கோபூஜை செய்யுங்கள். நாளை மறுநாள் உடன்பிறந்தவர் நலனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்'என்று சொல்லி ஆசியளித்தார்.
சிம்ம வாகனத்தில் விஷ்ணு துர்க்கை
திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம், வேதத்தின் பெயரால், சாமவேதீசுவரர் என்று அழைக்கப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இறைவியின் திருநாமம் லோகநாயகி. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவாரம் வைப்பு தலம் இது.
பொதுவாக சிவாலயங்களில் இறைவன் கருவறையின் சுற்றுச்சுவரில் எழுந்தருளி இருக்கும் துர்க்கை அம்மன், மகிஷாசுரன் தலையின் மேல் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பாள். ஆனால் இக்கோவிலில் அமைந்துள்ள விஷ்ணு துர்க்கை மகிஷ வாகனமின்றி, சிம்ம வாகனத்தில் இருப்பது தனிச் சிறப்பாகும். திருமணமாகாத பெண்கள், இந்த சிம்ம வாகன துர்க்கையை 11 வெள்ளிக்கிழமைகள் வழிபட்டு, முடிவில் மஞ்சள் காப்பணிந்து நேர்த்தி செய்தால், திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
உலகிலேயே வராகியம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோவில்
விழுப்புரத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் சாலாமேடு எனும் ஊரில் அஷ்டவராகி கோவில் உள்ளது. உலகிலேயே வராகியம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோவிலாகக் கருதப்படுகிறது.
திருமாலின் வராக அம்சமாக கருதப்படும் வராகியம்மன், ராஜ ராஜேஸ்வரி அம்மனின் குதிரைப்படைத்தலைவியாகவும், பத்மாவதி அம்மனின் காவல் தெய்வமாகவும், சப்தகன்னியரில் ஒருவராகவும் அறியப்படுகிறார். மகா வராகி, ஆதி வராகி, ஸ்வப்னவராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி, மகிஷாருடா வராகி, அச்வாருடா வராகி என்போர் எட்டு வராகிகள் (அஷ்டவராகி) என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த எட்டு தெய்வங்களையும் உள்ளடக்கிய கோவில் தான் சாலாமேட்டில் அமைந்துள்ளது.
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமான வராகியை வணங்கினால் பகைவரை அழித்து பக்தரை காத்திடுவாள். கொடிய ஏவல், பில்லி சூனியத்தில் இருந்தும் காப்பாற்றுவாள். வராகியை வணங்கும் எவருக்கும் அனைத்து செல்வங்களும் வந்து சேரும்.ஞாயிறு கிழமைகளில் வாராகியை வழிபட்டால் நோய்கள் தீரும். திங்கட்கிழமைகளில் வழிபட்டால் மன நல பாதிப்புகள் நீங்கும். வீடு நிலம் தொடர்பான பிரச்சினைகள்தீர செவ்வாய்கிழமைகளில் வராகியை வழிபடலாம். கடன் தொல்லைகள் தீர புதன்கிழமை வழிபடலாம். குழந்தை பேறு கிடைக்க வியாழக்கிழமை வழிபடலாம். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் வியாழக்கிழமை வழிபடலாம். வெள்ளிக்கிழமை வழிபட நினைத்த காரியம் நிறைவேறும்.
கேட்ட வரம் தரும் வராகி காயத்ரி மந்திரம்
வராகி அம்மனுக்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபிப்போருக்கு கேட்ட வரங்கள் கிடைக்கும்.
வராகி காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்
இழந்த செல்வம், சொத்து, சொந்தங்களை மீட்டுத் தரும் வராகி அம்மன்
வராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள், மண் அகலில் கருநீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முடிந்து, அதில் நல்லெண்ணெய் விட்டு தீபமிட்டு மனதார வேண்டினால் இழந்த அனைத்தையும் திரும்ப பெறலாம்.
மானுட உருவம் கொண்டு அம்பிகை இறைவனை பூஜை செய்த தலம்
திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கோவிந்தவல்லி. கோவிந்தவல்லி என்றால் உயிர்களுக்கெல்லாம் தலைவி என பொருள் உண்டாம். இந்த அம்பிகைக்கு சிவகாமசுந்தரி, கோவர்த்தனாம்பிகை அம்மன் போன்ற பல்வேறு பெயர்களும் உண்டு.
ஒரு சமயம் கைலாயத்தில் சிவபெருமான், பார்வதிதேவிக்கு வேதசிவாகமப் பொருளை உணர்த்திக் கொண்டிருந்தபோது, அம்பிகையின் கவனம் மாறும்படியாக காமதேனு அவ்வழியே செல்ல, தேவியின் கவனம் அந்த காமதேனு மீது மாறுவதை உணர்ந்து கோபமடைந்த சிவபெருமான், அம்பிகையை நோக்கி 'பூலோகத்தில் திண்ணக்கோணம் அடைந்து பங்குனி மாத வளர்பிறையில் வரும் வசந்த நவராத்திரி என்னும் ஒன்பது ராத்திரி நாள்கள் நீ தவமிருக்கும்போது, நான் பசுவாக உனக்கு காட்சியளிப்பேன். அதன் பின் என்னை வந்து நீ அடைவாயாக' என்று பார்வதி தேவிக்கு சாபமிட்டு அதற்கான விமோசனத்தையும் அருளினார். அதன்படி மானுட உருவம் கொண்டு இடையர் குலத்தில் அம்பிகை பிறந்து, சிவபெருமானை நோக்கி தவமிருந்து வரம் பெற்று மீண்டும் அடைந்தது இந்தக் கோவிலில்தான்.
சிவபெருமானால் சாபம் விட்டு, மானுட வேடம் பூண்டு, பின்னர் தவமிருந்து தேவி அவரிடம் இணைந்த திருக்கோயில் என்பதால், பங்குனி மாத வளர்பிறையில் வசந்த நவராத்திரி உற்சவம் இறைவிக்கு நடத்தப்படுகிறது.
சரசுவதி தேவி வீணையை வித்தியாசமாக ஏந்தி இருக்கும் அரிய காட்சி
தேனியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள உத்தமபாளையம் என்ற ஊரில், சுருளியாற்றங்கரையில் அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காளத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. ஆந்திர மாநிலத்தில் இருக்கும் காளஹஸ்திக்கு இணையான தலம் என்பதால், இக்கோவிலை. பக்தர்கள் தென்னகத்து காளகஸ்தி என்று அழைக்கின்றனர்.
இக்கோவிலில், இறைவி ஞானாம்பிகை சன்னதியின் பின்பக்கம் சரசுவதி தேவி, மூன்றரை அடி உயரத் திருமேனியுடன், சற்று வித்தியாசமான தோற்றத்தில் எழுந்தருளி இருப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.பொதுவாக சரசுவதி தேவி, வீணையை தன் மடியிலிருத்தி தன் கை விரல்களால் அதை மீட்டும் நிலையில் காட்சி தருவார். ஆனால், இக்கோவிலில் சரசுவதி தேவி வீணையை தன் இடது கரத்தில் செங்குத்தாக, தம்புராவை வைத்திருப்பது போல் காட்சி அளிப்பது, வேறு எந்த கோவிலிலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்.
ஆலயத்துளிகள் வாசகர்களுக்கு,
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
மகாலட்சுமி இழந்த தன்னுடைய செல்வங்களை மீட்டெடுத்த தலம்
மகாலட்சுமிக்கு வெண்ணெய் காப்பு சாற்றப்படும் தனிச்சிறப்பு
திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம், வேதத்தின் பெயரால், சாமவேதீசுவரர் என்று அழைக்கப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இறைவியின் திருநாமம் லோகநாயகி. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவாரம் வைப்பு தலம் இது.
இக்கோவிலில் கஜலட்சுமி தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கிறாள். கஜலட்சுமி அதாவது திருமகள் இத்தலத்து இறைவனை பூஜை செய்து இழந்த தன்னுடைய செல்வங்களை மீட்டெடுத்தாள். மகாலட்சுமி தன்னுடைய மங்களங்களை திரும்ப அடைந்ததால், இத்தலத்துக்கு திருமங்கலம் என்று பெயர் ஏற்பட்டது. பொதுவாக ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு செய்து வழிபடுவது வழக்கம். இக்கோவிலில் கஜலட்சுமிக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபடுவது ஒரு தனி சிறப்பாகும். இந்த கஜலட்சுமிக்கு வெண்ணெய் காப்பு செய்து வழிபட்டால், இழந்த செல்வங்களை மீட்டெடுக்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
முகத்தின் ஒரு பக்கத்தில் கோபத்தையும், மறுபக்கத்தில் நாணத்தையும் வெளிப்படுத்தும் அபூர்வ அம்பிகை
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையின் அருகிலுள்ள பேரளம் ரயில் நிலையத்திலிருந்து, மேற்கே ஒரு கி.மீ. தொலைவில் அமைந்து உள்ள தேவார தலம் திருமீயச்சூர் மேகநாதர் கோவில். இறைவியின் திருநாமம் லலிதாம்பிகை.
திருமீயச்சூர், ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் நோன்றிய திருத்தலம். இங்குதான் ஸ்ரீ ஹயக்ரீவர், அகத்திய முனிவருக்கு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்தார். அகத்தியரும் ஒரு பௌர்ணமி நாளன்று ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தினால் திருமீயச்சூர் லலிதாம்பிகையை வழிபட்டதுடன், ஸ்ரீலலிதா நவரத்தின மாலை என்ற பாடலையும் தமிழில் இயற்றி அம்பிகைக்கு அர்ப்பணித்தார். இத்தலத்துக்கு வந்து, லலிதா சகஸ்ரநாமத்தையும், லலிதா நவரத்னமாலையையும் படிப்பவர்களுக்கு அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும்.
இக்கோவில் விமானத்தின் கீழ் தெற்கில் ஷேத்திரபுராணேச்வரர், பார்வதியின் முகவாயைப் பிடித்துச் சாந்தநாயகியாக இருக்கச் சொல்லி வேண்டுவது போன்ற வடிவில் காணப்படும் சிற்ப அழகை வேறு எந்தக் கோவிலிலும் காண்பது அரிது. இந்தச் சிற்பத்தை ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால் அம்பாள் கோபமுடன் இருப்பது போலத் தோன்றும். இதே சிற்பத்தை மறுபக்கம் சென்று பார்த்தால், அம்பாள் சாந்த சொரூபியாக நாணத்துடன் காணப்படுவாள்.இந்த கோவிலில் நாம் அவசியம் தரிசிக்க வேண்டிய அபூர்வமான சிற்பமாகும் இது. இப்படி அம்பிகை இரு வேறு முக பாவணையை வெளிப்படுத்துவதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்ச்சி உள்ளது.
ஒரு சமயம் சிவபெருமானிடம் பெற்ற சாபத்தினால், சூரிய பகவானின் திருமேனி கருகி போனது. சூரியன், சாப விமோசனம் பெற திருமீயச்சூரில் 7 மாத காலம் கடுந்தவம் புரிந்தும் மேனி நிறம் மாறவில்லை. சூரியன் வாய்விட்டு அலறி இறைவனை அழைக்க, இறைவனோடு தனித்திருந்த பார்வதி, சூரியனின் அலறலினால் தன்னுடைய ஏகாந்தத்துக்கு ஏற்பட்ட இடையூரால் சூரியன் மேல் கோபம் அடைந்தாள்.அவனுக்கு சாபம் அளிக்க முற்பட்டாள். முன்னரே சாபத்தால் வருந்திக் கொண்டிருக்கும் சூரியனை மேலும் வருத்த வேண்டாம் என்றும் அமைதி கொள்ளுமாறும் சிவபெருமான் கூற, பார்வதி சாந்தநாயகி ஆனாள். இந்த நிகழ்ச்சியின் காரணமாகத்தான், அம்பிகை தன்னுடைய முகத்தில் இருவேறு பாவங்களைக் கொண்டிருக்கிறார்.
மூன்று முகம் கொண்ட முப்பிடாதி அம்மன்
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது முப்பிடாரி அம்மன் கோவில்.
மகிசாசுரனை அழிக்க, அம்பிகை எட்டு பெண் குழந்தைகளாக நாகலோகத்தில் பிறந்தாள். அவர்களில் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தைதான் முப்பிடாதி. அஷ்ட காளியரில் மூன்றாவதாக மூன்று தலைகளுடன் அவதரித்தவள் முப்பிடாதி அம்மன். பிடரி என்றால் தலை என்று பொருள். மூன்று தலைகள் இருந்தமையால் முப்பிடரி என்று அழைக்கப்பட்ட இந்த அம்மன் பின்னர் முப்பிடாரி என்று அழைக்கப்படலானார். இதுவே மருவி முப்பிடாதி என்றானது. இந்த அம்மனுக்கான கோவில் திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் அமைந்துள்ளன.
இந்த அம்மனுக்கு மூன்று முகம் தோன்றியதற்கு பின்னணியில் ஒரு ஒரு புராண நிகழ்ச்சி உள்ளது. இந்த அம்மன் சிவனை நோக்கி தவம் செய்து சிவனிடம் 103 சிவலிங்கம் பெற்றார். பின்பு ஒரு நாள் சிவனடியார்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்ய பால் கொண்டு செல்லும் போது, அதனை வாங்கி பருகினாள். இதனால் கோபம் அடைந்த சிவன் தான் வழங்கிய சிவலிங்கத்தை, திருமாலை வாங்கி வர வேண்டினார். திருமாலும் வாங்க வரச் சென்றார். இதனை அறிந்த அம்பிகை மூன்று சிவலிங்கத்தை விழுங்கினார். ஆகையால் அம்மனுக்கு மூன்று முகம் தோன்றியது, இதனால் அம்மனுக்கு முப்பிடாரி அம்மன் என்று பெயர் வந்தது.
ஏழைக்காக ஆங்கிலேயே நீதிபதியிடம் சாட்சி சொன்ன சந்தன மாரியம்மன்
திருவாரூர் மாவட்டத்தில் குடவாசலுக்குக் கிழக்கே 7 கி.மீ. தொலைவில் குடமுருட்டி ஆற்றின் வடகரையில், பச்சை வயல்களின் நடுவே அமைந்துள்ளது. பருத்தியூர் சந்தன மாரியம்மன் கோவில்.
பருத்தியூர் மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறார் இந்த சந்தன மாரியம்மன். இந்த அம்மன் புரிந்த லீலைகள் ஏராளம். அதில் ஒன்றைத்தான் இப்பதிவில் நாம் காண இருக்கிறோம்.
பாவாடை என்பவன் ஏழை விவசாயி. செல்வந்தர் ஒருவரிடம் கடன் பெற்றான். தன்னிடமிருந்த ஆடு, மாடுகளை விற்று, பாவாடை உரிய நேரத்தில் கடனைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். பாவாடை கடனை மீண்டும் செலுத்தியும், செல்வந்தர் கடன் பத்திரத்தை கொடுக்க மறுத்தார், அத்துடன், "பாவாடை பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை' என்று வழக்கும் தொடுத்துவிட்டார். ஆங்கிலேயே நீதிபதி முன்பு வழக்கு வந்தது. ஆங்கிலேயே நீதிபதி, 'நீர் கடனைத் திருப்பிக் கொடுத்ததற்கு எவரேனும் சாட்சி சொல்லுவார்களா?' என்று, பாவாடையிடம் கேட்டார். பாவாடையோ 'ஐயா… எங்க ஊரு சந்தன மாரியம்மனே சாட்சி' என்றான். பாவாடை அவரது பாமரத்தனத்தைக் கண்டு அனைவரும் சிரித்தனர்.
அன்று இரவு, அந்த ஆங்கிலேய நீதிபதியின் கனவில் ஒரு நீதிமன்றக் காட்சி தோன்றியது! விசாரணைக் கூண்டில், மஞ்சள் நிறத்தில் பட்டுப் பாவாடை உடுத்திய ஒரு சிறுமி நின்றாள்!. 'நீ யாரம்மா?' என்று ஆங்கிலேய நீதிபதி கேட்டார். 'நான்தான் பருத்தியூர் சந்தனமாரி! நிரபராதியான பாவாடைக்குச் சாட்சி சொல்ல வந்திருக்கிறேன்!' என்றாள்.
‘நான் எதனை ஆதாரமாகக் கொண்டு பாவாடை நிரபராதி என்று தீர்மானிப்பது?' என்று நீதிபதி, சிறுமியிடம் கேட்டார். சில நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, 'அவர்களையும் அழைத்து விசாரித்து, நீதி வழங்கு!' என்ற சிறுமி புன்னகை பூத்து மறைந்துவிட்டாள். கனவு கலைந்து விழித்து எழுந்த நீதிபதி, சிறுமி கனவில் குறிப்பிட்ட பெயர்களை எழுதி வைத்துக் கொண்டார், சந்தனமாரி கனவில் குறிப்பிட்ட பெயருள்ள நபர்கள் ஊரில் உண்மையிலேயே இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்வதற்காக நீதிபதி கிராம அதிகாரிகளை அழைத்து விசாரித்தார்.
கிராம அதிகாரிகள், அம்பிகை குறிப்பிட்டவர்கள் இருப்பதை உறுதி செய்தவுடன், அந்த நபர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவர்கள், 'பாவாடை தன்னிடமிருந்த ஆடு, மாடுகளை விற்றுக் கடனைத் தீர்த்து விட்டார்' என்பதை நீதிமன்றத்தில் கூறினார்கள். 'சந்தனமாரி சாட்சி கூறியபடி, பாவாடை நிரபராதி எனத் தீர்ப்பளிக்கிறேன்!' என்று அந்த ஆங்கிலேய நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இன்றுவரை இதுபோன்ற விஷயங்கள் நிறைய நடக்கின்றன. சந்தனமாரி தவறு செய்தவர்களை தண்டிக்கிறாள். மக்களை நல்வழியில் நடக்க வைக்கிறாள்.
விஷ்ணுவுக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படும் கோவில்
வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில், 32 கிமீ தொலைவில் அமைந்துள்ளது சந்தவாசல் கங்காதேவி கோவில். இக்கோவிலில், ஐந்து தலை நாகத்தின் கீழ் அமர்ந்திருக்கிறாள், கங்காதேவி. கைகளில் தண்டம், உடுக்கை மற்றும் அமுத கலசம் உள்ளது. கீழே சிம்ம வாகனம் இருக்கிறது.
சிவபெருமானை அழைக்காமல், அவரது மாமனார் தட்சன் யாகம் நடத்தினார். இதனால், கோபத்துடன் இருந்த அவரது வெம்மையை, தலையில் இருந்த கங்காதேவியால் தாங்க முடியவில்லை. சிவனை சாந்தப்படுத்தும்படி, அவள், மகாவிஷ்ணுவை வேண்ட, அவரும் அவ்வாறே செய்தார். மேலும், சிவபெருமானின் உக்கிரமான பார்வையால் எரிந்த பகுதிகளைச் சுற்றிலும், ஏழு நீர் நிலைகளை உண்டாக்கி, குளிரச் செய்தார். இந்த சம்பவத்தின் அடிப்படையில், சந்தவாசலில், குமார கம்பணன் என்ற சிற்றரசரின் மனைவி கங்காதேவிக்கு, கோவில் எழுப்பினார்.
கோவிலுக்குப் பின்புறம் ராஜகம்பீர மலை உள்ளது. பூலோகம் வந்த சிவன், முதலில் இந்த மலையிலும், அடுத்து, திருவண்ணாமலையிலும் பாதம் பதித்தார். இதற்கு, 'மிதிமலை' என்று பெயர். மலையில் சிவபாதம் உள்ளது. திருக்கார்த்திகைக்கு மறுநாள் கைசிக கார்த்திகையன்று, இந்த மலையில் விஷ்ணு தீபம் எனப்படும் தீபத்திருவிழா வெகு விமர்சையாக நடக்கும். இக்கோவிலில் விஷ்ணுவுக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது தனிச்சிறப்பாகும். இங்கு, பெருமாள் கோவில் இருந்ததன் அடையாளமாக, கோவில் முகப்பில் ஒரு தீபஸ்தம்பம் உள்ளது. இதில், சங்கு, சக்கரம், கருடாழ்வார், ஆஞ்சநேயர் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
கங்காதேவிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தையே இங்கு பிரதான பிரசாதமாகத் தருகின்றனர். தண்ணீர் வடிவ தெய்வமான கங்கைக்கே, பூஜை செய்த தீர்த்தமென்பதால் இதை மிகவும் புனிதமானதாகக் கருதுகின்றனர் இதை சிறிது வாங்கிச் சென்று. வீட்டில் வைத்துக் கொள்ள ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தீர்த்த வழிபாட்டிற்கு முக்கியத்துவம் உள்ள தீபாவளி, மாசி மகம் நாட்களில் விசேஷ பூஜை நடக்கும். சித்திரை முதல் நாள், பக்தர்களே, அம்பிகைக்கு பூஜை செய்யலாம்.
திருமணத்தடை, புத்திரதோஷம் உள்ளவர்கள், 'துணி முடிதல்' என்ற வழிபாட்டைச் செய்கின்றனர். மஞ்சள் துணியில் காணிக்கை கட்டி, அம்பாள் பாதத்தில் வைத்து, கோவிலில் கொடுத்து விடுவார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும், மீண்டும் வந்து துணி முடிப்பை வாங்கி காணிக்கை செலுத்துவார்கள். கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்கவும், அவரது நன்மைக்காகவும் அம்பிகைக்கு தாலி அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள்.
கற்பலகையில் இயந்திர வடிவில் இருக்கும் அபூர்வ அம்பிகை
லலிதாம்பிகைக்கான தனித்த பழமையான கோவில்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியிலிருந்து, மேல்மலையனூர் செல்லும் செஞ்சி சேத்துப்பட்டு சாலையில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது செல்லப்பிராட்டி என்ற கிராமம்.
இந்த கிராமத்தில் கல் பலகையில், 12 மந்திர எழுத்துக்களாக (அட்சரம்), உருவமற்ற நிலையில் எழுந்தருளி இருக்கிறார் லலிதா செல்வாம்பிகை.
ஸ்ரீராமர் பிறக்க, தசரத சக்ரவர்த்திக்கு புத்திர காமேஷ்டி யாகத்தை செய்து கொடுத்த ரிஷ்ய சிருங்கரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தேவி இவள். ரிஷியசிருங்கர், 6 அடி உயரம் 2 அடி அகலம் 4 அங்குலம் கனம் கொண்ட கற்பலகையில் 12 கட்டங்கள் கொண்ட இயந்திரம் அமைத்து, ஒவ்வொரு சதுர கட்டத்திலும் ஒவ்வொரு பீஜ மந்திரத்தை பொறித்துள்ளார். இந்த சதுர கட்டங்களுக்கு மேல், நடுவே சூலமும், வலது பக்கத்தில் சூரியனும், இடது பக்கத்தில் சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளது. பீஜாட்சர எழுத்துக்கள் குறிக்கப்பட்ட கற்பலகை சிலையில் மகா மந்திரங்களின் சூட்சமம் அடங்கியுள்ளது.
லலிதம் என்றாலே இதமானது, அழகானது என்று பொருள். லலிதாம்பிகை மகாசக்தியும், பேரழுகும் ஒருங்கே பெற்றவள். முப்பெரும் தேவியர்களும் ஒன்றாக இணைந்த சக்தி வடிவம் தான் இந்த லலிதா செல்வாம்பிகை.
இந்த இயந்திரக் கல் பலகையின் முன்னே சிலா ரூபத்திலும் காட்சி அளிக்கிறார் லலிதா செல்வாம்பிகை. சுமார் மூன்றடி உயர சிறிய திருமேனியுடன் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். வலது திருக்கரம் பக்தர்களை காக்கும் படியும், இடது திருக்கரம் பாதத்தை நோக்கியபடியும் அமைந்துள்ளது. மற்ற ஆறு கரங்களில் பார்வதிக்குரிய பாசம், அங்குசம், லக்ஷ்மிக்குரிய சங்கு, சக்கரம், சரஸ்வதிக்குரிய கமண்டலம், அக்ஷயமாலை ஆகியவை உள்ளன.
லலிதா சகஸ்ரநாமத்தை இவ்வாலயத்தில் அமர்ந்து ஒரு முறை பாராயணம் செய்தாலே ஆயிரம் முறை பாராயணம் செய்த பலன் கிட்டும். ஏனெனில் லலிதை எனும் தேவிக்கான தனித்த பழமையான ஆலயம் இது என்பதுதான்.
இந்த அம்பிகைக்கு எல்லா பூக்களுமே விசேஷமானவை என்றாலும்கூட சிவப்பு நிற மலர்களால் செவ்வாய்க்கிழமைகளில் பூஜிப்பது சிறப்பு . வெண்ணிற மலர்களால் வெள்ளிக் கிழமைகளில் மாலைப்பொழுதில் அர்ச்சிப்பது விசேஷம்.
திருமணம் ஆகாதவர்கள் பௌர்ணமி நாட்களில் இந்த அம்பாளுக்கு பன்னிரெண்டு நெய்தீபங்கள் ஏற்றி கல்யாணமாலை சாற்றினால் திருமணம் நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை.
பக்தர்களின் கோரிக்கைகளை லலிதாம்பிகையிடம் சமர்ப்பிக்கும் துர்க்கையம்மனின் கிளி
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையின் அருகிலுள்ள பேரளம் ரயில் நிலையத்திலிருந்து, மேற்கே ஒரு கி.மீ. தொலைவில் அமைந்து உள்ள தேவார தலம் திருமீயச்சூர் மேகநாதர் கோவில். இறைவியின் திருநாமம் லலிதாம்பிகை.
இந்த தலத்தில், மேகநாதர் சந்நிதி கோஷ்டத்தில், அஷ்ட புஜங்களுடன் 'சுகப்பிரம்ம துர்காதேவி' எழுந்தருளியுள்ளாள். முழுவதும் கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள துர்க்கை, மகிஷனின் தலைமீது நின்றபடி முன் இடது கையை இடுப்பில் வைத்து, வலது கையில் அபயஹஸ்தம் காட்டி, சங்கு, சக்கரம், பட்டாக்கத்தி, சூலம், கேடயம் ஆகிய ஆயுதங்களுடன் ஒரு கிளியையும் ஏந்தியபடி புன்னகை வதனத்துடன் சாந்தவடிவமாக அருள்புரிகிறாள். துர்க்கை சிலையிலேயே கிளி அமைக்கப்பட்டுள்ளது அதிசயமாக உள்ளது. இவள் மகிஷாசுரன் மீது நின்றாலும் சாந்த சொரூபிணியாக திகழ்கிறாள்.
அன்னை லலிதாம்பிகையிடம் நாம் வைக்கும் கோரிக்கையை துர்க்கையம்மனிடம் மனமுறுக வேண்டினால், துர்க்கையம்மன் கையில் உள்ள கிளி தூது சென்று, லலிதாம்பிகையிடம் வரம் பெற்று வரும் என்பதும் ஐதீகம். அம்பிகையும், கிளி சொல்வதைக் கேட்டு, பக்தர்களின் குறைகளை தீர்த்துவைப்பாளாம். அதுவும், பக்தர் தன்னிடம் சொன்ன கோரிக்கைகளை அம்பிகை நிறைவேற்றி வைக்கும் வரை, இந்த கிளி, அம்பிகையிடம் கோரிக்கைகளை நினைவுபடுத்திக் கொண்டே இருக்குமாம். 'சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை' என்ற சொலவடை கூட இதில் இருந்து தான் பிறந்தது.
கோவிலுக்குள் ஏராளமான பச்சைக் கிளிகள் பறந்த வண்ணம் உள்ளன. துர்க்கையின் கையிலுள்ள கிளியால் தங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறி விடுவதால், இந்த துர்க்கையை 'சுகபிரம்ம துர்க்காதேவி' ( 'சுகம்' என்றால் கிளி ) என்று பக்தர்கள் அழைக்கின்றனர். இன்றும் கூட தினமும் மாலை வேளையில் மட்டும் ஒரு கிளி துர்க்கா சன்னதியில் இருந்து லலிதாம்பிகை சன்னதிக்கு சென்று வருவதைக் காணலாம்.
வீணை இல்லாத ஞான சரஸ்வதி தேவி
அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கங்கைகொண்ட சோழபுரம் அல்லது கங்கைகொண்ட சோழீஸ்வரம் கோவில். இத்தலத்தில் கையில் வீணை இல்லாமல் சரஸ்வதி தேவி எழுந்தருளி இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.
பொதுவாக சரஸ்வதி தேவி கையில் வீணையுடன் தான் காட்சி அளிப்பாள். சரஸ்வதி தேவி கையில் வைத்திருக்கும் வீணையின் பெயர் கச்சபி ஆகும். இந்த வீணையானது சிவபெருமானால் உருவாக்கப்பட்டது. பின்னர் சிவபெருமான், நாரதர் உள்ளிட்ட பல இசைக் கலைஞர்களுக்கு இசை நுணுக்கங்களை உபதேசித்த பிறகுத் தனது சகோதரி சரஸ்வதிக்கு, இந்த வீணை வீணையை வழங்கினார்.
ஆனால் சரஸ்வதி தேவி, இக்கோவிலில் கையில் வீணை இல்லாமல், ஞான சரஸ்வதியாக தாமரை பீடத்தின் மேல் அமர்ந்து காட்சி தருகிறாள். அர்த்த (பாதி) பத்மாசனத்தில் காட்சி தரும் இவளின் வலது கையின் ஆள்காட்டி விரல் மேல் நோக்கியபடி உள்ளது. இதற்கு சூசி முத்திரை என பெயர். கடவுளைப் பற்றி அறிவதே மேலானது என்ற ஞான உபதேசத்தை நமக்கு போதிக்கிறாள். சாந்த முகத்துடன் மார்பில் பூணூல், கைகளில் ஜபமாலை, கமண்டலம், சுவடி, வளையல்கள் என கலை நயத்துடன் காட்சி அளிக்கும் இவளது தோற்றம், பார்ப்பவரை பரவசமடைய செய்யும்.
அம்பிகை சுயம்வர பார்வதி மந்திரம் ஜபம் செய்த இடம்
திருமணத் தடை நீக்கும் பரிகார தலம்
மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில், மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் ஆக்கூர். இறைவன் திருநாமம் ஏகாம்பரேசுவரர். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன்.
கைலாயத்தில் சிவன் பார்வதி திருமணம் நடந்த போது, அதைக்கான தேவர்களும் முனிவர்களும் அங்கு கூடி இருந்தனர்.அதனால் பூமியின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இதனை சமன்படுத்த, அகத்தியனைத் தென்திசைக்குச் செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். அகத்தியர் தான் தென்திசை நோக்கிச் செல்வதால், சிவ பார்வதி திருமணத்தைக் காண இயலாத வருத்தத்தை கொண்டிருந்தார். ஆனால், சிவபெருமான் தானே அவரைத் தேடி வந்து அகத்திய முனிவருக்கு, பல தலங்களில் திருமணக் கோலத்தில் காட்சி தருவதாக வாக்களித்தார். அப்படி சிவபெருமான், அகத்தியருக்கு திருமணக்கோலம் காட்டிய தலங்களுள் இதுவும் ஒன்று.
இக்கோவிலில் சுவாமி சன்னதியின் வலது பக்கத்தில் அம்பாள் சன்னதி அமைந்து இருக்கிறது. அம்பாள் மணக்கோலத்தில் இங்கு அருள்பாலிக்கிறார். இக்கோவில் திருமண தடை நீங்க ஒரு சிறந்த பரிகாரத்தலமாக விளங்குகின்றது. திருமணம் வேண்டி சுயம்வர பார்வதி ஹோமம் செய்தால் திருமணம் நிச்சயம். இது அன்னை பார்வதி ஈசனை அடைய செய்த வழிபாடு ஆகும். அம்பிகை நாள்தோறும் சுயம்வரபார்வதி மந்திரம் ஜபம் செய்த இடம் ஆக்கூர் ஆகும். சிவபெருமான் அம்பிகையை ஆட்கொண்ட மாதம் பங்குனியில் வரும் வசந்த நவராத்திரி காலம் ஆதலால், இன்றும் இக்கோவிலில் வசந்த நவராத்திரியில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்று வருகிறது.
இக்கோவிலில் நடைபெறும் சுயம்வர பார்வதி ஹோமத்தில் கலந்து கொண்டால் ஜாதக, பித்ரு, சர்ப்ப, ருது, நவகிரஹ, களஸ்திர, மாங்கல்ய தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
இத்தலத்தில் குழந்தை வரம் வேண்டி சந்தான கோபாலகிருஷ்ண யாகம் செய்தல் சிறப்பு. மழலைச் செல்வத்திற்காக பௌர்ணமி தினத்தில் வெண்தாமரை பூவால் சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.