
தவளகிரி தண்டாயுதபாணி கோவில்
சுண்டு விரலில் தர்ஜனி மோதிரம் அணிந்த முருகன்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து கொடிவேரி செல்லும் சாலையில் 4 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது தவளகிரி தண்டாயுதபாணி கோவில். தவளகிரி மலை ஏறிச் செல்ல 270 படிகள் கொண்ட பாதையும், வாகனங்கள் செல்ல தார்ச் சாலையும் உள்ளன.
கருவறையில் தண்டாயுதபாணி சுவாமி, மேற்கு பார்த்தவாறு வலது கையில் தண்டாயுதமும், இடது கையினை இடுப்பில் வைத்தும் அழகு ததும்ப காட்சி தருகிறார். இவரின் இடது கை சுண்டு விரலில் தர்ஜனி மோதிரம் உள்ளது. இது மிகவும் விசேஷம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. 'தர்ஜனி' என்பதற்கு சம்ஸ்கிருதத்தில் ஒருவனது ஞானம், கல்வி, திறமை ஆகியவற்றை குறிப்பிடுகிறது.
அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடான பழனியில் முருகர் மேற்கு திசை நோக்கி அருள்பாலிப்பதும், அங்கு வடக்கு திசையிலிருந்து தெற்கு நோக்கி சண்முகநதி பாய்வதும் போல் இங்கும் தண்டாயுதபாணி மேற்கு நோக்கியுள்ளார், பவானி நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது. இதனால் பழனி சென்ற பலனை இத்தலத்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசித்தால் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
துர்வாசர் பிரதிஷ்டை செய்த தலம்
துர்வாச முனிவர் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரரை தரிசித்து விட்டு சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலம் சிருங்கேரிக்கு நடைப்பயணமாக சென்று கொண்டிருந்தார். அப்போது பவானி நதியினை அவர் கடக்கும் போது வெள்ளம் அதிகரித்தது. திடீரென பெருகிய ஆற்று வெள்ளத்தில் அவர் சிக்கித் தத்தளித்தபோது மயில் ஒன்று பறந்து வந்து ஒரு குன்றின் மீது அமர்ந்துள்ளது. முருகப் பெருமானே ஏதோ ஒரு அறிவிப்பைச் செய்கிறார் என்று உணர்ந்தார் துர்வாசர். உடனே மெய்சிலிர்த்து நீந்தியபடியே கரைக்கு வந்து குன்றின் அடிவாரத்தை அடைந்தார். ஆற்றில் வெள்ளம் பெருகியபோது முருகனே மயில் மூலமாக அருகில் குன்று இருப்பதை உணர்த்தியதோடு மனம் தளராத தைரியத்தையும் தனக்குக் கொடுத்துள்ளார் என்பதை உணர்ந்து, அதற்கு நன்றிக்கடனாக மலையின் உச்சியில் முருகப் பெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார்.
கன்னிப் பெண்களாக, தவக்கோலத்தில் காட்சி அளிக்கும் வள்ளி, தெய்வயானை
வள்ளி, தெய்வானை இருவரும் முருகனை அடைய வேண்டும் என்ற நோக்கில் கன்னிப் பெண்களாக, தவக்கோலத்தில் இங்கு காட்சியளிக்கிறார்கள். வேறு எந்த தலத்திலும் வள்ளியும், தெய்வானையும் கன்னிப்பெண்களாக தவக்கோலத்தில் காட்சி தருவதில்லை. திருமணத்தடையுள்ள கன்னிப் பெண்கள் வள்ளிக்கும், தெய்வானைக்கும் பட்டுப் பாவாடை சாத்தி மன முருக வேண்டிக் கொண்டால் அந்தத் தடை நீங்குவதாக ஐதீகம்.
பிரார்த்தனை
திருமணத்தடையை நீக்குவது, பில்லி, சூனியம், தொழில் விருத்தி, செவ்வாய் தோஷம், விரோதி நிவர்த்தி, வியாபார விருத்தி ஆகிய பரிகாரம் செய்ய உகந்த கோயிலாக இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள வள்ளி, தெய்வானைக்கு 21 விளக்கு வைத்து பூஜைகள் செய்தால் திருமணத்தடைகள் நீங்கும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா
108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. மகாலட்சுமியின் அம்சமாகிய ஸ்ரீ ஆண்டாள் மானிட ரூபமாக அவதரித்து, ஸ்ரீரங்க மன்னருக்கு பாமாலை சூட்டி பின் பூமாலை சூட்டிய பெருமை வாய்ந்த தலம்தான் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர்.
இங்கு ஆண்டாள் கோவிலில், ஆண்டுதோறும் ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு திருஆடிப்பூர உற்சவம் 14.07.23 வெள்ளிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த தேரோட்ட விழாவானது மொத்தம் பத்து நாட்கள் நடைபெறும். திருவிழாவின் ஐந்தாம் நாள், ஐந்து கருட சேவையும், ஏழாம் நாள் ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னார் சயனிக்கும் சயன சேவையும், அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய அம்சமான திருவாடிப்பூர தேரோட்டம் ஜூலை 22-ம் தேதி, பூர நட்சத்திரதன்று நடைபெறுகிறது.
துளசி மாடத்தில் அவதரித்து தன்னையே நினைத்து தன்னையே மணந்த ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆண்டுதோறும் ஆடிப்பூர நாளில் பட்டு வஸ்திரம் பரிசளிப்பது சிறப்பம்சமாகும். அந்த பட்டு வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து, ரங்கமன்னாருடன் இணைந்து ஆடிப்பூர தேரோட்டத்தில் எழுந்தருளி வலம் வருவார். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோவில்
முகத்தில் புனுகு காப்புடன் காட்சி அளிக்கும் பங்காரு காமாட்சி அம்மன்
தஞ்சாவூர் மேல வீதியில் அமைந்துள்ளது பங்காரு காமாட்சியம்மன் கோவில். பதினெட்டாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னனான பிரதாப சிம்மன் இக்கோவிலை கட்டினார். கோவிலின் மூலவராக பங்காரு காமாட்சியம்ன் உள்ளார். தெலுங்கு மொழியில் பங்காரு என்றால், தங்கம் என்று பொருள்.
கருவறையில் பங்காரு காமாட்சியம்மன், தங்கத்தாலான திருமேனி உடையவளாய், வலது கரம் கிளியை ஏந்தியும், இடது கரம் நளினமாக வளைந்து கீழே தொங்க விடப்பட்டும், மூன்று வளைவுகளோடு வில்போன்ற ஒயிலோடு நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனின் திருமுகத்தில், எப்போதும் புனுகு காப்பு சாத்தப்பட்டு இருப்பதால், கருமை நிறத்துடன் காட்சி அளிப்பாள். பங்காரு காமாட்சி அம்மன் முதலில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில்தான் எழுந்தருளி இருந்தாள். பதினெட்டாம் நூற்றாண்டில் அடிக்கடி நிகழ்ந்த அந்நியர் படையெடுப்பினால் அச்சம் கொண்ட அப்போதைய காஞ்சி மடாதிபதி, காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து இந்த பங்காரு காமாட்சி அம்மன் விக்ரகத்தை எடுத்துக் கொண்டு பல ஊர்களில் தங்கி இருந்து பின்னர் தஞ்சை வந்தடைந்தார். விக்ரகத்தின் பாதுகாப்பு கருதி அதன் திருமேனியை துணியால் சுற்றி முகத்திற்கு மட்டும் கருமையான புனுகு காப்பு சாத்தி எடுத்து வந்தார்கள். அதன் அடிப்படையில்தான் இப்பொழுதும் அம்மனின் திருமுகத்தில் புனுகு காப்பு சாத்தப்பட்டு வருகிறது.
கருவறையின் வெளிப்புறத்தில் இடப்புறத்தில் உற்சவர் காமகோடியம்மன் சன்னதி உள்ளது. மூலவர் பங்காரு காமாட்சி அம்மனுக்கு வருடத்தில் நவராத்திரியின் ஒன்பது நாட்கள், காமாட்சியின் ஜென்ம நட்சத்திரமான ஐப்பசி பூரம், பங்குனி உத்திரம் ஆகிய 11 நாட்கள் மட்டும் தான், அபிஷேகம் நடைபெறுகிறது. மற்ற நாட்களில் உற்சவருக்குத்தான் அபிஷேகம் நடைபெறுகிறது. உற்சவ மூர்த்தி காமகோடி அம்மனுக்கு கனுப் பொங்கல் அன்று முழுத் தேங்காயை உடைக்காமல் நிவேதனம் செய்யும் சம்பிரதாயம் இங்கு மட்டும்தான் உண்டு. அதுபோல கிருஷ்ண ஜெயந்திக்கும் முறுக்கு-சீடை நிவேதனம் செய்கிறார்கள். வைணவ ஆலயங்களைப் போலவே பக்தர்களுக்கு சடாரி சார்த்தும் வழக்கம் இருந்து, இப்போது மறைந்து விட்டிருக்கிறது.
சியாமா சாஸ்திரிகளுக்கு அருள் புரிந்த பங்காரு காமாட்சியம்மன்
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் இக்கோவிலில் நித்ய பூஜைகள் செய்யும் பணியில் இருந்து,பின்னர் கீர்த்தனைகள் பாடும் புலமை பெற்றார். இவரது பெரும்பாலான பாடல்கள் காமாட்சி அம்மன் பேரில் பாடப்பட்டிருக்கும். வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் விசேட தினங்களிலும் சியாமா சாஸ்திரிகள் பங்காரு காமாட்சியின் சந்நிதியில் உட்கார்ந்து கொண்டு தியானம் செய்வார். அவ்வேளைகளில் அநேக கீர்த்தனைகள் அவர் வாக்கினின்றும் உதித்தன. இக்காரணம் பற்றியே இவரது கீர்த்தனைகளுக்கு தனியான சுவை ஏற்பட்டது என்பர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
ஆடி முளைக்கொட்டு விழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பனிரெண்டு மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் ஆடி முளைக்கொட்டு விழா, நவராத்திரி உற்சவம், ஐப்பசி பூரம், மார்கழி திருவிழா போன்றவை மீனாட்சி அம்மனுக்கு தனியாக நடத்தப்படும் திருவிழாக்களாகும்.
உற்சவங்கள் நடைபெறுவதற்காகவே வீதிகள் ஆடி வீதி, ஆவணி வீதி, மாசி வீதி என்று மாதங்களின் பெயரில் இருக்கும் அதிசயம் மதுரையில் உண்டு. ஒவ்வொரு உற்சவத்திற்கும் ஒவ்வொரு பின்னணி, ஒவ்வொரு கதைகள் ஒவ்வொரு சம்பிரதாயங்கள் உண்டு. ஆடி மாதத்தில் ஆயில்ய நட்சத்திரம் துவங்கி பத்து நாளைக்கு முளைக்கொட்டு உற்சவம் நடைபெறுகிறது. கொடியேற்றம் மீனாட்சிக்கு மட்டுமே நடைபெறும்.
'ஆடிப்பட்டம் தேடி விதை' என்பதால் விவசாயிகள், ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாயப் பணிகளை மேற்கொள்வர். விளைநிலைங்களில் பயிர்கள் அமோகமாக விளையும் வகையில் முளைக்கொட்டு வைத்து இறைவனை வழிபடுவார்கள். அந்த விழாதான் மீனாட்சி அம்மனுக்கு முளைக்கொட்டு விழாவாக நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு ஆடி முளைக்கொட்டு விழா 20.7.2023 வியாழக்கிழமையன்று துவங்குகிறது. விழாவின்
முதல் நாள் -சிம்ம வாகனம்
2ம் நாள்- அன்ன வாகனம்
3ம் நாள்- காமதேனு வாகனம்
4ம் நாள்- யானை வாகனம்
5ம் நாள் -ரிஷப வாகனம்
6ம் நாள்- கிளி வாகனம்
7ம் நாள்- மாலை மாற்றுதல்
8ம் நாள் -குதிரை வாகனம்
9ம் நாள்- இந்திர விமானம்
10ம் நாள்- கனகதண்டியல் வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெள்ளி கிளி வாகனத்தில் பவனி வரும் மீனாட்சி அம்மன்
திருவிழாவின் ஆறாம் நாளன்று, கிளியை தனது கையில் வைத்திருக்கும் அன்னை மதுரை மீனாட்சி, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார் என்பது விசேஷமான ஒன்று.

நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில்
வேண்டியதை உடனுக்குடன் நிறைவேற்றும் லட்சுமி நரசிம்மர்
சென்னையிலிருந்து சுமார் 55 கி.மீ. தொலைவிலும், பூந்தமல்லியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும் உள்ள பேரம்பாக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது, சுமார் 1400 வருடங்கள் பழமையான, நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில். தாயார் திருநாமம் மரகதவல்லி. சிறந்த பிரார்த்தனைத் தலமான நரசிங்கபுரம், துன்பம் நீங்கி உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது. இவரிடம் வேண்டிக்கொண்டால், உடனுக்குடன் நிறைவேற்றி விடுவார் என்பது ஐதீகம். எனவே 'நாளை என்பதில்லை நரசிங்கபுரம் நரசிம்மனிடத்தில்' என்று போற்றப்படுகிறார்.
கல்யாண லட்சுமி நரசிம்மர்
கருவறையில் மூலவர், ஏழரை அடி உயரம் கொண்டவர். இடது திருவடியை மடித்து, வலது திருவடியை கீழே தொங்கவிட்டபடி அமர்ந்திருக்கும் சிரித்த முகத்துடன் கம்பீரமான தோற்றம். இடது தொடை மீது தாயாரை அமர்த்தி, அணைத்தபடி இருக்கும் பெருமாள் நான்கு திருக்கரங்களோடு, மேல் இரு கரங்களில் சக்கரமும், சங்கும் ஏந்தியிருக்கிறார்; கீழ் வலது கரத்தை, அபய ஹஸ்தமாக வைத்திருக்கிறார். எல்லா லட்சுமி நரசிம்மர் கோவில்களிலும் , லட்சுமி பக்கவாட்டில் பார்த்தபடி அமர்ந்திருப்பார். ஆனால், இங்கே மகாலட்சுமி தாயார், வரும் பக்தர்களை நோக்கியபடி நரசிம்மரை அணைத்தபடி அமர்ந்திருக்கிறார். இது ஒரு அபூர்வ அமைப்பாகும். இதனால் இந்த லட்சுமி நரசிம்மருக்கு கல்யாண லட்சுமி நரசிம்மர் என்ற பெயரும் உண்டு. இவரை தரிசித்தால் சத்ரு பயம் அகலுவதோடு, லட்சுமி கடாட்சமும் சேர்ந்து கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
பிரார்த்தனை
இங்கு நான்கு அடி உயரத்தில், பதினாறு நாகங்களை அணிகலனாக கொண்ட கருடாழ்வார் அருள்புரிகின்றார். இந்த கருடாழ்வாரை வழிபடுவதால் நாகதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
.நரசிம்மர் சுவாதி நட்சத்திரத்தில் அந்திப் பொழுதில் அவதரித்தவரானதால், இவரை ஒன்பது சுவாதி நட்சத்திர நாட்கள் வணங்கினால், தீராத கடன், பிணி, திருமணத்தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும். இங்கு மாதந்தோறும் நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதி அன்று மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் நெய் தீபம் ஏற்றி, கோயிலை முப்பத்திரண்டு முறை வலம் வந்தால் திருமணத் தடை நீங்கும். நினைத்த காரியம் கைகூடும்.

வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில்
செவ்வாய்க்கிழமை கோவில் என்ற சிறப்பு பெற்ற தலம்
சென்னை வில்லிவாக்கத்தில் அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்ட அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இறைவியின் திருநாமம் சொர்ணாம்பிகை. இந்த தலத்தில் அகத்தியருக்கு சிவனும், பார்வதியும் திருமண கோலத்தில் காட்சி அளித்தனர்.
முன்பொரு காலத்தில், வில்லிவாக்கம் பகுதியில் வில்வலன், வாதாபி எனும் இரு கொடிய சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் வாதாபியை அகத்தியர் அழித்தார். ஆனால் வில்வலனுக்கு நல்வழி புகட்டி உண்மையான வாழ்க்கையின் பயனை அடையுமாறு செய்தார். வில்வலனைத் திருத்தித் தீய வழியில் இருந்து நல்வழிக்குக் கொண்டு வந்த மையால் இத்தலம் வில்லிவாக்கம் என வழங்கப்படுகிறது.
மார்க்கண்டேயர் அகத்தியருக்கு உணர்த்திய 108 சக்தி திருத்தலத்தினுள் இந்த தலமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ சொர்ணாம்பிகை அமர்ந்த திருத்தலம் இத்தலமாகும். வில்வ மரங்கள் செறிந்த இத்திருத்தலத்தில் தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும் செவ்வாய்க்கிழமைதோறும் நடு இரவில் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.
ஆடி செவ்வாய்க்கிழமைகளில் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ வழிபாடு
நவக்கிரகங்களில் அங்காரகன் (செவ்வாய்) தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, தீர்த்தம் உண்டாக்கி சிவனை வழிபட்ட தலம் இது. எனவே இது செவ்வாய் தோஷ பரிகார தலமாக திகழ்கிறது. அங்காரகன் உண்டாக்கிய தீர்த்தம் கோயிலுக்கு வெளியே இருக்கிறது. தீர்த்தக் கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார்.
பக்தர்கள் இக்கோயிலை, 'செவ்வாய்க்கிழமை கோயில்' என்றே அழைக்கிறார்கள். அகத்தியருக்கு சிவன், ஒரு ஆடி மாத செவ்வாய்க்கிழமையன்று காட்சி தந்ததாக ஐதீகம். எனவே இங்கு ஆடி செவ்வாய்க்கிழமைகளில் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ வழிபாடு நடக்கிறது.
சிவன் கோவிலான இங்கு செவ்வாய்க்கிழமைகளில் குவியும் பக்தைகள் கூட்டம் அம்மன் கோவில்களில் திரளும் கூட்டத்தையும் மிஞ்சுவதாக உள்ளது. அதனால்இந்த அகத்தீஸ்வரர் கோவில் செவ்வாய்க்கிழமை கோவில் என்ற புகழை பெற்றுள்ளது. ஆடி செவ்வாய்க்கிழமைகளில் இக்கோவிலில் பக்தைகள் கூட்டம் நிரம்பி வழியும்.
ஆண்டுக்கு ஆண்டு இந்த தலத்தில் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் குவியும் பக்தைகள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத செவ்வாய்க்கிழமை, சிறப்பு மிக்க வருடாந்திர திருவிழா நடத்தப்படுகிறது. 5 வாரங்களும் சுவாமி அம்பாளுக்கு விசேஷ சிறப்பு அலங்காரமும் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெறும்.
பிரார்த்தனை
இந்த ஆலயத்தில் உள்ள அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை அருள்மிகு அகத்தீஸ்வர பெருமானை ஆடி மாத செவ்வாய்கிழமை அன்று தரிசித்தால் பலன் கிடைக்கும். குறிப்பாக அனைத்துவிதமான தோஷங்களும் விலகி, நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் பெறலாம். ஆடி மாதச் செவ்வாய்க் கிழமைகளில் நீராடி விரதம் இருப்போர் புத்திரதோஷம் நீங்கப் பெறுவர். செவ்வாய் தோஷம் நீங்கித் திருமணம் செய்து கொள்வர். திருமணம் ஆகாதவர்கள் இந்தத் தீர்த்தத்தில் நீராடி விரதமிருந்து வழிபட்டால் தங்களுக்குரிய வாழ்க்கைத் துணையைப் பெறுவர்.

கூகலூர் அதிசய ஆஞ்சநேயர் கோவில்
கூப்பிய கரங்களிடையே சிவலிங்கத்தை ஏந்திய அதிசய ஆஞ்சநேயர்
ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து 23 கி.மீ. தூரத்திலும், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 11 கி.மீ. தூரத்திலும் உள்ள கூகலூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது அதிசய ஆஞ்சநேயர் கோவில்.
இக்கோவில் கருவறையில் அதிசய ஆஞ்சநேயர், ஆறடி உயரத்தில் நின்ற திருவடிவினராக, கூப்பிய கரங்களிடையே சிவலிங்கத்தை ஏந்தியவாறு வித்தியாசமாக காட்சி தருகிறார். இவர் அதிசய ஆஞ்சநேயர் என்றழைக்கப்படுகிறார். ஆஞ்சநேயரின் இந்த அபூர்வ தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
பிரார்த்தனை
இந்த அதிசய ஆஞ்சநேயர் தினமும் தங்கள் வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்துகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மகப்பேறு இல்லாதவர்களும், நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த அதிசய ஆஞ்சநேயரை வழிபட்டு நற்பலன்கள் பெறுகிறார்கள். உடல்நிலை சரியில்லாதவர்கள், மகப்பேறு இல்லாதவர்கள் ஏதாவது ஒரு சனிக்கிழமை இங்கே வந்து வடைமாலை சாத்தி இவரை வழிபட்டால் நற்பேறு கிட்டும் என்பது ஐதீகம்.

மதுரை மதனகோபாலசுவாமி கோவில்
சிவபெருமானுக்காக புல்லாங்குழல் இசைத்த மதன கோபாலன்
மதுரை நகரத்தின் மேல மாசி வீதி - தெற்கு மாசி வீதி சந்திப்பில், 1000 வருடங்களுக்கு மேல் பழமையான மதனகோபாலசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், கூடல் அழகர் கோவிலுக்கும் இன்மையில் நன்மை தருவார் கோவிலுக்கும் மிக அருகில் உள்ளது. இது கிருஷ்ணன் கோயில் ஆகும். மூலவர் மதனகோபால சுவாமி, அஷ்டாங்க விமானத்தின் கீழ் இரண்டு கைகளில் புல்லாங்குழல் வைத்து, இடது கால் ஊன்றி வலது கால் சற்று மாற்றி விஸ்வரூபக் கண்ணனாகப் பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கிறார். அருகில் பாமா, ருக்மணி தேவியர் வீற்றிருக்கின்றனர். மதுரவல்லி தாயார் தனிசன்னதியிலும், ஆண்டாள் தனி சன்னதியிலும் இருந்து அருள் பாலிக்கின்றனர்.
தல வரலாறு
ஒரு முறை சிவபெருமான், மதுரையில் மீனாட்சியை திருமணம் செய்தபின், சுந்தரபாண்டிய மன்னனாக ஆட்சிபொறுப்பை ஏற்கும் முன் சிவலிங்கம் வடித்து சிவபூஜை செய்கிறார். சிவபெருமான், தான் செய்யும் பூஜையின் போது தியானத்தில் ஆழ்ந்து விடுகிறார். இதனால் சிவபெருமானின் உடலில் வெப்பம் அதிகமாகி, அக்னி ஜுவாலையாக மாறி இந்த உலகை பாதிக்கிறது. இதனால் பயந்த தேவர்கள் பிரம்மாவின் தலைமையில் விஷ்ணுவிடம் சென்று நடந்ததைக் கூறி இந்த உலகைக் காக்கும் படி வேண்டுகின்றனர். சிவனின் தியானத்தை கலைத்தால் மட்டுமே அவரது உடலில் ஏற்படும் வெப்பம் குறைந்து, உலகம் காக்கப்படும் என்பதை அறிந்தார் விஷ்ணு. உடனே தன் புல்லாங்குழலை எடுத்து இசைக்கிறார். இந்த இசை என்னும் இன்ப வெள்ளம், சிவனின் செவிகளிலும் ஒலிக்க ஆரம்பிக்கிறது. இசைக்கு மயங்கிய சிவபெருமான் கண் விழிக்கிறார். தியானம் கலைகிறது. உலகம் காக்கப்படுகிறது. சிவபெருமான் மிகுந்த மகிழ்ச்சியுடன் 'மகாவிஷ்ணு, தாங்கள் எப்போதும் மதன கோபாலன் என்ற திருநாமத்துடன் என் அருகிலேயே இருந்து புல்லாங்குழல் இசைத்து என்னை மகிழ்விக்க வேண்டும்' என்றார். மகாவிஷ்ணுவும் சிவபெருமானின் விருப்படியே, மதுரை மேலமாசி வீதியிலுள்ள இம்மையிலும் நன்மை தருவார் என்ற சிவாலயத்திற்கு அருகில், மதன கோபால சுவாமி என்ற கோயிலில் வீற்றிருந்து புல்லாங்குழல் இசைத்து சிவபெருமானையும் மகிழ்வித்து நம்மையும் காத்து அருள்புரிகிறார்.
ஆண்டாள் ஸ்ரீரங்கம் செல்லும் முன்பு, பெரியாழ்வாருடன் பல்லக்கில் வந்து இங்கு எழுந்தருளி மதனகோபாலரைத் தரிசனம் செய்துள்ளார்கள் என்றும், பின் ஆண்டாள் அரங்கப் பெருமானின் திருமேனியில் ஐக்கியமானார் என்றும் வரலாறு கூறுகிறது.
பிரார்த்தனை
இசைதுறையில் மேன்மையடைய விரும்புபவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம்.. இத்தலத்தில் அறுபதாம் கல்யாணம் செய்பவர்களின் சந்ததி சிறப்பு பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இங்குள்ள நாக தேவி, ஹரிஹர ஸர்ப்ப ராஜா என அழைக்கப்படுகிறார். இங்கு வெள்ளி தோறும் இராகு கால பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது. நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த பூஜை செய்தால் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

திருக்கொடியலூர் அகத்தீஸ்வரர் கோவில்
மங்கள சனீஸ்வர பகவானும், எமதர்மராஜனும் அவதரித்த தலம்
திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவிலின் அருகில் அமைந்துள்ள தலம் திருக்கொடியலூர். இறைவன் திருநாமம் அகத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. அகத்தியர் ஸ்ரீலலிதாம்பிகையை தரிசித்து நவரத்தின மாலையை பாடி அம்பாளின் பேரருளை பெற்றபின், இத்தலத்துக்கு வந்து இறைவனையும் இறைவியையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார்.
சூரிய பகவான், அவர் மனைவியர்களான உஷாதேவி, சாயாதேவி ஆகிய மூலரும் கூடி ஈசனை ஆராதித்த தலம் இது என்பதால் திருக்கூடியலூர் என்றானது. அதுவே பின்னர் திருக்கொடியலூர் என்று மருவியது. இத்தல இறைவனை வேண்டி உஷாதேவி எமதர்மராஜனையும், சாயாதேவி சனீஸ்வர பகவானையும் பெற்றெடுத்தனர். இரு சகோதரர்களும் ஒருங்கே அவதரித்த தலம் இதுவாகும். இக்கோவிலில், தென் புறத்தில் எமதர்மராஜனும், வடப்புறத்தில் சனி பகவானும் அமைந்திருப்பது மற்ற எந்த ஒரு கோவிலிலும் இல்லாத தனிச்சிறப்பாகும்.
பிரார்த்தனை
இத்தல இறைவனை வேண்டி உஷாதேவியும், சாயாதேவியும் புத்திரபேறு பெற்ற காரணந்தால் இத்தலம் குழந்தைப்பேறு வழங்கும் சிறப்புத் தலமாகவும் கருதப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு வந்து எள்ளு தீபம், நல்லெண்ணெய் விளக்கேற்றினால் அனைத்து தோஷங்களும் அகலும்.
வியாழக்கிழமைதோறும் எமதர்மனுக்கும், சனிக்கிழமை தோறும் சனீஸ்வரருக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
சனி பகவான் இத்தலத்தில் அபய ஹஸ்தத்துடன், அனுக்கிரக மூர்த்தியாக எழுந்தருளி இருப்பதால் அவர் மங்கள சனீஸ்வர பகவான் என்று அழைக்கப்படுகிறார். சனிக்கிழமைகளில் பக்தர்கள் இத்தலத்தின் தென்புறம் உள்ள தேவர் தீர்த்தத்தில் நீராடி, அகத்தீஸ்வரரை வழிபட்டு அபிஷேக தீர்த்தத்தை தங்கள் மீது தெளித்து கொண்டு பகவானுக்கு எள் தீபம் ஏற்றி அபிஷேகம் ஆராதனை செய்து வழிபடுதல், எள்சாதம் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு அன்னதானம் வழங்குதல், ஆகியவற்றால் சனிதோஷம் நீங்கப் பெறலாம்.
இத்தலத்தில், எமதர்மராஜாவிடம் பக்தர்கள் ஆயுள் நீடிக்க வேண்டிக் கொள்கிறார்கள். எமதர்மர் நீதிக்கு அதிபதியாக இருப்பதால் ஏமாற்றப்பட்டவர்கள், பொருளை திருட்டு கொடுத்தவர்கள், தலத்திற்கு அதிகளவில் வருகை தந்து பகவானை வணங்கி செல்கின்றனர். தங்கள் கோரிக்கையை பேப்பரில் எழுதி அதனை எமதர்மர் சந்நிதியில் வைத்து பூஜித்து வருகின்றனர். இவ்வாறு வேண்டுதல் வைக்கப்பட்ட சில நாட்களில் பொருட்கள் திரும்பக் கிடைத்துவிடுகிறது என்பதால், பக்தர்கள் தலத்திற்கு அதிகளவில் வருகை தந்து பூஜை செய்து செல்கின்றனர். இப்பூஜையினை எமதர்மரிடம் படிக்கட்டுதல் என்கிறார்கள். சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் (மதியம் 1:30 - 3:00 மணி) க்கு, இங்கு ஆயுள்விருத்தி ஹோமம் செய்யப்படுகிறது.

திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோவில்
கையில் கிளி ஏந்திய அபூர்வ துர்க்கை அம்மன்
மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவாளப்புத்தூர். இறைவன் திருநாமம் மாணிக்கவண்ணர். இறைவியின் திருநாமம் வண்டமர்பூங்குழல் நாயகி.
இறைவன் மாணிக்கவண்ணர் எழுந்தருளி இருக்கும் கருவறையின் வெளிச் சுற்றுச் சுவரில் துர்க்கை அம்மன் வடக்கு நோக்கி எட்டு கைகளுடன், சிம்மவாகனத்துடன், நின்ற கோலத்தில் எழுந்தருளி இருக்கிறாள். மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கை அம்மன் இத்தலத்து இறைவனை வணங்கி தோஷ நிவர்த்தி அடைந்தாள். இவளது இடது கீழ் கையில் கிளி இருப்பதும், ஆயுதங்களுடன் இருந்தாலும், புன்முறுவல் பூத்த முகத்தோடு சாந்த துர்க்கையாக அருளுவதும் இத்தலத்தின் சிறப்பாகும். துர்க்கை அம்மனின் இந்த தோற்றமானது ஒரு அரிய காட்சியாகும். மேலும், துர்க்கை அம்மனின் காலடியில் கிடக்கும் மகிஷாசுரனின் முகத்தில் நாசித் துவாரங்கள் தெரிவதும் ஒரு அபூர்வமான தோற்றம் ஆகும்.
பிரார்த்தனை
இத்தலத்தில் துர்க்கை அம்மனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி பெற்றதால், இந்த துர்க்கையை வழிபடுபவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம், செவ்வாய், ராகு, கேது ஆகிய கிரக தோஷங்கள் விலகும். திருமண தடை விலகி விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தை பேறு வேண்டுபவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டும்.

பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
சிவபெருமான், அம்பிகை, முருகர் ஆகிய மூவருக்கும் தனித்தனி கொடிமரங்கள் அமைந்த தலம்
தேனிமாவட்டம் பெரியகுளத்தில் 'வராகநதி''தென்கரையில், அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். சோழ மன்னன் ராஜேந்திர சோழன் கட்டியதால் இக்கோவில், அப்பகுதியில் பேச்சு வழக்கில் பெரியகோயில் என்றும் அழைக்கப்படுகிற்து. இக்கோவில் சிவாலயமாக திகழ்ந்தாலும், இத்தலத்து முருகன் மிகவும் பிரசித்தம். அதனால் தான் இக்கோவில் முருகன் பெயராலேயே பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் என்று அழைக்கப்படுகிற்து.
இவ்வாலயத்தில், பாலசுப்பிரமணியர் ஆறு முகங்கள் கொண்டு வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். அருகில் லிங்கவடிவில் இராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி ஆகியோர் தனிக் கொடி மரங்களுடன் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். இப்படி மூன்று தெய்வங்களுக்கும் தனிக் கொடி மரங்கள் அமைந்திருப்பது மிகச் சிறப்புடையதாகும். முருகனுக்கு நேர் எதிரே அமைந்துள்ள மயில் மண்டபத்தின் மேல் பகுதியில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் அமைக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு
ஒரு முறை சோழ நாட்டின் மன்னன் ராஜேந்திர சோழன், அகமலைக் காட்டுப்பகுதிக்குள் வேட்டையாடச் சென்றிருந்தான். அவன் எய்த அம்பு ஒன்று, குட்டிகளை ஈன்றிருந்த பன்றியின் மீது பட்டு அது இறந்து போனது. தாயை இழந்த பன்றிக் குட்டிகள், பசிக்குப் பால் கிடைக்காமல் சத்தமிட்டன. அதனைக் கண்ட மன்னன், ‘தாய்ப் பன்றியைக் கொன்று, அதன் குட்டிகளுக்குப் பால் கிடைக்காமல் செய்து விட்டோமே’ என்று மனம் வருந்தினான். அப்போது அந்தப் பன்றிக் குட்டிகளின் மேல் இரக்கம் கொண்ட முருகப்பெருமான் அவ்விடத்தில் தோன்றி, அவைகளின் பசியைப் போக்கினார். குட்டிகளின் மேல் பரிவு கொண்ட முருகப்பெருமானின் கருணையைக் கண்ட மன்னன், தாய்ப் பன்றியைக் கொன்ற தனது பாவத்தைப் போக்கவும், பன்றிகளுக்கு அருளிய முருகப்பெருமானின் பெருமையை மக்களுக்கு உணர்த்தவும், அகமலையின் கீழேத் தரைப்பகுதியில் இக்கோவிலைக் கட்டினான்.
காசிக்கு ஈடான தலம்
கோயில் அருகே ஓடும் 'வராகநதி நதிக்கு வலப்புறமும், இடப்புறமும் அமைந்துள்ள ஆண், பெண் மருது மரங்கள் மிக சிறப்பு வாய்ந்தவை. காசிக்கு அடுத்தபடியாக பெரியகுளத்தில் தான் இரண்டு மரங்களுக்கும் நடுவில் வராக நதி செல்கிறது. இங்கு குளித்து சென்றால் திருமணத்தடை, குழந்தையின்மை, நோய் தொற்று பிணி நீங்குவதாக ஐதீகம் உள்ளது. வராக நதிக்கரையில் அமைந்திருக்கும் இக்கோவிலில், மூலவராக இறைவன் சிவபெருமான் வீற்றிருக்கிறார். எனவே, காசிக்குச் சென்று வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும், இந்த ஆலயத்திற்கு சென்று வழிபட்டாலும் கிடைக்கும்.
அருணகிரிநாதர் 'திருப்புகழ்' பாடலில் இக்கோவிலைப் பற்றிப் பாடியிருக்கிறார்.

குமளம்பட்டு சீனிவாச பெருமாள் கோவில்
பக்தர்களுடன் அசரீரியாக பேசும் பெருமாள்
திண்டிவனத்தில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது குமளம்பட்டு சீனிவாச பெருமாள் கோவில். பெருமாள் எடுத்த தசாவதாரங்களில், மச்ச அவதாரத்திற்கு உரிய தலமாக இத்தலம் போற்றி வணங்கப்படுகின்றது. கருவறையில் பேசும் பெருமாளான சீனிவாசப் பெருமாள் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். இக்கோவிலில் பக்தர்கள் மனம் உருகி தம் குறைகளை கூறி வழிபட்டால், பக்தர்களின் கனவில் பெருமாள் தோன்றி குறைகளைப் போக்க அருள்புரிகின்றார். மேலும் வழிபடும் போதே அசரீரியாக பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை அளிப்பதால் பேசும் பெருமாள் என்று போற்றப்படுகின்றார்.
பேசாத குழந்தைகளையும் பேச வைக்கும் பேசும் பெருமாள்
வாய் பேச முடியாத குழந்தைகள் ஒன்பது அமாவாசை தினங்கள் தொடர்ந்து இக்கோவிலில் நெய் தீபம் ஏற்றி , இப்பெருமானின் தீர்த்த பிரசாதத்தை அக்குழந்தைகளுக்கு அளித்தால், பேசாத குழந்தைகளையும் பேச வைக்கும் பேசும் பெருமாளாக அருள்புரிகின்றார்.
விபூதி பிரசாதம் தரப்படும் பெருமாள் கோவில்
இக்கோவிலில் பெருமாளுக்கு நைவேத்தியம் தயாரிக்கப்படும் அடுப்பிலிருந்து கிடைக்கப்பெறும் சாம்பலையே விபூதி பிரசாதமாக தருகிறார்கள். இது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோவில்
லட்சுமி, சரசுவதி தேவியருடன் இணைந்து அருள் பாலிக்கும் செண்பகாதேவி அம்மன்
குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. அகத்திய மாமுனிவர் செண்பகாதேவி அம்மனை பிரதிஷ்டை செய்துள்ளார். செண்பகாதேவியானவள், துர்க்கை அம்மனின் பிறப்பாக பராசக்தி வடிவில் அருள்பாலிக்கிறார். குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் செயல்பட்டு வருகிறது. செண்பகாதேவி அம்மன் கோயில் பெருமையை குற்றால தல புராணத்தில் சிறப்பாக பாடப்பட்டுள்ளது.
இக்கோவில் செண்பகாதேவி அருவி அருகில் அமைந்துள்ளது. இங்கு செண்பகாதேவி அம்மன் கோவில் இருப்பதாலேயே இங்குள்ள அருவிக்கு செண்பகாதேவி அருவி எனப் பெயர் பெற்றது. இந்த ஆலயத்தில் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் என்ற அமைப்புகளுடன் உள்ளது. இங்கு லட்சுமி, சரசுவதி தேவியருடன் இணைந்து செண்பகாதேவி அம்மன் கருவறையில் காட்சியளிக்கின்றனர். செண்பகாதேவி அம்மன் திருக்கோயிலை சுற்றி விநாயகர் அகத்தியர் உள்ளிட்ட சித்தர்களின் சிலை மற்றும் பாறையில் செதுக்கப்பட்ட நந்தி சிவலிங்கம் போன்றவையும் உள்ளது. இங்குள்ள அம்மனுக்கு ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமி அன்று திருவிழா சிறப்பாக நடைபெறும். சித்திரை மாதம் பௌர்ணமி பூஜையின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்
அபூர்வக் கோலத்தில் வீற்றிருக்கும் யோக பைரவர்
மதுரை-காரைக்குடி சாலையில், 62 கிமீ தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில். இறைவன் திருநாமம் திருத்தளி நாதர். இறைவியின் திருநாமம் சிவகாமி. இத்தலத்திலுள்ள பைரவர் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்தத் தலத்தின் திருத்தளிநாதரைத் தரிசிக்க வந்த காசி பைரவரே, இங்கு யோக பைரவராக அருள்கிறார் என்பது ஐதீகம். ஆக, இவரை ஆதி பைரவர் என்றும் போற்றுகிறார்கள். நம் நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் அருளும் பைரவ மூர்த்திகளும் இவரிடமிருந்தே தோன்றியதாக திருத்தளிநாதர் கோவில் தல வரலாறு சொல்கிறது.
இவரை, குலதெய்வமாகக் கொண்ட மருது சகோதரர்கள், எப்போது போருக்குச் சென்றாலும் இந்த யோக பைரவரை வழிபட்ட பிறகுதான் செல்வார்களாம்.
இக்கோவிலில் தனிச் சன்னதியில் யோகா பைரவர் எழுந்தருளி இருக்கிறார். இவர் வலக்கரத்தில் சிவலிங்கத்தை வைத்து, கால்கட்டை விரலை தரையில் ஊன்றியபடி யோகநிலையில் காட்சி தருகிறார். பொதுவாக பைரவர் கையில் சூலத்துடனும், நாய் வாகனத்துடனும், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே மரபு. ஆனால் இங்குள்ள பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில் காணப்படுகின்றார். அதனால் 'யோக பைரவர்' என்று அழைக்கப்படுகின்றார். யோக நிலையில் இருப்பதால் இவருக்கு நாய் வாகனம் கிடையாது. இவருக்கு வெண்ணிற பட்டாடை அணிவித்து அலங்கரிப்பது விசேஷம். இந்த பைரவர் மிக உக்ரமானவர். அவர் தம் உக்ரத்தைக் குறைக்க, வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பாக, அவரை சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளதே இதற்குச் சான்று.
பிரார்த்தனை
தேய்பிறை அஷ்டமி அன்று இவருக்கு வடை மாலை சாற்றி வழிபடுகின்றனர். ராகுகாலம் போன்ற நேரங்களிலும் இவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகின்றது. சத்ரு தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், காரியத்தடை, திருமண எதிர்ப்பு போன்றவை விலக இவரை வழிபடுதல் சிறப்பு. அதற்காக சிறப்பு ஹோமங்களும் அர்ச்சனை வழிபாடுகளும் இவ்வாலயத்தில் செய்யப்படுகின்றன.
நவகிரகங்கள் பைரவரின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. அதனால், கிரக தோஷங்கள் நீங்க நவக்கிரக தலங்களுக்கு செல்ல முடியாவிட்டாலும், இங்குள்ள யோக பைரவரை வணங்கினால் போதும். 'ஆபத்துத்தாரண பைரவர்' என்று அழைக்கப்படும் இவர் எல்லா தோஷங்களையும் நீக்குவார் என்பது ஐதீகம். தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு வாசனைப் பொருட்கள் வைத்து வழிபடுகிறார்கள்.
மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல், திருமணத்தடை போன்ற பிரச்னைகளை நீக்கும் வரப் பிரசாதியாகவும் திகழ்கிறார். இந்த யோக பைரவர். வெண் பூசணி, தேங்காய் போன்றவற்றில் நெய் தீபம் ஏற்றிவைத்து இவரை வழிபட்டால், எதிரிகள் பணிந்து போவார்கள். பங்காளிச் சண்டை முடிவுக்கு வரும். அதேபோல், ஒரு துணியில் மிளகு சுற்றி முடிந்து வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் பிரச்னைகள் முடிவுக்கு வரும். கண் திருஷ்டிகளும் விலகும்.

மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோவில்
ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் கோவில்
திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 3 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோவில். விநாயகர் மூலவராக எழுந்தருளி இருக்கும் கோவில்களில், இக்கோவில் ஆசியாவிலேயே மிகப் பெரியது ஆகும். 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் சுமார் 80 மீட்டர் நீளமும், 40 மீட்டர் அகலமும் உடையது.
முற்காலத்தில், நெல்லை டவுனில் அமைந்திருக்கும் நெல்லையப்பர் கோயிலில் வழிபாடு நடக்கும்போது அங்குள்ள பிரமாண்ட மணி ஒலிக்கும். அதைக் கேட்டு இந்தக் கோவிலில் மணியோசை எழுப்பி வழிபடும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. இதனால் மூர்த்தீஸ்வரம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், பின்னர் 'மணிமூர்த்தீஸ்வரம்' என்று வழங்கலாயிற்று.
இக்கோவில் மூலவருக்கு உச்சிஷ்ட கணபதி என்பது திருநாமம். விநாயகருக்குரிய முப்பத்திரண்டு வடிவங்களில் எட்டாவது திருவடிவம் உச்சிஷ்ட கணபதி. அவரது மனைவியான நீலவாணியைத் தன் இடது தொடையில் அமரவைத்தபடிக் காட்சி கொடுக்கிறார். மூலவர் உச்சிஷ்ட கணபதியைச் சுற்றிய பிரகாரத்தில் 16 வகை விநாயகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் 1, 2 மற்றும் 3-ம் தேதிகளில், காலையில் சூரியபகவான் தன் ஒளிக்கிரணங்களால் விநாயகரைத் தழுவி வழிபாடு செய்யும் அற்புதத் திருக்கோல தரிசனம் நடைபெறும். அந்த நேரத்தில் தங்கம் போல் ஜொலிக்கும் கணபதியை தரிசித்து வழிபட சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
பிரார்த்தனை
இத்தலம் கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் ஆகியவற்றிற்கான நிவர்த்தித் தலமாகும். விநாயகர் தன் தேவியுடன் இருந்து அருள்பாலிப்பதால், இங்கு வந்து வேண்டிக் கொண்டால் கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். திருமணத்தடைகள் நீங்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள் என்பது நம்பிக்கை. குழந்தை வரம் வேண்டுபவர்கள் இங்கு வந்து தேவியோடு விநாயகப்பெருமான் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தை தரிசனம் செய்தால் புத்திர சந்தானம் உண்டாகும்.

ஆத்தூர் வீர ஆஞ்சநேயர் கோவில்
வடக்கு திசை பார்த்தபடி எழுந்தருளி இருக்கும் அபூர்வ ஆஞ்சநேயர்
சேலத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ள ஆத்தூர் என்ற ஊரில் அமைந்துள்ளது வீர ஆஞ்சநேயர் கோவில்.
இக்கோவிலில் ஆஞ்சநேயர் பிரகாரமூர்த்தியாக இல்லாமல் மூலவராக எழுந்தருளி இருக்கிறார். இவர், தனது வாலை சுருட்டி தலைக்கு மேலே கிரீடம் போல வைத்து, வராக (பன்றி) முகத்துடன் காட்சி தருவது சிறப்பு. இராமபிரான் இலங்கைக்குச் செல்ல பாலம் அமைத்த போது, மிகப்பெரிய பாறைகளை எடுக்க வேண்டியிருந்தது. அதை அகழ்ந்து தோண்ட பஞ்சமுக ஆஞ்சநேயராக தன்னை உருமாற்றிக் கொண்டார் ஆஞ்சநேயர். அதில் ஒன்று வராஹ முகம். பன்றி முகத்தைக் கொண்டு பூமியை அகழ்ந்து தோண்டி, பாறைகளைப் பெயர்த்தெடுத்தார். அளவில் மிகவும் சிறிய இவரை வசிஷ்ட முனிவர் வணங்கிச் சென்றுள்ளார். இங்கு சுவாமிக்கு பூஜை செய்யப்பட்ட 'முடிகயிறு' என்னும் 'மஞ்சள் கயிறை' பிரசாதமாக தருகின்றனர். இதனைக் கட்டிக்கொண்டால் வாழ்வில் மங்களம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
ராமர் சீதையைத் தேடி வரும்வழியில் இத்தலத்துக்கு அருகில் இருக்கும் மலைக்கு வந்திருந்தார் அப்போது அவர் தென்திசையை பார்த்தபடி அமர்ந்திருந்தார். அப்போது ஆஞ்சநேயர் வடக்கு பக்கமாக திரும்பி ராமரை பார்த்ததால் இத்தலத்து ஆஞ்சநேயர் வடதிசை பார்த்தபடியே இருக்கிறார். இது குபேர திசையாகும். இத்திசையை பார்த்த ஆஞ்சநேயரை காண்பது அபூர்வம்.
சனிதோஷ நிவர்த்தித் தலம்
சூரியனின் மகன் சனி, சனியின் மகன் குளிகன். ஆஞ்சநேயர், சூரியனின் சிஷ்யன். இவரே சனிக்கு அதிபதியான பெருமாளின் ஆஸ்தான சீடர். எனவே, இவரை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இங்கு சனிக்கிழமைகளில் குளிகை நேரத்தில் சனிதோஷ பரிகாரபூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. இப்பூஜையில் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை வணங்கினால் சனிதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

தஞ்சை பெரிய கோவில்
ராஜராஜ சோழனுக்கு தஞ்சை பெரிய கோவில் கட்ட இடம் காட்டிய வராகி அம்மன்
சப்தகன்னியரில் ஒருவரான வராகி அம்மன், திருமாலின் வராக அம்சமாக கருதப்படுகிறார். இவர் வராகமெனும் பன்றி முகத்தையும், எட்டு கரங்களையும் உடையவர்.
மாமன்னர் ராஜராஜ சோழனின் குலதெய்வம் வராகி அம்மன். தஞ்சை பெரிய கோவின் தெற்கு பிரகாரத்தில் வராகி அம்மனுக்கு தனிக் கோவில் இருக்கிறது. வராகி அம்மன்,வலது கையில் உலக்கையுடனும், இடது கையில் கலப்பையுடனும் காட்சி தருகிறார்.
ராஜராஜ சோழன் போருக்கு செல்லும் முன்பு வராகி அம்மனை வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் இந்த அன்னையின் அருள் பெற்றுதான் எந்த செயலையும் தொடங்குவார். ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு பல இடங்களை தேர்வு செய்தார். ஆயினும் இறைவனிடமிருந்து உத்தரவு கிடைக்க தாமதமானது. அப்போது ஒரு நாள் வேட்டைக்குச் சென்றபோது, ஒரு இடத்தில் மன்னருக்கு முன்பு ஒரு பன்றி எதிர்த்து நின்றது. அதனை துரத்திச் சென்றபோது போக்கு காட்டி பல இடங்களுக்கு சென்று ஒரு பெரிய திடலில் சுற்றி சுற்றி வந்து படுத்துக்கொண்டது . இது ராஜராஜ சோழனுக்கு வியப்பை அளித்தது. வராகமாக இருப்பதனால் அதனை கொல்லாமல் துரத்தினார். ஆனால் அது எழுந்து நின்று தன் காலால் தரையை உதைத்து பூமியை தோண்டியது. அரண்மனை திரும்பிய ராஜராஜ சோழன் ஜோதிடரை அழைத்து விவரம் கேட்டார். கோவில் கட்ட அந்த இடத்தினை வராகி தேவி தேர்ந்தெடுத்து கொடுத்து இருப்பதை தெரிவித்தார் ஜோதிடர் .அந்த இடத்தில் பெரிய கோவில் கட்டும் முன்பு வெற்றி தேவதை வராகிக்கு சிறிய தனித்த ஒரு சன்னதியை அக்னி மூலைக்கு அருகில் அமைத்து வழிபட்டு பின்னர் பணியை தொடங்கினார். அந்த வராஹி தேவியின் அருளால் உலகம் போற்றும் ஆலயமாக பெரிய கோவில் மாறி நிற்கிறது. ராஜ ராஜ சோழன் கடைபிடித்த முறையிலேயே தற்போதும் எந்த ஒரு நிகழ்ச்சியை தொடங்குவதானாலும் முதலில் வராகி அம்மனுக்கு பூஜை செய்த பின்னரே தொடங்கும் வழக்கம் பெரிய கோவிலில் உள்ளது.
பிரார்த்தனை
பஞ்சமி திதியில் வராகி அம்மனை வழிபட்டால் வறுமை, பிணி, பில்லி, செய்வினைகள் அகலும். எதிரிகள் விலகுவர் என்பது ஐதீகம். வழக்குகளிலிருந்து விடுபட வராகியின் அருள் கட்டாயம் தேவை. வராகி உபாசனை செய்பவருடன் வாதாடாதே என வழக்கு மொழியே உள்ளது.

பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில்
நீரிழிவு நோயை குணப்படுத்தும் நீலகண்ட பிள்ளையார்
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் நீலகண்ட பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த பிள்ளையாருக்கு தீராத வினை தீர்க்கும் நீலகண்ட பிள்ளையார் என்று சிறப்பு பெயரும் உண்டு.
விநாயகர் மூலவராக தனிக்கோவில் கொண்டு எழுந்தருளிய, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில், திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவில் வரிசையில் பேராவூரணியில் உள்ள நீலகண்ட பிள்ளையார் கோவிலும் முக்கிய இடத்தை பிடிக்கிறது. பேராவூரணியில் உள்ள ஏந்தல் நீலகண்ட பிள்ளையார் கோவிலுக்கு தினமும் பேராவூரணி மட்டுமல்லாது அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
தல வரலாறு
கிபி 1825 ஆம் ஆண்டு தஞ்சையை ஆண்டு வந்த துளசேந்திர மகாராஜாவின் அமைச்சர் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார் . இதற்காக சிகிச்சைக்காக திருப்பெருந்துறை செல்வதற்காக பேராவூரணி வழியாக தனது அரசு பரிவாரங்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு நேரம் ஆகிவிட்டதால் பேராவூரணியில் உள்ள ஒரு அரச மரத்தடியில் தனது பரிவாரங்களுடன் தங்கினார். அப்போது பேராவூரணி ஏந்தல் நீலகண்ட பிள்ளையாருக்கு இரண்டு பேர் பூஜை செய்வதையும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதையும் அமைச்சர் பார்த்தார்.
உடனே கோவிலுக்கு அவரும் சென்றார். பின்னர் தனக்குள்ள நோயைப் பற்றி பூஜை செய்பவர்களிடம் கூறினார். உடனே அவர்கள் இன்று இரவு நீங்கள் இங்கு தங்கி விட்டு மறுநாள் காலையில் கோவிலுக்கு அருகே உள்ள குளத்தில் நீராடி விட்டு நீலகண்ட பிள்ளையாரை வணங்கி திருநீறு பூசுங்கள். உங்கள் நோய் உடனே குணமாகும் என்று அவர்கள் கூறியபடி அமைச்சரும் இரவில் தனது பரிவாரங்களுடன் கோவிலில் தங்கினார். மறுநாள் காலையில் கோவில்குளத்தில் குளித்துவிட்டு நீலகண்ட பிள்ளையாரை நினைத்து திருநீறு பூசினார். உடனே நீரிழிவு நோய் முற்றிலுமாக குணமானதாக தல வரலாறு தெரிவிக்கிறது.
பிரார்த்தனை
இக்கோவில் நீரிழிவு நோய்க்கான பரிகாரத்தலமாக விளங்குகின்றது. புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்கள் பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவிலுக்கு வந்து விநாயகரை வழிபட்டு தங்கள் தொழிலை தொடங்கினால் அவர்கள் தொடங்கிய தொழில் பல மடங்கு வளர்ச்சி அடைந்து அதிக லாபம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை .

யானைமலை யோக நரசிம்மர் கோவில்
மிகப்பெரிய நரசிம்மர் உருவம் உடைய நரசிம்மர் கோவில்
மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் ஒத்தக்கடை கிராமத்தின் அருகே உள்ள யானைமலை அடிவாரத்தில் யோக நரசிங்கர் கோவில் அமைந்துள்ளது. யானை ஒன்று முன்புறம் துதிக்கையை நீட்டி அமர்ந்த கோலத்தில் இருப்பது போல் தோன்றுவதால், இந்த மலைக்கு யானைமலை என்று பெயர் வந்தது. சுமார் 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோயில் ஆகும்.
கருவறையிலுள்ள நரசிங்கப் பெருமாளின் பெரிய திருவுருவம் ஆனைமலையின் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டதாகும். நரசிம்மர் கோவில்களிலேயே மிகப்பெரிய நரசிம்மரின் மூலவர் விக்கிரகத்தை கொண்ட கோவிலாக இந்த யானைமலை யோக நரசிம்மர் கோவில் இருக்கிறது. தாயார் திருநாமம் நரசிங்கவல்லி தாயார்.
தலவரலாறு
ரோமச முனிவர் என்பவர் தனக்கு குழந்தை வரம் வேண்டி யானைமலையிலுள்ள சக்கர தீர்த்ததில் நீராடி யாகம் செய்தார். அப்போது பெருமாளின் நரசிம்ம அவதாரத்தை மீண்டும் காண விரும்பினார். அதனால் பெருமாள் மீண்டும் உக்கிர நரசிம்மராக அவர் முன் தோன்றினார். அவருடைய கோபத்தால் உலகம் வெப்பமயமானது. பின் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி பிரகலாதனும், மகாலட்சுமியும் நரசிம்மரின் உக்கிரத்தினை தணித்தனர்.
பிரதோஷ பூஜை நடைபெறும் ஒரே வைணவ தலம்
எல்லா சிவன் கோயில்களிலும் பிரதோஷம் தினத்தை மிகவும் விமர்சையாக கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். ஆனால் பெருமாள் கோயிலில் பிரதோஷம் கடைப்பிடிக்கப்படுகிறதென்றல் அது இந்த கோயில் தான். தேய்பிறை பிரதோஷ காலத்தில் மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்ததால் இக்கோவிலில் தேய்பிறை பிரதோஷ தினத்தில் மிக சிறப்பான பூஜைகள் செய்யப்படுகின்றன. இச்சமயத்தில் நரசிம்ம மூர்த்தியை வழிபட்டால் கல்வி பயலும் மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். தொழில், வியாபாரங்கள் நன்கு விருத்தியாகும். துஷ்ட சக்திகளின் தாக்கம் மற்றும் மரண பயம் நீங்கும். இச்சமயத்தில் நரசிம்மரோடு நரசிங்கவல்லி தாயரையும் வணங்க திருமண தடை தாமதம் போன்றவை நீங்கும்.
மேலும் கொடூரமான, கோபக்கார கணவர்களை அடைந்த பெண்கள் இங்கு வேண்டினால், அவர்களின் கணவர்களின் கோப குணங்கள் மாறி, மனைவி மற்றும் பிள்ளைகளிடம் அன்பாக நடக்கும் நபராக மாறுவார்கள் என்பது அனுபவம் வாய்ந்த பக்தர்களின் நம்பிக்கை.

ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
பாயாச நிவேதனத்தை சிறுவர்கள் உருவில் வந்து ஏற்கும் முருகன்
தென்காசியிலிருந்து சுரண்டை செல்லும் சாலையில் 5 கிமீ தொலைவில் உள்ள நான்முனைச் சாலையின் வலப்புறத் திருப்பத்தில் இருந்து 6 கிமீ தூரத்தில் ஆய்க்குடி கிராமம் உள்ளது. மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி, பாலகனாக ஒரு முகத்துடனும் நான்கு கரங்களுடனும் பத்மபீடத்தில் தாமரைப் பூவின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவர் அருகில் உள்ள மயிலின் முகம் இடப்புறம் பார்த்தபடி உள்ளது. மூலவருக்கு ஹரிராம சுப்பிரமணியர் என்ற பெயரும் உண்டு. மூலவரைப் போலவே அமைந்த உற்சவர் முத்துக்குமார சுவாமி மயில் வாகனத்தில் நின்ற கோலத்தில் உள்ளார்.
படிப்பாயசம் நிவேதனம்
மதுரையில் வாழ்ந்த பட்டு வணிகர் ஒருவர் குழந்தை வரம் வேண்டிப் பல கோவில்களுக்குச் சென்று, இறுதியாக ஆய்க்குடிக் கோவிலுக்கு வந்து பாலசுப்பிரமணிய சுவாமியைத் தனக்குக் குழந்தை பிறந்தால் முருகனுக்கு வைரவேல் சாற்றுவதாக வேண்டிக் கொண்டார். அவருக்குக் குழந்தைப் பேறு கிடைத்தது. ஆனால் அவர் தனது வேண்டுதலை மறந்து போனார். முருகன் வணிகரின் மனைவியின் கனவில் தோன்றி வேண்டுதலை மறந்து போனதை நினைவுறுத்தினார். தன் மறதிக்கு வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கோரிய வணிகர் தன் வேண்டுதலை நிறைவேற்றும் முகமாக, வைரவேலை முருகருக்குச் சாற்றி ஆண்டுதோறும் படிப்பாயசம் நிவேதனம் செய்தார்.
குழந்தை பேறு வேண்டுவோர் இங்கு வந்து வழிபட்டால் விரைவில் மழலை பேறு கிட்டும். தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பிறகு, பாயாசத்தை நிவேதனமாக படைத்து அதனை கோவிலுக்கு அருகில் ஓடும் அனுமன் நதிக்கரையில் உள்ள படியில் ஊற்றி சிறுவர்களை அருந்த சொல்கிறார்கள். இதனை படிப்பாயாச நிவேதனம் என்கிறார்கள். சிறுவர்கள் உருவில் முருகனே வந்து பாயாச நிவேதனத்தை ஏற்பதாக பக்தர்களின் நம்பிக்கை.