
வன்னிவேடு அகத்தீசுவரர் கோவில்
ஆவுடையாரின் மேல் எழுந்தருளி இருக்கும் அம்பிகையின் அபூர்வ தோற்றம்
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டைக்கு அருகில் வன்னிவேடு என்ற கிராமம் உள்ளது. இங்கு வன்னி மரங்கள் அதிகம் உள்ளதால் இத்தலத்துக்கு வன்னிக்காடு என்ற பெயரும் உண்டு. இங்கு அகத்தியர் வழிபட்ட அகத்தீசுவரர் கோவில் உள்ளது. இறைவியின் திருநாமம் புவனேசுவரி.
இத்தலத்து மூலவரை அகத்திய முனிவர் மணலால் அமைத்து வழிபட்டார். அகத்தியர் அமைத்த லிங்கம் என்பதால் லிங்கம் குள்ளமாக இருக்கிறது.
அம்பாள் புவனேசுவரி ஆவுடையார் (பீடம்) மீது நின்று தவக்கோலத்தில் காட்சி தருகிறாள். ஆவுடையாரின் மேல் எழுந்தருளி இருக்கும் அம்பிகையின் இந்த தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
பௌர்ணமியன்று அம்பிகைக்கு நடைபெறும் லகுசண்டி ஹோமம்
பௌர்ணமியன்று சப்தரிஷிகளான அகத்தியர், அத்திரி, வசிஷ்டர், காஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விசுவாமித்திரர், ஜமதக்னி ஆகியோர் அம்பாளை பூஜிப்பதாக ஐதீகம். இதற்காக அன்றிரவில் அம்பாள் சன்னதி முன்பு, லகுசண்டி ஹோமம் நடத்துகின்றனர். இந்த ஹோமத்தின்போது பூஜை செய்யப்படும் கலசத்திலிருந்து நீரை எடுத்து அம்பிக்கைக்கு அபிஷேகம் செய்வார்கள். இந்த அபிஷேகத்தை சப்த ரிஷிகளே வந்து செய்வதாக ஐதீகம். இந்த பூஜை நடக்கும்போது ஏழு இலைகளில் சப்த ரிஷிகளுக்கும் நைவேத்யம் படைப்பார்கள்.
பௌர்ணமி நாள்களில் நடைபெறும் இந்த அபிஷேகப் பூஜையில் கலந்து கொண்டால் வீடு மற்றும் கட்டிடம் கட்டுபவர்கள் தடங்கலின்றிக் கட்டி முடிப்பார்கள்.

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில்
தினந்தோறும் பிரதோஷ பூஜை நடைபெறும் தேவாரத்தலம்
பொதுவாக சிவாலயங்களில் வளர்பிறை திரயோதசி மற்றும் தேய்பிறை திரயோதசி அன்று மட்டும்தான் பிரதோஷ பூஜை நடைபெறும். அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறைதான் பிரதோஷ பூஜை என்பது நடைபெறும். ஆனால் திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலில், தினம் தோறும் மாலை 6:00 மணிக்கு பிரதோஷ பூஜை தொடங்கி நடைபெறும். இதற்கு நித்திய பிரதோஷம் என்று பெயர். உலகத்திலேயே நித்ய பிரதோஷ பூஜை நடைபெறும் ஒரே சிவாலயம் திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில்தான். இந்த பூஜையின் போது தியாகராஜப் பெருமானை முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து வணங்கி தரிசிப்பதாக ஐதீகம்.
இந்த நித்ய பிரதோஷ பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு, கோடி புண்ணியம் கிட்டும். ஈரேழு ஜென்ம பாவமும் விலகும் என்பது நம்பிக்கை.

சனி மகா பிரதோஷம்
சனி மகா பிரதோஷ வழிபாட்டின் சிறப்புகள்
மாதம் தோறும் திரியோதசி அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். வழக்கமாக ஒரு மாதத்தில் வளர்பிறையில் ஒன்று, தேய்பிறையில் ஒன்று என இரண்டு பிரதோஷங்கள் வரும். நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே ஆனந்த நடனமாடி தேவர்களுக்கு சிவப் பெருமான் காட்சி கொடுத்து, அருள் செய்த காலம் தான் பிரதோஷ காலமாகும்.
சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு, கண்டத்தில் நிறுத்தி, நீலகண்டனாகி தேவர்களையும் உலக உயிர்களையும் காத்தருளினார். அவர் பதினொன்றாம் பிறையாகிய ஏகாதசியில் விஷம் உண்டார். பன்னிரண்டாம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். பதிமூன்றாம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும். இதனால்தான் சனி பிரதோஷம், சனி மகா பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.
பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன், ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் வேத பாராயணமும், இரண்டாம் சுற்றில் திருமுறை பாராயணமும் , மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையும் நடைபெறும்.
ஒரு சனிப் பிரதோஷ விரதமானது, ஆயிரம் சாதாரண பிரதோஷ விரதத்திற்கு சமமானது. இந்தப் பிரதோஷ காலத்தில் நந்திக்கும் சிவனுக்கும் விளக்கேற்றி வழிபட்டால், சனி பகவானால் ஏற்படும் சகல துன்பங்களும் நீங்கும். நந்திக்கும் சிவனுக்கும் திராட்சை மாலை, வில்வ மாலை அணிவிப்பது இன்னும் சிறந்தது.
ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டமச் சனி மற்றும் சனி தசை, புத்தி நடப்பவர்களுக்கு சனியினால் வரும் துன்பங்கள், சனி பிரதோஷ வழிபாட்டால் விலகும். சனி பிரதோஷத்தன்று கோயிலுக்குச் சென்றால் 120 வருடம் பிரதோஷத்திற்குக் கோவிலுக்குச் சென்ற பலன் கிடைக்கும் என்கிறது சிவாகமம் என்னும் நூல். கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவனருள் கிடைத்து பரிபூரணமாய் வாழலாம். எனவே இந்த நாளில் சிவ தரிசனம் செய்வது மிகவும் விசேஷம்.

திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோவில்
சிவனை தழுவிய கோலத்தில் அம்பாள் காட்சியளிக்கும் தேவாரத்தலம்
கும்பகோணத்துக்கு அருகில் உள்ள பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவிலுக்கு மிக அருகில் உள்ள தேவாரத்தலம் திருச்சத்தி முற்றம். மூலவர் சிவக்கொழுந்தீசர். இவருக்கு தழுவக்குழைந்த நாதர் என்ற வேறு பெயரும் இருக்கிறது. தாயார் பெரியநாயகி.
விஜயாலய சோழன் முதல் மூன்றாம் ராஜராஜ சோழன் வரை அனைவரும் தங்கள் இளமைக் காலத்தைக் கழித்த பகுதியாக இவ்வூர் திகழ்ந்தது. சைவத்தை நிலைநாட்டி வளர்த்த மங்கையர்க்கரசியார், செம்பியன் மாதேவி, குந்தவை பிராட்டியார் வாழ்ந்து அரசாட்சி செய்த ஊராகவும் இவ்வூர் திகழ்கிறது.
சுவாமி சன்னிதிக்கு இடதுபுறம் சக்தி தழுவிய நாதரின் திருமேனியும், அதன் பின்புறம் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்யும் அம்மன் திருமேனியும் நம்மைப் பரவசப்படுத்துகின்றன.
தல வரலாறு
பக்தியே முக்திக்கு வித்து என்பதை இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட சிவ, பார்வதி விரும்பினர். இதற்காக, சக்திமுற்றத்தில் இருந்து அம்பிகை, ஈசனை நினைத்து தவம் இருந்தார். ஆனால் ஈசன் வராமல் காலம் தாழ்த்தினார். மனம் தளராமல் பக்தியையும், தவத்தையும் தீவிரப்படுத்தி ஒற்றைக் காலில் தவம் இருந்தார். அம்பிகையை சோதிக்க நினைத்த ஈசன் ஜோதி சொரூபமாக காட்சி தந்தார். தன்முன் இருப்பது ஈசன் என்பதை உணர்ந்த அம்பிகை தீப்பிழம்பையே தழுவி ஆனந்தப்பட்டாள். அம்பாள் ஒற்றைக் காலைத் தரையில் ஊன்றி, மற்றொரு காலை ஆவுடையாரின் மீது மடக்கி வைத்து, அதேசமயம் சிவனாரின் திருமேனி மீது, பாதம் படாமல் கட்டியணைத்தபடி தன் இரு கைகளாலும் சிவலிங்கத்தைத் தழுவி நிற்கும் இத்திருக்கோலம், வேறெந்த ஆலயத்திலும் காண முடியாத சிறப்பாகும்.
பிரார்த்தனை
இத்தலம் திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாகும். சக்தி தழுவிய ஈசனை திருமணமாகாத ஆண்களும், பெண்களும் திங்கள்கிழமைகளில் வந்து வணங்கினால் தோஷங்களும், தடைகளும் நீங்கி, நல்ல இல்வாழ்க்கை அமையும். கணவன் மனைவி உறவு பலப்படவும், விதிவசத்தால் பிரிந்து போன தம்பதியரும் இங்கு வந்து வணங்கினால் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தேவசமுத்திரம் காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில்
அனுமனுக்கு முழுத்தேங்காய் நேர்த்திக்கடன்
கிருஷ்ணகிரி நகரத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ள தேவசமுத்திரம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில். இக்கோவில் விஜயநகரப் பேரரசின் காலத்தில் தோன்றியது. அக்காலத்தில் இப்பகுதி வனமாக இருந்ததால், காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில் என்று பெயர் பெற்றது. ஆஞ்சநேயர் இங்கு சாய்ந்த கோலத்தில், வலது புறம் திரும்பி நின்றும், தலை மேல் நோக்கியும் , வால் தூக்கி நின்றவாறும், வாலில் சிறிய மணி ஒன்று கட்டியவாறும் காட்சியளிக்கிறாா்.
வளரும் நந்தீசுவரா்
இக்கோவிலின் அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுவது வளரும் நந்தீசுவரர் ஆவாா். மூலஸ்தானத்திலிருந்து இடதுபுறமாக, கோவிலின் வெளிபுறம் பாறையின்மீது நந்தீசுவரர் மிக அழகான தோற்றத்துடன் காட்சியளிக்கிறாா். இந்த நந்தி வளர்ந்து வருவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.
முழுத்தேங்காய் பிராத்தனை
எல்லா ஆஞ்சநேயர் கோவில்களிலும் வடைமாலை, வெற்றிலை மாலை, துளசி மாலை, வெண்ணெய் காப்பு, சந்தனக்காப்பு சாத்தி வழிபடுதல் விசேஷம். ஆனால் இங்கு முழுத்தேங்காய் நேர்த்திக்கடன் விசேஷம். இங்கு வருகை புரிந்து பிராத்தனை செய்யும் பக்தர்களுக்கு தேங்காய், வெற்றிலையுடன் கூடிய சிகப்பு நிற துணி பை வழங்கப்படுகிறது. அவர்கள் பிராத்தனை முடிந்த பிறகு அந்த பையினை கோவிலுனுள் ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும். எவரொருவர் ஒரு முழுத்தேங்காயை, மனதார வேண்டி அனுமனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றாரோ, அவருடைய கோரிக்கைகள் மூன்று மாதத்திற்குள் நிறைவேறும் என்பது ஐதீகம். காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுவதால் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த நாட்களில் அனுமனை வழிபட்டு தேங்காய் கட்டினால் தங்களது வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவில்
பதினாறு ஆயுதங்களோடு அபூர்வ கோலத்தில் சக்கரத்தாழ்வார் எழுந்தருளி இருக்கும் திவ்யதேசம்
மதுரை – மேலூர் சாலையில், மதுரைக்கு வடகிழக்கே 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருமோகூர். மூலவர் காளமேகப் பெருமாள். தாயாரின் திருநாமம் மோகனவல்லித் தாயார். கருவறையில் மூலவர் காளமேகப் பெருமாள் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உயர்ந்த பீடத்தில், உயரமான வடிவில் காட்சியருள்கிறார்.இங்குள்ள கருடன் பெரிய வடிவில் எழிலான தோற்றத்தில் காட்சி தருகின்றார்.
இத்தலத்தில் மிகப்பழமையான சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பதால் இவரை வணங்கும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. அனைத்து பெருமாள் கோவில்களிலும் சக்கரத்தாழ்வார் இருந்தாலும் இவர் இங்கு பதினாறு கைகளிலும் பதினாறு ஆயுதங்களோடு அபூர்வ கோலத்தில் காட்சி தருகிறார். மந்திர எழுத்துக்களும் சுழலும் திருவடிகளும் காணப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். சக்கரத்தாழ்வார் பின்புறம் யோக நரசிம்மரோடு காட்சி தருகிறார். இந்த அமைப்பு நரசிம்ம சுதர்சனம் என்று அழைக்கப்படுகிறது. நரசிம்மரின் நான்கு கைகளிலும் நான்கு சக்கரங்கள் உள்ளன. சங்கு கிடையாது. சக்கரத்தாழ்வார் உற்சவர் விக்கிரகத்தில் 154 மந்திரங்களும், மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன.
மந்திர எழுத்துக்களுடன் உள்ள சக்கரத்தாழ்வரின் பூஜிக்கப்பட்ட யந்திரம் தொழில் விருத்தியையும் எதிரிகளை வெல்லும் திறனையும் கண் திருஷ்டியை நீக்கும் வல்லமையுடையது என்பதும் ஐதீகம். திருமணம், பிள்ளைப்பேறு, வேலை, நோய்கள், வியாபார அபிவிருத்தி, செய்வினைக் கோளாறு, கடன் தொல்லை, வழக்குகள் என்று பல பிரச்சினைகளுக்கு சக்கரத்தாழ்வார் ஆறுதலும் தீர்வும் அளிக்கிறார்.
ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.
இத்தலம் நவகிரக தோஷங்களை போக்கக் கூடிய தலம். திருமோகூர் ராகு கேது தலமாகும். ராகு கேதுவால் உண்டாகும் தோஷங்களுக்கு திருமோகூர் பரிகார தலமாக விளங்குகிறது.

மயிலாடுமலை சக்திவேல் முருகன் கோவில்
உலகிலேயே மிகப் பெரிய மூலவர் திருமேனியுடைய முருகன் கோவில்
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் இருந்து, குடியாத்தம் போகும் வழியில் கே. வி. குப்பம் தாலுகா, மேல்மாயில் கிராமத்தில் உள்ள மயிலாடுமலையில் அமைந்துள்ளது சக்திவேல் முருகன் கோவில். இக்கோவிலில் முருகப்பெருமான் ஒன்பது அடி உயரத்தில், உலகிலேயே மிகப்பெரிய மூலவர் திருமேனியுடன், கருவறைக்கு உள்ளே கருவறை என்ற சூட்சுமமான அமைப்பில் எழுந்தருளி உள்ளார். மற்ற முருகன் கோயில்களில் இல்லாதவகையில் வள்ளி மற்றும் தெய்வானை அம்மன்கள் தனித் தனிச் சன்னதியில் அமைந்து அருள்பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை
இக்கோவிலில் முக்கிய நேர்த்திக்கடன் தேங்காய் கட்டுதல் ஆகும். வேண்டுதல் வைத்து தேங்காயில் அவர்களது பெயர் எழுதி கட்டினால் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம்.
மயிலாடுமலை முருகன் கோவிலுக்கு படிகள் மற்றும் மலைப்பாதை சாலை வழியாகவும் செல்லலாம்.

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில்
திருவாரூர் தியாகராஜ சுவாமி திருமேனியின் ரகசியம்
திருவாரூரில் பிறக்க முக்தி என்பது ஆன்றோர் வாக்கு. சைவ சமயத்தினருக்கு கோவில் என்று குறிப்பிட்டால் அது சிதம்பரம் நடராஜர் கோவிலைக் குறிக்கும். அதுபோல பெரிய கோவில், பூங்கோவில், திருமூலட்டானம் என்று குறிப்பிட்டால் அது திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலை குறிக்கும். திருமூலட்டானம் என்றால் இறைவன் உறையும் இடம் என்று பொருள்.
தியாகராஜர் வரலாறு
திருமாலானவர். சிவபெருமானை நோக்கித் தவம் செய்ய, அகமகிழ்ந்த சிவபெருமான் உமையவளுடன் தோன்றியபோது, சிவபெருமானை மட்டும் திருமால் வணங்கியுள்ளார் கோபமடைந்த உமையவள் திருமால் மீது சாபமிட கலங்கி நின்ற திருமால். மீண்டும் சிவபெருமானை வழிபாடு செய்து வந்தார். அதன்பின் மீண்டும் உமையவளுடன் சிவபெருமான் தோன்றியபோது, உரிய முறையில் திருமால் வணங்க, மகிழ்ந்த உமையவள் சாபத்துக்கான விடை தந்தாள். அதைக் கண்டு மகிழ்ந்த திருமால், சோமாஸ்கந்த திருக்கோலத்தில் எழுந்தருளக் கோரி தன் நெஞ்சக் கோயிலில் நிறுத்திக்கொண்டார். திருமாலின் உச்சுவாசித்தால் (மூச்சுக் காற்றை உள்ளிழுத்தலும் வெளிவிடுதலும் பெருமானும் அசைந்தாடி ஆனந்தங் கொண்டு திருமாலுக்குத் திருவருள் தந்தார். இதுவே அஜபா நடனம்.இது ஒரு மந்திரத்தின் பெயர். ஜபா என்றால் ஜெபித்தல். அஜபா என்றால் ஜெபிக்காது இருத்தல் என்று பொருள். அஜபா நடனம் ஆடும் போது மந்திரங்கள் வாய்விட்டு உச்சரிக்கப் படுவதில்லை.
தியாகராஜ சுவாமி திருமேனியின் ரகசியம்
தியாகராஜர் கோயிலின் அர்த்தமண்டபத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்தபடி தியாகராஜர் காட்சியளிக்கிறார். சிதம்பரம் ரகசியம் என்பது போல் திருவாரூர் ரகசியம் என்பது தியாகராஜ சுவாமியின் திருமேனியாகும். இதை சோம குல ரகசியம் என்பார்கள். தியாகராஜரின் திருமார்பை ஸ்ரீ சக்கரம் அலங்கரிப்பதால், அவரது முழு திருமேனியை யாராலும் எப்போதும் காண முடியாது. எனவே நம்மால் அவரின் திருமுகத்தையும், அருகே அமர்ந்துள்ள தேவியின் திருமுகத்தையும் மட்டுமே காண முடியும். மற்ற அங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டு, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அபிஷேகத்தின்போது கரத்தின் ஒரு பகுதியையும், மார்கழித் திருவாதிரையில் இடது பாதத்தையும், பங்குனி உத்திரத்தில் வலது பாதத்தையும் தரிசிக்க முடியும்.
தியாகராஜ பெருமாள் திருமுடியை தலை சீரா என்னும் ஒருவகை அணி அலங்கரிக்கின்றது. சதுர வடிவிலான இந்த அணிகலன், உயர்ந்த வகை ஜாதி கற்கள் பதிக்கப் பெற்றது. சூளாமணி என்ற ஒரு பெயரும் இந்த அணிகலனுக்கு உண்டு.இந்த சூளாமணி அணிகலனை திருநாவுக்கரசர் தமது தமது தேவாரப் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எந்த ஒரு சிவதலத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு திருவாரூர் தலத்திற்கு உள்ளது. கோவில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றி தேவாரப் பாடல்கள் கொண்ட சிறப்பைப் பெற்றுள்ள தலம் இது ஒன்றே ஆகும். திருவாரூர் கோவில் சிதம்பரம் கோவிலைவிட பழமையானது என்பதை குறிக்கும் வகையில், இங்கு பாடப்படும் தேவாரத்தில் திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தை குறிப்பிடப்படுவது இல்லை.

சிதம்பரம் நடராஜர் கோவில்
சிதம்பரம் நடராஜர் ஆனித் திருமஞ்சனம்
அபிஷேகப் பிரியரான நடராஜருக்கு மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரம், சித்திரை திருவோணம், ஆவணி வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி, மாசி வளர்பிறை சதுர்த்தசி ஆகிய நாட்கள் என வருடத்திற்கு ஆறு முறை அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த ஆறு நாட்களில் மார்கழி திருவாதிரையும், ஆனி உத்திரமும் சிறப்பு வாய்ந்தவை.
இந்த ஆறு அபிஷேகங்களில், மூன்று அபிஷேகங்கள் திதி அடிப்படையிலும், ஏனைய மூன்று அபிஷேகங்கள் நட்சத்திரங்களின் அடிப்படையிலும் நடைபெறும். மானுடர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்பது கணக்கு. இதன் வகையில், ஒருநாளைக்கு பெருமானுக்கு ஆறு கால பூஜைகள் செய்து தேவர்கள் மகிழ்கின்றனர் என்ற அடிப்படையில், நடராஜருக்கு வருடத்திற்கு ஆறு அபிஷேகங்கள் செய்யப் பெறுகின்றன.
பொதுவாக சந்தியா காலங்களில் செய்யப்பெறும் வழிபாடுகளுக்கு சிறப்பான பலன்கள் உண்டு. இதில் ஆனி மாதம் என்பது தேவர்களுக்கு மாலைப் பொழுதாகும். எனவே, இந்த மாதத்தில் செய்யப்பெறும் அபிஷேகம் தேவர்களின் மாலைநேரத்திய வழிபாட்டினை ஒட்டியதாக அமைவதால், `ஆனித் திருமஞ்சனம்' மிகவும் சிறப்பித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
விரதம் இருந்து ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால், பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள். தம்பதிகளுக்கு சுகமான வாழ்வு கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும். நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்கவும் இந்த விழா நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு ஆனித் திருமஞ்சனம் 26.06.2023 திங்கட்கிழமையன்று நடைபெறுகின்றது.

ஆவராணி அனந்த நாராயண பெருமாள் கோவில்
திருமேனி முழுவதும் ஆபரணங்களை தரித்து இருக்கும் 'ஆபரண தாரி' பெருமாள்
நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில் சிக்கலுக்குத் தென்மேற்கில் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, ஆவராணி அனந்த நாராயண பெருமாள்கோவில். தாயார் திருநாமம் அலங்காரவல்லி. பஞ்ச நாராயணத் தலங்களில் இத்தலமும் ஒன்று.
திருவரங்கத்தில் ரங்கநாதப் பெருமாள் 18 அடி நீள திருமேனியுடன், ஐந்து தலை ஆதிசேஷன் மேல் வானத்தைப் பார்த்தவண்ணம் சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். இத்தலத்து கருவறையில், மூலவரான அனந்த நாராயண பெருமாள், தென் திசை முடியை வைத்து, வட திசை பாதம் நீட்டியுள்ளார். 21 அடி நீளத்தில், ஏழு தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது, பக்தர்களை பார்த்த வண்ணம் சயனம் கொண்டுள்ளார். இந்த காட்சியை, இங்கு மட்டுமே நாம் தரிசிக்க முடியும். வேறு எந்த தலத்திலும்காண முடியாது.
சயன கோலத்தில் இருக்கும் அனந்த நாராயண பெருமாள் தன்னுடைய ஒரு கையால் தன்னுடைய தலையைத் தாங்குகிறார். பெருமானுடைய இன்னொரு கை முழங்கால் வரை நீண்டுள்ளது. கன்னங்கரிய வடிவத்திலே தைலக்காப்புக்குள்ளே இருக்கிறார்.
இக்கோயிலின் தனிச்சிறப்பு என்னவென்றால், மூலவர் தலை முதல் கால் வரை அலங்காரத்துடன் காட்சியளிக்கிறார். சிரத்தின் மேல் மணிமகுடம், அழகான நீண்ட காது வளையங்கள், திருமார்பில் நலங்கிளர் எனும் ஆரம் ,தண்டம், தாரணம், சிரேஷணம், கடகம் போன்ற ஆபரணங்கள், மார்பின் குறுக்கே கவசம், இடுப்பில் உத்தரியம், உடல் முழுவதும் யஜ்ஞோபவிதம். அவரது காலில் தண்டை, கொலுசு அணிந்தபடி காணப்படுகிறார். அவரது கைகளின் விரல்களிலும், கால்களின் கால்விரல்களிலும் ஒவ்வொரு மோதிரம் காணப்படுகிறது. இப்படி இத்தலத்துப் பெருமாள் திருமேனி முழுவதும் ஆபரணங்களை தரித்து இருப்பதால், இவருக்கு ஆபரண தாரி என்கிற பெயரும் வந்தது. அதுவே இந்த ஊரின் பெயராகி பின்னர் ஆவராணி என்று மருவியது.

விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில்
சிவபெருமானின் பாதம் அமைந்துள்ள தேவாரத்தலம்
திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில், திருவாரூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் விளமல் இறைவனின் திருநாமம் பதஞ்சலி மனோகரர் . இறைவியின் திருநாமம் யாழினும் மென்மொழியம்மை.
இக்கோவில் கருவறையில் லிங்கம், அதற்கு பின்புறம் நடராஜர், முன்புறம் சிவன் பாதம் என, ஒரே சன்னதியில் சிவனின் மூன்று வடிவங்களைத் தரிசிக்கலாம். இத்தகைய அமைப்பு வேறு எந்த தலத்திலும் கிடையாது.
திருவாரூரில் தியாகராஜரின் முகத்தையும், இத்தலத்தில் சிவபாதத்தையும் ஒரே நாளில் தரிசித்தால், பிறவாநிலை கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோவில் மூலவர் பதஞ்சலி மனோகரர் மணல் லிங்கமாக காட்சி தந்தாலும், அவருக்கு தீபாராதனை காட்டும்போது, லிங்கம் ஜோதி சொரூபமாகக் காட்சியளிக்கிறது.
தல வரலாறு
தில்லையில் மகாசிவனின் ஆனந்த நடனத்தை கண்ட பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாத முனிவரும் சிவபெருமானிடம் 'தங்கள் அஜபா நடனத்தையும், ருத்ர தாண்டவத்தையும் என்றென்றும் காண விரும்புகிறோம். தங்களின் திருவடி தரிசனத்தையும் எல்லோரும் காண வழி செய்ய வேண்டும்' என கேட்டுக்கொண்டனர். அதற்கு சிவபெருமான், நீங்கள் இருவரும் திருவாரூர் செல்லுங்கள். அங்கே எம் நடனங்களையும், எம் திருவடி தரிசனத்தையும் காண்பீர்கள் என்று கூறினார். சிவபெருமானின் ஆணையின்படி பதஞ்சலியும், வியாக்ரபாதரும் திருவாரூர் வந்தார்கள். திருவாரூரில் எங்கெங்கும் சிவலிங்கமாகவே இருக்க, பதஞ்சலி தன் உடலை பாம்பாகவும், வியாக்ரபாதர் தன் உடலை புலிக்காலாகவும் மாற்றிக்கொண்டு அன்னை கமலாம்பாளை வணங்கினர்.
அம்பாள். மண்ணால் லிங்கத்தைப் பிடிக்க உத்தரவிட்டாள். விமலாக்க வைரம் என்ற அந்த தேவலோக மண்ணில் விளமர் என்ற அந்த இடத்தில் பதஞ்சலி லிங்கத்தைப் பிடித்தார். அப்போது சிவபெருமான் தோன்றி அஜபா நடனம் ஆடியதோடு, தியாக முகம் காட்டி தன் ருத்ர பாதத்தை காட்டினார். மகாவிஷ்ணு, பிரம்மதேவர், முசுகுந்த சக்கரவர்த்தி, தேவாதி தேவர்கள் எல்லாம் புடைசூழ நின்று கண்டுகளித்தார்கள்.
இதையொட்டி, இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று ருத்ர பாத தரிசனம் காட்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. மேலும், சிவபெருமான் காட்டிய ருத்ர பாதத்திற்கு தினமும் பூஜைகள் நடைபெறுகின்றன. இத்தலத்தில் வடகிழக்கு முகமாக நந்தி வீற்றிருக்கிறது. இவ்வாறு நந்தி வடகிழக்கு முகமாக உள்ளதை வேறு எந்த தலத்திலும் காணமுடியாது.
பிரார்த்தனை
இக்கோவிலில் வந்து வழிபாடு செய்தால் நோய்கள் நிவர்த்தியாகும். ஆயுள் விருத்தியாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும். முக்தி கிடைக்கும். கல்வியில் சிறப்பு பெறலாம் என்கிறார்கள். மேலும் இங்கு ஒரு பிடி அன்னதானம் செய்தால், பல அசுவமேத யாகம் செய்த பலனை பெறலாம் என்பதும் ஐதீகம்.

மூவலூர் மார்க்க சகாயேசுவரர் கோவில்
யானை. மான், ரிஷபம், சிம்மம் ஆகியவற்றின் மேல் வீற்றிருக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
மயிலாடுதுறைக்கு மேற்கே 6 கி.மீ தூரத்தில், மூவலூர் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் மார்க்க சகாயேசுவரர். இந்த ஆலயத்தில் சவுந்திர நாயகி, மங்களாம்பிகை என்ற இரண்டு அம்பிகைகள் எழுந்தருளியிருக்கிறார்கள்.
பொதுவாக சிவாலயங்களில், இறைவன் கருவறையின் சுற்றுச்சுவரில் எழுந்தருளியிருக்கும் தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இருக்க, சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் என நான்கு சீடர்களுடன் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில் தட்சிணாமூர்த்தியின் காலடியில் யானை முகம், மான், ரிஷபம், சிம்மம் ஆகியவற்றோடு முயலகனும், சனகாதி முனிவர்களும் இருப்பது ஒரு வித்தியாசமான அமைப்பாகும். இத்தகைய தட்சிணாமூர்த்தியின் தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

கீழையூர் பூர்வரங்கநாதர் கோவில்
திருவரங்கம் தலத்தின் அபிமானத் தலமாகக் கருதப்படும் கீழரங்கம்
நாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பாதையில் சுமார் 24 கி.மீ., தொலைவில் கீழையூர் பூர்வரங்கநாதர் கோவில் உள்ளது. பெருமாள் தன் பக்தனுக்க கிருஷ்ணனாகக் காட்சி தந்து, பின் அரங்கனாகப் பள்ளி கொண்ட திருத்தலம் இது. பூர்வ என்றால் வடமொழியில் முழுமையான குறைவில்லாத எனப்பொருள். அதனால் இத்தலம் பூர்வாங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. பூர்வஜன்ம வினைப்பயனால் உண்டான தோஷங்களைக்கூட தரிசித்த மாத்திரத்தில் தீயினில் இட்ட தூசு போல காணாமல் போக்கும் பெருமாள் அருளும் தலம், கீழையூர்.
பஞ்சரங்க ஷேத்ரங்கள் என்ற ஐந்து அரங்கனின் ஆலயங்களில் இதுவும் ஒன்று. திருவரங்கம் - மத்தியரங்கம், கர்நாடகத்து ஸ்ரீரங்கப்பட்டினம் - மேலரங்கம், மாயவரம் - வடரங்கம், வேதாரண்யத்திற்கு அருகில் உள்ள கட்டிமேடு - ஆதிரங்கம், இத்தலம் கீழரங்கம்.
தல வரலாறு
மார்க்கண்டேய மகரிஷி தான் மகளாக வளர்ந்த மகாலட்சுமியை பெருமாளுக்கு திருமணம் செய்து கொடுத்த பின் ஐந்து ரங்கத் தலங்களுள் நான்கிற்குச் சென்று பெருமாளையும் மகாலட்சுமியையும் கண்டு மகிழ்ந்தார். கடைசியாக பூர்வரங்கம் அல்லது கீழை அரங்கம் என அழைக்கப்படும் அரங்கத்தில் உறையும் அரங்கனைத் தேடி அலைந்தார். அரங்கனைக் காண முடியாததால் அங்கேயே தவம் இருக்கத் தொடங்கினார். கால ஓட்டத்தில் மெதுவாக புற்று வளர்ந்து அவரை மூடியது. ஒருநாள், அந்தக் கானகத்தில் எழுந்த குழல் ஓசை, தவம் செய்த முனிவரையும் கவர்ந்திழுத்தது. அதனால், உள்ளேயிருந்து வெளிப்பட்ட ரிஷி, குழலோசை வந்த திக்கை நோக்கிச் சென்றார். அங்கே கால்நடை மேய்க்கும் சிறுவன் ஒருவன் குழலிசைப்பதைக் கண்டார்.சிறிது நேரத்தில் சிறுவன் உருமாறி கண்ணனாகக் காட்சியளித்தான். வணங்கிய முனிவர். 'அரங்கன் வடிவில் தரிசனம் தந்து வரங்கள் அருள வேண்டும்' என்று வேண்டினார். உடனே, திருவரங்கத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் குண திசை முடியை வைத்து, குடதிசை பாதம் நீட்டி வட திசை பின்பு காட்டி தென்திசை இலங்கை நோக்கி யோக நித்திரையில் காட்சிதந்தார். பெருமாள் மார்க்கண்டேய மகரிஷிக்கு பெருமாள் காட்சி கொடுத்தது. தை மாதம் இரண்டாம் நாளாகும். பெருமாள் அன்று முதல் தன்னருகே மார்க்கண்டேய மகரிஷி கருவறையிலேயே இருக்குமாறு செய்தார்.
கருவறையில் ஆனந்த விமானத்தின் கீழ் இடக்கை பக்கவாட்டில் இருக்க வலக்கையைத் தலை அருகில் வைத்து யோக சயனத்தில் ஐந்து தலை ஆதிசேஷன் மேல் கிடந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார் பெருமாள். பெருமாளின் தலையருகே மார்க்கண்டேய மகரிஷியும், திருவடி அருகே பூதேவியும் உள்ளனர் யோக மூர்த்தியாக இருப்பதால் நாபிக் கமலத்தில் பிரம்மா கிடையாது. மார்க்கண்டேய மகரிஷிக்கு முதலில் ஆயன் உருவில் காட்சி தந்ததால், உற்சவர் ஆயனார் என்ற திருநாமத்தோடு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார்.
பிரார்த்தனை
கோயிலில் வடக்கே உள்ள புஜ்கரணியின் அருகே ரங்கநாயகித்தாயார் தவம் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திருமணங்குடி என்னும் ஊரில் பெருமாளை திருமணம் செய்து கொண்டதாக புராண வரலாறு உள்ளது. எனவே இங்கு ரங்கநாயகித் தயாரிடமும், பெருமாளிடமும் செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் ஒரே நேரத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு பாலும் பழமும் நிவேதனம் செய்து, பக்தர்களுக்கு கொடுத்தால் திருமணம் கைகூடி வரும் என்பது நம்பிக்கை. வாழைப்பழம், உலர்திராட்சை, முந்திரி, கல்கண்டு போன்றவற்றை தாயாருக்கு நைவேத்யம் செய்து சிறுகுழந்தைகளுக்குத் தந்தால் புத்திர பாக்கியம் நிச்சயம் கிட்டும் என்பது ஐதீகம்.
திருவரங்கம் தலத்தின் அபிமானத் தலமாகக் கருதப்படும் இத்தலத்தில் அனைத்து திருவிழா, உற்சவங்களும் திருவரங்கத்தினைப் போலவே நடைபெறுகின்றன.

விளத்தொட்டி பிரம்மபுரீசுவரர் கோவில்
பாலமுருகன் தொட்டிலில் தவழ்ந்து உறங்கிய தலம்
நாகப்பட்டினம் மாவட்டம் பந்தநல்லூருக்கும், மணல் மேட்டிற்கு இடையே உள்ள திருச்சிற்றம்பலம் என்ற ஊரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது விளத்தொட்டி என்ற தேவார வைப்புத்தலம். இறைவன் திருநாமம் பிரம்மபுரீசுவரர். இறைவியின் திருநாமம் இட்சுரச நாயகி. இட்சு என்றால் கரும்பு, ரசம் என்றால் சாறு என்ற வகையில் கரும்புச் சாறு போல பக்தர்களுக்கு நல்ல அருளையும், இனிய வாழ்வினையும் அளிப்பதால் இறைவி அவ்வாறு அழைக்கப்படுகிறார்.
மூலவர் சன்னதிக்கு நேர் பின்புறம் பால முருகன் தனிச் சன்னதியில் உள்ளார். சுவாமிமலை - முருகன் பிரணவம் உபதேசித்த தலம். திருச்செந்தூர் - சூர வதம் நடந்த தலம். முருகன் கோபம் கொண்டு குடியேறிய தலம் பழனி. முருகன் சக்திவேல் பெற்ற திருத்தலம் சிக்கல். இந்த வரிசையில் விளத்தொட்டி தலம், பாலமுருகன் தொட்டிலில் தவழ்ந்து உறங்கிய தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தில்தான் அன்னை பார்வதி தேவி குழந்தை பாலமுருகனை தொட்டிலில் கிடத்தி, தாலாட்டுப் பாடி, தூங்க வைத்தாளாம்.
சிவாலயமாக இந்த ஆலயம் திகழ்ந்தாலும், முருகனே இந்த ஆலயத்தில் பிரதானம். முருகப்பெருமான் குழந்தையாய் தொட்டிலில் வளர்ந்த தலம் இது என்பதால், வளர் தொட்டில் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர், காலப் போக்கில் மருவி விளத்தொட்டி என மாறியுள்ளது.
பாலமுருகன் தொட்டிலில் தவழ்ந்து உறங்கிய தலம் இது என்பதால், இந்த ஊர் மக்களிடையே வினோதமான பழக்கம் ஒன்று உள்ளது. பாலமுருகனுக்கு மரியாதை தரும் வகையில், தங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளை, பிறந்து பத்து தினங்கள் வரை தொட்டிலில் படுக்க வைப்பதில்லை இவ்வூர் மக்கள். அந்த சமயத்தில் தொட்டிலைக் கட்டுவது கூட இல்லை. தூளியில் போட்டுதான் தாலாட்டுகின்றனர்.
'தொட்டில் முருகன்' எனச் செல்லமாக அழைக்கப்படும் இத்தல முருகப்பெருமான் இவ்வூர் மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு குழந்தை மட்டுமல்ல காவல் தெய்வமும் கூட. பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி இங்குள்ள பாலமுருகனை வழிபட்டுச் செல்கின்றனர். தங்களது பிரார்த்தனை நிறைவேறியதும் ஒரு தொட்டில் வாங்கி வந்து பாலமுருகன் சன்னதியில் கட்டி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோவில்
பாலாபிஷேகத்தின்போது நீல நிறமாக காட்சி தரும் சிவலிங்கம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாடானை, தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் காரைக்குடியில் இருந்து 42 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் ஆதிரத்தினேசுவரர். இறைவியின் திருநாமம் சிநேகவல்லி. ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதத்தின் பிற்பகுதியில் இத்தலத்தின் மூலவர் மற்றும் அன்னை திருமேனிகளில் சூரிய கிரணங்கள் படுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
தல வரலாறு
ஒரு சமயம், சூரியன் தானே மிகுந்த ஒளி உடையவன் என்று மிகவும் கர்வத்துடன் இருந்தான். அதன் காரணமாக நந்தியால் அவனது ஒளி ஈர்க்கப்பட்டு, சூரியன் ஒளி குன்றினான். பிரம்மதேவர் கூறியபடி சூரியன் இத்தலத்துக்கு வந்து தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி, நீல ரத்தினக்கல்லால் ஆவுடையார் மற்றும் லிங்கம் அமைத்து, ரத்தினமயமான அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு தனது ஒளியை மீண்டும் பெற்றான். ஆதி என்னும் பெயர் கொண்ட சூரியன், நீல ரத்தினக்கல் கொண்டு ஆவுடை அமைத்து வழிபட்டதால், இத்தல இறைவனுக்கு 'ஆதிரத்தினேசுவரர்' என்று பெயர். இன்றும் உச்சிக்காலத்தில் பாலாபிஷேகம் செய்யும்போது இறைவன் நீல நிறமாக காட்சி காட்சியளிக்கின்றார்.
சுக்ரனுக்குரிய பரிகாரத்தலம்
இத்தல நாயகியான சிநேகவல்லி அம்மன், சுக்ரனுக்குரிய அதிதேவதை ஆவார். எனவே இந்த ஆலயம் சுக்ரனுக்குரிய பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது. அம்மனுக்கு விசேஷ சுக்ர ஹோமம் செய்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். சுக்ரதிசை, சுக்ர புத்தி நடப்பவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பானது. சுவாமி ஆதிரத்தினேசுவரரை வணங்கினால் முன் செய்த தீவினை நீங்கும்.

குன்னத்தூர் கோதபரமேசுவரன் கோவில்
மூலவரும், பரிவார தேவதைகளும் ராகு அம்சத்தோடு திகழும் அபூர்வத் தலம்
திருநெல்வேலி - மேலத்திருவேங்கடநாதபுரம் செல்லும் வழியில், 11கீ.மீ தூரத்தில் உள்ளது குன்னத்தூர் என்கிற கீழத்திருவேங்கடநாதபுரம். இறைவன் திருநாமம் கோதபரமேசுவரன். இறைவியின் திருநாமம் சிவகாமி அம்பாள். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நவகைலாய தலங்களில் ராகு பரிகார தலம் இது. இந்த ஊர் செங்காணி எனவும் அழைக்கப்படுகிறது. காணி என்றால் நிலம், செங்காணி என்றால் செம்மண் பொருந்திய நிலம் எனப்பொருள்படும். இக்கோவில் 900 ஆண்டுகள் பழமையானது.
இங்கே சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த ரோமச முனிவர், ராகுவை நினைத்து வழிபாடு செய்ததால், ராகு தோஷம் நீக்கும் பரிகாரத் தலமாவும் இக்கோவில் திகழ்கிறது. மூலவர் லிங்கம் மார்பில் சர்ப்பம் போல் முத்திரை காணப்படுகின்றது. மூலவர் கோதபரமேசுவரன் மட்டுமின்றி, இங்கே தனித் தனிச் சந்நிதிகளில் அருளும் தட்சிணாமூர்த்தி, பைரவர்,ஆறுமுகநயினார், கன்னி விநாயகர், நந்தீஸ்வரர் ஆகிய தெய்வங்களின் திருமேனியிலும் ராகு இருப்பதைக் காண முடியும். இப்படி அனைத்து தெய்வங்களும் ராகு தோஷம் நீக்கும் வல்லமையோடு திகழ்வது இந்த தலத்தின் தனிச்சிறப்பாகும்.
சிவகாமி அம்பாளின் திருமேனி முழுவதும், ருத்ராட்சம் போன்று அமைக்கப்பட்டு இருப்பது சிறப்பு. இவரை வழிபட, குழந்தை பாக்கியம் தாமதமாகும் தம்பதியருக்கு அந்தப் பாக்கியம் விரைவில் கிடைக்கும்; மாங்கல்ய தோஷம் நீங்கும். இக்கோவிலின் வெளிபிரகாரத்தில் ஒரே கல்லி்ல் வடிவமைக்கப்பட்ட திருவாச்சியுடன் கூடிய ஆறுமுகநயினார் சந்நிதி உள்ளது.
பிரார்த்தனை
இத்தலமானது ராகுவின் தாக்கத்தால் பாதிக்கப்படுவோர் பரிகாரம் செய்ய வேண்டிய தலமாகும். இத்தலத்து இறைவனை வழிபடுதல் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் சிவபெருமானை வழிபடுதலுக்குச் சமமான ஒன்று. மேலும் திருமணத்தடை, குழந்தை பாக்கியம்,காலதோஷம்,நாகதோஷம் ஆகியவற்றிற்கும் பரிகாரத் தலமாகும். இத்தலத்தை வழிபட்டால் வயிற்றுக்கோளாறு, மனநோய், மூலநோய் நீங்கும். மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.

கீழப்பாவூர் நரசிம்மர் கோவில்
திரிபங்கி நிலையில் காட்சியளிக்கும் விசித்திர வடிவ நரசிம்மர்
திருநெல்வேலி - தென்காசி சாலையில் உள்ள பாவூர்சத்திரத்தில் இருந்து சுரண்டை செல்லும் வழியில் இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது, பிரசித்தி பெற்ற கீழப்பாவூர் நரசிம்மர் கோவில். 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், மூர்த்தி, தலம், தீர்த்தம் மட்டுமின்றி பல்வேறு சிறப்புகள் நிறைந்தது. இந்தியாவில் மூன்று இடங்களில்தான் 16 திருக்கரங்களுடன் கூடிய நரசிம்மர் கோவில் உள்ளது. ஒன்று ராஜஸ்தான் மாநிலத்திலும், மற்றொன்று பாண்டிச்சேரி அருகே சிங்ககிரி என்னும் சிறு குன்றிலும் உள்ளன. மூன்றாவதாக, கீழப்பாவூரில் மட்டுமே சமதளப் பகுதியில் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் இரண்டு சன்னிதிகள் உள்ளன. வடக்கு பார்த்த தனிச் சன்னிதியில் அலர்மேல் மங்கா பத்மாவதி சமேத ஸ்ரீ பிரசன்ன வேங்கடாஜலபதி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இதனை ஒட்டி பின்புறத்தில் மேற்கு நோக்கிய தனிச் சன்னிதியில் நரசிம்மர் தரிசனம் தருகிறார். தமிழகத்தில் இத்தலத்தில் மட்டும்தான், திரிபங்க நிலையில் பதினாறு திருக்கரங்களுடன் இரணியனை மடியில் கிடத்தி வதம் செய்யும் கோலத்தில் அபூர்வ வடிவ சிறப்புடன் காட்சி தருகிறார். சூரியனும் சந்திரனும் வெண் சாமரங்கள் வீசி சாந்தப்படுத்திக் கொண்டிருக்க, வெண் கொற்றக் குடையுடன் தியானத்தபடி கம்பீரமாக வீற்றிருக்கிறார் நரசிம்மர். பிரகலாதன், அவனுடைய தாய், நாரதர், காசி மன்னன் ஆகியோர் அருகில் நின்று நரசிம்மரை துதித்துக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் நரசிம்ம அவதாரம் எடுத்ததால் அவரது உக்கிரகத்தைத் தணிக்க அவரது சன்னிதி முன்பு மாபெரும் தெப்பக்குளம் உள்ளது சிறப்பு. இது நரசிம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு நீராடினால் சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
தல வரலாறு
மகாவிஷ்ணு, இரணியனிடமிருந்து பிரகலாதனைக் காக்க நரசிம்ம அவதாரம் எடுத்தார். அந்த நரசிம்ம அவதார காலம் இப்பூவுலகில் (அகோபிலத்தில் ) இரண்டு நாழிகைகள் மட்டுமே நீடித்திருந்தது. 'மற்ற அவதாரங்களைப் போல், நரசிம்ம அவதாரம் நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லையே' என்ற எண்ணம் மகாவிஷ்ணுக்கு ஏற்பட்டது. அந்த எண்ணத்தை பூர்த்தி செய்வதற்கும்,தன்னை நோக்கி தவமிருந்த ரிஷிகளுக்கு நரசிம்ம தரிசனம் தருவதற்காகவும் இத்தலத்தில், கிருதயுகத்தில் அகோபிலத்தில் எடுத்த நரசிம்ம அவதாரத்தை ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடனுடன் எடுத்து, மகா உக்கிர மூர்த்தியாக பதினாறு திருக்கரங்களுடன் காட்சியளித்தார்.
தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் மற்றும் கீழப்பாவூரில் அமைந்துள்ள நரசிம்மர் தலங்கள் தனித்துவம் கொண்டவை. ஒரு காலத்தில் இந்த இரு ஆலயங்களில் இருந்து அடிக்கடி சிங்கம் கர்ஜிப்பது போல நரசிம்மர் ஆவேசமாக குரல் எழுப்பியதாக புராணங்களில் பதிவுகள் உள்ளன.
பிரார்த்தனை
இந்த ஆலயத்தில் நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திரம் அன்று சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நரசிம்மருக்கு மிகவும் பிரியமான பானகம் படைத்து வணங்கினால் அவருடைய முழு அருளுக்குப் பாத்திரமாகலாம். நரசிம்மரை தியானம் செய்பவர்கள் தம் பகைவர்களை சுலபமாக வெல்லும் திறன் பெறுவர். அஷ்ட திக்குகளிலும் புகழ் பெற்று விளங்குவர். நீண்ட கால துன்பங்கள் நீங்கும். நரசிம்மரை வழிபடுவதற்கு செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களும் மாலை வேளையும் உகந்ததாகும்.
கீழப்பாவூர் நரசிம்மரை வழிபட்டால் அறிந்தும் அறியாமலும், போன, இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும். உலகியலான இன்பமும் கிடைக்கும்.

கன்னியாகுமரி குகநாதீசுவரர் கோவில்
முருகன் தோஷம் நீங்க சிவனை வழிபட்ட தலம்
கன்னியாகுமரி ரயில் நிலயத்திற்கு அருகில், பகவதி அம்மன் கோவிலில் இருந்து சுமார் ஒரு கி.மீ.தொலைவில் இருக்கிறது குகநாதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் பார்வதி. இவர் கோனாண்டேசுவரன் என்றும், குகனாண்டேசுவரன் என்றும் அழைக்கப்படுகிறார். ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது குகநாதீசுவரர் கோவில். தஞ்சை பெரிய கோவிலைக் கட்டுவதற்கு முன்பாகவே, சோழப் பேரரசன் ராஜராஜ சோழன் இந்தக் கோவிலைக் கட்டியுள்ளார்.
முருகப் பெருமான் தன் அன்னை பார்வதியின் வழிகாட்டல்படி, தனது தோஷம் நீங்குவதற்காக இங்கே சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டார் என்று தல வரலாறு கூறுகின்றது.இங்கு, குகன் என்ற முருகக்கடவுள், ஈசுவரன் என்ற சிவனை வழிபட்டதால், இந்தக் கோவிலுக்கு குகநாதீசுவரர் கோயில் என்று பெயர்க் காரணம் கூறுகின்றனர். இந்த கோவிலில் மூலவர் குகநாதீசுவரர் 5 அடி உயரத்துடன் கிழக்கு நோக்கி லிங்க வடிவில் அருள் பாலிக்கிறார். இந்த சிவலிங்கம், குமரி மாவட்டத்திலேயே மிகப் பெரிய சிலையாகும்.
பிரார்த்தனை
இந்த கோவிலில் 11 திங்கட்கிழமை தொடர்ந்து வந்து, முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடி, கோவிலின் கருவறை தீபத்திற்கு பசுநெய் வழங்கி வழிபட்டால் குரு சாபம், மாத்ரு சாபம், பித்ரு சாபம், சுமங்கலி சாபம் மற்றும் முதியவர்களை மதிக்காததால் வரும் தோஷம் ஆகியவை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நத்தம் அக்னி ஈசுவரர் கோவில்
ஆட்டின் முகமும், காளை உடலும் கொண்ட அபூர்வ நந்தி
திருநெல்வேலி மாநகராட்சியின் ஒரு பகுதியான மேலப்பாளையம் அருகே நத்தம் என்னும் ஊரின் அருகே தாமிரபரணி நதியின் கரையிலே அமைந்துள்ளது அக்னி ஈசுவரர் கோவில்.
இறைவியின் திருநாமம் கோமதி அம்பாள். மூலவர் அக்னி ஈசுவரர் சுயம்பு மூர்த்தி. அவரது திருமேனியில் ருத்ராட்சத்தில் உள்ளது போலவே பட்டைகள் காணப்படுவதால், ருத்ராட்சமே லிங்கமாக அமைந்தது போன்ற தோற்றமளிக்கிறார்.
இந்தக் கோவிலில் எழுந்தருளியிருக்கும் நந்தி அபூர்வமான தோற்றம் உடையதாக இருக்கின்றது. இந்த நந்தி ஆட்டின் முகத்தோடும் , காளை உடலோடும் அமைந்துள்ளது. இத்தகைய நந்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இந்த நந்திக்கு மேஷ நந்தி என்று பெயர். மேஷ ராசி அன்பர்களுக்கு சிறந்த வழிபாட்டுத் தலமாகும். குறிப்பாக பரணி நட்சத்திர அன்பர்களுக்கு உரிய தலமாகும். இது செவ்வாய் கிரக பரிகார தலமாகவும் உள்ளது.

களியப்பேட்டை லட்சுமி நாராயணப்பெருமாள் கோவில்
சங்கு சக்கரம் ஏந்திய அபூர்வ வேணுகோபால சுவாமி
செங்கல்பட்டு நகரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது களியப்பேட்டை லட்சுமி நாராயணப்பெருமாள் கோவில். தாயாரின் திருநாமம் செண்பகவல்லி. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டதாகும்.
கருவறையில், பெருமாள் லட்சுமி தேவியைத் தன் இடது மடியின் மேல் அமர்த்திக் கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். இப்பெருமாள் தனது மேல் இரண்டு திருக்கரங்களில் சங்கு சக்கரத்தை ஏந்திக் கொண்டும், கீழ் இடது திருக்கரத்தால் லட்சுமி பிராட்டியை அணைத்துக் கொண்டும், கீழ் வலது திருக்கரத்தால் அபய ஹஸ்த கோலத்தைக் காட்டியபடியும் காட்சியளிக்கிறார்.
பொதுவாக, வைணவத் திருத்தலங்களில் வேணுகோபாலன் தம் இரு கரங்களால் புல்லாங்குழலை ஏந்திய இரு கை உருவமாகவே பெரும்பாலும் காணப்படுவார். ஆனால் இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ருக்மிணி-சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி சற்று வித்தியாசமான தோற்றத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். மேல் திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்திக் கொண்டும், கீழ் இருக்கரங்களால் புல்லாங்குழலை பற்றிக் கொண்டும் சேவை சாதிக்கிறார். நிற்கும் நிலையிலுள்ள பெரும்பாலான மற்ற தெய்வ வடிவங்களின் அமைப்பில் இரண்டு வளைவுகள் (த்விபங்கம்) அல்லது மூன்று (த்ரிபங்கம்) வளைவுகளே காணப்படும். மாறாக, இந்த மனங்கவரும் வேணுகோபால சுவாமியின் திருமேனி ஐந்து (பஞ்சபங்கம்) வளைவுகளைக் கொண்டுள்ளது என்பது அரிய சிறப்பாகும். இத்தகைய வேணுகோபால சுவாமியின் திருவுருவை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.